பவளப்பாறைகள் மீன்கள் வாழும் வீடு-அழிக்க போகும் சேது சமுத்திர திட்டம் ?

இயற்கையை காப்பாற்ற வேண்டுமே தவிர அதன் அமைப்பை சீர்குலைக்க முயல கூடாது.தற்போது சேது சமுத்திர திட்ட வழக்கு நிலுவையில் இருக்கிறது.இன்று மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் ஜி.வாசன் நீதிமன்ற ஆணைப்படி இந்த திட்டம் நிறைவேற்ற படும்  என்று சொல்லி இருக்கிறார். அவருக்கு ஒரு வேண்டுகோள். கடல் உயரினங்களை அழிக்கும் இந்த திட்டம் வேண்டாமே!!இது பற்றி ஜூனியர்விகடனில் சூழல் ஆர்வலர்  ஆஸிபெர்னான்டஸ்( கடலோர செயற்பாட்டு கூட்டமைப்பு) சொன்னது.

'இன்று நேற்றல்ல, மத்திய அரசு உதவியோடு சேது சமுத்திர திட்டம் தொடங்குவதற்கான சூழல் கணிந்த அன்றே இந்த திட்டம் வேண்டாம். 4000 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கொட்டி செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. அந்த பிராந்தியத்தில் உள்ள சகல உயிரினங்களும் அழிந்து போகும். இதை நிறைவேற்றாதீர்கள்" என்று அரசுகளுக்கு கோரிக்கை வைத்தோம்.

ஆனால் அது பலனளிக்கவில்லை. கடந்த 2004 ல் சுனாமி தாக்கிய போது தென்கிழக்காசிய நாடுகளின் கடலோரங்களிலும் கடலுக்குள்ளும் கடலின் தன்மை அடியோடு மாறிப்போனது. அந்த மாற்றத்தின் விளைவை இப்போது தென்மாவட்ட மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் தான் சேது சமுத்திர திட்டத்திற்காக கருத்து கேட்ட நிபுணர் குழு வந்த போது அந்த பகுதி மக்கள் யாரும் கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கடலில் சேது சமுத்திர திட்டம் போன்ற திட்டத்தை நிறைவேற்றும் முன் தேசிய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் முறையான தடையில்லா சான்றிதழ் வாங்க வேண்டும்.


கடலடி,மண்ணாய்வு,கடல்வாழ் உயிரியில் ஆய்வு என்று பல ஆய்வுகளை செய்த பின்னரே அந்த சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். ஆனால் இவற்றை செய்யாமல் சுற்றுச்சூழல் அமைச்சகம், கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகத்துக்கு இந்த கால்வாய் திட்டத்தை செயல்படுத்த அனுமதி வழங்கியிருக்கிறது.

அடிக்கடி புயல் மையம் கொள்ளும் இந்த பகுதிய இரண்டு மீட்டரிலிருந்து மூன்று மீட்டர் ஆழம் கொண்ட கடல் பகுதி தான். இந்த கடல் பகுதியை 12 அடி ஆழத்திற்கும் 300 மீட்டர் அகலத்துக்கும் தோண்டுவது தான் சேது கால்வாய் திட்டம். பல மாதங்களாக கடலை தோண்டி இதுவரை 40 சதவீதம் மண்ணை தோண்டியிருப்பதாக சொல்கிறார்கள்.

அதாவது 82 மில்லியன் க்யூபிக் மீட்டர் அளவுக்கு மண்ணை தோண்டியிருக்கிறார்கள்.இந்த அளவு மண்ணை கொண்டு வந்து சென்னையில் கொட்டினால் அது சென்னையிலிருந்து பல்லாவரம் வரை மணல் மேடாகத்தான் இருக்கும். 'இப்போது தோண்டப்பட்ட மண்ணைக் கொண்டு போய் எங்கு கொட்டினீர்கள் ' என்றால் அரசு சொல்ல மறுக்கிறது.

இந்த விவரத்தை இவர்களால் சொல்ல முடியாது. காரணம், இந்த திட்டத்தை எத்தனை கோடிகள் செலவழித்தாலும் நிறைவேற்ற முடியாது. திட்டம் நிறைவேறும் என்ற நம்பிக்கை மத்திய அரசுக்கே கிடையாது. இதனால தான் மததிய அரசு கடன் வழங்கும் வங்கிக்கு உத்தரவாதம் கொடுக்க தயங்குகிறது.

இதன் விளைவாக சர்வதேச நிதியத்திடமிருந்து கடன் வாங்கி கொடுக்க வேண்டிய வங்கியிம் சுணங்கி நிற்கிறது. சர்வதேச அளவில் கப்பல் சேவைகளில் ஈடுபடும் எந்த அமைப்பாவது இந்த திடத்தை வரவேற்கிறதா என்றால் அதுவும் இல்லை.

முப்பதயிரம் டன் எடை வரை எடை கொண்ட கப்பல்கள்தான் சேது கால்வாயை கடக்க முடியும். உலகின் மிகப்பெரிய வணிக கப்பல்கள் எல்லாம் இதற்கும் மேல் எடை கொண்டவை. அதனால் தான் சர்வதேச கப்பல் நிறுவனங்களும் மவுனம் சாதிக்கின்றன. தோண்டப்படும் சேது கால்வாயை சூயஸ் மற்றும் பனாமா கால்வாயுடன் ஓப்பிடுகிறார்கள். அவை இரண்டும் நிலத்தில் தோண்டப்பட்டவை. சேது கால்வாயோ கடலில் தோண்டப்படுகிறது.

இந்த திட்டத்திற்கு செலவழிக்கும் 4000 ஆயிரம் கோடி ருபாயை இந்த கால்வாயை கடக்கும் கப்பல்களிடம் வசூலிக்க திட்டமிட்டுள்ளார்கள்.அதன்படி இந்த கால்வாயை கடக்கும் கப்பல் 60 லட்சம் ருபாயை சுங்க வரியாக கட்ட வேண்டியதிருக்கும். இதற்கு பதிலாக இலங்கை கொழும்பு துறைமுகத்தை சுற்றி செல்லவே விரும்புவார்கள்.

திட்டம் முடிந்து விட்டாலும் தோண்டுவதை மட்டும் நிறுத்த முடியாது.காரணம் கடலின் போக்கில் கால்வாய்க்குள் மீண்டும் மீண்டும் மணல் வந்து குவிந்து விடும். ஆக.கால்வாய் தோண்டிய உடனே வேலை முடிந்ததாக சொல்ல முடியாது.மண் மூடி விடுவாதல் அவ்வபோது, இந்த கால்வாய் இருக்கும் வரையிலும் தோண்டிக் கொண்டே இருக்க வேண்டியது தான்.

இந்த கால்வாயை தோண்டும் கப்பல் ஒன்று உடைந்து போனது. மண்ணை அகழ்கிற கப்பல் எப்போதும் உடையாது. ஆனால் இந்த சேது கால்வாய் என்று சொல்லப்படும் இடத்தில் மண்ணுக்கடியில் இருக்கும் பவளப்பாறைகள் அகழ்வால் உடைந்தது.

பவளப்பாறைகள் மீன்கள் வாழும் வீடு. நமது கடல் பகுதியில் 2500 வகையான கடல் வாழ் உயிரினங்கள் இருப்பதாக சொல்கிறார்கள். அதில் 400 க்கும் மேற்பட்ட வகைள் சேது கால்வாய் பகுதியில் உள்ள பவழப்பாறைகளில் வாழ்கின்றன. முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் காரியம் பவளப்பாறைகளில் தான்நடக்கிறது. மிகவும் இறுகிய பாறையை உடைக்க போய் தான் கப்பல் உடைந்துள்ளது.

மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரினங்களை பாதிக்கும் இந்த திட்டம் தென்மாவட்ட மீனவ மக்களின் வாழ்வையும் மீன்பிடி தொழீலையும் முடக்கி போடும் திட்டம் என்று தான் சொல்ல வேண்டும். என்று ஆதங்கத்தோடு சொல்கிறார் பெர்னான்டஸ்.

0 கருத்துகள்: (+add yours?)

காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today