மனிதர்களே என்னையும் வாழ விடுங்கள்-இப்படிக்கு உங்கள் அன்புள்ள நண்பன் தவக்களை.


இப்போது மழைக்காலம். ஆங்காங்கே புறநகர் பகுதிகளில் மழைத்தண்ணீர் தேங்கிக் கிடக்கும் இடங்களில் புதிதாக வீடு கட்டி குடியேறி இருப்பவர்கள் இரவிலும் அதிகாலையிலும் கீரிக்,கீரிக் என்ற வித்தியாசமான ஒரு ஒலியை கேட்கமுடியும். இரவின் இருளில் அந்த ஒலி கேட்க இனிமையாக இருக்கும். அது தவளையின் சப்தம். இன்றைக்கு  நகரத்து குழந்தைகள் இந்த தவளைகளை டிஸ்கவரி சேனலிலும், நேஷனல் ஜியாக்ரபிக் சேனலிலும் பாடப்புத்தகங்களிலும் மட்டுமே பார்க்கும் அளவு தவளைகள் குறைந்து போய் விட்டன.

மாறியது அமெரிக்கா
அமெரிக்காவில் தற்போது இயற்கையோடு இயைந்த பள்ளிக்கூடங்கள் என்ற புதிய பள்ளிக்கூடங்கள் வந்திருக்கின்றனவாம். இந்த பள்ளிகள் காட்டுப்பகுதிக்குள் இருக்கும். மரத்தடியில் தான் வகுப்புகள் நடைபெறும். எந்த கட்டிடங்களும் இருக்காது. காரணம், இயற்கையை நேசிக்க கற்றுக் கொள்ளும் மனிதன் இந்த உலகத்தில் எதையும் ரசிக்க தெரிந்தவனாகவும் சமுதாயத்திற்கு தீங்கு விளைவிக்காத மனநலனுடனும் வாழ பழகிக் கொள்கிறான் என்று கண்டறிந்திருக்கிறார்கள்.

எதற்கெடுத்தாலும் துப்பாக்கியை தூக்கும் கலாச்சாரத்தை மாற்ற இப்படி பள்ளிக்கூடங்களை தொடங்கி இருக்கிறார்களாம். இந்த காட்டு மரத்தடி பள்ளிக்கூடத்தில் இருந்து படிக்கும் போது அங்கிருக்கும் சிறு உயிரினங்களை பாதுகாப்பது,அவற்றின் வாழ்வியலை பார்த்து பாடங்களை படிப்பது என்பதை புதிய பாட முறையாக கொண்டு வந்து விட்டார்களாம்.

சரி விஷயத்திற்கு வருவோம்

கொசுக்களுக்கு எதிரான போர்
 தமிழ்நாட்டு மக்களை ஒரு கடந்த ஆண்டில் மிரட்டிய பிரச்சனைகளில் சிக்குன் குனியாவும் ஒன்று. சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டவர்கள் முடமானவர்களை போல ஆனார்கள். இது வந்து குணமான பின்பும் பலர் கை,கால்களை மடக்க முடியாமல் நொண்டியடித்துக் கொண்டிருந்தார்கள். சிக்கன்குனியாவை பரப்பிய கொசுக்களை அழிக்க நடவடிக்கை எடுத்த அரசாங்கம் அந்த நடவடிக்கைக்கு 'கொசுக்களுக்கு எதிரான போர்' என்று பெயரிட்டது. இதன்படி வீட்டுக்கு வீடு ஏதோ ஒரு மருந்தை கொண்டு வந்து பயன்படுத்தும் நீரில் கலந்து விட்டு போனார்கள் சுகாதாரத்துறை ஊழியர்கள்.

ஆனால் இந்த கொசு அதற்கெல்லாம் மசிந்ததாக தெரியவில்லை. ஒரு வழியாக சிக்கன்குனியா தானாகவே தான் குறைந்து போனது. அரசாங்கத்தின் நடவடிக்கைகள் கொசுக்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தியதாக தெரியவில்லை. அடித்தால் நசுங்கிவிடும் இந்த கொசுக்களை ஒழிக்க மட்டும் வழி தெரியவில்லை. ஆனால் விஞ்ஞானிகள் தற்போது ஒன்றை சொல்லியிருக்கிறார்கள். மனிதனுக்கு டெங்கு, சிக்கன்குனியா,மலேரியா உள்பட பல நோய்களை உருவாக்கும் கொசுக்களை அழிக்க தவளைகளால் மட்டுமே முடியுமாம்.

கொசுக்களை கருவில் அழிக்கும் தவளை
தரையிலும் தண்ணீரிலும் வாழக்கூடிய இயல்பு படைத்த தவளை இந்த தவளைகளின் எண்ணிக்கை குறைந்து போனதால் கொசுக்கள் பெருகி விட்டதற்கு காரணம் என்கிறார்கள். அதாவது கொசுக்கள் தண்ணீர் தேங்கும் இடங்களில் தான் முட்டையிட்டு தனது கொசு இனத்தை பெருக்குகிறது. இப்படி கொசுக்கள் இடும் முட்டைகள் அந்த நீர் நிலைகளில் வாழும் தவளைக்கு நல்ல உணவு. கொசுக்களின் முட்டைகள் அனைத்தையும் விழுங்கி ஏப்பம் விடும் தவளைகள், கொசுக்கள் பிறப்பதற்கு முன்பே அதன் கருவை அழித்து உலகத்தை பார்க்க விடாமல் செய்து விடுகின்றன.

இப்படி மிகச்சரியாக கொசுக்களை குறிவைத்து இயங்கும் தவளைகள் தற்போது குறைந்து போய் ஏறக்குறைய அழிவின் விளிம்பில் நிற்கின்றன. இதற்கு என்ன காரணம் என்பதை மட்டும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது பற்றி பூச்சியியல் துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதன் ஆய்வு அறிக்ககைள் அரசுக்கு அனுப்பபட்டுள்ளன. கடந்த 2008 ஆம் ஆண்டை தவளைகள் ஆண்டாக அறிவித்தார்கள்.

விழிப்புணர்வு
அப்போது தவளைகளை பற்றிய ஏராளமான ஆய்வுகள் செய்யப்பட்டன. தமிழ்நாட்டில் உள்ள சில நல்ல பள்ளிகள் (கராத்தே,சிலம்பம்,குஸ்தி என்று காசு பிடுங்காத பள்ளிகள்) தவளைகளை பற்றி தங்கள் பள்ளிக்குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கையேடு ஒன்றை வெளியிட்டன. தவளைகள் வசிக்கும் சிறய நீர்நிலைகளுக்கு பள்ளி மாணவமாணவிரை அழைத்து சென்று அதன் வாழ்க்கை முறையை காண்பித்து விளக்கினார்கள்.

அப்போது தவளைகளை பற்றி சில செய்திகள் சொல்லப்பட்ட ஒரு விளக்க கையேடு அனைவருக்கும் வழங்கப்பட்டது. அதில் தவளைகளை பற்றி பல செய்திகளை சொல்லியிருந்தார்கள். அதில்,

அமீபிபியன்ஸ்
தவளைகள் அமீபிபியன்ஸ் வகையை சேர்ந்த சிறு உயிரினம்.
தவளையின்  வாழ்விடங்கள் அழிக்கப்பட்டதாலும், பருவகால மாற்றத்தாலும் மற்ற வேறு பல அச்சுறுத்தல்களாலும் அவை அழிந்து போகும் அபாயத்தில் உள்ளது.

அமீபிபியன்சில் 3 வகை உண்டு

1.அனுரா என்ற பிரிவில் வரும்  தவளைகள் தேரைகள்
2.காடாடா என்ற பிரிவில் வரும் பல்லிகளும் பல்லிகள் போன்ற தோற்றம் கொண்ட சிறிய பிராணிகளும்.
3.ஜிம்னோபியோனா என்ற பிரிவில் புழுக்கள் மற்றும் சிறிய நகரும் பிராணிகள்

இதில் தவளைகள் எந்த விதத்தில் மனிதனுக்கு உதவுகின்றன
  • தவளைகள் ஊன்உண்ணிகள்.இவை இந்த இயற்கை சூழலில் உள்ள வேறு சில சிறிய பூச்சிகளை உண்டு வாழ்கின்றன. அதாவது தீமை தரும் சில பூச்சிகளை தின்று அவற்றின் பெருக்கத்தை கட்டுப்படுத்துகின்றன.
  • குறிப்பாக தவளைகள் மனிதன் விளைவிக்கும் பயிர்களை தாக்கும் சிறிய மூட்டைப்பூச்சி போன்ற பூச்சிகளையும் வண்டுகளையும் மனிதனுக்கு நோய்களை வரவழைக்கும் நோய்க்கிருமிகளை தாங்கிச் செல்லும் பூச்சிகளையும் தின்று அழித்துவிடுகின்றன.
  • தவளைகளும் சில பிராணிகளுக்கு உணவாகின்றன. மீன்கள்,முதலைகள்,ஆமைகள், சிறிய பறவைகள் போன்றவை தவளைக்குஞ்சுகளையும்,தவளைகளையும் உண்டு உயிர்வாழ்கின்றன.
  • ஐரோப்பா,தெற்காசியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட சில வெளிநாடுகளில் தவளைகள் மனிதனின் நேரடி உணவாகவே பயன்படுகிறது.
  • தவளைகள் புதிய மருந்துகளை கண்டுபிடிக்கும் போது அவற்றை ஆராய்ச்சி செய்து பார்ப்பதற்கான ஒரு ஊடகமாக பயன்படுகிறது.
  • மனிதனுக்கு வரும் புற்றுநோய், இருதய நோய்களை தீர்ப்பதற்கான ஒரு பொருளாக தவளையின் தோலை மருத்துவ ஆய்வுகளில் பயன்படுத்தி வருகிறார்கள்.
  • பூகம்பம் உள்ளிட்ட இயற்கை பேரழிகள் வருவதை தவளைகள் முன்னமே கண்டறிந்து விடுகின்றன. தவளையின் தோலின் நிறம் மாறுவதை வைத்து இந்த பேரழிவுகளை கண்டறிய முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர். உலகின் வேறு எந்த பிராணியிலும் இப்படி வெளித்தோற்றத்தை வைத்து இயற்கையின் மாறுதல்களை கண்டறியும் சிறப்பு இல்லை.
  • தவளையில் மட்டும் உலகில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு தவளை இனத்துக்கும் தனிப்பட்ட மரபுப்பண்புகள் உள்ளன. இந்த மரப்புப்பண்புகள் தவளைகள் எந்த ரசாயன மற்றும் இயற்பியல் சூழ்நிலையிலும் தப்பித்து உயிர் வாழ ஏற்றபடியான தகவமைப்பை தவளைக்கு அளிக்கிறது.
  • தவளைகள் வெளிப்படுத்தும் க்ரீக்கீரிக் சப்தம் ஒரு நல்ல சகுனமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது
  • தவளைகள் வாழ்வதால் தவளைகளை உணவாக கொள்ளும் எத்தனையோ உயிரினங்களிடமிருந்து நமக்கு பல வகையிலும் பயன்கள்ள உள்ளன. உதாரணம், மீன்கள், பாம்பிலிருந்து விஷமுறிவு மருந்து, தோல்கள்........
தவளைகள் உலகின் ஆதிவிலங்குகளில் ஒன்று
மனிதன் தோன்றுவதற்கு முன்பே தவளைகள் இந்த பூமியில் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
அதாவது 36 கோடி ஆண்டுகளுக்கும் மேலாக இவை இங்கு இருக்கின்றன.
ஆனால் இன்னும் 5 ஆண்டுகளில் தவளைகள் காணாமல் போனலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த அளவுக்கு இவற்றின் எண்ணிக்கை இப்போது சுருங்கிவிட்டது.

காணாமல் போவது ஏன்?
தவளைகளை தற்போது காய்டிரிட் என்ற ஒரு வகை பூஞ்சை நோய் தாக்கி வருகிறது. இந்த பூஞ்சை நோய் தாக்கிய தவளைகள் உயிரோடு இருப்பதில்லை.
மருத்துவ ஆராய்சிக்காக ஒரு இடத்திலிருந்து கொண்டுவரப்படும் தவளையில் இந்த பூஞ்சை தாக்கியிருந்தால் அது மற்ற தவளைகளையும் பாதித்து வெகுவேகமாக வேறுபல இடங்களில் இருக்கும் தவளைகளையும் தாக்கி அழிக்கிறது.

இது தவிர.....
மனிதர்கள் நீர் நிலைகளை அழித்து வீடுகள் கட்டும்போது தவளைகளின் வாழ்விடமான நீர் தேங்கும் இடங்கள்  அழிக்கப்பட்டு விடுகிறது.இதனால் தவளைகள் அழிந்து போகின்றன.

வயல்காடுகளில் ரசாயன பூச்சி மருந்துகளை தூவும் போதும், சூரியனின் தகிக்க முடியாத வெப்பத்திலிருந்து வெளிப்படும் அல்ட்ராவயலட் கதிர்வீச்சுகளினாலும், ரானாவைரஸ் என்ற ஒரு வகை வைரஸ் கிருமியாலும் வேறு பல எதிர் உயிர்களாலும் தவளைகள் வேகமாக அழிக்கப்பட்டு வருகின்றன.

தடுக்க முடியுமா?
நிச்சயமாக முடியும். மதுரை,சென்னை, திருச்சி உள்பட அனைத்து நகரங்களிலும் இன்னும் புறநகர் விரிவாக்கம் என்ற பெயரில் நீர்நிலைகள் அழிக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. இந்த நீர்நிலைகளை அழிக்கும் போது அங்கிருக்கும் கண்ணுக்கு தெரியாத பல நூறு உயிரினங்கள் அழிந்து போகின்றன. இதில் தவளைகளும் அடக்கம். எனவே உங்களை சுற்றி இருக்கும் நீர்நிலைகளை அழிக்காமல் அவற்றை விட்டுவேறு இடங்களில் குடியிருப்புகளை அமையுங்கள்.

விவசாயிகள்  ரசாயன உரங்களை குறைத்து இயற்கை உரங்களை பயன்படுத்துங்கள்.இது மனிதனுக்கும் நல்லது.

அமீபியன் ஆர்க்தெற்கு ஆசியாவில் தவளை இனத்தை பாதுகாக்க முயற்சி எடுக்கும் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரு திட்டத்தை 'அமீபியன் ஆர்க்' என்ற நிறுவனம் எடுத்துள்ளது. இவை பள்ளி கல்லூரிகளில் மாணவமாணவிகளுக்கு தவளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பல நிகழ்ச்சிகளை மாணவர்களிடையே நடத்துகிறது. அதில் ஒன்று கிராமங்களில் உள்ள குளம் குட்டைகளுக்கு குழந்தைகளை அழைத்து சென்று அங்குள்ள தவளைகளை அவற்றின் வாழ்வு முறையை விளக்குகிறார்கள்.

தவளை பற்றி மேலும் அறிய...

http://www.exploratorium.edu/frogs/mainstory/frogstory6.html

என்ற தளத்தில் செல்லவும்.

நீங்கள் சிறிய அளவில் பள்ளி நடத்துபவராக இருந்து உங்கள் பள்ளி மாணவமாணவிகளுக்கு தவளை விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்த

AAk at ZOO WILD. PO Box No.1683.Coimbatore.Tamilnadu-641 004

அல்லது மெயிலில் ansa@zooreach.org தொடர்பு கொள்ளவும்.

அமெரிக்கா போல் காட்டுக்குள் பள்ளிகள் நடத்த இயலாவிட்டாலும் தவளைகள்பற்றி இங்குள்ள பள்ளிகள் நமது குழந்தைகளுக்கும் கற்று தர இந்த தகவலை கொண்டு சேருங்கள் நண்பர்களே!

0 கருத்துகள்: (+add yours?)

காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today