நம்ம பாடுபட்டு சேமிச்ச ரத்தத்தை குடிக்கும் கொசுக்களை குடும்பத்தோடு அழிக்கலாம் வாங்க!

ஒசாமா பின்லேடனை கூட கண்டு பிடித்து விடுவோம் என்று சவால் விடும் அமெரிக்காவால் கூட இந்த கொசுவை ஒழிக்க வழி கண்டு பிடிக்க முடியவில்லை.குளிர் காலம் வந்திருச்சுல...கொசுவும் பெருகிபோச்சு. முன்னால நான் எழுதின பதிவு தான். இப்போ ரீப்ளே!
காட்டை மனிதன் அழித்தான். தங்களது இருப்பிடத்தை ஆக்கிரமித்த மனிதனை பழிவாங்க யானைகளும், சிறுத்தைகளும், எருமைகளும் தமிழ்நாட்டின் வனங்களை ஒட்டியுள்ள ஊர்களுக்குள் நுழைந்து துவம்சம் செய்ய தொடங்கி விட்டன.
குளு குளு கொடைக்கானலில் காட்டெருமைகளை காட்டுக்குள் தான் காணமுடியும். இப்போது அவைகள் நடுரோட்டில் வலம் வருகின்றன. மனிதர்கள் மிரண்டு போய் நிற்க வேண்டியுள்ளது. வனத்தை அழிக்கும் போது அவை இரை தேடி நடு ரோட்டுக்கு வருவது இயற்கை தான். இந்த விலங்குகளுடன் சேர்ந்து மனிதனை மிரட்ட வந்த ஒரு ----ப்பூ......உயிரினத்தை மனிதர்கள் கண்டு கொள்ளாமல் விட்டது தான் துரதிர்ஷ்டம். அது தான் கொசு. நாம் கேட்கிறோமா இல்லையா என்பது பற்றியெல்லாம் இந்த கொசுவுக்கு கவலை இல்லை. காதுக்கருகில் வந்து நாரசாரமாக ங்கொய்................என்று பாட்டு பாடுவது, பாடி விட்டு ரத்த தாகம் எடுக்கும் போது கடிப்பது என்று மனிதனை பாடாய் படுத்துகின்றன.

காட்டுக்குள் குளிர்ச்சியான மரங்களில் தங்கியிருந்து வாயில்லா பிராணிகளை கடித்து ரத்தத்தை உறிஞ்சிய கொசுக்களை மனிதர்கள் தான் நகரத்திற்குள் நுழைய விட்டு விட்டார்கள்.
மரங்களை வெட்டியதுடன், கண்ட இடத்திலும் சாக்கடை, பள்ளங்களை தோண்டிய மனிதர்களை பார்த்து எள்ளி நகையாடிய கொசுக்கள் ஆற, அமர அவர்களை கடித்து இந்த கழிவுநீரி்ல் குடும்பம் நடத்தி கொள்ளுதாத்தா, பாட்டி தொடங்கி பச்சை பால் குடிக்கும் கொசு என்று பலுகி, பெருகி மனிதர்களுக்கு பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளன.


அணுகுண்டு தயாரிக்கும் விஞ்ஞானிகள் கூட சாதாரண கொசுவை கண்டு மிரண்டு போனார்கள். அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல்....சிக்குன் குனியா, டெங்கு படுத்திய பாட்டை பார்த்து இது இந்தியாவின் மேல் தொடுக்கப்பட்ட பயோவார் என்று அறிக்கை விட்டார்கள். ஆனால் நடந்தது என்ன.....சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்ற கதை போல கொசுக்கள் குடியிருந்த மரங்களை வெட்டியது தான் ,அவை நகரத்துக்குள் வர முக்கிய காரணம் என்பதை மறந்து போனார்கள்.


சரி....இனி கதைக்கு வருவோம். இந்த கொசுக்களை குடும்பத்தோடு அழிக்க எளிய வழி முறை இதோ..........


சாப்பாடு செய்வதற்கு முன்பு அரிசியை கழுவும் நீரை 100 மில்லி எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் ஒரு வாரம் வைத்திருக்கவும். நீரில் உள்ள அழுக்குகள் எல்லாம் அடியில் தங்கி விடும். நீரை வடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இதனுடன் ஒரு லிட்டர் பாலை பாட்டிலில் ஊற்றுங்கள். பத்து நாட்கள் அப்படியே வைத்து விடுங்கள்.
பதினோராம் நாள் பாட்டிலின் மேல் வாய்புறம் ஆடைபோல் இருக்கும். இதனை எடுத்து தூரபோட்டு விடுங்கள். அடுத்து 100 கிராம் நாட்டு சர்க்கரையை கரைத்து பாட்டிலில் ஊற்றுங்கள். இது தான் உள்ளே வளர்ந்து இருக்கும் பாக்டீரியாக்களுக்கு உணவு. 10 நாட்கள் வரை இந்த கலவையை அப்படியே வைத்திருங்கள்.
11 வது நாள் இருக்கும் கலவைக்கு பெயர் லாக்டோ ஆசிட் பாக்டீரியா. ஒரு பக்கெட் நீருக்கு 3 மூடி என்ற அளவில் இந்த ஆசிட்டை ஊற்றி உங்கள் சுற்றுப்புறத்தை கழுவுங்கள். துர்நாற்றம் தூரஓடும். அப்படி இது என்ன தான் செய்கிறது என்கிறீர்களா? லேக்டிக் ஆசிட் பாக்டீரியாவுக்கு கொசு முட்டை என்றால் பிரியாணி சாப்பிடுவது மாதிரி. அதனால் கொசுக்களின் சந்ததி குளோஸ்.
இதையெல்லாம செய்தும் உங்களை கொசுக்கடித்தால்.......அதை முடிந்தால் நீஙகள் திருப்பிக்கடிக்கலாம் என்றெல்லாம் சொல்ல மாட்டோம். முடிந்தால், ஒரு தவளையை வாங்கி வளருங்கள். தவளைகளின் முக்கிய உணவு. கொசுமுட்டைகள் தான்.
இதுவும் முடியாவிட்டால், ஒரு வேம்பு மரத்தை வளருங்கள். வேப்ப இலைகளை புகை போட்டால் கொசுக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடிக்கும். அத்துடன் உங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருங்கள். அது தான் கொசுக்கும் நல்லது. உங்களுக்கும் நல்லது.

2 கருத்துகள்: (+add yours?)

சௌந்தர் சொன்னது…

கொசுவை பற்றி நல்ல பதிவு நல்ல தகவல் நன்றி

ஜெ.பாலா சொன்னது…

மிக நலல பதிவு... மிகப்பெரிய படையான கொசுவிற்கு எதிரான எளிமையான நமது அன்றாட பொருட்களையே சேர்த்த கலவை என்பது மிக ஆச்சரியமூட்டியது.

காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today