தென்னையிலும் இப்படி ஒரு சிறப்பு வாய்ந்த குணம் இருக்கிற மரம் கேள்விப்பட்டதுண்டா?

தலவிருட்சங்கள் பற்றிய பதிவாக ஒரு மரத்தை பற்றி எழுத தோன்றிய போது எனது நண்பர் ஒரு தகவலை சொன்னார். அதன்படி ஈத்தாமொழி நெட்டை என்ற தென்னை மரத்தை பற்றி இங்கு குறிப்பிட்டு விட்டு தென்னை என்ற தலவிருட்சத்தின் பொதுவான விடயங்களை தொடர்ந்து தொகுத்து தந்துள்ளேன்.

ஈத்தாமொழி நெட்டை என்ற ரகத் தென்னை
இந்தியா பூகோள குறியீட்டு அலுவலகத்தில் முறைப்படி பதிவு செய்யப்பட்ட பொருட்களுக்கு இந்திய அளவிலும், உலக அளவிலும் அங்கீகாரமும் பாதுகாப்பும் கிடைக்கிறது. இப்படி பதிவு செய்யப்படும் பொருட்களுக்கு தனிச்சிறப்பு மிகுந்த குணங்கள் இருந்தால் தான் இந்த அடையாள குறியீடு கிடைக்கும்.

இதன்படி இந்திய நாட்டில் கிடைக்கும் பாசுமதி அரிசி,விருப்பாச்சி பச்சை வாழைப்பழம்,மலபார் குருமிளகு,வங்காள ரசகுல்லா,கோவா பென்னி(சாராயம்),கேரளாவின் பொக்காலி அரிசி,காஞ்சிபுரம் பட்டு,மதுரை சுங்குடி சேலை,பத்தமடை பாய்,ஆழப்புழை கயிறு உள்பட 143 பொருட்களுக்கு இந்த பூகோள குறியீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை தொடர்ந்து ஈத்தாமொழி நெட்டை என்ற ரகத் தென்னை மரத்துக்கு பூகோள குறிஈடு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய தீபகற்பத்தின் தென்கோடிப்பகுதியில் இருக்கும் குமரிக்குறுநிலம் என்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் கோட்டாறு என்ற இடத்தில் இருக்கும் வணிக மையத்திற்கு வந்து கோட்டாறு தேங்காயை கிரேக்க வியாபாரிகள் வாங்கி சென்றதாக வரலாறு உண்டு. பண்ட மாற்று முறைப்படி இந்த வியாபாரம் நடந்திருக்கிறது. உலகத்தில் வேறு எங்கும் தேங்காய் கிடைக்காமலா கிரேக்கர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தார்கள். உலகத்தில் குறிப்பிட்ட சில நாடுகளிலும்,இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தென்னை மரம் வளர்ந்தாலும் இந்தியநாட்டின் தென்கோடி முனையான குமரி மாவட்டத்தில் ஈத்தாமொழி நெட்டை என்ற ரகத் தென்னையில் காய்க்கும் கோட்டாறு தேங்காய்களின் குணம் சிறப்பானது.

புவிசார் அடையாள குறியீடு
இந்த சிறப்பான குணத்திற்காக தான் கடந்த 2007 ம் ஆண்டு இந்த தென்னை ரகத்திற்கு புவிசார் அடையாள குறியீடு பெறப்பட்டுள்ளது. காரணம் இந்த தென்னையின் தனித்துவம். அப்படி என்ன சிறப்பு இந்த மரத்தில் என்று காணலாம். இதை படித்து விட்டு உங்கள் வீட்டில் தென்னை மரம் ஒன்று வைப்பதாக இருந்தால் ஈத்தா மொழி நெட்டை ரகத்தை தேர்வு செய்யுங்கள்.

இதன் காயின் பருப்பு 1,25 செமீ முதல்1.50 செமீ கனத்துடனும் அதிலிருந்து கிடைக்கும் கொப்பரை175 கிராம் எடை வரையும் இருக்கிறது. நூறு முதிர்ந்த காய்களிலிருந்து 16 முதல் 18 கிலோ எடை உள்ள கொப்பரை கிடைக்கிறது. இது இந்தியாவில் உள்ள எந்த வகை தென்னையிலும் இல்லாத ஒரு அளவாகும்.
ஈத்தா மொழி தென்னையிலிருந்து கிடைக்கும் நார் அதிக நீளம் மற்றும் பலத்துடன் காணப்படுவதால் உலகச்சந்தையில் இதற்கு தனி சிறப்பு கிடைக்கிறது.கதம்பை எனப்படும் இந்த உரிமட்டையை நேரடியாக இயந்திரத்தில் நசுக்கி வெண்மை நிற நார்பொருளாக பிரித்தெடுத்து கயிறு,வடம்,மெத்தை என்று பல்வேறு பொருட்களாக தயாரிக்கிறார்கள். தேங்காய் சார் பொருட்களான உலர்தேங்காய் பூ,கொப்பரை,தேங்காய் சிப்ஸ் தயாரிப்பாளர்கள் ஈத்தாமொழி தேங்காயில் மட்டுமே அவற்றை தயார் செய்ய முன்வருகின்றனர்.காரணம், வடமாநிலங்களிலும,வெளிநாடுகளிலும் இந்த ஈத்தாமொழி தேங்காயின் சார்பு பொருட்களை கேட்டு வாங்கி கொள்வதால் இதற்கு தனி மதிப்பு இருக்கிறது.

இது தவிர நாம் அன்றாடம் தலைக்கு தேய்க்கும் தேங்காய் எண்ணெய் பல வகை தேங்காய் கொப்பரைகளிலிருந்து எடுக்கப்பட்டாலும் ஈத்தாமொழி தென்னையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்க்கு தனி இடமுண்டு. தற்போது இந்த தேங்காயிலிருந்து வர்ஜின் தேங்காய் எண்ணெய் தனியாக பிரித்தெடுக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.நன்றாக முதிர்ந்த தேங்காயை உடைத்து துருவலில் வைத்து துருவி எடுத்த தேங்காய் பூவை கையால் நசுக்கி பால் எடுத்து மண்சட்டியில் கொதிக்க வைத்து உருக்கெண்ணெய் ஆக மாற்றுகிறார்கள்.பின்னர் இந்த எண்ணெயை ஒரே சீரான வெப்பநிலையில் காய்ச்சி தனி எண்ணெயாக மாற்றுகிறார்கள். இது தான் விர்ஜின் தேங்காய் எண்ணெய்.
குமரி மாவட்ட பெண்களுக்கு இயற்கையிலேயே நீண்ட கருகரு கூந்தல் உண்டு. இதற்கு இந்த ஈத்தாமொழி நெட்டை தேங்காய் எண்ணெயின் குணம் கூட காரணமாக இருக்கலாம். பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா இல்லையா  என்பதை பாண்டிய மன்னன், இந்த ஈத்தாமொழி தேங்காய் எண்ணெய் பயன்படுத்திய மக்களை பார்த்திருந்தால் சந்தேகம் கொண்டிருக்க வாய்ப்பே இல்லையாம்.
இது தவிர ஈத்தமொழி நெட்டை தென்னைக்கு பல மருத்துவ குணங்கள் இருக்கிறது. அது பற்றி புகைப்படத்துடன் தனிபதிவில் இடுகிறேன்..

தென்னை என்னும் தலவிருட்சம்

திருத்தெங்கூர்,வடகுரங்காடு துறை முதலிய திருக்கோவில்களில் தலமரம் தென்னை. நமது முன்னோர்களது காலங்களில் நெடிதுயர்ந்து வளர்ந்த நெட்டை தென்னை மரங்கள் தான் பரவலாக இருந்தன. தற்போது விஞ்ஞான வளர்ச்சியால் கையால் எட்டி பறிக்கும் தூரத்தில் மட்டுமே வளரும் குட்டை தென்னை மரங்கள் வந்து விட்டன. எப்படியிருந்தாலும் தென்னைக்கு மருத்துவ குணங்கள் உண்டு.

தென்னையின் மருத்துவ குணங்கள்                                                                                         
  •  தென்னையின் பூ சிறுநீரை பெருக்கும்.உடலின் வெப்பத்தை அகற்றும். உடலை வலிமையுடையதாக்கும். இளநீர் தாகத்தை தணிக்கும். குளிர்ச்சியுண்டாக்கும்.
  • இளம் தென்னங்குருத்தை தின்று வந்தால் சளி நீங்கும். இரத்த மூலம் தீரும்.
  • தென்னம் பூவை இடித்து சாறு பிழிந்து 150 மிலியுடன் அதே அளவு எலுமிச்சை சாறு பிழிந்து கொடுத்து வந்தால் ரத்தபேதி,சீதபேதி,வயிற்றுக்கடுப்பு, நீர்ச்சுருக்கு தீரும்.
  • தென்னம்பூ ஒரு பிடியை வாயிலிட்டு மென்று தின்றுவர மேகநோய்,வெள்ளைபடுதல்,உட்காய்ச்சல்,ரத்தவாந்தி,உடல் கொப்புளம் ஆகியவை தீரும்.
  • வெடிக்காத தென்னம் பாளையில் உள்ள பிஞ்சுகளை பசும்பால் விட்டு அரைத்து எலுமிச்சங்காய் அளவு எடுத்து காய்ச்சிய பாலில் கலக்கி காலை மாலை 40 நாட்கள் கொடுக்க நரம்புத்தளர்ச்சி, விரைவாதம்,தாதுநீர்த்து போயிருப்பது போன்றவை நீங்கி உடல் பலமாகும்.
  • இளந் தென்னங்காய் மட்டையை இடித்து பிழிந்த நீரை (சுமார் 100 மிலி) நாள்தோறும் காலையில் குடித்து வர மிகையாக சிறுநீர் கழிவது, மதுமேகம்(சர்க்கரை),வயிற்றுக்கடுப்பு,மூலம் குணமாகும்.
  • முற்றிய தேங்காயை துருவி விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் இரவில் கட்டில் வர விதை வீக்கம் கரையும். மார்பகத்தில் கட்டி வந்தால் பால் சுரப்பு நின்று விடும்.
  • தேங்காய்ப் பாலை தினமும் கொப்பளித்து குடித்து வர நாக்கு,உதடு,வாய்,தொண்டை,வயிறு ஆகியவற்றில் உள்ள புண்கள் ஆறும். காரம், புளி, உப்பு நீக்கி இருக்கவும்.

ஆக...இனி தேங்காப்பால் ஆட்டி எடுத்து தனியாக சாப்பிடாவிட்டாலும் கூட, இட்லி, தோசையை தவிர்த்து மாவாட்டி ஆப்பம் போட்டால் மறக்காமல் தேங்காய்ப்பால் வைத்து சாப்பிடுங்கள். உடலுக்கு நல்லது.
அழகான கூந்தல் வேண்டுமா...வீட்டில் ஒரு ஈத்தாமொழி தென்னையை வளர்த்து தேங்காய் எண்ணெய் எடுத்து பயன்படுத்துங்கள். எல்லாம் இயற்கை தந்த வரம்.

4 கருத்துகள்: (+add yours?)

எஸ்.கே சொன்னது…

பல புதிய தகவல்கள்! ஆச்சரியமாக உள்ளது! நன்றி!

Manickam சொன்னது…

தென்னை ஒரு கற்பக விருட்சம். ஆனால் அதில் ஒரு குறிப்பிட்ட இனம் சிறப்பு வாய்ந்தது என்று இப்போதுதான் அறிந்தேன். நன்றி நண்பரே!

TechShankar சொன்னது…

Thanks dear buddy!

Welcome to : amazingonly.com

by

TS

VELAN சொன்னது…

தகவலுக்கு மிக்க நன்றி! தேங்காயின் சிறப்பு குணங்கள் அருமை, தொடர்ந்து பல தகவல்களை உங்களிடம் எதிப்பார்க்கிறேன்.

காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today