மதுரை மீண்டும் கடம்பவனம் 2020தமிழகத்தை பசுமை ஆக்கும் பணியை மதுரையில் இருந்து தொடங்குகிறோம்.
எனவே இங்கே மதுரையின் நிலையை சுட்டிகாட்டி இருக்கிறோம்.


மதுரை...இலக்கியங்களில் கடம்பவனமாக காட்சியளித்த நகர்.இன்றைக்கு காங்கீரிட் கட்டிடங்கள் பெருகி மூச்சு முட்டும் அளவுக்கு போக்குவரத்து நெரிசல், தூசி, புகை என்று எங்கும் சுற்றுச்சூழல் மாசு படிந்து காணப்படும் நகர். 
அழகிய மீனாட்சி அம்மன் கோயில் நகருக்கு பெருமை சேர்க்கிறது. ஆனால் வைகை வறண்டு கிடக்கிறது.மரம் வைத்தால் மழை பெய்யும். இது தான் வைகையில் மீண்டும் நீர் பெருக வழி.

மரங்களை நட்டால் மதுரையும் குளிர்ச்சியடையும். குளிர்ச்சியான சுற்றுச்சூழல் மக்களை மனிதர்களாக்கும்.இனிமையான பொழுது அமையும்.வெயிலில் தாக்கத்தால் நொந்து காயும் நிலை இருக்காது.
அந்தக்காலத்து அசோக மன்னர் கூட சாலையின் இருபக்கங்களிலும் மரங்களை நட்டார். ஆனால் இன்றைய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறையும், மின்சார வாரியமும் சாலையில் அசைந்தாடி நிழல் தரும் மரங்களை வெட்டித்தள்ளுகிறது.

காரணம் சாலையை அகலப்படுத்தவாம். ஒரு இலை துளிர்க்க ஒரு தாவரத்தினுள் எத்தனை ரசாயன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பது தாவரங்களை நேசிப்பவர்களுக்குத் தான் தெரியும். ஆனால் அரிவாளை எடுத்து ஒரு மரத்தை வெட்டித்தள்ள துளி நேரம் போதுமானதாக இருக்கிறது.

புல் கூட விநாயகருக்கு மாலையாக காப்பாற்ப்பட்டது. வில்வம் சிவனுக்கு ஆனது. துளசி பெருமாளுக்கு உகந்ததானது.மரங்களை காப்பாற்ற வேண்டும என்பதற்காகவே கோயில்களில் மரங்கள் தலவிருட்சங்களாக போற்றப்பட்டன.
மரங்கள் இயற்கையில் மாசுபடும் காற்றில் இருக்கும் கார்பன்டை ஆக்சைடு என்ற நச்சு கலந்த வாயுவை உறிஞ்சிக் கொண்டு மனிதன் சுவாசிக்க பிராணவாயுவை வெளிவிடுகிறது. நிழல் தருகிறது. மழை பொழிய குளிர்ச்சியான காற்றை வெளியிட்டு நீரை சுமந்து வரும் மேகக்கூட்டத்தில் மோதி மழை பொழிய வைக்கிறது.
மாதம் மும்மாரி பொழிந்ததா என்று மன்னர்கள் மந்திரி பிரதானிகளிடம் கேட்பார்கள். மழை பெய்தது என்று மந்திரிகள் பதில் சொன்னால் நாட்டு மக்களை பற்றி எதுவும் கேட்க மாட்டார்கள்.காரணம், மழை பெய்தால் மக்கள் வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும் என்பது மன்னர்களுக்கு தெரியும். 

இன்றைக்கு நாம் கர்நாடகாவிடமும், ஆந்திராவிடமும் தண்ணீருக்காக கையேந்த வேண்டியிருக்கிறது. மரம் நட்டால் மழை வரும்.நிலம் குளிரும்.நிழல் கிடைக்கும்.ஆதவனின் கொடுமையில் இருந்து மீளலாம்.நிழலில் எங்கும் போய்வரலாம்.மற்ற மாவட்டங்களை விட மதுரை ஒரு முன்னோடியாக இருக்கட்டும் மரங்களை நடுவதில்.

2020 ல் இந்தியா வல்லரசு என்பது அப்துல் கலாம் அவர்களின் கனவு.2020 ல் மதுரை மீண்டும் ஒரு வனமாக கடம்பவனமாக மாறியிருக்க வேண்டும் என்பது எங்கள் கனவு. நகருக்குள் நுழைந்தால் கட்டிடங்கள் தெரியக்கூடாது. மரங்கள் தான் இருக்க வேண்டும். மரங்களுக்கு ஊடே தேடும் கட்டிடங்கள் கண்டுபிடிக்கப்படட்டும்.
மரம் நடுவோம்.மனிதம் காப்போம்.எதிர்கால சந்ததிக்கு தூய்மையான உலகை விட்டுச்செல்வோம்.

0 கருத்துகள்: (+add yours?)

காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today