உங்கள் நிலத்தில் சந்தன மரம் வளர்க்கலாம் .சட்டம் அனுமதிக்கிறது.


தெய்வங்கள் அனைத்துக்கும் சந்தன அபிசேகம் செய்யப்படுகிறது. மனிதனுக்கு நெற்றியிலும்,நெஞ்சிலும், உடல் முழுக்கவும் பூசிக்கொள்ள பயன்படுகிறது. சோப்பு,மாலை என்று பல விதங்களில் பயன்படுகிறது.

இப்படி பயன்தரும் சந்தன மரத்தை வீட்டில் வளர்க்கவும் முடியாது. தப்பித்தவறி தானே வளர்ந்திருந்தால் கூட அதை வெட்டவும் முடியாது. காரணம், பட்டா நிலத்தில் சந்தன மரம் அதுவாக வளர்ந்திருந்தால் கூட அது அரசுக்கு தான் சொந்தம் என்று தான் சட்டம் இருந்தது. சந்தன மரத்தை வெட்டி விற்றால் கோடீசுவராக மாறி விடலாம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனால் இப்போதும் கூட காடுகளில் இருக்கும் சந்தன மரங்கள் தேக்கு கருங்காலி மரங்கள் வெட்டிக்கடத்தப்படுவது தனிக்கதை. இது இருக்கட்டும். இப்போது சந்தன மரங்களை நாமே வீட்டில் இருக்கும் காலி இடத்தில் வளர்க்க முடியும். தற்போது சட்டம் இதை அனுமதிக்கிறது. இது பற்றிய ஒரு பார்வை...

மலைப்பகுதிகள் பார்க்க ரம்மியமானவை. காரணம் மனிதனின் காலடிகள் அடர்ந்த காடுகளுக்குள் அவ்வளவாக படுவதில்லை.அதனால் அவை அவற்றின் கற்பை இழக்காமல் கன்னி காத்து வருகின்றன. மனிதனின் கண்ணுக்கு தெரியவராமல் பல வித மரங்கள் பெருங்காடுகளில் வளர்ந்து ஓங்கி நிற்கின்றன. அவற்றில் தேக்கு,கடம்பு,மஞ்சள் கடம்பு,தோதகத்தி,சந்தனம் போன்றவை முக்கிய மரங்களாகும். இந்த மரங்கள் எல்லாம் இயற்கை தந்த வரம். இவை வானிலிருந்து மழையை ஈர்த்து மனிதனுக்கு சிற்றோடையாக, ஆறாக தருகின்றன. காற்றை தூய்மைப்படுத்தி தென்றலை வீசச்செய்கின்றன. மலைவாழ் ஆதிவாசிகள் தேன்சேகரிக்கவும், மூலிகைகளை சேகரிக்கவும் உதவுகின்றன.

ஆனால் நகரத்தில் உள்ள சில பேராசை பிடித்த மனிதர்களால் இப்படிப்பட்ட காடுகளிலிருந்து அதிகம் வெட்டி கடத்தப்படுவது சந்தன மரங்கள் தான். காரணம் சந்தனத்திற்கு சர்வதேச அளவில் கடும் கிராக்கி. சந்தன மரம் பரவலாக வளர்க்கப்பட்டு விட்டால் இந்த கிராக்கி குறைந்து காடுகளில் உள்ள மரங்கள் வெட்டி கடத்தப்படுவது குறைந்து விடும்,சுற்றுப்புறசூழலை பாதுகாக்கவும் முடியும் என்ற எண்ணத்தில் தமிழக அரசு 2008 நவம்பர் முதல் ஒரு சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறது.

இதன்படி சந்தன மரங்களை வளர்க்க விருப்பமுள்ள உழவர்கள் அல்லது பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும் தரப்பட்டுள்ளன.

சந்தன மரங்களை வளர்க்க விரும்புபவர்கள் தங்கள் நிலங்களில் சந்தன மரக்கன்றுகளை வாங்கி நடலாம்.

நட்ட பிறகு நடப்பட்ட நிலத்தின் பட்டா எண், எத்தனை கன்றுகள் அந்த நிலத்தில் நடப்பட்டுள்ளது என்பது பற்றிய விவரங்களை வருவாய்த்துறை அடங்கலில் பதிவு செய்து அதற்கான சான்றிதழை வருவாய்த்துறையிடமிருந்து வாங்கி மாவட்ட வன அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இப்படி வளர்க்கப்படும் மரங்களை நன்றாக வளர்ந்து வெட்டும் நிலைக்கு வரும் போது மாவட்ட வன அலுவரிடம் வெட்ட போகிறோம் என்பதை தெரிவித்து ஒப்புதல் வாங்க ஒரு விண்ணப்பத்தை தர வேண்டும்.

இந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் வன அதிகாரிகள் ஆய்வு செய்து விட்டு அந்தமரங்களை வெட்ட அவர்களே ஏற்பாடு செய்வார்கள்.

இப்படி வெட்டப்படும் மரங்களை அரசாங்க மரக்கிடங்குக்கு கொண்டு வந்து வைரம் பாய்ந்த பகுதியை மட்டும் பிரித்து எடுப்பார்கள். பிறகு அந்த கட்டைகளை தரத்தின் அடிப்படையில் 19 வகையாக பிரித்து விற்பனை செய்வார்கள்.

விற்பனைத் தொகையில் 80 சதவீதம் மரத்தை நட்டு வளர்த்த நிலத்தின் சொந்தக்காரருக்கு சேரும். மீதமுள்ள 20 சதவீதம் தொகையில் வெட்டுக்கூலி,சுத்தம் செய்த கூலி,தரம்பிரித்த கூலி,பாதுகாத்தது மற்றும் ஏலம் நடத்திய வகையில் ஆன செலவுக்காக எடுத்துக் கொள்ளப்படும். இந்த பணம் அரசாங்கத்திற்கு சேரும்.

மரத்தை வெட்டி எடுத்த 90 நாட்களில் நிலத்தின் உரிமையாளருக்கு பணம் கிடைத்து விடும்.

எனவே கல்லுக்காடு,கரட்டுக்காடு,வறட்சியான நிலம் என எல்லா இடத்திலும் சந்தன மரம் வளருமுங்கோ...

என்ன சந்தன மரம் வளர்க்க கிளம்பலாமா....

4 கருத்துகள்: (+add yours?)

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…

நல்ல தகவல்.......

அருமை.....

பெயரில்லா சொன்னது…

அருமையான பதிவு.தொடருங்கள்.

இளங்கோ சொன்னது…

நீங்கள் எழுதியது படிப்பதற்கு நன்றாகத்தான் உள்ளது.ஆனால் நடைமுறையில் வனத்துறை அலுவலக கெடுபிடிகளை பார்க்கும்போது இதுமாதிரி மரங்களை வளர்க்கவே யோசனையாக உள்ளது.

vishnu சொன்னது…

தாங்கள் மேலும் சில குறிப்புகளை விளக்கவும் ... உதரணமாக சில வருடங்களுக்கு பிறகு சந்தன மரங்களை பாத்காபது தொடர்பான விதிகள் மற்றும் அரசு ஆணைகள்

காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today