யானை-வாழ்வியலின் வளமை மற்றும் செழிப்பின் ஒரு உன்னத அடையாளம்பார்க்க பார்க்க வியக்க வைப்பது யானை. பார்க்க பிரமாண்டமான உருவாமாக இருந்தாலும் மனிதனின் அடிமையாக ரோடுகளில் பிச்சையெடுப்பதும், கோயில்களில் ஆசிர்வாதம் செய்வதுமாக பரமசாதுவாக இருக்க பழக்கப்படுத்தப்பட்டிருக்கும் யானைகள் ஒரு வகை. காடுகளில் வெட்டப்படும் மரங்களை சுமந்து செல்லும் லோடுமேன் வேலைக்கு இருக்கும் யானைகள் இன்னொரு புறம். இது தவிர மனிதனை எதிர்த்து வரும் காட்டு யானைகளை கட்டுப்படுத்தி மீண்டும் காட்டுக்குள் துரத்தி விட பழக்கப்படுத்தப்பட்டிருக்கும் 'கும்கி' யானைகள் மறுபுறம். இப்படி யானைகளை நாம் பல பரிணாமங்களில் நாட்டிலும், காட்டிலும் பார்க்க முடிகிறது.

இந்த உலகத்தில் யானைக்கு மேல் மிக பயங்கர உருவத்துடன் இருந்த எத்தனையோ விலங்கினங்கள் இன்று அழிந்து போய்விட்டன. இதில் கடைசி நிலையில் இருப்பது யானைகள் தான். இன்றைக்கு இருக்கும் இந்தியாவின் ஆளும் வர்க்க அரசியல்வாதிகளில் 99 சதவீதத்தினருக்கு அறிவியல் சார்ந்த படிப்பும் அறிவும் இல்லை என்பதை நாடாளுமன்ற உறுப்பினர்களின் பயோடேட்டாவே காட்டுகிறது. இந்த நிலையில் இவர்களுக்கு யானைகள் உள்ளிட்ட எந்த உயிரினத்தின் மீதும் அறிவியல் பார்வையும், ஆர்வமும் இருக்காது என்பதே உண்மை.

இந்த நிலையில் இவர்கள் இப்படி அழியும் பட்டியலை நோக்கி பயணிக்கும் யானையை காப்பாற்றுவது பற்றியல்லாம் எங்கே சிந்திக்க போகிறார்கள்? இருந்தாலும் உலக இயற்கை பாதுகாப்பு இயக்கங்களின் அழுத்தம்,இந்திய வனஉயிர் வாரிய(மேட்டுக்குடி) உறுப்பினர்களின் மனோபாவம்,இயற்கையை நேசிக்கும் ஆர்வலர்களின் உறுதியான நிலைப்பாடு ஆகியவற்றின் காரணமாக இந்திய மத்திய அரசு கடந்த 1992 ல் 'புரோஜக்ட் எலிபண்ட்' என்ற திட்டததை அறிவித்தது.

இதன்படி யானை என்னும் பிரமிக்க தக்க விலங்கையும் அதன் வாழ்விடத்தையும் பாதுகாப்பது தான் குறிக்கோள். தற்போது இந்த திட்டம் 18 ஆண்டுகளை கடந்து போய்க் கொண்டிருக்கிறது. இருந்தாலும் இன்னும் ஆங்காங்கே யானைத்தாக்குதல் பற்றி கேள்விப்படத்தான் செய்கிறோம். யானைகள் என்னும் பெரிய விலங்குக்கும் மனிதனுக்கும் எந்த இடத்தில் முட்டல் மோதல் இருக்கிறது? இதற்கு காரணம் என்ன?

யானைகளின் உணவு,நீர்,வாழிடம் பறி போவதன் காரணமாக யானை கோபமுறுகிறது. தூண்டப்படுகிறது. காடுகளில் ஏற்படும் உணவுத்தட்டுப்பாடு யானைகளை பாதிக்கும் போது மனிதனின் வேளாண் நிலத்தை யானை தேடி வருகிறது. அதாவது அதன் வாழிடமான மலைக்காடுகளை அழித்து டீ எஸ்டேட்களை அமைத்து விட்டால் யானை உணவுக்கு எங்கே போகும். மனிதனின் டீத்தூள் பேராசைக்கு யானையை பட்டினி போட்டால் அது வேறு வழிக்கு இறங்குகிறது.இது தான் உண்மை.
யானையை ரோட்டில் பார்க்கும் போதும் சர்க்கஸில் பார்க்கும் போது அதன் தோற்றத்தை மட்டும் பார்த்து மகிழ்ந்து விட்டு அப்படி அதை மறந்து விடுகிறோம். அட்லீஸ்ட் விநாயக கடவுளின் உருவத்தை பார்க்கும் போது கூட யானையின் தோற்றம் கண்ணுக்குள் வந்து போவதில்லை. ஆனால் யானையில உடலமைப்பையும் வாழ்க்கை முறையை கொஞ்சம் தெரிந்து கொண்டு யானையை காக்க நம்மால் முடிந்ததை செய்வோம் என்பதற்கு தான் இந்த பதிவு.

உடலமைப்பு

யானைகளில் ஆசிய யானை,ஆப்பிரிக்க யானை என்று இரண்டு வகை உண்டு. இந்த இரண்டு யானைகளுக்கும் காதுகள்,கழுத்து மற்றும் நெற்றி போன்றவற்றில் சற்று வித்தியாசம் காணப்படும். யானைகளின் நிறம் கருப்பாக இருப்பதாக தெரிந்தாலும் உண்மையில் கருஞ்சாம்பல் நிறமுடையவை. இருந்தாலும் ஆசிய யானைகளுக்கு (தோலின் மேல் பகுதியில்) இளஞ்சிவப்பு நிறத்தில் அல்லது வெண்மையாக புள்ளிகள் காணப்படும். இது ஒரு வகை நிறமிழப்பு. இது நிறமிக் கோளாறு என்னும் சிறிய நோய்.
யானையின் தோல் 25 மி.மீ (ஒரு அங்குலம்) வரை தடிப்பானது. இருப்பினும் கூருணர்வு(sensitive) மிக்கது. ஈ,கொசு கடித்தால் கூட சட்டென்று உணர்ந்து கொள்ளும். இந்த சிறிய கொசு, எறும்பு,ஈக்களிடமிருந்த தப்பிக்க தான் இயற்கை யானைக்கு மடிப்பு,சொரசொரப்பு,தடிப்பு,தொய்வு,தளர்வு என்று வித்தியாசமான தோலை தந்துள்ளது.

இருந்தாலும் ரத்தம் உறிஞ்சும் சில உண்ணிகள்,பூச்சிகள் இந்த தோலின் இடுக்குகளில் புகுந்து கொள்ளும்.யானையின் தோல் மற்ற அடர்த்தியான தோல் கொண்ட காண்டாமிருகம்,நீர்யானை போன்ற விலங்குகளின் தோலை போல் காணப்பட்டாலும் அந்த விலங்குகளின் தோல் அளவுக்கு உறுதியானதல்ல. கெட்டித்தன்ை உடையதும் அல்ல. மென்மையானது. இதனால் தான் மனிதனை கடிக்கும் கொசுவும்,எறும்பும் யானைகளையும் எளிதாக கடித்து ரத்தத்தை உறிஞ்சுகின்றன.

பூச்சிகள் கடிக்கும் போது யானைகள் பொதுவாக ஒரு குச்சியையோ, சிறு மரக்கிளையையோ ஒடித்து அதனால் சொரிந்து கொள்ளும். அல்லது அரிக்குமிடத்தை ஒரு பாறையின் மீது அறக்கி தேய்த்துக் கொள்ளும். இந்த பழக்கம் மற்ற விலங்குகளை விட யானை அறிவுமிகுந்தது என்பதை காட்டுகிறது. வளர்ச்சியடைந்த யானைக்கு தலையின் உச்சி,வால் பகுதி தவிர்த்து வேறு எங்கும் உரோமங்கள் இருப்பதில்லை. இதை வளர்த்து வயது வந்த யானை என்பதை அடையாளம் கண்டு கொள்ளலாம்.
தனித்தன்மை வாய்ந்த யானையின் தந்தம் என்பது, யானையின் முன்வெட்டு பற்கள் தான். யானைத்தந்தங்கள் மூன்றில் இரண்டு பங்கு வெளியே தெரிகின்றன. ஒருபங்கு மண்டையோட்டின் உள்ளே பற்குழியினுள் பொருந்தியிருக்கும். ஆசிய யானைகளில் மரபணுக்குறைபாடு காரணமாக தந்தம் இல்லாத ஆண்யானைகள் பிறந்து வளர்வதுண்டு. இவற்றை 'மக்னா' அல்லது 'மோழை' என்று அழைப்பார்கள்.

ஆசிய யானைகளில் இந்திய ஆண் யானைக்கு மட்டுமே தந்தம் நீண்டு வளரும். பெண்ணுக்கு உதட்டினுள் அடங்கிய சிறு தந்தம் இருக்கும். இலங்யைில் காணப்படும் ஆண்யானைகளில் பெரும்பாலனவற்றுக்கு தந்தங்கள் இல்லை.
கொம்பு எனத் தவறாக கருதப்படும் இந்த தந்தம் தன் எதிரிகளுடன் போராடவும்,மற்ற ஆண்யானைகளுடன் சண்டையிடவும் ஒரு ஆயுதமாக இருக்கிறது. மற்றும் பெண் யானைகள், ஆணின் உடல் வலுவை கணிக்க ஒரு கவர்ச்சி உறுப்பாகவும் உள்ளன.

மேலும் உண்ணத்தக்க உவர் மண்ணை தோண்டி எடுக்கவும்,நீருக்காக ஊற்றுக்குழி பறிக்கவும்,மரங்களின் பட்டையை உரிக்கவும்,வேர்களை தோண்டி பிடுங்கவும் சிறு கிளையை முறிக்கவும் உதவுகிறது. தந்தங்கள் யானையின் ஆயுள் முழுக்க வளர்கின்றன.
யானையின் துதிக்கை தனிச்சிறப்பானது. இது நீண்டு வளர்ந்து விட்ட மேல்உதடும் மூக்கும் சேர்ந்த பகுதி தான் துதிக்கை. இது மீள்விசை கொண்ட தசைநார் வளையங்களால் ஆன சுருள்வில் தன்மையுடன், திறன் மிக்கவையாகவும் மூக்காகவும் இயங்குகிறது.

இதனால் இலைகள்,தண்ணீர்,புழுதி,புல், மண் போன்றவற்றை பறிக்கவும்,பிடுங்கவும்,வாரவும் எடுத்து உடலின் மீது போட்டுக்கொள்ளவும் முடிகிறது.நன்கு மோப்பம் பிடிக்கவும், கோபத்தை,மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும்,ஒரு ஊது கொம்பு போல 'வீர்' என்ற ஒலி எழுப்பவும் தும்பிக்கை பயனாகிறது.

யானையின் தும்பிக்கை 1,50,000 தனித்தனி தசை நார்,நரம்பு கொண்ட கட்டமைப்பினால் ஆனது. இதனால் ஒரு நாணயத்தை கூட எடுக்க முடியும்.ஒரு சிறிய புல்லை தனியாக பிடுங்க முடியும்.முட்செடி,கொடி,மரங்களின் பட்டையை உரிக்கும் போது அதன் சிலாக்குகள் எதுவும் கிழித்து காயப்படுத்ததவாறு லாவகமாக இயங்க முடியும்.யானையினங்கள் எல்லாம் இரு துவாரங்களையுடைய தமது தும்பிக்கையின் நுண்ணுர்வுமிக்க விரல் நுனியால் ஒரு இலை, தழை, பொருளை உண்ணத்தக்கதா, தகாததா என்று நன்றாக புரிந்து கொள்ளும்.

பெருந்தலையை திருப்பாமலேயே எல்லா திசைகளிலும் தும்பிக்கையை சுழற்றி தமது பகைவிலங்கு,மற்ற விலங்குகள் அல்லது நீர் இருக்கும் திசை ஆகியவற்றை 5 கி.மீ தூரத்தில் இருந்தால் கூட கண்டுபிடித்து விடும்.
தும்பிக்கை என்பது யானைக்கு உயிர்நாடி போன்றது. தும்பிக்கையில் காயம்பட்டலோ, துண்டிக்கப்பட்டாலோ யானை உயிர்வாழ்வது சிரமமாகிறது. யானைக்கு 26 பற்கள் வரை இருக்கும். சுவையுணர்வை பொறுத்த மட்டில் யானைக்கு இனிப்பு,கசப்பு எல்லாம் தெரியாது. அவற்றுக்கு சுவை நரம்பு இல்லை. மணம்,மென்மை,சாறு,அளவு,பசி என்ற அடிப்படையில தான் அவை உணவை உண்கின்றன.

இது போல் முன்னோக்கி பார்ப்பதை விட பக்கவாட்டு பார்வையை தான் யானை பெரிதும் நம்பி இருக்கிறது. ஒரு யானை தனது பார்வையை விட கூர்மையான கேட்பு சக்தியையும் நுட்பமான மோப்ப திறனையும் நம்பி வாழ்கிறது. காட்டு யானகைள் ஒரு நாளில் 18 மணி நேரத்தை உணவு தேடி தின்பதில் தான் செலவிடும். குட்டியானைகள் அதிகமாக உறங்குவதுண்டு. வளர்ந்த யானைகள் ஆழ்நத உறக்கம் கொள்வதில்லை.

வாழ்வியல்
யானைகள் புலிகளை போல் தனித்து வாழும் விலங்கல்ல.15,20 என கூட்டமாக வாழ்பவை.எந்த ஒரு யானை கூட்டத்திற்கும் ஒரு மூத்த பெண் யானையே தலைமை தாங்கி வழி நடத்தும். அந்த தலைவி,காட்டில் நிறைய உணவு கிடைக்குமிடங்கள்,பாதுகாப்பு கட்டுப்பாடு பற்றிய அறிவோடு விளங்கும்.எனவே அது தான் அக்கூட்டத்தின் முடிசூடா முதலமைச்சர்.

ஒருயானைக்கூட்டத்தில்,பாட்டி,பெரியம்மா,சித்தி,மாமா,சகோதர,சகோதரி,பேரன்,பேத்தி என அனைத்து உறவுகளும் இருக்கும். ஆண் யானைகள் கூட்டத்தில் 12 முதல் 15 வயது வரை சேர்ந்திருக்கும். பின்னர் அவை விலகிச் செல்கின்றன. அல்லது விலக்கப்படுகின்றன. இது போன்ற நிலைப்பாடுகள் நெருங்கிய உள்ளினப் பெருக்கம் (inbreeding) நடைபெறாமல் தடுக்கவே ஏற்பட்டுள்ளன எனலாம்.

ஒரு யானைக்கூட்டம் நிரந்தரமாக ஒரு இடத்தில் தங்கி வாழும் பண்புடையதல்ல. சுற்றித்திரியும் வாழ்க்கையை கொண்டது. தங்களுக்கென ஒரு மேய்ச்சல் பகுதியை தேர்வு செய்து கொண்டு அதைப்பயன்படுத்தும். இந்த மேய்ச்சல் பகுதி பல நூறு சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்டதாக இருக்கும். ஒரு இடத்தை அடையாளப்படுத்தி அதைக்கணக்கிட்டு காத்திருந்தால் ஆண்டுக்கு ஒரு முறையாவது அந்த பாதையில வந்து போவதை பார்க்கலாம். அவ்வாறு வந்து போகும் வேளையில் அவற்றின் மேய்ச்சல் பகுதிக்கு மனிதரால் இடையூறு வரும் போது,வேளாண் பயிர் மேய்தல் போன்ற நிகழ்வுகள் ஏற்படுகின்றன( அதாவது மனிதர்களின் தோட்டத்திற்குள் புகுந்து சாப்பிடுதல்). இதை தான் நாம் யானைகளின் அட்டகாசம்,நாசம்,படையெடுப்பு,துவம்சம்,கும்மாளம் என்கிறோம்.

யானைக்கூட்டத்திற்கு ஒரு பெண் யானை தான் தலைவியாக இருந்து வழிநடத்தினாலும் விதிகள்,கட்டுப்பாடு மற்றும் பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பதில் இளம் குட்டிகள் தவிர்த்து யானைகளுக்கும் பொறுப்புண்டு. தாய் யானைகள் மற்ற எல்லா குட்டிகளிடமும் அன்பு காட்டும். பாலும் தரும். இன்னும் ஆற்றை கடக்க உதவுதல்,இலைகளை பறித்து போடுதல்,ஊனுண்ணிகளிடமிருந்து தப்பித்தல் போன்ற எல்லாவற்றுக்கும் உதவும்.

ஒரு யானைக்கூட்டத்தில் இருக்கும் யானை மற்ற தனது கூட்ட யானையை அடையாளம் கண்டு கொள்ள அவற்றின் ஒலி,கழிவுப்பொருள்,உடலசைவு மொழி வழியாக தெரிந்து கொள்ளும். இதன் மூலம் அடையாளங்களை உணர்த்தி, உணர்ந்து,துல்லியமாக,முழுமையாக புரிந்து கொள்ளும். ஆனாலும் யானைகளின் வியப்புக்குரிய சங்கதியாக இருப்பது அதன் கேளா ஒலி உரையாடல்கள்.அதாவது யானைகள் தங்களுக்குள் இன்ப்ரா ரெட்(infra red) அதிர்வுகளால் ஆன ஒரு மொழியில் தொலைவிலுள்ள மற்றொரு யானைக்கூட்டத்துடன் தொடர்பு கொள்வதாக ஆய்வாளர்கள் கண்டறிந்தள்ளனர்.

நம்மைப் போலவே யானைகள் அதன் அளவுக்கு மேல் சிந்தித்தல், செயல்படுதல்,பிரச்சனையைசமாளித்தல்,புரிதல்,நினைவாற்றல்,வருந்துதல்,பிரிவு,மகிழ்ச்சி,ஏமாற்றம்,பரிவு,கோபம் என பல மனநிலையை பெற்றுள்ளன. ஆனால் மனிதருக்கு உள்ளதை போல்
 சுயநலம்,வஞ்சனை,பழிவாங்கல்,தாக்குதல்,கொள்ளை,கொலை,அட்டகாசம்,போக்கிரித்தனம் போன்ற எதுவும் இவைகளிடம் இல்லை.

மழை,குளிர்,பனியை பொருட்படுத்தாமல் ஏறக்குறைய 8000 அடி உயரம் உடைய மழைக்காடுகள் முதல் கடற்கரையோர காடுகள் வரை யானைகள் காணப்படுகின்றன. ஆனாலும் மலையடிவார சமவெளிக்காடுகள் தான் யானைகளுக்கு பிடித்தமானவை.கூட்டத்திலிருந்து விலகி வாழும் வயதான யானை தமது நீண்ட வாழ்நாளின் கடைசிக்காலத்தில் காட்டின் அமைதியான சூழலில் உணவும்,நீரும்,நிழலும் கிடைக்கும் செழிப்பான இடத்தில் ஒதுங்கி விடுகின்றன. பல் வளர்ச்சி முடிந்து,கடைசிப்பல்லும் தேய்ந்து விழுந்து விடும் போது, இளம்புல் மற்றும் இலைக்கொழுந்துகளை மட்டும் தின்று வாழும். அடிக்கடி கீழே படுத்துக் கொள்ளும்.மெல்ல மெல்ல எழுந்து நிற்க முடியாமல் அவதிப்படும். உணவு எடுத்துக் கொள்வது குறைந்து போய் கடைசியில் உடல் பலவீனப்பட்டு மெலிந்து போகும்.

அப்போது சுவாசம் குறையும். தும்பிக்கை நுனியை மட்டும் அசைக்கும்.மற்ற உறுப்புகளை அசைக்க முடியாதபடி சில நாட்கள் படுத்துக் கிடந்து கண்களில் ஒளி இழந்து இறுதியாக தனது நீண்ட கால மூச்சை நிறுத்திக் கொள்ளும்.
தமிழகத்தில் இந்த தும்பிக்கை நாயகன்கள் களக்காடு, முதுமலை,ஆனைமலை சரணாலயங்களில் தான் அதிகம் தப்பி பிழைத்திருக்கின்றன. யானை இருக்கும் இடங்கள் செழிப்பானதாக இருக்கும் என்பது இயற்கை உண்மை. யானை தனது சாணங்கள் மூலம் ஏராளமான தாவரங்களையும்,மரங்களின் விதைகளையும் காடு முழுவதும் பரப்பி காடுகளுக்கு உயிரூட்டுகின்றன. அதனால் காடுகளில் நூற்றுக்கணக்கான தாவர, விலங்குகளும் சிறப்பாக வாழ முடிகிறது. இவற்றில் பூச்சிகள்,தவளைகள்,பாம்புகள், ஆமைகள்,காட்டுப்பூணை,முயல்,முள்ளம் பன்றி,நீர்நாய் போன்ற சிறு விலங்குகளுடன் உயிரின அட்டவனையில் உச்சியில் உள்ள புலி,சிறுத்தை,கரடி,காட்டெருமை,மான்கள் ஆகியவற்றுக்கும் யானைகளலேயே வளம் பகிர்நது அளிக்கப்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன.


வெற்றியின் உருவம் விநாயகன்
பெருத்த உருவத்தை உடைய கடவுளான கணபதி சிறிய உருவமாகிய எலியின் மீது தான் அமர்ந்திருப்பது வழக்கம். இது ஏன் என்பது இன்னும் பலருக்கு புரியாத புதிர். இது ஏன் என்பதற்கு சில வரலாற்று குறிப்புகளிலிருந்து விடை காணலாம்.
குப்தர் காலமான கி.பி.6 ம் நூற்றாண்ட்டில் தான் விநாயகர் விநாயகர் தோற்றுவிக்கப்படுகிறார். கணபதி என்ற சொல்லின் பொருள் 'கணங்களின் கடவுள்' என்பதாகும். சில வேளைகளில் 'கணங்களின் தலைவன்' என்றும் பொருள் கொள்ளலாம். கணேசன் என்பதை கணா-ஈசன் எனலாம். அக்காலத்தில் "கணநாயகா" என்றே விநாயகனை குறித்தனர். ரிக் வேதத்தில் கணபதி என்ற ஒரு சொல் ஒரு படைத்தலைவனை குறிக்கிறது. மேலும் கணா என்ற வடமொழிச்சொல்லுக்கு தமிழில் குலம் என்று குறிப்பிடலாம்.
அந்த வழியே ஆதிமக்கள் சிலர் தங்கள் புராண விலங்குகள் தாவர,பறவை மூதாதையர்களிடமிருந்து உதித்ததாக நம்பினார்கள். இந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவானவையே யானைக்குலம்,எலிக்குலம் போன்றவை.இதற்கு பல எடுத்துக்காட்டுகளை வரலாற்றில் காணப்படுகின்றன.மாதங்கர் என்ற வடஇந்திய பழங்குடி மக்களின் குலக்குறி யானையாகும். (மாதங்கி என்றால் யானை).லலிதா விஸ்தரகா என்ற புத்த நூல், பசநாதி என்ற கோசல நாட்டு அரசனை யானை விந்திலிருந்து தோன்றியவனாக சொல்கிறது. கொங்கு வேளாளர்களிடம் மாதங்கம் என்ற உட்சாதி பிரிவு உள்ளது. நீலகிரியில்  குறும்பர் பழங்குடியின் குலங்களில்'யானைக்குலம்' என்று ஒன்று உள்ளது.
தென்னிந்தியாவில் மூசிகர் பிரிவு என்ற ஒன்று இருக்கிறது. மூசிகம் என்றால் சமஸ்கிருதத்தில் எலி. இந்திய ஆதிவாசிகள் பிரிவு சிலவற்றுக்கு எலி குலக்குறியாகும். கொங்கு வெள்ளாளர்களில் குண்டெலிக்கூட்டம் என்பது ஒரு பிரிவு. சுண்டெலி,வெள்ளெலி,முள்ளெலி,மூஞ்செலி என்ற எலி இனங்கள் போல முகட்டெலிக்கு குண்டெலி என்று பெயர். இந்த எலி வீட்டின் கூரையில் வாழும். இது வீட்டு பொருள்களை தின்று வாழ்வதால் நன்றாக கொழுத்திருக்கும்.
ஒரு குலத்தினர் மற்றொரு குலத்தினருடன் போரிட்டு வென்றால் தோற்றவரின் குலக்குறி அழிக்கப்படும். அல்லது அடிமைப்படுத்தப்படும். ஆக யானையைக் குலக்குறியாக கொண்ட பழங்குடி கூட்டம் எலியை குலக்குறியாக கொண்டிருந்த கூட்டத்தை போரிட்டு வென்று வெற்றியை நிலைநாட்டும் அடையாளமாக யானைக்கு வாகனமாக்கியுள்ளனர். ஆக,விநாயகர் என்பதை வெற்றி கொள்ளும் கூட்டத்தின் அடையாளமாக்கியுள்ளனர்.

ஆக..மனிதன் எப்படி ஒரு உறவு முறையாக வாழவேண்டும் என்பதை தனது வாழ்க்கை முறை மூலம் விளக்கும் யானையை நாமும் விநாயகன் போல் சற்று நேரம் சிந்தித்து அவை வாழ வழி தருவோம்.


திரு.முகமதுஅலி மற்றும் யோகனந்த் ஆகிய யானை பாதுகாப்பு ஆர்வலர்கள் எழுதிய 'அழியும் பேருயிர்:யானைகள்' என்ற நூலிலிருந்து

வெளியீடு: இயற்கை வரலாறு அறக்கட்டளை,ஆல்வா மருத்துவமனை,அம்பாராம் பாளையம்,பொள்ளாச்சி-642 103.போன் 98941 40750

7 கருத்துகள்: (+add yours?)

ராம்ஜி_யாஹூ சொன்னது…

thanks for sharing

ers சொன்னது…

உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
தமிழ்
ஆங்கிலம்

விஜய் சொன்னது…

மிக அருமையான வலைப்பதிவு

வாழ்த்துக்கள்

இங்கேயும் பாருங்கள்

agasool.blogspot.com

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

இந்த உன்னத உயிரை ஏன் கோவில்களில் சங்கிலியால் கட்டி பொங்கல் கொடுக்கிறார்கள்.
இதைத் தடை செய்யுங்கள்

இராஜராஜேஸ்வரி சொன்னது…

very nice post.thanks for sharing

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் கிருபையால், தங்களைப்பற்றி, நான் இன்று அறிய முடிந்தது.

யானைகளை தரிஸிக்க முடிந்தது.

அந்தக் குட்டியூண்டு யானை எவ்வளவு அழகாக உள்ளது!

தங்கள் பதிவின் மூலம் யானைகள் பற்றிய நிறைய விஷயங்களும் அறிய முடிந்தது. மிக்க நன்றி.

வலைச்சரத்தில் அறிமுகம் ஆனதற்கு என் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_23.html

தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். கருத்துரைகளை அறியப்படுத்தவும். நன்றி.

காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today