உங்களது ரத்த வகை எது? அதற்கேற்ற உணவு எது?

4 கருத்துகள்

ந்த பதிவின் நோக்கம், சைவ உணவின் முக்கியத்துவம் குறித்து தான். உலகம் முழுவதிலும் அசைவ உணவுக்கு மாற்றான இயக்கங்கள் எழுந்து வருகின்றன. காரணம்,மனித பரிணாம வளர்ச்சியில் அவனது இயற்கை உணவு என்பது தாவரங்கள் மட்டுமே. இறைச்சி என்பது விலங்கு உலகத்திற்கு படைக்கப்பட்டது. இதில் எது சரி. எது தவறு என்பது குறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன. அது ஒரு பக்கம் இருக்கட்டும். சைவ உணவு மட்டுமே மனிதனுக்கு பொருந்திய உணவு என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

காய்கறிகள் என்ற மரக்கறிகள் எளிதில் செரிக்க கூடியது. மனித உடலின் இயங்கு மண்டலத்திற்கு தேவையான சக்திகள் அனைத்தும் சைவ உணவில் அதிகமாகவே இருக்கின்றன. இவை மட்டுமே மனித உடலின் செரிமான மண்டலத்திற்கு பொருந்தி போக கூடியவையும் கூட. இருந்தாலும் சில நேரங்களில் மாமிச உணவும் பொருந்தி தான் போகிறது. ஆனால் அளவோடு உண்டால் அது மருந்தாக அமைகிறது.

 சரி, எந்த இரத்த வகையினருக்கு எந்த மாதிரியான உணவு முறை பொருந்து என்று பார்க்கலாம். அதாவது, இரத்தத்தின் வகை என்பது கார, அமில நிலைப்பாடுகளை பொருத்து அமைகிறது. செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் உள்ள ஆண் தான் பொருத்தமாக இருக்கும் என்பார்களே..அது ஏன்? இரத்தத்தின் தன்மையை வைத்துதான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை.

ஆக..இரத்தத்தின் தன்மைக்கு ஏற்றபடி அமில, காரத்தன்மையுள்ள உணவு வகைகளை உண்டால் அது நமது செயல் திறனை அதிகரிக்கும். ஆரோக்கியமான உடலை தரும். இந்த பதிவில் எந்த இரத்த வகை கொண்டவர்களுக்கு என்ன மாதிரியான உணவுகள் பொருந்தும் என்று பார்க்கலாம்.

'ஏ' பிரிவு இரத்த வகை
இவர்களுக்கு சைவ உணவு மட்டுமே பொருத்தமானது. புத்தம் புதிய காய்கறிகள்,கீரை வகைகளை இவர்கள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பீன்ஸ் மற்றும் பயறுவகைகளில் அதிகமான புரதச்சத்து உள்ளது. அவை இவர்களுக்கு இதய நோய்கள், புற்றுநோய்,நீரிழிவு போன்றவை ஏற்படுவதை ஓரளவு தடுக்கும். 'ஏ' இரத்த பிரிவு கொண்டவர்களுக்கு மேற்கண்ட நோய்கள் ஏற்படும் சூழ்நிலை அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த இரத்த வகை கொண்டவர்கள் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை தவிர்ப்பது நலம். இவை இவர்களுக்கு எளிதில் சீரணம் ஆவதில்லை. முட்டைக்கோஸ், தக்காளி, உருளைக்கிழங்கு,மிளகு போன்றவற்றில் இருக்கும் 'லெக்டின்' என்ற பொருள் இவர்களின் வயிற்றுக்கு தொந்தரவை தரும்.

'பி' இரத்த வகை
மிதமான மென்மையான உணவுகளே இந்த வகை இரத்த பிரிவு கொண்டவர்களுக்கு ஏற்றவை. பழம், காய்கறிகளை இவர்கள் அதிகமாக சாப்பிடலாம். பாலும், பால்வகை பொருட்களும் உடலுக்கு உகந்தவை அல்ல. தக்காளி அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறுகளை உருவாக்கும். சோளம், கோதுமை,பயறு வகைகள்,வேர்க்கடலை சாப்பிட்டால் இவர்களின் உடல் எடை அதிகரிக்கும். இவற்றில் இருக்கும் சில ரசாயனங்கள் இந்த ரத்த பிரிவுகாரர்களுக்கு மந்தம், சோர்வை உருவாக்கும்.

'ஏ'பி' பிரிவு இரத்த வகை
இந்த பிரிவு இரத்தம் இருப்பவர்கள் இறைச்சி உணவை அதிகம் உண்பது கூடாது. இவர்களது வயிற்றில் உணவை சீரணம் செய்யும் அமிலச்சுரப்பு குறைவாக இருப்பதுண்டு. அதனால் சீரணம் மெதுவாக நடக்கும். குறிப்பாக இவர்கள் கோழி இறைச்சியை உண்பது கூடாது. பால், வேர்க்கடலை மற்றும் பருப்பு வகை பொருட்கள், தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் கோதுமையை அதிகம் சேர்க்க கூடாது. இந்த இரத்த பிரிவு கொண்டவர்களுக்கு அதிகமாக சளித் தொந்தரவு இருக்கும். காலையில் இளம் சுடுநீரில் பாதி எலுமிச்சை பழத்தை பிழிந்து வெறும் வயிற்றில் குடித்தால் சளி தொந்தரவு நீங்கும்.

'ஓ' இரத்த பிரிவு
இவர்கள் மாமிச உணவுகளை சாப்பிடலாம். ஆனால் அதைவிட அதிக நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை சாப்பிடலாம், இயற்கையாக இவர்களின் வயிற்றில் சீரணத்திற்கு சுரக்கும் அமிலத்தின் அளவு அதிகமாக இருப்பதுண்டு. அதனால் செரிக்க சற்று கடினமான உணவுகளை எடுத்துக் கொண்டாலும் எளிதில் சீரணமாகி விடும். கோதுமை இவர்களுக்கு பொருந்தாது. காரணம், கோதுமையில் இருக்கும் ஒரு வகை ரசாயனம் இவர்களது உடலுக்கு பொருந்துவதில்லை. பால் பொருட்களும் பொருந்துவதில்லை. பீன்ஸ்,பயறு வகைகளும் இவர்களுக்கு எதிராக இருக்கின்றன. இவற்றை அதிகம் சாப்பிடும் நிலையில் மந்தமான குணம் காணப்படுவதுண்டு. அது போல் முட்டைகோஸ்,காலிபிளவர்,கடல் உயிரினங்கள்,அயோடின் சேர்நத உப்பு போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது.

இந்த விடயங்கள் ஒரு வேதியியல் மற்றும் சித்த மருத்துவம் தெரிந்த நண்பரின் ஆலோசனையில் பதியப்பட்டது. இங்கு குறிப்பிட்ட உணவுப்பொருட்கள் உங்களுக்கு ஒத்து வராத ஒன்றாக நீங்கள் அறிந்தால் இங்கு குறிப்பிடப்படும் தகவலும் பொருந்துவதாகும். மற்ற படி இந்த தகவல் பொதுவானது என்பதை உங்கள் கவனத்திற்கு வைக்கிறேன். நன்றி.

வீட்டிலேயே தினமும் அருவிக்குளியலின் ஆனந்தம் வேண்டுமா? இதைப்படிங்க!

0 கருத்துகள்


 'ஆடாதோடைக்கும் ஐந்து மிளகுக்கும் பாடாத நாவும் பாடும்' என்று ஆடாதோடையின் அருமைக்கும்,
'சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை, சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை'
என்று சுக்கையும் குறிப்பார்கள். இப்படி மூலிகைகளுக்கு அளப்பரிய மருத்துவ குணங்கள் உண்டு.

கருவேல மரத்தையும், வேம்பு மரத்தையும் கேலி செய்த கோல்கேட் இன்றைக்கு ' மூலிகை கலந்த பேஸ்ட்' கொண்டு பல்துலக்க சொல்லி விளம்பரத்தில் விளம்புகிறார்கள். இப்படி மூலிகைகளின் அருமையும்,பெருமையும் வெளிவந்து கொண்டிருக்கிறது. 'வேர்பார், தழைபார்,மெல்லமெல்ல செந்தூரம், பற்பம் பார்' என்கிறது தமிழ் பழமொழி.

ஆக. எங்கும் மூலிகைகளுக்கு ஒரு வரவேற்பு அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த காலத்தில் புதிய மூலிகை பொடி ஒன்று மகளிர் சுய உதவிக்குழுவால் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. இது பற்றிய ஒரு பதிவு உங்கள் பார்வைக்கு.....

மனிதனின் கால்படாத மலைக்காடுகளில் ஏராளமான அரிய மூலிகைகள் வளர்ந்து கிடக்கின்றன. மழை பெய்யும் போது மழைநீர் இந்த அரிய மூலிகைகளின் வேர்களின் ஊடே பாய்ந்து வரும. இப்படி பாய்ந்து வரும் அருவி நீருக்கு ஏராளமான நோய்களை தீர்க்கும் குணம் உண்டு என்பது இயற்கை. அருவி நீரின் இந்த குணத்தை அறிந்து தான், ஆண்டுக்கு 3 மாதங்கள் வரை தண்ணீரை கொட்டும் குற்றாலத்திற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வந்து குளித்து விட்டு போகிறார்கள்.

இப்படி குற்றாலத்தில் குளிக்கும் போது இருக்கும் புத்துணர்ச்சிய நமது வீட்டிலேயே அனுபவிக்க முடியுமா? முடியும் என்கிறது மதுரையை சேர்ந்த வானவில் பெண்கள் சுயஉதவிக்குழு. இவர்கள் 21 அரிய மலை மூலிகைகளை கொண்டு தரமுள்ள ஒரு குளியல் பொடியை தயாரித்திருக்கிறார்கள்.
பொதுவாக பெண்கள் முகத்தின் தோலின் நுண்ணிய துவாரஙகளில் இருக்கும் அழுக்கை நீக்க பாசிப்பயறு மாவை அரைத்து அல்லது கடையில் விற்கப்படும் பாசிப்பயறு பொடி மற்றும் ஸ்நானப்பொடியை வாங்கி வருவார்கள். இந்த பொடியை குழைத்து சற்று நேரம் முகத்தில் பூசி விட்டு கழுவி விடுவார்கள். இது இயற்கை. ஆனால் இந்த பாசி பயறு பொடி முகத்திற்கு மட்டும் தானே பயன்படுகிறது. உடலின் மற்ற பாகங்களுக்கும் புத்துணர்ச்சி வேண்டுமே!

ஆக...ஒட்டு மொத்த உடல் தோலிலும் ஊடுருவி அழுக்கை நீக்கி உடலுக்கு புத்துணர்வை ஊட்டும் ஒரு குளியல் பொடி வேண்டும் என்ற சிறிய ஐடியாவில் உருவானது தான் இந்த மூலிகை குளியல் பொடி. இந்த மூலிகை பொடியின் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த பொடியானது முழுமையாக மூலிகைகளின் கலவை தான். வாசணைக்கு கூட பாசிப்பயறு போன்ற பொடிகள் கலக்கப்படவில்லை.

மலைவாழ் மக்களின் உதவியுடன் மூலிகைகளை சேகரித்து வந்து அந்த மூலிகைகளை சூரிய வெப்பம் படாமல் நிழலில் உலர்த்தி காய வைத்து விடுகிறார்கள். பின்னர் அவற்றில் உள்ள தேவையில்லாத இலை,தழைகளை நீக்கி விட்டு இடித்து சலித்து மாவாக ஆக்கி விடுகிறார்கள்.
இந்த பொடியில் பிரதானமாக கஸ்தூரி மஞ்சள்,சந்தனம், மகிழம் பூ,வெட்டிவேர்,விளாமிச்சம் வேர், பச்சிலை,திரவியம் பட்டை உள்பட 21 மூலிகைகள் அடங்கியிருக்கிறது.

 இந்த மூலிகை பொடியில் குளித்து விட்டு போனால் உடலில் துர்நாற்றம் வீசாது. தோல்வியாதிகளை தடுத்து விடும். உடல் தோல் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் என்கிறார்கள். இந்த பொடியை தமிழகம் முழுவதும் விற்பனை செய்ய முகவர்களையும் நியமிக்க உள்ளனர். எதிர்காலத்தில் மூலிகை குளியல் சோப், பல்பொடி இத்யாதிகளையும் விற்பனைக்கு விட உள்ளனர். இந்த தயாரிப்புகளை சந்தைப்படுத்த நீங்கள் தயாரா?

சுழற்றுங்கள் உங்கள் தொலைபேசியை......99 44 33 67 40 (திருமதி.கலைவாணி, வானவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அறக்கட்டளை, மதுரை),

வாழ்க்கை போராட்டத்தில் முரட்டு தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்ட ஒரு அப்பாவி

0 கருத்துகள்ந்த பூமியில் இருக்கும் விலங்கினங்களை இந்த வலைப்பதிவில் தொகுப்பதன் முதல் கட்டமாக ஊர்வனவற்றில் 'பாம்புகள்' பற்றிய தொகுப்புகளை பதிவிட்டிருந்தேன். அந்த பதிவு தொடரும் அதே வேளையில் சுவாரசியமான முதலைகளை பற்றி ஒரு அறிமுகத்தை இங்கு தருகிறேன். இதை மூன்று பதிவுகளாக எழுதுகிறேன்.
முதலில் முதலையை பற்றிய அறிமுகத்தையும், அதில் எத்தனை வகைகள் எந்தந்த இடங்களில் வசிக்கின்றன என்பது பற்றி பார்க்கலாம். தொடர்ந்து அவற்றின் குணம், இயல்பு, தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் எந்த ஆறுகளில் இவை இருக்கின்றன என்றெல்லாம் பார்க்கலாம்.

அறிமுகம்
சாதிகள்,மதங்கள்,இனங்கள்,வித்தியாசங்கள்,போட்டிகள்,பொறமைகள்,உலகத்தில் காண்பவற்றையெல்லாம் தனதாக்கி கொள்ள வேண்டும் ஆசைகள்....இப்படி ஆறறிவு கொண்ட மனிதனின் அடங்காத ஆசைக்கு எதையும் தங்களுக்காக சேர்த்து வைத்துக்கொள்ள தெரியாத பறவைகளும், பாலூட்டிகளும், ஊர்வனவும் தங்கள் உயிரை இழந்து வருகின்றன. இதில் முதலையும் ஒன்று.

இன்றைக்கு சுமார் 2.5 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தை ஊர்வன இனத்தின் பொற்காலமாக விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அதாவது மொசயிக் ஊழிக்காலம் என்று அழைக்கப்படும் இந்த காலத்தில் தான் டைனோசர் போன்ற நடக்கும் ராட்சத பல்லிகளும், பறக்க தெரிந்த டைனோசர் போன்ற தோற்றத்தில் சிறிது மாறுபட்ட டிரோசர் என்ற ஊர்வன இன விலங்குகளும் இந்த பூமியில் பெருமளவில் வாழ்ந்திருக்கின்றன. இந்த கூட்டத்தின் ஒரு பகுதியாக தான் இன்றைக்கு மீதமிருக்கும் முதலைகளும் வாழ்ந்து கொண்டிருந்திருக்கின்றன. ஆனால் இந்த விலங்குளின் வாழ்வு என்பது பூமியின் மீது ஒரு பெரிய விண்கல் மோதிய போது முடிவுக்கு வந்தது.

சுமார் 650 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியை கடந்த செல்லும் வழியில் ஒரு விண்கல் பாதை மாறி பூமி உருண்டையில் மோதியது. அப்போது குலுங்கிய பூமி தீப்பிடித்து எரிந்தது. அதில் இந்த டைனோசர் உள்ளிட்ட ராட்சத பல்லிக்கூட்டமும் சேர்ந்து எரிந்து போனது. இந்த தீவிபத்தில் லட்சக்கணக்கான இந்த ராட்சத உயிர்களின் மூச்சும் அடங்கி போயின.

ஆனால் உருவத்தில் சிறிதாக இருந்ததால் என்னவோ, முதலைகள் மட்டும் தப்பித்து போயின. அதற்கு பிறகு வந்த இயற்கையின் மாற்றங்களில் சிறிதே பரிணாம வளர்ச்சியில் மாற்றம் பெற்று தற்போது நம்மிடையே பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கின்றன. உலகின் 5 கண்டங்களில் ஐரோப்பா கண்டம் தவிர, மற்ற நான்கு கண்டங்களிலும் முதலைகள் காணப்படுகின்றன. அதாவது உயிர்களின் பிறப்பிடமான நிலநடுக்கோட்டுக்கு தெற்கே தான் இவை வியாபித்துக் கொண்டிருக்கின்றன.

இப்படி பூமிக்கு ஏற்பட்ட பேரழிவிலிருந்து தப்பியதால் என்னவோ, முதலைகளின் தோற்றம் எதையும் தாங்கும் அமைப்பாக உள்ளது. கடினமான, கரடுமுரடான தோலுடன் எதையும் விழுங்கி செரிக்கும் ஆற்றல்,நீரிலும்,நிலத்திலும் வாழும் திறன்,எளிமையான பறவைகளை போன்ற முட்டையிட்டு குட்டிகளை பொறிக்கும் திறன் என்று மற்ற எந்த உயிரினத்திற்கும் இல்லாத ஒரு உடல் அமைப்பை பெற்றிருக்கிறது. இங்கு ஒரு விடயத்தை பார்க்க வேண்டும்.

அதாவது சாதாரணமாக பறந்து திரிந்து சிறிதளவு இரை தேடும் பறவைகளுக்கு தான் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் இயல்பு இருக்கும். ஆனால் ராட்சத உடல் அமைப்பு கொண்ட முதலைக்கு இப்படி ஒரு திறன் எதற்காக வந்திருக்க வேண்டும். பெரும்பாலும் தனக்கு வேண்டிய உணவை அது நீரில் மறைந்திருந்து தான் திடீரென்று கவ்வி பிடிக்கிறது.

இந்த முதலை மற்ற ராட்சத பாலூட்டிகள் போல் குட்டிகளை வயிற்றில் சுமந்து இருக்குமானால் இப்படி நீரில் மறைந்திருந்து மற்ற விலங்குகளை வாயால் கவ்வி சுழற்றி மரணத்தை அவைகளுக்கு பரிசாக அளித்து தனது இரையாக மாற்றிக் கொள்ள முடியாது போயிருக்கலாம். ஆக வாழ்க்கை போராட்டத்தில் தனது பரிணாமத்தை தக்க வைக்க, இப்படி முட்டையிட்டு குட்டிகளை பிறக்க வைத்து தனது இனத்தை தக்க வைத்திருக்கலாம் என்கிறார்கள் விலங்கியல் ஆய்வாளர்கள்.
இனங்கள்
உலகின் பல பகுதிகளில் இருக்கும் முதலைகளையும் இனம் கண்டதில் இதுவரை 22 வகையான முதலை வகைகள் கண்டறிய்பட்டதாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
 1.கருப்புக்கைமன்
இது ஒரு நன்னீர் முதலை. இவை தென்அமெரிக்காவில் ஓடும் அமேசான் ஆற்றுப்பகுதிகளில் வாழ்கின்றன.
2.சைனீஸ் அலிகேட்டர்
சீனாவில் காணப்படுகின்றன நன்னீர் முதலை.
3.அமெரிக்கன் அலிகேட்டர்
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் தெற்குப்பகுதி சதுப்பு நிலங்களிலும்,கடற்கரைகளிலும் வாழக்கூடியது.
4.குவியாஸ் குட்டைக்காமன்
இவையும் அமேசான் நதியில் காணப்படுகின்றன.
5.ஸனீடாஸ் குட்டைக்காமன்
இது பிரேசில்,ஒரினாகோ,சுரினாம் ஆகிய நாடுகளின் சிறிய ஆறுகளில் காணப்படுகின்றன.
6.தட்டை மூக்கு கைமன்
இந்த முதலை பிரேசில் நாட்டில் மட்டுமே இருக்கின்றன.
7.கைமன்
இந்த நன்னீர் முதலை தென்அமெரிக்காவில் காணப்படுகிறது.
8.கியூபன் கைமன்
இதுவும் நன்னீர் முதலை தான்.இது கியூபா நாட்டில் மட்டுமே காணப்படுகிறது.
9.மோர்லெட் முதலை
மெக்சிகோ நாட்டு ஆறு ஏரிகளில் வசிக்கும் இந்த வகை முதலை சில சூழல்களில் ஆறுகளில் முகத்துவாரங்களில் உவர் நீரில் வாழ்கின்றன.
10.அமெரிக்கன் முதலை
பரந்த வடக்கு அமெரிக்க கண்டத்தில் நன்னீரிலும், உவர்நீரிலும் பரவலாக காணப்படுகின்றன.
11.ஆப்பிரிக்க நீள்மூக்கு முதலை
ஆப்பிரிக்காவில் வெப்ப மண்டலக்காடுகளில் வாழும் முதலை இது.
12.நைல் முதலை
மேற்கு ஆப்பிரிக்காவின் நதிகளில் வாழும் இது பரவலாக காணப்படுகிறது.
13.ஒரினகோ முதலை
இந்த முதலை தெற்கு ஆப்பிரிக்கா மற்றும் மடகாஸ்கர் தீவில் பொதுவாக காணப்படுகிறது.
14.இந்தோ பசிபிக் முதலை
இவை நன்னீரிலும்,கடல்நீரிலும் வாழக்கூடியவை, இருப்பினும் இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூகினியா ஆகிய நாடுகளில் முகத்துவாரங்களில் இருக்கின்றன.
15. ஜான்ஸ்டன்ஸ் முதலை
இதுவும் நன்னீர் முதலை. இது வடக்கு மேற்கு ஆஸ்திரேலியாவில் வசிக்கின்றன.
16. சதுப்பு நில முதலை
இந்திய உபகண்டத்தில் இந்த முதலை தான் பரவலாக வாழ்கின்றன. இது தமிழில் முதலை என்றும் இந்தியில் மகர் என்றும் அழைக்கப்படுகிறது.
17.சையாமீஸ் முதலை
தாய்லாந்து, லாவோஸ்,கம்போடியா, வியட்நாம் மற்றும் மலாய் நாடுகளின் சதுப்பு காடுகள், ஆறுகள், ஏரிகளில் இது காணப்படுகிறது.
18. பிலிப்பைன் முதலை
இது பிலிப்பைன்ஸ் தீவுகளான மின்டோவா, குலூ, மாஸ்பேட் மற்றும் இவற்றை சுற்றியுள்ள நாடுகளின் ஆற்றுப்படுகைகள், சதுப்பு நிலங்களில் வாழ்கிறது.
19.குட்டை முதலை
ஓடும் நீரோடைகளில் வசிக்கக்கூடியவை. மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகள் தான் இதன் இருப்பிடம்
20.சிறுகடியால் முதலை
இந்த முதலை போர்னியா, சுமத்ரா, ஜாவா,மலேயா நாடுகளில் வாழும் நீள்மூக்கு கொண்ட சிறு முதலை.
21.கடியால் முதலை.
நீண்ட முக அமைப்பு உடைய இந்த முதலைகள் வடஇந்தியா, பாகிஸ்தான்,நேபாளம்,பங்களாதேசம்,மியான்மர்,பூடான் ஆகிய நாடுகளில் காட்டுநதிகளில் காணப்படுகின்றன.உலகிலேயே இதற்கு தான் நீளமான மூக்கு காணப்படுகிறது.
22. நியூகினியா முதலை
இது சதுப்பு நிலம் மற்றும் ஆறு, ஏரிகளில் வாழ்கிறது. நியூகினியா நாட்டில் காணப்படுகிறது.
 இந்த 22 இனங்களில் ஓரிரு இனங்கள் தவிர மற்ற முதலைகள் எல்லாம் அழியும் அபாய கட்டத்தில் இருக்கின்றன. இவைகளின் எதிரிகள் யார்? மனிதர்களை தவிர வேறு யார் இருக்கமுடியும். பூமிப்பந்தில் விண்கல் மோதல் நடந்த போது டையனோசர்கள் எல்லாம் கூட அழிந்து முதலை தப்பித்தது. ஆனால் இன்றைக்கு மனிதர்களிடம் மாட்டிக் கொண்டு தவிக்கிறது. கண்மூடித்தனமான வேட்டையில் இவற்றின் வாழ்விடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அடுத்த பதிவில் முதலையின் உடல் அமைப்பையும், சிங்கம், காட்டெருமை போன்ற பலமான மிருகங்களை கூட முதலைகளால் எப்படி கொல்ல முடிகிறது என்பது பற்றி பார்க்கலாம்.

(தொடரும்)
முதலைகள் வகைகள் பற்றி ஆங்கிலத்தில் சிறப்பாக தொகுக்கப்பட்டு ஒரு இணைய தளம்..படம் அருமை. சென்று பாருங்கள் http://www.flmnh.ufl.edu/cnhc/csl.html

உங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா?

0 கருத்துகள்முன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம். ஒரு கட்டத்தில் கிணறுகள் குறைந்து அடிபம்புகள் வந்தன. அதற்கடுத்து ஜெட்மோட்டார்கள், சப்மர்சிபிள் என்று பூமியின் ஆழத்தில் கிடக்கும் மோட்டார் கொண்ட ஆழ்துளை குழாய் என்று படிப்படியாக உருமாறின. இந்த மோட்டார்களில் எல்லாம் இல்லாத ஒரு சிறப்பம்சம் கிணற்றுக்கு உண்டு. அது, கிணற்றில் ஊறும் தண்ணீர் கண்ணாடி போல் நமது பார்வையில் தெளிவாக இருக்கும். உச்சி வேளையில் கிணற்று தண்ணீரில் சூரியனின் ஒளி பிரதிபலித்து சில நேரங்களில் கிணற்றின் அடி ஆழம் வரை தெரியும். இது ரம்மியமான காட்சியாக இருக்கும்.

இப்போது இப்படி இருந்த கிணறுகள் எல்லாம் பெரும்பாலும் மறைந்து விட்டன. கிராமப்புறங்களில் விவசாயத்திற்காக மட்டும் தான் தற்போது கிணறுகள் பயன்பாட்டில் உள்ளன. கிணறுகள் திறந்த நிலையில் இருந்ததால், தண்ணீரில் ஏற்படும் மாற்றத்தை சுலபமாக தெரிந்து கொள்ள முடியும். உதாரணமாக, செழிப்பாக மழை பெய்திருந்தால் கிணற்றில் ஊறும் தண்ணீரானது எங்கள் வீட்டில் இருந்த கிணற்றில் செம்மண் நிறத்தில் இருப்பது வழக்கம்.

ஆனால் தற்போது உள்ள போர்வெல் குழாய்கள் நீரை இழுத்து நேரடியாக தொட்டியில் நிரப்புவதால் மாடிக்கு சென்று தொட்டியில் ஏறிபார்த்தால் மட்டுமே நீரின் தெளிவு, சுத்தம்,நிறம் போன்றவற்றை காண முடியும். எனவே, நம்மால் பல நேரங்களில் தண்ணீரின் இயல்பை தெரிந்து கொள்ள முடியாமல் அன்றாடம் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறோம்.
ஆனால் தண்ணீரை பற்றி நாம் மிகவும் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டிய சில விடயங்கள் இருக்கின்றன. அதை கேள்வி பதில் வடிவத்தில் தொகுத்துள்ளேன். தமிழக அரசின் நிலநீர்பிரிவு வெளியிட்டுள்ள இந்த தொகுப்பு சொல்லும் தகவல்கள் இதோ....
 1.சமீபகாலமாக பல் காவி நிறமாகிறது. ஏன்?
நீங்கள் குடிக்கும் நீரில் புளோரைடு என்ற உப்பு அதிகமாக இருக்கலாம். இந்த புளோரைடு உப்பு பற்களை மஞ்சள் நிறமாக மாற்றும். குடிக்கும் நீரில் ஒரு லிட்டரில் 1.5 மி.கிராம் அளவிற்கு அதிகமாக புளோரைடு இருக்க கூடாது. இந்த அளவிற்கு மேல் புளோரைடு அதிகம் இருக்கும் நீரை கண்டிப்பாக குடிக்க பயன்படுத்த கூடாது.

2. புளோரைடு அளவுகோல் பற்றியும், அதன் விளைவுகள் பற்றியும் கூறவும்?
குறைந்த புளோரைடு அளவு என்பது (0.5-1.0 மிகிராம் லிட்டர்) இந்த அளவு இருந்தால் அது பற்களுக்கு பாதுகாப்பானது. இந்த அளவு புளோரைடு இருந்தால் அது பல் சொத்தை விழாமலும், பல்லில் துர்நாற்றத்தையும் தடுத்து விடுகிறது. ஆனால் 1.5 என்ற அளவை விட குடிநீரில் புளோரைடு அதிகம் இருந்தால் அந்த நீரை குடிப்பவர்களுக்கு பல் காவி நிறமாகும். உடலின் எலும்புகள் எல்லாம் பாதிக்கப்பட்டு முடக்குவாதம் என்ற நோய் உருவாகி செயலற்ற நிலைக்கு தள்ளப்படுவார்கள். புளோரசிஸ் என்ற நோய் ஏற்படும்.

3. பிறந்து ஆறு மாதம் ஆன சில குழந்தைகள் நீலமேறுதல் மற்றும் திடீரென்று இறந்து போவதின் காரணம் என்ன?
குடிக்கும் நீரில் அதிகமான நைட்ரேட்டு என்ற ரசாயன உப்பு இருந்தால் குழந்தைகள் திடீரென்று உடலில் நீலநிறம் பாய்ந்து இறந்து போவதுண்டு.

4. வீட்டின் மேல்நிலை தொட்டிகளில் அடிக்கடி பாசி படிகிறது. இது ஏன்?
காற்று,சூரிய ஒளி ஆகியவை தொடர்ந்து படும் மேல்நிலை தொட்டிகளில் இது போல் பாசி ஏற்படும். எனவே காற்று, சூரிய ஒளி படாமல் தண்ணீர் தொட்டிகளை நன்றாக மூடி வைத்திருக்க வேண்டும். கிணறுகளையும், நீர்தொட்டிகளிலும் சிறிதளவு பிளீச்சிங் பவுடர் கலக்கலாம். அதாவது 100 லிட்டர்தண்ணீருக்கு 30 விழுக்காடு திறன் உள்ள பிளீச்சிங் பவுடர் 1 கிராம் என்ற அளவில் சேர்க்கலாம்.

5. சில நேரங்களில் சமைக்கும் போது சோறு மஞ்சள் நிறமாக ஆகிவிடுகிறதே ஏன்?
நீரின் காரத்தன்மை (alkalinity) அதிகமாக இருந்தால் சோறு வேக வைத்த பின்பு மஞ்சள் நிறமாக இருக்கும். பருப்பும் சரிவர வேகாது.

6.நீரினை பிடித்து சேகரித்து வைக்கும் போது, மஞ்சள் நிறமாக இருக்கிறது. இந்த தண்ணீரில் துணிகளை துவைக்கும் போது காவி,பழுப்பு கறை ஏற்படுகிறது. எதனால்?
இது இரும்பு(iron) உப்பு இருப்பதால் நிகழ்கிறது. இரும்பு அகற்றும் சுத்திகரிப்பு முறைகளை பயன்படுத்தலாம். எளிமையான வடிவமைப்பு கொண்ட சுத்திகரிப்பு நீர் தொட்டிகளை பயன்படுத்தி இரும்பு சத்தை குறைக்கலாம்.
7. போர்வெல் தண்ணீரின் உப்புத்தன்மையை நீக்க தொட்டியில் தேத்தங் கொட்டை அல்லது நெல்லி மரக்கட்டையை போட்டு வைக்கலாமா?
தேத்தங்கொட்டை அல்லது நெல்லி மரக்கட்டை துவர்ப்பு சுவையுடையது. துவர்ப்பும், உப்பும் இருக்கும் போது நீரானது, உப்பு குறைந்துள்ளதாக தோன்றும். ஆனாலும் நீரில் குறைந்துள்ள ரசாயனங்களின் அளவில் மாற்றம் ஏற்படுவதில்லை.

8. கழிவறை தொட்டி (செப்டிக் டேங்க்) மற்றும் ஆழ்குழாய் கிணறு(போர்வெல்) இவற்றுக்கு இடையே இருக்க வேண்டிய இடைவெளி எவ்வளவு?
சுமார் 50 அடி இடைவெளி இருக்க வேண்டும்.

நீர்வழி நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள சில வழிமுறைகள்
 • நீரை கொதிக்க வைத்து, குளிர வைத்து, வடிகட்டி பின்னர் குடிப்பதற்கு பயன்படுத்தலாம்.
 • நோய் கிருமிகளை அழிக்க பிளீச்சிங் பவுடர் பயன்படுத்தலாம் (1000 லிட்டருக்கு 1 கிராம் என்ற அளவில்)
 • தொழிற்சாலை கழிவுகள், வீட்டு உபயோக கழிவுகள்(குப்பைகள்), கால்நடை கழிவுகள், நீர்நிலை ஆதாரங்களில் கலக்காமல் பாதுகாப்பான தூரத்தில் போர்வெல் அமைந்திருக்க வேண்டும்.
 • கைப்பம்புகள், குழாய்களை சுற்றி கழிவு நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குழாய், போர்வெல்லின் அடியில் குளித்தல், மாடுகளை கழுவுதல், துணிதுவைத்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
 • புளோரைடு நீரில் இருக்கும் அளவை கண்டிப்பாக தெரிந்து கொள்ள நீரை பரிசோதனை செய்து பிறகு பயன்படுத்த வேண்டும்.

நீங்கள் சென்னைவாசி என்றால் கீழே உள்ள விலாசத்தில் உங்கள் போர்வெல் தண்ணீரை கொடுத்து அந்த தண்ணீரில் என்ன வகையான உப்புகள் எல்லாம் கலந்திருக்கின்றன. அது குடிக்க உகந்ததா என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். இது தவிர தமிழக்கத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நீர் பரிசோதனை கூடங்களை அரசு அமைத்துள்ளது. அங்கே சென்று நீரின் தரத்தை பரிசோதித்து கொள்ளலாம்.

உதவி இயக்குநர், (நில வேதியியல்)
நிலவேதியியல் உட்கோட்டம்,
தரமணி,பொதுப்பணித்துறை வளாகம்,
தரமணி, சென்னை-600113
போன்:044-22541373
தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த 100 வழிகளை சொல்கிறது இந்த தளம். படித்து பாருங்களேன்!  http://wateruseitwisely.com/100-ways-to-conserve/index.php

மனிதர்களின் பேராசைக்கு இரையாகும் இருதலை மடையர்கள்!!!

0 கருத்துகள்'பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள்'. ஆனால் தற்போது மனித படையைக் கண்டு ஒரு பாம்பு ஓடுகிறது. மனிதனின் பேராசைக்கு இந்த பாம்பு ஏராளமாக இரையாக தொடங்கியிருக்கிறது. அது, இருதலை மடையன் அல்லது இருதலையன் மணியன் என்றும் அழைக்கப்படும் மண்ணுளி பாம்பு.

இந்த பாம்பில் இருந்து ஆஸ்துமா, எலும்புருக்கி நோய்,எயிட்ஸ் நோய் போன்ற நோய்களுக்கு மருந்து தயாரிக்கப்படுவதாகவும், இந்த பாம்புகளை பிடித்து விற்றால் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை தரப்படுவதாகவும் புரளி கிளம்பியது. இதனை நம்பிய அப்பாவிகள் சிலர் தமிழகத்தின் கிராமங்களில் அப்பாவியாக ஆங்காங்கே திரியும் மண்ணுளி பாம்புகளை பிடிக்க படையெடுத்தார்கள். அழியும் நிலையில் உள்ள இந்த பாம்புகளை பிடிப்பது குற்றம் என்பதால் இந்த மண்ணுளி பாம்புகளை பிடித்தவர்களை போலீசார் பிடித்து சிறையிலடைத்தார்கள்.

 இவர்களிடமிருந்து இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மண்ணுளி பாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எதையாவது பிடித்து, எதையாவது விற்று குறுகிய காலத்தில் பணக்காரர்களாக ஆகி விட வேண்டும் என்பது தான் இவர்களின் நோக்கம். மிகப்பெரிய இலக்கியங்களையும், இலக்கணங்களையும் படைத்த, கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றி மூத்த தமிழ்க்குடிகளின் நிலைமை பரிதாபமாக இருக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த பதிவின் நோக்கம் என்பது பாம்புகளை பற்றிய ஒரு அறிமுகத்திற்காக.முதலில் இங்கு பாம்புகளை பற்றிய பொதுவான செய்திகளையும், இந்திய நாட்டில் காணப்படும் நச்சுள்ள, நச்சற்ற பாம்புகளையும் பற்றி பாம்பு என்ற லேபிளின் கீழ் பதிவிடுகிறேன். 

பாம்புகள்  மனிதர்களின் நண்பர்கள். காரணம், பாம்புகள் இல்லையென்றால் மனிதன் கடினமாக உழைத்து விதைத்து அறுவடை செய்யும் நெல்மணிகளை பெருச்சாளிகள் கொண்டு சென்று விடும். இந்த பெருச்சாளிகளை தேடிப்பிடித்து கொல்லும் ஒரே ஊர்வன என்றால், அது பாம்பு தான். குறிப்பாக  மணியன் வகை பாம்புகள் எலியையும், எலிக்குட்டிகளையும் பெருகவிடாமல் தின்று தீர்த்து விவசாயிகளுக்கு பெரும் அளவு உதவியாக இருக்கின்றன.
பாம்புகள் -பொதுவான செய்தி
உலகில் சுமார் 2000 வகை பாம்புகள் இருக்கின்றன. இதில் 400 வகை பாம்புகள் இந்தியாவில் இருக்கின்றன. இவற்றில் சுமார் 20 வகையான பாம்புகள் தான் நச்சுப் பாம்புகள். அதிலும் இந்த வகை எல்லாவற்றுக்கும் மனிதனை கொல்லக்கூடிய அளவு நச்சு கிடையாது. இதிலும் 5 வகையான பாம்புகள் தான் கடித்தால் மரணத்தையோ அல்லது துன்பத்தையோ தரும் வலிவுடைய பாம்புகள் நச்சுப்பாம்புகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அவை
INDIANCOBRA
1.நாகங்கள்  2.கட்டு விரியன்கள்  3.தட்டைவாற் கடற்பாம்புகள். 4.விரியன் பாம்புகள்   5. ஆப்ரிக்க காடுகளில் காணப்படும் ப்ளாக் மாம்பா (இந்த பாம்பு கடித்தால் மிகப்பெரிய மாடுகளும், யானைகளும் நொடியில் இறந்து விடும்)  6.ஆஸ்திரேலியாவில் காணப்படும் புலிப்பாம்பு ஆகியவை.
பாம்புகளை பற்றி ஆய்வு செய்யும் நிபுணர்கள், பாம்புகளின் குணத்தை பிரிக்க அந்த பாம்புகளின் உடலின் அடிப்பாகத்தில் அமைந்த அடையாளங்களையும், செதில்களின் எண்ணிக்கையும் வைத்து தான் பிரிக்கின்றனர்.

உதாரணமாக, நாம் அனைவரும் பயப்படும் நாகப்பாம்பு அல்லது நல்ல பாம்புக்கு உடலின் அடியில் இருக்கும் செதில்களின் எண்ணிக்கை 176 முதல் 200 வரை. இதன் 'படம்' (தலையில்) இரண்டு சக்கரம் கொண்டது. ஆனால் ஒரே சக்கரம் கொண்ட நல்ல பாம்பும் இருக்கிறது. இந்த சக்கரத்தை அடிப்படையாக வைத்து இதிலும் ஐந்து உட்பிரிவுகளை பிரித்துள்ளார்கள்.

'நாயா நாயா நாயா' என்றால் தென்னிந்தியாவில் காணப்படும் நல்லபாம்பு இனம். இவற்றுக்கு இரண்டு சக்கரம் உண்டு. 'நாயா நாயா கெளதியா' என்ற நல்ல பாம்பு இனத்திற்கு ஒரு சக்கரம் தான் உண்டு. இந்த இனத்திற்கு கழுத்தின் அடிப்புறம் பட்டையாக கருமை நிறம் இருக்கும். 'நாயா நாயா ஆக்சியானா' என்ற நல்லபாம்பு இனத்திற்கு அடிப்பாக செதில்கள் 183 முதல் 213 வரை இருக்கும். 'நாயா ஹண்ணா' என்ற இனத்தை சேர்ந்தது உலகின் அனைத்து பாம்பு ஆய்வாளர்களும் வியந்து பார்க்கும் 'ராஜநாகம்( king cobra)'. இதற்கு வேறு எந்த நாகத்திலும் காணப்படாத இரு பெரிய செதில்கள் உண்டு. அரச நாகமாகிய இரு 18 அடி வரை வளரும். அடர்நத மலைக்காடுகளில் தான் இது காணப்படுகிறது. உலகில் காணப்படும் நச்சுப்பாம்புகளிலலேயே இது தான் பெரியது. இந்த இராஜநாகம், மற்ற நாகப்பாம்புகளை விரும்பி வேட்டையாடுகிறது.

இருதலை மணியன்
நாம் இந்த முதல் பதிவில் குறிப்பிடும் இருதலைமணியனுக்கு நச்சு இல்லை. இந்த இருதலை மணியன் பாம்புகளை தமிழ்நாடு வயல்வெளிகள் எல்லாம் பார்க்க முடியும். இந்த பாம்புகளை காணும் விவசாயிகளும் அவற்றை எதுவும் செய்யாமல் விட்டுவிடுவதுண்டு. காரணம், இவை எலி பிடிப்பதால் தான்.

இந்த இருதலை மணியன் அல்லது மடையன் என்ற பெயர் எப்படி வந்தது?
இந்த பாம்பின் வால் மொட்டையாகவும்,சில பெரிய செதில்களுடனும் இருப்பதால் தலை போல் தோன்றும். இந்த மொட்டை பாகம் மேல் எழும்புவதும், பின்னோக்கி நெளிவதும் இதற்கு தலை போன்ற தோற்றத்தை தருவதாக இருக்கிறது.
மண்ணுளி பாம்பு என்ற இருதலை மணியன்
 இந்த பாம்பு எலிகளை பிடிக்க ஒரு தந்திரத்தை கையாளுவதாக சொல்கிறார்கள். அதாவது, தலை போல் உள்ள வால் பகுதியை எலி இருக்கும் வளையின் உள்ளே விட்டு அப்படியும், இப்படியுமாக ஆட்டுவதுண்டு. அப்போது தனது வளைக்குள் பாம்பு வந்து விட்டதாக தவறாக கருதும் எலி, வளையை விட்டு வெளியேற நினைத்து வளையின் மற்றொரு பொப்பான் வழியாக வெளியே குதிக்கும். பொப்பான் என்பது ஒரு பொய்த்துவாரம். இந்த வழியாக தான் ஆபத்து காலத்தில் எலி தப்பிப்பதுண்டு. இந்த பொப்பானுக்கு அருகில் தனது உண்மையான தலையை வைத்து காத்திருக்கும் இந்த இருதலை மணியன், தாவிவரும் எலியை அப்படியே விருந்தாக்கிக் கொள்ளும்.

 இந்த பாம்புகளை வீட்டில் வளர்த்தால் ராசி என்பதாலும் மேலே சொன்னவர்கள் பிடித்து சென்று விற்க முயற்சித்திருக்கிறார்கள். இந்த பாம்புகளை கூட்டில் வைத்து வளர்க்கும் போது மிக சாதுவாக நாய்க்குட்டி போல் இருக்கும். எலி,ஓணான்,அணில், சிறுபறவைகள் ஆகியவை தான் இவற்றின் உணவு. ஆகாரமின்றி நீண்ட நாட்களுக்கு பட்டினி கிடக்கும் தன்மையும் இந்த இருதலை மணியனுக்கு உண்டு. வளர்க்கப்பட்ட இருதலை மணியன்கள் 8 மாத கால அளவிற்கு கூட எதுவும் உண்ணாமல் இருந்ததாக சொல்கிறார்கள். மனிதன் கையில் எடுத்தாலும் இந்த பாம்புகள் எதுவும் செய்வதில்லை. கையில் எடுத்து பந்து போல் சுருட்டினாலும் அது தனக்கு எதுவும் நடப்பதாக காட்டிக் கொள்ளாது. அவ்வளவு பரமசாதுவானது. வீட்டில் ஒரு கூண்டு வைத்து அதில் மண்ணை போட்டு இந்த இருதலை மணியனை போட்டு வைத்தால் மண்ணுக்குள் பதுங்கிக் கொண்டு அப்படியே இருக்கும்.

இயற்கையிலேயே படு சோம்பேறியான இந்த பாம்பை தான் ராசியானது. எய்ட்சுக்கு மருந்து தயாரிக்க முக்கியமான மூலப்பொருள் என்றெல்லாம் கிளப்பிவிட்டு இப்போது கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களின் கடத்தலால் இப்போது எலிகளுக்கு தான் கொண்டாட்டம் ஆகியிருக்கிறது. காரணம், மணியன் இல்லாவிட்டால் மனிதர்கள் விளைவிக்கும் நெல்லை கடத்திக் கொண்டு போய் வளையில் சேமித்து வைத்துக் கொள்ள முடியுமே! ஆக..இருதலை மணியன்கள் இல்லாவிட்டால் விவசாயிகளின் பாடு திண்டாட்டம் தான்.

தட்டுவாழ் உழவன் அல்லது மலை உழவன்
சாய்வாக வெட்டுப்பட்டது போன்ற தோற்றமுடைய வாலுடைய இந்த சிறுபாம்பும் இருதலை மணியன் போன்றது தான். இவை தமிழ்நாட்டில் கொடைக்கானல், ஊட்டி, நீலகிரி, சிறுமலை, குடகு, கேரள மலைப்பிரதேசங்களில் காணப்படுகின்றன. இவற்றில் நஞ்சு இல்லை. தலைக்கூர்மையாகவும், சப்பலாகவும் இருப்பதால் திடீரென பார்க்கும் போது வாலும் தலையும் ஒன்று போலவே தோன்றும். சில பாம்புகள் பென்சில் அளவு தான் பருமனும், நீளமும் உள்ளவை. நம் நாட்டில் சுமார் 25 வகையான மலை உழவன் பாம்புகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இவை எல்லாம் அழகான நிறங்களில் காணப்படுகின்றன. குட்டையான இவற்றின் வாலில் தகடு போன்ற செதில்கள் காணப்படுகின்றன. மேற்தாடையில் 6 முதல் 8 சிறிய பற்கள் இருக்கின்றன. ஒரு தடவையில் 8 குட்டிகள் வரை போடுகின்றன. இவை யாவுமே கையில் எடுத்தால் கடிப்பதில்லை. புழுக்களையும், பூச்சிகளையும் இவை உட்கொள்கின்றன.

இந்திய ராணுவத்தில் பணியாற்றிய கேப்டன் சுரேஷ் என்பவர் பாம்புகளை பல்வேறு இடங்களில் புகைப்படம் எடுத்திருப்பதுடன், பாம்புகள் பற்றி பல தகவல்களையும் சொல்லியிருக்கிறார். அவரது இந்த தளத்தை பாம்பு பிரியர்கள் கண்டிப்பாக(http://captsuresh.com/tag/tips-on-dos-and-don%E2%80%99ts-of-wildlife-photography) பார்வையிடவும். பாம்பு பற்றிய கேள்விகளுக்கும் பதில் தருகிறார்.

குக்கரில் சமைத்த உணவு சர்க்கரை நோய்க்கு காரணமா? சாராய் குக்கரில் சமைத்து பாருங்களேன்!

2 கருத்துகள்
ன்னும் 20 ஆண்டுகளில் இந்தியா சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகம் கொண்ட நாடாக இருக்கும் என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றன. தங்கவேலு, சந்திரபாபு கால படங்களில் எல்லாம் சர்க்கரை நோய் என்றால் அது பணக்காரர்கள் நோய் என்பது போல சித்தரித்திருப்பார்கள். ஆனால் இப்போது இந்த நோய் அரசாங்க மந்திரிகள் முதல் சாதாரண ஆண்டி வரை பரவலாக காணப்படுகிறது. இரத்தத்தில் எந்த அளவு சர்க்கரை (குளுக்கோஸ்) சேர வேண்டும் என்று நிர்ணயிப்பது கணையம் என்ற உடலின் முக்கியமான உறுப்பு தான். இந்த உறுப்பில் ஏற்படும் கோளாறு அல்லது செயல்பாட்டுக் குறைவு தான் சர்க்கரை நோயை உண்டாக்குகிறது என்கிறார்கள்.


இந்த பாதிப்பு ஏற்படுவதற்கு குக்கர் போன்ற சமையல் சாதனங்களும் ஒரு காரணம் என்று செய்திகளில் அலசப்படுகின்றன. சாதாரண பாத்திரத்தில் சோற்றை வடித்து சாப்பிடும் பழக்கம் தான் சிறந்தது. சுவையும்,உணவின் சத்துக்களும் வீணாகமல் கிடைக்க திறந்த பாத்திரத்தில் சமைத்து சாப்பிடுவது தான் சிறப்பு என்பதிலும் உண்மை இருக்கிறது என்கிறார்கள். அதாவது திறந்த நிலையில் பிரபஞ்சத்தின் அனைத்து கண்ணுக்கு புலப்படாத சக்திகளும் அந்த உணவின் மீது தங்கள் ஆதிக்கத்தை செலுத்துகின்றன என்கிறார்கள். ஒரு வகையில் இது சரிதான் என்பது இயற்பியலை சற்று நிதானித்து அவதானித்து பார்த்தால் புரியும்.


 உதாரணமாக மிக்சியில் அரைத்த சட்னி விரைவில் கெட்டு விடுகிறது. சுவையும் அவ்வளவு சிறப்பாக இருப்பதில்லை. ஆனால் ஆட்டு உரலில் அல்லது அம்மிக்கல்லில் அரைத்த சட்னியின் சுவை அலாதியாக இருக்கும். அதாவது மிக்சியின் ஜாரினுள் தேங்காய், பொட்டுக்கடலை, மிளகாய், வெள்ளைப்பூண்டு, உப்பு எல்லாம் போட்டு மூடியை கொண்டு மூடி விட்டு அரைக்கிறோம். அப்போது அந்த மூடியினுள் இறுக்கி வைக்கப்பட்ட காற்றுடன் இந்த தேங்காள், கடலை எல்லாம் சில நொடிகளில் அரைபட்டு திப்பிதிப்பியாக வந்து விடுகின்றன. ஆனால் அம்மிக்கல்லில் அரைக்கும் போது இரண்டு ராட்சத கற்கள் (அம்மி மற்றும் அரைக்கும் கல்) இந்த உணவுப்பொருட்களை அரைக்கின்றன. திறந்த வெளியில் அரைப்பதால் அதன் மீது போதிய காற்று, பிராணவாயு, வெளிச்சம் மற்றும் திறந்த வெளியில் பிரபஞ்சத்தின் அத்தனை கதிர்களும் கண்ணுக்கு தெரியாமல் இழுக்கப்பட்டு அரைபடுகின்றன.


ஆக. நாம் எங்கிருந்து வந்தோமோ..அந்த பிரபஞ்சத்தின் சத்துக்கள் சட்னியில் கலந்து விடுகின்றன எனலாம். இந்த சட்னியின் சுவை அலாதியாக இருக்கும். மல்லிகை பூ போன்ற ஆவி பறக்கும் இட்லிக்கு, அம்மிக்கல்லில் அரைத்த சட்னியை விட்டு சாப்பிட்டால் எத்தனை இட்லி வயிற்றுக்குள் போகும் என்ற கணக்கே தெரியாது. இன்றைக்கும் சென்னை, மதுரை,கோவை,திருச்சி உள்பட சில இடங்களில் வீடுகளில் நடத்தப்படும் மெஸ்களில் இது போன்ற அம்மிக்கல் டெக்னிக் மூலம் தங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொண்டு, நல்ல உணவை கொடுப்பதுடன் நல்ல வருமானம் பார்க்கும் குடும்பங்கள் அதிகம் உள்ளன.


 இது ஒரு பக்கம் இருக்கட்டும். நாம் இப்போது சாதாரணமாக பயன்படுத்தும் குக்கரில் வெப்பத்தின் அழுத்தத்தால் உணவுகள் சமைக்கப்படுகின்றன என்பது தெரிந்த விடயம். மாதம் தோறும் எரிவாயு சிலிண்டர் என்ற திரவ பெட்ரோலியம் வாயு உருளைக்கு 450 ரூபாய் வரை செலவிடுகிறோம். சில குடும்பங்களுக்கு இந்த ஒரு சிலிண்டரும் குறைவானதாகவே இருக்கிறது. இந்த வாயுவானது சுற்றுச்சூழலை வெப்பபடுத்துகிறது. இது தவிர, சமைக்கப்படும் உணவின் சுவையும் குறைவு தான். இது தவிர,குக்கர் உணவுகள் சர்க்கரை நோய் போன்றவற்றை ஏற்படுத்துவதற்கு ஒரு காரணமா என்ற கேள்விக்குறியுடன் இருக்கிறது. இது போன்ற கேள்விகள், பாதிப்புகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு குறைவான செலவில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல், நோய்கள் எதுவும் தாக்குவதற்கு காரணமாகமல் இருககும் வகையில் ஒரு சமையல் பாத்திரத்தை உருவாக்க முடியுமா? என்ற எண்ணத்தில் உருவானது தான் சராய் குக்கர்.


இந்தியாவின் தொழில் நகரமான புனே நகரை சேர்ந்த சமுச்சி என்விரோ டெக் என்ற நிறுவனம் இந்த குக்கரை உருவாக்கியுள்ளது. கிராமப்புற மக்களின் எரிபொருள் தேவையை கருத்தில் கொண்டு தான் இந்த குக்கர் உருவாக்கப்பட்டது என்றாலும், இன்றைக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் உள்பட சுற்றுச்சூழலை கெடுக்கும் எரிபொருள்களின் விலை உயர்வதாலும், தட்டுப்பாடு இருப்பதாலும் இந்த சராய் குக்கரை அனைவரும் பயன்படுத்துவதன் மூலம் வழக்கமான எரிபொருளை குறைக்கலாம்.
இது பற்றிய ஒரு பார்வை


 • இந்த குக்கர் என்பது ஒரு பெரிய தூக்குவாளி போன்ற அமைப்பில் தான் உள்ளது. அதாவது மும்பை "டப்பா வாலாக்கள்' வைத்திருப்பது போன்ற அமைப்பில் இருக்கிறது. அடுப்பும், சமையல் பாத்திரமும் இணைந்த ஒரு அமைப்பாக இருக்குமாறு உருவாக்கப்பட்டிருக்கிறது.
 • ஸ்டெயின்லஸ் ஸ்டீல் உலோகத்தால் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இது வெப்பம் மற்றும் நீராவி கொண்டு சமையல் செய்யும் அடிப்படை முறையில் இயங்குகிறது. அதாவது மிதமான தீயில், குறைந்த வெப்பத்தில் உணவு தயாரிக்கப்படுவதால் உணவின் சுவை அபாரமாக இருக்கிறது.
 • நமது பிரஸடிஜ் குக்கரில் உள்ளது போல் வால்வ், கேஸ்கட், விசில் எதுவும் இல்லை. இதனால் அரிசிக்கு இத்தனை விசில், பருப்புக்கு இத்தனை விசில் என்று எண்ணிக் கொண்டிருக்க தேவையில்லை. சமையலை தொடங்கி விட்டால் 30 நிமிடம், 45 நிமிடம் என்ற கணக்கில் முடித்துவிடலாம்.
 • இதற்கு எரிபொருளாக நிலக்கரி பயன்படுகிறது. இதில் எரிக்கப்படும் நிலக்கரி 100 சதவீதம் தூய்மையாக எரிவதால் சுற்றுப்புற சூழலுக்கு நண்பனாக இருக்கிறது.
 • இந்த அமைப்பில் இருக்கும் அடுப்பை மட்டும் பயன்படுத்தி எண்ணெய் இல்லாத அப்பளம்,பப்படம், ஆக்டிவ் 2 மக்காச்சோளம் போன்றவற்றை வறுத்தெடுக்கலாம்.
 • இந்த குக்கரை சுற்றுலா செல்லும் போது கையோடு எடுத்து சென்று பயன்படுத்தலாம்.
 • சமையல் முடிந்ததும் குக்கரை திறக்காமல் இருந்தால், தயாரிக்கப்பட்ட உணவு 2 முதல் 4 மணி நேரம் வரை சூடாகவே இருக்கும்.
 • ஒரு குடும்பத்தில், அதாவது 5 நபர்களுக்கு சமையல் செய்ய 200 முதல் 250 கிராம் நிலக்கரி போதுமானது.
இந்தக்காலத்தில் உட்கார்ந்து கொண்டு நிலக்கரியை பற்ற வைக்க முடியுமா என்ற கேள்வி எழுப்புபவர்களுக்கு ஒரு பதில்....
 • சோம்பலுடன் உட்கார்நது கொண்டு சுவிட்சை போட்டவுடன் கெய்சரில் வெந்நீர் வரவேண்டும், அப்படியே வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்து விட்டு போக வேண்டும் என்று ஆசைப்பட்டால் உடல் சிறிது காலத்தில் சோம்பலால் எதையும் செய்ய இயலாததாக ஆகிவிடும் என்பதே உண்மை. இது போன்ற அடுப்பு ஒன்றை வாங்கி சொஞ்சம் நிலக்கரியை அடுப்பில் போட்டு, சூடத்தை எடுத்து நெருப்பை பற்ற வைத்தால் சற்று நேரத்தில் நிலக்கரி வெப்பத்தால் கணன்று தீக்கணலாக மாறிவிடும்.
 • இப்படி ஒரு செயல்முறையில் நீங்கள் இறங்கும் போது குனிந்து, நிமிர்ந்து வேலை பார்ப்பது ஒரு உடற்பயிற்சியாக மாறும்.
 • நெருப்பை தீக்கணலாக மாற்ற வாயால் அழுத்தம் கொடுத்து ஊதும் போது உங்கள் நுரையீரல் நன்றாக விரிவடைகிறது. இதனால் உடலுக்கு நிறைய பிராணவாயு கிடைக்கிறது.
 • புகை வருமே என்று கவலை வேண்டாம். இந்த அடுப்பு புகை கக்காத படி தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. சராய் குக்கரின் அடிப்பாகத்தில் நிலக்கரியை போட்டு பயன்படுத்துவது போன்ற வடிவமைப்பு உள்ளது. ஆனால் இப்படி இல்லாமல் தனியாக அடுப்பு போன்ற அமைப்புடன், அதன் மேல் பாத்திரத்தை வைத்து பயன்படுத்துவது போன்ற மாடலும் இருக்கிறது.


அதாவ இந்த குக்கரில் சமைப்பதால் உணவின் சுவை அதிகரிக்கிறது.எப்படி தெரியுமா? இது இயற்கை எரிபொருளான நிலக்கரியால் சமைக்கப்படுகிறது. இரண்டாவதாக நமது வழக்கமான குக்கரில் உணவு கடுமையான வெப்பத்தால் அழுத்தப்படுவது போல் இதில் அழுத்தப்படுவதில்லை. இயற்கையான வெப்பத்தில் மெல்லிய தீக்கணலில் அழுத்தமில்லாமல் உணவுகள் வெந்து வருவதால் உணவின் சுவையும்,சத்துப் பொருட்களும் அப்படியே இருக்கின்றன.


வீடுகளுக்கு, உணவு விடுதிகளுக்கு என்று தனிதனியாக மாடல்கள் உள்ளன. இது பற்றி மேலும் விவரமறிய இங்கு போய் பாருங்களேன்!!
http://www.arti-india.org/downloads/pdfs/ARTIEnergy_May2010.pdf

Samuchi Enviro-Tech Pvt Ltd,
Flat no.6.Ekta Park Co-op Hsg.Soc.,Showroom.
Law College Road.Erandawane,Pune-411 004.
Email:samuchi.envirotech@gmail.com

ந்த வகையான அடுப்புகளை போல் அல்லாமல் இதே குக்கரின் அறிவியல் தத்துவத்தில் மதுரையை சேர்ந்த பாண்டவா எனர்ஜி சொல்யூசன்ஸ் என்ற நிறுவனம் பெரிய உணவகங்கள், விடுதிகள், சிறிய மெஸ்கள் போன்ற இடங்களுக்கு விறகை எரிபொருளாக பயன்படுத்தும் அடுப்புகளை தயாரிக்கின்றனர். இவர்களது அடுப்புகளில் மழையில் நனைந்த விறகை வைத்தாலும் எரியும் என்பது தான் சிறப்பம்சம். ஒரு விறகு 2 மணி நேரத்திற்கு எரிகிறது. இதுவும் ஒரு அதிசயம் தான். இந்த அடுப்புகளை பயன்படுத்தி ஓட்டல்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சுவையான உணவுகளை தரலாம் என்பது உறுதி. இந்த அடுப்புகள் பற்றி விபரமறிய....99443 84012 என்ற எண்ணில் அறியலாம்.

பத்திரிகையாளர்களுக்கு பேனா ஒரு ஆயுதம். பதிவர்களான நமக்கு மொபைல் போன் ...

1 கருத்துகள் டிராபிக் சாமி...தமிழகத்தின் பொதுப்பிரச்சனை என்றால் கண்டுகொள்ளப்படும் பெயருக்கு சொந்தக்காரர்! தனியாக நின்று பல பொதுப்பிரச்சனைகளுக்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மக்களின் பிரச்சனைகள் தீர வழிவகுத்த ஒருவர். நாமும் நாள் தோறும் பல இடங்களுக்கு செல்கிறோம்.

அங்கெல்லாம் பொதுநலனுக்கு மாறாக எத்தனையோ விடயங்கள் கண்ணில் தட்டுப்பட்டும வழக்கம் போல் 'உச்' கொட்டி விட்டு வந்து விடுகின்றோம்.இது போன்ற பிரச்சனைகளுக்கு நம்மால் வழக்கு தொடுத்து தீர்வு காண முடியவில்லை என்றாலும், இங்கு அந்த காட்சிகளை பதிவாக்கி வைக்கலாமே என்ற ஒரு நோக்கத்தோடு இந்த முயற்சி. கை கொடுங்கள் நண்பர்களே!

உலகம் முழுவதும் இன்று சுற்றுச்சூழல் மிகவும் விவாதிக்கப்படும் பிரச்சனையாக மாறிவிட்டிருக்கிறது. தொழில்மயம் ஆக்கலில் இது போன்ற பிரச்சனைகள் இயல்பு தானே என்றெல்லாம் பேசப்பட்டு வந்த காலம் கடந்து வருகிறது. மாற்றங்கள் மனிதனை உயர்த்துவதை விட, மனிதனுக்கே எதிராக மாறி வருவதை எப்படி சகித்துக் கொள்ள முடியும். சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு ஒரு உத்தரவிட்டிருக்கிறது. மனிதர்களை கழிவுச்சாக்கடைக்குள் இநங்கி சுத்தம் செய்வதை அனுமதிக்க கூடாது என்பதே அந்த உத்தரவு.

ஆனால் இது எந்த அளவில் கடைபிடிப்ப பட போகிறது என்று தெரியவில்லை. இப்படி கடைபிடிக்காமல் போனதால் நாம் இழந்து வருவது ஏராளம்.
வானை முட்டும் செல்போன் டவர்களால் இன்றைக்கு நகரத்தில் நாட்டுக்குருவிகளை காண முடியவில்லை. காணும் நிலங்கள் எல்லாம் நமக்கே சொந்தம் என்று நினைத்த சிலரால், ஆங்காங்கே இருந்த கண்மாய்கள்,குளங்கள் எல்லாம் கட்டிடங்களாக ஆகிவிட்டன. யார் எப்படி போனால் என்ன என்று கருதும் சிலர் ரோடுகளிலும், தெருக்களிலும் குப்பைகளை கொட்டி நாறடித்து நோயை பரப்பி விடுகிறார்கள்.

இது போல்,
 • ஊருக்கெல்லாம் உபதேசம் செய்யும் அரசின் வாகனங்கள் அடுத்தவருக்கு ஆஸ்துமா வரும் அளவு புகை கக்குவது,
 • மாநகராட்சி குப்பை வண்டியே குப்பைகளை ரோட்டில் வாரிவிட்டு செல்வது,
 • குண்டு பல்புகளை நீக்குங்கள் என்று சொல்லும் அரசு அலுவலகங்களில் பகல் வேளைகளில் கொளுந்து விட்டு எரியும் பல்புகள்,
 • மரம் நீங்கள் வளர்த்தால்..மரம் உங்களை வளர்க்கும் என்று சொல்லும் அரசு..ஆனால் மரத்தை வெட்டும் அரசு ஊழியர்கள்,
 • மருத்துமனைக்கு பக்கத்தில் மயானம் போல் சுண்ணாம்பு காளவாசல்,
 • தண்ணீரை பழித்தால் தாயை பழிப்பது போல் என்றாலும், ஆற்றில் மலக்கழிவு, இறைச்சிக்காக வெட்டப்பட்ட விலங்குகளின் கழிவுகள்,
 • சினிமா போஸ்டரை மேயும் மாடுகள்,
 • நிலத்தடி நீரை சேமிப்போம் என்று அரசு கூறினாலும், தெருக்குழாயில் திருகு இல்லாமல் வீணாக ஓடும் குடிநீர்,
 • கழிப்பிடம் இல்லாமல் ரோடுகளில் சிறுநீர் கழிக்கும் மனிதர்கள்,
 • சாக்கடை குளமாக தேங்கிக் கிடக்கின்ற இடத்தில், நல்ல குடிதண்ணீருக்காக தெருக்குழாயில் மல்லுக்கட்டும் மக்கள்,
 • ஆட்டோக்களில் ஆடு,மாடுகள் போல் திணிக்கப்பட்ட மக்கள் கூட்டம்,
 • குப்பை மேட்டுக்கு அருகில் காய்கறி சந்தை
 • ஒட்டு மொத்தத்தில் இவை அனைத்தும் ஏதோ ஒரு விதத்தில் சுகாதாரக் கேடு. மனிதருக்கும் கேடு.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் சொல்வதுடன் நின்று விடக்கூடாதல்லவா....


போகிற போக்கில் உங்கள் மொபைல் போனில் இந்தக்காட்சிகளை எல்லாம் புகைப்படமாக எடுங்கள்,
அப்படியே treesday@gmail.com க்கு அனுப்புங்கள். நம் பல்வேறு மாவட்ட பதிவர்களின் புகைப்படங்கள் எல்லாம் ஒரு இடத்தில் குவியட்டும். அதை சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு அனுப்புவோம், தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையுடன்!

ஆக,பத்திரிகையாளர்களுக்கு பேனா ஒரு ஆயுதம். பதிவர்களான நமக்கு மொபைல் போன் ஒரு கருவியாக இருக்கட்டுமே!
நீங்கள் எடுத்த புகைப்படங்களுடன் உங்கள் பெயர், புகைப்படம் எடுக்கப்பட்ட இடம், எடுத்த நாள், நேரம் உள்பட விவரங்களை அனுப்புவது சிறப்பு.

கட்டுரை போட்டி அறிவிப்பு-தேர்தலில் பணச்செல்வாக்கு மற்றும் வன்முறையை தவிர்ப்பது எப்படி?

0 கருத்துகள்

சென்னையை சேர்ந்த 'நந்தினி வாய்ஸ் பார் தி டிப்ரைவ்டு' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கீழ்க்கண்ட தலைப்பில் அகில இந்திய அளவில் கட்டுரை போட்டி நடத்துகிறது.

தலைப்பு: தேர்தலில் பணச்செல்வாக்கு மற்றும் வன்முறையை தவிர்ப்பது எப்படி?

கல்லூரி மாணவ மாணவியர்களை மேற்கூறிய பிரச்சனைகளைப் பற்றி ஆலோசிக்க ஊக்கப்படுத்தி அவர்களின் கருத்துக்களை வெளியிட வாய்ப்பளித்து, அவர்களின் பரிந்துரைகளை மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் தெரிந்து கொள்வதற்காக, நந்தினி வாய்ஸ் பார் தி டிப்ரைவ்டு கல்லூரி மாணவ.மாணவியருக்கு இந்த போட்டியை நடத்துகிறது.

இந்த போட்டியில் கலந்து கொள்ள விதிமுறைகள்

 • இந்தியாவிலுள்ள அனைத்துக்கல்லூரி மாணவ மாணவியர்களும் இக்கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
 • போட்டிக் கட்டுரையானது தமிழ், ஆங்கிலம்,இந்தி ஆகிய மொழிகளில் ஏதாவது ஒரு மொழியில் 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதப்பட வேண்டும்.
 • கட்டுரைகள் மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம்.
 • பத்து சிறந்த கட்டுரைகளுக்கு பரிசு அளிக்கப்படும்.

போட்டிக்கட்டுரை கீழ்க்கண்ட முகவரிக்கு ஜனவரி 10 ஆம் திகதிக்குள் வந்து சேர வேண்டும் என்று இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

தொடர்புக்கு
என்.எஸ்.வெங்கட்ராமன், நிறுவனர்.
நந்தினி வாய்ஸ் பார் தி டிப்ரைவ்டு,
எம்.60-1, 4 வது குறுக்கு தெரு, பெசண்ட் நகர், சென்னை-600 090.
தொலைப்பேசி எண்: 044-2491 6037. 2446 1346

மின்அஞ்சல்: nsvenkatchennai@gmail.com
இணையதளம்:         http://www.nandinivoice.org/

நீங்கள் சிறுகதை எழுத்தாளரா? உங்களுக்கு ஒரு வாய்ப்பு

0 கருத்துகள்

பொது தகவல் அறிவிப்புகள்
ன்றைக்கு நம்மில் மாற்றுத்திறனாளிகள் பலர் பல்வேறு சாதனைகளை செய்து புகழ்படைத்துள்ளார்கள். அவர்களை மேலும் ஊக்குவிக்கும் விதமாக மதுரையை சேர்ந்த 'அதிதி'( அன்னை திறனேற்ற பயிற்சி திண்ணை) என்ற அமைப்பு தமிழ்சிறுகதை ஆர்வமுள்ள எழுத்தாளர்களுக்கு ஒரு போட்டியை அறிவித்துள்ளது.
மாற்று திறனாளிகள் மறுவாழ்வு பற்றிய விழிப்புணர்வு வளரும் நோக்கத்துடன் இந்த போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

 • தலைப்பு   -'இறைவன் கொடுப்பது ஒரு வாழ்வு, மனிதன் கொடுப்பது மறுவாழ்வு'

தேர்வு செய்யப்படும் சிறந்த 3 சிறுகதைகளுக்கு பரிசும், பாராட்டும் வழங்கவுள்ளது இந்த அமைப்பு.

மேலும் இது பற்றிய விபரங்களுக்கு
வி.ஆர்.கணேஷ்.
நிர்வாக இயக்குநர்,
அன்னை திறனேற்ற பயிற்சி திண்ணை.
93441 25161 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இயற்கையாகவே மனிதருக்கு இரங்கும் சிந்தனை கொண்டவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டு உஙகள் திறனை வெளிக்கொண்டு வரலாம். எடுங்கள் பேனாவை, எழுதுங்கள் உங்கள் மனவோட்டத்தை.......நன்றி!

தயவு செய்து இந்த செய்தி எழுத்து திறன் மிக்கவர்களை சென்று சேர வாக்களியுங்கள் சகோதரர்களே!

உங்கள் பணம் உங்களுக்கே தெரியாமல் குப்பைக்கு போகுது...தெரியுமா?

6 கருத்துகள்

நீங்கள் மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பவரா? அப்படியானால் உங்களுக்கே தெரியாமல் 150 ரூபாய் குப்பைக்கு போகிறது. அது எப்படியென்று தெரியுமா? நீங்கள் உங்கள் பயன்பாட்டுக்காக வாங்கிய பெர்ப்யூம் அடங்கிய ஈயா கேன், கண்ணாடி பாட்டில்கள், தீர்ந்து போன ரீபிள்கள், டப்பாக்கள் என்று அவை தீர்ந்து போன பிறகு குப்பைக்கு போகிறதே...அது தான் உங்கள் பணம். மறைமுகமாக நீங்கள் உங்கள் பணத்தை குப்பையில் தூக்கி எறிகிறீர்கள்.

சரி...இப்படி காலியான பாட்டில், டப்பா,கண்ணாடி,பாலிதீன், காகிதங்கள் என்று அத்தனையையும் வீட்டின் மூலையில் ஒரு சாக்கில் சேமித்து வைத்து மாதம் ஒரு முறை பழைய பேப்பர் கடையில் போட்டால் எனன விலைக்கு போகும் என்று ஒரு பரிசோதனை செய்து பாருங்கள். அப்போது தான் தெரியும். இவ்வளவு நாளாக நீஙகள் எவ்வளவு பணத்தை இழந்திருக்கிறீர்கள் என்று!
பாலிதீன் பைகளை பயன்படுத்தக் கூடாது என்று அரசு தடைவிதித்தாலும், நம் அன்றாட வாழ்வில் பாலிதீன் பைகள் இணைந்து விட்டன. இந்த தொழிலை நம்பி பல லட்சம் குடும்பங்கள் இருக்கின்றன.

இப்போது இந்த பாலிதீன் பைகளை எல்லாம் ஒன்று சேர்த்து இயந்திரத்தில் போட்டு அரைத்து சிறுசிறு துகள்களாக ஆக்கி,பின்னர் வெப்பத்தில் உருக்கி ரோடு போட பயன்படுத்துகிறார் மதுரையை சேர்ந்த பேராசிரியர் ஒருவர். சரி இது பற்றிய தகவர் தனி பதிவில் போடுகிறேன்.
இப்போது...நாம் தூக்கி எறியும் இது போன்ற குப்பைகளின் மதிப்பு பற்றி பார்க்கலாம்.
 • தரமான பாலிதீன் பைகளில் இருந்து பிளாஸ்டிக் ஹோஸ்,பிளாஸ்டிக் டப்பாக்கள் தயாரிக்கிறார்கள். அதாவது சின்டெக்ஸ் தொட்டி போன்றவை தொடங்கி பைப்புகள் வரை தயாரிக்கிறார்கள். நாம் தூக்கி போடும் பாலிதீன் பைகளை இது போன்ற பொருட்கள் தயாரிக்க வாங்கிக் கொள்கிறார்கள். ஆக..பாலிதீன் பைகளை சேர்த்து வைத்தால் கிலோ ஒன்றுக்கு 10 ரூபாய்க்கு எடுத்துக் கொள்கிறார்கள்.
 • பிளாஸ்டிக்கில் 'கடக்' பிளாஸ்டிக் என்று ஒரு வகை. அதாவது கையால் உடைத்தால் உடைந்து போகும் ரகம். இது கிலோ ஒன்றுக்கு விலை 4 ரூபாய். இந்த பிளாஸ்டிக்கை இரண்டாம் தர பிளாஸ்டிக் என்கிறார்கள். இந்த வகை பிளாஸ்டிக்குகள் பெயிண்ட் பிரஷ் கைப்பிடி, குடம் தயாரிக்க போகிறது.
 • நீஙகள் டிவி.மிக்சி என்று பொருட்கள் வாங்கும் போது அட்டையில் சுற்றி பேக்கிங் செய்து வரும். இந்த வகை அட்டை பெட்டிகள் கிலோ 3 ரூபாய்க்கு போகிறது. இந்த அட்டைகள் மீண்டும் புதிய பேக்கிங் அட்டைகள் செய்ய பயன்படுகிறது.
 • சிகரெட் பெட்டிகள் கிலோ ஒன்றுக்கு 2 ரூபாய் வரை விலை தருகிறார்கள். இந்த சிகரெட் பெட்டிகளை மறுசுழற்சி செய்து மீண்டும் அட்டைகள், பேப்பர் தயாரிக்க பயன்படுத்துகிறார்கள்.
 • பிளாஸ்டிக் வயர்களை துண்டுதுண்டாக கிடந்தால் அவற்றையும் குப்பையில் போடுவோம். ஆனால் அவற்றின் உள்ளே உள்ள காப்பர் கம்பியின் விலை கிலோ ரூ.80 க்கு வாங்கிக் கொள்கிறார்கள்.
 • தேங்காயை எடுத்து சட்னி அரைத்து விட்டு சிரட்டையை தூக்கி எறிந்து விடுவோம். இது போன்ற சிரட்டையின் மதிப்பு 1 டன் ரூ.2500க்கு விலை போகிறது. இந்த சிரட்டையை வைத்து செங்கல் சூளையில் விறகுக்கு பதிலாக செங்கலை சுட பயன்படுத்துகிறார்கள். இது தவிர கொசுவர்த்தி, தயாரிக்கவும் சிரட்டை பயன்படுகிறது.
 • பால் கவர்கள் கிலோ ரூ.10 முதல் 15 வரை கொடுத்து வாங்கி கொள்கிறார்கள்.
 • தகரம் கிலோ 4 ரூபாய்க்கும், பழைய இரும்பு கிலோ 12 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள்.
 • வீட்டில் தினமும் டீ தயாரித்து சாப்பிடுகிறீர்களா? வீணாகும் டீத்தூளை அப்படியே சேர்த்து வைத்திருங்கள். இவற்றை வைத்து உரம் தயாரிக்கிறார்கள். காபி தூளிலிருந்தும் தான் இப்படி உரம் தயாரிக்கிறார்கள். ஆக..வீணான இந்த டீ.காபி தூள்களில் விலை 10 கிலோவுக்கு 5 ரூபாய் தருகிறார்கள்.
 • பெட்பாட்டில் வாங்கி விட்டு தூக்கி போடாதீர்கள். வீணான பெட்பாட்டிலின் விலை கிலோ 8 ரூபாய்.
 • பழைய வெள்ளை பேப்பர் கிலோ ஒன்றுக்கு 6 முதல் 10 வரை கிடைக்கும்.
 • அரசு அலுவலகங்களிலிருந்து வரும் பேப்பர் கழிவுகள் மற்றும் பிரிண்டிங் பிரஸ் கழிவுகளிலிருந்து வெள்ளை பேப்பர் கழிவுகளை மறு சுழற்சி செய்து மீண்டும் பேப்பர்கள் தயாரிக்கிறார்கள்.
 • அலுமினியம் பாயில் பேப்பர்( உணவு பொருட்களை பார்சல் செய்ய பயன்படுவது) கிலோ 18 ரூபாய்க்கு வாங்குகிறார்கள். இதை மறுசுழற்சி செய்து அலுமினிய பேப்பராக மீண்டும் செய்கிறார்கள்.
 • தலைமுடி கிலோ 1 ரூபாய் முதல் 2 ரூபாய்க்கு எடுத்துக் கொள்கிறார்கள்.
 • நெர்லான் செருப்புகள் கிலோ 8 ரூபாய்க்கு விலை போகிறது.
 • வீணான டியூப்லைட் ஒன்றுக்கு 1 ரூபாய் விலை நிர்ணயித்து வாங்குகிறார்கள்.
 • ரப்பர் கழிவுகள்,டயர்களை மறுசுழற்சி செய்து ரப்பர் பொருளாக தயாரிக்கிறார்கள். எனவே வீணான டயர்கள், டியூப்களை வைத்திருங்கள். இவற்றை கிலோ 5 முதல் 10 வரை தருகிறார்கள்.

ஆக...இனி எதையும் வீட்டுக்கு வெளியே தூக்கி போடும் போது ஒரு முறை சிந்தியுங்கள். அது உங்கள் பணம். அப்படியே வைத்திருந்து மாதம் ஒரு முறை பழைய பேப்பர்காரரிடம் கொடுங்கள். அவர் உங்களுக்கு ரூபாய் நோட்டுக்களை திருப்பி தருவார். இந்த பழக்கத்தை பார்க்கும் உங்கள் குழந்தைகளும் எதையும் வீணாக்காமல் இருக்க கற்றுக் கொள்வார்கள்.

இத்துடன் ஒரு விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை செய்தி.

நீங்கள் ஏன் குப்பைகளை வீணாக ரோட்டில் எறியக்கூடாது? பேட்டரி செல், பெயிண்ட் டப்பாக்கள்,பினாயில் பாட்டில், பேனாரீபிள் உள்பட சில கழிவுகளை அபாயகரமான கழிவுகள் பட்டியலில் சேர்த்திருக்கிறார்கள்.காரணம், இவை பூமியில் தூக்கி எறியப்படும் போது, மக்காமல் அப்படியே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு இருக்கும் போது மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. அதாவது பால்பாயிண்ட் பேனாரீபிளில் பாலிவினைல் குளோரடு என்ற வேதிப்பொருள் இருக்கிறது. இந்த ரசாயனம் மண்ணை கடுமையாக பாதிக்கிறது. நிலத்தடி நீரை பூமிக்குள் செல்லவிடாமல் தடுக்கின்றன.
வீட்டில் ப்யூஸ் ஆன டியூப்லைட்டுகளை குப்பையில் போடும் போது அதை சிறுவர்கள் டமார் என்று கல்லை தூக்கி போட்டு உடைப்பார்கள். இந்த ட்யூப்லைட்டை உடைக்கும் போது வெளிப்படும் பாதரசம் பூமியில் 300 அடி தூரம் வரை போகுமாம்.இந்த பாதரசம் செடி,கொடிகள்,பயிர்கள் வளர பூமியில் இருக்கும் நைட்ரஜன் சத்தை இல்லாமல் ஆக்கி விடுமாம்.

மக்களை பற்றி எதுவும் அக்கறை இல்லாத சில மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு சிரிஞ்ச் மூலம் ஊசி போட்டு விட்டு அந்த சிரிஞ்சுகளை அப்படியே குப்பையில போடுகிறார்கள். சில மோசமான குணம் கொண்ட தொழில் நபர்கள் இந்த வகையான பிளாஸ்டிகள் சிரிஞ்சுகளை வெப்பத்தில் எரித்து தண்ணீர் குடங்கள் செய்வது தான் கொடுமை.
இவையெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் தற்போது பெய்த மழையில் நகரின் பல சாக்கடைகள் அடைத்துக் கொண்டதால் த்ான் தண்ணீர் முறையாக வெளியேற வழியில்லாமல் இந்த குப்பைகள் அடைத்துக் கொண்டதும் ஒரு காரணம்.

ஆக...இனியாவது குப்பைகளை வீண் என்று தூக்கி எறியும் முன் ஒரு நொடி சிந்திப்ப்போம். இதை உங்கள் வீட்டில் இருந்தே தொடங்குங்கள். நாளை உங்கள் குழந்தை எதையும் வீணாக்க துணியாது. காசின் மதிப்பை எதிர்கால சந்ததிக்கு கற்றுக் கொடுக்க இதுவும் ஒரு ஐடியா!

காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today