காணாமல் போன மண்வெட்டியை தேடுகிறோம் .......2008...மழைக்காலம். காவிரி பாசனப்பகுதி விவசாயிகளுக்கு அது போதாத காலம். காவிரி ஆறு 36 பிரிவுகளாகவும், 1505 வாய்க்கால்களுமாக பிரிந்து வெள்ளத்தை சுமந்து சென்றது. பொன் விளைந்தது போல நெல் விளையும் பூமி வெள்ளக்காடாக காட்சியளித்தது.
23.11.08 அன்று தொடங்கிய நிஷா புயல் 1.12.08 வரை வாட்டி வதக்கியது. தமிழகத்தில் சராசரி மழையளவு 900 மி.மீ. ஆனால் நவம்பர் 23 ஆம் தேதி மட்டும் இரவு பகலாக திருவாரூர் மாவட்டத்தில் பெய்த மழை மட்டும் 494 மி.மீட்டர். அதற்கடுத்த நாள் பெய்த மழை அளவு 694 மி.மீட்டர்.
இப்படி அடித்து பெய்த மழையில் வீடுகள் இடிந்தன.

நாட்டு மக்களுக்கு உணவளிக்க வேண்டிய விவசாயிகள் சுமார் 200 பேர் உயிர் இழந்தார்கள். சென்னையில் டிசம்பர் 9 ம் திகதி வரை மழை நீடித்தது. 15.12.08 மீண்டும் ஒரு புயல் தாக்கியது. சேதம் 3789 கோடி என்று அரசு கணித்தது. கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்கள் எல்லாம் அதிக சேதப்பட்டியலில் இருந்தன.

இங்கிருந்த ஆறுகளும், ஏரி, குளங்களும் கரை உடைந்து வெள்ளச்சேதத்தை பெரிதாக்கின. மூன்று ஆறுகள் கரை உடைந்து ஒன்று சேர்ந்து திரிவேணி சங்கமம் போல் வெள்ளப்பெருக்காக மாறியதால் பட்டுக்கோட்டை வட்டாரம் துண்டிக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு தீவாக மாறியது. மூன்று லட்சம் ஏக்கரில் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகிப் போயின. இதற்கெல்லாம் அரசாங்கம் ஒரு இழப்பீடு கணக்கை போட்டு சில ஆயிரம் கோடிகளை கணக்கு காட்டியது.

உழவர்கள் உழைத்து பாடுபட்டு சாகுபடி செய்யவிருந்த பயிர்கள் எல்லாம் போனதால் இழப்பு விவசாயிக்கு மட்டுமல்ல. இந்த மாநிலத்துக்கும் தான். அதாவது, தமிழகம் முழுவதும் உள்ள மக்களுக்கு தேவைப்படும் நெல்லின் பெரும் பகுதியை விளைவிப்பது மேலே சொன்ன ஆறு மாவட்டங்கள் தான். இந்த ஆறு மாவட்டங்களும் பாதிப்புக்குள்ளானதால் கிட்டத்தட்ட 10 லட்சம் டன் நெல்வரவு பாதிப்புக்குள்ளானது.

வெள்ளமும், வறட்சியும் நாட்டில் மாறி மாறி வருகிறது. வடமாநிலங்களில் வறட்சி ஏற்படும் போது தென்மாநிலங்களில் பல உயிர்களை காவு கொள்கிறது. வடமாநிலங்களில் மழை கொட்டும் போது தென்மாநிலங்களில் வறட்சி தாண்டவமாடுகிறது. ஆக இந்த நிகழ்வுகளை எல்லாம்  அலசிப்பார்த்திருந்தால், கொட்டும் மழை மக்களுக்கு பாதிப்பில்லாமல் வழிந்து ஓட, அல்லது தேக்கி வைத்து பயன்படுத்த வழி கண்டுபிடித்திருக்க முடியும்.

 விவசாயிகளின் நலனையும், மக்களின் உணவுக்கான பாதுகாப்பையும் கவனத்தில் கொண்டு இயற்கை சீற்றங்கள் பாதிக்காத படி சரியான வழிமுறையை இனியாவது கண்டுபிடிக்க வேண்டும்.

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் சொல்வது போல் ' நாட்டில் இருக்கும் ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் அனைத்துக் காலி இடங்களும் மூன்றாக பிரிக்கப்பட வேண்டும். ஒரு பகுதி மரம் வளர்த்து காடாக்கப்பட வேண்டும். இரண்டாவது பகுதி மேய்ச்சல் நிலமாக மாற்றப்பட வேண்டும். மூன்றாவது பகுதி ஏரி அல்லது குளமாக மாற்றப்பட வேண்டும்' என்கிறார். ஆக. இதில் கவனித்தீர்களா..மரம் வளர்த்து காடாக்கப்பட்டால் எரிபொருள் ஏராளமாக கிடைக்கும். மழை வரும். அந்தப்பகுதியில் சுத்தமான ஆக்சிஜன் கிடைக்கும். மற்றொரு பகுதி மேய்ச்சல் காடாக்கப்பட்டால், தீவன மரங்களை ஏராளமாக வளர்க்கலாம். புல் வளர்க்கலாம். இதனால் கால்நடைகள் ஆயிரக்கணக்கில் பெருகும். பால், தோல் என்று எல்லாம் கிடைக்கும்.

மூன்றாவது இருக்கும் பகுதியை ஏரியாகவோ, குளமாகவோ மாற்றினால் தண்ணீரை தேக்கலாம். இப்படி தண்ணீரை தேக்கும் போது கிராமத்தில் உள்ள கிணறுகளில் நீர் மட்டம் உயரும். நீர்மட்டம் உயர்ந்தால் மழைக்காக வானத்தை நம்பி இருக்க வேண்டாம். ஆண்டு முழுவதும் விவசாயம் பண்ணலாம். இப்படியே இந்த குளத்தில் மீன்வளர்த்தால் உள்நாட்டு மீன் தேவையை நிவர்த்தி செய்ய முடியும். மூன்றே மூன்று வரிகளில் ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு வழியை சொல்லி விட்டார் இவர்.

அந்தக்கால மன்னர்கள் படித்திருக்கவில்லை. ஆனால் தாங்கள் ஆட்சி செய்த இடங்களில் ஏராளமான ஏரி,குளங்கள், கண்மாய்களையும் வெட்டினார்கள். இன்றைக்கும் தமிழ்நாட்டில் இருக்கும் 39,000 ஏரிகளும் பல்லவர்கள், சோழர்கள் ஆகிய மன்னர்கள் காலத்தில் வெட்டப்பட்டவை தான்

நீரை தேக்கி நெல் விளைவித்து மக்களின் பசியை போக்க மன்னர்கள் வெட்டி வைத்து விட்டு போன ஏரிகளும், குளங்களும், கண்மாய்களும் அந்த மன்னர்களின் காலத்திற்கு பிறகு மண்வெட்டியை பார்க்கவே இல்லை என்பது தான் இன்றைக்கு இருக்கும் நேர்மையான என்ஜினியர்களின் ஆதங்கம். இவர்கள் ஆதங்கப்பட்டு என்ன ஆகப்போகிறது. குளங்களுக்கும், ஏரிகளுக்கும், கண்மாய்களுக்கும் தூர்வார மண்வெட்டி போக வேண்டுமென்றால் அதற்கு நாட்டின் நீர் ஆதாரங்களை பற்றி நன்கு தெரிந்தவர்கள் அல்லவா திட்டம் போட்டு நிதி ஒதுக்க வேண்டும்.

தொலைத்து போன மண்வெட்டிகளை தேட முயல்வோம்!

1 கருத்துகள்: (+add yours?)

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நாசமா போறவனுகளை என்னத்தை சொல்ல..............!!!

காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today