தமிழக முதல்வருக்கு பனை மரம் அனுப்பும் கடிதம்...ஐயா வணக்கம். என்னை பற்றி சொல்லும் முன் உங்களுக்கு என் வாழ்த்தை தெரிவிக்கிறேன். காரணம், குமரியில் வானுயர சிலை அமைத்தீர்களே வள்ளுவர் அவர் என்ன சொன்னார் தெரியுமா?

" செம்பொருள் கண்டார்- என்றும்
ஞாலத்து அறம்பொருள் கண்டார்"

இதன் மறைமுக பொருள்,
" தத்துவ ஞானிகள் ( நமக்கும் மற்றவருக்கும் புலப்படாத ஒரு உண்மையை கண்டுபிடித்துக் கூறுபவர்கள்) தாம் தத்துவ ஞானிகள். இன்னும் விளக்கமாக சொன்னால்...திருக்குறளில் குறிப்பிடப்பட்டுள்ள காட்சியர்  என்றும் இவர்களை சொல்லலாம்.  தத்துவஞானிகள் என்பவர்கள் உடல், உயிர்,இயக்கம்,பொருள், உலகம், சமுதாயம்,பிரபஞ்சம் ஆகியவற்றின் உண்மை நிலைகளையும், இவற்றிற்குள்ள தொடர்புகளையும், உறவுகளையும் ஆய்பவர்களே .


1724 ல் நவீன ஐரோப்பிய தத்துவ இயலின் தந்தையான இமானுவேல் கான்ட் என்பவர் இருந்தார். இவருக்கு அறிவியலை பற்றி தெரியாது. இவர் ஒரு தத்துவஞானி. இவர் என்ன சொன்னார் தெரியுமா? இந்த உலகமும், சூரியன் போன்ற கோள்களும் வானமண்டலத்திலுள்ள கடின வெண்மேகத்திலிருந்து (NEBULAR) உருவாகி இருக்கலாம் என்றார்.

பிற்காலத்தில் பிரெஞ்சு நாட்டு விஞ்ஞானிகளும் வானியல் நிபுணர்களும் அறிவியல் அடிப்படையில் இமானுவேல் கான்ட் சொன்னதை உண்மை என்று உறுதி செய்தனர். இதில் பிறந்தது தான் (NEBULAR HYPOTHESIS). அதாவது ஒரு மிகப்பெரிய அறிவியல் இயக்கத்தை அறிவியலே படிக்காத ஒரு தத்துவ மேதை எளிதாக சொல்லி விட்டிருக்கிறார்.

தத்துவஞானிகள் எப்போதும் இந்த உலகத்தின் நன்மைக்காக சிந்தித்த காரணத்தால் பிரபஞ்சம் அவர்களுக்கு எளிதாக புரிந்து போனது. இப்படிப்பட்ட அரிய ஆற்றல் பெற்ற தத்துவஞானிகள் தான் ஒவ்வொரு நாட்டையும் ஆளவேண்டும் என்று பிளாடடோ சொல்லியிருக்கிறார். 

ஆனால் தமிழ்நாட்டின் இன்றைய நிலை என்ன என்பது உங்களுக்கே தெரியும். தமிழர்கள் ரசாயன மதுவை  குடித்து குடித்து வயிறு புண்ணாகி வருகிறார்கள். ஆனால் தமிழர்களின் அடையாளத்திற்கு எடுத்துக்காட்டான என்னை மறந்து போனதால் நானும் தமிழ்நாட்டை விட்டு மறைந்து வருகிறேன். இனி என்னை பற்றி விரிவாக உங்களுக்கு சொல்கிறேன். இதற்கு பிறகாவது நீங்கள் என்னை  காப்பாற்றுவீர்கள் என்று நம்புகிறேன்.

என் பெயர் 'பனைமரம்' என்பார்கள் தமிழர்கள்.  தமிழ் இலக்கியங்களில் என்னை பற்றி இருக்கும் வேறு பெயர்களை சொல்கிறேன்.

எனக்கு ' ஓடகம், தாலம், கரும்புறம், காமம்,பெண்ணை, போந்து, புற்பதி,புற்றாளி,தாளி,தருவிராகன் என்று பல பெயர்கள் இருக்கின்றன. ஆங்கிலத்தில் எனது தாவர பெயர் (borassus flabellifer). எனக்கு உங்கள் டாஸ்மாக் சரக்கு போல் இல்லாமல் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கிறது. அதனால் என்னை தமிழர்கள் கற்பக விருட்சம் என்றார்கள். கூடவே எனது பதனீருக்கு பத்ரகாளியம்மன் அமுதம் என்றார்கள். கடுமையான வெயில் காலத்தில் நான் காய்ந்து போக கூடாது என்பதற்காக பானையில் தண்ணீர் சுமந்து என்னை காப்பாற்றினார்கள் தமிழர்கள்.

திருவள்ளுவருக்கு எழுத ஓலை தொடங்கி தமிழ்மக்களுக்கு கல்கண்டு, கருப்பட்டி, கட்டில், சொளவு, வீடு வேய தட்டி என்று எல்லாமும் நான் தான். வான் நோக்கி உயர்ந்து சென்று மழையை வரவழைக்கும் ஆற்றல் எனக்குண்டு. இப்போது ஓசேன் படலம் ஓட்டை விழுந்து விட்டது என்கிறார்களே....என்னை நீங்கள் காப்பாற்றினால் ஓசேன் படலத்தை பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை. நான் பார்த்துக் கொள்வேன்.

இப்போது கிடைக்கும் பிராந்தி, விஸ்கி,ரம்கள் எல்லாம் தமிழர்களின் குடலில் புற்றுநோயையும், புண்ணையும் வரவழைகிறது.ஆனால், எனது பனஞ்சாற்றால் உடலுக்கு என்ன நல்லது கிடைக்கும் பனங்கள் உண்டால் எப்படி போதை கிடைக்கும் என்று என்னை பற்றி தெரிந்த சித்தர்கள் எப்படி எழுதி வைத்திருக்கிறார்கள் தெரியுமா?

" பனஞ்சாறு, பனங்கள் அல்லது பதநீர் அருந்த உடலின் சக்தி அதிகரிக்கும். சிறுநீர் பெருகும். ஆரோக்கியத்தை தரும். மலச்சிக்கல் தீரும். மேகவெட்டை (gonnorrhoea). பெருங்கிரந்தி (syphilis) நோய்க்கு நல்லது. பனஞ்சாற்றை தேமல் உள்ள இடத்தில் தடவி வந்தால் தேமல் குணமாகும்.

உடலின் உட்சூடு தணியும். வெயில் காலத்தில் பதநீரை சாப்பிட கபம், நாள்பட்ட இருமல், குன்மம், தொண்டை நோய், தோல் நோய்கள் குணமாகும். சோகை தீரும். அம்மை நோயினால் ஏற்பட்ட வெப்பம் தீரும். இப்படி ஏராளமாக சொல்லியிருக்கிறார்கள்.

பனங்கள்ளை உண்டால் போதையும் மயக்கமும் உண்டாகும். நடைதளரும்.மந்தம் உண்டாகும். மதியை மயக்கும்.(இதெல்லாம் எனக்கு இருக்கும் கெட்ட குணங்கள் தான். நான் இல்லையென்று சொல்லவில்லை)
ஆனால்  கள்ள சாரயத்தை விட, 48 சதவீதம் ஆல்கஹால் கலந்த டாஸ்மாக் சரக்குகளை விடவா கெடுதல் செய்து விடப் போகிறேன்?

என்னை நம்பி தமிழ்நாட்டின் கிராமங்களில் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இப்போது என்னில் இருந்து பதநீரை கூட இறக்குவதில்லை. காரணம், கள் இறக்க போவதாக சொல்லி  காவலாளிகள் கைது செய்து வழக்கு போட்டு விடுகிறார்கள். சிவகிரி தாலுகாவில் நூற்றுக்கணக்கான பனை ஏறும் தொழிலாளர்கள் மீது இப்படி  வழக்கு புனையப்பட்டதால் அவர்களது அரை வயிற்று கஞ்சிக்கும் இப்போது அடிவிழுந்திருப்பதாக ஊடகங்கள் சொல்கின்றன.

பனையால் தொழில் செய்ய கூடாது என்று தமிழர்களை நீங்கள் தடுத்தால் இன்னும் கொஞ்ச காலத்தில் தமிழகத்தின் பல கிராமங்களில் பசியும்,பஞ்சமும் பரவலாக வரத்தான் போகிறது. வறுமை பட்டியல் நீளத்தான் போகிறது.

உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன். பிராந்தி, விஸ்கி, பீர்களை விட நான் ஒன்றும் தமிழர்களுக்கு கெடுதல் செய்வதில்லை. இதை விஞ்ஞானிகளும் என்னை சோதனை செய்து பார்த்து நிரூபித்து விட்டார்கள். இப்படி இருக்கும் போது, பதனீர் இறக்குவதை தடை செய்வது, பனைத்தொழிலாளர்கள் மீது  வழக்கு போடுவது, அவர்களின் குடும்பங்களை பட்டினி போடுவது நியாயம் இல்லை.

இந்தாருங்கள் கல்கண்டு. நீண்ட நேரம் படித்த களைப்பு நீங்க கொஞ்சம் பதனீர் தருகிறேன். ஆசுவாசப்படுத்திக் கொண்டு சிந்தியுங்கள் ! ஐயா என்னால் எப்படி வருமானம் வரும் என்று சொல்கிறேன்

திண்டிவனத்திலிருந்து குச்சிக் கொளத்தூர் செல்லும் வழியில் என்னை நட்டிருக்கிறார்கள். ஏரிக்கரையில் வளர்க்கப்பட்டுள்ள என்னால் அந்த கிராமத்திற்கு ஆண்டுக்கு 5 லட்சம் வருவாய் கிடைக்கிறது. விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் என்னால் தரப்படும் நுங்குகளால் 50 லட்சம் அளவுக்கு வருமானம் கிடைக்கிறது.

இதை உங்கள் பனை தொழில் வாரியத்தில் கேட்டுபாருங்கள். இப்படி என்னை தமிழகம் எங்கும் உள்ள ஆறுகள், தமிழகத்தில் உள்ள 39 ஆயிரம் ஏரிகள், குளக்கரைகளில் வளர்த்தால் என்னால் 40 ஆயிரம் கோடி அளவுக்கு வருமானம் (டாஸ்மாக் வருமானத்தை விட அதிகம்) கிடைக்கும்.

நான் சொல்லும் இந்த கணக்கு மிகை அல்ல. உங்களுக்கு நேரமிருந்தால் பனைவாரியத்தில் நல்ல வேளாண்மை அதிகாரிகளையும், விஞ்ஞானியையும்  நியமித்து என்னை வளர்க்க வேண்டிய திட்டங்களை தீட்டுங்கள்.

இப்படிக்கு
பனைமரம் என்ற பரிதாபமாக நிற்கும் தமிழர் அடையாளம்.

4 கருத்துகள்: (+add yours?)

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

சரியான அலசல் சூப்பரா இருக்கு....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஐ வடையும் எனக்கா................!

*VELMAHESH* சொன்னது…

good

Ambeesan சொன்னது…

chinna vayasula padichcha panai marame panai marame en valarndhai panai marame enra padalthan ninaivirkku varukirathu.

காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today