மனிதர்களின் பேராசைக்கு இரையாகும் இருதலை மடையர்கள்!!!'பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள்'. ஆனால் தற்போது மனித படையைக் கண்டு ஒரு பாம்பு ஓடுகிறது. மனிதனின் பேராசைக்கு இந்த பாம்பு ஏராளமாக இரையாக தொடங்கியிருக்கிறது. அது, இருதலை மடையன் அல்லது இருதலையன் மணியன் என்றும் அழைக்கப்படும் மண்ணுளி பாம்பு.

இந்த பாம்பில் இருந்து ஆஸ்துமா, எலும்புருக்கி நோய்,எயிட்ஸ் நோய் போன்ற நோய்களுக்கு மருந்து தயாரிக்கப்படுவதாகவும், இந்த பாம்புகளை பிடித்து விற்றால் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை தரப்படுவதாகவும் புரளி கிளம்பியது. இதனை நம்பிய அப்பாவிகள் சிலர் தமிழகத்தின் கிராமங்களில் அப்பாவியாக ஆங்காங்கே திரியும் மண்ணுளி பாம்புகளை பிடிக்க படையெடுத்தார்கள். அழியும் நிலையில் உள்ள இந்த பாம்புகளை பிடிப்பது குற்றம் என்பதால் இந்த மண்ணுளி பாம்புகளை பிடித்தவர்களை போலீசார் பிடித்து சிறையிலடைத்தார்கள்.

 இவர்களிடமிருந்து இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மண்ணுளி பாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எதையாவது பிடித்து, எதையாவது விற்று குறுகிய காலத்தில் பணக்காரர்களாக ஆகி விட வேண்டும் என்பது தான் இவர்களின் நோக்கம். மிகப்பெரிய இலக்கியங்களையும், இலக்கணங்களையும் படைத்த, கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றி மூத்த தமிழ்க்குடிகளின் நிலைமை பரிதாபமாக இருக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த பதிவின் நோக்கம் என்பது பாம்புகளை பற்றிய ஒரு அறிமுகத்திற்காக.முதலில் இங்கு பாம்புகளை பற்றிய பொதுவான செய்திகளையும், இந்திய நாட்டில் காணப்படும் நச்சுள்ள, நச்சற்ற பாம்புகளையும் பற்றி பாம்பு என்ற லேபிளின் கீழ் பதிவிடுகிறேன். 

பாம்புகள்  மனிதர்களின் நண்பர்கள். காரணம், பாம்புகள் இல்லையென்றால் மனிதன் கடினமாக உழைத்து விதைத்து அறுவடை செய்யும் நெல்மணிகளை பெருச்சாளிகள் கொண்டு சென்று விடும். இந்த பெருச்சாளிகளை தேடிப்பிடித்து கொல்லும் ஒரே ஊர்வன என்றால், அது பாம்பு தான். குறிப்பாக  மணியன் வகை பாம்புகள் எலியையும், எலிக்குட்டிகளையும் பெருகவிடாமல் தின்று தீர்த்து விவசாயிகளுக்கு பெரும் அளவு உதவியாக இருக்கின்றன.
பாம்புகள் -பொதுவான செய்தி
உலகில் சுமார் 2000 வகை பாம்புகள் இருக்கின்றன. இதில் 400 வகை பாம்புகள் இந்தியாவில் இருக்கின்றன. இவற்றில் சுமார் 20 வகையான பாம்புகள் தான் நச்சுப் பாம்புகள். அதிலும் இந்த வகை எல்லாவற்றுக்கும் மனிதனை கொல்லக்கூடிய அளவு நச்சு கிடையாது. இதிலும் 5 வகையான பாம்புகள் தான் கடித்தால் மரணத்தையோ அல்லது துன்பத்தையோ தரும் வலிவுடைய பாம்புகள் நச்சுப்பாம்புகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அவை
INDIANCOBRA
1.நாகங்கள்  2.கட்டு விரியன்கள்  3.தட்டைவாற் கடற்பாம்புகள். 4.விரியன் பாம்புகள்   5. ஆப்ரிக்க காடுகளில் காணப்படும் ப்ளாக் மாம்பா (இந்த பாம்பு கடித்தால் மிகப்பெரிய மாடுகளும், யானைகளும் நொடியில் இறந்து விடும்)  6.ஆஸ்திரேலியாவில் காணப்படும் புலிப்பாம்பு ஆகியவை.
பாம்புகளை பற்றி ஆய்வு செய்யும் நிபுணர்கள், பாம்புகளின் குணத்தை பிரிக்க அந்த பாம்புகளின் உடலின் அடிப்பாகத்தில் அமைந்த அடையாளங்களையும், செதில்களின் எண்ணிக்கையும் வைத்து தான் பிரிக்கின்றனர்.

உதாரணமாக, நாம் அனைவரும் பயப்படும் நாகப்பாம்பு அல்லது நல்ல பாம்புக்கு உடலின் அடியில் இருக்கும் செதில்களின் எண்ணிக்கை 176 முதல் 200 வரை. இதன் 'படம்' (தலையில்) இரண்டு சக்கரம் கொண்டது. ஆனால் ஒரே சக்கரம் கொண்ட நல்ல பாம்பும் இருக்கிறது. இந்த சக்கரத்தை அடிப்படையாக வைத்து இதிலும் ஐந்து உட்பிரிவுகளை பிரித்துள்ளார்கள்.

'நாயா நாயா நாயா' என்றால் தென்னிந்தியாவில் காணப்படும் நல்லபாம்பு இனம். இவற்றுக்கு இரண்டு சக்கரம் உண்டு. 'நாயா நாயா கெளதியா' என்ற நல்ல பாம்பு இனத்திற்கு ஒரு சக்கரம் தான் உண்டு. இந்த இனத்திற்கு கழுத்தின் அடிப்புறம் பட்டையாக கருமை நிறம் இருக்கும். 'நாயா நாயா ஆக்சியானா' என்ற நல்லபாம்பு இனத்திற்கு அடிப்பாக செதில்கள் 183 முதல் 213 வரை இருக்கும். 'நாயா ஹண்ணா' என்ற இனத்தை சேர்ந்தது உலகின் அனைத்து பாம்பு ஆய்வாளர்களும் வியந்து பார்க்கும் 'ராஜநாகம்( king cobra)'. இதற்கு வேறு எந்த நாகத்திலும் காணப்படாத இரு பெரிய செதில்கள் உண்டு. அரச நாகமாகிய இரு 18 அடி வரை வளரும். அடர்நத மலைக்காடுகளில் தான் இது காணப்படுகிறது. உலகில் காணப்படும் நச்சுப்பாம்புகளிலலேயே இது தான் பெரியது. இந்த இராஜநாகம், மற்ற நாகப்பாம்புகளை விரும்பி வேட்டையாடுகிறது.

இருதலை மணியன்
நாம் இந்த முதல் பதிவில் குறிப்பிடும் இருதலைமணியனுக்கு நச்சு இல்லை. இந்த இருதலை மணியன் பாம்புகளை தமிழ்நாடு வயல்வெளிகள் எல்லாம் பார்க்க முடியும். இந்த பாம்புகளை காணும் விவசாயிகளும் அவற்றை எதுவும் செய்யாமல் விட்டுவிடுவதுண்டு. காரணம், இவை எலி பிடிப்பதால் தான்.

இந்த இருதலை மணியன் அல்லது மடையன் என்ற பெயர் எப்படி வந்தது?
இந்த பாம்பின் வால் மொட்டையாகவும்,சில பெரிய செதில்களுடனும் இருப்பதால் தலை போல் தோன்றும். இந்த மொட்டை பாகம் மேல் எழும்புவதும், பின்னோக்கி நெளிவதும் இதற்கு தலை போன்ற தோற்றத்தை தருவதாக இருக்கிறது.
மண்ணுளி பாம்பு என்ற இருதலை மணியன்
 இந்த பாம்பு எலிகளை பிடிக்க ஒரு தந்திரத்தை கையாளுவதாக சொல்கிறார்கள். அதாவது, தலை போல் உள்ள வால் பகுதியை எலி இருக்கும் வளையின் உள்ளே விட்டு அப்படியும், இப்படியுமாக ஆட்டுவதுண்டு. அப்போது தனது வளைக்குள் பாம்பு வந்து விட்டதாக தவறாக கருதும் எலி, வளையை விட்டு வெளியேற நினைத்து வளையின் மற்றொரு பொப்பான் வழியாக வெளியே குதிக்கும். பொப்பான் என்பது ஒரு பொய்த்துவாரம். இந்த வழியாக தான் ஆபத்து காலத்தில் எலி தப்பிப்பதுண்டு. இந்த பொப்பானுக்கு அருகில் தனது உண்மையான தலையை வைத்து காத்திருக்கும் இந்த இருதலை மணியன், தாவிவரும் எலியை அப்படியே விருந்தாக்கிக் கொள்ளும்.

 இந்த பாம்புகளை வீட்டில் வளர்த்தால் ராசி என்பதாலும் மேலே சொன்னவர்கள் பிடித்து சென்று விற்க முயற்சித்திருக்கிறார்கள். இந்த பாம்புகளை கூட்டில் வைத்து வளர்க்கும் போது மிக சாதுவாக நாய்க்குட்டி போல் இருக்கும். எலி,ஓணான்,அணில், சிறுபறவைகள் ஆகியவை தான் இவற்றின் உணவு. ஆகாரமின்றி நீண்ட நாட்களுக்கு பட்டினி கிடக்கும் தன்மையும் இந்த இருதலை மணியனுக்கு உண்டு. வளர்க்கப்பட்ட இருதலை மணியன்கள் 8 மாத கால அளவிற்கு கூட எதுவும் உண்ணாமல் இருந்ததாக சொல்கிறார்கள். மனிதன் கையில் எடுத்தாலும் இந்த பாம்புகள் எதுவும் செய்வதில்லை. கையில் எடுத்து பந்து போல் சுருட்டினாலும் அது தனக்கு எதுவும் நடப்பதாக காட்டிக் கொள்ளாது. அவ்வளவு பரமசாதுவானது. வீட்டில் ஒரு கூண்டு வைத்து அதில் மண்ணை போட்டு இந்த இருதலை மணியனை போட்டு வைத்தால் மண்ணுக்குள் பதுங்கிக் கொண்டு அப்படியே இருக்கும்.

இயற்கையிலேயே படு சோம்பேறியான இந்த பாம்பை தான் ராசியானது. எய்ட்சுக்கு மருந்து தயாரிக்க முக்கியமான மூலப்பொருள் என்றெல்லாம் கிளப்பிவிட்டு இப்போது கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களின் கடத்தலால் இப்போது எலிகளுக்கு தான் கொண்டாட்டம் ஆகியிருக்கிறது. காரணம், மணியன் இல்லாவிட்டால் மனிதர்கள் விளைவிக்கும் நெல்லை கடத்திக் கொண்டு போய் வளையில் சேமித்து வைத்துக் கொள்ள முடியுமே! ஆக..இருதலை மணியன்கள் இல்லாவிட்டால் விவசாயிகளின் பாடு திண்டாட்டம் தான்.

தட்டுவாழ் உழவன் அல்லது மலை உழவன்
சாய்வாக வெட்டுப்பட்டது போன்ற தோற்றமுடைய வாலுடைய இந்த சிறுபாம்பும் இருதலை மணியன் போன்றது தான். இவை தமிழ்நாட்டில் கொடைக்கானல், ஊட்டி, நீலகிரி, சிறுமலை, குடகு, கேரள மலைப்பிரதேசங்களில் காணப்படுகின்றன. இவற்றில் நஞ்சு இல்லை. தலைக்கூர்மையாகவும், சப்பலாகவும் இருப்பதால் திடீரென பார்க்கும் போது வாலும் தலையும் ஒன்று போலவே தோன்றும். சில பாம்புகள் பென்சில் அளவு தான் பருமனும், நீளமும் உள்ளவை. நம் நாட்டில் சுமார் 25 வகையான மலை உழவன் பாம்புகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இவை எல்லாம் அழகான நிறங்களில் காணப்படுகின்றன. குட்டையான இவற்றின் வாலில் தகடு போன்ற செதில்கள் காணப்படுகின்றன. மேற்தாடையில் 6 முதல் 8 சிறிய பற்கள் இருக்கின்றன. ஒரு தடவையில் 8 குட்டிகள் வரை போடுகின்றன. இவை யாவுமே கையில் எடுத்தால் கடிப்பதில்லை. புழுக்களையும், பூச்சிகளையும் இவை உட்கொள்கின்றன.

இந்திய ராணுவத்தில் பணியாற்றிய கேப்டன் சுரேஷ் என்பவர் பாம்புகளை பல்வேறு இடங்களில் புகைப்படம் எடுத்திருப்பதுடன், பாம்புகள் பற்றி பல தகவல்களையும் சொல்லியிருக்கிறார். அவரது இந்த தளத்தை பாம்பு பிரியர்கள் கண்டிப்பாக(http://captsuresh.com/tag/tips-on-dos-and-don%E2%80%99ts-of-wildlife-photography) பார்வையிடவும். பாம்பு பற்றிய கேள்விகளுக்கும் பதில் தருகிறார்.

0 கருத்துகள்: (+add yours?)

காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today