தமிழக முதல்வருக்கு ஒரு பழைய சோறுக்கு வெங்காயம் வைத்து சாப்பிடும் தமிழனின் கடிதம்


வெங்காயம் சாமானிய மக்களின் கைக்கும் வாய்க்கும் எட்டாத நிலையில் பறந்து கொண்டிருகிறது.  காலையில் எழுந்து தூக்கு சொம்பில் பழைய சோற்றையும் கடிக்க வெங்காயமும சுமந்து கொண்டு கட்டிட வேலைக்கு சென்றாவது தனது குழந்தைகளை படித்து பெரிய நிலைக்கு வரவைக்க வேண்டும் என்று கனவையும் சேர்ந்து சுமக்கிற குப்பாயிக்கும், சுப்பாயிக்கும் தான் இந்த விலை உயர்வு கவலை. காரணம், அவர்கள் தூக்கி போகும் அந்த சோத்து சட்டியில் ஊறிக்கிடக்கும் பழைய சோற்றுக்கு தொட்டுக்கடிக்க சரியான சைடு டிஸ் 'வெங்காயம்' மட்டுமே!

தமிழக முதல்வர் அவர்களே! பழைய சோத்தை தூக்குசட்டியில் போட்டு உதிரி வேலைக்கு போய் வயிற்றை நிரப்பும் சாமானியன் எழுதும் கடிதம்...வறட்சி தான் வெங்காய விலை உயர்வுக்கு காரணம் என்கிறார்கள். முன்பெல்லாம் நாட்டை ஆண்ட மன்னர்கள் அமைச்சர்களிடம் 'மாதம் மும்மாரி மழை பொழிந்ததா'? என்று கேட்க தவற மாட்டார்கள். காரணம், மழை பொழிந்து விட்டால் நாட்டில் வறட்சி இருக்காது. மக்களுக்கு போதிய உணவு கிடைத்து விடும். நாட்டில் பசி,பட்டினி இருக்காது.அதனால் கொலை,கொள்ளை, திருட்டு போன்ற சமாச்சாரங்கள் இருக்காது. இது தான் மன்னர்கள் அமைச்சர்களிடம் மும்மாரி பொழிந்ததா என்று விசாரிக்க காரணம்.

அந்தக்காலத்திலும் வறட்சி இல்லாமல் இல்லை. அவ்வப்போது மழை பொய்த்து போனது. யோசித்து பார்த்த கரிகாலன் போன்ற மன்னர்கள் கல்லனை போல் அணைகளை கட்டி தண்ணீரை தேக்கினார்கள். மக்கள் மழை இல்லாத காலத்தில் அணையிலிருந்து தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்தார்கள். ஆக, மக்கள் சுபிட்சமுடன் வாழ திட்டமிட்டு ஆட்சி செய்தார்கள்.


மழை வருவதற்கு முன் கர்நாடக அரசிடம் தண்ணீர் தாருங்கள் என்று கையேந்தினோம். ஆனால் அந்த பேச்சுக்கே இடமில்லை என்றார்கள். மத்திய காங்கிரஸ் அரசிடம் முறையிட்டோம். அவர்கள் தண்ணீரை தர உத்தரவிட்டார்கள். ஆனால் காவிரியிலே தண்ணீர் வரவில்லை. ஆக எதுவும் நடக்கவில்லை. அக்டோபர் மாதம் தொடங்கும் முன்வரை இது தான் தமிழகத்தின் நிலை. அதற்கு பிறகு மழை மட்டும் வந்திருக்காவிட்டால், தமிழகத்தில் விவசாய பயிர் விளைந்திருக்க வாய்ப்பில்லை என்பது உங்களுக்கு தெரியும்.

கடந்த இரண்டு மாதங்களாக மழை கொட்டி தீர்த்தது. எங்கு பார்த்தாலும் சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது. ஆற்றிலே வந்த வெள்ளம் ஆற்றோடு ஓடி கடலிலே கலந்து விட்டது. இப்போது மழை முடிந்த முடியாது இருக்கும் தமிழகத்தில் என்ன நிலைமை இருக்கிறது?

வைகைப் பாசனப் பகுதியிலே பாசனத்திற்கு தண்ணீர் இல்லை என்று தமிழக பொதுப்பணித்துறை அறிவித்திருக்கிறது. அணையில் இருக்கும் தண்ணீரை விவசாயத்திற்கு முறை வைத்து திறந்து விடப் போகிறார்களாம்  அதிகாரிகள். விதைத்திருக்கும் பயிரை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கும் விவசாயி தனது முறை வரும் வரை வாய்க்கால் மேல் விழி வைத்து காத்திருக்க வேண்டுமாம். இது தான் இன்றைய நிலைமை.

வைகை அணையின் நீர்மட்டம் 72 அடி. இந்த அணையில் தேக்கப்படும் தண்ணீரை வைத்து தான் மதுரை, சிவகங்கை,மானாமதுரை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கும் விவசாய நிலங்கள் பாசனத்திற்கு தண்ணீரை பெறுகின்றன. தற்போது பெய்த மழையை கடலிலில் கலக்கவிடாமல் அணையிலோ, குளத்திலோ, கண்மாய்களிலோ, ஏரிகளிலோ முழுமையாக தேக்கியிருந்தால் தமிழ்நாட்டில் ஒரு ஆண்டுமட்டுமல்லாது பல போக விவசாயத்திற்கும், குடிநீருக்கும், மின்உற்பத்திக்கும் அதை பயன்படுத்தியிருக்கலாம் என்பதே எதார்த்தமும், நிச்சயமான உண்மையும் கூட.

வைகை அணை காமராஜர் ஆட்சி செய்த காலத்தில் கட்டப்பட்டது. இந்த அணையில் ஒரளவு தான் தண்ணீரை தேக்க முடியும். சில நேரங்களில் கடுமையான மழை பெய்யும் போது வைகை அணையில் தண்ணீர் வேகமாக நிரம்பி விடுகிறது. அப்படி நிரம்பும் தண்ணீரானது திறந்து விடப்படும் போது, அந்த உபரி தண்ணீர் வைகை ஆற்றின் வழியே ஒடி முடிவாக இராமநாதபுரத்தில் இருக்கும் பெரிய கண்மாயை சென்று அடைகிறது. இந்த வைகையானது பொதுவாக கடலில் சென்று கலப்பதில்லை. கடலில் சென்று கலக்காத ஒரே ஆறு என்பது தான் இதன் தனித்தன்மை.

ஆனால் சமீபத்தில் பெய்த மழையில் வைகை அணையும் நிரம்பி அங்கிருந்து திறந்து விடப்பட்ட உபரி நீரானது இராமநாதபுரம் பெரிய கண்மாயையும் அடைந்து அந்த கண்மாயும் நிரம்பி கடைசியில் கடலில் சென்று கலந்தது. இது எப்போதோ நடக்கும் அபூர்வமான விடயம். ஆனால் வைகை அணை பாசனத்தை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான விவசாயிகள் இப்படி தண்ணீர் வீணாக வெளியேறாமல் இருக்க தற்போது இருக்கும் வைகை அணைக்கு மேல் தலை வைகை அணை என்ற ஒரு அணையை புதிதாக கட்ட வேண்டும் என்று பல ஆண்டுகளால் கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆனால் இதை கேட்பார் தான் இல்லை. சமீபத்தில் பெய்த மழையால் காவரியிலும், வைகையிலும் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரை சேமித்திருந்தால் அந்த நீரைக் கொண்டு பல முறை வைகை அணையை நிரப்பியிருக்கிறார்களாம் என்கிறார்கள். இதற்கு உங்கள் பதில் என்ன?

தமிழக மற்றும் தென்மாநில மக்களின் முக்கிய உணவான அரிசிக்கும், வெங்காயம்  போல் தட்டுபாடு நேர்ந்ததால் எப்படி இருக்கும்? தஞ்சை மாவட்டத்தை தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்கிறோம். அங்கேயும் அக்டோபர் மாதம் வரை மழை பெய்வதற்கான அறிகுறியே இல்லாமல் இருந்தது. திருச்சியிலும், தஞ்சையிலும் பாயும் காவிரி அதீத சூட்டுடன் தண்ணீரை எதிர்பார்த்து ஏங்கிவறண்டு கிடந்தது. விவசாயிகள் எல்லாம் கவலையுடன் காவிரியில் தண்ணீர் வரும் என்று காத்திருந்தார்கள். ஆனால் கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதாக தெரியவில்லை.

ஆனால் யார் செய்த புண்ணியமோ, அக்டோபர் மாதத்தின் இரண்டாம் வாரத்திலிருந்து தஞ்சையில் மழை கொட்டி தீர்த்தது. காவிரியில் தன்னிச்சையாக தண்ணீர் வெள்ளமாக பாய்ந்தது. இதனால் மேட்டூர் நீர் தேக்கம் நிரம்பியது. இந்த நிலையில் ஒரளவுக்கு மேல் மேட்டூர் அணையில் நீரை தேக்க முடியாததன் காரணமாக, அணையிலிருந்து நீரை திறந்து விட்டார்கள். இதனால் ஏற்கனவே மழையால் வெள்ளக்காடாக காட்சியளித்த தஞ்சை டெல்டா பகுதி விவசாய நிலங்கள் எல்லாம் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரில் மூழ்கி உயிரை விட்டன. ஒன்று வறட்சி இல்லாவிட்டால் அதிக மழை. இது தான் தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சையின் நிலைமை.

தமிழகத்தின் மக்களுக்கு நெல்லை தரும் தஞ்சாவூர் மட்டும் இல்லையென்றால், வெங்காயம் போல் அரிசிக்கும் தாளம் போட வேண்டியதிருக்கும். இப்படிப்பட்ட தஞ்சை மாவட்டத்தில் பெய்யும் மழையையும், தஞ்சையிலிருந்து வீராணம் மற்றும் அதைச்சுற்றியுள்ள ஏரிகளிலிருந்தும் பல வாரங்களாக கோடிக்கணக்கான கனஅடி தண்ணீர் வீணாக வழிந்து கடலிலே சென்று கலந்து கொண்டு தான் இருக்கிறது.

தஞ்சை மாவட்டத்தில் மழை பொழியாத போது கர்நாடக அரசிடம் காவிரியில் தண்ணீர் திறந்து விடச் சொல்லி கையேந்துவதும், அவர்கள் தண்ணீர் தரமறுத்தால் மத்திய அரசிடம் முறையிட்டு கதறுவதும், பிறகு கர்நாடக அரசு போனால் போகிறதென்று திருவோட்டில் சில்லறைக்காசு போடுவது போல் சில கனஅடிகள் தண்ணீரை திறந்து விடுகிறார்கள் என்பதும் நமக்கு தெரிந்து தான் இருக்கிறது. இப்படி கர்நாடகவிடம் கெஞ்சுவதை தவிர்க்க, கண் முன்னே பெய்யும் மழையை தேக்கி ஒரு சொட்டு மழை நீரை கூட கடலில் சென்று கலந்து வீணாகாமல் செய்தால் நம்மிடமே உபரி நீர் இருக்கும்.

இன்றைக்கு உலகின் சுத்தமான நகரமாக இருக்கும் சிங்கப்பூர் ஒரு காலத்தில் அசிங்கமான நகரம். இன்றைய அதன் வளர்ச்சி எப்படி சாத்தியமானது? எல்லாம் அறிவுப்பூர்வமான திட்டமிடல். அணுகுண்டால் பாழாய்போன ஜப்பான் நாட்டில் கப்பலின் மேல்தளத்தில் விவசாயம் செய்கிறார்கள். இஸ்ரேல் நாட்டில் அடுக்கு முறை விவசாயம். அதாவது, நமது வீட்டு புத்தக ஷெல்ப் போன்று அமைத்து விவசாயம் செய்கிறார்கள். இப்படி தங்களை தரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நாம் உழைத்தால் நமக்கு கஞ்சி என்பது தான் எதார்த்தமான சாமானியனின் உள்ளத்தின் உள் பொதிந்திருக்கும் நம்பிக்கை. அந்த நம்பிக்கையை காப்பாற்ற தமிழ்நாட்டில் பாலைவனங்களாக மாறிக்கொண்டிருக்கும் நதிகளின் மீது உங்கள் பார்வையை திருப்புங்கள்.

என்னை போன்ற பழைய சோறும் வெங்காயமும் சாப்பிடும் சராசரி மனிதர்களுக்கு சோறு போடும் விவசாயி, அவன் நெற்றி வேர்வை சிந்தி நிலத்தில் உழைத்து தனது உணவை பெற்றுக் கொள்ள நதிகளை இணைக்க முயலுங்கள். இது தான் இப்போது முக்கியமானது. அவசியமானது. அவசரமானதும் கூட.

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்.....
  • 1. விவசாய நிலங்களை எவரும கட்டிடங்களாக, வீட்டடி மனைகளாக மாற்ற விற்பனை செய்யக்கூடாது. அப்படி செய்தால் சிறைதண்டனை என்று கேரள பாணியில் சட்டம் கொண்டு வாருங்கள்.
  • 2. 2005 ஆம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் மழையால் ஏற்பட்ட வெள்ளச்சேதத்தின் அளவு 32 ஆயிரம் கோடி. 2007 ஆம் ஆண்டும் வெள்ளம் வந்தது. இப்போது 2011 லிலும் மீண்டும் வெள்ளச்சேதம். ஆனால் விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறையாக இருக்கிறது. இந்த வெள்ள நீரை எல்லாம் தமிழகத்தில் ஆக்கிரமிப்பில் இருக்கும் குளங்கள், ஏரிகள், கண்மாய்கள் உள்பட அனைத்து நீர்தேக்கங்களையும் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்து மீட்டு இவற்றில் தண்ணீரை தேக்கி இருந்தால் தமிழகத்தின் பல குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்திருக்காது. எனவே பொதுப்பணித்துறையை முடுக்கிவிட்டு  நீர்தேக்க ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள்.
  • 3.தமிழகத்தில் மிகுந்த அறிவாற்றில் கொண்ட பொறியாளர்களான ஏ.சி காமராஜ் தலைமையில் இயங்கும் 'தமிழ்நாடு நீர்வழிச்சாலை திட்டம்' என்பது முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல்கலாமால் பாராட்டப்பட்ட ஒரு திட்டம். அந்த திட்டம் என்பது, ' மாபெரும் மழை நீர் சேமிப்பு திட்டம்'. அதாவது தமிழகத்தில் ஓடும் நதிகளை எல்லாம் ஒன்றோடு மற்றொன்றை இணைத்து விடுவது. இதன்படி, அனைத்து நதிகளையும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ளும்படி இணைத்து விட்டால் தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய நீர்வழியான சாலை போன்ற கட்டமைப்பு உருவாகிவிடும். ஒரு மாவட்டத்தில் கடுமையாக மழை பெய்து அங்குள்ள ஆற்றில் தண்ணீர் வெள்ளமாக பாய்கிறது என்று வைத்துக் கொள்வோம். அது கடலில் கலக்கும் இடத்தில் ஒரு கால்வாயை வெட்டி கடலுக்குள் போகும் தண்ணீரை திருப்பி மற்றொரு மழை இல்லாமல் காய்ந்து கிடக்கும் மற்றொரு மாவட்ட ஆற்றுக்கு தண்ணீரை திருப்பி விடுவது. இதன்படி செய்தால் தமிழ்நாட்டில் உள்ள ஆறுகள் அனைத்திலும் எப்போதும் தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும்.
  •  எந்தக் காலத்திலும் தண்ணீர் பிரச்சினை ஏற்படாது. ஆறுகளில் எப்போதும் தண்ணீர் இருந்தால் அங்கு படகு போக்குவரத்தை நடத்தலாம். படகில் சரக்குகளை கொண்டு சென்றால் சாலைகளில் ஓடும் கனரக சரக்கு வாகனங்களை குறைத்து விடலாம். இதனால் சாலை விபத்தும் கட்டுப்படும். இன்றைக்கு லாரிகளுக்கு போடும் அதிகப்படியான டீசல் செலவையும் குறைத்து விடலாம். 
  •  இதனால் மக்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம், வெள்ளப்பூண்டும், வெல்லமும் கிடைக்கும்.
    4.இப்படி ஆறுகளை இணைக்கும் போது சில இடங்களில் வடியும் தண்ணீரில் டைனமோக்களை அமைத்து விட்டால் மின்சாரம் தயாரிக்கலாம். 
  • 5.சைனாவில் எண்ணெய் செலவை குறைக்கவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் சுமார் 1,23,000 கி.மீட்டர் அளவுக்கு நீர்வழிச்சாலை அமைத்துள்ளார்கள். இதனால் கப்பல் போக்குவரத்து மேம்பட்டு சாலைகள் நெருக்கடி குறைந்துள்ளன. எரிபொருளை சேமிக்க தொடங்கி விட்டார்கள்.  எனவே நீங்களாவது சைனா போல தமிழ்நாட்டில் ஆறுகளை இணைத்து நீர்வழி சாலை திட்டத்தை தீட்டுங்கள்.
    6.வரும் 2011 ஆம் ஆண்டில் நீரை சேமிக்க சைனா 1,30,000 கோடி செலவிட முடிவெடுத்துள்ளது.ஆனால் கர்நாடகமும் எப்போதும் தண்ணீர் தரமறுத்து கைவிரிக்கும் நிலையில், கேரளா புதிய அணை கட்டுவதாக பயமுறுத்தும் நிலையில் நாம் என்ன செய்ய போகிறோம்?
அன்று அரசர்கள் குளங்களையும், ஏரிகளையும் வெட்டினார்கள். தண்ணீரை தங்கமாக கருதி சேமித்தார்கள். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கரிகாலன் கட்டிய கல்லணை உங்கள் ஆட்சியிலும் பலனளித்துக் கொண்டிருக்கிறது. அவனது புகழை கல்லணை பறைசாற்றுகிறது.

 " வான் நின்று உலகம் வழங்கி வருதலால் தான் அமிழ்தம் என்று மழையை வருணித்திருக்கிறான் வள்ளுவன். அந்த அமிழ்தத்தை வீணாக்குவதை நீங்கள் அனுமதிக்க போகிறீர்களா? நதிநீர் இணைப்பாவது தமிழ்நாட்டின் முதல் சிறந்த திட்டமாக இருக்கட்டும்

6 கருத்துகள்: (+add yours?)

நிலாமதி சொன்னது…

நியாயமான கருத்து பகிர்வுக்கு நன்றி பலரை சென்றடைய ஒட்டுப போடாச்சு.

கிரீன்இந்தியா சொன்னது…

நன்றி நிலாமதி.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

கிணற்றுத் தவளை சொன்னது…

நச்சுன்னு ஊதுற சங்கை ஊதிடீங்க. இதெல்லாம் காசுக்கு ஓட்டு, ஓட்டுக்கு காசு என்று அலைபாய்ந்துகொண்டிருக்கும் நம் தமிழர்கள் காதில் விழுந்து ஏதாவது வித்தியாசம் காணுமான்னு தெரியலே. நீங்க சொன்ன எல்லா செயல்களையும் இந்த அரசு செஞ்சிட்டா அப்பறம் மக்கள் செழிப்பாயிடுவாங்க. இலவசம்னு சொல்லி கொள்ளை அடிக்க முடியாது. ஓட்டும் வாங்க முடியாதே?

Jayadev Das சொன்னது…

அருமையான கட்டுரை. அத்தனை யோசைகளும் செயல்படுத்தத் தக்கவை, செயல்படுத்தவும் முடியும். மணலை முற்றிலுமாக சுரண்டி விற்றுத் தின்ற ஈனர்கள் காதில் இது எங்கே கேட்கப் போகிறது? அனால், மக்களுக்கு நல்லது செய்யும் எண்ணம் இப்போதுள்ள ஆட்சியாளர்களுக்கு துளியும் இல்லையே. அப்படியிருந்தால் பெண்களின் தாலியை அறுக்கும் சாராயத்தை ஒரு அரசே விற்குமா? இவர்கள் ஒரே குறிக்கோள் முடிந்த வரை கொள்ளையடிப்பதே, அதற்க்கு இவர்கள் மக்களையும் காவு கொடுப்பார்கள், நாட்டையும் காட்டிக் கொடுப்பார்கள். ஸ்பெக்ட்ரம் ஊழலே இதற்க்குச் சாட்சி.இவர்களைப் போய் கரிகாலனுடன் ஒப்பிட்டுப் பேசி என்ன பயன்?

கிரீன்இந்தியா சொன்னது…

மன்னியிங்கள் ஜெயதேவ்.இது செவிடர் காதில் ஊதும் சங்கு அல்ல.
கேட்பவர் கேக்கட்டும் என்ற வேதாகமத்தின் வசனமாக எடுப்போம்.
ஏமாற்றியவன் ஒரு நாள் ஏமாந்து போவான்.
இது எல்லோருக்கும் பொருந்தும்.

டக்கால்டி சொன்னது…

ஆலோசனைகள் நன்றாக உள்ளது...ஆனால் இதை செயல் படுத்தப்போவது யார்? புரியாத புதிர்!!

காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today