மழைக்காலத்தில் பயிர்களில் நத்தை கட்டுப்பாடு

0 கருத்துகள்


ற்போது பெய்து வரும் மழையால் பயிர்களில் நத்தைகள் அதிகம் பெருகி காணப்படும். முக்கியமாக வாழை, முட்டைக்கோஸ், பப்பாளி, அகத்தி, கீரைவகைகள், பயறுவகைகள், நிலக்கடலை, வெண்டை,கத்தரி,மக்காச்சோளம், கொக்கோ, வெள்ளரி, அலங்காரப் பூச்செடிகள் போன்ற பல்வேறு பயிர்களின் இலைகளைத் தின்று சேதம் ஏற்படுத்துகின்றன.
இவற்றில் முக்கியமான ஆப்ரிக்க பெரிய நத்தை இனம் மிகவும் அதிக சேதம் விளைவிக்க கூடியது. பண்ணைக் கழிவுகள் அதிகம் உள்ள இடங்கள், வடிகால் வசதியின்றி நீர் தேங்கிய பகுதிகள் நத்தைகளின் உற்பத்திற்கு சாதகமான சூழல்களாகும். நத்தை வகைகள் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வாழும் தன்மை கொண்டவை.
கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
1. முடிந்த அளவு கண்களுக்கு புலப்படும் நத்தைகளைக் கைகளால் பொறுக்கி அழிக்க வேண்டும்.
2. அழுகிய முட்டைக்கோஸ் அல்லது பப்பாளி இலைகளை வைத்து நத்தைகளை கவர்ந்து இழுத்து அழிக்கலாம்.
3. நத்தைகள் கூடியிருந்தால் இடத்தில் புகையிலைச்சாறும் ஒரு சத மயில் துத்தமும் கலந்த கலவையை தெளிப்பதால் நத்தைகள் உடனே இறந்து விடும்.
4. மெட்டால்டிஹைடு 5 சத மருந்தினை அரிசித்தவிடுடன் கலந்து நில இடுக்குகளில் இடுவதால் நத்தைகள் ஈர்க்கப்பட்டு நச்சுணவை உண்டு இறந்து விடும்.
5. சாதாரண உணவு உப்பினை தூவுவதால் நத்தைகளின் செயல்பாடு குறைக்கப்படும்.
6. சுண்ணாம்பு தூளை செடிகளை சுற்றி தூவி நத்தைகளை விரட்ட வேண்டும்.
7. இயற்கையாக காணப்படும் எதிரிகளான சில நண்டுகள் மற்றும் மரவட்டைகள் நத்தைகளாக்கி அழிக்கின்றன.
8. மருந்து தெளித்து இறந்து போன நத்தைகளை சேகரித்து உடனே புதைத்து விட வேண்டும்.
9. நத்தைகளின் மறைவிடங்களை கண்டறிந்து உறக்க நிலையில் இருக்கும் நத்தைகளை சேகரித்தும் கட்டுப்படுத்தலாம்.
10. பயிர்ச்செடிகளை நெருக்கமாக நடமால் நல்ல இடைவெளி விட்டு நடுவதால் நத்தைகளின் நடமாட்டத்தை தவிர்க்க முடியும்.

தகவல்: முனைவர்கள்.ஜெ.ஜெயராஜ், டி.எஸ்.ராஜவேல், க.முரளிபாஸ்கரன், பூச்சியியல் துறை, வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை.

விவசாயிகளுக்கு உதவும் தகவல் தொழில்நுட்பம்( இ-வேளாண்மை )

0 கருத்துகள்

விவசாயிகளுக்கு உதவுவதற்காக வேளாண் விரிவாக்க பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. 2 ஆயிரம் விவசாயிகளுக்கு ஒரு வேளாண் விரிவாக்க பணியாளர் என்ற நிலையில் தான் இவர்களின் விகிதம் உள்ளது. இந்த நிலையில் விவசாயிகளிடம் வேளாண் விரிவாக்க சேவையை விரைவில் கொண்டு செல்ல இ-வேளாண்மை என்னும் திட்டம் தற்போது செயல்படுத்தப்படுகிறது.
உலக வங்கி மற்றும் தமிழ்நாடு அரசின் நீர்வள நிலவள திட்டத்தின் உதவியுடன் இ-வேளாண்மை செயல் ஆராய்ச்சி திட்டம் செயல்படுகிறது.
 
திட்டம் 1: இந்த திட்டத்தின்படி விவசாயிகளுக்கு தங்கள் பயிர் தொடர்பாக எழும் சந்தேகங்கள் அல்லது பிரச்சனைகள் ஏற்பட்டால் செல்போன் மூலம் விவசாய அதிகாரிகளை அல்லது தன்னார்வ விவசாயிகளை தொடர்பு கொள்ள முடியும். இத்துடன் ரகம் தேர்வு செய்தல், சந்தை பற்றிய தகவல்கள் முதலிய விபரங்களை செல்போன் மூலம் பெறமுடியும்.
திட்டம் 2: கள ஒருங்கிணைப்பாளர் மற்றும் தன்னார்வ விவசாயி விவசாய நிலங்களை பார்வையிட்டு பாதிப்படைந்த தாவரங்களை புகைப்படம் எடுத்து அந்த புகைப்படத்தை கணிணியில் செலுத்தி இணைய தளத்தின் வாயிலாக மின்னஞ்சல் மூலம் மாவட்ட அளவிலான வேளாண் விஞ்ஞானிகளுக்கு அனுப்பப்படுகிறது.
திட்டம் 3: இது போன்ற புகைப்படம் வேளாண் விஞ்ஞானிகளுக்கு கிடைத்தவுடன் அது பற்றி விவாதிக்கும் விஞ்ஞானிகள் குழுவினர் சம்பந்தப்பட்ட விவசாயிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட தாவரங்களை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சொல்வார்கள்.
பிற வேளாண் விரிவாக்க செயல்கள்
இ-வேளாண் திட்டம் மூலம் விவசாயிகள் இது போன்ற தகவல்களை பெறுவதற்கு தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். உறுப்பினர்களின் விவசாய நிலத்தினை பகுப்பாய்வு இடுதலுக்கு ஏற்பாடு செய்தல், தொழில்நுட்ப கருத்தரங்குகள், விருப்பப்பட்ட வேளாண் தலைப்புகளின் கீழ் கேள்வி பதில் நேரம் ஏற்பாடு செய்வது உள்பட பல நிகழ்வுகளும் இந்த திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன.

இந்த திட்டத்தின் மூலம் விவசாய குடும்பத்தினர் தகவல் தொழில்நுட்ப சாதனங்களை கையாளும் திறன் பெற்று அறிவு சார் தகவல்களை பெற வழி செய்கின்றது. மாநில தேசிய அளவில் செயல்படுத்தக்கூடிய, விரிவாக்கம் அடையக்கூடிய திட்டமாக இந்த இ-வேளாண்மை திட்டம் செயல்படுகிறது. அதாவது விவசாயிகளையும் வேளாண் விஞ்ஞானிகளையும் இணைக்கும் ஒரு பாலம் தான் இந்த திட்டம் என்று சொல்லலாம்.
விவசாயிகள் இந்த திட்டம் பற்றி அறிய அருகில் உள்ள வேளாண் அறிவியல் நிலையங்களை அணுகலாம்.
தகவல்:கி.சுருளிபொம்மு, வேளாண்மை உதவி இயக்குநர்(தரக்கட்டுப்பாடு)மதுரை.

அறுவடையான நெல்லை பாதுகாப்பாக சேமிக்கும் நுட்பம்

1 கருத்துகள்

டினமாக உழைத்து உற்பத்தி செய்யப்பட்ட உணவுதானியங்களை பூச்சிகளும், எலிகளும் தின்று சேதப்படுத்தி விடுகின்றன. அறுவடைக்கு பின்னர் போதிய பாதுகாப்பில்லாமல் சேமித்து வைக்கப்படும் தானியங்களை தான் இந்த உயிரினங்கள் குறிவைக்கின்றன. எனவே, களத்திலிருந்து அறுவடை செய்து கொண்டு வந்த தானியங்களை தகுந்த வழிகளில் பாதுகாப்பாக சேமிக்க வேண்டும்.

நெல்மணிகள் அறுவையின் போது 62 சதவீதம் கிடைக்க நெல் அறுவடையை உரியநேரத்தில் செய்ய வேண்டும். நெல் தானியத்தை பொறுத்தமட்டில் நெல் மணியானது 80 சதவீதம் மஞ்சள் நிறமாக இருக்கும் போது அறுவடை செய்யலாம். அப்போது ஈரப்பதம் 19.23 என்ற அளவில் இருக்க வேண்டும். நெல்மணிகளை அதிக சூரிய வெப்பத்தில் காய வைக்க கூடாது. காய வைத்த நெல்லின் ஈரப்பதம் 12 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும்.

அதிக ஈரத்துடன் காணப்படும் நெல்லை சேமிக்க கூடாது. சரியான நிலையில் இருக்கும் நெல்லை கோணிப்பையில் நிரப்பி, தரை மீது மரச்சட்டங்களை அல்லது காய்ந்த வைக்கோல் பரப்பி, நெல் மூடைகளை அடுக்க வேண்டும். அதே போல் சுவரிலிருந்து ஓரடி இடைவெளி விட்டு அடுக்க வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் 10 மிலி மாலத்தியான் மருந்தைக்கலந்து தரைப்பகுதி மற்றும் மூட்டைகளின் மீது தெளித்தால், அந்துப்பூச்சி தாக்காமல் இருக்கும்.

ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் உள்ள வணிக முறை தரம்பிரிப்பு மையங்களில் நான்கு ரகங்களாக பிரிக்கப்படுகிறது. விவசாயிகள் நெல்லின் தரத்தையும், ஈரப்பதத்தையும் அங்கு தெரிந்து கொள்ள முடியும்.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் உணவுப்பொருட்களில் பூச்சிகளால் 2.55 சதவீதமும், எலிகளால் 2.5 சதவீதமும், பறவைகளால் 0.85 சதவீதம், ஈரப்பதத்தால் 0.68 சதவீதம், கதிரடிக்கும் இயந்திரங்களால் 1.68 சதவீதம், போக்குவரத்தின் போது 0.15 சதவீதமும் இழப்பு ஏற்படுவதாக வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்:கி.சுருளிபொம்மு, வேளாண் உதவிஇயக்குநர்(தரக்கட்டுப்பாடு).மதுரை.

பயிர் சுழற்சி முறையுடன் இணைந்த கேழ்வரகு சாகுபடி

0 கருத்துகள்


குறுதானிய பயிர்களில் முக்கியமானது கேழ்வரகு. தமிழகத்தில் கிராமப்புற மக்களின் உணவில் கேழ்வரகு முக்கிய இடம் வகிக்கின்றது. இதில் உடலுக்கு தேவையான புரதம், மாவுச்சத்து, தாதுக்கள், வைட்டமின்கள், செரிமானத்திற்கு உதவும் நார்ச்சத்து போன்ற சத்துக்கள் உள்ளன. இத்துடன் கேழ்வரகில் மிக அதிக அளவு கால்சியம், பாஸ்பரஸ், பிற நுண்ணூட்ட சத்துக்களும் உள்ளன. இது உடல்பருமன், இதயநோய், சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கிறது.
இந்த கேழ்வரகு சாகுபடி செய்யும் முறை பற்றி பார்க்கலாம்.
நிலம்: எல்லா வகை மண்களிலும் பயிர் செய்யலாம். எனினும் செம்மண், மணற்பாங்கான கருமண் நிலம் ஏற்றது.
பருவம் மற்றும் ரகம்: மாசிப்பட்டமான டிசம்பர் மற்றும் ஜனவரியில் 90 முதல் 95 நாட்கள் வயதுடைய கோ.11 ரகத்தையும், 95 முதல் 100 நாட்கள் வயதுடைய கே.5 மற்றும் கே.7 ஆகிய ரகங்களையும் நடலாம். புரட்டாசி பட்டமான செப்டம்பர் மற்றும் அக்டோபரில் 90 முதல் 95 நாட்கள் வயதுடைய கோ.11 கோ.7 மற்றும் கே.7 ஆகிய ரகங்களையும், 100 நாட்கள் வயதுடைய கோ.7 மற்றும் 95 முதல் 100 நாட்கள் வயதுடைய கோ.7 ரகத்தையும் பயிர் செய்யலாம்.
விதையளவு: எக்டருக்கு 5 கிலோ போதுமானது.
இடைவெளி: பயிர் இடைவெளியாது 45 க்கு 15 செமீட்டர் என்ற அளவில் இருத்தல் நல்லது.
விதை கடினப்படுத்துதல்: நுண்ணுயிர் நேர்த்தி செய்வதற்கு ஒரு எக்டருக்கு தேவையான விதைகளை 3 பாக்கெட் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். நிலத்தில் இடுவதாக இருந்தால் 10 பாக்கெட் அசோஸ்பைரில்லம் மற்றும் 10 பாக்கெட் பாஸ்போ பாக்டீரியா 25 கிலோ மணலுடன் கலந்து தூவ வேண்டும்.
நுண்ணூட்டம் இடுதல்: எக்டருக்கு 12.5 கிலோ நுண்ணூட்ட சத்து இட வேண்டும்.
களை நிர்வாகம்
நிலத்தில் ஈரம் இருக்கும் போது விதைத்த 3 வது நாள் ஒரு எக்டருக்கு அட்ரசின் களைக்கொல்லி 500 கிராம் என்ற அளவில் 900 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
ஊடுபயிராக பயறு வகைப்பயிர்கள் பயிறு செய்திருந்தால் அட்ரசின் பயன்படுத்தக்கூடாது.
உரநிர்வாகம்: மானாவாரி பயிருக்கு 40-20-0 என்ற அளவில் தழை,மணி, சாம்பல் சத்துக்களை இடவேண்டும். இறவையில் 60-30-30 தழைச்சத்தில் பாதியும், மணிச்சத்து முழுஅளவிலும், மற்றும் சாம்பல் சத்து அடியுரமாக இட்டு பின்பு மீதியுள்ள தழைச்சத்தை பிரித்து மேலுரமாக இரண்டு தடவையாக நட்ட 15 வது மற்றும் 30 ம் நாள் இடவேண்டும்.
நீர்ப்பாசனம்: விதைத்தவுடன் 4 வது நாளும் பின்னர் 7 லிருந்து 10 நாட்களுக்குள் ஒரு முறை மற்றும் காலநிலைக்கு தகுந்தவாறு நீர்ப்பாய்ச்ச வேண்டும்.
களை எடுத்தல்: விதைத்த 15 மற்றும் 30 வது நாட்களில் களை எடுக்கவும்.
பயிர்பாதுகாப்பு: ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் மற்றும் பொருளாதார சேதார நிலை அறிந்து வேளாண் துறை ஆலோசனையின் படி பாதுகாப்பு மருந்துகள் பயன்படுத்தவும்.
சுழற்சி முறை
கேழ்வரகை பச்சைப்பயறு, உளுந்து, துவரை அல்லது கடலை போன்ற ஏதேனும் ஒரு பயிருடன் பயிர் சுழற்சி முறையில் பயிரிடுவதால் நிலையான அதிக விளைச்சல் பெறலாம். அத்துடன் தழைச்சத்து தரக்கூடிய உரத் தேவையும் குறைகிறது. மண்வளத்தை பாதுகாக்கவும், அதிக விளைச்சலையும் பெற வேண்டுமெனில் கேழ்வரகு பயறு வகைப்பயிர் சுழற்சி முறையைக் கடைப்பிடிக்கலாம்.
தகவல்: ப.ராமநாதன், துணைஇயக்குநர், நீர்மேலாண்மை நிலையம், விநாயகபுரம்.

அபாயத்தின் அறிகுறி

2 கருத்துகள்


ளிமண்டலம் மாசடைந்து புவிவெப்பம் அதிகரிப்பது உலகில் தெரிந்த விஷயம். இதனால்,நிலத்தில் வாழும் உயிரினங்களை விட மிக அதிகமாக பாதிக்கப்பட இருப்பது கடல்வாழ் உயிரினங்கள் தான் என்பது பெரிய அளவில் ஏன் நம்மைக்கவலைப்பட வைக்கவில்லை என்பது தெரியவில்லை.
அண்மையில் மீன் மற்றும் மீன்வளம் (பீஷ் அண்ட் பிஷரிஸ்) என்ற மேலைநாட்டு பத்திரிகை ஒன்றில் படித்த விஷயம் நம்மை திடுக்கிட வைக்கிறது. புவி வெப்பமயமாதல் காரணமாக பல்லுயிர் பெருக்கத்துக்கு ஏற்படும் பாதிப்பை பற்றியும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடல்வாழ் மீன் இனங்கள் எவ்வாறு பாதிக்கப்படவுள்ளன என்பது பற்றியும் ஒரு ஆய்வே நடத்தி இருக்கிறது அந்த பத்திரிக்கை.

கடல் நீரின் தட்பவெப்பத்தை பொறுத்து தான் பலவகை மீன் இனங்கள் அந்தந்த பகுதியில் காணப்படுகின்றன. தட்பவெப்பம் மாறும்«ப்£து இந்த மீன் இனங்கள் அங்கே வாழ முடியாமல், சாதகமான தட்பவெப்பம் நிலவும் பகுதியை நோக்கி நகர வேண்டும். இல்லாவிட்டால் அழிந்து விடும் அபாயம் தான் ஏற்படும். குறிப்பாக, பூமத்திய ரேகையையட்டிய, வெப்பம் அதிகமுள்ள கடல் பகுதியில் காணப்படும் மீன் இனங்கள், புவி வெப்பமாவதை தொடர்ந்து குளிர்ப்பிரதேசங்களை நோக்கி இடம் பெயர்ந்தாக வேண்டும். அப்போது தான் தங்களது உடல்வெப்பத்தை தகவமைத்து வாழ முடியும். ஆனால், துருவப்பகுதிகளில் உள்ள குளிரைத்தாங்கி இந்த மீன் இனங்களால் வாழ முடியுமா என்பது சந்தேகம் தான்.

துருவப்பகுதியில் மீன் இனங்களின் எண்ணிக்கை குறைவு. அப்பகுதிகளில் வாழும் உயிரினங்கள், புவி வெப்பமயமாதலால் பெரிய பாதிப்புக்கு உள்ளாகாது என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த பகுதியில் வாழும் மீன்களின் எண்ணிக்கையே குறைவு தான் என்பதால் பாதிப்பும் குறைவாகவே இருக்கும் என்பதும் ஆறுதல்.

வெப்ப மண்டலங்களிலும், துருவப்பகுதிக்கு கீழேயுள்ள பிரதேசங்களிலும் ஏற்பட இருக்கும் புவி வெப்ப மாற்றங்கள், ஏறத்தாழ 60 விழுக்காடு மீன் இனங்களின் இனப்பெருக்கத்தை பாதிக்கும் என்பது தான் அச்சப்பட வைக்கும் விஷயம். இந்த மாற்றம், கடல் சார்ந்த சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். கடலின் ஆழத்தில் அல்லது மேற்புறத்தில் வாழும் மீன்கள் எவையாக இருந்தாலும் பாதிப்பு ஒரே மாதிரியாகத் தான் இருக்கும். உடனடி பாதிப்பு கடலின் மேற்பகுதியில் வாழும் மீன்  இனங்களுக்கு தான். குறைந்தது 600 கி.மீ தூரத்துக்காவது இடம் பெயர்ந்தால் மட்டுமே வெப்பப் பகுதிகளில் வாழும் 90% மீன் இனங்கள் உயிர் வாழ முடியும் என்று தெரிவிக்கிறது ஆய்வுக்கட்டுரை.

இந்த பிரச்சனை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மட்டுமல்ல, பொருளாதார நிபுணர்களையும் அச்சுறுத்தக் காரணம், மீன் இனங்களுக்கு ஏற்படும் பாதிப்பால் உலகில் உணவுத்தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கக்கூடும் என்பது தான். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஏறத்தாழ 4 கோடி மீனவர்கள், கடலை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்துகின்றனர். மீன்கள் கிடைக்காதென்றால், பல மீனவர் குடும்பங்கள் தற்கொலை செய்து கொள்ளும் அவலம் நேரும். வளர்ந்த நாடுகளில் சுமார் 28 கோடி பேர் தங்களது தினசரி உணவில் மீனை சேர்த்துக் கொள்கிறார்கள். மீனுக்கு தட்டுப்பாடு ஏற்படுமானால், அதன் நேரடி விளைவாக மாமிசத் தேவை அதிகரிக்கும். உலகம் புதிய சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

உலகம் முழுவதும் உணவுத்தட்டுப்பாடு பயமுறுத்திக் கொண்டிருக்கும் இந்த வேளையில், புவி வெப்பமயமாதலால் மீன் வளமும் குறையுமேயானால், அதன் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். மேலும், மீன்பிடிப்பு குறைய குறைய இந்தியா தொடங்கி பல்வேறு நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்தில் பாதிப்பும், மீனவர்களுக்கு தொழில் நசிவும் தவிர்க்க முடியாததாகிவிடும்.

இப்பொழுதே கடலில் முன்பு போல் மீன்கள் கிடைப்பதில்லை என்கிற குறை நிறையவே இருக்கிறது. இந்நிலையில், புவி வெப்பமடைதலும் அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட இருக்கும் பாதிப்பும் கடல் மீன்களுக்கும் அதன் இனப்பெருக்கத்துக்கும் பெரிய அச்சுறுத்தலாக மாறுமெனில், விளைவுகள் படுமோசமாக மாறிவிடும். இதன் உடனடித்தாக்கம் உணவுப்பஞ்சம், தொடர்விளைவு, மீன்களின் இனப்பெருக்கத்துக்கு நிரந்தரப்பாதிப்பு. உலக நாடுகள் ஒன்று கூடி உடனடியாக தீவிர ஆலோசனைகளை நடத்தியாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
நன்றி: தினமணி 12.01.2010

மழைக்காலத்தில் ஆடுகளுக்கு செரிமானக் கோளாறா?

0 கருத்துகள்

ழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் தளிர் இலைகளையும், புற்களையும் ஆடுகள் உண்ணும் போது அவற்றுக்கு செரிமான கோளாறு ஏற்படும். இது தவிர மிகவும் அரைத்து வைத்த தானியங்களை சாப்பிட கொடுக்கும் போதும், விரயமான காய்கறிகளை கொடுக்கும் பொழுதும் செரிமான கோளாறு ஏற்படும். வயிற்றில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படும் பொழுது இவ்வாறு நேர்வதுண்டு.
பாதிக்கப்பட்ட அறிகுறிகள்
வயிறு உப்புசம் ஏற்படும். ஆடுகள் உறக்கமின்றி காணப்படும். பல்லை அடிக்கடி கடித்துக் கொள்ளும். பாதிக்கப்பட்ட ஆடுகள் நிற்கும் பொழுது கால்களை மாறி  மாறி வைத்துக் கொள்ளும். இடது பக்க வயிறு, வலது பக்கத்தை விட பெருத்து இருக்கும். உப்புசத்தால் மூச்சு திணறும். வாயினால் மூச்சு விடும். நாக்கை வெளியில் தள்ளும். தலையையும், கழுத்தையும் முன்னோக்கி வைத்துக் கொள்ளும்.
வயிறு உப்புசத்தை சமாளிக்கும் முறைகள்
அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகி உடனே சிகிச்சை மேற்கொள்ளவும். இல்லாது போனால் நீங்களே முதல் உதவியாக 50 முதல் 100 மிலி கடலை எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவைகளை வாய் வழியாக கொடுக்கலாம். அவ்வாறு கொடுக்கும் போது புரை ஏறாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். மேலும் கால்நடை டாக்டரை அணுகி சிகிச்சை செய்வது நல்லது.
தடுப்பு முறைகள்:
மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் அதிக நேரம் மேயாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தீவனத்துடன் நொதிக்க கூடிய மாவுப்பொருட்களை சேர்க்க கூடாது. போதுமான அளவு காய்ந்த புல் தர வேண்டும்.
தகவல்; டாக்டர் பூவராஜன்.

மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி?

0 கருத்துகள்

கால்நடை வளர்ப்பில் இரண்டு வகைகள் உண்டு. தீவனங்கள் வளர்ந்து கிடக்கும் நிலங்களுக்கு பசுக்களை ஓட்டி சென்று மேய்ச்சலுக்கு விடும் கால்நடை வளர்ப்பு முறை ஒரு வகை. இது தமிழ்நாட்டில் பரவலாக கடைபிடிக்கப்படுகிறது. பசுந்தீவனம் உற்பத்தி செய்து அதனை மட்டும் பசுக்களுக்கு அளித்து பண்ணை முறையில்வளர்ப்பது மற்றொரு வகை. இப்படி இரண்டு வகையாக கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. இதில் மேய்ச்சல் முறையில் உள்ள கால்நடைகள் மழைக்காலத்தில் அதிகமாக புற்களை உண்டு விடும். இதனால் கழிச்சல் நோய் உண்டாகும். நீண்ட வறட்சிக்கு பின் முளைத்த புற்களை உண்பதால் வயிற்றில் உப்புசம், செரிமான கோளாறு உண்டாகும்.

எனவே மழைக்காலத்தில் அதிகாலை மேய்ச்சலை தவிர்ப்பது நல்லது. முற்பகலில் மேய்த்து பின் பனிக்காலத்தில் மாலை மேய்ச்சலை தவிர்ப்பதும் நல்லது. அதாவது காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டும் கால்நடைகளை தீவனநிலங்களில் மேய்ச்சலுக்கு விடவேண்டும். இதற்கு முன்னதாக மேய்ச்சலுக்கு அழைத்து செல்லக்கூடாது.
 பண்ணை முறையில் பசுந்தீவனம் உற்பத்தி செய்து கால்நடைகளுக்கு உணவாக அளித்து வளர்ப்பவர்கள் இந்த காலகட்டத்தில் கிடைக்கும் வைக்கோலை யூரியா சத்தூட்டப்பட்டதாக மாற்றி வைத்து குளிர்காலம் முடியும் வரையும், கோடைக்காலத்திலும் கூட தீவனமாக பயன்படுத்தலாம். இதனால் தீவனச்செலவு குறையும். பசுக்களுக்கு சத்துள்ள உணவு கிடைக்கும்.

யூரியா சத்தூட்ட வைக்கோல்
அதிகமாக கிடைக்கும் வைக்கோல் மற்றும் மக்காச்சோளத் தீவனத்தட்டையை யூரியா சத்தூட்ட வைக்கோலாக மாற்றினால் அதன் சத்துக்கள் அதிகரித்து தீவன செலவு குறையும்.
இதற்கு 100 கிலோ வைக்கோலை பாலித்தீன் சாக்குகளில் பரப்பி பின் 4 கிலோ யூரியாவை 65 லிட்டர் தண்ணீரில் கலந்து வைக்கோலின் மீது தெளிக்க வேண்டும். பின் காற்று புகாமல் அடைத்து 21 நாட்கள் கழித்து எடுத்து தீவனமாக பயன்படுத்தலாம்.
நன்மைகள்
யூரியா சத்தூட்ட வைக்கோல் சாதாரண வைக்கோலை விட 3 மடங்கு சத்து அதிகம் உள்ளது.
மழைக்காலங்களில் மழையில் நனைந்து வீணாகும் வைக்கோலை சேமிக்க இது ஒரு நல்ல வழி.
மழையில் நனைந்த வைக்கோல் பூஞ்சைகாளான் பரவுவதை தடுக்கலாம்.
குறைவான இடத்தில் மிகுந்த செலவில்லாமல் அதிக புரதம் நிறைந்த வைக்கோலை இந்த முறையில் தயாரிக்க முடியும்.
இத்துடன் பண்ணை முறை கால்நடைகளுக்கு தரப்படும் அடர்தீவனங்கள் நன்கு உலர வைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இதற்கு இந்த தீவனங்களை தகுந்த முறையில் சேமித்து வரவேண்டும்.
அடர்தீவனங்களை பாதுகாக்கும் நுட்பம்
பால் தரும் பசுக்களுக்கு அடர்தீவனங்களான மக்காசோளம், கம்பு, புண்ணாக்கு மற்றும் தவிடு வகைகளை ஈரம்படாமல் சேமித்து வைத்து மழை மற்றும் குளிர் நிலவும் காலங்களில் அளிக்க வேண்டும்.
தீவனங்களின் மீது ஈரம் படாமல் பாதுகாக்க தீவன மூடைகளை மரக்கட்டைகளில் அடுக்கி வைத்தல் வேண்டும்.
அடர்தீவன தயாரிப்பை 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டும் மழைக்காலங்களில் செய்வது நல்லது.
மழைக்காலத்தில் தானிய வகைகளான மக்காச்சோளம், கம்பு, கடலைப்புண்ணாக்கும், எள்ளுபுண்ணாக்கு ஆகியவற்றை நன்கு காயவைத்து அரைத்து சேமித்து வைக்க வேண்டும்.
தென்னையில் அதிக விளைச்சல் பெற வேண்டுமா?

0 கருத்துகள்

தேங்காயின் விலை முந்தைய காலகட்டத்தை விட அதிகமாக இருக்கிறது. அதிக விளைச்சல் இருக்கும் நிலையில் குறைந்த விலையில் தேங்காய்கள் கிடைக்கும் படி செய்யலாம். பணப்பயிர்களில் அமுதசுரபி போல் திகழும் தேங்காய்களை அதிக விளைச்சல் மூலம் பெற்றிட விவசாயிகள் சரியான உரநிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டும். இதற்கு இயற்கை உரங்களான தொழுஉரம், வேப்பம் புண்ணாக்கு மற்றும் இலுப்பை புண்ணாக்கு போன்றவற்றுடன் கலந்து ஆண்டுக்கு ஓரிரு முறைகள் இடுவதன் மூலம் அதிகமான விளைச்சலை உறுதி செய்யலாம்.

ரசாயன உரங்களில் பலவகை சத்துக்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் ஒரு சில சத்துக்களே தென்னையில் வளர்ச்சிக்கு அவசியமாக இருக்கின்றன. இதில் மணிச்சத்து முக்கியமானது. பலவாறாக இருக்கும் ரசாயன உரங்களில் மணிச்சத்து அடங்கியிருந்தாலும், சூப்பர் பாஸ்பேட் உரத்தில் அடங்கியிருக்கும் மணிச்சத்தானது நிலத்திற்கு எந்த வித கெடுதலையும் செய்யாமல் தென்னைக்கு ஊட்டமளிக்கிறது. சூப்பர் பாஸ்பேட்டில் மணிச்சத்துடன் தென்னை வளர்ச்சிக்கும், நல்ல காய்பிடிப்பிற்கும் அவசியமான கந்தகம், சுண்ணாம்பு, போரான், குளோரின் மற்றும் சோடியம் சத்துக்களும் வேறு பல நுண்ணூட்ட சத்துக்களும் அடங்கியுள்ளன.
இந்த சத்துக்களில் உள்ள சத்துக்கள் தென்னையின் வளர்ச்சியில் என்ன செய்கின்றன என்று பார்க்கலாம்.
மணிச்சத்து 16 சதவீதம்
இந்த சத்தானது, தென்னை நாற்றிலிருந்து முளைத்து வரும் குருத்தின் பருமனை அதிகரிக்கவும், குருத்திலிருந்து அதிக இலைகள் உற்பத்தியாவதற்கும் உதவுகிறது.
மேலும் தென்னையில் அதிகமான வேர்கள் உருவாகவும், வேர்கள் ஆழமாக நிலத்தில் சென்று பிடிப்பை ஏற்படுத்தவும் உதவுகிறது. இதனால் மரத்தின் வளர்ச்சி தூண்டப்படுகிறது.
பாளையில் ஏராளமான பூக்கள் உருவாகவும், அவ்வாறு பூத்த பூக்கள் அனைத்தும் தரம் மிக்க காய்களாக மாறுவதற்கும் உதவி செய்கிறது.
தேங்காய் குறுகிய காலத்தில் முற்றவும், கொப்பரையின் பருமனை அதிகரிக்கவும் உதவுகிறது.
கந்தகச்சத்து 11 சதவீதம்
கந்தக சத்தானது தேங்காய் பருப்பு ரப்பர் போன்று ஆகிவிடாமல் கெட்டியாக உருவாக உதவுகிறது.
கொப்பரையில் எண்ணெயின் அளவு கணிசமாக அதிகரிக்க உதவுகிறது. சூப்பர் பாஸ்பேட் இடப்படாத தென்னையில் கந்தகச்சத்து குறைபாட்டினால் கொப்பரையில் எண்ணெய்ச்சத்து குறைந்து சர்க்கரை சத்து மட்டுமே அதிகமாக இருக்கும்.
சுண்ணாம்பு சத்து
சுண்ணாம்பு சத்தினால் மரம் வலிமையாக உருவாகும். மேலும் இந்த சத்தானது மரத்தின் கட்டமைப்பில் உள்ள செல்களின் சுவர்களின் அமைப்பில், வேர்களின் வளர்ச்சியில், சர்க்கரை மற்றும் தனிமங்களின் கடத்திலில் பெரும் பங்கு வகிக்கிறது.
மேலும் நொதிப்பொருட்களின் வினையாக்கத்தை தூண்டி தென்னையின் சீரான வளர்ச்சிக்கு அதிகரிக்கிறது. தென்னை பயிரிடப்படும் மணற்பாங்கான அமில வகை நிலங்களில் சுண்ணாம்பு சத்தானது  தழை, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துக்களை நல்ல முறையில் கிரகிக்க வழி செய்கிறது.
இது தவிர சூப்பர் பாஸ்பேட்டில் அடங்கியுள்ள தனிமச்சத்துக்களான போரான், குளோரின் மற்றும் சோடியம் போன்றவை தென்னை வளர்ச்சிக்கு அதிக பங்களிக்கின்றன. இந்த சத்துக்களில் போரான் என்ற தனிமச்சத்து, இலைகள் நன்றாக வெளிவரவும், ஓலைகள் திடமாக இருக்கவும், தேங்காய்கள் பருத்து பருப்பின் அளவு அதிகரிக்கவும் உதவுகின்றது.
குளோரின் சத்தானது தழை, மணி, சாம்பல் மற்றும் மக்னீசிய சத்துக்களை தென்னை சீரான அளவில் எடுத்துக் கொள்வதற்கு உதவுகிறது.
இதில் உள்ள சோடியம் தென்னையின் தொடக்க கால வளர்ச்சியை தூண்டவும், வளர்ந்த தென்னையில் பெண்பூக்கள் அதிகமாக உற்பத்தியாவதற்கும், அவை மகரந்த சேர்க்கைக்கு பின் தரமான குரும்பைகளாக உருவாவதற்கும் உதவுகின்றது.
தென்னைக்கு உரமிடும் முறை
தென்னையை நட்ட முதலாம் ஆண்டில் யூரியா 500 கிராம், சூப்பர் பாஸ்பேட் 500கிராம், பொட்டாஷ் 825 கிராம், வேப்பம் புண்ணாக்கு 1250 கிராம், தொழுஉரம் 10 கிலோ என்ற அளவில் இடவேண்டும். இரண்டாவது ஆண்டில் யூரியா 1300 கிராம், சூப்பர் பாஸ்பேட்800 கிராம், பொட்டாஷ் 1625 கிராம், வேப்பம் புண்ணாக்கு இரண்டரை கிலோ, தொழுஉரம் 2 கிலோ என்ற அளவிலும், மூன்றாம் ஆண்டில் யூரியா 1600 கிராம், சூப்பர் பாஸ்பேட் 1200 கிராம், பொட்டாஷ் இரண்டரை கிலோ, வேப்பம் புண்ணாக்கு 3 கிலோ 750 கிராம், தொழுஉரம் 3கிலோவும், நான்காம் ஆண்டில் யூரியா 2கிலோ, சூப்பர் பாஸ்பேட் 1 கிலோ 600 கிராம், பொட்டாஷ் 3கிலோ 300 கிராம், வேப்பம் புண்ணாக்கு 5 கிலோ மற்றும் தொழுஉரம் 4 கிலோவும் இடவேண்டும்.  
நான்கு ஆண்டு
நான்கு ஆண்டுகளுக்கு மேற்பட்ட தென்னைக்கு யூரியா 2 கிலோவும், சூப்பர் பாஸ்பேட் 1 கிலோ 600 கிராமும், பொட்டாஷ் 3 கிலோ 300 கிராம், வேப்பம் புண்ணாக்கு 5 கிலோ மற்றும் தொழுஉரம் 5 கிலோவும் இட வேண்டும். குறிப்பாக இந்த உரங்களை ஜுலை, ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பாதியையும், அக்டோபர் மாதத்தில் மறுபாதியையும் இடவேண்டும்.
இந்த அடிப்படையில் தென்னைக்கு உரங்களை இட்டு வந்தால் மரத்தின் விளைச்சல் தொடர்ந்து அதிகரிக்கும். விவசாயிகள் நல்ல லாபத்தை பெறலாம்.
தகவல்:  ஜி.எஸ்.வி அமுதன்,மதுரை.

கால்நடைகளுக்கு புல்வகை மற்றும் மரஇலை தீவனங்கள்

2 கருத்துகள்

மது நாட்டில் ஆண்டொன்றுக்கு சராசரியாக ஒரு சதவீதம் என்ற அளவில் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த கால்நடைகளிருந்து முழுமையான பலனை பெற வேண்டுமென்றால், அவற்றுக்கு சரிவிகித முறையில் தீவனம் இடவேண்டும். ஆனால் எண்ணிக்கையில் அதிகரிக்கும் கால்நடைகளுக்கு பசுந்தீவனத்தில் 60 சதவிகிதம், உலர்ந்த நார்த்தீவனத்தில் 60 சதவிகிதம், கலப்பு தீவன வகைகளில் 60 சதவிகிதம் மட்டுமே உற்பத்தி செய்கிறோம்.

தீவனமரங்களின் இலைகளில்...
 இதனால் ஊட்டசத்து குறைபாடு ஏற்படுகிறது.  இந்த பற்றாக்குறையை போக்க நாட்டிலுள்ள தரிசுநிலங்களை தீவன உற்பத்திக்காக பயன்படுத்த வேண்டும். குறிப்பாக இந்த இடங்களில் தீவன மரங்களை வளர்க்க வேண்டும். தானிய வகை தீவனங்களான மக்காச்சோளம், புல்வகை தீவனங்களான கொழுக்கட்டை புல், பாரா, பயறு வகை சேர்ந்த ஸ்டைலோ, தட்டைப்பயிறு, வேலிமசால், சூபாபுல், கிளைரிசிடியா போன்றவற்றை சாகுபடி செய்யலாம்.
பொதுவாக தீவனமரங்களின் இலைகளில்20 முதல் 40 சதவிகிதம் உலர்பொருளும், 12 முதல் 32 சதவிகிதம் வரை புரதச்சத்தும் உள்ளன.
மர இலைகள்  
செரிமான புரதச்சத்தும் 60 முதல் 65 சதவிகிதமாக உள்ளது. குறிப்பாக மர இலைகள் தீவனமாக அகத்தி, கிளைரிசிடியா, சவுன்டால், கொடுக்காப்புளி, வாகை, முள்ளு முருங்கை போன்ற மரங்களை பயன்படுத்தலாம். இவை தவிர அன்றாடம் கிடைக்கக்கூடிய அரசமரம், ஆலமரம், மா, பலா, வேம்பு, நுணா, பூவரசு, முருங்கை, உதியன், மந்தாரை, கருவேல் போன்ற மரத்தழைகளை தீவனமாக அளிக்கலாம்.
மர இலைகளில் பிற தீவனப்புற்களில் இருப்பதை விட குறைந்த நார்ச்சத்து, குறைவான செரிக்கும் திறன் கொண்டதால் இவற்றின் மூலமாக கிடைக்கும் எரிசக்தி குறைவாக உள்ளது. மர இலைகளில் தாதுப்பொருட்களான சுண்ணாம்புசத்து அதிக அளவிலும், பாஸ்பரஸ் சத்து குறைந்த அளவிலும் உள்ளது.
வெள்ளாடுகளுக்கு...
இந்த நிலையில் கால்நடைகளுக்கு தீவன மரங்களின் இலைகளையும், பிற புல் வகைகளையும் கலந்து அளிக்க வேண்டும். இதனால் ஒன்றில் கிடைக்காத சத்து மற்றொன்றின் மூலம் ஈடுகட்டப்படும். மேலும் அளிக்கப்படும் இந்த வகை தீவனங்கள் நுண்ணுயிர் கிருமிகளின் தாக்குதலுக்கு உட்படாதவாறும் இருக்க வேண்டும். உதாரணமாக, வெள்ளாடுகளுக்கு இந்த வகை தீவனங்களை வழங்கும் போது, தழைத் தீவனத்தில் இலைகள் 50 சதவிகிதமும், மீதம் 50 சதவிகிதம் பிற புல் வகைகளும் இருக்கலாம். இவ்வாறு கலந்து அளிப்பதால் வெள்ளாடுகள் தினசரி 45 முதல் 55 கிராம் வரை உடல்வளர்ச்சி அடைகின்றன.

மழைகாலத்தில் மாடுகளை தாக்கும் தொண்டை அடைப்பான் நோய்

0 கருத்துகள்

 
ழைக்காலங்களில், மாடுகளுக்கும் ஆடுகளுக்கும் பரவலாக தொண்டை அடைப்பான் நோய் ஏற்படுகிறது. கால்நடைகளுக்கு அதிக வேலை கொடுக்கும் போதும், ஊட்டச்சத்து குறையும் போதும், தட்பவெப்பநிலைகளில் மாறுதல் ஏற்படும் போதும், நீண்ட தூர பயணம் மேற்கொள்ளும் போதும், ஆண்மை நீக்கம் மற்றும் டிப்பிங் என்னும் புறஒட்டுண்ணி நீக்கம் செய்யும் போதும் கால்நடைகள் சோர்ந்து போகும். இந்த நேரங்களில் தொண்டை அடைப்பானுக்கு காரணமான பாக்டீரியாக்கள் வீரியம் அடைந்து நோயை ஏற்படுத்துகின்றன.
நோய் அறிகுறிகள்
தொண்டை அடைப்பான் நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளில் 103 டிகிரி முதல் 108 டிகிரி வரை அதிக காய்ச்சல் இருக்கும். மாடுகள் சோர்ந்து காணப்படுவதுடன் தனது இடத்தை விட்டு நகரக்கூட மனம் இல்லாமல் அப்படியே நின்று கொண்டிருக்கும். காய்ச்சல் காரணமாக மயிர்க்கால்கள் சிலிர்த்துக் கொண்டு இருக்கும். தீவனம் தின்னாமலும், வாயிலிருந்து உமிழ்நீர் வடிந்து கொண்டும் இருக்கும். குரல் வளை வீக்கம் அடைவதால் மூச்சு திணறும். நாக்கு வீக்கம் அடைந்து நாக்கை வெளியே தள்ளி கொண்டிருக்கும். இதன் காரணமாக தீவனத்தையும், தண்ணீரையும் பருக முடியாமல் அவதிப்படும்.
 கண்கள் இரண்டும் கோவைப்பழம் போல் சிவந்து காணப்படும். மூக்கில் இருந்து ரத்தமும், சளியும் வடிந்து கொண்டிருக்கும். பல்¬ல் நறநறவென்று கடித்து கொண்டும், வயிற்று வலி ஏற்பட்டும், மூக்கு பகுதியில் ஈரம் இல்லாமல் காய்ந்து வறண்டு போய் இருப்பதுடன், பால் உற்பத்தி குறைந்தும் காணப்படும். மூச்சு திணறல் காரணமாக தொண்டை பகுதியிலும், முன் கழுத்து பகுதியிலும், முன்னங்கால்களுக்கு இடையே வீக்கம் ஏற்பட்டு மிகவும் கஷ்டப்படும்.
இந்த அறிகுறிகள் கண்ட 2, 3 நாட்களில் மாடுகள் இறந்து விடும். தொண்டை மற்றும் கழுத்து பகுதியில் தொட்டு பார்த்தால், சூடாகவும், இறுக்கமாகவும் இருக்கும்.
நோய் பரவும் முறை
நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளை தொடர்பு கொள்ளும் போதும், நோயுற்ற மாடுகளை வெளிவிடும் மூச்சிலும்  உள்ள கிருமிகளை மற்ற மாடுகள் சுவாசிப்பதால் இந்த கிருமிகள் பரவும். முறையாக முன்கூட்டியே தடுப்பூசி போடாமலும், சரியாக பராமரிக்கப்படாமலும் இருக்கும் கால்நடைகளுக்கும், உமிழ்நீரின் மூலமும், தீவனத்தொட்டி மற்றும் தண்ணீர் தொட்டிகள் மூலமும், நோய் தாக்கப்பட்ட மாடுகள் உண்ட தீவனத்தை மற்ற மாடுகள் தின்னும் போதும் இந்த நோய் பரவுகிறது.
கட்டுப்படுத்தும் முறை
தற்போது அவ்வப்போது மழை பெய்து வருவதால் இந்த நோய் ஏற்பட வாய்ப்புண்டு. இந்த நோய்க்கான அறிகுறிகள் தெரிந்தால் பாதிக்கப்பட்ட மாடுகளை அப்புறப்படுத்தி தனியாக வைத்து மருத்துவம் செய்ய வேண்டும். கால்நடைகளை கட்டி வைத்திருக்கும் தொழுவங்களை 2 சதவீதம் காஷ்டிக் சோடா கரைசல் அல்லது 4 சதவீதம் வாஷிங் சோடா கொண்டு கழுவ வேண்டும். நோய் பாதிக்கப்பட்ட மாடுகள் மீதம் செய்த தீவனத்தை மற்ற மாடுகளுக்கு அளிக்க கூடாது. அவற்றை எரித்து விட வேண்டும்.
டாக்டர்.ஆல்பிரட் பொன்னுதாசன், கால்நடை மருத்துவர்.

விவசாயிகளுக்கு பயன் தரும் நீர்வள நிலவள திட்டம்

0 கருத்துகள்

வேளாண்மை உற்பத்தி திறனையும், விவசாயிகளின் வருமானத்தையும் அதிகரிக்க அரசால் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. வேளாண் வளர்ச்சியானது, நீரினை பயன்படுத்துதல் மற்றும் உற்பத்தி திறனை மேம்படுத்துவதில் அடங்கியுள்ளது. இதனை அடைந்திட பாசன மேலாண்மை மற்றும் வேளாண் தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு எளிதாக கிடைத்திட நீர் வள அமைப்புகளை வலுப்படுத்துவதும் மற்றும் வேளாண் சார்ந்த துறைகளை ஒருங்கிணைப்பதும் அவசியமாகிறது.
இதனை கவனத்தில் கொண்டு நீர்வள நிலவள திட்டம் அரசால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பயிரிடும் பயிர்களுக்கு ஜீவநாடியாக உள்ள பாசன கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக நீர்வள நிலவள திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பாசன நிலங்களுக்கு முதுகெலும்பாக உள்ள பாசன உள்கட்டமைப்புகளை நவீனப்படுத்துதல் மற்றும் சீரமைப்பதுடன், பாசன கால்வாய் அமைப்புகளை புணரமைத்து அதன் பழைய நிலைக்கு கொண்டுவருதல் மற்றும் குளங்களை புதுப்பிப்பது போன்றவை இந்த திட்டத்தில் அடங்கும்.
முக்கிய நோக்கங்கள்
நவீன நீர்சேமிப்பு பாசன தொழில் நுட்பங்கள் பயன்படுத்துதல் உள்ளிட்ட பாசன சேவை முறையை மேம்படுத்துதல்
நீர் பயனீட்டாளர் சங்கம் அமைத்தல் மற்றும் நீர்வள மேலாண்மையில் விவசாயிகளை ஈடுபடுத்துதல்
வேளாண்மை தீவிரப்படுத்துதல் மற்றும் மாற்று பயிர் சாகுபடி செய்தல்
62 உபவடி நிலங்களில் உள்ள பாசன அமைப்புகளை கொண்டு பயன்பெறும் பாசன பரப்பை அதிகரித்தல் மற்றும் பாசனத்தை உறுதி செய்தல்
வேளாண் உற்பத்தி திறனை அதிகரித்தல் மற்றும் பயன்பெறும் உழவர்களின் வருவாயை அதிகரித்தல்
வேளாண்மையை சார்ந்த இதர தொழில்களான மீன்வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியவைகள் மூலம் பண்ணை வருவாயை அதிகரிக்க செய்தல்
விற்பனை செய்யும் வகையில் மகசூலை பெருக்குவது மற்றும் விளைபொருட்களை அதிகமாக சந்தைக்கு கொண்டு வர செய்தல்
இந்த திட்டத்தின் கீழ் நீர்வள ஆதார துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண்மை பொறியியல் துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், வேளாண்மை விற்பனை துறை, கால்நடை பராமரிப்பு துறை மற்றும் மீன்வள துறை ஆகியவை ஒருங்கிணைக்கப்படுகின்றன.
திட்டப்பணிகள்
பாசன அமைப்புகளை நவீனப்படுத்துவதின் கீழ் இந்த திட்டம் இரண்டு உட்பணிகளாக செயல்படுகின்றன.
நீர் சேதாரத்தை குறைக்கவும் மற்றும் ஏரியிலிருந்து நீரினை கொண்டுவரும் திறனை மேம்படுத்தவும் தேவையான சீரமைப்புகளை மேற்கொள்ளுதல்
வரத்து கால்வாய்களை சீராக்குதல் மற்றும் தூர்வாருதல் மூலமாக நீர்நிலைகளின் கொள்ளளவை மேம்படுத்துதல்
அதிக உபயோக வட்டாரங்களில் நிலத்தடி நீரினை சேகரிக்கும் கட்டமைப்பை அமைத்தல்
சுற்றுச்சூழலை கணித்தல் மற்றும் உபவடி நிலங்களில் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை தீர்க்க ஆய்வு மேற்கொள்வது
பாசன வேளாண்மைக்கான அமைப்பினை நவீனப்படுத்துதல்
நவீன முறையில் திறமையான வரைமுறைக்குட்பட்ட பாசன சேவையை அளிப்பதே நோக்கம். இது தொடர்பான பணிகள் நீர்வள ஆதார துறை மற்றும் பாசன நீர் பயனீட்டாளர்கள் சங்கம் மூலமாகவும் செயல்படுத்தப்படும். அதாவது குறிப்பிட்ட பகுதியின் நீர் ஆதாரங்கள் முக்கிய நீர் பயனீட்டாளர் சங்கங்களுடன் விவாதித்து வடிவமைத்து மேம்படுத்தப்படும்.
நீர்வள ஆதார துறையில் உள்ள அனைத்து அலுவல்களையும் இணைய தளம் போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகள் மூலம் ஒருங்கிணைத்து தகவல் பரிமாற்றத்திற்கு வழிவகுக்கப்படும்.
விவசாயிகளுக்கு பயிற்சி,சுற்றுலா மற்றும் கருத்தரங்குகள் நடத்த ஆதரவளிக்கப்படும்.
விவசாயிகள் பங்கு கொள்ளும் பாசன மேலாண்மை மற்றும் முதன்மை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் பயிற்சி பிரிவுகளை அமைத்தல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பணிகளுக்காக பாசன ஆராய்ச்சி நிதியை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் இந்த திட்டம் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

லாபம் தரும் எண்ணெய் பனை சாகுபடி

0 கருத்துகள்

மிழகத்தில் மத்திய அரசின் உதவியுடன் தமிழக அரசின் வேளாண்மை துறை மூலம் எண்ணெய்ப்பனை வளர்ச்சி திட்டத்தை தேசிய எண்ணெய்பனை ஆராய்ச்சி நிலையம் மற்றும் பாமாயில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது.
பாமாயில் மரம் என்று அழைக்கப்படும் எண்ணெய்ப்பனை என்பது பனை மர குடும்பத்தை சார்ந்தது. எண்ணெய்ப்பனை ஒரு ஆண்டிற்கு எக்டரில் 4 முதல் 6 டன்கள் வரை எண்ணெய் கொடுக்கக்கூடிய ஒரு மரப்பயிராகும். இது மற்ற எண்ணெய் வித்துபயிர்களுடன் ஒப்பிடுகையில் பல மடங்கு அதிக எண்ணெய் மகசூல் தரவல்லது.
பொதுவாக ஒரு எக்டரில் பயிரிடப்படும் கடலையில் இருந்து 375 கிலோ அளவும், கடுகு பயிரிலிருந்து 560 கிலோவும், சூரியகாந்தியிலிருந்து 545 கிலோவும், எள்ளிலிருந்து 160 கிலோவும், தேங்காயிலிருந்து 970 கிலோ அளவுக்கு தான் எண்ணெய் கிடைக்கிறது. ஆனால் ஒரு எக்டரில் பயிரிடப்படும் எண்ணெய் பனையிலிருந்து 4 ஆயிரம் முதல் 6 ஆயிரம் கிலோ எண்ணெய் கிடைக்கிறது.
இந்த மரம் நட்ட மூன்றாம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 25 ஆண்டுகள் வரை மகசூல் தரக்கூடியது. எண்ணெய்ப்பனை மரத்திலிருந்து இரண்டு விதமான எண்ணெய் கிடைக்கிறது. பழத்தின் சதைப்பகுதியிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் சுத்திகரிக்கப்படாத பாமாயில் எனவும், பழத்தில் உள்ள கொட்டையில் உள்ள பருப்பில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் பருப்பு எண்ணெய் என்றும் அழைக்கப்படுகிறது.
சிறப்பம்சங்கள்
1. எண்ணெய் பனை நட்டு மகசூலுக்கு வந்தது முதல் 25 ஆண்டுகளுக்கு பலன் தரக்கூடியது.
2. குறைவான சாகுபடி செலவு, பழக்குலை உற்பத்தி செலவீனம் டன் ஒன்றுக்கு ரூ.650 முதல் ரூ.750 வரை மட்டுமே.
3. வேலை ஆட்கள் மிகவும் குறைவு. ஆகவே சிறு விவசாயிகள் 5 ஏக்கர் வரை வெளி ஆட்கள் உதவியின்றி தாங்களே முழுமையாக பராமரிக்கலாம்.
4. மழை, வெள்ளம், களவு, சேதம் கிடையாது.
5. பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறைவு.
6. தண்ணீர் வசதி மற்றும் உர நிர்வாகத்திற்கேற்ற மகசூல் கூடும்.
7. முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஊடுபயிர் செய்து உபரி வருமானம் பெறலாம்.
8. எண்ணெய் பனை கன்றுகள் அரசு மானிய விலையில் கன்று 20 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.
9. எண்ணெய் பனை சாகுபடிக்கு நான்கு ஆண்டுகளில் அரசு மானியம் எக்டர் ஒன்றிற்கு 15 ஆயிரத்து 500.
10. அரசு மானியத்துடன் சொட்டு நீர் பாசனம் அமைத்து பயன் பெறலாம்.
11. உத்தரவாதமான பழக்குலைகள் கொள்முதல் மற்றும் உடனடியாக பணப்பட்டுவாடா.
12. தேவைப்பட்டால் பனை பராமரிப்புக்கு வங்கிகளில் இருந்து கடன் பெற்றுக் கொள்ளலாம்.

மழைக்கு பின் நெல், தென்னை, வாழை பயிர்களில் ஏற்படும் பூச்சி தாக்குதல் மற்றும் நோய்கள்

0 கருத்துகள்

ழை அதிகம் பெய்த நிலையில் சில பயிர்களில் பூச்சிகளும், நோய்த்தாக்குதலும் காணப்படுவதுண்டு. இது குறித்து பார்க்கலாம்.
நெல்
மழைக்குப் பின் நெல் பயிரில் இலைப்பேன் தாக்குதல் குறைவாக இருக்கும். ஆனால் படைப்புழு மற்றும் கூண்டுப்புழுக்களின் தாக்குதல் அதிகம் காணப்படும். இதில் படைப்புழுவால், குன்றுகள், காடுகள், வாய்க்கால்களை ஒட்டி அமைந்துள்ள வயல்களுக்கு சேதம் ஏற்படலாம். படைப்புழு பகலில் பதுங்கியிருந்து இரவில் நெற்பயிரை தாக்கும். இந்த புழுவின் தாக்குதலால், பயிர்கள் ஆடு, மாடு மேய்ந்தது போல் இலைகள் வெட்டப்பட்டு காணப்படும். இதனை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 400 மில்லி குளோரிபைரிபாஸ் மருந்தினை இருநூறு லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு பயிர் முழுவதும் நனையும்படி மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.
கூண்டுப்புழு
வடிகால் வசதியில்லாமல் தண்ணீர் அதிகம் தேங்கும் வயல்களில் கூண்டுப்புழு சேதம் ஏற்படும். இலை நுனிகள் வெட்டப்பட்டும், இலைகளில் வெண்ணிறமாக அரிக்கப்பட்டது போல் காணப்பட்டால் கூண்டுப்புழு தாக்குதலால் ஏற்பட்டது என்பதை உறுதி செய்து கொள்ளலாம். கூண்டுப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வயலின் குறுக்கே கயிற்றை இழுத்து கூண்டுப்புழுக்களை நீரில் விழச்செய்ய வேண்டும். பின்னர் தண்ணீரை வடிக்க வேண்டும்.
வடிகாலில் வைக்கோல் பிரி அல்லது சாக்கு வைத்து மிதந்து வரும் கூண்டுப்புழுக்களை சேகரித்து அழிக்க வேண்டும். வயிலில் இருந்து தண்ணீரை முழுவதும் வடித்த பின்னர் தான் மருந்து தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு 400 மிலி மனோகுரோட்டோபாஸ் மருந்து தெளித்து கூண்டுப்புழுவினை கட்டுப்படுத்தலாம்.

தென்னை
குருத்தழுகல் நோய்
பெருமழை பெய்து மழைநீர் சில நாட்கள் தங்கியுள்ள தென்னந்தோப்புகள், குளங்கள் அருகிலுள்ள தோப்புகள் மற்றும் ஊடுபயிராக நெல் பயிரிடப்பட்ட தோப்புகளில் தென்னை மரங்கள் குருத்தழுகல் நோய் என்ற பூசண நோயால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. குருத்தழுகல் நோய் பாதித்த தென்னையில் குருத்து வாடி அழுகித் தொங்கும். முழுவதும் பாதிக்கப்பட்ட குருத்து பிடித்து இழுத்தால் கையோடு வந்து விடும். குருத்தின் அழுகிய பகுதியை அறுத்து எடுத்து விட்டு போர்டோ பசை தடவ வேண்டும். அல்லது காப்பர் ஆக்சி குளோரைடு எனப்படும் புளு காப்பர் மருந்தை பசை போல் கரைத்து தடவ வேண்டும். மேலும் கலவையினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டரை கிராம் வீதம் குறுத்து மற்றும் அருகில் உள்ள மட்டை இடுக்குகளில் தெளிக்க வேண்டும். பாதிப்பு ஏற்பட்ட மரத்துக்கு அருகில் உள்ள மரங்களுக்கும் பாதுகாப்பு நடவடிக்கையாக தெளிக்க வேண்டும்.

வாழை
மழைக்குப் பின் வாழைப் பயிரில் இலைப்புள்ளி நோய் தோன்றும். இதனை கட்டுப்படுத்த அதிகம் பாதித்த இலைகளை அறுத்து எடுத்து அப்புறப்படுத்தி எரித்து அழிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் இலைப்புள்ளி நோய் அடுத்த இலைக்கு பரவுவது தடுக்கப்படும். காற்றோட்டமான தோட்டங்களில் நோய் விரைந்து பரவாது. இந்த நோயின் தொடக்க அறிகுறிகள் இலைகளில் தென்பட்டவுடன் ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் கார்பன்டாசிம் அல்லது இரண்டரை கிராம் காப்பர் மாங்கோசெப் அல்லது இரண்டு கிராம் குளரோதலோனில் மருந்து வீதம் கலந்து தெளிக்க வேண்டும். தேவைப்பட்டால் பதினைந்து நாட்களுக்கு பின்னர் மீண்டும் தெளிக்க வேண்டும்.
பூச்சி மற்றும் பூசணக் கொல்லி மருந்துகள் பயிரின் மீது நன்கு பரவி படிவதற்காக வேளாண்மைக்கான திரவ சோப்புகளான சாண்டோவிட், இண்ட்ரான், பைட்டோவெட் ஆகியவற்றில் ஒன்றை ஒரு லிட்டர் மருந்து கரைசலுக்கு கால் மில்லி என்ற அளவில் வாழைக்கு சேர்த்து கலக்கி கொள்வது அவசியம்.
கி.சுருளிபொம்மு, வேளாண் உதவிஇயக்குநர் (தரக்கட்டுப்பாடு),மதுரை.

குறைந்த செலவில் அதிக லாபம் பெற உதவும் பயறு வகை சாகுபடி

0 கருத்துகள்

மிழ்நாட்டில் பயறு வகைகளின் தேவை ஆண்டுக்கு 18 முதல் 20 லட்சம் மெட்ரிக் டன்னாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் 9.5 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டு ஒரு எக்டருக்கு 430 கிலோ பயறு என்ற விகிதத்தில் 4 லட்சம் டன் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் பயறு வகை சாகுபடியை அதிகரிக்க கி.சுருளிபொம்மு, மதுரை வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) விவரிக்கிறார்.

பயறு வகை பயிர்கள் குறைந்த நீர்த்தேவையை கொண்ட பயிர்களாகும். குறைந்த செலவில் அதிக லாபம் பெற்றிட ஏதுவான பயிர் வகையும் ஆகும். எனவே குறுகிய காலத்தில் குறைந்த நீரை கொண்டு குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெற பயறுவகைகளை பயிரிடலாம். பயறு வகை சாகுபடியால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.

சிறப்பு பயன்கள்
உளுந்து, பச்சைப்பயறு, தட்டைப்பயறு போன்ற பயறு வகை பயிர்கள் குறுகிய காலப்பயிர்களாகும். குறைந்த முதலீட்டில் குறைந்த நீரைக்கொண்டு அதிக லாபம் பெற முடிகிறது. பயறு வகை சாகுபடி செய்யும் நிலங்களில், வேர்முடிச்சுகளால் நுண்ணுயிர்கள் பெருகி, காற்றிலுள்ள தழைச்சத்தை மண்ணில் நிலைப்படுத்துவதால் மண்வளம் அதிகரிக்கிறது. இவை சாதாரணமாக எக்டருக்கு 17 முதல் 27 கிலோ தழைச்சத்தை மண்ணில் சேகரித்து வைக்கும். கால்நடைகளுக்கும் தீவனமாகிறது.

பயறுவகைகள் வறட்சியை தாங்குவதால் சாகுபடிக்கு 200 மி.மீ நீர் தேவை போதுமானது. பயறு வகைகளை தனிப்பயிராகவும், ஊடுபயிராகவும் வரப்புகளின் ஓரத்திலும், கலப்பு பயிராகவும் பயிர் செய்யலாம். தாவர வகைகளுக்குள் பயறு வகைகள் மட்டும் தான் எல்லா பயிருடனும் எல்லா பருவத்திலும் ஊடு பயிராகவும் சுழற்சி பயிராகவும் பயிரிடலாம். மேலும் வாய்க்கால், வரப்பு என எல்லா இடங்களிலும் வளரக்கூடிய பயிர். பணப்பயிர்களுடன் இணைத்து பயிரிடுவதால் மற்ற பயிர்களின் மகசூல் குறைவது இல்லை. அத்துடன் தன்னுடைய வேர் முடிச்சுகளின் மூலம் காற்றில் உள்ள தழைச்சத்தினை கிரகித்து தான் சார்ந்துள்ள மற்ற பயிர்களுக்கு கொடுக்கின்றது. இதனால் மகசூல் அதிகரிக்கிறது. மண்ணில் தழைசத்தின் அளவும் கூடுகின்றது.

பயறு வகை பயிர்களின் உற்பத்தியை பெருக்க வழிகள்
தனிப்பயிராகவும், நெல்லுக்கு பின் ஈரப்பதமுள்ள இடங்களில் நஞ்சை பயிராகவும் பயிரிடலாம்.
சிறுதானியம், நிலக்கடலை, கரும்பு, பருத்தி பயிர்களில் ஊடுபயிராகவும் பயிரிடலாம்.
நெல்வரப்பில் பயிரிடலாம்.
மானாவாரி பருத்தியில் கலப்பு பயிராகவும் பயிரிடலாம்.
கரும்பு, வாழை போன்ற ஆண்டு பயிர்களுடன் இளம் பருவத்தில் பயிரிடலாம்.

உற்பத்தி திறனை அதிகரிக்கும் வழிகள்
சரியான ரகங்களை சரியான பருவத்தில் தேர்வு செய்ய வேண்டும்.
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது சான்று பெற்ற விதைகளை பயன்படுத்த வேண்டும்.
பயிர் எண்ணிக்கையினை சைக்கிள் டயருக்கு 11 செடிகள் வீதம் பராமரிக்க வேண்டும்.
டிரைக்கோடெர்மா விரிடி போன்ற எதிர் உயிர் பூசண விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
ரைசோபியம் பாஸ்போ பாக்டீரியா போன்ற நுண்ணுயிர் விதை நேர்த்தியும் செய்ய வேண்டும்.
ஒருங்கிணைந்த உர மேலாண்மையை கடை பிடிக்க வேண்டும். இயற்கை உரம், உயிர் உரம், நுண்ணூட்ட உரம் மற்றும் செயற்கை உரங்களை சரியான அளவில் இடவேண்டும்.
இலை வழியாக உரங்களை தெளித்தலும், பயிர் ஊக்கிகளை தெளித்தலும் வேண்டும்.
புதிய சாகுபடி முறைப்படி சாம்பல் சத்தினை இடவேண்டும்.
ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு மேற்கொள்ள வேண்டும்.
காலத்தில் அறுவடை செய்ய வேண்டும்.
சரியான முறையில் பயறு தானியத்தை பிரித்தெடுத்து சேகரிக்க வேண்டும்.

ஆட்டுப்பண்ணையில் அதிக லாபம் பெற பசுந்தீவனங்கள்

1 கருத்துகள்

டுகளுக்கு பசுந்தீவனம் மற்றும் கலப்பு தீவனம் கொடுப்பதை விட பசுந்தீவனம் அளிப்பதால் தீவனச் செலவை குறைக்கலாம். பசுந்தீவனத்தை போதிய அளவு கொடுத்தால் கலப்பு தீவனம் கொடுக்கும் அளவை குறைத்துக் கொள்ளலாம். பசுந்தீவனங்களில் புரதம், தாது உப்புக்கள், உயிர்ச்சத்துக்கள் குறிப்பாக உயிர்ச்சத்து ஏ மற்றும் இ ஆகியவை உலர்தீவனத்தை விட அதிகமாக உள்ளது. பசுந்தீவன புரதத்தில் ஆர்ஜனின், லைசின் மற்றும் குளுடாமிக் அமிலம் போன்ற சத்துக்கள் அதிகம். இது ஆடுகளின் வளர்ச்சிக்கு உதவியாக உள்ளது. உயிர்ச்சத்துக்களில் முக்கியமான பீட்டா கரோட்டின் பசுந்தீவனங்களில் அதிகம் இருப்பதால் இது வைட்டமின் ஏ தேவையை பூர்த்தி செய்வதுடன் ஆடுகளின் கருமுட்டை உற்பத்தி மற்றும் இனப்பெருக்கத்திற்கு அதிக அளவில் பயன்படுகிறது.

பசுந்தீவனம்பசுந்தீவனங்கள் எளிதில் செரிக்க கூடியவை. உடலுக்கு குளிர்ச்சியை தரவல்லது. இதனால் உடலின் ஆரோக்கியம் மேம்படுவதுடன், பால் உற்பத்தி திறனையும் அதிகரிக்கிறது. உலர் தீவனங்களுடன் பசுந்தீவனத்தையும் சேர்த்துக் கொடுப்பதால் தீவனம் உட்கொள்ளும் அளவு அதிகரிப்பதுடன் உலர்தீவனத்தின் செரிமான தன்மையும் அதிகரிக்கிறது. குறிப்பாக கடலைக்கொடி, சோளத்தட்டு ஆகியவற்றுடன் மர இலைகள் மற்றும் பயறுவகை தீவனங்களை சேர்த்து கொடுப்பதால் உடல் வளர்ச்சி அதிகரிக்கிறது. வெள்ளாடுகளுக்கு அடர் தீவன செலவை குறைக்க முக்கியமாக புண்ணாக்கு செலவை குறைக்கவும் எளிதில் சினை தங்கவும் சினைக்கு வராத பெட்டைகள் ஒரு சேர சினைக்கு வரவும், ஆடுகள் எடை கூடவும், தோல் மினுமினுப்பு மற்றும் விற்பனைக்கு ஏதுவாக இருக்கவும் பசுந்தீவனம் இன்றியமையாதது.

முக்கிய பசுந்தீவனங்கள்
கோ-3. கோ-4 புல், அகத்தி, வேலிமசால், குதிரை மசால், தீவனச்சோளம், சூபாபுல், கலப்பகோனியம், கிளைசிரிடியா போன்றவை இருக்கின்றன. இந்த வகையில் நேப்பியர் ஒட்டுப்புல்(கோ-1, கோ-2, கோ-3) நீர்ப்புல், கொளுக்கட்டை புல், ஈட்டிப்புல், கினியாப்புல் மற்றும் மயில் கொண்டைப்புல் ஆகியவை முக்கியமானது ஆகும்.

இவ்வகையில் புரதச்சத்து 5 லிருந்து 10 சதம் வரை உள்ளது. இதில் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் கோ-3 ரகமானது அதிக விளைச்சல் தரக்கூடியது. அதாவது ஓராண்டுக்கு ஒரு ஏக்கரில் 150 டன்கள் வரையில் விளைச்சலை எதிர்க்கலாம். இது ஒரு முறை பயிர் செய்தால் 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து விளைச்சல் தரக்கூடியது.

இந்த கோ-3 ரகத்தை சிறு துண்டுகளாக நறுக்கி கொட்டில் முறையில் வளர்க்கப்படும் ஆடுகளுக்கு பசுந்தீவனமாக அளிப்பதன் மூலம் ஆடுகளின் உடல் வளர்ச்சியை அதிகரிக்க செய்யலாம்.
பயறுவகை பசுந்தீவனங்களை புல் வகை தீவனங்களுடன் கலந்து கொடுப்பது அடர் தீவனத்தை தீவனமாக கொடுப்பதற்கு சமமானது. இவற்றில் வேலிமசால் அதிக விளைச்சல் தரக்கூடியது. அதாவது ஓராண்டுக்கு ஒரு ஏக்கரில் 40 டன் வரை விளைச்சலை தரும்.

அசோலா-கால்நடைகளுக்கு ஒரு சத்தான தீவனம்

2 கருத்துகள்


ன்றைக்கு கிராமப்புறங்களில் கால்நடைகள் குறைந்து வருகிறது. பசுந்தீவனம் மற்றும் உலர்தீவன பற்றாக்குறையும் இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. கிராமப்புறங்களில் தரிசு நிலங்களில் தீவன மரங்களை நட்டு வளர்ப்பது மற்றும் வேறு பசுந்தீவனங்களை வளர்ப்பது இந்த பற்றாக்குறையை ஈடுகட்டும். இத்துடன் அசோலா என்னும் நீரில் மிதக்கும் ஒரு வகை பெரணி தாவரம் கால்நடைகளுக்கு அதிகச் சத்துள்ள தீவனமாக பயன்படுகிறது. இது பற்றி பார்க்கலாம்.  
அசோலா தாவரம்
அசோலா பெரணி வகை நீரில் மிதக்கும் தாவரமாகும். பெரும்பாலும் பச்சை மற்றும் இலேசான பழுப்பு நிறத்தில் காணப்படும். இதனை மூக்குத்தி செடி அல்லது கம்மல் செடி என்கிறார்கள். இதனை கால்நடைகளுக்கு தீவனமாக வழங்க வளர்க்கும் போது, எந்த விதமான பூச்சி மற்றும் பூஞ்சாண கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது.

வளர்ப்பு முறைக்கு தேவையானவை
செங்கல் 30 முதல் 40 கற்கள்
செம்மண் 30 கிலோ மற்றும் சில்பாலின் பாய் 2.5 மீ நீளம் மற்றும் 1.5மீ அகலம்
புதிய சாணம் 3 கிலோ.
சூப்பர் பாஸ்பேட் 30 கிராம்
ஐசோபேட் 10 கிராம்
தண்ணீர் அளவு 10 செமீ உயரம்
அசோலா விதை 300 கிராம் முதல் 500 கிராம் வரை
யூரியா சாக்கு தேவையான எண்ணிக்கை

செய்முறை
குழியின் அளவு 6 அடிநீளம் 3 அடி அகலம் இருக்கும் படி தோண்டிக் கொள்ள வேண்டும். புல்பூண்டு வளர்வதை தடுக்க யூரியா சாக்குகளை குழியில் பரப்பவும். செங்கல் குறுக்கு வாட்டில் குழியை சுற்றி வைக்கவும். அதன் மேல் சில்பாலின் பாய் பரப்பி அதன் மேல் 30 கிலோ செம்மண்ணை சம அளவில் பரப்ப வேண்டும். புதிய சாணம் 2கிலோ தண்ணீரில் கலந்து குழியில் ஊற்ற வேண்டும். தண்ணீரின் அளவு 60 செமீ உயரம் வரும் வரை ஊற்ற வேண்டும்.
250 கிராம் முதல் 500 கிராம் வரை அசோலா விதைகளை குழியில் போட வேண்டும். அதன் மேல் லேசாக தண்ணீர் தெளிக்க வேண்டும். விதைத்த மூன்று நாளில் எடை மூன்று மடங்காக வளர்ச்சி அடையும். பின்பு நாள் ஒன்றுக்கு 500 கிராமிலிருந்து 1 கிலோ வரை அறுவடை செய்யலாம்.

பராமரிப்பு
தினந்தோறும் குழியில் உள்ள அசோலாவை கலக்கி விட வேண்டும். 5 நாட்களுக்கு ஒரு முறை 2 கிலோ புதிய சாணம் மற்றும் 10 கிராம் சூப்பர் பாஸ்பேட் தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும். 10 நாட்களுக்கு ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு தண்ணீரை குழியிலிருந்து வெளியேற்றி, பதிலாக சுத்தமான தண்ணீரை விட வேண்டும்.
1 கிலோ அசோலா உற்பத்தி செய்ய 75 பைசா தான் செலவு ஆகும். ஆனால் இந்த 1 கிலோ அசோலாவில் உள்ள சத்து 1 கிலோ புண்ணாக்கில் உள்ள சத்துக்கு சமமானது. அசோலா உட்கொள்வதால் பசுக்களில் பால் உற்பத்தி 15 முதல் 20 சதவீதம் வரை உயரும். அசோலா உட்கொள்ளும் கோழிகள் அதிகமான எடையுடன் வளரும்.

அசோலாவை மாட்டுத்தீவனமாக பச்சையாகவோ, பதப்படுத்தியோ பயன்படுத்தலாம். இதில் அதிக புரதச்சத்தும், கொழுப்புச்சத்தும், தேவையான அமினோ அமிலங்களும் உள்ளன. அசோலாவை முயல்களும் விரும்பி உண்ணும். அசோலா வளரும் இடங்களில் கொசுத்தொல்லை இருக்காது.

தகவல்: கி.சுருளிபொம்மு, வேளாண்மை உதவி இயக்குநர்(தரக்கட்டுப்பாடு), மதுரை.

புஞ்சை செழிக்க உதவும் பண்ணைக்குட்டைகள்

0 கருத்துகள்

ற்போது நமது விவசாயிகள் பயிரிடும் நிலங்களின் மொத்தப்பரப்பில் 60 சதவிகிதத்திற்கும் மேலாக இருப்பவை மானாவாரி புஞ்சை நிலங்கள் தான். "புஞ்சை விளைந்தால் பஞ்சமில்லை" என்பார்கள். அதாவது, இந்த நிலங்களில் விளைச்சலை அதிகரித்து மானாவாரி விவசாயிகளின் பொருளாதார நிலையை உயர்த்தி ஆண்டு தோறும் நிலையான வருவாய் கிடைத்திட பண்ணைக்குட்டை மற்றும் கசிவு நீர்க்குட்டை அமைத்து பயன்பெறலாம்.
தரிசு நிலத்தில் மேல் ஓடும் நீரை சேகரிக்க இந்த பண்ணை குட்டைகள் உதவும். இதில் தேக்கப்படும் நீரை தேவைப்படும் நேரத்தில் மரக்கன்றுகளுக்கோ அல்லது பயிர்களுக்கோ பயன்படுத்திக் கொள்ளலாம்.

பொதுவாக தரிசுநிலங்களில் இயற்கையாகவே தாழ்வாக அமைந்துள்ள பகுதிகளில் குறைவான செலவில் நீர்வரத்தில் பகுதிகளை செம்மை செய்தும், தூர் வாரியும் பண்ணைக் குட்டைகளை அமைக்கலாம். இதை கால்நடைகளுக்கு குடிநீர் வழங்கும் குட்டையாகவும் பயன்படுத்தலாம். பண்ணைக்குட்டையின் அளவு 30 மீட்டருக்கு நீளம் அகலம் உடையதாக அமைக்கலாம். பண்ணைக்குட்டையின் வரப்புகளில் கொடிப்பயிரை நடலாம். பண்ணைக்குட்டைகளில் மீன் வளர்ப்பும் செய்யலாம்.

கசிவு நீர்க்குட்டை  என்பது, தரிசு நிலங்களில் வழிந்தோடும் நீரை மண்ணில் சேமித்து வைத்தும், குட்டையில் தேங்கியது போக உள்ள உபரி நீரை கசிவு நீர்க் குட்டையின் நிலத்தடி நீரை வலுப்படுத்த பயன்படுத்தலாம். இதனால் குட்டைக்கு கீழ் உள்ள கிணறுகளுக்கு அதிக நீர் கிடைக்கும். மேலும் நிலத்தடி நீர் மட்டத்தை ஒரே சீராக வைத்துக் கொள்ளவும் உதவும். இந்த பண்ணைக்குட்டைகளால் சுமார் 1 கிலோமீட்டர் விட்டத்தில் உள்ள கிணறுகளில் நீர் மட்டம் சிறப்பாக இருக்கும்.

இது தவிர மண்அரிப்பு தடுக்கப்பட்டு வழிந்தோடும் நீரின் மூலம் மேல் மண் அரிக்கப்பட்டு இடம் மாறிச் செல்வதை தடுக்கிறது. இயற்கை வளங்களையும், உயிரினச்சமநிலையையும் நன்றாக பராமரிக்க முடியும். ஆகவே விவசாயிகள் பண்ணைக்குட்டைகளை அமைத்து பயிர்வளர்ச்சிக்கும், நிலத்தடி நீரை பாதுகாக்கவும் முன்வர வேண்டும்.

தகவல்: பி.எஸ்.காதிரி,நீர்மேலாண்மை பயிற்சி நிலையம், மதுரை .

மாடு சினை பிடிக்காமல் போக காரணங்களை அறிந்து கொள்ளுங்கள்

0 கருத்துகள்

 ந்தியாவில் இருக்கும் பசுக்கள் கலப்பினத்தை சேர்ந்தவை தான். அதிகம் பால் பெற வேண்டிய நிலையில் மேலைநாட்டு இனங்களுடன் இந்திய இனங்களை இனவிருத்தி செய்து உருவாக்கப்பட்டவை. இதனால் சில காரணங்களால் இவற்றின் நோய் எதிர்ப்பு திறன், சினைபிடிக்கும் திறன் போன்றவை நாட்டு இனங்களை விட்டு வேறுபடுகின்றன. பொதுவாக, மாடுகள் சினைபிடிக்காமல் இருப்பதற்கான காரணங்களை இங்கு பார்க்கலாம்.

1. பிறவிக் குறைபாடுகளினால் ஏற்படும் இனவிருத்திக் கோளாறுகள்.
2. மரபியல் காரணங்களால் ஏற்படும் இனவிருத்திக் கோளாறுகள்.
3. கலப்பின மாடுகளில் வைட்டமின் ஏ பற்றாக்குறை மிகுதியாக காணப்படுகிறது. சினைபிடித்த மாடுகளில் வைட்டமின் ஏ பற்றாக்குறை ஏற்படும் போது கருச்சிதைவு அல்லது உடல் நலம் குன்றிய அல்லது இறந்த கன்றுக்குட்டி பிறக்க வாய்ப்புள்ளது.
4. தாது உப்புக்களில் பாஸ்பரஸ் உப்பு குறைவினால் மாடு எளிதில் சினைபிடிக்க முடியாமல் போகலாம். பாஸ்பர உப்பு, வைட்டமின் ஏ பற்றாக்குறையும், மாடுகள் உலர்ந்த காய்ந்த புல்வெளிகளில் மேய்வதால் ஏற்படுகிறது. மேலும், இதனால் மாடு ஆண்டிற்கு ஒரு முறை தான் கன்று ஈனும் நிலை உருவாகிறது.
5. உடலிலுள்ள சில கணநீர்கள் என்னும் ஹார்மோன்கள் சரியான அளவில் உற்பத்தியாகாமல் இருத்தல்.
6. கருப்பையில் நோய் இருக்கும் போது அறையிலிருந்து கண்ணாடி போன்ற சீல் பிடித்துக் காணப்படும். மேலும், சூலகத்தில், கருவக்கட்டி உண்டாவதாலும் கூட மாடு எளிதில் சினைபிடிக்காமல் போகலாம்.
7. மாடுகளுக்கு நுண்கிருமிகளால் காய்ச்சல் உண்டாகி மாடுகள் சினைப்பிடிக்க இயலாமல் போகும். ஆகவே, எந்த விதமான காய்ச்சல் தாக்கினாலும், உடன் மருத்துவ உதவி அளிக்க வேண்டும். கால்நடைகளுக்கு தக்க தருணத்தில் சப்பை, கோமாரி, வெக்கை போன்ற நோய்களுக்கு தடுப்பூசி போட வேண்டும்.
8. சில மாடுகளில் கருமுட்டையானது, கருவூட்டல் செய்த பிறகு சூலகத்திலிருந்து 48 மணி நேரம் அல்லது அதற்கும் காலந்தாழ்த்தி வெளிப்படுதல்.
9. சில பசுக்களிலும், எருமைகளிலும் "ஊமைச்சினைப்பருவம்" காணப்படுவதால் சரியான சினைத்தருணத்தில் இருக்கும் மாடுகள் கூட, கருவூட்டல் செய்ய இயலாமல் போகும். ஒரு இடத்தின் தட்பவெப்ப நிலையும், மாடுகளின் இனவிருத்தியினை பாதிக்கின்றன. சுற்றுப்புறத்தில் வெப்பமும், ஈரப்பதமும் அதிகமாக இருக்கும் போது மாடுகளின் சினைத்தருணச் செயல்கள் தடைபடுகின்றன.
10. விவசாயிகள் தங்கள் மாடுகளில் சினை பார்த்த உடன் சினை இல்லை என்றால் உடனே கருவூட்டல் செய்ய வேண்டும் என்று நினைப்பது மிகவும் தவறு. மாடுகளுக்கு சரியான சினைத்தருணத்தில் இருக்கும் போது தான் கருவூட்டல் செய்ய வேண்டும்.
11. மாட்டுத்தொழுவங்கள், மாடுகளை நேரடியான சூரிய வெப்பம், கடுங்குளிர் மற்றும் மழை போன்றவற்றிலிருந்து காப்பாற்றக்கூடிய வகையில் வசதியானதாக இருக்க வேண்டும்.
12. மாடுகளுக்கு தேவையான அளவு சுத்தமான, குளிர்ந்த நீர் கிடைக்குமாறு செய்ய வேண்டும்.

தகவல்: டாக்டர்.மோகன்குமார்.

பயிருக்கு நீர் பாய்ச்சும் வீணாகிறதா?

1 கருத்துகள்

 பயிருக்கு பாய்ச்சப்படும் நீரில் 50 முதல் 80 சதவிகிதம் வரை மண்ணின் அடிமட்ட பகுதிக்கு சென்று வீணாகிறது. மண்ணின் தன்மையை பொறுத்து இப்படி பாய்ச்சப்படும் நீரின் வீணாகும் அளவு மாறுபடுகிறது. மணல் கலந்த குறு மண்ணில் 60 சதவிகிதமும், குறுமண் கலந்த மணல் நிலத்தில் 80 சதவிகிதமும் பாய்ச்சப்படும் நீர் ஈர்க்கப்பட்டு வீணாகிறது என்பதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

சீரிய முறையில் சேறு கலக்குவதும், வேர்ப்பகுதிக்கு கீழ் நீர் கசிந்து செல்லாதவாறு அமைப்புகள் ஏற்படுத்துவதும் நீர் விரயமாவதை கட்டுப்படுத்தும். பிட்டுமென், சிமிண்ட் காங்கிரீட், பாலித்தீன் சிட்டுகளை நில மட்டத்திற்கு கீழ் 30 முதல் 50 சென்டிமீட்டர் ஆழத்தில் பதிப்பதால் நீர் சேதாரத்தை கட்டுப்படுத்த முடியும்.

எனவே, நீர்ப்பாசன திட்டங்களை சரியாக செயல்படுத்த மண் மற்றும் நீரின் தன்மையை தீர்க்கமாக அறிந்திருக்க வேண்டும். அந்த நிலையில் தான் நீரை சிக்கமான பயன்படுத்தி பயிரின் முழு விளைச்சலையும் பெற முடியும். இது பற்றி மேலும் தகவல் அறிய

வேளாண்மை துணை இயக்குநர், நீர் மேலாண்மை பயிற்சி நிலையம், விநாயகபுரம்-625 122  

என்ற முகவரிக்கு எழுதி விபரம் பெறலாம்.

காய்கறி பயிர்களில் நல்ல மகசூலுக்கு சிக்கன நீர்ப்பாசனம்

1 கருத்துகள்


ண்ணீரின் தேவை உயர்ந்து வருகிறது. ஆனால் முன்பு போல் கிணறுகளில் நீர் இல்லை. இருந்தாலும் நீரை அளவான அளவில் பயிர்களுக்கு பாய்ச்சும் போது மகசூலும் அதிக அளவில் கிடைக்கிறது. சரியான அளவான நீர்நிர்வாகத்தால் காய்கறிகளில் பூச்சிநோய்களின் தாக்குதல் மற்றும் களைகள் கட்டுப்படுத்தப்படுவதும் தெரியவந்துள்ளது. எனவே காய்கறி பயிர்களில் மண்ணின் தன்மைக்கேற்ப நல்ல வடிகால் வசதியுடைய நிலத்தின் பயிர்களின் தேவைக்கேற்றவாறு சரியான அளவில் காலம் தவறாமல் நீர்ப்பாசனம் செய்வது அவசியம் ஆகும். இதற்கு எந்த மாதிரியான சூழ்நிலையில்  நீர்ப்பாசனத்தை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள்வது முக்கியம்.

பயிர் சாகுபடி இடைவெளி, மண்ணை பயன்படுத்தும் முறைகள், மண் வகைகள், பயிர்சாகுபடி முறைகள், மழையளவு, அந்த பகுதியில் நீர் ஆவியாகும் தன்மை, தண்ணீர் பெறும் முறைகள், தண்ணீர் பாய்ச்சும் அளவு, தண்ணீர் பாய்ச்சுவதற்கு ஆகும் செலவு, மண்ணின் கார அமிலத்தன்மை, பயிர்சாகுபடி செய்யும் பரப்பு, தண்ணீர் பாய்ச்சும் செலவு, மண்ணின் தன்மைகள், நீர் விரைவாக பாய்ச்சு தன்மைகள் ஆகிய காரணிகளை வைத்து நீர்ப்பாசன காலகட்டத்தை தேர்வு செய்யலாம்.

105 நாட்கள் வயதுடைய ஒரு காய்கறி பயிரின் வாழ்க்கை பருவத்தை, முளைக்கும் பருவம் (20 நாட்கள்), வளர்ச்சி பருவம்(30 நாட்கள்), பூ மற்றும் காய்ப்பருவம்( 40நாட்கள்), முதிர்ச்சிப் பருவம்( 15 நாட்கள்) என்று பிரிக்கலாம். இதில் முதல் 20நாட்களும், கடைசி 15 நாட்களும் அதிகமாக நீர்ப்பாய்ச்ச தேவையில்லை. ஆனால் வளர்ச்சிப்பருவத்திலும், பூ மற்றும் காயாகும் பருவத்திலும் தண்ணீர் தட்டுப்பாடு இருக்கக் கூடாது. இந்த காலகட்டத்தில் பயிருக்கு போதிய சரியான அளவு தண்ணீர் அளித்தால் மட்டுமே நல்ல மகசூலை எட்ட முடியும்.

தகவல்: பி.எஸ்.காதிரி, வேளாண்மை துணை இயக்குநர், நீர்மேலாண்மை பயிற்சி நிலையம், விநாயகபுரம்.

பார்த்தீனியம் செடியை ஒழிக்க வழிமுறைகள்

2 கருத்துகள்


பார்த்தீனியம் செடி விவசாயிகளுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. இந்த களைச்செடி அதிக அளவில் விதைகளை உற்பத்தி செய்வதால் விரைவாக பரவி எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. எல்லா பருவ காலங்களிலும் அனைத்து வகை மண்ணிலும் வளரக்கூடிய செடியாகவும் இருப்பதால் அனைத்து இடங்களிலும் வளர்ந்து கிடக்கிறது. இந்த களைச்செடியால் மனிதர்களுக்கு ஒவ்வாமை, ஆஸ்துமா, தோல் நோய்கள், சுவாசம் தொடர்பான கோளாறுகள் ஏற்படுகின்றன. இந்த செடியை உண்ணும் கால்நடைகளிலிருந்து கிடைக்கும் பால் கூட மிக அதிகமான தீமைகளை விளைவிக்கிறது. எனவே பார்த்தீனியம் களைச் செடிகளை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டியது கட்டாயமாகிறது.
கட்டுப்பாடு
1. செடிகளை பூ பூப்பதற்கு முன்பு கையுறை அணிந்து கொண்டு வேரோடு பிடுங்கி எரித்து விட வேண்டும். இதனால் இவை விதைகள் மூலம் பரவுவதை தடுக்கலாம்.
2. பார்த்தீனியம் செடி அதிகம் வளரும் இடங்களில் வேறு சில பயிர்களான அடர் ஆவாரை, ஆவாரை, துத்தி, நாய்வேளை ஆகிய செடிகளை வளரச் செய்வதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
3. செவ்வந்தியை பயிர் சுழற்சி முறையில் பயிரிடலாம்.
4. மண்ணில் போதுமான ஈரம் இருக்கும் போது அட்ரசின் களைக் கொல்லியை எக்டருக்கு 2.5 கிலோ என்ற அளவில் சுமார் 625 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் நிலத்தில் சீராக தெளிக்க வேண்டும்.
5. சாலையோரங்கள் மற்றும் ரயில்பாதை ஓரங்களில் உள்ள களைகளை அகற்ற 1 லிட்டர் நீரில் 200 கிராம் சமையல் உப்பு மற்றும் 2 மில்லி டீபால் ஒட்டு திரவத்தினை கலந்து நல்ல வெயில் நேரத்தில் செடிகள் நனையும்படி கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.
6. சைக்கோ கிரம்மா பைக்கலரெட்டா என்ற வகை வண்டுகளை வளர்த்து அதை பார்த்தீனிய செடி வளரும் இடங்களில் விட்டு கட்டுப்படுத்தலாம்.
தகவல்:ப.ராமநாதன்,வேளாண் துணை இயக்குநர், நீர்மேலாண்மை பயிற்சி நிலையம், விநாயகபுரம்.

4 கருத்துகள்வீட்டிற்கு வேண்டிய காய்கறிகளை நாமே உற்பத்தி செய்து கொள்ள வீட்டுத்தோட்டத்தை அமைக்கலாம். குறிப்பாக கிராம மக்கள் கொல்லைப்புறத்தில் கோழிவளர்ப்பில் ஈடுபட்டாலும், வீட்டை ஒட்டி சிறிய காய்கறி தோட்டங்கள் அமைத்தால் சிறுசேமிப்புக்கு உதவும். வீட்டிற்கு தேவையான காய்கறிகளை பெறமுடியும்.
எங்கு அமைக்கலாம்?
வீட்டின்முன்புறம், பின்புறம், வீட்டை சுற்றி இருக்கும் காலி இடம் ஆகியவற்றிலும், நகர்ப்புறம் என்றால் சிறு தொட்டிகளிலும், மாடியிலும் அமைக்கலாம்.

விதை வாங்க...
அரசு விதைப்பண்ணைகளிலும், வேளாண்மை தோட்டக்கலைத்துறை அலுவலகங்களிலும், அங்கீகரிக்கப்பட்ட விற்பனை மையங்களிலும் அல்லது பண்ணை மற்றும் ஆராய்ச்சி மையங்களில் தரமான விதைகளை வாங்கலாம். தற்போது சில விதை உற்பத்தி நிறுவனங்கள் வீட்டு தோட்ட விதை பெட்டிகள் என்ற பெயரில் பல்வேறு விதைகள் கொண்ட சிறு பெட்டிகளை சந்தையில் விற்பனை செய்து வருகின்றன.

சாகுபடி
கீரை விதை, பாகல், பூசணி, வெண்டை, சீனிஅவரை, முள்ளங்கி போன்றவற்றை விதைப்பது முறையாகும். கத்தரி, மிளகாய், தக்காளி ஆகியவற்றை நடுவது சிறந்தது.

இடத்தை தயார் செய்தல்
தேர்வு செய்த இடத்தின் மண்ணை கொத்தி எடுத்து மிருதுவாக்க வேண்டும். கல், கட்டிகள் இருந்தால் அப்புறப்படுத்த வேண்டும். மட்கிய எரு உரம் இட்டு நன்றாக கிளறி சிறுசிறு பாத்திகளாக அமைக்க வேண்டும்.
எந்த செடிகளை நட வேண்டும்
தேர்வு செய்த மண்ணுக்கும், பட்டத்துக்கும் ஏற்ற காய்கறிகளை தேர்வு செய்ய வேண்டும். காய்கறி வகைகளில் முள்ளங்கி, கத்தரி, தக்காளி,வெண்டை, மிளகாய், சீனிஅவரை ஆகியவற்றையும், கீரை வகைகளில் முருங்கை கீரை, தண்டுக்கீரை, அரைக்கீரை, பசலைக்கீரை, அகத்திக்கீரை, பந்தல் காய்கறிகளில் அவரை, பாகல், புடலை மற்றும் தரையில் படரும் பூசணி ஆகியவற்றை பயிரிட தேர்வு செய்யலாம்.

விதைக்க
வெண்டையை மண்ணுடன் தொழுஉரம் அல்லது நன்கு மட்கிய உரமிட்டு மண்ணும், உரமும் நன்றாக சேரும் வகையில் புரட்டி போட்டு 45 சென்டிமீட்டர் இடைவெளியில் பார்கள் அமைத்து 30 செமீட்டர் இடைவெளியில் 2 விதைகளாக ஊன்ற வேண்டும். கொத்தவரையை 45 சென்டிமீட்டர் இடைவெளியில் பார்கள் அமைத்து 15 சென்டி மீட்டர் இடைவெளியில் ஊன்றலாம். முள்ளங்கிக்கு இறுக்கமான மண் ஏற்றதல்ல. பார்கள் 45 சென்டிமீட்டர் இடைவெளி விட்டு குத்துக்கு 4 விதைகளை ஒன்றே கால் சென்டிமீட்டர் ஆழத்தில் விதைக்க வேண்டும்.

பந்தல் காய்கறிகளான அவரை, பாகல்,புடலை, பீர்க்கங்காய் போன்றவற்றை இருபந்தலாக நடலாம். சாம்பல் பூசணி, சர்க்கரை பூசணி விதைகளை 45 சென்டிமீட்டர் நீள, அகல ஆழமுள்ள குழி தயாரித்து அந்த குழியில் தொழுஉரம் இடுதல் வேண்டும். ஒரு குழிக்கு 7 விதை வீதம் விதைக்க வேண்டும். முளைத்த உடன் நல்ல நாற்றுக்களை வைத்துக் கொண்டு மற்றவற்றை கலைத்து விட வேண்டும்.   

கறி வேப்பிலை
வீட்டுத் தோட்டத்தில் கட்டாயம் ஒரு கறி வேப்பிலை மரத்தை நடுவது நல்லது. கறிவேப்பிலையை தொடர்ந்து உணவில் சேர்ப்பதால் புரதம், கொழுப்புசத்து, மாவு சத்து, இரும்பு சத்து, வைட்டமின் ஏ,சி போன்ற சத்துக்களும் கிடைக்கின்றன.
கீரைவகைகளை சிறுசிறு பாத்திகளாக பிரித்து அதில் கீரைவிதைகளை நட்டு நீர்பாய்ச்சி நட்ட 30 வது நாளிலிருந்து அறுவடை செய்யலாம்.
இயற்கை உரம் இடுதல்
வீட்டிற்கு தேவையான காய்கறிகளுக்கு ரசாயன உரம் தேவையில்லை. கிராமபுறங்களில் எளிதாக கிடைக்கும் மாட்டு சாணம், ஆட்டுச்சாணம், இலை தழைகளை எடுத்து இயற்கை உரம் தயாரிக்கலாம். இவற்றை எடுத்து சிறு குழி தோண்டி அதில் இட வேண்டும். பின்னர் சாணக்கரைசல் ஊற்றி மண்ணில் மூடி 50 நாட்களுக்கு பின் நன்கு மட்கிய உரமாக பயன்படுத்தலாம். சிறிதளவு உரத்தை செடியின் அடியில் இட்டு மண் அணைத்து நீர் பாய்ச்ச வேண்டும்.
பூச்சி மற்றும் நோய்க்கட்டுப்பாடு
உரமிடும் போது வேப்பம் பிண்ணாக்கு சேர்த்து இடவேண்டும். இலைஉண்ணும் புழுக்கள், பூச்சிகள், சாறுஉறிஞ்சு பூச்சிகளை அழிக்க வேப்ப எண்ணெய் கரைசல் முதலியவை தயாரித்து தெளிக்க வேண்டும். பூஞ்சாண நோய்களுக்கு வேப்ப விதை கரைசலும், வேப்பம் பிண்ணாக்கு இடித்த பொடியை பயன்படுத்தலாம். இவற்றை செடியின் அடியில் இட்டு மண்ணால் மூடி நீர்ப்பாய்ச்ச வேண்டும்.
அறுவடை
கத்தரி மூன்றாவது மாதம் முதலும், தக்காளி நட்ட 60 வது நாளில் இருந்தும் பழம் பறிக்கலாம். மிளகாய் 70 வது நாளில் இருந்தும், முள்ளங்கி 45 வது நாளில் இருந்தும் பறிக்கலாம்.

மூலிகை 1-அமுக்கிரா

7 கருத்துகள்
 மரபு சார்ந்த பயிர்களின் சாகுபடி பல நேரங்களில் எதிர்பார்த்த லாபத்த¬ தருவதில்லை என்று விவசாயிகள் சலிப்பில் ஆழ்ந்து போவார்கள். இந்தியாவை பொறுத்தமட்டில் இங்கு விளையும் மூலிகைகளுக்கு வெளிநாடுகளில் அதிக வரவேற்பு இருக்கிறது. இதில் குறிப்பாக அமுக்கிரா கிழங்கு என்ற நரம்புத்தளர்ச்சி, இரத்தக் கொதிப்பு, ஆண்மைக்குறைவு போன்ற பிரச்சனைகளுக்கு மருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை கிழங்கிற்கு அதிக தேவை உள்ளது. சுமார் ஐந்து அடிவரை வளரக்கூடிய இந்த குறுஞ்செடியில் இதன் கிழங்கே முக்கியமான மருத்துவப் பொருளாக உள்ளது. இந்த செடியின் வேர்க்கிழங்கிலிருந்து இரு முக்கிய வேதிப்பொருட்களான "வித்தானின்" " சோம்னியன்" என்பவை பிரித்தெடுக்கப்பட்டு மூலிகை மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.

அமுக்கிரா கிழங்கில் வித்தாபெரின் என்ற வேதிப்பொருள் உள்ளது. இது தொழுநோய் மற்றும் புற்றுநோயை குணப்படுத்துவதில் மிகச்சிறந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர அமுக்கிரா பொதுவாக உடல்தேற்றியாகவும், பித்தநீர் பெருக்கியாகவும், பசி உண்டாக்கவும் சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது. இதன் இலைகள் காய்ச்சலை தீர்க்கவும், குடற்புழுக்களை கொல்லவும் பயன்படுகிறது. அதிகளவு அன்னிய செலாவணியை பெற்றுக்கூடிய அமுக்கிராகிழங்கு சாகுபடி விவசாயிகளுக்கு எக்கசக்க லாபத்தை பெற்று தரும் என்பதில் மாற்றமில்லை. இதன் சாகுபடி குறித்த விவரங்களை பார்க்கலாம்.

சித்த மருத்துவத்தில் அஸ்வகந்தி என்றழைக்கப்படும் அமுக்கிராக்கிழங்கு ஒரு வெப்ப மண்டல பயிராகும். வேரின் வளர்ச்சிக்கும் தரமான வேர்களை பெறுவதற்கும் ஆண்டு தோறும் 60 முமுதல் 75 செமீ மழையளவு இருக்க வேண்டும். ஆனால் வேர்கள் முதிர்ச்சி பெறும் நிலையில் மழை தொடர்ந்து பெய்தால், வேரின் உற்பத்தி மற்றும் மருந்து பொருளின் அளவு குறைந்து விடும்.

அமுக்கிரா கிழங்கு வறட்சியான பிரதேசங்களிலும், எல்லாவகையான தட்பவெப்ப நிலையிலும் நன்றாக வளரும்.  செம்மண் கலந்த மணற்பாங்கான நல்ல வடிகால் வசதியுடைய இடங்களிலும் செழித்து வளரும். கடல் மட்டத்திலிருந்து 600 முதல் 1200 மீட்டர் உயரமுள்ள இடங்களில் பயிரிடலாம்.
விதைப்புக் காலத்ததை பொறுத்த மட்டில், ஜுன்/ஜுலை மாதங்கள் ஏற்றவை. நாற்றாங்காலிலி ஏப்ரல்-மே மாதங்களில் விதைகளை தூவியும் விதைக்கலாம் அல்லது வரிசையாகவும் விதைக்கலாம். ஒரு எக்டர் நிலத்தில் சாகுபடி செய்ய, 5 கிலோ விதை போதுமானது. விதை முளைத்து 35 முதல் 45 நாட்கள் ஆனபின், நாற்றுக்களை நடவுக்கு பயன்படுத்தலாம்.

நடவு செய்யப்படும் நிலத்தை நன்கு உழுது, ஒரு ஏக்கருக்கு 4 டன் தொழு உரம் இட்டு பண்படுத்திய பின், 60 செ.மீட்டர் அளவில் பார்கள் அமைக்க வேண்டும். இந்த பார்களில், 60 செ.மீ இடைவெளியில் நாற்றுக்களை நடவு செய்ய வேண்டும். மானவாரி நிலங்களில் நாற்றங்காலை தவிர்த்து, நேரிடையாக நிலங்களில் விதைகளை தூவி சாகுபடி செய்யலாம். செடிகள் முளைத்து 25 நாட்கள் ஆன பிறகு, செடிகளின் எண்ணிக்கை ஏக்கருக்கு சுமார் 8000 முதல் 10 ஆயிரம் வரை மட்டுமே இருக்கும்படி மற்ற உதிரி செடிகளை களைந்து விட வேண்டும்.

இதற்கடுத்து செடிகள் வளர்ந்து வரும் நிலையில், இது மூலிகை செடி என்பதால் ரசாயன உரங்களை தவிர்த்தும், பூச்சி மருந்துகள் அடிக்காமலும் சாகுபடி செய்வது நல்லது. எனவே, இவற்றுக்கு பதிலாக தொழுஉரங்கள், மண்புழு உரங்கள் மற்றும் பசுந்தாள் உரங்கள் பயன்படுத்தலாம்.
அமுக்கிரா கிழங்கு சாகுபடியை பொறுத்த மட்டில் நீர்ப்பாசனம் முக்கியம். மண்ணில் அதிக அளவில் நீர் இருந்தால் பயிர் வளர்ச்சி பாதிக்கப்படக் கூடும். எனவே, நீர்ப்பாசனத்தை தவிர்ப்பது நல்லது. எனினும், மிகவும் வறட்சியான காலநிலையில் பயிரின் உயிர்காக்கும் அளவில் நீர்பாசனம் செய்யலாம்.

செடியில் வேர்க்கிழங்குகள் நன்றாக வளர்ந்த நிலையில் அறுவடை செய்யலாம். அதாவது, ஏக்கருககு 120 கிலோ முதல் 200 கிலோ வரை உலர்ந்த வேரினையும், 25 முதல் 30 கிலோ விதைகளையும் மகசூலாக பெறலாம். செடியில் டிசம்பர் மாதத்தில் பூத்து காய்க்க தொடங்கும். செடிகளை நடவு செய்து 5 முதல் 6 மாதத்தில் இதன் இலைகளும், கனிகளும் வாடத் தொடங்கும். இந்த நிலையில், செடியினை வேருடன் அறுவடை செய்து, வேர்ப்பாகத்தை சுத்தம் செய்து 7 முதல் 10 செ.மீ அளவுள்ள துண்டுகளாக வெட்டி நிழற்பாங்கான இடத்தில் உலர்த்த வேண்டும். தற்போது வேரின் தரம் நான்கு வகைகளாக பிரிக்கப்படுகின்றன.
முதல் தரம்
வேரின் நீளம் ஏழு செ.மீ ஆகவும், அதன் குறுக்களவு 1.0 முதல் 1.5 செ.மீட்டர் விட்டம் உள்ளதாகவும் இருக்கும். வேர்கள் கடினமாகவும், அவற்றின் தோலின் நிறம் வெண்மையாகவும் இருக்க வேண்டும்.
இரண்டாவது தரம்
வேரின் நீளம் 5 செ.மீ ஆகவும், குறுக்களவு 1.0 செ.மீ ஆகவும், தோலின் நிறம் சுமாராகவும் இருக்க வேண்டும்.
மூன்றாம் தரம்
வேரின்நீளம் மூன்று செ.மீ ஆகவும், குறுக்களவு 1.0 செ.மீக்கு குறைவாகவும், தோலின் நிறம் சுமாராகவும் இருக்க வேண்டும்.
நான்காம் தரம்
சிறிய துண்டுகளும், வேரின் உட்புறம் கடினமில்லாமலும் இருக்க வேண்டும். மிகவும் பருமனான வேர்களில் மருந்து பொருளின் அளவு குறைவாக இருப்பதால் அவற்றுக்கு அதிக விலை இல்லை.


அலங்கார மீன்வளர்ப்பு ஒரு சிறந்த தொழில்வாய்ப்பு

4 கருத்துகள்

ண்ணுக்கு அழகான, விதவிதமான வண்ணங்களை கொண்ட சிறுமீன்களை கண்ணாடி தொட்டிகளில் வளர்ப்பது அதிகரித்து வருகிறது. உயிருள்ள காட்சி பொருளாக இருப்பதால் இது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவருகின்றன. அலங்கார மீன்களை பொழுது போக்கிற்காக வளர்த்த காலம் மாறி அது நல்ல தொழிலாக மாறியிருக்கிறது. இந்த மீன்களை இனப்பெருக்க அடிப்படையில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் மீன்கள் மற்றும் குட்டியிடும் மீன்கள் என்று பிரிக்கலாம். குட்டியிடும் மீன்களில் கப்பீஸ், மோலி, பிளாட்டி மற்றும் வாள்மீன்கள் முக்கியமானவை.

கப்பீஸ்- இதில் ஆண்மீன்கள் சிவப்பு, பச்சை, கருப்பு,நீலம் மற்றும் கலப்பு நிறங்களிலும் காணப்படுகின்றன. இந்த மீன்களை பராமரிப்பது எளிது. அதிகமான வெப்பநிலையை தாங்கி வளரும். ஆண்மீன்கள் 2.5 சென்டிமீட்டர்நீளம் வரையிலும், பெண்மீன்கள் 5 செ.மீ நீளமும் வளரக்கூடியது. பெண்மீன்கள் 2.5 செமீ மற்றும் ஆண்மீன்கள் 2 செ.மீ வளர்ந்தவுடன் இனப்பெருக்கம் செய்ய தொடங்குகின்றன. இந்த மீன்கள் நன்கு வளரவும், இனப்பெருக்கம் செய்யவும் 22 முதல் 24 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையும், காரஅமிலத்தன்மை 7 முதல் 8க்குள் இருப்பது நல்லது. இந்த மீன்கள் 4 லிருந்து 6 வாரத்திற்குள் குட்டியிடும். பெண்மீன்கள் தாமாகவே தொடர்ந்து குட்டியிடும் தன்மையுடயவை. அலங்கார மீன்வளர்ப்பில் புதிதாக ஈடுபடுவோர் முதலில் இந்த வகை மீன்களை வளர்ப்பது நல்லது.
மோலி மீன்கள்
இந்த மீன்கள் 9 செமீ வரை உப்புத்தன்மையுடைய தண்ணீரில் நன்றாக வளரக்கூடியது. 24 முதல் 28 சென்டிகிரேட் வெப்பநிலையில் வளரும். இவை தாவர வகை உணவுகளையே விரும்பி உண்ணும். மோலி வளர்க்கும் தொட்டிகளில் ஒரளவு சூரிய ஒளி படும் வகையில் இருந்தால் பச்சை பாசிகள் வளரும். இது மீன்களுக்கு உணவாகும். இனப்பெருக்கத்திற்கு ஒரு ஆண்மீனுக்கு 3 முதல் 5 பெண்மீன்களை விடுவது நல்லது. இவை 5 முதல் 10 வார இடைவெளியில் குட்டிகள் போடும். இதில் சில்வர் மோலி, கருமோலி, வெள்ளைமோலி, ஆரஞ்சு மோலி, சாக்லேட் மோலி, செயில் துடுப்பு மோலி ஆகியவை முக்கியமானதாகும்.
பிளாட்டி
பளிச்சிடும் சிவப்பு, பச்சை, நீலப்பச்சை ஆகிய நிறங்களில் பிளாட்டி மீன்கள் காணப்படுகின்றன. ஆண்மீன்கள் 3.8 செ.மீ வளரும். இனப்பெருக்கத்திற்கு ஒரு ஆண்மீனுக்கு 3 பெண்மீன்கள் விடுவது நல்லது. இவை 3,4 வரை இடைவெளியில் குட்டியிடுகின்றன.
வாள்வால் மீன்
பிளாட்டி மீனை போன்று இருக்கும் இந்த மீன்கள் சிவப்பு நிறத்தில் காணப்படும். ஆண்மீன்களில் வால்துடுப்பு, வாள் போன்று நீட்டிக் கொண்டிருக்கும். ஆண்மீன்கள் 8.3 செ.மீ, பெண்மீன்கள் 12 செ.மீ நீளம் வரையும் வளரக்கூடியன. பெண்மீன்கள் 5 செ.மீ நீளத்திற்கு வளரும் போது இனப்பெருக்கம் செய்ய தொடங்குகின்றன. உயிர் உணவுகளையும், தாவர உணவுகளையும் விரும்பி உண்ணும்.
இனப்பெருக்கம்
இனப்பெருக்கத்திற்கு தகுதியான ஆண்மீன்களை அவற்றின் இனப்பெருக்க உறுப்பை கொண்டு அடையாளம் காணலாம். ஆண்மீன்களின் இனப்பெருக்க உறுப்பை கோனோபோடியம் என்று அழைப்பார்கள். ஒரு முறை கருவுற்ற பெண்மீன், 5லிருந்து 6 வாரத்திற்கு ஒரு முறையாக 8 முதல் 10 முறை குட்டியிடும் தன்மை கொண்டது. கருவுற்ற சினை பெண்மீன்களுக்கு வயிறு நன்கு பருத்திருக்கும். பெண்மீன்களின் குதத்திற்கு அருகில் கருமையான புள்ளி ஒன்று காணப்படும். இவ்விரு அறிகுறிகளையும் வைத்து கருவுற்ற மீன்களை அடையாளம் காணலாம்.

ஒரு நேரத்தில் ஒரு பெண்மீன் 50 குட்டிகள் வரை இடும். குட்டிகளின் எண்ணிக்கை, பெண்மீன்களின் நீளத்தையும், வயதையும் பொறுத்து மாறுபடும். பொதுவாக குட்டியிடும் மீன்களை 5-6 வாரத்திற்கு ஒரு முறை இனப்பெருக்கம் செய்தல் நல்லது.
ஒரே தொட்டியில் ஆணும்,பெண்ணும் சேர்த்து வளர்க்கப்பட்ட மீன்களிலிருந்து சேர்க்கை மூலம் கருவுற்ற பெண்மீன்களை வயிறு பெரிதாக காணப்படுவதன் மூலம் அடையாளம் கண்டு அவற்றை தனியாக பிரித்தெடுத்து இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்த வேண்டும். சத்தான குறுணை உணவு, புழு போன்றவற்றை அளித்து வந்தால் 4 முதல் 6 வாரத்திற்கு ஒரு முறையென தொடர்ந்து குட்டிகளை பெற்றுக் கொண்டேயிருக்கும்.

சரியான அளவுள்ள கண்ணாடி தொட்டியை நீரால் நிரப்பி, தேர்வு செய்யப்பட்டுள்ள கருவுற்ற பெண்மீனை தொட்டியில் இருப்பு செய்ய வேண்டும். ஒன்று அல்லது இரண்டு நாட்களில் தாய்மீன், குட்டிகளை இடை இடையே வெளியிடும். முழுவதுமாக குட்டிகளை வெளியிட்டதும், தாய்மீனை அப்புறப்படுத்தி விடவேண்டும். பின்னர் இரண்டு நாட்கள் சென்றதும், குட்டிகளை பெரிய தொட்டிக்கு மாற்றி, குறுணை உணவுடன் மிதவை நுண்ணுயிரிகளையும், புழுக்களையும் அளித்து வரலாம்.

நாற்றாங்கால் குளங்கள் அமைத்து அவற்றில் தகுந்த அளவில், சாணம் மற்றும் ரசாயன உரங்கள் இட்டு, மிதவை நுண்ணுயிரிகளை இருப்பு செய்யலாம். அந்த குளங்களில், பிறந்த இளங்குஞ்சுகளை இருப்பு செய்வதன் மூலம் துரித வளர்ச்சி அடைய செய்யலாம். குட்டியிடும் மீன்கள் தான் ஈன்ற குட்டிகளையே உண்ணும் தன்மை உடையவை. எனவே தாயிடமிருந்து குட்டிகளை காப்பாற்றுவது முக்கியம்.

இனப்பெருக்கத்திற்கு தயாராக உள்ள பெண்மீன்களை கையாள்வதில் மிகவும் கவனம் தேவை. தவறுதலாக கையாள்வதால் குட்டிகள் முழுவளர்ச்சி அடையாமல் வெளிவரும் வாய்ப்புகள் உள்ளன.
வண்ணமீன் வளர்ப்பு மூலம் கிராமப்புற இளைஞர்கள் சிறந்த தொழில்வாய்ப்பை பெறலாம்.
தகவல்: தமிழ்நாடு கால்நடை ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம், திருப்பரங்குன்றம்,மதுரை.

நன்னீரில் மீன்வளர்ப்பு - நல்ல லாபம் தரும் தொழில்

1 கருத்துகள்


கிராமங்களில் உள்ள கண்மாய்கள், குளங்களில் மீன்குஞ்சுகளை இருப்பு செய்து வளர்ப்பதன் மூலம் நல்ல லாபத்தை பெற முடியும். இதற்கு நன்னீர் மீன் வளர்ப்பு என்று பெயர். தற்போது கடல் மீன்களின் விலை அதிகமாக இருப்பது, வரத்து குறைவு போன்ற காரணங்களால் நாட்டு மீன்களுக்கான தேவைப்பாடு இருந்து வருகிறது.
இந்த நிலையில் நன்னீரில் மீன்வளர்ப்பு தொடர்ந்து லாபம் தரும் தொழிலாக உருவெடுக்க வாய்ப்பிருக்கிறது. மீன் வளர்ப்பு குளத்தின் மண், நீரின் உற்பத்தி திறன், மீன்வளர்ப்போரின் அனுபவம், ஆர்வம், கையாளப்படும் தொழில்நுட்பத்தின் வகை மற்றும் மூலதனத்திற்கேற்ப எக்டரில் ஆண்டுக்கு 10 முதல் 12 டன் மீன் உற்பத்தி காணலாம்.
மீன் வளர்ப்புக்கு ஏற்ற நீர் நிலைகள்
நன்னீர் மீன் வளர்ப்பை தொடங்க நினைத்தால், தேர்வு செய்யும் நீர்நிலையானது குறைந்தது 6 மாதங்களுக்கு வற்றாத நீர் பரப்பை கொண்டிருக்க வேண்டும்.
குளத்தில் குறைந்த பட்சம் 5 அடி முதல் 6 அடி ஆழத்திற்கு நீர் இருக்க வேண்டும்.
நீரின் கார, அமிலத்தன்மை 7.5 முதல் 8.5 அளவில இருத்தல் வேண்டும்.
மீன்வளர்ப்பு நீர் பரப்பு குறைந்தது அரை ஏக்கர் அளவிற்கு இருக்க வேண்டும்.
குளத்தில் நீர் கசிவு, அதிகமான துர்நாற்றம் மற்றும் கலங்கிய நிலை இருத்தல் கூடாது.
மேலாண்மை நடவடிக்கைகள்
1. குளங்களை தயார் செய்தல்
செடி, கொடிகளையும், புல், பூண்டுகளையும் வேருடன் அகற்ற வேண்டும். கரை, நீர்வரத்து மற்றும் வடிகாலை சீரமைக்க வேண்டும். மண்ணின் கார,அமில நிலைக்கேற்ப சுண்ணாம்பு இட வேண்டும். கார,அமில நிலை 7.5- 8.5 அளவில் இருக்குமாயின் எக்டரில் 250 கிலோ சுண்ணாம்பு இடவேண்டும். அமிலத்தன்மை கூடுதல் நிலையில் சுண்ணாம்பின் தேவையும், அதற்கேற்ப கூடும். குளத்தில் அங்ககப் பொருள்களை விரைவில் மக்கச் செய்து ஊட்டச்சத்துக்களை வழங்குவதுடன் கிருமிநாசினியாகவும் சுண்ணாம்பு செயல்படுகிறது.
2. உரமிடல்
மீன்களுக்கு தேவையான இயற்கை உணவுகளான தாவர, விலங்கியல் நுண்ணுயிர்களை நிலைநிறுத்தச் செய்ய உரமிடல் வேண்டும். ஒரு எக்டருக்கு ஒரு வளர்ப்புக்காலத்தில், மாட்டுச்சாணம் 10 முதல் 12 டன் அல்லது, கோழிச்சாணம் 5 முதல் 6 டன் பன்றிச்சாணம் 2.5 முதல் 3 டன் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 250 கிலோ இட வேண்டும். மொத்தத் தேவையில் 5 ல் 1 பங்கை மீன்குஞ்சுகள் இருப்பு செய்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக அடியுரமாக இட வேண்டும். எஞ்சிய உரத்தை சமமாய் பிரித்துக் கொண்டு மாதமாதம் இட்டு வரவேண்டும். இயற்கை உரத்தையும், செயற்கையும் உரத்தையும் மாற்றி மாற்றி 15 நாட்கள் இடைவெளியில் விட்டு வருவது நல்லது.
மீன்குஞ்சு இருப்பு செய்தல்
குறுகிய காலத்தில் எடையுடன் வளரக்கூடிய, பொதுமக்களால் விரும்பி உண்ணக்கூடிய கட்லா,ரோகு,மிர்கால்,சாதாக்கெண்டை, வெள்ளிக் கெண்டை, புல்கெண்டை ஆகிய மீன்கள் தான் கூட்டின மீன்வளர்ப்புக்கு ஏற்றது. குளம், கண்மாய்களில் உள்ள நீர்த்தாவரங்களை மட்டுமே உணவாக கொள்ளக்கூடிய புல்கெண்டைகளை குளம்,கண்மாய்களில் இருப்பு செய்வதன் மூலம் நீர்த்தாவரங்களின் வளர்ச்சியைக்கட்டுப்படுத்துவதுடன், புல் கெண்டையில் மட்டுமின்ற மற்ற மீன்களின் வளர்ச்சியிலும் முன்னேற்றம் காணலாம். அனைத்து இனங்களிலும் சேர்த்து மொத்தமாக குளங்களில் எக்டருக்கு 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் மீன்குஞ்சுகள் வரையிலும் நீர்ப்பாசன கண்மாய்களில் மொத்த நீர்ப்பரப்பில் சரிபாதியை மீன்வளர்ப்பு நீர்ப்பரப்பாக கணக்கிட்டு எக்டருக்கு ஆயிரம் மீன்குஞ்சுகளும் இருப்பு செய்ய வேண்டும். இருப்பு செய்யப்படும் மீன்குஞ்சுகள் 5 சென்டிமீட்டருக்கு மேல் இருப்பது அவசியம். குளத்தின் உற்பத்தி திறனுக்கேற்ப இருப்பு செய்யப்படும் மீன்குஞ்சுகளின் இனத்தின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்து கொள்ளவும் வேண்டும்.
மேலுணவு இடல்
வளர்ப்பிலுள்ள மீன்களின் வளர்ச்சியை மேம்படுத்தி உற்பத்தியில் உயர்வு காண கூடுதலாக உணவிடுதல் அவசியம். கடலைப்புண்ணாக்கும், தவிடும் சரிசமமாக கலக்கப்பட்டு வளர்ப்பிலுள்ள மீன்களின் எடையில் 3 சதவீதம் அளவில் அன்றாடம் கூடுதல் உணவாக இட்டு வருவதன் மூலம் உற்பத்தியில் உயர்வு காணலாம். மாதத்திற்கு ஒரு முறை குளத்தில் வலையிட்டு மீன்களை பிடித்து பார்த்து வளர்ச்சி அறிந்து அதற்கேற்ப உணவுத்தேவையை நிர்ணயம் செய்து கொள்ளல் வேண்டும்.
மீன் உற்பத்தி
கிராமப்புறங்களில் உள்ள குளங்களில் கூட்டின மீன்வளர்ப்பில் மிகத்தீவிர மீன்வளர்ப்பு நடவடிக்கைகளை கையாண்டு எக்டரில் ஆண்டுக்கு சராசரியாக 2 டன் வரையிலும் மீன் உற்பத்தி செய்து 30 ஆயிரம் ரூபாய் வரையிலும் லாபம் காணலாம். நீர் பாசன கண்மாய்களில் எக்டரில் சராசரியாக 500 கிலோ வரையிலும் உற்பத்தி செய்து 5 ஆயிரம் வரையிலும் லாபம் காணலாம். சொந்தமாக குளம் அமைத்து கூட்டின மீன்வளர்ப்பில் எக்டரில் சராசரியாக 50 ஆயிரம் வரையிலும் லாபம் காணலாம்.

தகவல்: மாவட்ட ஆட்சித்தலைவர், மதுரை மாவட்டம்.
வி.இரவிச்சந்திரன்,
மீன்வளத்துறை உதவி இயக்குநர்,

பப்பாளி பழ பார் தயாரிக்க....................

0 கருத்துகள்பப்பாளி மரம் ஆண்டு முழுவதும் பலன் தரக்கூடியது. நல்ல வடிகால் வசதி கொண்ட எந்த மண்ணிலும் வளரும். எல்லா தட்பவெப்ப நிலையும் தாங்கி வளரும். தற்போது சந்தையில் பப்பாளி வரத்து சிறப்பாக உள்ளது. வாழைப்பழத்திற்கு அடுத்தபடி வருமானம் தரும் பப்பாளியில் சத்தும் ஏராளம். பப்பாளி பழம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். குறிப்பாக தற்போது பள்ளியில் படிக்கும் குழந்தைகளில் அதிகம் பேர் பார்வைக்கு குறைபாட்டால் பாதிப்புக்குள்ளாகின்றனர். கண்ணாடி அணிந்த மாணவ, மாணவிகள் ஏராளம்.

கண்களுக்கு அதிக சிரமம் கொடுப்பது, அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது உள்ளிட்ட காரணங்களால் தான் இது போல் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த குறைபாட்டுக்கு பப்பாளி ஒரு அருமருந்து. பப்பாளியில் வைட்டமின் ஏ 2020 மைக்ரோ கிராம் அளவு உள்ளது. வைட்டமின் பி 40 மில்லி கிராம், மற்றும் ரிபோபிளேவின் 250 மில்லி கிராம், இத்துடன் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஏராளமான தாதுஉப்புக்கள் உள்ளன.

பப்பாளி அஜீரணக்கோளாறு, குடற்புண், மூலம், மூச்சிறைப்பு, தோல் கொப்புளம் ஆகியவற்றை குணப்படுத்துகிறது. பப்பாளியில் இருந்து பெறப்படும் பெக்டின் என்ற வேதிப்பொருள் சிறுகுடலில் உருவாகும் ரத்தக்கசிவை சரிசெய்ய உதவுகிறது. வெயில் காலத்தில் அதிகம் கிடைக்கும் பப்பாளியை பதப்படுத்தி விடுவதன் மூலம் ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம். குறிப்பாக குழந்தைகள் விரும்பும் வகையில் பப்பாளி பழ பார் செய்து தரலாம். இதனை அவர்கள் விரும்பி உண்பார்கள். குறிப்பாக கிராம மகளிர் சுய உதவிக்குழுவினர் பப்பாளி பார் செய்து விற்பனை செய்யலாம்.
பப்பாளி பழ பார்
பப்பாளி பழக்கூழ்-1 குவளை, கான்பிளவர்-1 தேக்கரண்டி, சர்க்கரை-அரை தேக்கரண்டி, சிட்ரிக் அமிலம்-1 தேக்கரண்டி.
செய்முறை
பழுத்த பப்பாளியை தேர்வு செய்து இரண்டாக நறுக்கவும். விதை, நார்கள் மற்றும் தோலை நீக்கிவிடவும். பழக்கூழுடன் சர்க்கரை, சிட்ரிக் அமிலம், மற்றும் கான்பிளவர் ஆகியவற்றை கலந்து இளஞ்சூட்டில் நன்கு கிளறவும். அதிக கொதிப்பு ஏறி சுண்டிவிடாமல் எடுத்து எண்ணெய் தடவிய தட்டில் பழக்கூழை பரப்பவும். முதல் பழக்கூழ் உலர்ந்த பின் அடுத்த அடுக்கை பரப்பவும். சிறிது உலர வைத்து வில்லைகளாக்கி எடுத்து வைக்கவும்.
தகவல்: சித்தேஸ்வரன், வேளாண் அறிவியல் நிலையம், திரூர்.

கற்றாழைக்கு சிறந்த எதிர்காலம்

0 கருத்துகள்

உலகம் முழுவதும் ஏற்றுமதி வாய்ப்புள்ள கற்றாழை பல்வேறு மாவட்டங்களிலும் செழிப்பாக வளர்ந்து கிடைக்கிறது.கற்றாழை வறட்சியான பகுதிகளில் வளர்ப்பதற்கான ஒரு மருத்துவ பயிர். ஆப்ரிக்காவை தாயகமாக கொண்ட கற்றாழை லில்லியேசி குடும்பத்தை சேர்ந்த தாவரம். கற்றாழை இலைகளிலிருந்து எடுக்கப்படும் ஜெல் எனப்படும் கூழ் சருமத்தின் ஈரப்பதத்தை பாதுகாக்கிறது. சூரிய ஒளியிலிருந்து வரும் கடும் வெப்பத்தை தரும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர்வீச்சுக்களின் தீயவிளைவுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்கின்றது. மேலும் சருமத்தின் ஈரத்தன்மையை பாதுகாக்கின்றது. இதனால் வெயில் கொடுமை அதிகரிக்கும் நாடுகளில் கற்றாழைக்கு வளமான வாய்ப்பிருக்கிறது.

கற்றாழையில் காணப்படும் அலோயின் மற்றும் அலோசான் வேதிப்பொருள்கள் இருமல், சளி,குடல் புண், கடும்வயிற்று புண், தோலில் ஏற்படும் தீக்காயம், வெட்டுக்காயங்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. கற்றாழையில் பல ரகங்கள் உண்டு. கற்றாழையில் ஜான்சிபார் கற்றாழை, யுகான்டா கற்றாழை மற்றும் நேட்டல் கற்றாழை மற்றும் ஜபாராபாத் கற்றாழை ஆகியவை தரம் வாய்ந்தவையாக இருந்து வந்துள்ளன. இவற்றின் ஜெல் கண்ணாடி போல் தரமான தோற்றம் கொண்டது.

இந்தியாவில் அலோ பார்படன்சிஸ் நாடு முழுவதும் தானே வளர்ந்து பரவலாக காணப்படுகிறது. இதன் இலைகள் தடிமனாகவும், சிறிது சிவப்பு கலந்து பச்சை நிறத்திலும் காணப்படுகிறது. செடிகள் நட்ட இரண்டாவது ஆண்டில் தான் பூக்கும். செடிகளில் பூக்கள் தோன்றினாலும், மகரந்தங்கள் செயலிழந்து இருப்பதால் காய் மற்றும் விதைகள் பிடிப்பதில்லை. இதனால் பக்க கன்றுகள் மூலமாக தான் பயிர் பெருக்கம் செய்யப்படுகிறது.  

மண்வளம் தரிசுமண்,மணற்பாங்கான நிலம், பொறை மண் போன்றவை ஏற்றது. காரத்தன்மை 7 முதல் 8.5 வரை இருக்கலாம்.  

தட்ப வெப்ப நிலை வறட்சியான நிலையில், அதாவது 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உள்ள பகுதிகளில் நன்றாக வளர்கிறது. தமிழ்நாட்டில் இராமநாதபுரம், மதுரை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பயிர் செய்யலாம்.  

பயிர் பெருக்கம் தாய்ச்செடியிலிருந்து ஒன்று அல்லது இரண்டு மாத வயதுடைய பக்க கன்றுகளை பிரித்து நடவுக்கு பயன்படுத்தலாம். ஒரே அளவுள்ள பக்க கன்றுகளை தேர்வு செய்வது முக்கியம். பக்க கன்றுகளை பிரித்ததும் அவற்றின் வேரை கார்பன்டசிம் மருந்தினால் ஐந்து நிமிடத்திற்கு நனைத்த பிறகு நடலாம். இதனால் அழுகல் நோய் வராமல் தடுக்கலாம். எக்டருக்கு 10 ஆயிரம் பக்க கன்றுகள் தேவைப்படும்.

விதைக்கும் பருவம் ஜுன்,ஜுலை மற்றும் அக்டோபர், செப்டம்பர் மாதங்களில் நடவு செய்யலாம்.  

நிலம் தயாரிப்பு நிலத்தை இரண்டு முறை உழுது எக்டருக்கு 10டன் தொழு உரம் இட்டு, சமன் செய்து சிறிய பாத்திகளை அமைக்க வேண்டும். செடிகள் செழிப்பாக வளர்வதற்காக செடிக்கு செடி மூன்று அடி பாத்திகளை அமைக்க வேண்டும்.  
உரமிடுதல் கற்றாழை செடிகளுக்கு தொழு உரமிட்டால் சிறப்பாக வளரும். தரிசு மற்றும் சத்தற்ற மண்ணில் நட்ட 20 வது நாளில் எக்டருக்கு 30 கிலோ தழைச்சத்து மற்றும் 120 கிலோ ஜிப்சம் இடுவது நல்லது.  

நீர்ப்பாசனம் கற்றாழையை மானவாரிப்பயிராக பயிர் செய்வது நல்லது. ஆனாலும் பயிர் காலத்தில் நான்கு அல்லது ஐந்து முறை நீர்ப்பாசனம் அளிக்கலாம்.  

பயிர் பாதுகாப்பு கற்றாழையில் நோய் தாக்குதல் பெரும்பாலும் இல்லை. நீர் தேங்கும் நிலத்தில் அழுகல் நோய் ஏற்படலாம். வடிகால் வசதி உண்டாக்கினால் இதனை தடுக்கலாம்.  

அறுவடை வணிக ரீதியாக பயிர் செய்யும் போது செடிகளை நட்ட ஆறு முதல் ஏழு மாதங்களில் அறுவடைக்கு தயாராகி விடும். இந்த நேரத்தில் இலையில் அதிக அளவு அலேயின் என்ற வேதிப்பொருள் இருக்கும். செடிகளை வேரோடு பிடுங்கி எடுத்து இலைகளை ஆறு மணி நேரத்திற்குள் பக்குவப்படுத்தி விட வேண்டும்.  

மகசூல் எக்டருக்கு 15 டன் கற்றாழை இலை மகசூலாக கிடைக்கும். இலையில் 80 முதல் 90 விழுக்காடு வரை நீராக இருப்பதால் விரைவில் கெட்டு விடும். இதனால் அறுவடை செய்த உடனே இலைகளை பக்குவப்படுத்தி அவற்றிலிருந்து கூழ் படிமத்தை பிரித்தெடுத்து விட வேண்டும். தகவல்: முனைவர்.ராஜாமணி, அழகிய மணவாளன்.

விவசாயத்தில் ஆர்முள்ளவர்கள் பயன்பெறும் வகையில் விவசாய தகவல்கள்....

2 கருத்துகள்


சுற்றுச்சூழல் குறித்து இதுவரை எழுதி வந்தாலும் தற்போதைய நிலையில் விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்பதால் இது முதல் புதிய தலைப்பில் இங்கு பதிவிடுகிறேன். இந்த தகவல்கள் அனைத்தும் தமிழக விவசாய பல்கலைக்கழக பேராசிரியர்களிடமிருந்து பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு நன்றி!
விவசாயத்தில் பெரிய பிரச்சியை உண்டாக்கும் எலிகளை ஒழிப்பது பற்றிய பதிவுடன் இந்த பகுதியை தொடங்குகிறேன்.

வயல் வெளிகளில் எலிகள் பொதுவாக கடுமையான சேதத்தை உண்டு பண்ணுகின்றன. குறிப்பாக நெல் அறுவடைக்கு பின் கரும்பு தோட்டங்களில் எலிகள் அதன் இனப்பெருக்கத்தை அதிகரித்து பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றது. எலி சேதம் செய்வது ஒரு பங்கு என்றால், அது உண்ணும் தானியங்களை போல் 30 மடங்கு தானியங்களை அதன் கழிவு பொருட்கள் மற்றும் துர்நாற்றத்தால் பாழாக்குகின்றது. ஒரு எலிக்கு சுமார் 250 கிராம் உணவும், 40 மிலி நீரும் அன்றாடம் தேவைப்படுகின்றது.

எலிகள் உணவு இன்றி ஏழு நாட்களும், நீர் இல்லாமல் இரண்டு நாட்கள் நாட்கள் வரையும் உயிர் வாழக்கூடியது. எலிகளின் கூரிய வெட்டுப்பற்கள் மாதம் தோறும் ஒரு செ.மீட்டர் வரை வளருகிறது. ஒரு ஆண்டிற்கு 12.5 செ.மீட்டர் வரை வளர்கிறது. இப்பற்களின் வளர்ச்சியை குறைக்க எலிகள் கட்டாயமாக ஏதாவது ஒரு பொருளை கடித்து கொரித்துக் கொண்டே இருக்க வேண்டும். இதன் காரணமாக கரும்பு வயல்களில் எலிகளின் சேதம் அதிகமாக தென்படுகிறது. கரும்பு வயலில் உள்ள நிலத்தடி சொட்டு நீர் பாசன குழாய்களையும் கடித்து சேதப்படுத்துகின்றன. நம் நாட்டில் எலிகளால் ஆண்டிற்கு சுமார் 2 ஆயிரத்து 500 கோடி அளவிற்கு தானியங்கள் சேதப்படுத்தப்படுகின்றன.
கரும்பு வயல்களில் எலிகளை கட்டுப்படுத்த

1. பயிர் அறுவடைக்கு பின் கிராமத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் ஒருங்கிணைந்து பெரிய வரப்புகளை சிறியதாக்கியும், எலி வளைகளை வெட்டியும் சமப்படுத்தியும் புதர் மற்றும் பொந்துகள் உள்ள வயல்களை சுத்தம் செய்தும் எலிகளை கட்டுப்படுத்தலாம்.
2. தொடர்ந்து கரும்பு சாகுபடியை தவிர்த்து கரும்புக்கு பின் பயறு மற்றும் நெல் போன்ற பயிர்களை சுழற்சி முறையில் சாகுபடி செய்து எலிகளின் தாக்குதலை ஒரளவுக்கு குறைக்கலாம்.
3. வயலில் உள்ள காய்ந்த கரும்பு சருகுகளை வயலில் பரப்புவது எலிகளை அதிகம் ஈர்ப்பதுடன் அவை பொந்துகள் அமைத்து வாழ ஏதுவாக உள்ளதால் கரும்பு தோகைகளை சுத்தம் செய்தால் எலிகளின் நடமாட்டத்தினை மற்றும் இனப்பெருக்கத்தினை குறைக்கலாம்.
4. எலிகளின் இனப்பெருக்கம் அதிகமாக இருக்கும் காலங்களில் ஒரு எலி வளைக்கு மூன்று கிராம் எடையுள்ள அலுமினியம் பாஸ்பைடு மாத்திரையை எலி வளைக்குள் போட்டு வெளித்துவாரத்தை அடைத்தால் புகை மூட்டம் ஏற்பட்டு வளையினுள் உள்ள எலிகள் கொல்லப்படுகின்றன.
5. இரத்தம் உறைவதை தடுக்கும் திறன் வாய்ந்த புரோமோடையலோன் 0.0015 சத வீரியமுள்ள வில்லைகளை ஒரு வளைக்கு ஒரு வில்லை வீதம் எலி நடமாட்டம் உள்ள வளைகளின் முகப்பில் வைப்பதால் எலிகள் சுலபமாக கவரப்பட்டு அவற்றை தின்றவுடன் எலிகள் கொல்லப்படுகின்றன.
6. கரும்பு தோட்டத்தின் வரப்புகளில் தஞ்சாவூர் வில் பொறி வைப்பதன் எலிகளை பிடித்துக் கட்டுப்படுத்தலாம்.
7. இயற்கையிலேயே எலிகளை பிடித்து உண்ணும் இரை விழுங்கிகளை பூனை மற்றும் வேட்டை நாய்களை பயன்படுத்தியும் கரும்பு தோட்டத்தில் எலிகளின் எண்ணிக்கையை குறைக்கலாம்.
8. எலி தாக்குதல் அதிகமுள்ள இடங்களில் நிலத்தடி நீர் சொட்டுநீர் பாசனத்தை தவிர்த்து தரை வழி நீர் பாசனத்தை கடைப்பிடிக்கலாம்.
9. ரேட்டால் எனப்படும் எலி மருந்து பேஸ்ட்டை தக்காளி அல்லது தேங்காயில் தடவி வயலில் ஆங்காங்கே வைத்து எலிகளை கட்டுப்படுத்தலாம்.
10. அவித்த நெல் அல்லது அரிசி பொரி, முளைகட்டிய தானியங்கள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றுடன் 100 கி. குருணை மருந்தை கலந்து காய வைத்து வயலில் ஆங்காங்கே வைத்து எலிகளை கட்டுப்படுத்தலாம்.
11. சொட்டு நீர் பாசனம் செய்யும் இடங்களில் இருக்கும் குழாய்களை எலிகள் கடிப்பதை தவிர்க்க, வயல்களில் ஆங்காங்கே தரையோடு மண்கலயங்களை பதித்து தண்ணீர் நிரப்பி எலிகள் இந்த மண்கலய தண்ணீரை குடிக்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். பிறகு இந்த தண்ணீரில் வாரத்திற்கு ஒரு முறை சிறிய தேக்கரண்டி அளவு பூச்சிக் கொல்லி மருந்தை கலந்து விடவும்.

Thanks:முனைவர்.இந்திராணி, வேளாண்பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சிநிலையம், மதுரை

வீட்டிலேயே மூலிகை குடிநீர் தயாரித்து அசத்துங்கள்

8 கருத்துகள்
பெட்பாட்டில் குடிநீர் கூட உடலுக்கு பாதுகாப்பற்றது என்று தற்போது விஞ்ஞானிகள் அறிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. எது தான் நல்ல குடிநீர் என்று குழப்பமாகவே இருக்கிறது. டிஸ்கவரி சேனலில் மேன் வெர்சஸ் வைல்ட் தொடர் கதாநாயகன் தேங்கி கிடக்கும் குளம், குட்டை, ஏரிகளில் இருக்கும் தண்ணீரை கூட சட்டையில் வடிகட்டி குடிப்பதை பார்க்க முடிகிறது. அதே இடத்தில் இருக்கும் தவளை, தேரை, பாம்பு, பல்லிகளை கூட அவர் சாப்பிடுகிறார். நாம் அந்த அளவுக்கு போகவேண்டியதில்லை. வீட்டிலேயே சுவைமிகுந்த மூலிகை குடிநீரை தயாரித்து அருந்த முடியும். இதற்கு பெரிதாக செலவும் இல்லை. இந்த மூலிகை குடிநீரை தயாரிக்க நீங்கள் உருவாக்கும் அமைப்பை பார்த்து உங்களை தேடி வரும் விருந்தினர்கள், அக்கம்பக்கத்தினர் எல்லாம் அதிசயித்து போவது உறுதி.

தயாரிக்கலாம் வாங்க....
மூலிகை குடிநீரை தயாரிக்க உங்களுக்கு தேவைப்படுவது எல்லாம், சாதாரண அழகு செடிவளர்க்கும் மண் தொட்டிகள் அல்லது தண்ணீர் நிரப்ப பயன்படும் மண்பானைகள் தான். உங்களுக்கு நாளன்றுக்கு எவ்வளவு மூலிகை குடிநீர் தேவைப்படும் என்பதை பொறுத்து, அதற்கேற்ப தொட்டிகளை வாங்கிக் கொள்ளுங்கள். இந்த தொட்டியை வாங்கி வந்த பிறகு இந்த தொட்டிகளின் கீழ்பகுதி முழுக்க கூழாங்கற்களை போடுங்கள். இதற்கடுத்து இந்த கூழாங்கற்களின் மேல் பெருமணலை நிரப்புங்கள். இந்த இரண்டு அடுக்குகளை அடுத்து இதன் மீது மிகச்சிறிய கண்ணுள்ள நைலான் வலையை ( டீ வடிகட்டியில் இருக்கும் வலை) விரித்து விடுங்கள். இப்படி நைலான் வலையை விரிக்கும் போது இந்த அடுக்குக்கு மேல் நாம் நிரப்ப போகும் பொருட்களில் இருந்து வெளியேறும் தூசு, தும்புகள் வடிகட்டப்பட்டு விடும்.

இதற்கடுத்து இந்த நைலான் வலைக்கு மேல் மண், மணல், மக்கிய எரு ஆகியவை கொண்ட எருவை போட்டு மூலிகை செடிகளை நடவு செய்யுங்கள். அதாவது வீட்டில் இஞ்சியை பயன்படுத்துவோம். அளவுக்கு அதிகமாக இஞ்சியை வாங்கி வந்து வீட்டில் வைத்திருக்கும் போது, மீதமுள்ள இஞ்சியை சில அம்மணிகள் மணலில் போட்டு ஈரமாக இருக்கும் படி வைத்திருப்பார்கள். சில நேரங்களில் இந்த இஞ்சி தளிர் விட தொடங்கி விடும். இது தான் மூலிகை செடி தொட்டி எனலாம். இதே போல் மஞ்சள், வசம்பு, தூதுவளை, செம்பருத்தி போன்ற செடிகளை நடவு செய்யலாம். இந்த செடிகளை நட்டவுடன், நடவு செய்யப்பட்ட தொட்டிகள் ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்கும் படி செய்ய வேண்டும். அதற்கு இந்த தொட்டிகளில் உள்ள செடிகளுக்கு ஊற்றப்படும் தண்ணீர் எஞ்சி வெளியேறும் போது அது ஒரே இடத்தில் சேகரமாகும் படி ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதாவது, இந்த தொட்டிகள் அனைத்தும் சிமெண்ட்டால் ஆன ஒரு பாத்தியில் வரிசையாக இருக்கும்படி அமைத்துக் கொண்டால் இந்த தொட்டியிலிருந்து வெளியேறும் தண்ணீர் ஒரு இடத்தில் சேகரமாகும் படி வழிந்தோடும்.

இந்த அமைப்பை உருவாக்கிக் கொண்டபின் முதல் மூன்று நாட்களுக்கு இந்த தொட்டிகளில் இருந்த வெளியேறும் தண்ணீரை பயன்படுத்த வேண்டாம். காரணம், இதில் ஏராளமான மாசுக்கள் கலந்திருக்கும். பிறகு இதிலிருந்து கிடைக்கும் தண்ணீரை பிடித்து குடிநீராக பயன்படுத்தலாம். இந்த மூலிகை தொட்டியிலிருந்து கிடைக்கும் தண்ணீரை குளிக்கும் தண்ணீருடன் கலந்து குளிநீராக பயன்படுத்தலாம். இதில் ஒரு விசேடம் என்னவென்றால், உங்களுக்கு எந்த மூலிகை பிடிக்கிறதோ, அந்த மூலிகை செடியை வாங்கி வந்து ஒரு தொட்டியில் நட்டு இந்த அமைப்பில் இணைத்து விடலாம்.

உதாரணமாக கால் மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். முடக்கத்தான் என்று சொல்லப்படும் மூலிகை தாரளமாக ரோடுகளின் ஓரத்தில் கூட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வளர்ந்து கிடக்கிறது. இந்த மூலிகை செடியை வேருடன் எடுத்து வந்து தொட்டியில் நட்டு அந்த தொட்டி வழியாக வெளியேறும் மூலிகை தண்ணீரை நன்றாக கால் முட்டுகளில் படும்படி குளிக்கலாம். இதனால் மூட்டுவலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

இது போல் பிரண்டை, இஞ்சி போன்ற செடிகளை பயன்படுத்தினால் பித்தம் நீங்கும். குழந்தைகளை நல்ல மூலிகை தண்ணீரில் குளிப்பாட்ட விரும்புபவர்கள் துளசி போன்ற செடிகளை தொட்டிகளில் வளர்த்து அதன் வழியாக வெளியேறும் நீரை குழந்தைகளை குளிப்பாட்ட பயன்படுத்தலாம். தும்பை, நொச்சி செடிகளை சளியால் அவதிப்படுபவர்கள் மூலிகை குடிநீராக, குளியல் நீராக பயன்படுத்தினால் வெகுவிரைவில் சுகமான நிவாரணம் கிடைக்க காணலாம். வீட்டை சுற்றி தோட்டம் போட அதிக அளவு இடம் இருப்பவர்கள் அதிக அளவு மூலிகை செடிகளை வளர்த்து பயன்படுத்தலாம்.

நல்ல கிரியேடிவிடி உள்ள நண்பர்கள் இந்த தொட்டிகளில் இருந்து வெளியேறும் நீரை குளுக்கோஸ் டியூப் போன்ற குழாய் மூலம் அனைத்து தொட்டிகளையும் இணைத்து இதன் வழியாக நீரை பிடித்து பயன்படுத்தலாம். இந்த நீரிலும் நுண்கிருமிகள் இருக்கலாம் என்று சந்தேகிப்பவர்கள் நிலக்கரி துண்டு ஒன்றை நீர் சேகரமாகும் கடைசி பாத்திரத்தில் போட்டு வையுங்கள். இந்த நிலக்கரி நீரிலுள்ள நுண்கிருமிகளை எல்லாம் கொன்று விடும்.
பிறகென்ன...காடுமலைகளில் கிடைக்கும் அதே மூலிகை தண்ணீர் உங்கள் வீட்டிலும் அன்றாடம் கிடைக்கும்.

சத்துள்ள விளை நிலம் ஒரு பொன் விளையும் பூமி

4 கருத்துகள்நிலத்தில் எதைப் போட்டாலும் விளைச்சல் இல்லை; லாபம் இல்லை என்று சலித்துக் கொள்ளும் விவசாயிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். மண் எப்போதும் மனிதர்களை ஏமாற்றுவது இல்லை. இந்த சலிப்பு தான், சோறு போடும் நிலங்களை ரியல்எஸ்டேட்காரர்களிடம் விற்றுவிட்டு விவசாயிகள் ஓட்டாண்டிகளாக ஆக வழி செய்கிறது. ஊக்கமும், முடியும் என்ற எண்ணமும் இருந்தால் நிலத்தை பொன் விளையும் பூமியாக மாற்றலாம். விவசாயமே படிக்காத, விவசாயத்தில் பழக்கமே இல்லாத பாரதி " காணி நிலம் வேண்டும்" என்று பாடியதில் இருந்த ஊக்கம் விவசாயிகளுக்கு இல்லையே என்பது தான் வேதனை. மழை ஏமாற்றினால் கூட எளிதாக பாசனம் செய்யலாம்; அந்த விவசாயி தனது நிலத்தில் பண்ணைக்குட்டை என்ற நீர் சேமிப்பு அமைப்பை உருவாக்கியிருந்தால்!

அதாவது மழை பெய்யும் போது அதை தேக்கி வைக்க செயற்கையான குட்டை போன்ற அமைப்பில் நீரை தேக்கி வைத்திருக்க வேண்டும். அந்த குட்டையில் உள்ள நீர் ஆவியாகி விடாதபடி குட்டையின் கரையை சுற்றிலும் மரங்களை நட்டு வைத்திருக்க வேண்டும். பிறகு ஏன் நீர் பற்றாக்குறை வரப்போகிறது? எனவே, விவசாயிகளே நிலத்தை யாருக்கும் விற்பனை செய்யாதீர்கள். ஊக்கத்துடன் பயிரிடுங்கள். அதற்கு முன் உங்கள் மண்ணின் வளத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

ஒவ்வொரு வகை மண்ணிலும் ஒவ்வொரு வகையான பயிர்கள் விளைகின்றன. மண் எத்தகைய வளம் மிக்கது, அந்த மண்ணில் எதை பயிரிடலாம் என்பதை தெரிந்து கொண்டால் தான் அதிக அளவில் மகசூலை பெற முடியும். இது நிலத்திற்கு மட்டும் அல்ல. வீட்டில் தொட்டிகளில் செடிகள் வைக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த தொட்டியில் இடப்படும் மண்ணில் உள்ள சத்துக்களின் அளவை அறிந்து கொள்வது நல்லது.

மண்ணின் அடங்கியுள்ள சத்துப் பொருட்களை பொறுத்து தான் பயிர்களின் வளர்ச்சி அமைகிறது. பார்வைக்கு செழிப்பாக தோன்றும் மண்ணில் சில சத்துக்குறைபாடு இருக்கலாம். எந்த சத்து குறைவாக இருக்கிறது என்பதை மண் பரிசோதனை மூலம் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்.

மண் பரிசோதனை முடிவுகளை வைத்து அந்த நிலத்தில் என்ன வகையான பயிர்களை விளைவிக்கலாம், எந்த வகை பழமரங்களை நடலாம் என்று முடிவு செய்யலாம். இந்த முடிவுகளை கொண்டு குறிப்பிட்ட அந்த மண்ணில் உள்ள எந்த சத்துக்கள் குறைவாக இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ள முடியும். இதை தெரிந்து கொள்வதால், அந்த மண்ணில் குறைந்து காணப்படும் சத்துக்களை ஈடுகட்ட தேவையான உரங்களையும், மற்ற தாது உப்புக்களையும் இட்டு முழுமையான சத்துக்கள் நிரம்பிய மண்ணாக மாற்ற முடியும்.

மண்ணில் பொதுவான குறைபாடுகளாக சில பிரச்சினைகள் காணப்படுவதுண்டு. மேல் மண் இறுக்கம், ஆழமற்ற மண், உவர் மண் மற்றும் களிமண் ஆகிய பிரச்சனைகள் தான் அவை. இந்த குறைகளையும் நிவர்த்தி செய்து வளமான மண்ணாக மாற்றினால் எந்த நிலத்திலும் சிறப்பான முறையில் பயிர் செய்து அதிக மகசூல் பெறலாம்.

கீழ்க்காணும் உத்திகளால் மண்ணின் வளத்தை மேம்படுத்த முடியும்.

மேல் மண் இறுக்கம்
மழைத்துளிகளால் நிலத்தில் வந்து  மோதும்போதும், டிராக்டர் போன்ற பெரிய கனஇயந்திரங்களை பயன்படுத்தும் போதும் மற்றும் இரும்பு ஆக்சைடு போன்ற ரசாயன மாற்றங்கள் ஏற்படுவதாலும் மண்ணில் இறுக்கம் ஏற்படுகிறது. இந்த வகை மண்ணில் நீரை பாய்ச்சினால், அந்த மண்ணின் மேல் உள்ள  மண்கட்டிகள் உடைந்து சிறு துகள்களாக பிரியும். அப்போது அதில் கலந்திருக்கும் களிமண், இரும்பு ஆக்சைடுடன் சேர்ந்து கொலகொலப்பான ஒரு கட்டி போல் மாறிவிடுகிறது. இதனை தடுத்து மண்ணின் பொலபொலப்பை அதிகரிக்க தொழுஉரம், நார்கழிவு, ஜிப்சம் இட்டு சரி செய்யலாம். இதனால் மண்ணின் நீரோட்டம் காற்றோட்டம் மற்றும் பௌதீகத் தன்மை மேம்பட்டு மண் வளமாகிறது.

ஆழமற்ற மண்
இந்த குறைபாடு இயற்கையிலேயே அமைந்தது. இதை மாற்றுவது கடினம். எனவே, இத்தகைய மண்ணில் மேல்வாரியாக வேர் பரவும் பயிர்களே நன்கு வளர வாய்ப்புள்ளது. ஒரளவிற்கு நெல் சாகுபடிக்கு ஏற்றது. மேலும் இந்த நிலங்களில் சரிவு ஏற்படாதவண்ணம் வரப்புகள் அமைத்தல் அவசியம்.

உவர் நிலம்
மண்ணில் குளோரைடு மற்றும் சல்பேட் உப்புகள் அதிகமாக இருப்பதால் உவர் நிலம் ஏற்படுகிறது. இந்நிலங்களில் பயிர் விதைகள் முளைக்க முடியாமல் போய்விடுகிறது. இந்த இடத்தில் பூமியில் காணப்படும் நீரில் கரைந்துள்ள உப்புக்கள் அதிக அடர்த்தியாக இருப்பதால் பயிரிகளின் வேர்களால் நீரை ஈர்க்க வலுவில்லாமல் இறுதியில் பயிர் வாடி விடுகிறது. இவை மண்ணிலுள்ள மற்றும் பாசன நீரில் உள்ள உப்புக்களால் ஏற்படுகிறது. முதலில் வயலை சமன் செய்து பின்பு நல்ல வரப்புகள் அமைத்து நீரை பாய்ச்சி தேக்கி பின்பு தொழி உழவு செய்வதால் நீரில் உப்புகள் கரைந்து விடும். இந்த நீரை வடிகால் மூலம் வெளியேற்ற வேண்டும். இது போல பல முறை செய்வதால் உவர் நிலம் நல்ல நிலமாக மாறும்.

களர் நிலம்
மண்ணிலுள்ள சோடியம் உப்புக்களின் அளவு அதிகமாகும் போது களர்நிலம் உருவாகிறது. இந்த வகை மண்ணில் காரத்தன்மை அதிகமாக காணப்படும். இத்தகைய மண்ணில் கால்சியம் சல்பேட் என்கிற ஜிப்சம் இடும் போது சோடியம் உப்புக்கள் சல்பேட் உப்புக்களுடன் சேர்ந்து சோடியம் சல்பேட்டாக நீரில் கரையும் உப்பாக மாறி வெளியேற்றப்படுகின்றது. இது போல் பல முறை நீர் விட்டு கலக்கி பின் இருத்து வடிப்பதால் இந்த குறைபாட்டிலிருந்து மண்ணிற்கு நிவர்த்தி கிடைக்கிறது.

த்துடன் மண்ணின் வளத்தை மேம்படுத்த ஒரு முக்கிய உத்தி உண்டு. பசுந்தாள் பயிர்கள் எனப்படும் சில சிறிய வகை பயிர்களை நிலத்தில் மக்க வைத்து அவற்றை நிலத்திற்கே உரமாக மாற்றி விடலாம். இந்த பயிர்களில் காணப்படும் சத்துக்கள் சத்தில்லாத நிலத்தை கூட சத்து மிகுந்த வலுவான நிலமாக மாற்றிவிடுகின்றன. அதையும் இங்கு பார்க்கலாம்.
பசுந்தாள் உர பயிர்கள்

மண்ணின் வளத்தை மேம்படுத்தவும் தேவையான தழைச்சத்தை பெற பசுந்தாள் உரங்கள் உதவுகின்றன. பசுந்தாள் உரப் பயிர்கள் இரண்டு வகைப்படும். பயறு வகை செடிகளான செஸ்பேரியா எனப்படும் சீமை அகத்தி, சணப்பு, தக்கைப்பூண்டு, நரிப்பயறு, தட்டைப்பயறு போன்றவை ஒரு வகை. மரப்பயிர்களான அகத்தி, கிளசிரிடியா, சுபாபுல் போன்றவை மற்றொரு வகை. இவை தவிர தானாக வளரும் கொளுஞ்சி, ஆவாரை,எருக்கு, ஆதாளை ஆகிய செடிகளும் பசுந்தழை உரமாக பயன்படுத்தப்படுகின்றன.

பசுந்தாளுரங்களை மண்ணில் இடும் போது கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் அவற்றை மக்க செய்கின்றன. அப்படி மக்கி சிதைக்கப்படும் போது இந்த செடிகளில் இருக்கும் பேரூட்டம் மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் வெளியாகின்றன. இவை பயிர்கள் செழித்து வளர உதவுகின்றன. நுண்ணுயிர்களின் பெருக்கம் அதிகரிக்கும் போது அவற்றிலிருந்து பல அங்கக அமிலங்களும், பயிர் வளர்ச்சி ஊக்கிகளும் நொதிகளும் மற்றும் சர்க்கரை பொருட்களும் வெளிப்பட்டு மண்ணில் கரையாத நிலையிலுள்ள ரசாயன உரங்களை கரைத்து பயிர்கள் எடுத்துக் கொள்ளும் படி எளிய படிவங்களாக மாற்றும். இது பயிர் வளர்ச்சியை ஊக்குவிப்பதாக அமையும்.

பசுந்தாள் உரப்பயிர்கள் நீண்ட ஆணிவேர்கள் கொண்டவை. அதனால் மண்ணில் ஆழமான பகுதிகளுக்குள் ஊடுருவிச் சென்று ஊட்டச்சத்துக்களை கிரகிப்பதுடன் மண்ணிற்கு காற்றோட்டம், நீர் ஊடுருவும் தன்மை அதிகரிக்க செய்கிறது. கோடையில் இந்த உரப்பயிர்களை பயிர் செய்வதால் மண் போர்வை போல் செயல்பட்டு மண் நீர் ஆவியாவது தடுக்கப்பட்டு மண் ஈரத்தால் வேண்டப்படாத உப்புக்கள் கரைந்து பயிர்களின் வேர்களை தாக்காத வண்ணம் வெளியேற்றப்படுகின்றன.

எனவே பயிர் செய்யாத கோடை காலங்களிலோ, பயிர் செய்வதற்கு முன் உரிய பருவ காலங்களில் மழை நீரைக் கொண்டு பசுந்தாளுரப் பயிரினை தனிப்பயிராக விதைத்து பூக்கும் தருணத்தில் அப்படியே மடக்கி உழவு செய்வதால் மண்ணிற்கு அதிக அளவில் அங்ககச் சத்து கிடைத்து மண்வளத்தை பெருக்கலாம். இவ்வாறு பயிர்களுக்கு பசுந்தாள் உரங்கள் இடுவதால் உரச்செலவையும் குறைக்கலாம். இந்த முறைகளை கையாண்டு மண்ணின் குறைகளை போக்கி விவசாயிகள் மண்ணில் பொன்னை காணலாம்.

காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today