யானை-வாழ்வியலின் வளமை மற்றும் செழிப்பின் ஒரு உன்னத அடையாளம்

7 கருத்துகள்பார்க்க பார்க்க வியக்க வைப்பது யானை. பார்க்க பிரமாண்டமான உருவாமாக இருந்தாலும் மனிதனின் அடிமையாக ரோடுகளில் பிச்சையெடுப்பதும், கோயில்களில் ஆசிர்வாதம் செய்வதுமாக பரமசாதுவாக இருக்க பழக்கப்படுத்தப்பட்டிருக்கும் யானைகள் ஒரு வகை. காடுகளில் வெட்டப்படும் மரங்களை சுமந்து செல்லும் லோடுமேன் வேலைக்கு இருக்கும் யானைகள் இன்னொரு புறம். இது தவிர மனிதனை எதிர்த்து வரும் காட்டு யானைகளை கட்டுப்படுத்தி மீண்டும் காட்டுக்குள் துரத்தி விட பழக்கப்படுத்தப்பட்டிருக்கும் 'கும்கி' யானைகள் மறுபுறம். இப்படி யானைகளை நாம் பல பரிணாமங்களில் நாட்டிலும், காட்டிலும் பார்க்க முடிகிறது.

இந்த உலகத்தில் யானைக்கு மேல் மிக பயங்கர உருவத்துடன் இருந்த எத்தனையோ விலங்கினங்கள் இன்று அழிந்து போய்விட்டன. இதில் கடைசி நிலையில் இருப்பது யானைகள் தான். இன்றைக்கு இருக்கும் இந்தியாவின் ஆளும் வர்க்க அரசியல்வாதிகளில் 99 சதவீதத்தினருக்கு அறிவியல் சார்ந்த படிப்பும் அறிவும் இல்லை என்பதை நாடாளுமன்ற உறுப்பினர்களின் பயோடேட்டாவே காட்டுகிறது. இந்த நிலையில் இவர்களுக்கு யானைகள் உள்ளிட்ட எந்த உயிரினத்தின் மீதும் அறிவியல் பார்வையும், ஆர்வமும் இருக்காது என்பதே உண்மை.

இந்த நிலையில் இவர்கள் இப்படி அழியும் பட்டியலை நோக்கி பயணிக்கும் யானையை காப்பாற்றுவது பற்றியல்லாம் எங்கே சிந்திக்க போகிறார்கள்? இருந்தாலும் உலக இயற்கை பாதுகாப்பு இயக்கங்களின் அழுத்தம்,இந்திய வனஉயிர் வாரிய(மேட்டுக்குடி) உறுப்பினர்களின் மனோபாவம்,இயற்கையை நேசிக்கும் ஆர்வலர்களின் உறுதியான நிலைப்பாடு ஆகியவற்றின் காரணமாக இந்திய மத்திய அரசு கடந்த 1992 ல் 'புரோஜக்ட் எலிபண்ட்' என்ற திட்டததை அறிவித்தது.

இதன்படி யானை என்னும் பிரமிக்க தக்க விலங்கையும் அதன் வாழ்விடத்தையும் பாதுகாப்பது தான் குறிக்கோள். தற்போது இந்த திட்டம் 18 ஆண்டுகளை கடந்து போய்க் கொண்டிருக்கிறது. இருந்தாலும் இன்னும் ஆங்காங்கே யானைத்தாக்குதல் பற்றி கேள்விப்படத்தான் செய்கிறோம். யானைகள் என்னும் பெரிய விலங்குக்கும் மனிதனுக்கும் எந்த இடத்தில் முட்டல் மோதல் இருக்கிறது? இதற்கு காரணம் என்ன?

யானைகளின் உணவு,நீர்,வாழிடம் பறி போவதன் காரணமாக யானை கோபமுறுகிறது. தூண்டப்படுகிறது. காடுகளில் ஏற்படும் உணவுத்தட்டுப்பாடு யானைகளை பாதிக்கும் போது மனிதனின் வேளாண் நிலத்தை யானை தேடி வருகிறது. அதாவது அதன் வாழிடமான மலைக்காடுகளை அழித்து டீ எஸ்டேட்களை அமைத்து விட்டால் யானை உணவுக்கு எங்கே போகும். மனிதனின் டீத்தூள் பேராசைக்கு யானையை பட்டினி போட்டால் அது வேறு வழிக்கு இறங்குகிறது.இது தான் உண்மை.
யானையை ரோட்டில் பார்க்கும் போதும் சர்க்கஸில் பார்க்கும் போது அதன் தோற்றத்தை மட்டும் பார்த்து மகிழ்ந்து விட்டு அப்படி அதை மறந்து விடுகிறோம். அட்லீஸ்ட் விநாயக கடவுளின் உருவத்தை பார்க்கும் போது கூட யானையின் தோற்றம் கண்ணுக்குள் வந்து போவதில்லை. ஆனால் யானையில உடலமைப்பையும் வாழ்க்கை முறையை கொஞ்சம் தெரிந்து கொண்டு யானையை காக்க நம்மால் முடிந்ததை செய்வோம் என்பதற்கு தான் இந்த பதிவு.

உடலமைப்பு

யானைகளில் ஆசிய யானை,ஆப்பிரிக்க யானை என்று இரண்டு வகை உண்டு. இந்த இரண்டு யானைகளுக்கும் காதுகள்,கழுத்து மற்றும் நெற்றி போன்றவற்றில் சற்று வித்தியாசம் காணப்படும். யானைகளின் நிறம் கருப்பாக இருப்பதாக தெரிந்தாலும் உண்மையில் கருஞ்சாம்பல் நிறமுடையவை. இருந்தாலும் ஆசிய யானைகளுக்கு (தோலின் மேல் பகுதியில்) இளஞ்சிவப்பு நிறத்தில் அல்லது வெண்மையாக புள்ளிகள் காணப்படும். இது ஒரு வகை நிறமிழப்பு. இது நிறமிக் கோளாறு என்னும் சிறிய நோய்.
யானையின் தோல் 25 மி.மீ (ஒரு அங்குலம்) வரை தடிப்பானது. இருப்பினும் கூருணர்வு(sensitive) மிக்கது. ஈ,கொசு கடித்தால் கூட சட்டென்று உணர்ந்து கொள்ளும். இந்த சிறிய கொசு, எறும்பு,ஈக்களிடமிருந்த தப்பிக்க தான் இயற்கை யானைக்கு மடிப்பு,சொரசொரப்பு,தடிப்பு,தொய்வு,தளர்வு என்று வித்தியாசமான தோலை தந்துள்ளது.

இருந்தாலும் ரத்தம் உறிஞ்சும் சில உண்ணிகள்,பூச்சிகள் இந்த தோலின் இடுக்குகளில் புகுந்து கொள்ளும்.யானையின் தோல் மற்ற அடர்த்தியான தோல் கொண்ட காண்டாமிருகம்,நீர்யானை போன்ற விலங்குகளின் தோலை போல் காணப்பட்டாலும் அந்த விலங்குகளின் தோல் அளவுக்கு உறுதியானதல்ல. கெட்டித்தன்ை உடையதும் அல்ல. மென்மையானது. இதனால் தான் மனிதனை கடிக்கும் கொசுவும்,எறும்பும் யானைகளையும் எளிதாக கடித்து ரத்தத்தை உறிஞ்சுகின்றன.

பூச்சிகள் கடிக்கும் போது யானைகள் பொதுவாக ஒரு குச்சியையோ, சிறு மரக்கிளையையோ ஒடித்து அதனால் சொரிந்து கொள்ளும். அல்லது அரிக்குமிடத்தை ஒரு பாறையின் மீது அறக்கி தேய்த்துக் கொள்ளும். இந்த பழக்கம் மற்ற விலங்குகளை விட யானை அறிவுமிகுந்தது என்பதை காட்டுகிறது. வளர்ச்சியடைந்த யானைக்கு தலையின் உச்சி,வால் பகுதி தவிர்த்து வேறு எங்கும் உரோமங்கள் இருப்பதில்லை. இதை வளர்த்து வயது வந்த யானை என்பதை அடையாளம் கண்டு கொள்ளலாம்.
தனித்தன்மை வாய்ந்த யானையின் தந்தம் என்பது, யானையின் முன்வெட்டு பற்கள் தான். யானைத்தந்தங்கள் மூன்றில் இரண்டு பங்கு வெளியே தெரிகின்றன. ஒருபங்கு மண்டையோட்டின் உள்ளே பற்குழியினுள் பொருந்தியிருக்கும். ஆசிய யானைகளில் மரபணுக்குறைபாடு காரணமாக தந்தம் இல்லாத ஆண்யானைகள் பிறந்து வளர்வதுண்டு. இவற்றை 'மக்னா' அல்லது 'மோழை' என்று அழைப்பார்கள்.

ஆசிய யானைகளில் இந்திய ஆண் யானைக்கு மட்டுமே தந்தம் நீண்டு வளரும். பெண்ணுக்கு உதட்டினுள் அடங்கிய சிறு தந்தம் இருக்கும். இலங்யைில் காணப்படும் ஆண்யானைகளில் பெரும்பாலனவற்றுக்கு தந்தங்கள் இல்லை.
கொம்பு எனத் தவறாக கருதப்படும் இந்த தந்தம் தன் எதிரிகளுடன் போராடவும்,மற்ற ஆண்யானைகளுடன் சண்டையிடவும் ஒரு ஆயுதமாக இருக்கிறது. மற்றும் பெண் யானைகள், ஆணின் உடல் வலுவை கணிக்க ஒரு கவர்ச்சி உறுப்பாகவும் உள்ளன.

மேலும் உண்ணத்தக்க உவர் மண்ணை தோண்டி எடுக்கவும்,நீருக்காக ஊற்றுக்குழி பறிக்கவும்,மரங்களின் பட்டையை உரிக்கவும்,வேர்களை தோண்டி பிடுங்கவும் சிறு கிளையை முறிக்கவும் உதவுகிறது. தந்தங்கள் யானையின் ஆயுள் முழுக்க வளர்கின்றன.
யானையின் துதிக்கை தனிச்சிறப்பானது. இது நீண்டு வளர்ந்து விட்ட மேல்உதடும் மூக்கும் சேர்ந்த பகுதி தான் துதிக்கை. இது மீள்விசை கொண்ட தசைநார் வளையங்களால் ஆன சுருள்வில் தன்மையுடன், திறன் மிக்கவையாகவும் மூக்காகவும் இயங்குகிறது.

இதனால் இலைகள்,தண்ணீர்,புழுதி,புல், மண் போன்றவற்றை பறிக்கவும்,பிடுங்கவும்,வாரவும் எடுத்து உடலின் மீது போட்டுக்கொள்ளவும் முடிகிறது.நன்கு மோப்பம் பிடிக்கவும், கோபத்தை,மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும்,ஒரு ஊது கொம்பு போல 'வீர்' என்ற ஒலி எழுப்பவும் தும்பிக்கை பயனாகிறது.

யானையின் தும்பிக்கை 1,50,000 தனித்தனி தசை நார்,நரம்பு கொண்ட கட்டமைப்பினால் ஆனது. இதனால் ஒரு நாணயத்தை கூட எடுக்க முடியும்.ஒரு சிறிய புல்லை தனியாக பிடுங்க முடியும்.முட்செடி,கொடி,மரங்களின் பட்டையை உரிக்கும் போது அதன் சிலாக்குகள் எதுவும் கிழித்து காயப்படுத்ததவாறு லாவகமாக இயங்க முடியும்.யானையினங்கள் எல்லாம் இரு துவாரங்களையுடைய தமது தும்பிக்கையின் நுண்ணுர்வுமிக்க விரல் நுனியால் ஒரு இலை, தழை, பொருளை உண்ணத்தக்கதா, தகாததா என்று நன்றாக புரிந்து கொள்ளும்.

பெருந்தலையை திருப்பாமலேயே எல்லா திசைகளிலும் தும்பிக்கையை சுழற்றி தமது பகைவிலங்கு,மற்ற விலங்குகள் அல்லது நீர் இருக்கும் திசை ஆகியவற்றை 5 கி.மீ தூரத்தில் இருந்தால் கூட கண்டுபிடித்து விடும்.
தும்பிக்கை என்பது யானைக்கு உயிர்நாடி போன்றது. தும்பிக்கையில் காயம்பட்டலோ, துண்டிக்கப்பட்டாலோ யானை உயிர்வாழ்வது சிரமமாகிறது. யானைக்கு 26 பற்கள் வரை இருக்கும். சுவையுணர்வை பொறுத்த மட்டில் யானைக்கு இனிப்பு,கசப்பு எல்லாம் தெரியாது. அவற்றுக்கு சுவை நரம்பு இல்லை. மணம்,மென்மை,சாறு,அளவு,பசி என்ற அடிப்படையில தான் அவை உணவை உண்கின்றன.

இது போல் முன்னோக்கி பார்ப்பதை விட பக்கவாட்டு பார்வையை தான் யானை பெரிதும் நம்பி இருக்கிறது. ஒரு யானை தனது பார்வையை விட கூர்மையான கேட்பு சக்தியையும் நுட்பமான மோப்ப திறனையும் நம்பி வாழ்கிறது. காட்டு யானகைள் ஒரு நாளில் 18 மணி நேரத்தை உணவு தேடி தின்பதில் தான் செலவிடும். குட்டியானைகள் அதிகமாக உறங்குவதுண்டு. வளர்ந்த யானைகள் ஆழ்நத உறக்கம் கொள்வதில்லை.

வாழ்வியல்
யானைகள் புலிகளை போல் தனித்து வாழும் விலங்கல்ல.15,20 என கூட்டமாக வாழ்பவை.எந்த ஒரு யானை கூட்டத்திற்கும் ஒரு மூத்த பெண் யானையே தலைமை தாங்கி வழி நடத்தும். அந்த தலைவி,காட்டில் நிறைய உணவு கிடைக்குமிடங்கள்,பாதுகாப்பு கட்டுப்பாடு பற்றிய அறிவோடு விளங்கும்.எனவே அது தான் அக்கூட்டத்தின் முடிசூடா முதலமைச்சர்.

ஒருயானைக்கூட்டத்தில்,பாட்டி,பெரியம்மா,சித்தி,மாமா,சகோதர,சகோதரி,பேரன்,பேத்தி என அனைத்து உறவுகளும் இருக்கும். ஆண் யானைகள் கூட்டத்தில் 12 முதல் 15 வயது வரை சேர்ந்திருக்கும். பின்னர் அவை விலகிச் செல்கின்றன. அல்லது விலக்கப்படுகின்றன. இது போன்ற நிலைப்பாடுகள் நெருங்கிய உள்ளினப் பெருக்கம் (inbreeding) நடைபெறாமல் தடுக்கவே ஏற்பட்டுள்ளன எனலாம்.

ஒரு யானைக்கூட்டம் நிரந்தரமாக ஒரு இடத்தில் தங்கி வாழும் பண்புடையதல்ல. சுற்றித்திரியும் வாழ்க்கையை கொண்டது. தங்களுக்கென ஒரு மேய்ச்சல் பகுதியை தேர்வு செய்து கொண்டு அதைப்பயன்படுத்தும். இந்த மேய்ச்சல் பகுதி பல நூறு சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்டதாக இருக்கும். ஒரு இடத்தை அடையாளப்படுத்தி அதைக்கணக்கிட்டு காத்திருந்தால் ஆண்டுக்கு ஒரு முறையாவது அந்த பாதையில வந்து போவதை பார்க்கலாம். அவ்வாறு வந்து போகும் வேளையில் அவற்றின் மேய்ச்சல் பகுதிக்கு மனிதரால் இடையூறு வரும் போது,வேளாண் பயிர் மேய்தல் போன்ற நிகழ்வுகள் ஏற்படுகின்றன( அதாவது மனிதர்களின் தோட்டத்திற்குள் புகுந்து சாப்பிடுதல்). இதை தான் நாம் யானைகளின் அட்டகாசம்,நாசம்,படையெடுப்பு,துவம்சம்,கும்மாளம் என்கிறோம்.

யானைக்கூட்டத்திற்கு ஒரு பெண் யானை தான் தலைவியாக இருந்து வழிநடத்தினாலும் விதிகள்,கட்டுப்பாடு மற்றும் பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பதில் இளம் குட்டிகள் தவிர்த்து யானைகளுக்கும் பொறுப்புண்டு. தாய் யானைகள் மற்ற எல்லா குட்டிகளிடமும் அன்பு காட்டும். பாலும் தரும். இன்னும் ஆற்றை கடக்க உதவுதல்,இலைகளை பறித்து போடுதல்,ஊனுண்ணிகளிடமிருந்து தப்பித்தல் போன்ற எல்லாவற்றுக்கும் உதவும்.

ஒரு யானைக்கூட்டத்தில் இருக்கும் யானை மற்ற தனது கூட்ட யானையை அடையாளம் கண்டு கொள்ள அவற்றின் ஒலி,கழிவுப்பொருள்,உடலசைவு மொழி வழியாக தெரிந்து கொள்ளும். இதன் மூலம் அடையாளங்களை உணர்த்தி, உணர்ந்து,துல்லியமாக,முழுமையாக புரிந்து கொள்ளும். ஆனாலும் யானைகளின் வியப்புக்குரிய சங்கதியாக இருப்பது அதன் கேளா ஒலி உரையாடல்கள்.அதாவது யானைகள் தங்களுக்குள் இன்ப்ரா ரெட்(infra red) அதிர்வுகளால் ஆன ஒரு மொழியில் தொலைவிலுள்ள மற்றொரு யானைக்கூட்டத்துடன் தொடர்பு கொள்வதாக ஆய்வாளர்கள் கண்டறிந்தள்ளனர்.

நம்மைப் போலவே யானைகள் அதன் அளவுக்கு மேல் சிந்தித்தல், செயல்படுதல்,பிரச்சனையைசமாளித்தல்,புரிதல்,நினைவாற்றல்,வருந்துதல்,பிரிவு,மகிழ்ச்சி,ஏமாற்றம்,பரிவு,கோபம் என பல மனநிலையை பெற்றுள்ளன. ஆனால் மனிதருக்கு உள்ளதை போல்
 சுயநலம்,வஞ்சனை,பழிவாங்கல்,தாக்குதல்,கொள்ளை,கொலை,அட்டகாசம்,போக்கிரித்தனம் போன்ற எதுவும் இவைகளிடம் இல்லை.

மழை,குளிர்,பனியை பொருட்படுத்தாமல் ஏறக்குறைய 8000 அடி உயரம் உடைய மழைக்காடுகள் முதல் கடற்கரையோர காடுகள் வரை யானைகள் காணப்படுகின்றன. ஆனாலும் மலையடிவார சமவெளிக்காடுகள் தான் யானைகளுக்கு பிடித்தமானவை.கூட்டத்திலிருந்து விலகி வாழும் வயதான யானை தமது நீண்ட வாழ்நாளின் கடைசிக்காலத்தில் காட்டின் அமைதியான சூழலில் உணவும்,நீரும்,நிழலும் கிடைக்கும் செழிப்பான இடத்தில் ஒதுங்கி விடுகின்றன. பல் வளர்ச்சி முடிந்து,கடைசிப்பல்லும் தேய்ந்து விழுந்து விடும் போது, இளம்புல் மற்றும் இலைக்கொழுந்துகளை மட்டும் தின்று வாழும். அடிக்கடி கீழே படுத்துக் கொள்ளும்.மெல்ல மெல்ல எழுந்து நிற்க முடியாமல் அவதிப்படும். உணவு எடுத்துக் கொள்வது குறைந்து போய் கடைசியில் உடல் பலவீனப்பட்டு மெலிந்து போகும்.

அப்போது சுவாசம் குறையும். தும்பிக்கை நுனியை மட்டும் அசைக்கும்.மற்ற உறுப்புகளை அசைக்க முடியாதபடி சில நாட்கள் படுத்துக் கிடந்து கண்களில் ஒளி இழந்து இறுதியாக தனது நீண்ட கால மூச்சை நிறுத்திக் கொள்ளும்.
தமிழகத்தில் இந்த தும்பிக்கை நாயகன்கள் களக்காடு, முதுமலை,ஆனைமலை சரணாலயங்களில் தான் அதிகம் தப்பி பிழைத்திருக்கின்றன. யானை இருக்கும் இடங்கள் செழிப்பானதாக இருக்கும் என்பது இயற்கை உண்மை. யானை தனது சாணங்கள் மூலம் ஏராளமான தாவரங்களையும்,மரங்களின் விதைகளையும் காடு முழுவதும் பரப்பி காடுகளுக்கு உயிரூட்டுகின்றன. அதனால் காடுகளில் நூற்றுக்கணக்கான தாவர, விலங்குகளும் சிறப்பாக வாழ முடிகிறது. இவற்றில் பூச்சிகள்,தவளைகள்,பாம்புகள், ஆமைகள்,காட்டுப்பூணை,முயல்,முள்ளம் பன்றி,நீர்நாய் போன்ற சிறு விலங்குகளுடன் உயிரின அட்டவனையில் உச்சியில் உள்ள புலி,சிறுத்தை,கரடி,காட்டெருமை,மான்கள் ஆகியவற்றுக்கும் யானைகளலேயே வளம் பகிர்நது அளிக்கப்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன.


வெற்றியின் உருவம் விநாயகன்
பெருத்த உருவத்தை உடைய கடவுளான கணபதி சிறிய உருவமாகிய எலியின் மீது தான் அமர்ந்திருப்பது வழக்கம். இது ஏன் என்பது இன்னும் பலருக்கு புரியாத புதிர். இது ஏன் என்பதற்கு சில வரலாற்று குறிப்புகளிலிருந்து விடை காணலாம்.
குப்தர் காலமான கி.பி.6 ம் நூற்றாண்ட்டில் தான் விநாயகர் விநாயகர் தோற்றுவிக்கப்படுகிறார். கணபதி என்ற சொல்லின் பொருள் 'கணங்களின் கடவுள்' என்பதாகும். சில வேளைகளில் 'கணங்களின் தலைவன்' என்றும் பொருள் கொள்ளலாம். கணேசன் என்பதை கணா-ஈசன் எனலாம். அக்காலத்தில் "கணநாயகா" என்றே விநாயகனை குறித்தனர். ரிக் வேதத்தில் கணபதி என்ற ஒரு சொல் ஒரு படைத்தலைவனை குறிக்கிறது. மேலும் கணா என்ற வடமொழிச்சொல்லுக்கு தமிழில் குலம் என்று குறிப்பிடலாம்.
அந்த வழியே ஆதிமக்கள் சிலர் தங்கள் புராண விலங்குகள் தாவர,பறவை மூதாதையர்களிடமிருந்து உதித்ததாக நம்பினார்கள். இந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவானவையே யானைக்குலம்,எலிக்குலம் போன்றவை.இதற்கு பல எடுத்துக்காட்டுகளை வரலாற்றில் காணப்படுகின்றன.மாதங்கர் என்ற வடஇந்திய பழங்குடி மக்களின் குலக்குறி யானையாகும். (மாதங்கி என்றால் யானை).லலிதா விஸ்தரகா என்ற புத்த நூல், பசநாதி என்ற கோசல நாட்டு அரசனை யானை விந்திலிருந்து தோன்றியவனாக சொல்கிறது. கொங்கு வேளாளர்களிடம் மாதங்கம் என்ற உட்சாதி பிரிவு உள்ளது. நீலகிரியில்  குறும்பர் பழங்குடியின் குலங்களில்'யானைக்குலம்' என்று ஒன்று உள்ளது.
தென்னிந்தியாவில் மூசிகர் பிரிவு என்ற ஒன்று இருக்கிறது. மூசிகம் என்றால் சமஸ்கிருதத்தில் எலி. இந்திய ஆதிவாசிகள் பிரிவு சிலவற்றுக்கு எலி குலக்குறியாகும். கொங்கு வெள்ளாளர்களில் குண்டெலிக்கூட்டம் என்பது ஒரு பிரிவு. சுண்டெலி,வெள்ளெலி,முள்ளெலி,மூஞ்செலி என்ற எலி இனங்கள் போல முகட்டெலிக்கு குண்டெலி என்று பெயர். இந்த எலி வீட்டின் கூரையில் வாழும். இது வீட்டு பொருள்களை தின்று வாழ்வதால் நன்றாக கொழுத்திருக்கும்.
ஒரு குலத்தினர் மற்றொரு குலத்தினருடன் போரிட்டு வென்றால் தோற்றவரின் குலக்குறி அழிக்கப்படும். அல்லது அடிமைப்படுத்தப்படும். ஆக யானையைக் குலக்குறியாக கொண்ட பழங்குடி கூட்டம் எலியை குலக்குறியாக கொண்டிருந்த கூட்டத்தை போரிட்டு வென்று வெற்றியை நிலைநாட்டும் அடையாளமாக யானைக்கு வாகனமாக்கியுள்ளனர். ஆக,விநாயகர் என்பதை வெற்றி கொள்ளும் கூட்டத்தின் அடையாளமாக்கியுள்ளனர்.

ஆக..மனிதன் எப்படி ஒரு உறவு முறையாக வாழவேண்டும் என்பதை தனது வாழ்க்கை முறை மூலம் விளக்கும் யானையை நாமும் விநாயகன் போல் சற்று நேரம் சிந்தித்து அவை வாழ வழி தருவோம்.


திரு.முகமதுஅலி மற்றும் யோகனந்த் ஆகிய யானை பாதுகாப்பு ஆர்வலர்கள் எழுதிய 'அழியும் பேருயிர்:யானைகள்' என்ற நூலிலிருந்து

வெளியீடு: இயற்கை வரலாறு அறக்கட்டளை,ஆல்வா மருத்துவமனை,அம்பாராம் பாளையம்,பொள்ளாச்சி-642 103.போன் 98941 40750

தேனீக்கள் இல்லாவிட்டால் மனித இனம் அழிந்து போகுமா?

6 கருத்துகள்                                                                                                                                                          டிஸ்கவரி சேனலில் ஒரு நிகழ்ச்சியில் இந்தியகாட்டுப்பகுதிகளில் உள்ள மலைகளில் தேன் எடுப்பதை படம்பிடிக்க அந்த சேனலின் படபிடிப்புக் குழுவினர் வந்திருந்தார்கள். அந்த காடுகளில் உள்ள பழங்குடி மக்கள் 2 ஆயிரம் அடி உள்ள மலைகளில் எந்த அளவுக்கு கடினப்பட்டு ஏறி தேனை எடுக்கிறார்கள் என்பதை காட்டியது அந்த சேனல்.
இன்றைக்கு மேற்குவங்காளத்திலும் மற்ற சில இடங்களிலும் பழங்குடி மக்கள் தங்கள் நிலங்களை காக்க கடும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். காரணம் அந்த காடுகள் அவர்களின் வாழ்விடங்கள்.
அங்கு இருக்கும் மூலிகைகளும், மரங்களும்,தேனும் அவர்களின் வயிறுகளுக்கு உணவிடுகின்றன.நகரத்தில் தேனீக்கள் கூடுகட்ட போவதில்லை.தேனீக்கள் நகரத்தின் பரபரப்பில் இருப்பது இல்லை.
காடுகளின் அமைதியான சூழலில் இருந்து தான் பல அரிய பொருட்கள் மனிதனுக்கு கிடைக்கின்றன.மனிதனின் உடல் நலனை காக்கும் பல பொருட்கள் காடுகளிலிருந்து கிடைக்கின்றன. அவற்றில் தேன் அதிசயமான ஒரு அமிர்தம்.

தேன் எடுத்து வந்து நாம் உண்டு விடுகிறோம். தேனீக்களின் உணவான அவை தேனீக்கு கிடைக்காமல் போகிறது. ஆனால் தேனீக்கள் அவற்றை பற்றி கவலைப்படுவதில்லை. அடுத்த இடத்தில் கூடுகட்ட போய்விடுகின்றன. தேனீக்கள் பார்க்க உருவத்தில் சிறிது தான். ஆனால் அவற்றின் வாழ்க்கை முறையும், அவை மனிதனுக்கு கற்றுத்தரும் பாடமும் ஏராளம். ஆனால் நாம் தான் அதை கடைப்பிடிப்பதில்லை. அவற்றை காக்கவும் முன்வருவதில்லை. சமீபத்தில் தமிழ்நாட்டின் ஒரு விமான நிலைய உயர் அதிகாரியுடன் பேசிக்கொண்டிருந்தேன்.அப்போது அவர் வீட்டில் சில தேன்கூடுகளை வைத்து தேனீக்களை வளர்ப்பதை பற்றி சொன்னார். பிரமித்து போனேன். எப்போதும் பிசியாக இருக்கும் இவரா தேனீக்களை வளர்க்கிறார் என்ற ஆச்சரியமாக இருந்தது.
அவர் தேனீக்களை பற்றி சொன்னது மிகவும் ஆச்சரியப்படத்தக்க தகவலாக இருந்தது. இதோ....


பெண்ணின் ஆட்சி
 " தொடக்க காலத்தில் மனித வாழ்க்கையில் பெண்களுக்கு தான் முக்கிய இடம் இருந்தது. அதாவது தாய்வழிச்சமுதாயம் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அது தான். பெண்கள் தான் ஆங்காங்கே இருந்த மனித குழுக்களின் தலைவியாக இருந்திருக்கிறாள். விவசாயம் உள்ளிட்டவைகளில் அவர்கள் தான் ஈடுபட்டு அந்த குழுக்களுக்கு உழைப்பதற்கான வழியை காட்டியிருக்கிறார்கள். காலப்போக்கில் பெண்ணடிமை சமுதாயம் உருவாயிருக்கிறது. ஆனால் தேனீக்கள் குழுவில் அன்றிலிருந்து இன்று வரை பெண்களின் ஆட்சி தான்.
தேனீக்களில் குடும்பத்தில்(காலனி) ராணி தேனீ, ஆண்தேனீ,வேலைக்கார தேனீ என்ற மூன்று வகையான தேனீக்கள் இருப்பதுண்டு. இதில் வேலைக்கார தேனீக்கள் பூக்களுக்கு சென்று தேனை எடுத்து வந்து கூட்டில் சேர்க்கும். ராணி தேனீ முட்டையிட்டு தேனீக்களை உற்பத்தி செய்து கொண்டே இருக்கும். ஆண்தேனீ வழக்கமான சோம்பேறி என்று வைத்துக் கொள்ளலாம்.

தேனில் பலவகை இருக்கின்றன. ஒவ்வொன்றும் குணத்தில் மாறுபட்டவை.மாமரம், வேப்பமரம் போன்ற மரங்களின் உச்சாணிக் கொம்பில் கூடுகட்டி இந்த மரங்களின் பூக்களில் தேன் எடுக்கும் தேனீக்களின் தேனுக்கு கொம்புத் தேன், மலை உச்சியில் யாரும் தொட முடியாத தூரத்தில் இருந்து கொண்டு பலவகையான காட்டு மரங்களில் எடுக்கும் தேனுக்கு மலைத்தேன் என்று பெயர். இப்படி இருக்கும் இடத்திற்கு ஏற்றபடி தேன் பல பெயர்களை கொண்டிருக்கிறது.இது ஒரு புறமிருக்கட்டும்.

இந்த தேனீக்கள் பூக்களுக்கு பூக்கள் சென்று தேனை எடுக்கும் போது தான் மனித குலம் வாழ தேவையான காய்கனிகள் உற்பத்திக்கான செயல்பாடு தொடங்குகிறது. இந்த தேனீக்கள் பூக்களில் அமரும் போது அந்த பூக்களில் இருக்கும் மகரந்தங்கள் அவற்றின் கால்களில் ஒட்டிக் கொள்கின்றன. ஆண்மகரந்தங்கள் இப்படி தேனீக்களின் கால்களில் அமர்ந்து பயணம் செய்து மற்றொரு பூவின் பெண் சூலகத்தில் போய் அமரும் போது பூக்களின் கருவுறுதல் நடைபெறுகிறது. பூக்கள் காய்களாக மாறி கனிகளாக மாறுகின்றன. ஆக...மனிதனுக்கு வேண்டிய காய்கறிகள் உற்பத்தியாவதற்கு தேனீக்கள் மறைமுகமாக உதவி செய்கின்றன. இதை தாவரவியலாளர்கள் அயல் மகரந்த சேர்க்கை என்கிறார்கள். அதாவது நமது உறவு முறையை விட்டு விட்டு தூரத்து உறவு முறையில் காதல் திருமணம் செய்து போல, எங்கோ பல மைல் தொலைவில் இருக்கும் இரண்டு செடிகளின் பூக்களை தனது கால் என்னும் காதலால் இணைக்கின்றன இந்த தேனீக்கள்.அதாவது 
 நாள் தோறும் கோடிக்கணக்கான மலர்களை சென்று அமர்ந்து தேனை எடுக்கும் தேனீக்கள் பூக்களை கருவுர செய்ய உதவும் தூதுவனாக இருக்கின்றன. ஆக...தேனீக்களால் நாள் தோறும் பல கோடி மலர்கள் பூவிலிருந்து காயாக மாறும் நிகழ்வுக்கு போகின்றன.

தேனீக்கள் இல்லாமல் போனால்...
ஆக...இதிலிருந்து தெரிய வருவது, தேனீக்களின் எண்ணிக்கை குறைந்து போனால் அயல் மகரந்த சேர்க்கையும் குறைந்து போகும். பிறகு மனிதனுக்கு தேவையான காய்கறிகள்,பழங்கள் எங்கிருந்து கிடைக்கும்?
ஒரு  புறம் மக்கள் தொகை கடுமையாக பெருகி வரும் நிலையில் உணவு உற்பத்தி குறைந்து போனால்....என்ன ஆகும்?
மனித இனமும் அழிய தொடங்கும்.சத்துஇல்லாத உணவுகளால் உடல் நலம் பாதிக்கும்.எளிதாக தொற்று நோய்கள் மனிதனை தாக்கும்.
பிறகு மானிட குலத்தின் கதி?

இந்த கேள்விக்கு பல வெளிநாட்டு விஞ்ஞானிகளும் கண்டுபிடித்த ஒரே விடை ...எக்காரணம் கொண்டும் தேனீக்களை அழிந்து போக விடக்கூடாது என்பது தான். ஆக இப்போது வெளிநாடுகளில் பல தனிநபர்கள் கூட தேனீக்களை வீடுகளில் வளர்ப்பதை ஒரு சமூக சேவையாக நினைக்க தொடங்கியிருக்கிறார்கள். சிறிய தேன் கூடுகளை வைத்து தேனீக்களை உற்பத்தி செய்கிறார்கள்.

புலிபாணிசித்தர்
இது தவிர தேனீக்கள் உற்பத்தி செய்யும் தேனில் அபரிமிதமான மருத்துவ குணங்கள் நிறைந்து கிடக்கின்றன.தேனை மற்ற பொருட்களுடன் கலந்து சாப்பிட்டால் எந்த பொருளுடன் சேர்த்து சாப்பிடுகிறோமோ அதனை பொருத்து சில நோய்கள் தீரும். ஆனால் சுத்தமான தேனை மட்டும தனியாக சாப்பிடும் போது குறிப்பிட்ட நோய்கள் தீரும்.
"வாதமொடு பித்தம் மாற்றும்
மாந்தமெனும் நோயை விரட்டும்
ஆறுதலென அரும்பசி ருசியூட்டும்
ஆதலினால் இது கொம்புத்தேனே"
என்கிறார் புலிப்பாணி சித்தர்.

அதாவது இதற்கு பொருள், வாதம் என்ற நோயால் முகம் மட்டும் சிலருக்கு குளிர்காலத்தில் ஒரு பக்கமாக இழுத்துக் கொள்ளும் வியாதி வரும். இதை கொம்பு தேன் தீர்க்கும். சிலருக்கு காசு உழைக்காமலே கொட்டோ கொட்டென்று கொட்டும். இவர்கள் வாய்க்கு ருசியாக சாப்பிட்டு விட்டு அப்படியே படுக்கையில் கிடப்பார்கள். இதற்கு மாந்தம் என்று பெயர். இந்த மாந்தத்தை விரட்டும். பல மனக்கோளாறு,உடல் கோளாறுகளால் பலருக்கு பசி என்பதே இருக்காது. இவர்களுக்கு பசியை வரவழைக்கும். நாக்கின் ருசியையும் அதிகப்படுத்தும்.

இது தவிர சித்த மருத்துவம் சொல்வது...
தேனை தனியாக சாப்பிட்டால் பலன்
 • தேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்சல், இருதயத்தில் ஏற்படும் வலி,பலவீனம் ஆகியவற்றை போக்கும்.
 • குடலில் ஏற்படும் புண்களை(அல்சர்) ஆற்றும். கல்லீரலில் ஏற்படும் நோய்களை போக்கும்.
 • தேனைக்குறைந்த அளவு அருந்தினால் மலச்சிக்கலை போக்கும். அதிக அளவு அருந்தினால் மலச்சிக்கலை உண்டு பண்ணும்.
 • பேதியை நிறுத்தும்.ரத்தசோகையை போக்கும்(இந்திய பெண்கள் 50 சதவீதத்திற்கும் மேலானவர்கள் இந்த ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்),நரம்புகளுக்கு வலிமையை தரும். நீர்க்கோவையை சரி செய்யும். சிறுநீர்க்கழிவை குறைக்கும்.
 • தோல் சம்பந்தமான நோய்கயை போக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும். கிருமி,நாசினியாக வேலை செய்யும்.பற்கள்,கண்கள் ஆகியவற்றுக்கு பலம் தரும். தொண்டையில் ஏற்படும் தொற்றுநோய்,வலியை குறைக்கும்.
 • உடல்குண்டானவர்களை மெலிய செய்யும்.உடலுக்கு ஊட்டச்சத்து தரும்.சுவாச காச நோய்களை குணமாக்கும். விக்கல் நோயை போக்கும்.
 • உடலில் விஷம் இருந்தால் முறிக்கும். சூலரோகங்களை போக்கும்.உடலையும் உள்ளத்தையும் சுறுசுறுப்பாக இயங்க செய்யும். நீண்ட ஆயுளை தரும். பெண்களின் கருப்பையில் இருக்கும் நோய்களை குணப்படுத்தும். குழந்தைகளை ஊட்டத்துடன் வளர்க்க பயன்படும்.

சரி..தேனை குளிர்ந்த நீருடன் கலந்து பருகினால் அதன் நோய்தீர்க்கும் குணம் மாறும்.அதை பார்க்கலாம்.
 • தேனுடன் குளிர்ந்த நீரை கலந்து அருந்தினால்(மண்பாணை தண்ணீர் சிறப்பு) அருந்தினால் உடலின் ஊளைச்சதை குறையும்.களைப்பு உடனே நீங்கும்.
 • தேனுடன் காய்ச்சிய பசும்பாலை கலந்து அருந்தினால் உடல் வலிமை அடையும்.தாதுவிருத்தி ஏற்படும்.
 • ஆட்டின் பாலை வடிகட்டி தேனுடன் அருந்தினால் உடலுக்கு தேவையான ரத்தத்தை ஊறச்செய்யும்.
 • ரோஜா இதழ்கள் கல்கண்டு,தேன் ஆகியவற்றை கலந்து தயாரிக்கும் குல்கந்தை சாப்பிட்டால் உடலின் சூடுதணிந்து உடல் குளிர்ச்சியடையும்.
 • 100 மிலி பசுவின் பாலையும், 100 மிலி தண்ணீரையும் கலந்து இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் உடலில் மறைந்திருக்கும் நோய்க்காரணங்கள் மறைந்து போகும்.
 • காய்ந்த திராட்சை பழங்களை தேனில் ஊறவைக்க வேண்டும். ஊறியவுடன் காலை மாலை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டால் உடல் அழகு பெறும்.
 • ஒரு கோழி முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் ஒரு தேக்கரண்டி தேன்கலந்து அருந்தி விட்டு உடற்பயிற்சி செய்து வந்தால் உடல் களைப்பு அடையாது. வலிமை அதிகரிக்கும்.
 • அருகம்புல்லை தட்டி கசாயம் எடுத்து தேனைக்கலந்து அருந்தினால் பல நோய்களை குணமாக்கும். களைப்பு என்பதே இருக்காது.
 • கணைச்சூட்டினால் குழந்தைகள் மெலிந்து காணப்படுவார்கள். குழந்தையின் பெற்றோருக்கு பல டாக்டர்களிடம் காட்டியும் ' என்ன சாப்பிட்டாலும் குழந்தை தேறமாட்டேன்கிறதே..' என்பார்கள். இந்த குழந்தைகளுக்கு தினசரி ஆட்டுப்பாலில் இரண்டு சொட்டு தேனை கலந்து கொடுத்தால் கணைச்சூடு நீங்கி குழந்தை அழகு போட்டியில் இடம் பெறும் அளவு குண்டாகிவிடும்.
 • இளநீரில் தேன் கலந்து அருந்தினால் உடல் சூடு சட்டென்று தணிந்து போகும்.
 • அத்திப்பழங்களை 48 நாட்களுக்கு தேனில் ஊறவைத்து(இது சர்வோதாய சங்கங்களில் கிடைக்கும்) தினசரி ஒன்றிரண்டு சாப்பிட்டால் உடல் வலிவு பெறும்.
 • மஞ்சள் காமாலை உள்பட காமாலைநோய் கண்டவர்கள் தினமும் தேன் சாப்பிட்டால் காமலை குறைவதுடன் பின்விளைவுகளும் இருக்காது.
 • இஞ்சியை இடித்து சாறு எடுத்து சிறிது நேரம் வைத்திருந்து அது நன்றாக தெளியும். இந்த தெளிந்த சாறில் தேன் கலந்து அருந்தி வந்தால் வயிற்று செரிமானம் சரியாகும். உண்ட உணவு உடனே செரித்து விடும். எங்காவது ருசியாக இருக்கிறதே என்று கண்டதையும் சாப்பிடுபவர்கள் உடனே இதை செய்தால் சீரணம் உடனே உறுதி.

பெண்களின் முக அழகுக்கு தேன்
வெள்ளைக் கோதுமை மாவு ஒரு கரண்டி அதனுடன் தேன் கலந்து சில துளிகள் பன்னீரையும் விட்டு நன்றாக பிசைந்து, பின்பு இன்னும் பன்னீர் விட்டு கொஞ்சம் பிசைந்து முகத்தில் சிறிது நேரம் பூசி வைத்திருக்கவும். அரை மணி நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி முகத்தை பருத்தி துணியால் ஒற்றி எடுக்க வேண்டும். வாரத்திற்கு மூன்று முறை எளிதான இந்த முறையை செய்து வர உங்களின் முகம் "கார்னியர் நேச்சுரல்,பேர் அன்ட் லவ்லி,வீகோடர்மரிக்' எல்லாவற்றையும் தோற்கடிப்பது உறுதி. பிறகு உங்கள் முகம் 'விண்ணாடிக்கீழ்க்கடலில் விரிந்து வரும் பரிதியிலே கண்ணாடி ஏரியென கதிர்சாய்க்கும் வட்டமுகம்' ஆக மாறி விடும்.பிறகென்ன....எல்லாம் நலமே!

பழனிக்கு போகும் உங்கள் நண்பரை மறக்காமல் பஞ்சாமிர்தம் வாங்கி வரச்சொல்லுங்கள். காரணம், முழுக்க முழுக்க தேனுடன் வாழைப்பழமும், பேரீச்சை,நாட்டுச்சர்க்கரை,கல்கண்டு,ஏலக்காய்.சுக்கு( சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை.சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளுமில்லை) கலந்து இருப்பதால் அது நிச்சயம் ஒன்று அல்ல ஐந்து அமிர்தங்களின் தேன் கலந்து கலவை.
குழந்தைகளுக்கு தினமும் சாப்பாட்டில் முட்டை போட முடிவெடுத்துள்ளது அரசு. இது தவறானது என்பது என்னுடைய கருத்து. காரணம், முட்டையிலுள்ள சால்மொனல்லா உள்பட சில பாக்டீரியாக்கள் எல்லோருக்கும் நன்மை செய்வதில்லை. இதற்கு பதிலாக தேனை தரலாம். 35 மிலி தேனில் இரண்டு முட்டைகளின் சத்தும்,ஒரு கிலோ அளவுக்கு மஞ்சள் முள்ளஙகியின் சத்தும் இருப்பதாக ஆய்வுகளில் நிருபிக்கப்பட்டுள்ளது.

தேன்கூடு, தேனீக்கள் வளர்க்க விரும்புபவர்கள் மெயில் அனுப்புஙகள், ஆலோசனைகள் அனுப்புகிறேன். தேன்பெட்டி, தேனீக்கள் கிடைக்கும் இடங்கள் மதுரையில் தற்போது ஒரு சில இடங்களில் பெண்களால் தொடங்கப்பட்டுள்ளன. நீங்களும் உங்கள் ஊரில் தொடங்கி இயற்கையை வாழ வழி செய்யலாமே!!

வீட்டில்  வளர்க்கும் கொசு தேனீக்கள் என்ற வகை தேனீக்கள் யாரையும் கடிப்பது இல்லை எனபது குறிப்பிடதக்கது.மதுரையில் தேனீ விஷ சிகிச்சையை ஒரு சமூக சேவை அமைப்பு அளித்து வருகிறது.அது அடுத்த பதிவில்....

தென்னையிலும் இப்படி ஒரு சிறப்பு வாய்ந்த குணம் இருக்கிற மரம் கேள்விப்பட்டதுண்டா?

4 கருத்துகள்

தலவிருட்சங்கள் பற்றிய பதிவாக ஒரு மரத்தை பற்றி எழுத தோன்றிய போது எனது நண்பர் ஒரு தகவலை சொன்னார். அதன்படி ஈத்தாமொழி நெட்டை என்ற தென்னை மரத்தை பற்றி இங்கு குறிப்பிட்டு விட்டு தென்னை என்ற தலவிருட்சத்தின் பொதுவான விடயங்களை தொடர்ந்து தொகுத்து தந்துள்ளேன்.

ஈத்தாமொழி நெட்டை என்ற ரகத் தென்னை
இந்தியா பூகோள குறியீட்டு அலுவலகத்தில் முறைப்படி பதிவு செய்யப்பட்ட பொருட்களுக்கு இந்திய அளவிலும், உலக அளவிலும் அங்கீகாரமும் பாதுகாப்பும் கிடைக்கிறது. இப்படி பதிவு செய்யப்படும் பொருட்களுக்கு தனிச்சிறப்பு மிகுந்த குணங்கள் இருந்தால் தான் இந்த அடையாள குறியீடு கிடைக்கும்.

இதன்படி இந்திய நாட்டில் கிடைக்கும் பாசுமதி அரிசி,விருப்பாச்சி பச்சை வாழைப்பழம்,மலபார் குருமிளகு,வங்காள ரசகுல்லா,கோவா பென்னி(சாராயம்),கேரளாவின் பொக்காலி அரிசி,காஞ்சிபுரம் பட்டு,மதுரை சுங்குடி சேலை,பத்தமடை பாய்,ஆழப்புழை கயிறு உள்பட 143 பொருட்களுக்கு இந்த பூகோள குறியீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை தொடர்ந்து ஈத்தாமொழி நெட்டை என்ற ரகத் தென்னை மரத்துக்கு பூகோள குறிஈடு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய தீபகற்பத்தின் தென்கோடிப்பகுதியில் இருக்கும் குமரிக்குறுநிலம் என்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் கோட்டாறு என்ற இடத்தில் இருக்கும் வணிக மையத்திற்கு வந்து கோட்டாறு தேங்காயை கிரேக்க வியாபாரிகள் வாங்கி சென்றதாக வரலாறு உண்டு. பண்ட மாற்று முறைப்படி இந்த வியாபாரம் நடந்திருக்கிறது. உலகத்தில் வேறு எங்கும் தேங்காய் கிடைக்காமலா கிரேக்கர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தார்கள். உலகத்தில் குறிப்பிட்ட சில நாடுகளிலும்,இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தென்னை மரம் வளர்ந்தாலும் இந்தியநாட்டின் தென்கோடி முனையான குமரி மாவட்டத்தில் ஈத்தாமொழி நெட்டை என்ற ரகத் தென்னையில் காய்க்கும் கோட்டாறு தேங்காய்களின் குணம் சிறப்பானது.

புவிசார் அடையாள குறியீடு
இந்த சிறப்பான குணத்திற்காக தான் கடந்த 2007 ம் ஆண்டு இந்த தென்னை ரகத்திற்கு புவிசார் அடையாள குறியீடு பெறப்பட்டுள்ளது. காரணம் இந்த தென்னையின் தனித்துவம். அப்படி என்ன சிறப்பு இந்த மரத்தில் என்று காணலாம். இதை படித்து விட்டு உங்கள் வீட்டில் தென்னை மரம் ஒன்று வைப்பதாக இருந்தால் ஈத்தா மொழி நெட்டை ரகத்தை தேர்வு செய்யுங்கள்.

இதன் காயின் பருப்பு 1,25 செமீ முதல்1.50 செமீ கனத்துடனும் அதிலிருந்து கிடைக்கும் கொப்பரை175 கிராம் எடை வரையும் இருக்கிறது. நூறு முதிர்ந்த காய்களிலிருந்து 16 முதல் 18 கிலோ எடை உள்ள கொப்பரை கிடைக்கிறது. இது இந்தியாவில் உள்ள எந்த வகை தென்னையிலும் இல்லாத ஒரு அளவாகும்.
ஈத்தா மொழி தென்னையிலிருந்து கிடைக்கும் நார் அதிக நீளம் மற்றும் பலத்துடன் காணப்படுவதால் உலகச்சந்தையில் இதற்கு தனி சிறப்பு கிடைக்கிறது.கதம்பை எனப்படும் இந்த உரிமட்டையை நேரடியாக இயந்திரத்தில் நசுக்கி வெண்மை நிற நார்பொருளாக பிரித்தெடுத்து கயிறு,வடம்,மெத்தை என்று பல்வேறு பொருட்களாக தயாரிக்கிறார்கள். தேங்காய் சார் பொருட்களான உலர்தேங்காய் பூ,கொப்பரை,தேங்காய் சிப்ஸ் தயாரிப்பாளர்கள் ஈத்தாமொழி தேங்காயில் மட்டுமே அவற்றை தயார் செய்ய முன்வருகின்றனர்.காரணம், வடமாநிலங்களிலும,வெளிநாடுகளிலும் இந்த ஈத்தாமொழி தேங்காயின் சார்பு பொருட்களை கேட்டு வாங்கி கொள்வதால் இதற்கு தனி மதிப்பு இருக்கிறது.

இது தவிர நாம் அன்றாடம் தலைக்கு தேய்க்கும் தேங்காய் எண்ணெய் பல வகை தேங்காய் கொப்பரைகளிலிருந்து எடுக்கப்பட்டாலும் ஈத்தாமொழி தென்னையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்க்கு தனி இடமுண்டு. தற்போது இந்த தேங்காயிலிருந்து வர்ஜின் தேங்காய் எண்ணெய் தனியாக பிரித்தெடுக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.நன்றாக முதிர்ந்த தேங்காயை உடைத்து துருவலில் வைத்து துருவி எடுத்த தேங்காய் பூவை கையால் நசுக்கி பால் எடுத்து மண்சட்டியில் கொதிக்க வைத்து உருக்கெண்ணெய் ஆக மாற்றுகிறார்கள்.பின்னர் இந்த எண்ணெயை ஒரே சீரான வெப்பநிலையில் காய்ச்சி தனி எண்ணெயாக மாற்றுகிறார்கள். இது தான் விர்ஜின் தேங்காய் எண்ணெய்.
குமரி மாவட்ட பெண்களுக்கு இயற்கையிலேயே நீண்ட கருகரு கூந்தல் உண்டு. இதற்கு இந்த ஈத்தாமொழி நெட்டை தேங்காய் எண்ணெயின் குணம் கூட காரணமாக இருக்கலாம். பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா இல்லையா  என்பதை பாண்டிய மன்னன், இந்த ஈத்தாமொழி தேங்காய் எண்ணெய் பயன்படுத்திய மக்களை பார்த்திருந்தால் சந்தேகம் கொண்டிருக்க வாய்ப்பே இல்லையாம்.
இது தவிர ஈத்தமொழி நெட்டை தென்னைக்கு பல மருத்துவ குணங்கள் இருக்கிறது. அது பற்றி புகைப்படத்துடன் தனிபதிவில் இடுகிறேன்..

தென்னை என்னும் தலவிருட்சம்

திருத்தெங்கூர்,வடகுரங்காடு துறை முதலிய திருக்கோவில்களில் தலமரம் தென்னை. நமது முன்னோர்களது காலங்களில் நெடிதுயர்ந்து வளர்ந்த நெட்டை தென்னை மரங்கள் தான் பரவலாக இருந்தன. தற்போது விஞ்ஞான வளர்ச்சியால் கையால் எட்டி பறிக்கும் தூரத்தில் மட்டுமே வளரும் குட்டை தென்னை மரங்கள் வந்து விட்டன. எப்படியிருந்தாலும் தென்னைக்கு மருத்துவ குணங்கள் உண்டு.

தென்னையின் மருத்துவ குணங்கள்                                                                                         
 •  தென்னையின் பூ சிறுநீரை பெருக்கும்.உடலின் வெப்பத்தை அகற்றும். உடலை வலிமையுடையதாக்கும். இளநீர் தாகத்தை தணிக்கும். குளிர்ச்சியுண்டாக்கும்.
 • இளம் தென்னங்குருத்தை தின்று வந்தால் சளி நீங்கும். இரத்த மூலம் தீரும்.
 • தென்னம் பூவை இடித்து சாறு பிழிந்து 150 மிலியுடன் அதே அளவு எலுமிச்சை சாறு பிழிந்து கொடுத்து வந்தால் ரத்தபேதி,சீதபேதி,வயிற்றுக்கடுப்பு, நீர்ச்சுருக்கு தீரும்.
 • தென்னம்பூ ஒரு பிடியை வாயிலிட்டு மென்று தின்றுவர மேகநோய்,வெள்ளைபடுதல்,உட்காய்ச்சல்,ரத்தவாந்தி,உடல் கொப்புளம் ஆகியவை தீரும்.
 • வெடிக்காத தென்னம் பாளையில் உள்ள பிஞ்சுகளை பசும்பால் விட்டு அரைத்து எலுமிச்சங்காய் அளவு எடுத்து காய்ச்சிய பாலில் கலக்கி காலை மாலை 40 நாட்கள் கொடுக்க நரம்புத்தளர்ச்சி, விரைவாதம்,தாதுநீர்த்து போயிருப்பது போன்றவை நீங்கி உடல் பலமாகும்.
 • இளந் தென்னங்காய் மட்டையை இடித்து பிழிந்த நீரை (சுமார் 100 மிலி) நாள்தோறும் காலையில் குடித்து வர மிகையாக சிறுநீர் கழிவது, மதுமேகம்(சர்க்கரை),வயிற்றுக்கடுப்பு,மூலம் குணமாகும்.
 • முற்றிய தேங்காயை துருவி விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் இரவில் கட்டில் வர விதை வீக்கம் கரையும். மார்பகத்தில் கட்டி வந்தால் பால் சுரப்பு நின்று விடும்.
 • தேங்காய்ப் பாலை தினமும் கொப்பளித்து குடித்து வர நாக்கு,உதடு,வாய்,தொண்டை,வயிறு ஆகியவற்றில் உள்ள புண்கள் ஆறும். காரம், புளி, உப்பு நீக்கி இருக்கவும்.

ஆக...இனி தேங்காப்பால் ஆட்டி எடுத்து தனியாக சாப்பிடாவிட்டாலும் கூட, இட்லி, தோசையை தவிர்த்து மாவாட்டி ஆப்பம் போட்டால் மறக்காமல் தேங்காய்ப்பால் வைத்து சாப்பிடுங்கள். உடலுக்கு நல்லது.
அழகான கூந்தல் வேண்டுமா...வீட்டில் ஒரு ஈத்தாமொழி தென்னையை வளர்த்து தேங்காய் எண்ணெய் எடுத்து பயன்படுத்துங்கள். எல்லாம் இயற்கை தந்த வரம்.

மாரியாத்தா....எங்கள காப்பாத்தம்மா!!!

1 கருத்துகள்


விவிலியத்தில் ஒரு செய்தி வரும். 'மக்கள் விலங்குகளை வணங்கினர். தன்னை படைத்த தேவனை விட்டு விட்டு விலங்குகளை வணங்கும் மக்கள் மீது இறைவன் கோபம் கொண்டார்' என்ற செய்தி அது.(இந்த தகவலுக்காக கிறித்தவ சகோதரர்கள் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்) ஆனால் தமிழர்கள் பசுக்களை கோமாதா என்ற பெயரில் வணஙகியிருக்கிறார்கள். மரங்களை தலவிருட்சங்களாக நட்டு வணங்கியிருக்கிறார்கள்.

நூற்றாண்டுகளுக்கு முன்பாக,மரங்களின் அருமையையும் ' போட்டோ சிந்தசிஸ்' என்ற ஒளிச்சேர்க்கை பற்றியும், அது  நமக்கு தரும் ஆக்சிஜன் என்ற பிராணவாயுவை வெளியிடுவதையும் பற்றி சொன்னால் மக்கள் புரிந்து கொள்வது  சிரமம் என்பதால் ஒரே வரியில் மரங்களை ' தலவிருட்சங்கள்' ஆக மாற்றிவிட்டார்கள். அவற்றை அன்றைக்கு கோவில் சொத்துக்களாக இருந்த இடங்களில் 'நந்தவனம்' அமைத்து பராமரித்தார்கள்.இப்படி மரங்களின் விஞ்ஞானம் மக்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.
  
பண ஆசை
இன்றைக்கு பணம் என்ற அரக்க ஆசையால் காடுகள் குறைந்து விட்டன. அதாவது கண்ணை விற்று ஓவியம் வாங்க முயற்சிக்கிறார்கள் சிலர். இதன் கொடுமையை எல்லோரும் தான் அனுபவிக்க வேண்டும். சரி. சொல்ல வந்த விஷயம் இங்கே....தலவிருட்சம் என்ற பெயரில் கோவில்களில் பயன்தரும் மூலிகை மரங்களை நட்டு பராமரித்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள். கிட்டத்தட்ட இந்த தலவிருட்சங்களின் பட்டியலில் 80 வகையான மரங்கள் இருக்கின்றன.அவற்றை பற்றி இனி வரும் பதிவுகளில் காணலாம். முதலில் நாம் பார்க்க போவது மக்களின் அம்மை நோயை விரட்ட உதவிய வேம்பு மரம்.இன்றைக்கும் அம்மை நோய் பாதிக்கப்பட்டவர்களை வேம்பு தழைகளில் படுக்கை அமைத்து படுக்க வைப்பது நமக்கு தெரிந்த விஷயம் தானே!
ஆனால அது மட்டுமல்ல. இன்னும் சிறிது நாளில் பெட்ரோல் இருக்காது. அப்போது  போர்டுகளும், வோல்ஸ்வேகன்களும்  வேப்பங்கொட்டை பயோபியூயலில் தான் ஓடக்கூடும். அப்போது வீட்டுக்கு ஒரு வேப்பமரம் என்ற நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. காரணம், தற்போது தமிழகத்தில் mission bio fuels என்ற பன்னாட்டு நிறுவனம் உள்பட சில நிறுவனங்கள் தமிழகத்தின் கிராமங்கள் தோறும் ஆட்களை நியமித்து வேப்பங்கொட்டைகளை சேகரித்து பயோ பியூயல் தயாரிக்க தொடங்கியிருக்கிறார்கள். அற்புதமான வேம்பு மரத்தையும் அதை தமிழகத்தின எந்த கோயில்கள் தலவிருட்சங்களாக கொண்டுள்ளன. வேம்பின் மருத்துவ குணத்தையும் இந்த 'தலவிருட்சங்கள்' என்ற தொகுப்பின் கீழ்வரும் முதல் பதிவில் காணலாம்.

வேம்பு
வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பார்கள். நிழலை தருவது மரங்கள். எல்லா மரநிழலிலும் வெயிலில் அப்படியொரு குளிர்ச்சி கிடைக்காது. வேப்பமரத்தடியின் குளிர்ச்சி தனி சுகம் தான். மற்ற மரங்களை விட வேப்ப மரத்திற்கு அலாதியான மருத்துவ குணங்கள் உண்டு.

" மூப்பூர் நவிய விதியாய் முன்னே அனல்வாளி
கோப்பார் பார்த்தன் நிலைகண் டருளுங் குழகர் குடமூக்கில்
தீர்ப்பா ருடலில் அடுநோய் அவலம் வினைகள் நலியாமைக்
காப்பார் காவன் அடையா வண்ணங் காரோ ணத்தாரே"
-திருஞானசம்பந்தர். தேவாரப்பாடல்.

திருக்குடந்தைக்காரோணம், புள்ளிருக்குவேளூர் என்னும் வைத்தீஸ்வரன் கோவில், திருவாட்போக்கி என்னும் ஐயர் மலை ஆகிய திருக்கோவில்களில் வேம்பு தலமரமாக ஆகியுள்ளது. கசப்பு சுவையுடைய பற்களுள்ள கத்தி போன்ற இலைகள் கொண்ட இது வெண்ணிற கொத்தான மலர்களையும், முட்டை வடிவ சதைக்கனிகளையும்,எண்ணெய்ச்சத்துள்ள விதைகளையும் (கவனிக்க பயோப்யூயல்) கொண்டது.
தமிழ்நாட்டின் மண்ணில் எங்கும் வளர்கிறது. அதிகமான மருத்துவ குணம் கொண்டது. குறிப்பாக தொற்று நோய்களுக்கு வெள்ளைக்காரர்கள் ஆய்வகத்தில மருந்து தேடிக்கொண்டிருந்த போது வேப்பிலையை பிடுங்கி நோயை விரட்டி அடித்தவர்கள் நம்மூர் பாட்டிகள். கிராமத்தில் ஒரு பழக்கம் உண்டு. வாரத்தில ஒரு நாள் வேப்பிலை சாற்றை அரைத்து குழந்தைகளுக்கு உள்ளுக்குள் கொடுப்பார்கள்.

காரணம், இந்த சாற்றில் மறைந்திருக்கும் மறைமுக நோய் எதிர்ப்பு சக்தி. ஆனால் இப்போது அந்த பழக்கம் எல்லாம் மறைந்து விட்டது. நமது கண்ணுக்கு தெரிந்து வேப்ப மர இலைகளை அம்மைக்கு பயன்படுத்துவதை பார்த்திருக்கிறோம். ஆனால் அதனினும் அதிகமான மருத்துவ பயன்கள் உள்ளன. திருச்சியை சேர்ந்த பேராசிரியர் திருஞானம் இது பற்றி ஒரு புத்தகமே வெளியிட்டுள்ளார். அதிலிருந்து உங்களுக்கு அறிய தருகிறேன்.

இந்த விபரஙகளை எல்லாம் எம்.டி படித்த சித்தா டாக்டர்களிடம் கேட்டு சரி செய்து வெளியிடுகிறேன். இவை எளிதில் உங்களால் கையாளக்கூடியது தான்.

மருத்துவகுணங்கள்
 • வேம்பின் இலை குடலில் உள்ள நுண்புழுக்களை கொல்லும் ஆற்றல் வாய்ந்தது. மனிதனுக்கு குடலில் கொக்கிப்புழு,நாடாப்புழு என்று பல புழுக்கள் இருக்கும். விலங்கியில் படித்த நண்பர்கள் இதனை லேப்பில் மைக்ரோஸ்கோப்பில் பார்த்திருக்க கூடும். உருப்பெருக்கியில் பார்த்தால் நமது குடலில் இப்படி ஒரு புழுஜென்மம் வாழ்கிறதா என்று நொந்து போவோம். காரணம் அதன் கொடூரமான தோற்றம் நமக்கு வாந்தியை ஏற்படுத்தும். இந்த புழுக்களை கொல்ல எளிய வழி வேப்பிலை சாறு தான். கொழுந்து வேப்பிலைகளை பறித்து அதை அப்படியே சிறிய உரலில் ஆட்டி சாறு எடுத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்து விட வேண்டும். பிறகு விரதம் இருந்து விட வேண்டியது தான். பிறகு உங்களை விட பலசாலி யாரும் இருக்க முடியாது. நீங்கள் சாப்பிடும் உணவை உங்களுக்கு தெரியாமலே உங்கள் குடலில் இருந்து கொண்டு தின்று வந்த இந்த புழுக்கள் மடிந்து குடலில் இருந்து வெளியேறி விடும். பிறகென்ன....நீங்கள் வேப்பம் சாற்றினால் குடலை கழுவி உடலை வளர்க்கலாம். வேப்பங்கொழுந்து குன்றிவேர்ப்பொடி சமஅளவு எடுத்து நீர் விட்டு அரைத்து பட்டாணி அளவில் உருட்டிக் கொண்டு நிழலில் காய வைத்து எடுத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் அடைத்துக் கொள்ள வேண்டும். இந்த மாத்திரைகளை பெரியம்மை நோய் கண்ட நபர்களுக்கு 3 வேளையும் கொடுத்து வர நோய் குணமாகும்.
 • வேப்பங்கொழுந்து 2 கிராம்,ஓமம் 1 கிராம், உப்பு 1 கிராம் இவற்றை மையாய் அரைத்து காலையில் பாதியும், மாலையில் பாதியும் 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் (மாமிசம் சேர்க்க கூடாது இந்த நாட்களில்) உடலுக்கு பலமான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
 • வேப்பங்கொழுந்து, ஓமம்,சுக்கு, மிளகு,பூண்டு,நொச்சிஇலை,கறிவேப்பிலை,சிற்றரத்தை ஆகியவற்றை சமஅளவு எடுத்துக்கொண்டு நெய்விட்டு வதக்கி சிறிது உப்பு சேர்த்து மெழுகு பதமாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதில் மிளகு அளவில் உருட்டி எடுத்து நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் குழந்தைகளுக்கு வரும் மந்தம், செரியாமை,மலச்சிக்கல்,மலப்புழுக்கள்,மார்பபுச்சளி கண்காணாமல் ஓடிப்போகும். நல்ல பசி எடுத்து உங்கள் குழந்தை வலுவாக சாப்பிட தொடங்குவார்கள்.
 • வேப்பிலையை அரைத்து களிபோல் கிளறி இளஞ்சூட்டில் பற்று போட ஆறாத புண்கள் ஆறும்.
 • உலர்ந்த பழைய வேப்பம் பூ 5 கிராம்,கொதிநீர் 50 மிலி எடுத்து அதில் இந்த வேப்பம் பூவை போட்டு இரண்டு மணி நேரம் ஊறவைத்து வடிகட்டிய தண்ணீரை காலை மாலை குடித்து வந்தால் பசியில்லாமல் இருக்கும் நிலை மாறி பசி எடுக்கும். உடல் சோர்வு நீங்கும். புத்துணர்ச்சி பெறுவீர்கள். லைவ் 52 போல் செயல்பட்டு கல்லீரலை வலுவாக்கும்.
 • வேப்பம் பருப்பை வெண்ணெய் போல அரைத்து புழுவுள்ள புண்களில் தடவி வந்தால் புழுக்கள் வெளிப்பட்டு புண் ஆறிவிடும்.
 • வேப்பெண்ணையை பூசி வர வாதம், கிரந்தி, கரப்பான்,காய்ச்சல் ,சன்னி என்ற சுரம் நீங்கிவிடும்.
 • வேப்பம் பழச்சாற்றில் சமஅளவு கற்கண்டு கலந்து சாப்பிட்டு வர தோல்நோய்கள் தீரும். உடல் பளபளப்பாக மாறும்.
 • வேப்பம் பிசினை பொடித்து மாவாக வைத்து காலை மாலை சிறிதளவு சாப்பிட்டு வர தோல் நோய்கள் தீரும்.
 • புறணி நீக்கிய வேப்பம் பட்டை 50 கிராம் எடுத்து பொடிபோல் ஆக்கி அதனை தண்ணீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி காய்ச்சலுக்கு கொடுத்து வர குணமாகும்.
 • 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான வேப்பம் பட்டையை உலர்த்தி பொடித்து சமஅளவு முதிர்ந்த பூவரசம்ட பட்டைப் பொடி கலந்து ஒரு தேக்கரண்டி காலை, மாலை சாப்பிட்டு வந்தால் ெத்ாழுநோயின் அடையாளங்கள் மறைந்து விடும்.
 • வேப்பெண்ணெயில் வேலிப்பருத்தி இலையை வதக்கி சூட்டுடன் ஒத்தடங் கொடுக்க நரம்பு இசிவு, கரப்பான்,கிரந்தி,சிரங்கு, காய்ச்சல் வாதம் தீரும்.
 • வேப்பம் விதை 3 கிராம் சிறிது வெல்லம் சேர்த்து அரைத்து காலை மாலை நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் அன்றாடம் பாடாய்படுத்தும் மூலநோய் தீரும்.
 • வேப்பெண்யெில் தலைமுழுவி வந்தால் ஜன்னி, பிடரிகழுத்துவலி, வாத நோய்கள் தீரும்.
 • முதிர்ந்த வேம்பின் இலை,பூ,பட்டை, பிசின் ஆகியவற்றை சமஅளவு எடுத்து கால் தேக்கரண்டி தேன்,வெண்ணெய்,நெய் அல்லது பால் இதில் ஏதாவது ஒன்றுடன் கலந்து காலை, மாலை சாப்பிட எந்த மருந்திலும் கட்டுப்படாத சர்க்கரை நோய் குறைந்து போகும். தலை முடி கருமையடையும். டிபி என்ற எலும்புருக்கி நோய் தீரும். உடம்பு வலுவடையும்.

எனவே இந்த பதிவை படிக்கும் நண்பர்களே! உங்கள் வீட்டில் வேப்ப மரம் இருந்தால் அதை உங்கள் மருத்துவராக நினைத்து இனி தினமும் ஒரு 'ஹலோ' சொல்லுங்கள். இந்த பதிவை படிக்கும் தமிழ்நண்பர்கள் பலரது வீட்டிலும் வேம்பு இருக்கும். அதை அவர்களும் பயன்படுத்தி சிறக்க அனைவரிடமும் இந்த தகவலை கொண்டு செல்லுங்கள்.
மரங்கள் இல்லாமல் மனித வாழ்க்கை இல்லை. ஒரு மரம் நிழல் தந்து நின்ற இடத்திலிருந்து அதை அகற்றி விடும் போது தான் அந்த இடத்தின் வெறுமையை உணர முடியும்.
உங்கள் நிறுவனம் அல்லது பள்ளி வளாகம் மரங்களை நட முடியும் என்றால் அதிகமான வேம்பு மரங்களை நடுங்கள்.அதன் குச்சி பல் துலக்க உதவும்.விதை பருப்பு பெட்ரோல் தயாரிக்க உதவலாம்.ஏ.சீ இல்லாமல் உங்கள் நிறுவனம் குளிர்ச்சியாக இருக்கும்.

வேப்பகொட்டையில் பயோப்யுயல் தயாரிக்கும் ஒரு நிறுவனம்............
  http://www.missionnewenergy.com/OurBusiness.php


                              
சென்னைவாசிகளின் மூச்சில் கலந்திருக்கும் கிண்டி தேசியப்பூங்காவின் காற்று!!!

6 கருத்துகள்
மனிதன் சுவாசிக்க நேரிடும் சுத்தக்காற்று எங்கிருந்து கிடைக்கிறது என்பது பரவலாக தெரிந்த விஷயம். சுற்றுப்புறத்திலுள்ள அசுத்தக்காற்றை மரங்கள் கிரகித்துக் கொண்டு சுத்தமான பிராணவாயுவை அவை வெளியிடுகின்றன. இது தான் இயற்கையில் நடக்கிறது.
ஆனால் இப்படி நமக்கு மூச்சு தரும் மரங்களை உருவாக்குவதில் என்னவோ அவ்வளவு சிரத்தை காட்டுவதில்லை என்பது வருத்தப்பட வேண்டிய செய்தி.மரம் நடுவதற்கு கூட இடம் இல்லாமல் எங்கும் கட்டிடங்களாக நிறைந்து கிடக்கும் சென்னைவாசிகளுக்கு கிண்டி தேசிய பூங்கா ஒரு வரப்பிரசாதம்.

இந்த பூங்காவினுள் நிறைந்து கிடக்கும் எண்ணற்ற மரங்களும் தாவரங்களும் வெளிவிடும் பிராணவாயு சென்னைவாசிகளுக்கு தாராளமாக கிடைக்கிறது. கிண்டி தேசிய பூங்காவின் பின்புலம் பற்றி தெரிந்து கொள்ளும் போது இது போன்ற பூங்காக்களை இனி வளரும் நகரங்களில் செயற்கையாக கூட அமைக்கலாம் என்ற எண்ணம் தோன்றும். இப்படி அமைக்கப்படும் பூங்காக்கள் அதை உருவாக்குபவர்களின் வரலாற்றை பேசும். குறிப்பாக இன்றைக்கு தமிழ்நாட்டின் பல ஊர்களிலிருந்து சென்ற ஐடி படித்த இளைஞர்கள் பலருக்கு சென்னை தான் இருப்பிடமாகவும், வாழ்விடமாகவும் உள்ளது. அவர்கள் ஒன்றிணைந்து கூட இது போன்ற முயற்சிகளை எடுக்கலாம்.

கிண்டி தேசிய பூங்கா பற்றி ஒரு பார்வை.....

தென்மாவட்டங்களிலிருந்து சென்னை நோக்கி பயணப்படும் மக்களுக்கு கண்ணுக்கு விருந்தாக காட்சியளித்து வரவேற்பது கிண்டி தேசிய பூங்கா. சுற்றிலும் மலைகள், சரிவில் தென்படும் கட்டிடங்கள். பசேலன்ற வயல்கள் என்று அது அதிகாலையில் கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். அன்றாடம் பல செய்திகளில் தென்பட்டு பரபரப்பாக இருக்கும் சென்னை நகருக்குள் தான் நாம் நுழைகிறோமா என்று புதிதாக சென்னை நோக்கி பயணப்படுபவர்களை சற்று சிந்திக்க கூட வைக்கும் இந்த காட்சிகள். இருந்தாலும் கொஞ்ச தூரத்தில் காட்சி மாறிவிடுவது வேறு விஷயம். சென்னையின் படுவேகமான மறுபக்கம் சில கிலோமீட்டர்கள் தூரத்தில் வந்து விடும்.மூச்சு விட முடியாத அளவுக்கு இப்படி இருக்கும் சென்னைக்கு மூச்சு வழங்கி உதவுவதில் கிண்டி தேசிய பூங்காவின் தியாகம் ஒரு அற்புதமான நிகழ்வு என்று சொல்லலாம்.

அமைவிடம்
சென்னையின் தென்மேற்கு மூலையில் 80"-14" மற்றும் 80"-14" -54" கிழக்கு அட்சரேகைக்கு இடையேயும், 12"-59" மற்றும் 13"-04"04வடக்கு தீர்க்க ரேகைக்கும் இடையே அமைந்துள்ளது கிண்டி தேசிய பூங்கா. இதன் மொத்த பரப்பு 670,57 எக்டர். ஒரு காலத்தில் இந்த பூங்கா அதிக மரங்களுடனும்,பசுந்தாவரங்களுடனும் ஒரு காடு போன்ற இயற்கை அமைப்பில் இருந்தது. இதனால் இந்த இடம் வேட்டைக்காரர்களுக்கான களமாக பயன்பட்டிருக்கிறது. 'கிண்டி தங்குமிடம்' என்று அழைக்கப்பட்ட இந்த இடம் கில்பர்ட் ரோட்ரிக்ஸ் என்னும் பிரிட்டிஷ்காரரின் சொத்தாக இருந்திருக்கிறது.
1917 ம் ஆண்டுவாக்கில் தங்கக்காசுகள் தான் வழக்கத்திலிருந்தன. அப்போதைய மதிப்பில் சுமார் 10,000 பகோடவுக்கு இந்த இடம் விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறது.அதாவது இன்றைய மதிப்பில் சுமார் 70 ஆயிரம் ரூபாய் என்று எடுத்துக் கொள்ளலாம்.இதற்கடுத்து இந்த பகுதி சென்னை மாகாண கவர்னரின் வாரவிடுமுறைக்கான தங்குமிடமாக ஓய்வு விடுதியாக பண்ணை வீடாக பயன்பட்டிருக்கிறது. 1910 ம் ஆண்டுவாக்கில் இந்த பகுதியின் செழுமையை கருத்தில் கொண்டு இந்த பகுதியை 'இயற்கை அரண் பாதுகாப்பு காடுகள் பகுதி'யாக அறிவித்திருக்கிறார்கள்.

மாற்றங்கள்
இதனையடுத்து இந்த இடத்தில் (கவர்னரால் தரப்பட்ட400 எக்டரில்) 1954 ல் காந்தி மண்டபமும், 1961 ல் இந்திய தொழில் நுட்ப பயிலகமும்,1970 ல் குருநானக் கல்வி பயிலகமும்,1974 ல் ராஜாஜீ நினைவு இல்லம், 1974 ல் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம்,1975 ல் காமராசர் நினைவு இல்லம் ஆகியவை நிறுவப்பட்டன. 
மீதமிருந்த 270.57 எக்டர் நிலப்பரப்பு தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது.இது சென்னையின் சுற்றுச்சூழலை காக்கும் ஒரு முக்கிய பகுதியாக அன்றிலிருந்து விளங்கி வருகிறது. அதாவது இந்த பரப்பளவில் இருக்கும் மரங்களும், தாவரங்களும் சென்னையின் அழுக்கு பட்ட மூச்சுக்காற்றை உறிஞ்சிக் கொண்டு புத்தம் புதிய பிராணவாயுவை சென்னைவாசிகளுக்கு வழங்கி வருகின்றன.

இந்த இடத்தில் சமச்சீரற்ற வெப்ப மண்டலத் தட்பவெப்ப சூழ்நிலை நிலவுகிறது. இந்த பகுதியில் காணப்படும் தாவரங்களின் அமைப்பு மற்ற இடங்களில காணப்படும் தாவரங்களிலிருந்து வித்தியாசமாக அரிதான கொடி மண்டல கடற்பகுதியில் காணப்படும் தாவர அமைப்பை போல் காணப்படுகின்றன. இங்கு கிட்டத்தட்ட 350 க்கும் மேற்பட்ட மரங்கள், புதர்ச்செடிகள்,குறுசெடிகள்,கொடிகள்,புல்வகைகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. 
இப்படி பரந்து விரிந்து கிடக்கும் பூங்காவின் தெற்கில் சுமார் 30 எக்டர் பரப்பளவில் அப்பளாங்குளம் மற்றும் காத்தான்குளம் ஆகிய குளங்கள் உள்ளன. பூங்காவின் வெளியே ஒரு குளமும் இருக்கிறது. செம்மண்ணும் செம்மண் சரளைகளும் நிறைந்த இந்த இடம் சத்து மிகுந்த வண்டல் நிறைந்த நிலமாக காணப்படுகிறது.

இந்த பூங்காவில் இன்னும் சென்னை மற்ற உயிரினங்களின் வாழ்விடமாக வாழ்வதற்கும் வழி செய்து கொடுத்திருக்கிறது என்பதை காட்டும் விதமாக ஏராளமான புள்ளிமான்களும்,அழகிய கொம்புகளை கொண்ட திராமான்களையும் பார்க்க முடிகிறது. 
மரங்களில் தங்கி தங்கள் சந்ததியை பெருக்க ஏராளமான அழகிய பறவைகள் இங்கு நூற்றுக்கணக்கில் காணப்படுகின்றன. இதுவரை இங்கு 130 வகையான பறவைகள் தென்பட்டடதாக பூங்காவின் ஆய்வு ஏடு சொல்கிறது. பறவைகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கும், புகைப்படங்களில் பறவைகளை கொத்திக் கொண்டு போக நினைப்பவர்களுக்கும் இது ஒரு சொர்க்கபூமி. இந்த பறவைகளை கண்டுகளிக்க பல ஊர்களிலிருந்து சத்தமில்லாமல் பறவை பார்ப்பவர்கள் (BIRD WATCHERS)இங்கு வந்து போகிறார்கள்.

அதாவது இங்கு சொல்ல வந்த விஷயம்,  
 • ஒரு மரம் தனது வாழ்நாளில் வெளியிடும் பிராணவாயுவின் மதிப்பு சுமார் 3 லட்சம் ரூபாய்.
  இதே மரம் காற்று மாசுபடுவதை தடுப்பதில் பங்கு வகிக்கிறது. அதாவது சுற்றுப்புறத்தில் உள்ள அசுத்தக்காற்றை உள்வாங்கி புதிய பிராணவாயுவை வெளியிடுகிறது, இந்த செயலுக்காக அதன் மதிப்பு 5 லட்சம் ரூபாய்.
 • மண் அரிப்பை தடுத்து அந்த பகுதியின் நிலத்தை உறுதியாக வைத்திருக்க மரங்கள் உதவுகின்றன. அதன்படி இதன் மதிப்பு 3 லட்சம் ரூபாய்.
 • பூமியிலிருந்து நீரை சுழற்சி செய்வது, காற்றில் ஈரப்பதத்தை தக்க வைக்கிற வேலையை இந்த மரங்கள் செய்கின்றன. இதன்படி இதன் மதிப்பு 3 லட்சம். 
 • பறவைகள்,சிலந்திகள்,சிறிய பூச்சிகள் ஆகியவற்றுக்கு அடைக்கலம் கொடுக்க வகையில் 3 லட்சம
 • தாவரங்களுக்கு உணவளிக்கும் வகையில் 20 ஆயிரம்
 • மொத்தம் 17 லட்சத்தி இருபது ஆயிரம்.

என்ன நன்றி
தமிழ்நாட்டின் அனைத்து ஊர்களிலிருந்து சென்னைக்கு சுற்றுலா சென்று திரும்புபவர்களின் மனதில் பசுமையாக நிற்கும்  கிண்டி தேசிய பூங்கா.  வெறும் மரம்,செடி,கொடிகள்,விலங்குள் இருக்கும் இடம் மட்டுமல்ல.அது சென்னைவாசிகளின் உயிர்மூச்சை உற்பத்தி செய்து அளித்து அளிக்கும் ஒரு இலவச பிராணவாயு வழங்குமிடமாகவும் இருக்கிது என்பதில் மாற்றமில்லை. சென்னைவாசிகள் கிண்டி தேசிய பூங்காவுக்கு நன்றி சொல்லலாம். மற்ற ஊர்க்காரர்கள் உங்கள் ஊரில் இப்படி ஒரு இடம் கண்டு கொள்ளப்படாமல் இருந்தால் அவற்றை அதன் இயற்கை மாறாமல் காக்க முன்வாருங்கள்.
கிண்டி தேசிய பூங்கா சென்னைவாசிகளுக்கு கிடைத்தற்கரிய ஒரு நுரையீரல் என்று சொல்லலாம். இந்த நுரையீரலிலிருந்து கிளம்பும் தூயகாற்று சென்னைவாசிகளின் நாசியை தொட்டு நுரையீரல்களை நிரப்புகிறது. இந்த நுரையீரலுக்கு என்ன நன்றி செலுத்த போகிறீர்கள் சென்னைவாசிகளே?

மனிதர்களே என்னையும் வாழ விடுங்கள்-இப்படிக்கு உங்கள் அன்புள்ள நண்பன் தவக்களை.

0 கருத்துகள்


இப்போது மழைக்காலம். ஆங்காங்கே புறநகர் பகுதிகளில் மழைத்தண்ணீர் தேங்கிக் கிடக்கும் இடங்களில் புதிதாக வீடு கட்டி குடியேறி இருப்பவர்கள் இரவிலும் அதிகாலையிலும் கீரிக்,கீரிக் என்ற வித்தியாசமான ஒரு ஒலியை கேட்கமுடியும். இரவின் இருளில் அந்த ஒலி கேட்க இனிமையாக இருக்கும். அது தவளையின் சப்தம். இன்றைக்கு  நகரத்து குழந்தைகள் இந்த தவளைகளை டிஸ்கவரி சேனலிலும், நேஷனல் ஜியாக்ரபிக் சேனலிலும் பாடப்புத்தகங்களிலும் மட்டுமே பார்க்கும் அளவு தவளைகள் குறைந்து போய் விட்டன.

மாறியது அமெரிக்கா
அமெரிக்காவில் தற்போது இயற்கையோடு இயைந்த பள்ளிக்கூடங்கள் என்ற புதிய பள்ளிக்கூடங்கள் வந்திருக்கின்றனவாம். இந்த பள்ளிகள் காட்டுப்பகுதிக்குள் இருக்கும். மரத்தடியில் தான் வகுப்புகள் நடைபெறும். எந்த கட்டிடங்களும் இருக்காது. காரணம், இயற்கையை நேசிக்க கற்றுக் கொள்ளும் மனிதன் இந்த உலகத்தில் எதையும் ரசிக்க தெரிந்தவனாகவும் சமுதாயத்திற்கு தீங்கு விளைவிக்காத மனநலனுடனும் வாழ பழகிக் கொள்கிறான் என்று கண்டறிந்திருக்கிறார்கள்.

எதற்கெடுத்தாலும் துப்பாக்கியை தூக்கும் கலாச்சாரத்தை மாற்ற இப்படி பள்ளிக்கூடங்களை தொடங்கி இருக்கிறார்களாம். இந்த காட்டு மரத்தடி பள்ளிக்கூடத்தில் இருந்து படிக்கும் போது அங்கிருக்கும் சிறு உயிரினங்களை பாதுகாப்பது,அவற்றின் வாழ்வியலை பார்த்து பாடங்களை படிப்பது என்பதை புதிய பாட முறையாக கொண்டு வந்து விட்டார்களாம்.

சரி விஷயத்திற்கு வருவோம்

கொசுக்களுக்கு எதிரான போர்
 தமிழ்நாட்டு மக்களை ஒரு கடந்த ஆண்டில் மிரட்டிய பிரச்சனைகளில் சிக்குன் குனியாவும் ஒன்று. சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டவர்கள் முடமானவர்களை போல ஆனார்கள். இது வந்து குணமான பின்பும் பலர் கை,கால்களை மடக்க முடியாமல் நொண்டியடித்துக் கொண்டிருந்தார்கள். சிக்கன்குனியாவை பரப்பிய கொசுக்களை அழிக்க நடவடிக்கை எடுத்த அரசாங்கம் அந்த நடவடிக்கைக்கு 'கொசுக்களுக்கு எதிரான போர்' என்று பெயரிட்டது. இதன்படி வீட்டுக்கு வீடு ஏதோ ஒரு மருந்தை கொண்டு வந்து பயன்படுத்தும் நீரில் கலந்து விட்டு போனார்கள் சுகாதாரத்துறை ஊழியர்கள்.

ஆனால் இந்த கொசு அதற்கெல்லாம் மசிந்ததாக தெரியவில்லை. ஒரு வழியாக சிக்கன்குனியா தானாகவே தான் குறைந்து போனது. அரசாங்கத்தின் நடவடிக்கைகள் கொசுக்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தியதாக தெரியவில்லை. அடித்தால் நசுங்கிவிடும் இந்த கொசுக்களை ஒழிக்க மட்டும் வழி தெரியவில்லை. ஆனால் விஞ்ஞானிகள் தற்போது ஒன்றை சொல்லியிருக்கிறார்கள். மனிதனுக்கு டெங்கு, சிக்கன்குனியா,மலேரியா உள்பட பல நோய்களை உருவாக்கும் கொசுக்களை அழிக்க தவளைகளால் மட்டுமே முடியுமாம்.

கொசுக்களை கருவில் அழிக்கும் தவளை
தரையிலும் தண்ணீரிலும் வாழக்கூடிய இயல்பு படைத்த தவளை இந்த தவளைகளின் எண்ணிக்கை குறைந்து போனதால் கொசுக்கள் பெருகி விட்டதற்கு காரணம் என்கிறார்கள். அதாவது கொசுக்கள் தண்ணீர் தேங்கும் இடங்களில் தான் முட்டையிட்டு தனது கொசு இனத்தை பெருக்குகிறது. இப்படி கொசுக்கள் இடும் முட்டைகள் அந்த நீர் நிலைகளில் வாழும் தவளைக்கு நல்ல உணவு. கொசுக்களின் முட்டைகள் அனைத்தையும் விழுங்கி ஏப்பம் விடும் தவளைகள், கொசுக்கள் பிறப்பதற்கு முன்பே அதன் கருவை அழித்து உலகத்தை பார்க்க விடாமல் செய்து விடுகின்றன.

இப்படி மிகச்சரியாக கொசுக்களை குறிவைத்து இயங்கும் தவளைகள் தற்போது குறைந்து போய் ஏறக்குறைய அழிவின் விளிம்பில் நிற்கின்றன. இதற்கு என்ன காரணம் என்பதை மட்டும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது பற்றி பூச்சியியல் துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதன் ஆய்வு அறிக்ககைள் அரசுக்கு அனுப்பபட்டுள்ளன. கடந்த 2008 ஆம் ஆண்டை தவளைகள் ஆண்டாக அறிவித்தார்கள்.

விழிப்புணர்வு
அப்போது தவளைகளை பற்றிய ஏராளமான ஆய்வுகள் செய்யப்பட்டன. தமிழ்நாட்டில் உள்ள சில நல்ல பள்ளிகள் (கராத்தே,சிலம்பம்,குஸ்தி என்று காசு பிடுங்காத பள்ளிகள்) தவளைகளை பற்றி தங்கள் பள்ளிக்குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கையேடு ஒன்றை வெளியிட்டன. தவளைகள் வசிக்கும் சிறய நீர்நிலைகளுக்கு பள்ளி மாணவமாணவிரை அழைத்து சென்று அதன் வாழ்க்கை முறையை காண்பித்து விளக்கினார்கள்.

அப்போது தவளைகளை பற்றி சில செய்திகள் சொல்லப்பட்ட ஒரு விளக்க கையேடு அனைவருக்கும் வழங்கப்பட்டது. அதில் தவளைகளை பற்றி பல செய்திகளை சொல்லியிருந்தார்கள். அதில்,

அமீபிபியன்ஸ்
தவளைகள் அமீபிபியன்ஸ் வகையை சேர்ந்த சிறு உயிரினம்.
தவளையின்  வாழ்விடங்கள் அழிக்கப்பட்டதாலும், பருவகால மாற்றத்தாலும் மற்ற வேறு பல அச்சுறுத்தல்களாலும் அவை அழிந்து போகும் அபாயத்தில் உள்ளது.

அமீபிபியன்சில் 3 வகை உண்டு

1.அனுரா என்ற பிரிவில் வரும்  தவளைகள் தேரைகள்
2.காடாடா என்ற பிரிவில் வரும் பல்லிகளும் பல்லிகள் போன்ற தோற்றம் கொண்ட சிறிய பிராணிகளும்.
3.ஜிம்னோபியோனா என்ற பிரிவில் புழுக்கள் மற்றும் சிறிய நகரும் பிராணிகள்

இதில் தவளைகள் எந்த விதத்தில் மனிதனுக்கு உதவுகின்றன
 • தவளைகள் ஊன்உண்ணிகள்.இவை இந்த இயற்கை சூழலில் உள்ள வேறு சில சிறிய பூச்சிகளை உண்டு வாழ்கின்றன. அதாவது தீமை தரும் சில பூச்சிகளை தின்று அவற்றின் பெருக்கத்தை கட்டுப்படுத்துகின்றன.
 • குறிப்பாக தவளைகள் மனிதன் விளைவிக்கும் பயிர்களை தாக்கும் சிறிய மூட்டைப்பூச்சி போன்ற பூச்சிகளையும் வண்டுகளையும் மனிதனுக்கு நோய்களை வரவழைக்கும் நோய்க்கிருமிகளை தாங்கிச் செல்லும் பூச்சிகளையும் தின்று அழித்துவிடுகின்றன.
 • தவளைகளும் சில பிராணிகளுக்கு உணவாகின்றன. மீன்கள்,முதலைகள்,ஆமைகள், சிறிய பறவைகள் போன்றவை தவளைக்குஞ்சுகளையும்,தவளைகளையும் உண்டு உயிர்வாழ்கின்றன.
 • ஐரோப்பா,தெற்காசியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட சில வெளிநாடுகளில் தவளைகள் மனிதனின் நேரடி உணவாகவே பயன்படுகிறது.
 • தவளைகள் புதிய மருந்துகளை கண்டுபிடிக்கும் போது அவற்றை ஆராய்ச்சி செய்து பார்ப்பதற்கான ஒரு ஊடகமாக பயன்படுகிறது.
 • மனிதனுக்கு வரும் புற்றுநோய், இருதய நோய்களை தீர்ப்பதற்கான ஒரு பொருளாக தவளையின் தோலை மருத்துவ ஆய்வுகளில் பயன்படுத்தி வருகிறார்கள்.
 • பூகம்பம் உள்ளிட்ட இயற்கை பேரழிகள் வருவதை தவளைகள் முன்னமே கண்டறிந்து விடுகின்றன. தவளையின் தோலின் நிறம் மாறுவதை வைத்து இந்த பேரழிவுகளை கண்டறிய முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர். உலகின் வேறு எந்த பிராணியிலும் இப்படி வெளித்தோற்றத்தை வைத்து இயற்கையின் மாறுதல்களை கண்டறியும் சிறப்பு இல்லை.
 • தவளையில் மட்டும் உலகில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு தவளை இனத்துக்கும் தனிப்பட்ட மரபுப்பண்புகள் உள்ளன. இந்த மரப்புப்பண்புகள் தவளைகள் எந்த ரசாயன மற்றும் இயற்பியல் சூழ்நிலையிலும் தப்பித்து உயிர் வாழ ஏற்றபடியான தகவமைப்பை தவளைக்கு அளிக்கிறது.
 • தவளைகள் வெளிப்படுத்தும் க்ரீக்கீரிக் சப்தம் ஒரு நல்ல சகுனமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது
 • தவளைகள் வாழ்வதால் தவளைகளை உணவாக கொள்ளும் எத்தனையோ உயிரினங்களிடமிருந்து நமக்கு பல வகையிலும் பயன்கள்ள உள்ளன. உதாரணம், மீன்கள், பாம்பிலிருந்து விஷமுறிவு மருந்து, தோல்கள்........
தவளைகள் உலகின் ஆதிவிலங்குகளில் ஒன்று
மனிதன் தோன்றுவதற்கு முன்பே தவளைகள் இந்த பூமியில் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
அதாவது 36 கோடி ஆண்டுகளுக்கும் மேலாக இவை இங்கு இருக்கின்றன.
ஆனால் இன்னும் 5 ஆண்டுகளில் தவளைகள் காணாமல் போனலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த அளவுக்கு இவற்றின் எண்ணிக்கை இப்போது சுருங்கிவிட்டது.

காணாமல் போவது ஏன்?
தவளைகளை தற்போது காய்டிரிட் என்ற ஒரு வகை பூஞ்சை நோய் தாக்கி வருகிறது. இந்த பூஞ்சை நோய் தாக்கிய தவளைகள் உயிரோடு இருப்பதில்லை.
மருத்துவ ஆராய்சிக்காக ஒரு இடத்திலிருந்து கொண்டுவரப்படும் தவளையில் இந்த பூஞ்சை தாக்கியிருந்தால் அது மற்ற தவளைகளையும் பாதித்து வெகுவேகமாக வேறுபல இடங்களில் இருக்கும் தவளைகளையும் தாக்கி அழிக்கிறது.

இது தவிர.....
மனிதர்கள் நீர் நிலைகளை அழித்து வீடுகள் கட்டும்போது தவளைகளின் வாழ்விடமான நீர் தேங்கும் இடங்கள்  அழிக்கப்பட்டு விடுகிறது.இதனால் தவளைகள் அழிந்து போகின்றன.

வயல்காடுகளில் ரசாயன பூச்சி மருந்துகளை தூவும் போதும், சூரியனின் தகிக்க முடியாத வெப்பத்திலிருந்து வெளிப்படும் அல்ட்ராவயலட் கதிர்வீச்சுகளினாலும், ரானாவைரஸ் என்ற ஒரு வகை வைரஸ் கிருமியாலும் வேறு பல எதிர் உயிர்களாலும் தவளைகள் வேகமாக அழிக்கப்பட்டு வருகின்றன.

தடுக்க முடியுமா?
நிச்சயமாக முடியும். மதுரை,சென்னை, திருச்சி உள்பட அனைத்து நகரங்களிலும் இன்னும் புறநகர் விரிவாக்கம் என்ற பெயரில் நீர்நிலைகள் அழிக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. இந்த நீர்நிலைகளை அழிக்கும் போது அங்கிருக்கும் கண்ணுக்கு தெரியாத பல நூறு உயிரினங்கள் அழிந்து போகின்றன. இதில் தவளைகளும் அடக்கம். எனவே உங்களை சுற்றி இருக்கும் நீர்நிலைகளை அழிக்காமல் அவற்றை விட்டுவேறு இடங்களில் குடியிருப்புகளை அமையுங்கள்.

விவசாயிகள்  ரசாயன உரங்களை குறைத்து இயற்கை உரங்களை பயன்படுத்துங்கள்.இது மனிதனுக்கும் நல்லது.

அமீபியன் ஆர்க்தெற்கு ஆசியாவில் தவளை இனத்தை பாதுகாக்க முயற்சி எடுக்கும் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரு திட்டத்தை 'அமீபியன் ஆர்க்' என்ற நிறுவனம் எடுத்துள்ளது. இவை பள்ளி கல்லூரிகளில் மாணவமாணவிகளுக்கு தவளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பல நிகழ்ச்சிகளை மாணவர்களிடையே நடத்துகிறது. அதில் ஒன்று கிராமங்களில் உள்ள குளம் குட்டைகளுக்கு குழந்தைகளை அழைத்து சென்று அங்குள்ள தவளைகளை அவற்றின் வாழ்வு முறையை விளக்குகிறார்கள்.

தவளை பற்றி மேலும் அறிய...

http://www.exploratorium.edu/frogs/mainstory/frogstory6.html

என்ற தளத்தில் செல்லவும்.

நீங்கள் சிறிய அளவில் பள்ளி நடத்துபவராக இருந்து உங்கள் பள்ளி மாணவமாணவிகளுக்கு தவளை விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்த

AAk at ZOO WILD. PO Box No.1683.Coimbatore.Tamilnadu-641 004

அல்லது மெயிலில் ansa@zooreach.org தொடர்பு கொள்ளவும்.

அமெரிக்கா போல் காட்டுக்குள் பள்ளிகள் நடத்த இயலாவிட்டாலும் தவளைகள்பற்றி இங்குள்ள பள்ளிகள் நமது குழந்தைகளுக்கும் கற்று தர இந்த தகவலை கொண்டு சேருங்கள் நண்பர்களே!

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர், மற்றயைவர் தொழுதுண்டு பின்செல்வர்

0 கருத்துகள்வேளாண்மை வணிகப்பயிற்சி இலவசம் வங்கி கடன் வாங்கி தொழில் தொடங்கலாம்

இந்தியநாட்டின் முதுகெழும்பாக கருதப்படும் விவசாயம் இன்றைக்கு சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை. ஆந்திராவிலும் வேறுசில மாநிலங்களிலும் விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.தற்போது பிரமாண்டமாக தெரியும் ஐடி துறை விவசாயிகளின் குடும்பத்தையும் விட்டுவைக்கவில்லை. களத்து மேட்டில் உழைக்காமல் தனது பிள்ளைகளும் கம்ப்யூட்டரில் உட்கார்ந்து மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும் என்று ஒரு விவசாயும் ஆசைப்படுவது நியாயந்தானே!. ஆனால் வள்ளுவர் சொன்னது போல் "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர், மற்றயைவர் தொழுதுண்டு பின்செல்வர்' என்ற குறள் பலிக்கும் நாள் தொலைவில் இல்லை.
வயல்காட்டில் வியர்வை சிந்தி உழைத்து கொட்டும் கிணற்று நீரில் குளித்து சாப்பிடுவது தனி சுகம் தான். யாரிடமும் கையேந்தாமல் எங்கும் அடிமையாக இல்லாமல் உழைப்பதும் தனிசுகம் தான். இருந்தாலும் இன்று அந்த நிலை இல்லை. இந்த கட்டத்தில் வேளாண் பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரிகள் கூட எங்காவது வேலை கிடைத்தால் மாதம்தோறுத் வாங்கும் சம்பளத்தில் ஒரு பிளாட், ஒரு கார், கொஞ்சம் நகை, பிள்ளைகுட்டிகள் படிப்பு, ஓய்வு என்று போய்விடலாம் என்று தான் நினைக்கிறார்கள்.

இருந்தாலும் அவர்களுக்கும் வேலைவாய்ப்பு குறைவாக இருக்கிறது. இந்த நிலையில் மத்திய அரசின் வேளாண்மை அமைச்சகம் இது போன்ற பட்டதாரிகளுக்கு தொழில் திறன் பயிற்சியும் கொடுத்து வங்கி கடனுக்கும் உதவி செய்து சுய தொழில் தொடங்க ஊக்குவிக்கிறார்கள்.
இந்த திட்டம் இருப்பது பல விவசாய பட்டதாரிகளுக்கும் பட்டயதாரிகளுக்கும் கூட தெரிவதில்லை. இதனை தெரிவிக்கும் நோக்கில் இங்கு பதிவிடுகிறேன். உங்கள் நண்பரோ அல்லது நண்பர்களின் பிள்ளைகளோ விவசாய துறை அல்லது வேளாண் சார்ந்த அறிவியல் பட்டதாரிகளாக (ஹோம் சயின்ஸ்) பட்டதாரிகளாக இருந்தால் அவர்களை கீழக்கண்ட முகவரிக்கு கடிதம் எழதியோ, போனில் பேசியோ விவரம் கேட்க சொல்லுங்கள்.

திட்டம்
 மத்திய அரசின் வேளாண்மை அமைச்சம் 2002 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இலவச வேளாண் மருத்துவ மையம் மற்றும் வேளாண் விற்பனைத் தொழில் பயிற்சினை துவக்கியுள்ளது. இந்த திட்டத்தில் வேளாண்மை, மீன்வளம்,வேளாண்பொறியியல்,தோட்டக்கலை,வனஇயல்,மனையியல் பட்டதாரிகள், அறிவியல் பட்டம் பெற்று முதுகலையில் வேளாண்மை,கால்நடை,மீன்வளம் சம்பந்தப்பட்ட பட்டம் பெற்றவர்கள்,மற்றும் தமிழ்நாடு வேளாண்பல்கலைக்கழக ஒப்புதல் பெற்ற பட்டயதாரர்களும் பயிற்சி பெற்று புதிதாக தொழில் தொடங்கலாம்.நோக்கம்
 மேற்படி தகுதியுள்ளவர்களுக்கு இலவசமாக இரண்டு மாத பயிற்சி அளித்து ஊக்குவித்து கிராமப்புறங்களில் மேற்படி தகுதிகளுக்கு சம்பந்தப்பட்ட வேளாண் மருத்துவமையம் மற்றும் விற்பனை மையங்களை அமைத்து வேலையில்லாமல் இருக்கும் வேளாண்வல்லுநர்களை அரசின் விரிவாக்க பணிகளுக்கு துணை நிற்க செய்வதாகும்.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியம் பிரதேசத்தில் இதுவரை 903 வேளாண்பட்ட மற்றும் பட்டயதாரர்கள் இந்த பயிற்சியை முடித்து இதில் 60 சதவீதம் பேர் விற்பனை மையங்களை தொடங்கியுள்ளனர்.
இந்த பயிற்சியில் சேர வயது வரம்பு இல்லை.

பயிற்சி நிறுவனம்
 வாப்ஸ்

பயிற்சியில் சேருவோருக்கு வசதிகள்
இலவசமாக தங்குமிடம்,சாப்பாடு,பயிற்சி ஏடுகள்,தொழில் நிர்வாகம் மற்றும் திட்டமிடும் பயிற்சிகள்,ஆராய்ச்சி
மற்றும் தொழில் நுட்ப பயிற்சி மையங்களை பார்வையிடுதல்,இவைகள் தவிர வங்கி கடனுக்கான திட்ட அறிக்கை தயாரித்தும் கொடுக்கப்படுகிறது.

வங்கிக்கடனும் மானியங்களும்
 பயிற்சி முடித்தவுடன் வேளாண் தொடர்பான மருத்துவ மையங்கள் மற்றும் விற்பனை தொழில் மையங்கள் அமைக்க இருபது லட்சம் வரையில் தேசியமயமாக்கபட்ட வங்கிகள் மூலம் கடன்பெற வாய்ப்பு உள்ளது. இதற்கு நபார்டு வங்கி மூலம் பொதுப்பிரிவினருக்கு 36 சதவீதமும்,மற்றும் பெண்கள், தாழ்த்தப்பட்ட பிரிவினர் ,மாற்றுதிறனாளிகளுக்கு 44 சதவீதமும் மானியமாக வழங்கப்படுகிறது.

பயிற்சியில் சேர விண்ணப்பிக்கும் முறை
 இந்த பயிற்சி அக்டோபர் மாதத்தில் மதுரை மற்றும் புதுச்சேரியில் தொடங்க உள்ளது. இதில் சேர தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழக்கண்ட முகவரியில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பெறலாம்.

மதுரை
தொடர்பு அலுவலர்
வாப்ஸ் தலைமை அலுவலகம்
39.பெசண்ட் சாலை,சொக்கிகுளம்,மதுரை-625 002
போன்:0452-2538 642, 94435 69401

புதுச்சேரி
ஒருங்கிணைப்பாளர்
வேளாண் மருத்துவ மையம் மற்றும் வேளாண் விற்பனை தொழிற்பயிற்சி மையம்
72.நல்லவாடு சாலை,தவளைக்குப்பம்,அபிசேகப்பாக்கம்.புதுச்சேரி-605 0007

பன்றி காய்ச்சலும் அக்னி ஹோத்ரமும்

5 கருத்துகள்னது நண்பர் ஒருவர் சென்னையிலிருந்து கிளம்பி மதுரை வந்து கொண்டிருப்பதாக சொன்னார். அவரிடம் ஒரு தகவலை பெற வேண்டியிருந்ததால் மதுரை வந்தவுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்வதாக கூறிவிட்டு இருந்து விட்டேன். மறுநாள் காலையில் போன் செய்த போது அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டிருப்பதாக சொன்னார். என்ன சார் கொடுமை இது!
அவருக்கு எலி காய்ச்சலாம். ஒரு நண்பரின் அறையில் தங்கியிருந்த போது இது பரவியிருக்கிறது என்றார். ஏற்கனவே பன்றிக்காய்ச்சல், கொசுவால் வரும் டெங்கு காய்ச்சல், கோழியின் பெயரை சிக்குன் குனியா என்று புதுப்புது காய்ச்சல்கள். தற்போது எலிக்காய்ச்சல் வேறா? என்று நொந்தபடி அவரை பார்க்க கிளம்பினேன்.

ஏன் இப்படி புதிய புதிய நோய்கள் அவதாரம் எடுக்கின்றன என்ற நெருடல் எனக்குள். அப்போது போபால் விஷவாயு சம்பவமும்,அதிலிருந்து ஒரு குடும்பம் தப்பித்ததும்  பத்திரிகைகளில் வெளியாகி இருந்த செய்தி நினைவுக்கு வந்தது. வேதம், இதிகாசம், புராணம் இதிலெல்லாம் நம்பிக்கை கொள்வது அல்லது விட்டுவிடுவது என்பது தனிமனித விஷயம்.

ஆனால் சில பழமையான நூல்களில் சொல்லப்பட்டுள்ள சில பாரம்பரிய நம்பிக்கைகள் அது ஆன்மீகம் என்பதை விட அறிவியலாக இருந்திருக்கிறது என்பதை அது நினைவுபடுத்தியது. போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்லை. இதற்கு காரணம் யாகமல்ல. யாகத்தில் போடப்பட்ட பொருட்களும் அதிலிருந்த வெளிக்கிளம்பிய அனலும், மெல்லிய புகையும் தான் நச்சுப்புகையை அந்த வீட்டிற்குள் வராவிடாமல் தடுத்து நிறுத்தியதும் தான் காரணம்.

இப்படி கொடுமையான விஷவாயுவை கூட முறியடிக்கும் சக்தி இந்த யாகத்திற்கு இருந்திருக்கிறது என்றால் இந்த எலி,பன்றி,கொசுக்காய்ச்சல்களை பரப்ப சுற்றுப்புற காற்றில் அலைந்து திரியும் கிருமிகளை அழிக்க முடியாமலா இருக்கும்? சுற்றுப்புறக்காற்றில் உள்ள நோய்க்கிருமிகளையும்,அசுத்தஙகளையும் நீக்கும் யாகத்தீக்கு அக்னி ஹோத்ரம் என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

நல்ல சுற்றுப்புறத்தை ஐந்து எளிமையான அடிப்படையான மூலாதரமான விதிகளின் படி வேள்வித் "தீ" மூலம் உண்டாக்கலாம் என்கிறது சில பழங்கால வேதங்கள். அதில் ஒன்று தான் அக்னி ஹோத்ரம். அதாவது வேள்வித்தீயின் மூலம் சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்தலாம் என்கிறது வேதங்கள்.

இந்த அக்னி ஹோத்ரம் பற்றி இன்ஸ்டிடியூட் பார் ஸ்டெடீஸ் இன் வேதிக் சையின்ஸ் என்ற நிறுவனம் வெளியிட்ட ஒரு கையேட்டில் காணப்பட்ட தகவல்கள் உங்கள் பார்வைக்கு....

 காற்றில் ஒரு ஊசி மருந்து

" நம் உடலில் நோயை உண்டாக்கும் நச்சுக்கிருமிகளை அறவே ஒழிக்க முடியாது. ஆனால் அவற்றிலிருந்து நம்மை தற்காத்து கொள்ள வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொள்கிறோம்.அதுபோல் நம்மை சுற்றி காற்றில் உலாவும் அசுததங்களை நம்மால் களைய முடியாத நிலையில் அவற்றின் தீய வினைகளிலிருந்து நம்மை காத்துக்கொளள முடியும்.

உடலில் ஊசி போடுவது போல சுற்றுப்புறக்காற்றில் செலுத்தப்படும் ஒரு ஊசி தான் அக்னி ஹோத்ரம். இந்த அக்னி ஹோத்ரத்தால் நமது சுற்றுப்புறம் மட்டுமல்ல. யாகத்தீயில் இருந்து வரும் மணம் நமது மனதையும் அமைதிப்படுத்துகிறது.

அக்னி ஹோத்ரம் என்பது....

இயற்கை சமன்பாட்டிற்கும் மனித வாழ்வின் முன்னேற்றத்திற்கும் அவசியமாக இருந்து ஜீவராசிகளின் சீர் பிரமாணத்திற்காக சூரியோதத்திலும் சூரிய அஸ்தமனத்திலும் செய்யப்படும் யாகத்தின் அடிப்படையிலான செயல்முறை.

சுற்றுப்புறக்காற்று தான் நமது நாசி வழியாக இழுக்கப்பட்டு உடலை உயிரோட்டமுடன் வைக்கிறது. இந்த சுற்றுப்புறக்காற்றுக்கு உயர்ந்த குணமளிக்கும் சக்தியை கொடுக்கும் ஒரு செயல்.

அக்னி ஹோத்ரம் செய்ய அடிப்படை தேவைகள்
1.நிச்சயமான நேரங்கள்
2.தீ(அக்னி)பசுஞ்சாண விரட்டியால் உண்டாக்கப்படுவது.
3.குறிப்பிட்ட அளவுடைய பிரமிட் தோற்றம் கொண்ட செப்பு பாத்திரம்.
4.சுத்தமான பசுநெய் தடவப்பட்ட முனை முறியாத பச்சரிசி
5.மந்திரங்கள்.

இதில் நிச்சயமான நேரங்கள் என்பது, இயற்கையின் தாளகதியான சூரிய உதயம் மற்றும் சூரிய அத்தமனம்.
(சூரியோதத்தின் பல நெருப்புகள், ஒளி அலைகள், மின்சாரங்கள்,ஈதர்கள் மற்றும் நுட்பமான சக்திகள் எல்லாவழிகளிலும் பரவி பாய்கின்றன. தீவிரமான இந்த ஒளி வெள்ளம் பரவசத்தை ஏற்படுத்தி சுறுசுறுப்பை உண்டாக்குகின்றது.மேலும் அது பாயும் வழியில் உள்ள எல்லாவற்றையும் சுத்தப்படுத்தி உயிர்ப்பிக்கின்றது. சூரிய அத்தமனத்தில் ஒளிவெள்ள அதிர்வுகள் மறைகின்றன. அப்பொழுது நோய்க்கிருமிகள் பெருகி அழிக்கும் சக்தியாக செயல்படும்.எனவே அக்னி ஹோத்ரம் செய்தால் சுற்றுப்புறக்காற்றில் கிருமிகளின் பெருக்கத்தை தடுக்கும்)

அக்னி(தீ) மற்றும் பிரமிட் பாத்திரம்

பிரமிட் உருவ (பிரமிட் என்ற வடிவத்தை பற்றி ஆய்வு செய்த லண்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் அதிர்ந்து போனார்கள். காரணம், அது அறிந்து கொள்ளப்பட்ட அனைத்து விஞ்ஞான மற்றும் எலக்ட்ரானிக்ஸ் விதிகளுக்கு சவாலாக உள்ளது என்றார்கள். (psychic discoveries Behind Iron Curtain) புத்தகத்தில் பிரமிட்டின் உட்பகுதியில் இருக்கும் மின்காந்த சக்தி அதனுள் இருக்கும் பொருட்களின் சிதைவடைதலை தடுக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. பிரமிடில் வைக்கபட்ட உடல் சிதைவுறாது. துர்நாற்றம் வீசாது)

தாமிர பாத்திரத்தில் உலர்ந்த பசுஞ்சாண விராட்டியில் நோய் பரவுதலை தடுக்கும் மூலங்கள் உள்ளதை ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன.
பசுஞ்சாணத்தில் மென்தால், அம்மோனியா, பீனால்,இன்டால்,பார்மலின் முதலிய ரசாயனங்களும் முக்கிய நோய்க்கிருமிகளை அழிக்கும் சக்தியும் உள்ளது.யாக மரங்கள் என்று கூறப்படும் ஆல்(Ficul Bengalnesis), அத்தி(Ficus Glometra), புரசு(Butea Prondosa),அரசு(Ficus Religiosa),வில்வம்(Aegle Marmelos) ஆகிய மரங்களில் உலர்நத குச்சிகள் மருத்துவ சக்தி கொண்டது. இவற்றை பசுஞ்சாணத்துடன் பயன்படுத்தும் போது நன்மைகள் அதிகரிக்கும்.

செய்முறை
 பசுஞ்சாண விராட்டியையும் உலர் மரக்குச்சிகளையும் பிரமிட் உருவ தாமிர பாத்திரத்தில் உள்ளே காற்றோட்டத்துடன் சரியாக எரிய வைக்க வேண்டும். அதிகாலையில் மற்றும் மாலையில் அக்னி ஹோத்ர நேரத்தில்( சூரிய உதயம் மற்றும் அத்தமனம்) தீ கொளுந்து விட்டு எரியவேண்டும். புகை உண்டாக்கக்கூடாது. ஜுவாலை நெருப்பாக இருக்க வேண்டும்.
உடையாத முழுமையான பச்சரிசி-கைக்குத்தல் அரிசியைஒவ்வொரு நேரத்திற்கு இரண்டு சிட்டிகைகளாக இந்த நெருப்பில் போட வேண்டும். சுத்தமான பசுநெய்யை இந்த நெருப்பில் சொட்டு சொட்டாக  விட வேண்டும். இந்த நெய், உப்பு சேர்க்கதாத பதப்படுத்தும் பொருள் அல்லது ரசாயனங்கள் சேர்க்காத  சுத்தமான பசு நெய்யாக இருப்பது  முக்கியம். இப்படி வேள்வி தீயை வீட்டில், சரியாக சூரியோதத்திலும்,சூரிய அத்தமனத்திலும் முறையே இரு தடவை செய்ய வேண்டும்.
இப்படி உருவாக்கும் வேள்வித்தீயிலிருந்து 4 வகையான வாயுக்கள் உற்பத்தியாகின்றன.

1 எத்திலின் ஆக்சைடு
 2, புரேப்பலின் ஆக்சைடு
3.பார்மால்டிஹைடு
4.ப்யூட்டோ பயோலேக்டோன்.

இந்த வேள்வி தீயால் என்ன நடக்கிறது என்பதற்கு ஒரு உதாரணத்தை மட்டும் பார்க்கலாம். நெய்யை தீயில் சொட்டு சொட்டாக விடும் போது நெய்யானது உஷ்ணத்தைக் கொண்ட அசிட்டிலின் வாயுவை உற்பத்தி செய்கிறது. இது நம்மை சுற்றி இருக்கும் அசுத்தம் அடைந்த காற்றை உறிஞ்சி சுற்றுப்புறத்தை சுத்தம் செய்கிறது.

மந்திரங்கள்

இந்த வேள்வி தீ எரியும்  போது நாம் அதன் அருகில் அமர்ந்து "சூர்யாய ஸ்வாகா சூர்யாய இதம் ந ம் மா" என்ற மந்திரங்களை சொல்லலாம். இந்த அக்னியானது தாமிரப்பாத்திரத்தில் எரியும் போது முடிந்த வரை குடும்ப உறுப்பினர்களுடன் இந்த மந்திரங்களை உச்சரித்து தியானம் செய்யுங்கள். மன் இறுக்கத்திலிருந்து மீண்டு ஓய்வாக இருப்பதை உணர்வீர்கள்.

என்ன  நடக்கிறது?
இந்த ஜுவாலையின் அனல் நம்மை சுற்றி இருக்கும் நச்சுக்கிருமிகளை எல்லாம் கிரகித்து அழித்து விடும். ஒரு வீட்டில் தொடர்நது செய்யப்படும் போது அந்த வீட்டிலும் சுற்றுப்புறத்திலும் நோய்க்கிருமிகள் உலாவுவதற்கான வாய்ப்புகள் குறைவு. எனவே உங்கள் உடல் நலனை காக்க அக்னி ஹோத்ரத்தை செய்து வரலாம்.

பொது  இடங்களில் செய்யலாம்
 இந்த செயலை பல ஆயிரக்கணக்கான நோயாளிகள் குவிந்து வரும் அரசு மருத்துவமனைகள், மிக அதிக மக்கள் குழுமும் இடங்களில் எல்லாம் கடைப்பிடித்தால் அந்த இடங்களில் உள்ள நச்சுக்கிருமிகள் அழிக்கப்பட்டு சுற்றுப்புறக்காற்று சுத்தமானதாக மாறிவிடும். நோயாளிகளை பார்க்க வரும் நல்ல ஆரோக்கியமுள்ள பலர் இந்த நோய்க்கிருமிகளால் பாதிப்புள்ளாகாமல் தடுக்கும் ஒரு முயற்சியாக இந்த யாகத்தீ அமையக்கூடும். மேலும் நோயாளிகளின் நோய்க்கிருமிகளும் எளிதில் அவர்களை விட்டு விலகி குணமடைய வாய்ப்பிருக்கிறது. முயற்சிக்கலாமே!

அக்னி ஹோத்ரத்தின் நன்மைகள்
 • ஒருவரிடம் இருக்கும் போதைப் பொருள் பழக்கத்தின் தீவிரத்தன்மையை குறைக்கும்.
 • அதிசயிக்கத்தக்க அளவில் குழந்தைகளிடமும் பெரியவர்களிடமும் ஒரு அமைதியான மனதை ஏற்படுத்தும்.
 • முன்தலைவலி, சைனஸ்,தோல் படை, மைக்ரேன் தலைவலி உள்பட சில நோய்களை குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. விவசாயத்தில் விதைகள் சீக்கிரமே முளை கிளம்பி தளிர் விடும். விளைச்சலை அதிகப்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.
 • பசுஞ்சாணத்தால் மெழுகப்பட்ட வீட்டின் சுவர் அணுக்கதிர் வீச்சுக்களை கூட தடுக்கும் சக்தி வாய்ந்ததாக ஒரு ரஷிய விஞ்ஞானி சொல்லியிருக்கிறார்.
 • நாசா விஞ்ஞானிகளின் கூற்றுப்படி பிரமிட் என்ற உருவத்தின் சக்தி சூரிய சக்தியைவிட புரட்சிகரமானதாக இருக்கும்.
 • பிரமிட் உருவ கட்டிடங்களில் இருக்கும் போது மனவியாதி நோயாளிகள் அபூர்வமான மன அமைதிையை அடைகிறார்கள்.
 • பிரமிட்டில் மின்காந்த கதிர்களும்,காஸ்மிக் கதிர்களும் குவிகின்றன.
 • இப்படி இதனை பற்றி பல தகவல்கள் தரப்பட்டுள்ளன. இங்கு சுருக்கமாக தொகுத்துள்ளேன்.

மன அமைதிக்கு மலையேற்றம் போக நீங்க ரெடியா?

6 கருத்துகள்


வாழ்க்கை பரபரப்பு நிரம்பியதாகி இருக்கிறது. அலைச்சல், வேலைப்பளு, ஒரே இடத்தை மீண்டும் மீண்டும் சுற்றி வருவதால் விரக்தி.  என்னவாழ்க்கை இது என்று சலிப்பு பலருக்கு. ஓய்வு பெற்ற பின் என்ன செய்வது என்றே தெரியாத ஒரு வெறுமை.

சம்பாதித்து விட்டு திரும்பி பார்த்தால் வாழ்க்கையில் பல விஷயங்களை இழந்திருப்பதை உணர முடியும். அமைதி, ஆரோக்கியம்,பாலிய நண்பர்கள்,ரசிப்பு திறன் என்று பல விஷயங்கள் கைக்கு எட்டாத தூரத்தில் இருக்கும். சிலருக்கு சிரிப்பு கூட சரியாக வராது.

இந்த நிலையில் மதுரையில் இயங்கும் "அவசியம்" என்ற ஆன்மிக ஆரோக்கிய அமைப்பு "மாதம் ஒரு மலையேற்றம்" என்ற பெயரில் பல்வேறு தரப்பு மக்களை ஒருங்கிணைத்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் உள்ள காடுகள், மலைகளுக்கு யாத்திரையாக அழைத்து சென்று வருகின்றனர். ஆடிட்டராக உள்ள ராமுஜி என்பவரது தலைமையில் இயங்குகிறது  இந்த அமைப்பு.

டாக்டர்கள், என்ஜினியர்கள்,தொழிலதிபர்கள் உள்பட பலர் இதில் உறுப்பினராக உள்ளனர். மாதத்தில் ஒரு நாள் மொபைல் போனால் கூட தொடர்பு கொள்ள முடியாத இயற்கையின் அதிசயமான மலைத்தொடர்களுக்கு சென்று அமைதியாக தியானம் செய்து விட்டு வருவது இந்த அமைப்பின் நோக்கம். இவரது அமைப்பு பற்றி தினத்தந்தியில் வெளிவந்த கட்டுரையின் சுருக்கம், இதோ.....

' நகரத்தின் வழக்கமான இரைச்சல்களிலிருந்து விடுவித்துக் கொண்டு அற்புத மூலிகைகளும்,புண்ணியம் மிக்க ஆறுகளும், காதுக்கு இதம் தரும் இசைப்பிரவாகமாக வரும் அருவிகளும், ஓங்கி உயர்ந்த மரங்களும் நிறைந்த மலைப்பகுதியை சென்று அனுபவித்தவர்கள் மிக குறைவு. இன்றைக்கு இருக்கும் ஐ.டி பரபரப்பில் அதற்கெல்லாம் பலருக்கு நேரம் இருப்பதில்லை.

இயற்கை தனது அழகை வலுவாக வெளிக்காட்டுவது மலைகளில் தான். எங்கும் பச்சைப்பசேல் என்று தோற்றம், வண்ண வண்ண பூக்கள், இந்த பூக்களில் தேன் எடுக்க தாவும் பட்டாம்பூச்சிகள்,குக்கூ என்று பறந்து தரியும் வண்ண வண்ண குருவிகள்,நகரத்தின் புகையையே சுவாசித்து நொந்து போன நுரையீரலுக்கு புத்துணர்வு ஊட்டும் மலைக்காற்று, உடலை வருடும் தென்றல் மலைப்பகுதிகளுக்கு சென்று வரும் போது நமது உடலின் அத்தனை உறுப்புகளும் புத்துணர்வு பெற்றதை உணர முடியும்.

மலைகளில் எங்கும் இல்லாத அளவுக்கு ஒரு நிசப்தமும் அமைதியும் குடிகொண்டிருப்பது இயற்கை. சலசலத்து ஓடும் அருவியின் சப்தத்தை கேட்டாலே மனம் இனிமையாகி பறப்பதை உணர முடியும். இப்படி பட்ட வனாந்திரங்களை மலை முகடுகளின் அழகுகளை எத்தனை பேர் தங்கள் வாழ்க்கையில் சென்று பார்த்து ரசித்திருக்கிறார்கள் என்று கேட்டால் அது மிகவும் குறைவாகவே இருக்கும்.

அதிலும் இரவு நேரங்களில் இந்த இடங்களில் அமர்ந்து அதைியாக ஒரு தியானத்தை எத்தனை பேர் செய்திருப்பார்கள். இந்த குறைகளை போக்கி மனிதர்களை இயற்கையோடு ஒருங்கிணைக்கும் ஒரு பணியை மதுரையை சேர்ந்த அவசியம் அமைப்புசெய்து வருகிறது. இந்த அமைப்பின் ராமுஜியிடம் பேசினோம். இனி அவர் சொல்கிறார்....

  ' மனிதர்களின் பரபரப்பும் படபடப்பும் தான் புதிய புதிய நோய்களுக்கு காரணம். இந்த கெட்ட உணர்வுகளால் உடலின் அதிர்வு அதிகமாகி உடலை இயங்க வைக்கும் நுண் உறுப்புகளை கூட சிதைத்து விடும். மனதை கட்டுப்படுத்தி தியானம் செய்ய தெரிந்தவர்கள் எந்த சூழ்நிலையிலும் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் தியானம் பற்றி தெரியாதவர்கள் என்ன செய்ய முடியும். மாதத்தின் 30 நாட்களிலும் மாடாய் உழைத்து ஓடாய் தேய்பவர்களின் மனநிலையையும் உடலையும் புத்துணர்வு பெற ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இதை தொடங்கினோம்.

இயேசு நாதர் தொடங்கி சித்தர்கள் வரை தேர்வு செய்த மலைப்பகுதிகளில் சென்று தியானம் செய்வது என்று முடிவுக்கு வந்தோம். அதன்படி மாதம் ஒரு மலையேற்றம் என்ற பயணதிட்டம் முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களிலும் உள்ள இயற்கையின் அழகு நிரம்பிய பல்வேறு ஆன்மீக பாரம்பரியம் கொண்ட மலைகளை தேர்வுசெய்தோம். மலைகளுக்கு எடுத்த எடுப்பில் யாரும் சென்று விட முடியாது. அதற்காக ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் எங்கள் நண்பர்களை தொடர்பு கொண்டு மலையேற்றத்திற்கான வழிகாட்டிகளை கண்டு பிடித்தோம்.

இன்று வரை அவர்கள் எங்களுக்கு உடன் வந்து புதிய புதிய இடங்களில் எங்கள் தியானத்திற்கான உதவிகளை செய்கிறார்கள். எங்கள் நண்பர்கள் குழுவில் சிலருக்கு தியானக்கலையில் சிறப்பு பயிற்சி உண்டு. மலைக்கு சென்று வெறும் மவுனத்ைதை கடைப்பிடிப்பவர்களும் உண்டு. தியானம் செய்பவர்களின் விருப்பத்திற்கு தியானப்பயிற்சியும் கொடுத்தோம். நாங்களே சோறு சமைத்து அங்கிருக்கும் கற்பாறையில் கொட்டி தான் சாப்பிடுவோம்.மலையேற்றத்தின் போது மொபைல் போன்களை பயன்படுத்துவதில்லை. மனம் முழுவதும் வெறும்  அமைதி மட்டுமே நிரம்ப வேண்டும் என்பதே இந்த தரிசனத்தின் குறிக்கோள்.

இந்த பயணத்திட்டம் பல்வேறு தரப்பினரையும் எங்கள் அமைப்பை நோக்கி ஈர்த்தது. நாளிதழ்களிலும், ஏடுகளிலும் வந்த எங்கள் அமைப்பின் செய்திகள் நோக்கங்களை பார்த்த பலரும் இந்த அமைப்பில் இணைந்தார்கள். இன்றைக்கு மாவட்டம் தோறும் அவசியம் அமைப்புக்கு பொறுப்பாளர்கள் இருக்கின்றனர். மலையேற்றத்தில் கலந்து கொள்பவர்களுக்கு நாங்கள் பெரிதாக எந்த கட்டுப்பாடும் விதிப்பதில்லை. சற்று வயதானவர்களாக இருந்தால் மட்டும் டாக்டர்களிடம் உடல் நலனை பரிசோதித்து விட்டு பின்னர் கலந்து கொள்ள அனுமதிக்கிறோம். மலையேற்றத்திற்கு என்று குறிப்பிடத்தக்க மலைப்பகுதிகள் உண்டு.

தேனி அருகில் உள்ள சுருளி மலை,கன்னியாகுமரியில் உள்ள மருத்துவாழ் மலை,நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அஷ்டகிரி மலை,திருவில்லிபுத்தூரில் உள்ள காட்டழகர் மலை,சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலை,பாபநாசம் பர்வதகிரி மலை,ஆந்திராவில் உள்ள வைலிங்க மலை உள்பட 40 க்கும் மேற்பட்ட மலைகளில் சென்று தங்கி தியானம் செய்திருக்கிறோம்.

இந்த மலைப்பயணத்தில் கலந்து கொண்டவர்கள் புதிய அனுபவத்தையும், உடலில் புதிய உணர்வையும் பெற்று திரும்புகின்றனர். சாதாரணமாக நாம் மூச்சுவிடும் போது நுரையீரலின் 3 ஆயிரம் அறைகளில் தான் காற்றோட்டம் நடைபெறுகிறது. ஆனால் மலையேறும் போது நுரையீரலில் மேலும் 3 ஆயிரம் அறைகள் திறக்கப்பட்டு நல்ல காற்றோட்டம் நடக்கிறது. இதனால் உடலின் ஒவ்வொரு அணுவுக்கும் காற்று சென்று வருகிறது. இந்த அனுபவத்தை பெறும் வயதானவர்கள் கூட மலைகளில் வரும் போது தங்களை ஒரு குழந்தை போல் உணர்கிறார்கள்.

இன்றைக்கு பல்வேறு இளைஞர்களும் வேலைகாரணமாக வெளிநாடுகளுக்கு சென்று விடுகிறார்கள். அவர்களை பெற்ற வயதான தாய் தந்தையர் இங்கு தனிமையில் அல்லாடுகிறார்கள். அவர்களின் உடல் திறன் ஒத்துழைத்தால் அவர்களை எங்களது பயணத்தில் கலந்து கொள்ள அழைத்து செல்கிறோம்.

மலைகளில் பருவ நிலை மாற்றத்தை சிறப்பாக உணர முடியும். அங்கு தங்குமிடம் என்று எதையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. மலையேற்றத்தில் கலந்து கொள்ள நினைப்பர்கள் தனிப்பட்ட சவுகரியத்தை எதிர்பார்க்க கூடாது. ஆதி மனிதர்கள் இப்படித்தான் வாழ்ந்திருக்கிறார்கள், மலையேற்றத்தில் கலந்துகொண்டு அனுபவம் பெற்றவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளை கூட வெகு எளிதாக எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவத்தை பெற்று விடுகிறார்கள் என்பது உறுதி.

நான் சொல்ல வருவதெல்லாம், இறைவன் படைத்த் சொர்க்கமான பூமியின் ஒட்டு மொத்த அழகும் காடுகளிலும் அதை சார்ந்த மலைகளிலும் குவிந்து கிடக்கிறது.நிலம் நீர் காற்று ஆகாயம் ஒளி ஆகியவை மலைகளில் துல்லியமாகவும் ஏராளமாகவும் தூய்மையாகவும் கிடைக்கின்றன. அதை நாம் தான் சென்று பெற்றுக்கொள்ள வேண்டும். இவற்றை பெற்றுக்கொள்ளும் போது இயற்கையில் உருவான இந்த உடலின் புத்துணர்வு பெறுவது இயல்பு. எங்களின் அமைப்பு சார்பில் நடத்தப்படும் மாதம் தோறும் மலையேற்றம் திட்டத்தில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.

மலை பயணம் குறித்த முன் தகவல்கள் திட்டங்கள் எங்களிடம் உள்ளன. அதை தெரிந்து கொண்டு குறிப்பிட்ட ஊர்களில் இந்த நிகழ்வு நடக்கும் போது எங்களுடன் இணைந்து கொள்ளலாம்' என்றார் அவர்.

நமது நாட்டில் இப்போது சுற்றுலா செல்க என்று கட்டுரை வரைவதை கூட பாடத்திட்டத்திலிருந்து அகற்றி விட்டார்கள். இந்த நிலையில் இவர்களின் மலைப்பயணத்தை வரவேற்க வேண்டியது நமது கடமை. அவசியம் ஆடிட்டர் ராமுஜியை தொடர்பு கொள்ள( 98421 89158 )என்ற எண்ணில் பேசலாம்.

(புகைபடங்கள் காண....வலதுபுற பிக்காசா பார்க்கவும்)காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today