நல்லெண்ணெயில் விஞ்ஞானத்தை புகுத்திய நமது முன்னோர்கள்!!!

7 கருத்துகள்

வாடிக்கையாளர்களுக்கு நல்லெண்ணெய் எடுத்து கொடுக்க செக்கு எண்ணெய் கடைகாரர்கள் பயன்படுத்திய பித்தளை பாத்திரம்
மது பாட்டனும், பூட்டனும் என்னத்த சாதிச்சாங்க...என்று நாம் அவ்வப்போது சலிப்பதுண்டு. ஆனால் அவர்கள் செய்து வைத்த ஒவ்வொரு விடயத்திலும் ஏதோ ஒரு தத்துவம் அடங்கித்தான் கிடக்கிறது என்பதற்கு இதோ இந்த நல்லெண்ணெயும் ஒரு உதாரணம்.

எங்கும் இல்லாத சில விடயங்கள் மதுரைக்கு மட்டுமே உண்டு. கடலில் கலக்காத வைகை, மனதை மயக்கும் மல்லிகைப்பூக்கள், இதே மல்லிகை போன்ற இட்லியும், கொத்துமல்லி சட்னியும்...இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இது போல் மதுரையில் ஒரு விடயம் நீண்ட நாட்களாக இருந்தது. அது மரச்செக்கில் பிழிந்து எடுத்த கமகமக்கும் நல்லெண்ணெய். மதுரை சிம்மக்கல் அருகில் இருக்கிறது செல்லத்தம்மன் கோவில்.

இந்த பகுதியில் வாணிப செட்டி குடும்பத்தை சேர்ந்தவர்கள் நல்லெண்ணெய் விற்பனையில் ஈடுபட்டு வந்தார்கள். இவர்களது கடையில் நல்லெண்ணெய் வாங்க எப்போதும் ஆட்கள் வந்து கொண்டே இருப்பார்கள். இப்படி வருபவர்கள் கைகளில் எல்லாம் சில்வரால் ஆன ஒரு குடுவை இருக்கும். இந்த குடுவையோடு வந்து வரிசையில் நிற்பார்கள். தங்கள் முறை வந்தவுடன் கடையில் அளந்து கொடுக்கும் நல்லெண்ணெயை வாங்கிச் செல்வார்கள்.

அப்படி என்ன தான் இவர்கள் விற்கும் இந்த நல்லெண்ணெயில் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஒரு தடவை புகைப்படக்காரருடன் சேர்ந்து அங்கே போனோம். கடைக்காரர் எப்போதும் போல் விற்பனையில் படு மும்முராக இருந்தார். நாங்கள் இந்த எண்ணெயின் ரகசியங்களை தெரிந்து கொள்ள வந்திருப்பதாக சொன்னவுடன் ஆர்வத்துடன் பேச தொடங்கினார். தனது நல்லெண்ணெய் பற்றி இன்னும் பல மக்களுக்கு தெரியட்டுமே என்று தான் ஆர்வமாக பேட்டி கொடுப்பதாக நினைத்தேன்.

அவரும் சொல்லத் தொடங்கினார். 'அதாவது தேங்காய் எண்ணெயில் இருந்து எண்ணெய் எடுத்து அதற்கு தேங்காய் எண்ணெய், கடலையில் இருந்து எண்ணெய் எடுத்து கடலை எண்ணெய் என்று நமது முன்னோர்கள் பெயர் வைத்தார்கள். ஆனால் எள்ளில் இருந்து எண்ணெய் எடுத்து விட்டு, அதற்கு மட்டும் நல்லெண்ணெய் என்று பெயர் வைத்தார்கள். ஏன் இப்படி?
அதற்கு எள் எண்ணெய் என்று தானே பெயர் வைத்திருக்க வேண்டும்? அனால் வைக்க வில்லை.  இந்த எண்ணெயின் எல்லையில்லாத நன்மைகளை பார்த்து விட்டு,  நல்லதை செய்யக்கூடிய நல்லெண்ணெய் என்பதை அதன் பெயரிலேயே சுட்டிக்காட்டிவிட்டார்கள்.

இன்றைக்கும் கடைகளில் நல்லெண்ணெய் பல பிராண்டுகளில் விற்கப்படுகிறது. ஆனால் நாங்கள் விற்கும் நல்லெண்ணெய்க்கும் அவர்கள் விற்கும் நல்லெண்ணெய்க்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது. கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் நல்லெண்ணெய் என்பது, பெரிய இயந்திரங்கள் மூலம் எள்ளை அரைத்து பெறப்படும் எண்ணெய். ஆனால் நாங்கள் கடந்த 120 ஆண்டுகளாக மரச்செக்குகளில் தான் எள்ளை போட்டு ஆட்டி எண்ணெயை பிழிந்து எடுக்கிறோம். அதாவது எள்ளுடன் கருப்பட்டியை சேர்த்து சிறிதுசிறிதாக ஒரே வேகத்தில் மரத்திலான செக்குகளை சுழல வைப்பதன் மூலம் எள்ளில் இருந்து எண்ணெய் சிறிது சிறிதாக வெளியே வரும்.

இப்படி மரச்செக்கிலிருந்து பிழியப்பட்டு வரும் எண்ணெயை பித்தளையால் ஆன பாத்திரத்தில் தான் வடித்தெடுப்போம். அதுவும் குறிப்பாக இந்த எண்ணெயை எடுத்து ஊற்ற பயன்படும் பித்தளை பாத்திரம் என்பது எங்களுக்காகவே பிரேத்யேகமாக தயாரிக்கப்பட்டது. இந்த பித்தளை பாத்திரத்தின் உட்புறத்தில் ஈயம் பூசப்பட்டிருக்கும். இதை வைத்து தான் செக்கிலிருந்து வரும் எண்ணெயை எடுத்து சில்வர் பாத்திரத்தில் ஊற்றி சேமிப்போம். இதே போல எங்களின் வாடிக்கையாளர்கள் எங்களிடம் எண்ணெய் வாங்க வரும் போது சில்வர் பாத்திரத்தை தான் கொண்டு வரச்சொல்லி அதில் தான் எண்ணெயை ஊற்றி கொடுப்போம்.

இதன் அறிவியல் தத்துவம் எங்களுக்கு முன்னோர்களுக்கு தெளிவாக தெரியாவிட்டாலும், மரச்செக்கில் கருப்பட்டியுடன் சேர்த்து ஆட்டப்பட்ட எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணையை, பித்தளையில் ஈயம் பூசப்பட்ட பாத்திரத்தின் மூலம் செக்கிலிருந்து எடுத்து ஊற்றி சில்வர் பாத்திரத்தில் சேமிக்கப்படும் நல்லெண்ணெய்க்கு சில அபாரமான குணங்கள் இருப்பதை நடைமுறையில் தெரிந்து வைத்திருந்தார்கள்.

இந்த மரச்செக்கு எண்ணெயில் பலகாரங்கள் செய்தால் அதன் மணமும், ருசியும் அபாரமாகவும், அலாதியாகவும் இருக்கும். இன்றைக்கு இந்தியாவில் பெரிய நிறுவனமாக இருக்கும் டிவிஎஸ் நிறுவனத்தினரின் குடும்பத்தினருக்கு மதுரை தான் பூர்விகம். அவர்கள் குடும்பத்தினரின் சமையல் எல்லாத்துக்கும் எங்கள் செக்கு நல்லெண்ணெய் தான் பயன்படுத்துவார்கள். இது போல் மதுரையில் இருந்த பல பிரபலங்களும் எங்கள் எண்ணெயை வாங்கி தான் சமைப்பது வழக்கம்.

எங்களுக்கு பெரிய அளவுக்கு இந்த தொழிலில் லாபம் இல்லாவிட்டாலும், நாங்கள் 4 வது தலைமுறையாக இந்த தொழிலை செய்து வருகிறோம். இதனை விடவும் மனதில்லை' என்றார். நாங்கள் இவரை பார்த்து பேசியது  கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு. தற்போது இந்த இடத்தில் மரச்செக்கு எண்ணெய் விற்கப்படுவதில்லை. இங்கு இந்த விடயத்தை பதிவிட காரணம் இப்படி எத்தனையே பாரம்பரியமான தயாரிப்பு முறைகள் மறைந்து போய்க் கொண்டே இருக்கின்றன. இதில் தமிழர்களின் வாழ்வோடு இடம் பிடித்த செக்கு நல்லெண்ணெயும் காணாமல் போனது வருத்தியது.


பொதுவாக பெண் குழந்தைகள் பருவமடைந்த நிலையில் அவர்களுக்கு உளுந்தை களியாக கிளறி அதில் நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட கொடுப்பார்கள். இது இடுப்பு பகுதிக்கு நல்ல வலுவை தரும் என்பார்கள். தற்போது இந்த பழக்கம் எல்லாம் மறைந்து விட்டது. இத்துடன் இந்த செக்கு நல்லெண்ணெயும் தான். செக்கு நல்லெண்ணெய்க்கும், தற்பேர்து பாக்கெட்டுகளில் அடைத்து வரும் நல்லெண்ணெய்க்கும் என்ன அப்படி வித்தியாசம் இருக்கும் என்று எனது நண்பர் ஒருவர் இப்படி சொன்னார்....

" அதாவது பெரிய பெரிய எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள் பெரிய இரும்பு உலக்கைகளை கொண்டு எள்ளை ஆட்டி எண்ணெயை பிழிவார்கள். அப்போது கடுமையான வெப்பம் இந்த உலக்கை உருளைகளுக்கு இடையே ஏற்படுவதுண்டு. அந்த வெப்பத்தால் இயற்கையாகவே நல்லெண்ணெயில் மறைந்திருக்கும் சில அதிசயமான குணசாங்கள் குறைந்து போய்விடும்.

ஆனால் மரச்செக்கில் கருப்பட்டியுடன் சேர்த்து எள்ளை ஆட்டும் போது மரச்செக்கில் அவ்வளவாக வெப்பம் ஏறாது. அப்படியே ஏறும் குறைந்த வெப்பத்தையும் இந்த கருப்பட்டி சரி செய்து ஒரு வெப்ப சமமாக்கல் இயற்பியல் தத்துவத்தை அங்கே செயல்படுத்துகிறது. இதனால் இப்படி மரச்செக்கில் ஆட்டி பிழிந்தெடுக்கப்படும் நல்லெண்லெண்ய்க்கு ஒரு அபாரமான மணமும், குணமும் இருப்பது இயற்கையே" என்றார்.

ஆக...படிப்பு குறைவாக இருந்தாலும் நமது முன்னோர்கள் இன்றைய விஞ்ஞானிகளுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை எப்படியெல்லாம் நிருபித்திருக்கிறார்கள் பாருங்கள்.

மிலியா டுபியா மரத்தை வைத்து உங்கள் ஊரை செழிப்புஆக்குங்கள்

3 கருத்துகள்மிலியா டுபியா வைத்து நீங்களும் கோடீஸ்வரனாகலாம்-ஒரு எளிய ஐடியா!
மிலியா டுபியா- மலைவேம்பு மரத்துக்கு தான் மிலியா டுபியா என்ற தாவரவியல் பெயர்.இதனை நட்டு வளர்த்தால் உங்கள் ஊர் வருமானம் பெரும்.

இது ஒரு ஐடியா அல்லது வேண்டுகோள், அவ்வளவு தான். யாரையும் நான் தவறாக விமரிக்கவில்லை. நன்றி!

தற்போது அமெரிக்காவில் இருக்கும் சாப்ட்வேர் என்ஜினியர்களின் கடந்த கால வாழ்விடங்கள் என்று பார்த்தால் அது தமிழ்நாட்டின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஏதோ ஒரு சிறுநகரமாக இருக்கும், அல்லது கிராமமாக இருக்கும். ஆனால் அமெரிக்காவின் டாலர்கள் வந்த பிறகு அடையாறில் அபார்ட்மெண்ட் அல்லது பெங்களூரில் வீடு வாங்கி செட்டிலாகி இருப்பார்கள். எங்கிருந்து வந்தார்களோ அந்த ஊருக்கான பாதை பெரும்பாலும் மறந்து போயிருக்கும். இது தான் நடைமுறை.

இந்திய அப்பாவி, அன்றாடங்காய்ச்சி மக்களின் வரிப்பணத்தில் படித்து முடித்து விட்டு அடுத்த நாட்டு உழைக்கும் இவர்களை நொந்து கொள்ளவும முடியாது. காரணம், இந்திய ஆண்டிமுத்து ராசாக்கள், கல்மாடிகளின் அரசியலும் ஒரு காரணம். இங்கு வேலைவாய்ப்பு இல்லாததும் ஒரு காரணம். சரி இது போன்ற அயல்நாட்டு பணிகளில் இருப்பவர்கள் தங்கள் ஊருக்காக ஏதாவது ஒரு பயனை செய்யலாம் என்று நினைத்தால், அதை பணமாக கொடுத்தால் அந்த ஊர் மக்கள் சேவகர்கள் ஊர் மக்களுக்கு கூழ்காய்ச்சி ஊற்றி அவர்கள் நல்ல பெயரை எடுத்து விட்டு போய்விடுவார்கள். ஆக, என்ன செய்யலாம் என்பதே கேள்வி.

இதற்கு ஒரே வழி...அயல்நாட்டு நண்பர்களே! உங்கள் செலவில் ஒன்று முதல் 100 மரக்கன்று வரை உங்கள் கிராமத்தில் உங்கள் செலவில் நடச்சொல்லி உங்கள் சொந்த ஊரில் உங்களுடன் படித்த நண்பர்களிடம் கோரிக்கை வைக்கலாம். அதற்கான பராமரிப்பு செலவை நீங்களே ஏற்றுக் கொள்வதாக அவர்களுக்கு உறுதி அளிக்கலாம். இப்படி வளரும் மரத்திலிருந்து கிடைக்கும் வருமானத்தை அந்த கிராமப்பஞ்சாயத்துகள் எடுத்துக் கொண்டு அந்த பணத்தை மக்களுக்கு வசதிகள் செய்து தர செலவழிக்கலாம் என்று சொல்லுங்கள். மரத்தை வைத்தால் எப்படி வருமானம் வரும் என்பது தானே உங்கள் கேள்வி?

நான் உதாரணத்திற்கு மிலியா டுபியா என்ற தாவரவியல் பெயர் கொண்ட மலைவேம்பையும், அதன் பொருளாதார பயன்களையும் மட்டும் இங்கு பதிவிடுகிறேன். இது போல் ஏராளமான மரங்கள் இருக்கின்றன. அதை வரும் பதிவுகளில் பார்க்கலாம். வேப்ப மரங்களில் பல ரகங்கள் உள்ளன. இவற்றில் சில 1,மாரியம்மன் மடியில் வைக்கும் நாட்டுவேம்பு 2, மலை வேம்பு 3.சிவன்வேம்பு 4.துளுக்க வேம்பு 5.சக்கரை வேம்பு 6.நிலவேம்பு என்று முக்கியமான ரகங்கள் இவை.

நாம் பார்க்க போகும மலைவேம்பின் தாவரப்பெயர் (melia dubia). இந்த இனம் பொதுவாக நகரப்பகுதிகளில் அவ்வளவாக காணப்படுவதில்லை. இந்த இனமரங்கள் வேகமாகவும், நேராகவும் வளரக்கூடியவை. பழைக காலத்து ராஜாக்களின் அரண்மனையில் இந்த வகை மரங்களை பயன்படுத்தி சன்னல், கதவுகளை உருவாக்கியிருக்கிறார்கள். தேக்கு மரங்கள் புழக்கத்தில் இல்லாத காலத்தில் மலைவேம்பு தான் பெரிய அளவு பயன்பாட்டில் இருந்திருக்கிறது.

இந்த மரங்களின் விதைகள் சீமை இழந்தை பழம் அளவுக்கு பெரியதாக இருக்கும். இதன் விதைகள் மிகமிக கடினமானவை. முளைப்புத் திறன் குறைவு. இந்த விதைகள் முளைப்பதற்கு 120 நாள் முதல் 180 நாட்கள் வரை ஆகிறது. இதன் காய்களை ஆடு, மாடுகள் விரும்பி உண்ணும். இப்படி சாப்பிடப்பட்ட விதைகள் இந்த விலங்குகளின் குடலில் சீரணமாகாமல் நல்ல சுழற்சி ஏற்பட்டு பல ரசாயன மாற்றங்களுக்கு உள்ளாகி மலக்கழிவில் வெளியே வருகிறது.

இது போல் இந்த மரத்தின் பழங்களை வெவ்வால்கள் விரும்பி தின்னும். இது போல் வெவ்வால்களின் உடலுக்குள் சென்று வெளியேறிய விதைகளும் மிகுந்த முளைப்புத்திறன் உடையதாக இருக்கும். இது போல் தான் இந்த விதைகள் காட்டுக்குள்ளும், நாட்டுக்குள்ளும் ஏராளமாக பரவி முளைத்து பெரிய மரங்களாக இன்றும் இருக்கின்றன.

இந்த மரத்தின் பயன்களை கண்ட இயற்கையாளர்கள் இந்த மரங்களில் தரமான விதைகளை எடுத்து நர்சரிகளில் வளர்த்துள்ளனர். தற்போது இந்த மரக்கன்றுகள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள தோட்ட செடிகள் விற்பனை செய்யும் நர்சரிகளில் கிடைக்கின்றன.

மலை வேம்பை வளர்க்கும் வழி
இந்த மரக்கன்றுகளை வாங்கி ஒரு ஏக்கரில் 12 க்கு 12 அடி வீதம் 360 செடிகளை நடலாம். இந்த கன்று ஒன்று 10 ரூபாய் முதல் 15 ரூபாய் என்ற அளவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மரம் 8 ஆண்டுகளில் சராசரியான உயரத்திற்கு வளர்ந்து விடுகிறது. அதாவது இந்த கால அளவில் இந்த மரத்தின் உயரம் 24 அடியையும் தாண்டிவிடுகிறது. அடிமரத்தின் சுற்றளவு 4 அடி வரை இருக்கும் என்கிறார்கள் அனுபவ விவசாயிகள். அதாவது சுமார் 30 கனஅடி இருப்பதாக வைத்துக் கொள்வோம்.

இந்த மரங்கள் மார்க்கெட்டில் கன அடி ஒன்றுக்கு 100க்கு விற்பனையாகிறது என்று வைத்துக்கொண்டால், ஒரு மரத்திற்கான விலை அதாவது 30 கனஅடி மரத்திற்கு 3 ஆயிரம் ரூபாய். இப்படி கணக்கில் எடுத்தால், ஒரு ஏக்கரில் வைக்கப்பட்ட 360 மரங்களுக்கு கிட்டத்தட்ட 10லட்சம் ரூபாய். பார்த்தீர்களா...லாபத்தை!

இந்த மரத்தின் தனித்தன்மையை பார்க்கலாம்.
இந்த மரம் தரிசு நிலத்தில் நன்றாக வளரும். வறட்சியை தாங்கும். இந்த மரத்தை பயன்படுத்தி பிளைவுட் பெருமளவில் தயாரிக்கிறார்கள். உலக நாடுகளில் இந்த மிலியா டுபியா பற்றி ஆய்வுகள் நடந்து வருகின்றன. காரணம், எரிபொருளின் தேவை அதிகரித்துக் கொண்டு போவதால் அதிக அளவில் விரைவில் வளரும் மரங்களை நடவேண்டியுள்ளது.

இந்த மரங்கள் பற்றி விவரங்கள் அறிய மாவட்ட வனத்துறை அலுவலகங்களை அணுகலாம். இந்த மரங்கள் பற்றி விவரங்கள் அறிய பாண்டிச்சேரியை சேர்ந்த வெஙகட பதி அவர்களிடம் 94432 26611 என்ற எண்ணில் கேட்கலாம்.

கரித்துண்டின் சக்தியை கண்டு பிடிக்க முயல்வோம் அறிவியல் படித்த பதிவர்களே!

1 கருத்துகள்ரித்துண்டுகளை என்ஜினுக்குள் போட்டு எரித்து ரயில்களை இயக்கினார்கள். மின்சாரத்தை தயாரித்து வருகிறார்கள். இப்படி எரிசக்தியை உருவாக்க கரித்துண்டுகள் இப்போதும் உதவி வருகிறது. ஆனால் கரித்துண்டுகளில் மற்றொரு பரிணாமம் இன்னும் கண்டு கொள்ளாமலே இருக்கிறது என்பது தான் இந்த பதிவை எழுத தூண்டியது. எங்கள் கல்லூரி காலத்தில் சில கிராமங்களுக்கு கால்நடை ஆய்வு களப்பணிக்காக செல்வதுண்டு.

அப்போது எங்களது பேராசிரியர் ஒருவர் முதன் முதலாக இப்படி நாங்கள் களப்பணிக்காக கிளம்பிய போது, கரித்துண்டுகளை சிலவற்றை கையில் எடுத்து வர சொன்னார். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு தான் தெரிந்தது. சில இடங்களில் குடிதண்ணீர் சந்தேகத்துக்கு உரியதாக தென்பட்டால் அந்த குடிநீரை ஒரு பாட்டிலில் பிடித்து பிறகு அந்த குடிநீரை நாங்கள் கொண்டு போன கரித்துண்டுகள் வழியாக வடிகட்டி பிறகு குடிக்க பயன்படுத்தும் ஒரு ஐடியாவை கற்றுக் கொடுத்தார். கரித்துண்டுகளுக்கு கிருமிகளை கொல்லும் மற்றும் வடிகட்டும் ஆற்றல் இருப்பதை அப்போது தெரிந்து கொண்டோம்.

சமீபத்தில் கரித்துண்டுகளை பற்றி ஆய்வு செய்த அமெரிக்கர்கள் வித்தியாசமான தகவலை வெளியிட்டிருக்கிறார்கள். சார்க்கோல் என்பது கரித்துண்டின் மற்றொரு பெயர். அமேசான் காடுகளில் வாழும் பழங்குடி மக்களின் சமீபத்தில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. பொதுவாக இந்த காடுகளின் மனிதகாலடி படாத இடங்களில் வெளி உலகத்துக்கே வராத ஆதிவாசிகள் இருப்பதாக நம்பப்படுகிறது.

ஆனால் இதே பகுதியில் சற்று நாகரீகத்துடனும் வாழ்ந்துவரும் ஆதிவாசிமக்களும் உள்ளனர். இது போன்றதொரு அமேசான் ஆதிவாசி மக்கள் தான் கரித்துண்டுகளை மிகச்சிறந்த மண்ணிற்கு ஊட்டமளிக்கும் ஒரு இடுபொருளாக பயன்படுத்துவது தெரியவந்தது. கரித்துண்டுகளை மண்ணுடன் கலக்கி பிறகு பயிரிடும் போது பயிர்கள் சிறப்பாக, செழிப்பாக வளர்வதாக இந்த ஆதிவாசிகள் நம்புகிறார்கள்.

இவர்கள் இதை எப்படி செய்கிறார்கள் தெரியுமா? அமேசான் ஆதிவாசி மக்கள் அவர்கள் காடுகளில் வேட்டையாடும் விலங்குகளின் எலும்புகளை சேகரித்து வைக்கிறார்கள். பல வகை மரங்களிலிருந்தும் பட்டைகளை உரித்துக் கொள்கிறார்கள். இவற்றை எரித்து கரியாக்குகிறார்கள். இப்படி உருவாக்கப்பட்ட கரியை மாவு போல ஆக்கி மண்ணுடன் கலக்குகிறார்கள். இந்த மண்ணில் சில பயிர்களை பயிரிடுகிறார்கள். ஆதிவாசிகள் கரித்துண்டுகளை இப்படி பயிரிட பயன்படுத்துகிறார்கள் என்பது பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.இந்த விஞ்ஞானிகளும் கரித்துண்டை தயாரிக்க முயன்றார்கள்.

இதற்கு மர இலைகள், மக்காச்சோள கொண்டை உள்பட மரத்துண்டுகளை எரித்து கரியாக்கி கொண்டார்கள். இப்படி தயாரிக்கப்பட்ட கரியை மண்ணுடன் கலந்து தொட்டிகளில் நிரப்பினார்கள். இந்த கரித்துண்டு கலக்கப்பட்ட மண்ணில் கோதுமையை விதைத்தார்கள். கரித்துண்டு கலக்கப்பட்ட மண்ணில் விதைத்த கோதுமை அபாரமாக வளர்ந்தது. விதைகளின் முளைப்புத்திறன் அதிகமாக இருந்தது. விஞ்ஞானிகளுக்கு இது ஆச்சரியத்தை அளித்தது. இது போல் வேறு சில பயிர்களிலும் இந்த கரித்துண்டு கலக்கப்பட்ட மண் சேர்த்து விளைவிக்கும் பரிசோதனையை மேற்கொண்டார்கள்.

அந்த பயிர்கள் எல்லாம் மிகச்சிறப்பாக வளர்ந்து செழிப்பாக காட்சியளித்தன. பொதுவாக மண்ணில் தொடர்நது குறிப்பிட்ட பயிரை பயிரிடும் போது அந்த மண்ணின் வளம் தொடர்ந்து குறைந்துவரும். அந்த மண்ணில் உள்ள சத்துக்களை நாம் பயிரிடும் தாவரங்கள் உறிஞ்சிக் கொள்வதால் மண்ணில் இயற்கையாக இருக்கும் அங்கக சத்துக்கள் குறைந்து விடும். இதை ஈடுகட்ட தான் நாம் உரங்களை இடுகிறோம். ஆனால் இந்த கரித்துண்டு கலக்கப்பட்ட மண்ணில் இருந்த சத்துக்கள் உறிஞ்சப்படும் விகித அளவு குறைவாக இருந்தது. அதனால் அடிக்கடி உரங்களை இடாமல் அடுத்தடுத்து பயிர்களை விளைவிக்க முடிந்தது.

இது தவிர கரித்துண்டு கலக்கப்பட்ட மண் இயல்பாக மென்மையாக ஆகி விடும் என்பதால், மண்ணுக்குள் வெளிக்காற்று நன்றாக புகுந்து செல்ல ஏதுவான நிலைமை உருவானது. இதனால் மண்ணுக்குள் பிராண வாயு அதிகமாகி அது பயிருக்கு கிடைத்த காரணத்தால் பயிர்கள் செழிப்பாகவும், ஆரோக்கியமாகவும் விளைந்தன. (நாம் ஆழமாக பிராணவாயுவை சுவாசித்தால் நல்ல ஆரோக்கியத்துடன் வாழமுடியும்.பிராணவாயுவை உள் நுரையீரலுக்குள் ஆழமாக உள் இழுத்து பயிற்சி செய்வதற்கு பெயர் தானே நாடிசுத்தி மற்றும் பிராணயாமம்) இது போல் தான் பயிருக்கும்.

இப்படி கரித்துண்டு கலக்கப்பட்ட மண்ணில் இயல்பாகவே பாசனம் செய்யும் போது, தண்ணீரானது அதிக நேரம் இந்த கரித்துண்டில் ஈர்க்கப்பட்டு, அதாவது உறிஞ்சப்பட்டு தேங்கி இருப்பதால் பயிருக்கு தொடர்ந்து தண்ணீர் கிடைத்து விடுகிறது. அதாவது சிலர் தண்ணீரை அதிகம் விட்டால் பயிர் நன்றாக வளரும் என்று கிணற்றிலிருந்து பல ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீரை வெள்ளம போல் விட்டு பாசனம் செய்வார்கள். இப்படி விடப்படும் தண்ணீர் பயிருக்கு போவதில்லை. வீணாக மண்ணுக்குள் தான் செல்லும் என்பதே உண்மை. ஆக.கரித்துண்டு கலக்கப்பட்ட மண்ணில் பாசனம் செய்யும் போது அந்த மண் பாசனம் செய்த சிறிது நேரத்திற்குள்ளாகவே, அதிக தண்ணீர் ஈர்ப்புடன் காட்சியளிக்கும்.

பொதுவாக செயற்கை உரங்களை இன்று அதிக அளவில் விவசாயத்தில் பயன்படுத்துகிறார்கள். இதற்கு காரணம், பயிருக்கு உரம் அதிக அளவில் தேவைப்படுவதால் தான். இந்த ரசாயன உரங்களால் மனிதனுக்கும் ஆபத்து. செயற்கை உரம் பயன்படுத்த மண் விரைவில் மலடாக மாறிவிடுகிறது. ஒரு கட்டத்தில் செயற்கை உரம் இல்லாமல் பயிர் குறிப்பிட்ட மண்ணில் வளரவே வளராது என்ற நிலையை விவசாயிக்கு உருவாக்கி விட்டு விடுகிறது. ஆக, கரித்துண்டை கலப்பதால் செயற்கை உரத்தை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு குறைத்து விட முடியும். மெதுவாக மண்ணை இயற்கை உரங்களால் நிரப்பி விஷத்தன்மையற்ற பயிரையும், உணவு தானியங்களையும் உருவாக்க முயலலாம்.

பொதுவாக கரித்துண்டுகளை பயன்படுத்துவதால் பூமி வெப்பமாவதை தடுக்க முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். வைரம் கூட கரித்துண்டின் ஒரு குறிப்பிட்ட மாறுபாடு அடைந்த நிலை தான் என்பது வேதியியல் தெரிந்தவர்கள் அறிந்திருக்க முடியும். இத்துடன் நான் மேலே சொன்னது போல் கரித்துண்டுகள் தான் ஒரு காலத்தில் இந்தியா மட்டுமல்லாது உலகில் இயங்கிய அத்தனை ரயில்களிலும் எரிபொருளாக இருந்திருக்கிறது. மேலும் இன்று வரை அனல் மின்சாரம் தயாரிக்க இதே கரித்துண்டு தான் பயன்பட்டு வருகிறது. பார்ப்பதற்கு சாதாரணமாக இருக்கும் கரி பற்றத் ெத்ாடங்கினால் தணலாக மாறி செஞசிவப்பு நிறத்தில் தகிக்கும். அதாவது அளப்பரிய சக்தியை தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டு சாதாரணமாக காட்சியளிக்கிறது.

ஆக, எனக்கு தெரிந்த வரை இந்த கரித்துண்டுக்கு இன்னும் அபாரமான சக்தி இருக்கலாம். அதாவது, நாம் பயன்படுத்தும் இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் மற்றும் காற்று கார்புரேட்டரில் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலக்கும் படி இருக்கும் போது அது என்ஜினுள் செலுத்தப்பட்டு எரிக்கப்பட்டு ஆற்றலாக மாறி வாகனத்தை இயக்குகிறது என்பது ஒரு எளிய விதி. இந்த கரித்துண்டு வழியாக பெட்ரோலை உட்புகுமாறு செய்து பயன்படுத்தினால் வாகனத்தில் இயங்குதிறனை குறைவில்லாமலும், அதே நேரத்தில் பெட்ரோல் உள்செல்லும் அளவை குறைத்து விடமுடியுமா? என்பதே எனது கேள்வி.

இது ஒரு புறம் இருக்கட்டும். இங்கு சொல்ல வந்த விடயம், நீங்கள் அவசரத்திற்கு எங்கேனும் கிடைக்கும் குடிநீரை பயன்படுத்த நேர்ந்தால் சில சுத்தமான கரித்துண்டுகள் மூலம் அந்த தண்ணீரை வடிகட்டி பயன்படுத்துங்கள். காரணம் கரித்துண்டு ஒரு சிறந்த கிருமி வடிகட்டி என்பதுடன் சில கிருமிகளையும் அழிக்கும் ஆற்றல் பெற்றவை என்பதே உண்மை.


கரித்துண்டுகளில் அபார ஆற்றல் பற்றி விக்கிபீடியாவில் படித்து பாருங்களேன்!        http://en.wikipedia.org/wiki/Charcoal

பறவை பார்த்தலுக்கு நமக்கு அடிப்படையான தேவை

3 கருத்துகள்

பறவை பார்த்தல் -தொடர் 2பறவை பார்த்தல் என்பதை பற்றிய இரண்டாவது பதிவு இது. பறவைகள் பற்றி புராணங்களிலும், கதைகளிலும் இடம் பெற்றுள்ளன. பறவை பார்த்தல் ஒரு மிகச்சிறந்த பொழுது போக்கு கலை, மனஅழுத்தத்தை குறைக்கும் மருந்து. நல்ல உடற்பயிற்சியும் கூட எனலாம். பறவைகள் இல்லாமல் மனித குலமும், இயற்கையும் தழைப்பது கூட கடினம்.

காரணம், பறவைகள் தங்கள் உணவுக்காக ஒரு இடததை விட்டு மற்றொரு இடத்திற்கு பறந்து செல்லும் போது தாவரத்தின் விதைகளை பல்வேறு இடங்களிலும் பரப்புகின்றன.
இதனால் ஒரு தாவரம் பல இடங்களில் தனது சந்ததியை பரப்புகிறது. ஏராளமான மரங்கள் காடுகளில் இன்று செழித்து தழைத்திருக்க காரணம் பறவைகள் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ரோாம் மக்கள் பறவைகளின் குரலையும், அது பறக்கும் தன்மையையும் வைத்து காலநிலையை அது கணித்து விடுகிறது என்கிறார்கள்.

ராஜஸ்தான் பாலைவனம், இமயமலை தவிர்த்து எல்லா இடங்களிலும் பறவைகளை காணலாம். ஆனால் இமயமலையிலும் கூட காகங்கள் சமாளிக்கின்றன. பறவை பார்த்தலுக்கு சிறந்த இடம் காடுகள் தான் என்கிறார்கள் பறவை பார்த்தலில் அதிக அனுபவம் கொண்டவர்கள்.

அதிகாலை நேரங்களிலும், இலையுதிர் காலங்களிலும் பறவைகளை நன்றாக கவனிக்க இயலும். பறவை பார்த்தலுக்கு நமக்கு அடிப்படையான தேவை ஒரு நல்ல பைனாகுலர், ஒரு குறிப்பு நோட்டு, பறவை இனங்களை பற்றி தெரிந்து கொள்ள ஒரு புத்தகம் மற்றும் பொறுமை. இது தான் அடிப்படை.

இந்த தொடரில் இந்திய பறவை வகைகளை பற்றி பதிவிட முயற்சி எடுத்திருக்கிறேன். இதில் பறவைகளை அடிப்படையாக அடையாளம் காணுவது எப்படி என்று பார்க்கலாம்.


உடல் அளவை வைத்து அடையாளம் காணுவது
குருவி, புல்புல் பறவை, மைனா,புறா போன்றவற்றை அதன் உடல் அளவை வைத்து இனங்காணலாம். தொடர்ந்து இந்த வகைப்பறவைகளை கவனித்து வந்தால் நாளடைவில் எளிதில் அவற்றின் உடல் அமைப்பு துல்லியமாக தெரிந்து விடும். அளவை அறிவதற்கு அவற்றின் அருகில் சென்று கவனித்தல் வேண்டும்.
 
உடல் வடிவமைப்பை வைத்து அடையாளம் காணுதல்
வெளிச்சம் குறைந்த இடத்தில் காணப்படும் பறவைகளை கூட அதன் உடல் வடிவமைப்பை வைத்து இனங்காண முடியும். ஒவ்வொரு பறவையும் ஒவ்வொரு விதமான உடல் வடிவமைப்புடன் காணப்படும்.
உதாரணமாக, உடலமைப்பு என்றால் நீளம், குட்டை மற்றும் தட்டை.
அலகின் அமைப்பு( வளைந்தது,நேரானது)
வாலின் அமைப்பு (நீளம், குட்டை,வளைந்தது, தட்டையானது)
 
நிறத்தை வைத்து அடையாளம் காணுதல்
கிளியை அதன் சிவந்த அலகை வைத்தும், மயிலை அதன் நீலம் பச்சை கலந்த தோகையை வைத்தும் இனம் காணலாம். இனப்பெருக்க காலத்தில் அதன் இறகுகளின் நிறம் மாறக்கூடும். எனவே நிறத்தை வைத்து அடையாளம் காணும் போது சிறிது கவனமுடன் இருக்க வேண்டும்.
 
குரலை வைத்து அடையாளம் காணுதல்
பறவைகளின் குரல் மகிழ்ச்சியாகவோ, அதிக ஒலியுடன் கூடியதாகவோ நீண்ட ஒலியுடனோ குறைந்த ஒலியுடனோ காணப்படும்.
 

செயல்களை வைத்து இனம் காணுதல்

மரங்கொத்தி பறவை அது மரக்கிளைகளில் ஏறிச்செல்லும் விதத்தையும், மூக்கை வைத்தும் கண்டறியலாம். குருவியை அது குதித்து குதித்து செல்லும் விதத்தை வைத்தும் அடையாளம் காணலாம்.
உடல் குறியீடுகளை வைத்து அடையாளம் காணுதல்
இயற்கை தனது பரிசாக ஒவ்வொரு பறவைக்கும் ஒரு உடல் குறியீடுகளை கொடுத்துள்ளது. உதாரணமாக கண்ணில் மீதுள்ள கோடுகள், வெள்ளை மற்றும் பல்வேறு நிறங்கள் என்று வித்தியாசப்படுத்தலாம்.

இப்படி பறவைகளை அடையாளம் காண சில அடிப்படை காரணிகளை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்த பதிவில் நம் வீட்டில் விருந்து (பழைய இட்லி,தோசை,மாடியில் காய வைத்த மாங்காய் வடு) என்று திருடி ஓடும் காக்காய் பற்றி பார்க்கலாம்.

இயற்கையை நேசிக்க உங்கள் குழந்தைக்கு கற்று கொடுத்த ஒரு சிறந்த அப்பாவாக நீங்கள் இருக்க ...

7 கருத்துகள்
உங்கள் ஊரின் அருகில் இருக்கும் குளங்கள் அல்லது ஏரிகளையும் என்றாவது ரசித்திருக்கிறீர்களா? அந்த குளத்தில் உள்ள மீன்களை பிடிக்க மீன்கொத்திகள் வந்து காத்திருக்கும் அழகும், நீந்தி வரும் மீன்களை மிக அழகாக டைவ் அடித்து ஒரு மீனை கொத்திக் கொண்டு போகும் மீன் கொத்தியின் சுவாரசியமான விளையாட்டையும் கண்டதுண்டா?
பறவைகளின் உலகம் அழகானது அவற்றை போலவே!
தமிழ்நாட்டில் எத்தனையோ பறவைகள் இருந்திருக்கின்றன. ஆனால் பலவித காரணங்களால் இந்த பறவைகளை இன்றைக்கு பார்க்க முடிவதில்லை. பறவை பார்ப்பவர்கள் (Bird watchers) வெளிநாடுகளில் அதிகம் பேர் உள்ளனர். வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் ஒரு பறவையை பற்றி ஆராய 5 ஆண்டுகள் வரை செலவிடுகிறார்கள். ஆனால் நமது நாட்டில் இதுபற்றி யாரும் கண்டு கொள்வதே இல்லை. கோவை சூலூரில் வசிக்கும் பேராசிரியர் க.ரத்னம் எழுதியுள்ள தமிழ்நாட்டு பறவைகள் என்ற நூல் மட்டுமே தமிழகத்தில் காணப்பட்ட பறவைகள் பற்றி ஒரளவு தகவல்களை தருகிறது. இவரது பேட்டியை இங்கு தருகிறேன். உங்களுக்கு முடிந்தால் ஒரு நல்ல கேமிரா வாங்குங்கள். சனி,ஞாயிறு அன்று உங்கள் நண்பர்களுடன் அல்லது பள்ளியில் படிக்கும் உங்கள் குழந்தைகளை பறவை பார்க்க அழைத்து செல்லுங்கள். பார்க்கும் பறவைகளை கேமிராவில் படம் பிடித்து வாருங்கள். அது ஒரு இனிய பொழுது போக்கு.


இந்த பொழுது போக்கு பிற்காலத்தில் உங்கள் குழந்தையின் மிகச்சிறந்த பொழுது போக்காகவும் சாதனையாகவும் கூட மாறக்கூடும். அதே நேரத்தில் இயற்கையை நேசிக்கவும் உங்கள் குழந்தைக்கு கற்று கொடுத்த ஒரு சிறந்த அப்பாகவும் நீங்கள் இருக்க போகிறீர்கள்.
பேராசிரியர் ரத்னம் போல் தமிழ்நாட்டில அதிகமான பறவையியலாளர்கள் உருவாகவில்லை. காரணம், நமது பள்ளிகள் இயற்கையை நேசிக்க கற்றுக் கெர்டுப்பதில்லை. எப்பொழுதும் புத்தகம், மதிப்பெண்கள், கராத்தே, சிலம்பம்....இத்யாதிகள் தான். ஆனால் பறவைகளும், பூச்சிகளும் இல்லாமல் நாமும் இயற்கையோடு வாழ முடியாது. உலகின் மற்ற எல்லா நாடுகளையும் விட நமது நாட்டில் மிக அதிகமான பறவையினங்கள் இருக்கின்றன. ஆனால் அவை மெல்ல அழிந்து வருகின்றன.
பேராசிரியர் ரத்னம் ஒரு பேட்டியில் ' தமிழில் பறவை பெயர்களில் குழப்பங்கள் உள்ளன. தவிட்டு சிலம்பன் ஆங்கிலத்தில் காமன் பாப்லர் என்று அழைக்கப்படுகிறது. இது தமிழகத்துக்கு சற்றும் பொருத்தமில்லாதது. இந்த பறவையானது தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் தான் பரவலாக காணப்படுகிறது. அப்படி இருக்கும் போது இது எப்படி காமன்பாப்லர் என்று அழைக்கப்படலாம் என்கிறார். பெயின்டட் ஸ்டார்க் பறவைக்கு மஞ்சள் மூக்கு நாரை என்று சொல்லலாம். ஆனால் நெல்லை பகுதியில் இந்த பறவையை சங்கு வளை நாரை என்கிறார்கள். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பெயர் நிலவுவதால் ஒரு இடத்தில் ஒருவரிடம் ஒரு பறவையின் பெயரை சொல்லும் போது தெளிவாக அவற்றை அடையாளம் கண்டு கொள்ள முடிவதில்லை. இப்படி பறவை இனம் காணுவதில் ஏராளமான குழப்பங்கள் இருக்கின்றன.
தற்போது இளைஞர்களிடம் இயற்கை மீதான ஈடுபாடு அதிகரித்துள்ளது. மலையேற்றம், காடுகளில் டிரக்கிங் போக தொடங்கும் பழக்கம் வந்துள்ளது. இந்த பழக்கத்தை அவர்கள் பறவை பார்ப்பதில் ஈடுபாடு கொண்டதாக மாற்றிக் கொள்ள வேண்டும்' என்கிறார்.
அவரது இந்த பேட்டியை படித்தவுடன் 'பறவை பார்த்தல்' மற்றும் பறவைகளை அடையாளம் காணுதல் பற்றி ஒரு தனி பதிவு போட தோன்றியது. அதன் விளைவாக இந்த பதிவு.

முதலில் பறவை பார்த்தலுக்கு என்ன மாதிரியான அடிப்படை தேவை என்ன என்று பார்க்கும் முன் உங்கள் வீட்டு மொட்டை மாடிக்கோ அல்லது வீட்டு தோட்டத்திற்கோ பறவைகளை வரவழைக்க ஒரு உத்தியை கையாளுவது எப்படி என்று பார்க்கலாம். பிறகு பறவைகளின் படங்களையும் அவற்றின் பழக்கவழக்கங்களையும் பற்றி ஒவ்வொரு பதிவாக பார்க்கலாம்.

வீட்டுக்கு விருந்தாளியாக பறவைகள்
காலை உணவை முதலில் காக்கைகளுக்கு வைத்து விட்டு சாப்பிடுவது சிலரது வழக்கம். இது தான் நாமும் செய்ய போவது. காக்கைக்கு இட்லி, பால்சோறு, தோசை என்று எதையும் சாப்பிடும். ஆனால் மற்ற சிறிய குருவி ரக பறவைகள் இவற்றை சாப்பிடுவதில்லை. அவற்றின் ஆகாரம் சிறு தானியங்கள் தான். தினை,ராகி, கம்பு போன்றவற்றை விரும்பி சாப்பிடும்.
இந்த உணவு தானியங்களை வீட்டின் மொட்டை மாடியில் முக்கோண வடிவத்தில் மூன்று கம்புகள் போன்ற அமைப்பில் ஒரு மேல் தட்டை அடித்து பொருத்திய அமைப்பாக செய்து வைத்து விடவும். இந்த அமைப்பில் உள்ள தட்டில் இந்த சிறு தானியங்களை கொட்டி வைக்கவும். உங்கள் பகுதியில் காணப்படும் பறவைகள் மெல்ல மெல்ல இந்த உணவு தட்டின் பக்கமாக ஈர்க்கப்படும். பிறகு அவை தொடர்ச்சியாக உங்கள் வீட்டு மொட்டை மாடி விருந்தாளிகளாக மாறிவிடும்.


நான் மேலே சொன்னது உங்கள் வீட்டில் தாவரங்கள் எதுவும் இல்லாத நிலையில் இது போன்ற முக்கோண வடிவ அமைப்பை பயன்படுத்தலாம்.
ஆனால் உங்கள் வீட்டில் தாவரங்களை வளர்க்க இடமிருந்தால், சில வகை தாவரங்களை நட்டு வளர்க்கலாம். செம்பருத்தி செடி, நந்தியாவட்டை, மணி பிளாண்ட் போன்றவைகள் உடனடியாக பறவைகளை ஈர்க்கும். குறிப்பாக அதிக இடமிருந்தால் கொய்யா மரங்களை நடுங்கள். இங்கு ஏராளமாக அணில்கள் வரும். சில நேரங்களில் நான் இது போன்ற மரங்களில் டெய்லர் பேர்டுகள் என்னும் தையல்பறவைள் கூடு கட்ட பார்த்திருக்கிறேன். முள்ளு முருங்கை மரம் கூட சில பறவைகளுக்கு வீடாக திகழ்கிறது.
இந்த சிறிய ரகமரங்களில் முளைக்கும் பூக்களில் கிடைக்கும் தேன் ருசியாக இருப்பதால் இந்த மரங்கள் பூக்க தொடங்கியவுடன் பறவைகள் எங்கிருந்தாலும் வந்து விடும். குறிப்பாக இந்த வகை மரங்களை தேடி புல்புல் தாரா, மைனா,குயில், சிறிய கிளிகள் போன்றவை வரும்.
தென்னை மரத்தை சார்ந்து வளரும் மணிபிளாண்ட் தாவரங்கள் என்றால் டெய்லர் பறவைகளுக்கு மகிழ்ச்சி. இந்த வகை தாவரங்களில் அவை அவ்வளவு அழகாக தங்கள் கூட்டை அமைத்துக் கொள்ளும்.
வீட்டில் வேப்ப மரம் இருந்தால் நிச்சயம் மரங்கொத்தி பறவைகளை பார்க்கலாம். மரங்கொத்திக்கு வேம்பு மரம் பிடித்தமானது. உயரமான மரங்கள் பறவைகளுக்கு மிகவும் பிடித்தமானவை என்கிறார்கள் பறவையியலாளர்கள். காரணம், உயரமான மரத்தில் உட்கார்ந்து கொண்டு தங்கள் இணையை தேடி பறக்க ஒரு வாய்ப்பாக இருக்கலமாம். அது தவிர தண்ணீர் இருக்கும் இடங்களை எளிதில் அடையாளம் காண முடிகிறது. இப்படி பல காரணங்கள் இருக்கின்றன.
ஆக...இன்றே தொடங்குங்கள் பறவை பார்த்தலை. நல்ல மொபைல் போன் இருந்தால் டெய்லர் பறவைகள் கூடு கட்டுவதை தொடர்ச்சியாக வீட்டில் இருந்தே படம் எடுக்க முடியும். அவை கூடு கட்டும் அழகே தனி தான். அடுத்த பதிவில் ஒவ்வொரு பறவை, அதன் இயல்பு, இறக்கை அமைப்பு என்று விலாவாரியாக பார்க்கலாம் நண்பர்களே!
நன்றி

காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today