வாழ்க்கை போராட்டத்தில் முரட்டு தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்ட ஒரு அப்பாவிந்த பூமியில் இருக்கும் விலங்கினங்களை இந்த வலைப்பதிவில் தொகுப்பதன் முதல் கட்டமாக ஊர்வனவற்றில் 'பாம்புகள்' பற்றிய தொகுப்புகளை பதிவிட்டிருந்தேன். அந்த பதிவு தொடரும் அதே வேளையில் சுவாரசியமான முதலைகளை பற்றி ஒரு அறிமுகத்தை இங்கு தருகிறேன். இதை மூன்று பதிவுகளாக எழுதுகிறேன்.
முதலில் முதலையை பற்றிய அறிமுகத்தையும், அதில் எத்தனை வகைகள் எந்தந்த இடங்களில் வசிக்கின்றன என்பது பற்றி பார்க்கலாம். தொடர்ந்து அவற்றின் குணம், இயல்பு, தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் எந்த ஆறுகளில் இவை இருக்கின்றன என்றெல்லாம் பார்க்கலாம்.

அறிமுகம்
சாதிகள்,மதங்கள்,இனங்கள்,வித்தியாசங்கள்,போட்டிகள்,பொறமைகள்,உலகத்தில் காண்பவற்றையெல்லாம் தனதாக்கி கொள்ள வேண்டும் ஆசைகள்....இப்படி ஆறறிவு கொண்ட மனிதனின் அடங்காத ஆசைக்கு எதையும் தங்களுக்காக சேர்த்து வைத்துக்கொள்ள தெரியாத பறவைகளும், பாலூட்டிகளும், ஊர்வனவும் தங்கள் உயிரை இழந்து வருகின்றன. இதில் முதலையும் ஒன்று.

இன்றைக்கு சுமார் 2.5 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தை ஊர்வன இனத்தின் பொற்காலமாக விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அதாவது மொசயிக் ஊழிக்காலம் என்று அழைக்கப்படும் இந்த காலத்தில் தான் டைனோசர் போன்ற நடக்கும் ராட்சத பல்லிகளும், பறக்க தெரிந்த டைனோசர் போன்ற தோற்றத்தில் சிறிது மாறுபட்ட டிரோசர் என்ற ஊர்வன இன விலங்குகளும் இந்த பூமியில் பெருமளவில் வாழ்ந்திருக்கின்றன. இந்த கூட்டத்தின் ஒரு பகுதியாக தான் இன்றைக்கு மீதமிருக்கும் முதலைகளும் வாழ்ந்து கொண்டிருந்திருக்கின்றன. ஆனால் இந்த விலங்குளின் வாழ்வு என்பது பூமியின் மீது ஒரு பெரிய விண்கல் மோதிய போது முடிவுக்கு வந்தது.

சுமார் 650 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியை கடந்த செல்லும் வழியில் ஒரு விண்கல் பாதை மாறி பூமி உருண்டையில் மோதியது. அப்போது குலுங்கிய பூமி தீப்பிடித்து எரிந்தது. அதில் இந்த டைனோசர் உள்ளிட்ட ராட்சத பல்லிக்கூட்டமும் சேர்ந்து எரிந்து போனது. இந்த தீவிபத்தில் லட்சக்கணக்கான இந்த ராட்சத உயிர்களின் மூச்சும் அடங்கி போயின.

ஆனால் உருவத்தில் சிறிதாக இருந்ததால் என்னவோ, முதலைகள் மட்டும் தப்பித்து போயின. அதற்கு பிறகு வந்த இயற்கையின் மாற்றங்களில் சிறிதே பரிணாம வளர்ச்சியில் மாற்றம் பெற்று தற்போது நம்மிடையே பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கின்றன. உலகின் 5 கண்டங்களில் ஐரோப்பா கண்டம் தவிர, மற்ற நான்கு கண்டங்களிலும் முதலைகள் காணப்படுகின்றன. அதாவது உயிர்களின் பிறப்பிடமான நிலநடுக்கோட்டுக்கு தெற்கே தான் இவை வியாபித்துக் கொண்டிருக்கின்றன.

இப்படி பூமிக்கு ஏற்பட்ட பேரழிவிலிருந்து தப்பியதால் என்னவோ, முதலைகளின் தோற்றம் எதையும் தாங்கும் அமைப்பாக உள்ளது. கடினமான, கரடுமுரடான தோலுடன் எதையும் விழுங்கி செரிக்கும் ஆற்றல்,நீரிலும்,நிலத்திலும் வாழும் திறன்,எளிமையான பறவைகளை போன்ற முட்டையிட்டு குட்டிகளை பொறிக்கும் திறன் என்று மற்ற எந்த உயிரினத்திற்கும் இல்லாத ஒரு உடல் அமைப்பை பெற்றிருக்கிறது. இங்கு ஒரு விடயத்தை பார்க்க வேண்டும்.

அதாவது சாதாரணமாக பறந்து திரிந்து சிறிதளவு இரை தேடும் பறவைகளுக்கு தான் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் இயல்பு இருக்கும். ஆனால் ராட்சத உடல் அமைப்பு கொண்ட முதலைக்கு இப்படி ஒரு திறன் எதற்காக வந்திருக்க வேண்டும். பெரும்பாலும் தனக்கு வேண்டிய உணவை அது நீரில் மறைந்திருந்து தான் திடீரென்று கவ்வி பிடிக்கிறது.

இந்த முதலை மற்ற ராட்சத பாலூட்டிகள் போல் குட்டிகளை வயிற்றில் சுமந்து இருக்குமானால் இப்படி நீரில் மறைந்திருந்து மற்ற விலங்குகளை வாயால் கவ்வி சுழற்றி மரணத்தை அவைகளுக்கு பரிசாக அளித்து தனது இரையாக மாற்றிக் கொள்ள முடியாது போயிருக்கலாம். ஆக வாழ்க்கை போராட்டத்தில் தனது பரிணாமத்தை தக்க வைக்க, இப்படி முட்டையிட்டு குட்டிகளை பிறக்க வைத்து தனது இனத்தை தக்க வைத்திருக்கலாம் என்கிறார்கள் விலங்கியல் ஆய்வாளர்கள்.
இனங்கள்
உலகின் பல பகுதிகளில் இருக்கும் முதலைகளையும் இனம் கண்டதில் இதுவரை 22 வகையான முதலை வகைகள் கண்டறிய்பட்டதாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
 1.கருப்புக்கைமன்
இது ஒரு நன்னீர் முதலை. இவை தென்அமெரிக்காவில் ஓடும் அமேசான் ஆற்றுப்பகுதிகளில் வாழ்கின்றன.
2.சைனீஸ் அலிகேட்டர்
சீனாவில் காணப்படுகின்றன நன்னீர் முதலை.
3.அமெரிக்கன் அலிகேட்டர்
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் தெற்குப்பகுதி சதுப்பு நிலங்களிலும்,கடற்கரைகளிலும் வாழக்கூடியது.
4.குவியாஸ் குட்டைக்காமன்
இவையும் அமேசான் நதியில் காணப்படுகின்றன.
5.ஸனீடாஸ் குட்டைக்காமன்
இது பிரேசில்,ஒரினாகோ,சுரினாம் ஆகிய நாடுகளின் சிறிய ஆறுகளில் காணப்படுகின்றன.
6.தட்டை மூக்கு கைமன்
இந்த முதலை பிரேசில் நாட்டில் மட்டுமே இருக்கின்றன.
7.கைமன்
இந்த நன்னீர் முதலை தென்அமெரிக்காவில் காணப்படுகிறது.
8.கியூபன் கைமன்
இதுவும் நன்னீர் முதலை தான்.இது கியூபா நாட்டில் மட்டுமே காணப்படுகிறது.
9.மோர்லெட் முதலை
மெக்சிகோ நாட்டு ஆறு ஏரிகளில் வசிக்கும் இந்த வகை முதலை சில சூழல்களில் ஆறுகளில் முகத்துவாரங்களில் உவர் நீரில் வாழ்கின்றன.
10.அமெரிக்கன் முதலை
பரந்த வடக்கு அமெரிக்க கண்டத்தில் நன்னீரிலும், உவர்நீரிலும் பரவலாக காணப்படுகின்றன.
11.ஆப்பிரிக்க நீள்மூக்கு முதலை
ஆப்பிரிக்காவில் வெப்ப மண்டலக்காடுகளில் வாழும் முதலை இது.
12.நைல் முதலை
மேற்கு ஆப்பிரிக்காவின் நதிகளில் வாழும் இது பரவலாக காணப்படுகிறது.
13.ஒரினகோ முதலை
இந்த முதலை தெற்கு ஆப்பிரிக்கா மற்றும் மடகாஸ்கர் தீவில் பொதுவாக காணப்படுகிறது.
14.இந்தோ பசிபிக் முதலை
இவை நன்னீரிலும்,கடல்நீரிலும் வாழக்கூடியவை, இருப்பினும் இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூகினியா ஆகிய நாடுகளில் முகத்துவாரங்களில் இருக்கின்றன.
15. ஜான்ஸ்டன்ஸ் முதலை
இதுவும் நன்னீர் முதலை. இது வடக்கு மேற்கு ஆஸ்திரேலியாவில் வசிக்கின்றன.
16. சதுப்பு நில முதலை
இந்திய உபகண்டத்தில் இந்த முதலை தான் பரவலாக வாழ்கின்றன. இது தமிழில் முதலை என்றும் இந்தியில் மகர் என்றும் அழைக்கப்படுகிறது.
17.சையாமீஸ் முதலை
தாய்லாந்து, லாவோஸ்,கம்போடியா, வியட்நாம் மற்றும் மலாய் நாடுகளின் சதுப்பு காடுகள், ஆறுகள், ஏரிகளில் இது காணப்படுகிறது.
18. பிலிப்பைன் முதலை
இது பிலிப்பைன்ஸ் தீவுகளான மின்டோவா, குலூ, மாஸ்பேட் மற்றும் இவற்றை சுற்றியுள்ள நாடுகளின் ஆற்றுப்படுகைகள், சதுப்பு நிலங்களில் வாழ்கிறது.
19.குட்டை முதலை
ஓடும் நீரோடைகளில் வசிக்கக்கூடியவை. மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகள் தான் இதன் இருப்பிடம்
20.சிறுகடியால் முதலை
இந்த முதலை போர்னியா, சுமத்ரா, ஜாவா,மலேயா நாடுகளில் வாழும் நீள்மூக்கு கொண்ட சிறு முதலை.
21.கடியால் முதலை.
நீண்ட முக அமைப்பு உடைய இந்த முதலைகள் வடஇந்தியா, பாகிஸ்தான்,நேபாளம்,பங்களாதேசம்,மியான்மர்,பூடான் ஆகிய நாடுகளில் காட்டுநதிகளில் காணப்படுகின்றன.உலகிலேயே இதற்கு தான் நீளமான மூக்கு காணப்படுகிறது.
22. நியூகினியா முதலை
இது சதுப்பு நிலம் மற்றும் ஆறு, ஏரிகளில் வாழ்கிறது. நியூகினியா நாட்டில் காணப்படுகிறது.
 இந்த 22 இனங்களில் ஓரிரு இனங்கள் தவிர மற்ற முதலைகள் எல்லாம் அழியும் அபாய கட்டத்தில் இருக்கின்றன. இவைகளின் எதிரிகள் யார்? மனிதர்களை தவிர வேறு யார் இருக்கமுடியும். பூமிப்பந்தில் விண்கல் மோதல் நடந்த போது டையனோசர்கள் எல்லாம் கூட அழிந்து முதலை தப்பித்தது. ஆனால் இன்றைக்கு மனிதர்களிடம் மாட்டிக் கொண்டு தவிக்கிறது. கண்மூடித்தனமான வேட்டையில் இவற்றின் வாழ்விடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அடுத்த பதிவில் முதலையின் உடல் அமைப்பையும், சிங்கம், காட்டெருமை போன்ற பலமான மிருகங்களை கூட முதலைகளால் எப்படி கொல்ல முடிகிறது என்பது பற்றி பார்க்கலாம்.

(தொடரும்)
முதலைகள் வகைகள் பற்றி ஆங்கிலத்தில் சிறப்பாக தொகுக்கப்பட்டு ஒரு இணைய தளம்..படம் அருமை. சென்று பாருங்கள் http://www.flmnh.ufl.edu/cnhc/csl.html

0 கருத்துகள்: (+add yours?)

காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today