எதிர்கால சென்னையில் வசிக்கப்போவது யார்?கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுனாமி வந்து தமிழநாட்டின் சில கரையோற மாவட்டங்களில் கரையை தொட்டு பாதத்தை நனைத்து விட்டு போனது. ஆனால் இன்னும் கொஞ்ச நாளில் சென்னையின் பல பகுதிகள் கடலுக்குள் மூழ்கிவிடும். சென்னையின் பல பகுதிகள் கடலுக்குள் போயிருக்கும். காஞ்சிபுரம்,திருவள்ளூர் மாவட்டங்கள் கூட கடல் நீரால் சூழுப்பட்டு விடும் என்று சென்னைவாசிகளை உலுக்கும் செய்தியை ஜுனியர் விகடன் வெளியிட்டுள்ளது. அவர்கள் கட்டுரையில் சரியாக சொல்லாமல் விட்ட விஷயம்...சென்னைவாசிகளுக்கு இன்னும் சில ஆண்டுகளில் உணவு கிடைப்பது சிக்கலாக போகிறது என்பதை தான்.
இதன் சுருக்கம் இங்கே......

'உலகின் சுற்றுச்சூழல் சூப்பர் ஹீரோ' என்று பெயரெடுத்தவரும், 25 வருடங்களுக்கு முன்பு தன்னுடைய எட்டு நண்பர்களுடன் தனிக்கப்பலில் அண்டார்டிகா சென்று 'இதைப்பாதுகாப்பதே லட்சியம்' என்று தன் வாழ்நாளை அர்ப்பணித்த ராபர்ட் டிவைன் சுதந்திர தினத்தன்று சென்னை வந்திருந்தார். உலகமே போற்றும் ராபர்ட் ஸ்வானிடம் ஜு.வி பேட்டி கண்டிருக்கிறது. அப்போது அவர்,
" நான் நின்று பேசிக் கொண்டிருக்கும்இந்த இடம் இன்னும் 80 வருடங்களில் கடலுக்குள் இருக்கும். என் முன்னால் அமர்ந்திருக்கும் உங்கள் வீடுகளை எல்லாம் கடல் மூழ்கடித்திருக்கும்" என்றார். புவி வெப்பமயமாதல் காரணமாக, கடல் மட்டம் மெள்ளமெள்ள உயர்ந்து கொண்டே போவதால் சென்னை மூழ்கடிக்கப்பட்டு விடும் என்றார்ராபர்ட்.
இது தவிர தமிழ்நாட்டு நிலங்களுக்கு புற்று நோய் வந்து விட்டது என்றும் சொல்லிவிட்டு போயிருக்கிறார் அவர். இது என்ன புது நோய்?

இந்த நிலப்புற்று நோய் பற்றி தெரிந்து கொள்ள எக்ஸனோரா நிர்மலை சந்தித்தது ஜு.விகடன்

"இந்தியாவில் விவசாய நிலங்கள் தொழில் புரட்சி, தொழில் முன்னேற்றம்,சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயர்களால் சூறையாடப்படுகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் விவசாய நிலத்தில் 10 சதவீதம் காணாமல் போய்விட்டது. இன்னும் சில ஆண்டுகளில் விவசாய நிலங்களே இருக்காது. இதைத்தான் ராபர்ட் ஸவான்'நிலப்புற்று நோய்' என்கிறார்.
சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு இணையாக ரியல்எஸ்டேட் மூலமும் விவசாய நிலங்கள் காணாமல் போய்க்கொண்டு இருக்கின்றன. இப்பொழுது சென்னையை சுற்றியிருக்கும் விளைநிலங்களை பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் வசப்படுத்திக் கொண்டு விட்டன. இப்போது அது அடுத்த கட்ட நகரங்களுக்கும் நகர ஆரம்பித்து விட்டது. இதனால் வேலைவாய்ப்பு பெருகும் தான். ஆனால் விவசாயம் இல்லாமல் போய்விடும்.
இதை ஒரளவுக்கு தடுக்கவும், விவசாய நிலங்களை பாதுகாக்கவும்,விவசாயம் சார்ந்த தொழில்களை அரசாங்கம் ஊக்கப்படுத்தவும், உழவனின் மகன் விவசாயம் செய்யவும்,விவசாயம் சாராத குடும்பத்தில் இருந்து வரும் இளைஞன் விவசாயம் செய்யவும் அரசாங்கம் ஊக்கப்படுத்தும் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்" என்கிறார் நிர்மல்.

எக்ஸனோரா அமைப்பு இப்போது கூட்டுப்பண்ணை விவசாயத்தை பிரபலப்படுத்தி வருகிறது. ஒரு விவசாயி தன்னிடம் உள்ள இரண்டு ஏக்கருக்கு தன் மூளையை கசக்கிப் பயிரிட வேண்டும். இதற்கென தனிநபராக பணம் செலவழிப்பதுடன்,விளைந்த பொருள்களை விற்க பெரும்பாடு படவேண்டியிருக்கிறது. சிறிய நிலத்தில் நவீன உத்திகளை பயன்படுத்துவதும், தனிநபருக்கு சாத்தியமான விஷயம் அல்ல. அதுவே 10 பேர் தலா 10 ஏக்கர் என்று வாங்கி, மொத்தமாக 100 ஏக்கரில் கூட்டுப்பண்ணை ஆரம்பித்தால்,நவீன விவசாய உத்திகளை கையாள முடியும்.விவசாய ஆலோசனைக்கு சர்வதேச ஆலோசனைக்குழுவை கூட நியமித்துக் கொள்ளலாம்.

தண்ணீரை சேமிக்கும் லேட்டஸ்ட் பாசன வசதிகளை மேம்படுத்தலாம். இப்படி கூட்டு பண்ணையின் மூலம் விவசாயத்தின் மீது இருக்கும் தற்கால நம்பிக்கையின்மையை போக்கி அந்த நிலங்கள் கைமாறி தொழிற்சாலைகளாகவோ, அடுக்குமாடிக்குடியிருப்புகளாகவோ மாறிவிடாமல் தடுப்பதும் நிலப்புற்று நோய்க்கு எதிரான முக்கிய நடவடிக்கைகள். வனவிலங்குகளை பாதுகாக்க அரசு தனித்துறை வைத்திருக்கிறது. ஆனால், நாட்டின் முதுகெலும்பான விவசாய நிலங்களை பாதுகாக்க தனித்துறையோ,தனிச்சட்டங்களோ இல்லை என்பதும் நிலப்புற்று நோய் முற்ற ஒரு காரணம்.

இப்போது நஞ்சை நிலங்களில் தான் பரவலாக வீட்டு மனைகள் போடப்பட்டு வருகின்றன. இதை தடுக்க வேண்டியது மிகவும் அவசரம். நஞ்சை நிலத்தை வீட்டு மனைகளாக்க தற்போது கிராம நிர்வாக அதிகாரிகள் அளவில் அனுமதி பெற்றாலே போதுமானது. கிராம அளில் இருக்கும் அதிகாரிகள் இந்த குறிப்பிட்ட நிலம் நீண்ட நாட்களாக விவசாயம் செய்யப்படாமல் இருக்கிறது.அந்த நிலத்தில் உழவும் இல்லை என்று சான்றிதழ் கொடுத்துவிட்டால் வீட்டு மனைகளாக ஆக்க முடியும். இதனால் ரியல் எஸ்டேட் பிசினஸ் கொடிகட்டி பறக்கிறது. இந்த அதிகாரத்தை இனி மாவட்ட கலெக்டர் தலைமையிலான ஒரு குழுவிடம் மாற்ற வேண்டும். இப்படி மாற்றினால் மட்டுமே இது போன்ற விவசாய நிலங்களை 'பண்ணை வீடு' என்ற பெயரில் சிலர் முடக்குவதை தடுக்க முடியும். பல ஏக்கரில் ஒரு பங்களா கட்டி, நீச்சல்குளம் அமைத்து உள்ளே போகும் கரன்சி கர்த்தாக்கள் பிறகு ரிசார்ட்ஸ் என்ற பெயரில் விளைநிலங்களே இல்லாமல் செய்து விடுகிறார்கள்.

தமிழக அரசு இலவச திட்டங்களில் புதுப்புது சட்டங்களில் இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது. ஆனால், அறிவிக்கப்பட்ட 2 ஏக்கர் நிலத்தை மட்டும் செயல்படுத்த முடியவில்லை. காரணம்,தமிழ்நாட்டில் விவசாய நிலம் இல்லவே இல்லை என்பதை அரசே ஒப்புக் கொண்டதால் தான். இப்போதே சென்னையை சுற்றிலும் சர்வதேச தொழிற்சாலைகள் வந்து விட்டன.இதற்கே காஞசிபுரம்,திருவள்ளுர் மாவட்டத்தின் முக்கால் வாசி நிலங்கள் தாரைவார்க்கப்பட்டு விட்டன. இப்போதும் தினம் தினம் முதல்வரும், துணைமுதல்வரும் புதுப்புது பன்னாட்டு கம்பெனியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுகிறார்கள். இந்த நிறுவனஙகளை விவசாய நிலங்கள் குறைவாக உள்ள தர்மபுரி,பெரம்பலூர்,அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கலாம்.

மத்திய அரசாங்கம் கொண்டு வந்த தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் விவசாயத்தை சாகடிக்கிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் தென்மாவட்டங்களான மதுரை,விருதுநகர்,தூத்துக்குடி,தேனி ஆகிய மாவட்டங்களில் விவசாய நிலங்களை சார்ந்திருக்கும் விவசாயிகளே விவசாயத்தை ஒரம் கட்டிவிட்டு இந்த தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலைக்கு போகிறார்கள். இந்த திட்டத்தில் வேலை இல்லாத நாட்களில் தான் தினக்கூலிகளை அழைத்து விவசாயம் செய்கிறார்கள். இதெல்லாம் விவசாயம் அழிவதற்கான கண்கூடு.

நிலப்புற்று நோய்க்கு கடைசி காரணம், பாசனம் இல்லாததும் தான். ஊரில் பெய்யும் மழையை விட்டு விட்டு இன்று கடல்நீரை குடிநீராக்க பல கோடிகளை செலவழிக்கிறோம். பாசனத்திற்கு தண்ணீர் கொடுத்த பல ஏரிகள் அழிக்கப்பட்டு ஏரி இருந்த இடங்களில் வீடுகள் முளைத்துள்ளன. காஞசிபுரம்,செங்கல்பட்டு,விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் காணாமல் போன ஏரிகளை கணக்கெடுத்தால் தலைசுற்றும்.

விவசாயத்தை பற்றி நினைத்தால் தானே ஏரியையும் பாசனத்தையும் நினைப்பதற்கு!

எனவே, சென்னைவாசிகளுக்கு இனி எதிர்வரும் காலத்தில உணவுகிடைப்பதற்கு மற்ற மாவட்டங்களையோ,மாநிலங்களையோ நம்பி இருப்பார்கள். எளிதில் உணவு கிடைக்காது. காரணம், சென்னையிலும் சுற்றியிருக்கும் மாவட்டங்களிலும் விவசாயம் இருக்காது. அப்படியே கிடைத்தாலும் அதன் விலை சராசரி மக்கள் தொட முடியாததாக இருக்கும். சென்னையில் கடுமையான எண்ணிக்கையில் தொழிற்சாலைகள் பெருகிவிட்டால் ஏற்படும் வெப்பத்தால் ஏர்கண்டிசன் இல்லாமல் வாழவே முடியாது. முடிவில சென்னை என்பது கோடீஸ்வரர்கள் மட்டுமே வாழும் பகுதியாக (ராபர்ட் ஸ்வான் சொன்னது போல் கடல் சூழந்து அழிக்காமல் இருந்தால்) மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் இன்றைக்கு மதிய சாப்பாடு ஓட்டலில் 75 ரூபாய். இன்னும் சில ஆண்டுகளில் அது 250 ரூபாயாக கூட மாறலாம். அதற்கு மேலும் அதிகமானலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பூமி உருண்டை அந்தரத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறது என்பதை ரியல்எஸ்டேட் கபாலீஸ்வரர்கள் நினைத்துக் கொண்டால் சரி.

0 கருத்துகள்: (+add yours?)

காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today