சென்னைவாசிகளின் மூச்சில் கலந்திருக்கும் கிண்டி தேசியப்பூங்காவின் காற்று!!!
மனிதன் சுவாசிக்க நேரிடும் சுத்தக்காற்று எங்கிருந்து கிடைக்கிறது என்பது பரவலாக தெரிந்த விஷயம். சுற்றுப்புறத்திலுள்ள அசுத்தக்காற்றை மரங்கள் கிரகித்துக் கொண்டு சுத்தமான பிராணவாயுவை அவை வெளியிடுகின்றன. இது தான் இயற்கையில் நடக்கிறது.
ஆனால் இப்படி நமக்கு மூச்சு தரும் மரங்களை உருவாக்குவதில் என்னவோ அவ்வளவு சிரத்தை காட்டுவதில்லை என்பது வருத்தப்பட வேண்டிய செய்தி.மரம் நடுவதற்கு கூட இடம் இல்லாமல் எங்கும் கட்டிடங்களாக நிறைந்து கிடக்கும் சென்னைவாசிகளுக்கு கிண்டி தேசிய பூங்கா ஒரு வரப்பிரசாதம்.

இந்த பூங்காவினுள் நிறைந்து கிடக்கும் எண்ணற்ற மரங்களும் தாவரங்களும் வெளிவிடும் பிராணவாயு சென்னைவாசிகளுக்கு தாராளமாக கிடைக்கிறது. கிண்டி தேசிய பூங்காவின் பின்புலம் பற்றி தெரிந்து கொள்ளும் போது இது போன்ற பூங்காக்களை இனி வளரும் நகரங்களில் செயற்கையாக கூட அமைக்கலாம் என்ற எண்ணம் தோன்றும். இப்படி அமைக்கப்படும் பூங்காக்கள் அதை உருவாக்குபவர்களின் வரலாற்றை பேசும். குறிப்பாக இன்றைக்கு தமிழ்நாட்டின் பல ஊர்களிலிருந்து சென்ற ஐடி படித்த இளைஞர்கள் பலருக்கு சென்னை தான் இருப்பிடமாகவும், வாழ்விடமாகவும் உள்ளது. அவர்கள் ஒன்றிணைந்து கூட இது போன்ற முயற்சிகளை எடுக்கலாம்.

கிண்டி தேசிய பூங்கா பற்றி ஒரு பார்வை.....

தென்மாவட்டங்களிலிருந்து சென்னை நோக்கி பயணப்படும் மக்களுக்கு கண்ணுக்கு விருந்தாக காட்சியளித்து வரவேற்பது கிண்டி தேசிய பூங்கா. சுற்றிலும் மலைகள், சரிவில் தென்படும் கட்டிடங்கள். பசேலன்ற வயல்கள் என்று அது அதிகாலையில் கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். அன்றாடம் பல செய்திகளில் தென்பட்டு பரபரப்பாக இருக்கும் சென்னை நகருக்குள் தான் நாம் நுழைகிறோமா என்று புதிதாக சென்னை நோக்கி பயணப்படுபவர்களை சற்று சிந்திக்க கூட வைக்கும் இந்த காட்சிகள். இருந்தாலும் கொஞ்ச தூரத்தில் காட்சி மாறிவிடுவது வேறு விஷயம். சென்னையின் படுவேகமான மறுபக்கம் சில கிலோமீட்டர்கள் தூரத்தில் வந்து விடும்.மூச்சு விட முடியாத அளவுக்கு இப்படி இருக்கும் சென்னைக்கு மூச்சு வழங்கி உதவுவதில் கிண்டி தேசிய பூங்காவின் தியாகம் ஒரு அற்புதமான நிகழ்வு என்று சொல்லலாம்.

அமைவிடம்
சென்னையின் தென்மேற்கு மூலையில் 80"-14" மற்றும் 80"-14" -54" கிழக்கு அட்சரேகைக்கு இடையேயும், 12"-59" மற்றும் 13"-04"04வடக்கு தீர்க்க ரேகைக்கும் இடையே அமைந்துள்ளது கிண்டி தேசிய பூங்கா. இதன் மொத்த பரப்பு 670,57 எக்டர். ஒரு காலத்தில் இந்த பூங்கா அதிக மரங்களுடனும்,பசுந்தாவரங்களுடனும் ஒரு காடு போன்ற இயற்கை அமைப்பில் இருந்தது. இதனால் இந்த இடம் வேட்டைக்காரர்களுக்கான களமாக பயன்பட்டிருக்கிறது. 'கிண்டி தங்குமிடம்' என்று அழைக்கப்பட்ட இந்த இடம் கில்பர்ட் ரோட்ரிக்ஸ் என்னும் பிரிட்டிஷ்காரரின் சொத்தாக இருந்திருக்கிறது.
1917 ம் ஆண்டுவாக்கில் தங்கக்காசுகள் தான் வழக்கத்திலிருந்தன. அப்போதைய மதிப்பில் சுமார் 10,000 பகோடவுக்கு இந்த இடம் விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறது.அதாவது இன்றைய மதிப்பில் சுமார் 70 ஆயிரம் ரூபாய் என்று எடுத்துக் கொள்ளலாம்.இதற்கடுத்து இந்த பகுதி சென்னை மாகாண கவர்னரின் வாரவிடுமுறைக்கான தங்குமிடமாக ஓய்வு விடுதியாக பண்ணை வீடாக பயன்பட்டிருக்கிறது. 1910 ம் ஆண்டுவாக்கில் இந்த பகுதியின் செழுமையை கருத்தில் கொண்டு இந்த பகுதியை 'இயற்கை அரண் பாதுகாப்பு காடுகள் பகுதி'யாக அறிவித்திருக்கிறார்கள்.

மாற்றங்கள்
இதனையடுத்து இந்த இடத்தில் (கவர்னரால் தரப்பட்ட400 எக்டரில்) 1954 ல் காந்தி மண்டபமும், 1961 ல் இந்திய தொழில் நுட்ப பயிலகமும்,1970 ல் குருநானக் கல்வி பயிலகமும்,1974 ல் ராஜாஜீ நினைவு இல்லம், 1974 ல் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம்,1975 ல் காமராசர் நினைவு இல்லம் ஆகியவை நிறுவப்பட்டன. 
மீதமிருந்த 270.57 எக்டர் நிலப்பரப்பு தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது.இது சென்னையின் சுற்றுச்சூழலை காக்கும் ஒரு முக்கிய பகுதியாக அன்றிலிருந்து விளங்கி வருகிறது. அதாவது இந்த பரப்பளவில் இருக்கும் மரங்களும், தாவரங்களும் சென்னையின் அழுக்கு பட்ட மூச்சுக்காற்றை உறிஞ்சிக் கொண்டு புத்தம் புதிய பிராணவாயுவை சென்னைவாசிகளுக்கு வழங்கி வருகின்றன.

இந்த இடத்தில் சமச்சீரற்ற வெப்ப மண்டலத் தட்பவெப்ப சூழ்நிலை நிலவுகிறது. இந்த பகுதியில் காணப்படும் தாவரங்களின் அமைப்பு மற்ற இடங்களில காணப்படும் தாவரங்களிலிருந்து வித்தியாசமாக அரிதான கொடி மண்டல கடற்பகுதியில் காணப்படும் தாவர அமைப்பை போல் காணப்படுகின்றன. இங்கு கிட்டத்தட்ட 350 க்கும் மேற்பட்ட மரங்கள், புதர்ச்செடிகள்,குறுசெடிகள்,கொடிகள்,புல்வகைகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. 
இப்படி பரந்து விரிந்து கிடக்கும் பூங்காவின் தெற்கில் சுமார் 30 எக்டர் பரப்பளவில் அப்பளாங்குளம் மற்றும் காத்தான்குளம் ஆகிய குளங்கள் உள்ளன. பூங்காவின் வெளியே ஒரு குளமும் இருக்கிறது. செம்மண்ணும் செம்மண் சரளைகளும் நிறைந்த இந்த இடம் சத்து மிகுந்த வண்டல் நிறைந்த நிலமாக காணப்படுகிறது.

இந்த பூங்காவில் இன்னும் சென்னை மற்ற உயிரினங்களின் வாழ்விடமாக வாழ்வதற்கும் வழி செய்து கொடுத்திருக்கிறது என்பதை காட்டும் விதமாக ஏராளமான புள்ளிமான்களும்,அழகிய கொம்புகளை கொண்ட திராமான்களையும் பார்க்க முடிகிறது. 
மரங்களில் தங்கி தங்கள் சந்ததியை பெருக்க ஏராளமான அழகிய பறவைகள் இங்கு நூற்றுக்கணக்கில் காணப்படுகின்றன. இதுவரை இங்கு 130 வகையான பறவைகள் தென்பட்டடதாக பூங்காவின் ஆய்வு ஏடு சொல்கிறது. பறவைகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கும், புகைப்படங்களில் பறவைகளை கொத்திக் கொண்டு போக நினைப்பவர்களுக்கும் இது ஒரு சொர்க்கபூமி. இந்த பறவைகளை கண்டுகளிக்க பல ஊர்களிலிருந்து சத்தமில்லாமல் பறவை பார்ப்பவர்கள் (BIRD WATCHERS)இங்கு வந்து போகிறார்கள்.

அதாவது இங்கு சொல்ல வந்த விஷயம்,  
  • ஒரு மரம் தனது வாழ்நாளில் வெளியிடும் பிராணவாயுவின் மதிப்பு சுமார் 3 லட்சம் ரூபாய்.
    இதே மரம் காற்று மாசுபடுவதை தடுப்பதில் பங்கு வகிக்கிறது. அதாவது சுற்றுப்புறத்தில் உள்ள அசுத்தக்காற்றை உள்வாங்கி புதிய பிராணவாயுவை வெளியிடுகிறது, இந்த செயலுக்காக அதன் மதிப்பு 5 லட்சம் ரூபாய்.
  • மண் அரிப்பை தடுத்து அந்த பகுதியின் நிலத்தை உறுதியாக வைத்திருக்க மரங்கள் உதவுகின்றன. அதன்படி இதன் மதிப்பு 3 லட்சம் ரூபாய்.
  • பூமியிலிருந்து நீரை சுழற்சி செய்வது, காற்றில் ஈரப்பதத்தை தக்க வைக்கிற வேலையை இந்த மரங்கள் செய்கின்றன. இதன்படி இதன் மதிப்பு 3 லட்சம். 
  • பறவைகள்,சிலந்திகள்,சிறிய பூச்சிகள் ஆகியவற்றுக்கு அடைக்கலம் கொடுக்க வகையில் 3 லட்சம
  • தாவரங்களுக்கு உணவளிக்கும் வகையில் 20 ஆயிரம்
  • மொத்தம் 17 லட்சத்தி இருபது ஆயிரம்.

என்ன நன்றி
தமிழ்நாட்டின் அனைத்து ஊர்களிலிருந்து சென்னைக்கு சுற்றுலா சென்று திரும்புபவர்களின் மனதில் பசுமையாக நிற்கும்  கிண்டி தேசிய பூங்கா.  வெறும் மரம்,செடி,கொடிகள்,விலங்குள் இருக்கும் இடம் மட்டுமல்ல.அது சென்னைவாசிகளின் உயிர்மூச்சை உற்பத்தி செய்து அளித்து அளிக்கும் ஒரு இலவச பிராணவாயு வழங்குமிடமாகவும் இருக்கிது என்பதில் மாற்றமில்லை. சென்னைவாசிகள் கிண்டி தேசிய பூங்காவுக்கு நன்றி சொல்லலாம். மற்ற ஊர்க்காரர்கள் உங்கள் ஊரில் இப்படி ஒரு இடம் கண்டு கொள்ளப்படாமல் இருந்தால் அவற்றை அதன் இயற்கை மாறாமல் காக்க முன்வாருங்கள்.
கிண்டி தேசிய பூங்கா சென்னைவாசிகளுக்கு கிடைத்தற்கரிய ஒரு நுரையீரல் என்று சொல்லலாம். இந்த நுரையீரலிலிருந்து கிளம்பும் தூயகாற்று சென்னைவாசிகளின் நாசியை தொட்டு நுரையீரல்களை நிரப்புகிறது. இந்த நுரையீரலுக்கு என்ன நன்றி செலுத்த போகிறீர்கள் சென்னைவாசிகளே?

6 கருத்துகள்: (+add yours?)

கக்கு - மாணிக்கம் சொன்னது…

வெப்பக்காற்றின்,புழுதியின் ,வண்டிவாகன புகையின் நடுவே,சைதையிலிருந்து கிண்டி ராஜ் பவன் வழியாக வேளச்சேரி அல்லது அடையாறு பயணிக்கும் அனைவரும் அனுபவிக்கும் ஒன்று அந்த பகுதியில் செல்லும் போது ஒருவித குளிர்ந்த சூழல் நம்மை ஆட்கொண்டு மகிழ்விக்கும்.அருகில் இருக்கும் அந்த பசுமைகாட்டின் அருமைதான் அது.
பகிர்வுக்கு நன்றி.

jothi சொன்னது…

அருமை,.. இதுபோல் தொடர்ந்து நல்ல பதிவுகள் தாருங்கள்

கிரீன்இந்தியா சொன்னது…

பதிவர் சுக்கு மாணிக்கம்
மற்றும் ஜோதிக்கு நன்றி.
இயற்கையின் அழகை ரசிக்கும் உணரும் நீங்கள் நிச்சயமாக சிறப்பு பெறுவீர்கள்.

jothi சொன்னது…

//இயற்கையின் அழகை ரசிக்கும் உணரும் நீங்கள் நிச்சயமாக சிறப்பு பெறுவீர்கள்.//

மிக முக்கியமான ஒன்றை நான் இங்கே நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் நண்பரே,..

எங்கள் கல்லூரி கிண்டி எதிரே உள்ள அண்ணா பல்கலைக்கழகம்,.. நாங்கள் கிளாஸை கட் அடித்துவிட்டு எதிரில் உள்ள கிண்டி சிறுவர் பூங்காவிற்கு போய் கடலை போட்டுக்கொண்டிருப்போம்.

பரிட்சை நேரங்களில் அங்கே போய் மொத்தமாக நண்பர்களுடன் குரூப் ஸ்டடி கூட போட்டதுண்டு,..நான் படிக்கும்போது கிண்டி பூங்கா எதிரே உள்ள அந்த மேம்பாலம் இல்லை. கிண்டி பூங்காவில் இருந்து மான்கள் எங்கள் கல்லூரிக்கு வரும். (இப்போது கூட பார்க்கலாம்,.. ராஜ்பவன் அருகே "மான்கள் குறுக்கிடும் கவனம் தேவை" என போட்டிருக்கும்.). ஞாயிறு அன்று மதியம் அவைகளின் கூட்டம் அங்கள் மெஸ்ஸிற்கு அருகில் மிக அதிகமாக இருக்கும்,.. காரணம் அன்று மதியம் எங்கள் மெஸ்ஸில் வாழைப்பழம் கிடைக்கும். நாங்கள் தூக்கிப்போடும் அந்த வாழைப்பழத்தோலிற்காகத்தான் அத்தனை மான்களும்,.. ஆனால் இன்று,..??

கையில் பைசா இல்லாமல் அரியருடன் கல்லூரி வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்த தருணங்கள் அவை.

உங்கள் படங்களும், பதிவும் அதை நினைவுபடுத்திவிட்டது. மிக்க நன்றி,..

♥♪•வெற்றி - VETRI•♪♥ சொன்னது…

நல்ல பதிவு நண்பரே..!
தொடர்ந்து நல்ல விசயங்களை எழுதுவோம்..!
எனது வலைபக்கம் வந்தமைக்கு நன்றி..!
அன்புடன்,
வெற்றி
http://vetripages.blogspot.com/

எஸ்.கே சொன்னது…

அருமையான பதிவுகள்!

காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today