நைட்ரஜன் நிரப்பி இழப்பை குறைப்போம்

8 கருத்துகள்

 

னிதனின் கண்டுபிடிப்புகளில் முக்கியமான ஒன்று சக்கரம். இது கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் தான் மனிதன் கால்நடையிலிருந்து வாகனத்திற்கு தாவினான். இன்றைக்கு இருக்கும் சாதாரண பைக்குகள்,கார்கள் முதல் ரோடு ரெயில்கள் என்று சொல்லப்படும் 30 க்கும் மேற்பட்ட சக்கரங்களை கொண்ட பிரமாண்டமான சுமை இழுக்கும் லாரிகள் வரை ரப்பர் கொண்டு உருவாக்கப்பட்ட டயர்கள் தான் வாகனத்தை பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓட வைக்கின்றன. இந்த டயர்களின் உள்புறத்தில் காற்று அடைக்கப்பட்ட டியூப்கள் இருக்கின்றன. என்ன தான் ட்யூப்லெஸ் டயர்கள் வந்து விட்டாலும் கூட இன்றும் சொகுசான பயணத்திற்கு ட்யூப் பொருத்தப்பட்ட டயர்கள் தான் பொருத்தமானதாக கருதப்படுகின்றன.

இந்த ட்யூப்களில் வழக்கமாக சாதாரண காற்று தான் அடைக்கப்படுகிறது. கம்ப்ரசர்களின் மூலம் சுற்றுப்புற காற்று பிடிக்கப்பட்டு டயர்களில் நிரப்பப்படுகிறது. பல லட்சங்கள் கொடுத்து கார்கள் வாங்கினாலும் பத்து ரூபாய்க்கு காற்று நிரப்பாவிட்டால் கார் இம்மியளவு கூட நகராது. ஆனால் இப்படி நிரப்பப்படும் சாதாரண காற்றை வாகனங்களுக்கு பயன்படுத்துவது பொருத்தமானது தானா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. காரணம், இந்த சாதாரண காற்று (ஆக்சிஜன்) வாகனங்கள் இயங்கும் போது, ஓடும் போது கடுமையாக சூடாகி விடுகின்றன. இப்படி வெப்பமடையும் போது இந்த காற்று டயர்களில் உள்ள நுண்துளைகளில் வழியே மிகமிக மெதுவாக வெளியேறிக் கொண்டே இருக்கிறது.

வாகனத்தை நாம் புதிதாக வாங்கும் போதே டயர்களின் ஏர் பிரஷர் எவ்வளவு இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் நாம் என்ன தான் அவர்கள் சொல்லிய அளவில் காற்றை நிரப்பி வைத்தாலும், மேலே சொன்ன காரணப்படி டயரிலிருந்து காற்று வெளியேறி விடுவதால் வாகனத்தின் தயாரிப்பாளர்கள் சொன்ன 'ஏர் பிரஷர்' எப்போதும் டயர்களில் இருப்பதில்லை. வாகனத்தயரிப்பாளர் கூறிய படி போதிய காற்று டயர்களில் இருக்கும் பட்சத்தில் தான் வாகனம் எந்த பிரச்சனையும் இல்லாமல் பனிச்சறுக்கில் சறுக்குவது போல் எளிதாக ஓடும். பஞ்சர் ஆன வாகனத்தை சிறிது தூரம் கூட நகர்த்த முடியாது. அதாவது ட்யூப்பில் முழுமையாக காற்று இல்லாத பட்சத்தில் வாகனம் இம்மி கூட நகருவதில்லை.

அது போல் வாகனத்தயாரிப்பாளர் சொல்லியபடி காற்று இல்லாமல் குறைவாக இருக்கும் நிலையில் வாகனத்தின் இயங்கு நிலை எங்கோ ஒரு இடத்தில் குறைந்து போகின்றது என்று தானே அர்த்தம்.
ட்யூபில் மிகமிக குறைந்த அளவு காற்று குறைபாடு ஏற்படும் போது இந்த இயங்கு குறைபாடு நமக்கு பெரிதாக தெரிவதில்லை. ஆனால் ஆணித்தரமாக சொல்லப் போனால் இந்த காற்று குறைபாடு வாகனத்தின் ஏதோ ஒரு உந்துசக்தியை எங்கிருந்தோ குறைக்கிறது என்று தான் பொருள். இப்படி கூடுதலாக தேவைப்படும் உந்து சக்தியை பெற, வாகனத்தின் எரிபொருள் அதிகமாக செலவழிக்கப்படுகிறது. இதனால் எரிபொருள் நமக்கே தெரியாமல் வீணாக செலவழிக்கப்படுகிறது. இப்படி காற்று குறைவான டயரால் இது மட்டுமா பாதிப்பு?

டயரின் பட்டன் வேகமாக தேய்கிறது. காற்று குறைவான டயர்களால் வாகனம் நமது கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. அதிகமான இழுவைத்திறன் என்ஜினுக்கு போகும் போது என்ஜினின் ஆயுள்காலமும் குறைகிறது. மேலும் இதனுடன் தொடர்புடைய பல்வேறு உதிரிபாகங்களும் தேய்வடைந்து விரைவில் பழுதாகிவிடுகின்றன.

பொதுவாக வண்டி ஓடும் போது டயர்கள் படுபயங்கர வெப்பமடையும். இந்த வெப்பம் ட்யூப்களில் நிரப்பப்பட்டிருக்கும் காற்றில் உள்ள காற்று அணுக்களில் ஒரு ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தும். டயரின் வெப்பம் டயரை தாண்டி ட்யூயை நெருங்கும் போது ட்யூப்பில் இருக்கும் காற்று அணுக்கள் வெப்பத்தால் விரிவடைகின்றன.இதனால் மேலும் அந்த அணுக்கள் சூடாகிவிடுகின்றன. நீண்ட தூரம் ஓட்டி வந்து நிறுத்தப்பட்ட காரின் டயர்களை தொட்டு பார்க்கவே முடியாது. அந்த அளவு சூடாக இருக்கும்.இதற்கு காரணம் காற்று அணுக்கள் சூடாகி இருப்பது தான்.

இப்படி அணுக்கள் சூடாகி விரிவடையும் போது ஒரு கட்டத்திற்கு மேல் இவை விரிவடைய முடியாமல் வெடித்து சிதறுகின்றன. அதாவது ட்யூப் காற்றின் அழுத்தத்தை தாங்க முடியாமல் வெடித்து விடுகிறது. ஆளில்லாத இடங்களில் இப்படி நடந்தால் நமது பயணம் குலைந்து எரிச்சலை ஏற்படுத்தி விடும். டயர் பஞ்சர் பார்க்கும் நபர்களை அழைத்து வந்து சரி செய்வதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும்.

ஆக...இந்த பிரச்சனைகள் எல்லாம் நமது வாகனத்திற்கு வராமல் இருக்க வேண்டும் என்றால், வாகனத்தின் டயர்களில் நிரப்பப்படும் காற்று எளிதாக வெப்பத்தினால் ரசாயன மாற்றத்திற்கு உள்ளாகாத ஒன்றாக இருக்க வேண்டும். அப்படி நிரப்பப்படும் காற்றின் அணுக்கள் டயரில் ஏற்படும் வெப்பத்தை ஈர்த்து சூடடையக் கூடாது. எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வேண்டும். இது தான் தீர்வு.

இப்படி ஒரு காற்று தான் தற்போது வாகனங்களுக்கு நிரப்பப்பட்டு வருகிறது. சென்னை, மும்பை,பெங்களுரு உள்ளிட்ட நகரங்களில் இந்த காற்று பரவலாக நிரப்பப்படுகிறது. ஆனால் இந்தியாவின் மற்ற நகரங்களில் இது பற்றி அவ்வளவாக தெரியவில்லை. 'நைட்ரஜன் ஏர்' என்று கூறப்படும் இந்த காற்றின் அனுகூலங்களை பார்க்கலாம். நைட்ரஜனின் இயல்பு குளிர்ச்சியாக இருப்பது. இது எங்கு இருக்கிறதோ அந்த இடத்தை குளிர்ச்சியாக வைத்திருக்கும். இதை வைத்து கீழே உள்ள பயன்களை படியுங்கள்.
 1. சாதாரணமாக ட்யூப்பில் அடைக்கப்படும் பிராணவாயுவான காற்று ட்யூப்பிலிருந்து நுண்துளை வழியாக கசிந்து கணக்கிட இயலாத வகையில் மிகமிக நுண்ணிய அளவில் வெளியேறிக் கொண்டே இருக்கும். காரணம் இந்த பிராணவாயுவான ஆக்சிஜன் அணுவானது மிக மிக சிறிய அணுவால் ஆனது. அதனால் ட்யூபின் நுண்ணிய துளை வழியே வெளியேறும் தன்மை கொண்டது. ஆனால் நைட்ரஜன் அணுக்களுக்கு இந்த தன்மை கிடையாது. காரணம், நைட்ரஜன் அணு அளவில் பெரியது. அதனால் நைட்ரஜன் ட்யூப்பிலிருந்து கசிந்து வெளியேறுவதில்லை. இதனால் ட்யூபில் ஒரு முறை நிரப்பப்பட்ட காற்று பல மாதங்களுக்கு அப்படியே சீரான அளவில் ட்யூபில் இருந்து கொண்டே இருக்கும்.
 2. நைட்ரஜன் அணுவானது சுற்றுப்புற வெப்பத்தை ஈர்த்துக் கொள்வதில்லை. இந்த தன்மையால், ட்யூப்பில் நிரப்பப்படும் நைட்ரஜன் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். இதனால் டயர்கள் வெப்பமடையாது. வெப்பமடையாத காரணத்தால் டயர்கள் தேய்வதில்லை. இதனால் தேவையில்லாமல் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே டயர்,ட்யூப்களை மாற்ற வேண்டிய அவசியம் வராது. டயர்,ட்யூப் மற்றும் என்ஜனின் ஆயுள்காலம் அதிகரிக்கும்.
 3. சாதாரண காற்றில் எப்போதும் கண்ணுக்கு தெரியாத அளவிலும் உணரமுடியாத வகையிலும் சற்று ஈரப்பதம் இருக்கும். இந்த ஈரப்பதமானது டயரின் ஓரத்தில், அதாவது டயரின் ஓரங்களை இணைத்திருக்கும் ஒரு வட்ட வடிவமான இரும்புக்கம்பியை மெல்ல மெல்ல அரித்து விடும். ஆனால் நைட்ரஜன் காற்றில் ஈரப்பதம் கிடையாது. இதனால் டயரின் இணைப்பான கம்பி வளையம் எந்த சேதமும் அடையாமல் டயரை பாதுகாக்கும்.
 4. நைட்ரஜன் ட்யூப்பை விட்டு வெளியேறாத காரணத்தால் வாகனம் எப்போதும் துல்லியமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டில் இருக்கும். இதனால் மைலேஜீம் நன்றாக கிடைக்கும். என்ஜின் சுமை இல்லாமல் இயல்பான திறனுடன் இயங்கும்.
 5. நல்ல வேகத்தில் சாதாரண காற்று நிரப்பப்பட்ட டயர் வெடிக்கும் போது, வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி தறி கெட்டு ஓடி எங்காவது முட்டிக் கொண்டு நிற்கும். அதாவது சாதாரண பிராணவாயுவின் அணுக்கள் மிகுந்த சூட்டை அடைந்திருக்கும் நிலையில் அது வெடிக்கும் போது பலத்த வீரியத்துடன் நாலாபக்கத்திலும் சிதறும். ஆனால் நைட்ரஜன் வாயுவுக்கு அந்த அளவு அழுத்தம் இல்லை. ஏதோ ஒரு காரணத்தால் ட்யூப் வெடித்தால் கூட வாகனம் தறிகெட்டு ஓடாது. அங்கேயே நின்று விடும்.
 6. சாதாரண காற்று நிரப்பட்ட வாகனத்தை ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு ஓட்டும் போது வண்டியின் டயர்கள் படுபயங்கரமான சூட்டை அடையும்.சென்னையிலிருந்து மதுரைக்கு கிளம்பி செல்லும் போது எங்காவது ஒரு இடத்தில் சாப்பிட நிறுத்துவார்கள். நீங்கள் அந்த பஸ்ஸின் டயரை தொட்டுப்பாருங்கள். இரும்பு உலையில் கைவத்தது போல் இருக்கும்.
 7. ஆனால் நைட்ரஜன் நிரப்பப்பட்ட வாகனத்தில் டயர்கள் எவ்வளவு தூரம் ஓடினாலும் பெரிய அளவு சூடு இருக்காது.
நைட்ரஜன் வாயுவால் என்ன வகையான சேமிப்பு கிடைக்கும் என்று ஒரு கணக்கீடு செய்துள்ளார்கள். இதோ....
 • நைட்ரஜன் வாயு நிரப்பப்பட்ட வாகனம் சாதாரண ஆக்சிஜன் வாயு நிரப்பபட்ட டயர் உடைய வாகனத்துடன் ஒப்பிடும் போது அவ்வளவு எளிதாக பஞ்சர் ஆவதில்லை. அதாவது நைட்ரஜன் வாயு நிரப்பப்படும் போது வாகனம் பஞ்சர் ஆவதற்கான வாய்ப்பு 50 சதவீதம் குறைந்து விடுகிறது.
 • நைட்ரஜன் வாயு நிரப்பப்பட்ட வாகனத்தில் 5 முதல் 6 சதவீதம் எரிபொருள் சேமிப்பு கிடைக்கிறது.
 • ஆக....இந்தியாவில் ஓடும் அரசு மற்றும் தனியார் வாகனங்கள் அனைத்திலும் நைட்ரஜன் காற்றை நிரப்பி தான் ஓட்ட வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தால் டயர்,ட்யூப் மற்றும் இயந்திர உதிரிபாகங்களின் அனாவசியமான தேய்மானம் குறைந்து இயற்கையை பாதுகாக்கலாம். டயர்கள், ட்யூப்களுக்காக அதிக அளவு ரப்பர் இறக்குமதி செய்யப்படுவது குறைக்கப்படும். எரிபொருள் வீணாக செலவாகாது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
 • இதில் ஒன்றை மட்டும் உறுதியாக சொல்ல முடியும்.
இந்தியா முழுவதும் ஓடும் வாகனங்களில் சரியான அளவில் டயர்களில் காற்று நிரப்பப்படாமல் ஓட்டப்படுவதால், நாளொன்றுக்கு நாட்டில் ஓடும் வாகனங்களால் 2 லட்சம் லிட்டர் அளவுக்கு எரிபொருள்களான டீசல், பெட்ரோல் வீணாகிறதாம். 1 லிட்டர் பெட்ரோல், டீசல் விலையை வைத்து கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இந்த அளவு இழப்பு சாதாரண காற்றை வாகனத்தில் சரியான அளவில் வைக்காததால் ஏற்படுகிறது. இது எவ்வளவு பெரிய இழப்பு?
   இன்றே உங்கள் வாகனத்திற்கு நைட்ரஜன் நிரப்பி இழப்பை குறைப்போம்.இயற்கையை காப்பாற்றுவோம். கூடவே நமது வாகனத்தையும் நம்மையும்!

   சுற்றுச்சூழல் சீரழிவால் ஏழைகளை கொல்லும் ஒரு பயங்கர நோய்-தேவை மனித நேயம்

   0 கருத்துகள்

   வாழும் போதே சாவது...என்பார்களே அதை அனுபவித்து பார்ப்பது அரிது.ஆனால் யானைக்கால் நோயாளிகளை கேட்டால் அதன் வேதனை தெரியும். எய்ட்ஸ்,தொழுநோய், சிக்குன்குனியா,டெங்கு போன்ற நோய்களின் மீது அரசாங்கம் காட்டிய அக்கறையை இந்த யானைக்கால் நோய் மீது காட்டவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

   தமிழ்நாட்டில் மெல்லமெல்ல பரவி வருகிறது யானைக்கால் நோய்.மக்களிடம் இந்த நோயின் தாக்கம் மிக மெதுவாக இருப்பதால் என்னவோ,அரசும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை யானைக்கால் நோயாளிகள் இருக்கிறார்கள் என்ற விவரம் அரசிடம் சரியான புள்ளிவிவரங்களுடன் இல்லை என்பதே உண்மை.

   மருத்துவ உலகம் மிக வேகமாக நவீனப்பட்டுக் கொண்டிருந்தாலும் யானைக்கால் நோய்க்கு என்று ஸ்பெசாலிட்டி டாக்டர்கள் இல்லை என்பதும் ஒரு துரதிர்ஷ்டம். இதனால் என்னவோ இந்த நோயை பற்றி பெரிதாக ஆய்வுகளும் இல்லை என்றே கூற வேண்டும். மனிதனை  கொல்லும் இந்த நோய்க்கு காரணம், சாதாரண கொசு என்பது ஆச்சரிமில்லை.
   கொசுவால் தான் உலகின் பல இடங்களில் விதவிதமான பெயர்களில் தொற்று நோய் பரவி மரணங்கள் சம்பவித்திருக்கின்றன. ஆனால் வழக்கம் போல சே...இது சாதாரண கொசு என்று விட்டு விடுகிறோம்.
    யானைக்கால் நோயின் தீவிரம் மெல்ல உயருகிறது என்பதை காட்ட இந்த பதிவு ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்.

   கால்களில் கரடுமுரடான பார்க்கவே முகம் சுளிக்க வைக்கும் மிகப்பெரிய வீக்கம், அந்த வீக்கத்திலிருந்து வடியும் நீர்,அதிலிருந்து கிளம்பும் துர்நாற்றம் உடலை விட பெரியதாக இருக்கும் காலை தூக்கி வைத்து நடக்கவே சிரமம். இது தான் ஒரு யானைக்கால் நோயாளியின் தோற்றம். அங்கொன்றும் இங்கொன்றுமாக இவர்களை காணலாம். இப்படி தோற்றத்தில் இருப்பவர்களை கண்டால் அறுவருப்புடன் விலகி நடந்து செல்வோம். இவர் யானைக்கால் நோயால் அவதிப்படும்  நோயாளி.

   இந்த நோய் இனி எப்படி வருகிறது என்று பார்க்கலாம். இந்த நோய்க்கு காரணம் wucheria bancrofti என்ற கிருமி தான். இது தவிர brugia malayi, brugia timori என்ற உருண்டைப் புழுக்களும் இந்த நோயை பரப்புகின்றன. இந்த கிருமிகளை பரப்புவது கியூலக்ஸ் மற்றும் மன்சானியா என்ற கொசுக்கள் .
   இந்த  கொசுக்கள் ஒரு மனிதனை கடிக்கும் போது அதன் முட்டைகள் மனித உடலுக்குள் புகுந்து விடுகிறது. புழுப்பருவத்தில் உள்ள அவை மனிதனின் நிணநீர் குழாய்களுக்குள் சென்று உட்கார்ந்து கொள்கின்றன. மனிதனின் இயங்கு மண்டலத்தை இந்த நிணநீர்கள் தான் கட்டுப்படுத்துகின்றன.
   ஒரு பால்பாயிண்ட் பேனாவின் ரீபிளின் அளவுக்கும் குறைவாக உள்ள இந்த நிணநீர் குழாய்களில் வாழும் புழுக்கள்,  ஒரு கட்டத்தில்  அளவில் பெரிதாக மாறி விடுகின்றன. இவை மேலும் பல குஞ்சுப்புழுக்களை உற்பத்தி செய்கின்றன. இந்த குஞ்சு புழுக்களும் வளர்ந்து பெருகுகின்றன. இப்படி மனித உடலுக்குள் வளரும் புழுக்களால், ஒரு கட்டத்தில் மனிதனின் நிணநீர் குழாய்கள் அடைபட்டு போகின்றன.

   மனிதனின் இயங்கு மண்டலத்தை கட்டுப்படுத்தும் நிணநீர் மனித உடலில் தங்கு தடையின்றி போய்வர வழியில்லாத காரணத்தால் ஒரு இடத்தில் அடைபடுகிறது. குறிப்பாக கால் பகுதியில் தான் இதன் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் காலில் ஏற்படும் அடைப்பால் கால் வீங்கி, அழுக தொடங்குகிறது. ஒரு கட்டத்தில் காலில் வெடிப்பு ஏற்பட்டு துர்நாற்றத்ததுடன் கூடிய நீர் வடிய தொடங்குகிறது. இந்த நாற்றம் சகிக்க முடியாதது. இதனால் யானைக்கால் நோயாளிகள் எங்கும் நடக்கமுடியாமல் முடங்கி போகிறார்கள். நோய் பரவி விடும் என்ற பயத்தால், இவர்களை யாரும் அருகில் நெருங்கி பார்க்க கூட பயப்படுவதுண்டு.

   இந்த யானைக்கால் நோயின் பாதிப்பு மருத்துவ உலகத்தால் 4 கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாவது கட்டத்தில் யானைக்கால் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் இரவில் தூங்கும் போது கால்களில் வீக்கம் ஏற்படும். காலையில் எழுந்தவுடன் இந்த வீக்கம் குறைந்து கால்கள் சாதாரண நிலைக்கு வந்துவிடும்.

   3 வது நிலையில் இரவில் கால்களில் ஏற்படும் வீக்கம் பகலிலும் இருக்கும்.வீக்கம் வடியாது. 4 வது கட்டத்தில் கால்களில் ஏற்படும் வீக்கம் மேலும் மேலும் பெரிதாக மாறி கால்களில் மொறம் போன்ற வறண்ட மடிப்புகள் காணப்படும். இந்த மடிப்புகளில் வெடிப்பு விழுந்து நீர் வடியும். புண்ணாக மாறும். இந்த நிலையில் இதிலிருந்து வீசும் துர்நாற்றம் சகிக்க முடியததாக இருக்கும். இந்த நிலைக்கு முன்னதாகவே இந்த நோயாளிகளை இவர்களது உறவினர்கள் வீடுகளை விட்டு வெளியேற்றி விடுகின்றனர். அது தான் பரிதாபம்

   இதில் உள்ள விசித்திரம் என்னவென்றால், இந்த கியூலக்ஸ் கொசு கடித்த 8 ஆண்டுகள் கழித்து தான் யானைக்கால் நோயின் தாக்கம் அறிகுறியாக வெளியில் தெரியவருகிறது என்பது தான். அதற்குள் காலம் கடந்துவிட்டிருக்கிறது. அதாவது நோய்க்கிருமிகள் மனிதனின் உடலில் ஆழமாக வேரூன்றி விடுகின்றன. ஆனாலும் மனித குலம் இதற்கு மிரளுவதில்லை. யானைக்கால் நோயின் முதல் இரண்டு கட்டங்கள் அறிகுறிகள் இருக்கும் வரை தெளிவாக அடையாளக்குறிகளை கண்டுபிடித்து விட்டால் இந்த நோயானது மூன்றாம் மற்றும் நான்காம் கட்டங்களுக்கு போகாமல் கட்டுப்படுத்திவிடலாம். ஆனால் யானைக்கால் நோய்க்கான அடையாளத்தை விட்டு விட்டு வேறு ஒரு நோய்க்கான அறிகுறி என்று நினைத்து தவறுதலாக வைத்தியம் செய்து வந்தால், இந்த நோயானது மெல்ல மெல்ல மேலும் தீவிரமாவி விடும்.

   ஆனால் எதார்த்தில் அது தான் நடந்து விடுகிறது. இந்த யானைக்கால் நோய் பற்றி சிகிச்சை அளிக்க இன்றைய மருத்துவ உலகில் ஸ்பெசாலிட்டி டாக்டர்கள் குறைவு என்று ஏற்கனவே சொன்னேன். இநத நோய் பாதிக்கப்பட்ட பலரும் பொதுவான மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு போகிறார்கள்.

   குறிப்பாக யானைக்கால் நோயின் முதல் இரண்டாம் அறிகுறிகளில் இடுப்பும், காலும் சேரும் இடத்தில் நெறி கட்டிய வலி மற்றும் ஓதம் இறங்குதல் போன்ற அறிகுறிகள் இருக்கும். இந்த அறிகுறிகளை சரியாக கவனியாமல் விட்டு வலி மாத்திரைகளையும், ஒதத்திற்கான அறுவை சிகிச்சையையும் செய்து விட்டுவிடுவார்கள். ஆனால் இதற்கடுத்து கால்கள் இன்னும் பயங்கரமாக வீங்கிவிடும். அப்போது தான் தெரியும் இது யானைக்கால் நோய் என்று.

   ஆனால் ஒரு துரதிர்ஷ்டம்...இன்று வரை மருத்துவ உலகில் இப்படி வீங்கி நாறி அழுகும் நிலையில் உள்ள யானைக்காலை குணப்படுத்த சரியான வைத்திய முறைகள் இல்லாமல் இருந்தது தான். கடைசி கட்டத்தில் நோயாளியின் உயிரை பணயம் வைத்து பாதிக்கப்பட்ட காலை முழுவதுமாக உடலிலிருந்து வெட்டி எடுப்பார்கள். இது தான் முடிவாக இருந்து வந்தது. ஆனால் உலகத்திலேயே முதன் முறையாக மதுரையை சேர்ந்த டாக்டர்.கார்த்திக் இதற்கென்று நவீன அறுவை சிகிச்சையை கண்டறிந்து அதை ஏழைகளுக்கு இலவசமாகவும் செய்து வருகிறார். தானமும்,தர்மத்திற்கும் கூட ஒரு எல்லை உண்டு தானே...தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் இவரை தேடி பல யானைக்கால் நோயாளிகள் வந்த வண்ணமிருக்கிறார்கள். அனைவரும் நடுத்தர அல்லது மிகவும் ஏழைக்குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

   இவர்களுக்கு உணவளித்தும்,அறுவை சிகிச்சையின் போது மயக்கவியல் நிபுணர்,எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர்,தொற்றுநோய் மருத்துவநிபுணர்,பிளாஸ்டிக் சர்ஜன்,பொதுமருத்துவநிபுணர் உள்பட 8 டாக்டர்களின் துணை கொண்டு அறுவை சிகிச்சை மூலம் யானைக்கால் நோயாளியின் மித மிஞ்சிய கால் சதைக்கோளம் அகற்றப்படுகிறது.
   சாதாரணமாக மற்ற மருத்துவர்கள் யானைக்கால் நோயாளியின் காலில் வளர்ந்திருக்கும் அதிக சதைப்பகுதியை மட்டும் தான் அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவார்கள், ஆனால் இங்கு இந்த நோய்க்கு காரணமாக உடலில் புகுந்திருக்கும் புழுவை தேடி அப்புறப்படுத்தி அதன் குஞ்சுகள் எங்கும் இருக்கின்றனவா என்று அலசி பார்த்து அவற்றையும் ஒழித்து கட்டிய பிறகு தான் அறுவை சிகிச்சைக்கு போகிறார்கள்.

   இப்படி யானைக்கால் நோயாளிகளின் வேதனை தீர்க்கப்படுகிறது. காலம்காலமாக தங்களது கால்களையே தூக்கி சுமக்க முடியாமல் வேதனைப்பட்டு வந்த நோயாளிகள் அறுவை சிகிச்சைக்கு பிறகு புதிய சொர்க்கத்தை கண்டது போல உணர்வதுண்டு. காரணம் உயிருள்ள போதே தங்களை மற்றவர்ள் புறக்கணிப்பதும்,தங்கள் கால்கள் மூலமாக இருந்து வந்த வேதனையும் தான்.

   ஆனால் இப்படி உலகில் முதன்முறையாக நவீன அறுவை சிகிச்சை மூலம் யானைக்கால் நோயாளிகளை குணப்படுத்த டாக்டர்.கார்த்திக் போன்றவர்கள் முன்வந்தாலும் ஒரளவுக்கு மேல் சிகிச்சைக்கான செலவுகளை அவரால் மட்டும் ஏற்றுக்கொண்டு தொடர்நது சேவை செய்வது கடினம்.நாம் டாக்டரை சந்திக்க போயிருந்த நேரத்தில் இரண்டு பச்சிளம் குழந்தைகளுக்கு 34 வயதே ஆன தாயான சாந்தி என்பவர் கடுமையான யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டு வந்திருந்தார்.

   சாதாரண கட்டிட தொழிலாளியான தனது கணவரின் வருமானம் போதாதால், தனக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய கேட்டு டாக்டர்.கார்த்திக்கை சந்திக்க வந்திருந்தார். லயன்ஸ் கிளப்,ரோட்டரி கிளப் உள்ளிட்டவர்களிடம் முயற்சி செய்து பார்க்கிறேன் என்று அந்த நோயாளி சாந்தியிடம் டாக்டர் சொல்லிக் கொண்டிருந்தார். நமக்கு கண்களில் ஈரம். யானைக்கால் நோயாளியான தன்னிடமிருந்து தனது பச்சிளம் குழந்தைகளுக்கு ஏதாவது ஆகி விடக்கூடாது என்று ஒரு உறவுக்கார பெண்ணிடம் தனது குழந்தைகளை கெஞ்சி கேட்டு தூக்கி கொள்ளுமாறு கேட்டு மருத்துவமனைக்கு வந்திருந்தார்.

   யார் யாரோ செய்த குற்றத்தினால் மாசுபட்டு போன சுற்றுபுற சூழலால் உருவான கொசுக்களின் கடிக்கு பலியாகி இருக்கும் அப்பாவியான சாந்தி போன்றவர்களுக்கு உதவ மனமிருந்தால்............டாக்டர்.கார்த்திக் எம்.டி.,எம்.ஆர்.சி.எஸ்., அவர்களை 97900 06545 என்ற எண்ணிலும் www.gurumithrren.org தளத்திலும் தொடர்பு கொள்ளலாம்.

   டாக்டர்.கார்த்திக் தஞ்சாவூர் மருத்துவகல்லூரியின் முதல் அறுவைசிகிச்சை நிபுணரான டாக்டர். சிவராமன் அவர்களின் பேரனும், சென்னை மருத்துவக்கல்லூரியின் தங்க பதக்கம் வென்ற டாக்டர். சிவசுப்ரமணியத்தின் மகனும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

   காப்போம் வாருங்கள்

   Be part of the solution Support WWF-India today