இயற்கையை நேசிக்க உங்கள் குழந்தைக்கு கற்று கொடுத்த ஒரு சிறந்த அப்பாவாக நீங்கள் இருக்க ...
உங்கள் ஊரின் அருகில் இருக்கும் குளங்கள் அல்லது ஏரிகளையும் என்றாவது ரசித்திருக்கிறீர்களா? அந்த குளத்தில் உள்ள மீன்களை பிடிக்க மீன்கொத்திகள் வந்து காத்திருக்கும் அழகும், நீந்தி வரும் மீன்களை மிக அழகாக டைவ் அடித்து ஒரு மீனை கொத்திக் கொண்டு போகும் மீன் கொத்தியின் சுவாரசியமான விளையாட்டையும் கண்டதுண்டா?
பறவைகளின் உலகம் அழகானது அவற்றை போலவே!
தமிழ்நாட்டில் எத்தனையோ பறவைகள் இருந்திருக்கின்றன. ஆனால் பலவித காரணங்களால் இந்த பறவைகளை இன்றைக்கு பார்க்க முடிவதில்லை. பறவை பார்ப்பவர்கள் (Bird watchers) வெளிநாடுகளில் அதிகம் பேர் உள்ளனர். வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் ஒரு பறவையை பற்றி ஆராய 5 ஆண்டுகள் வரை செலவிடுகிறார்கள். ஆனால் நமது நாட்டில் இதுபற்றி யாரும் கண்டு கொள்வதே இல்லை. கோவை சூலூரில் வசிக்கும் பேராசிரியர் க.ரத்னம் எழுதியுள்ள தமிழ்நாட்டு பறவைகள் என்ற நூல் மட்டுமே தமிழகத்தில் காணப்பட்ட பறவைகள் பற்றி ஒரளவு தகவல்களை தருகிறது. இவரது பேட்டியை இங்கு தருகிறேன். உங்களுக்கு முடிந்தால் ஒரு நல்ல கேமிரா வாங்குங்கள். சனி,ஞாயிறு அன்று உங்கள் நண்பர்களுடன் அல்லது பள்ளியில் படிக்கும் உங்கள் குழந்தைகளை பறவை பார்க்க அழைத்து செல்லுங்கள். பார்க்கும் பறவைகளை கேமிராவில் படம் பிடித்து வாருங்கள். அது ஒரு இனிய பொழுது போக்கு.


இந்த பொழுது போக்கு பிற்காலத்தில் உங்கள் குழந்தையின் மிகச்சிறந்த பொழுது போக்காகவும் சாதனையாகவும் கூட மாறக்கூடும். அதே நேரத்தில் இயற்கையை நேசிக்கவும் உங்கள் குழந்தைக்கு கற்று கொடுத்த ஒரு சிறந்த அப்பாகவும் நீங்கள் இருக்க போகிறீர்கள்.
பேராசிரியர் ரத்னம் போல் தமிழ்நாட்டில அதிகமான பறவையியலாளர்கள் உருவாகவில்லை. காரணம், நமது பள்ளிகள் இயற்கையை நேசிக்க கற்றுக் கெர்டுப்பதில்லை. எப்பொழுதும் புத்தகம், மதிப்பெண்கள், கராத்தே, சிலம்பம்....இத்யாதிகள் தான். ஆனால் பறவைகளும், பூச்சிகளும் இல்லாமல் நாமும் இயற்கையோடு வாழ முடியாது. உலகின் மற்ற எல்லா நாடுகளையும் விட நமது நாட்டில் மிக அதிகமான பறவையினங்கள் இருக்கின்றன. ஆனால் அவை மெல்ல அழிந்து வருகின்றன.
பேராசிரியர் ரத்னம் ஒரு பேட்டியில் ' தமிழில் பறவை பெயர்களில் குழப்பங்கள் உள்ளன. தவிட்டு சிலம்பன் ஆங்கிலத்தில் காமன் பாப்லர் என்று அழைக்கப்படுகிறது. இது தமிழகத்துக்கு சற்றும் பொருத்தமில்லாதது. இந்த பறவையானது தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் தான் பரவலாக காணப்படுகிறது. அப்படி இருக்கும் போது இது எப்படி காமன்பாப்லர் என்று அழைக்கப்படலாம் என்கிறார். பெயின்டட் ஸ்டார்க் பறவைக்கு மஞ்சள் மூக்கு நாரை என்று சொல்லலாம். ஆனால் நெல்லை பகுதியில் இந்த பறவையை சங்கு வளை நாரை என்கிறார்கள். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பெயர் நிலவுவதால் ஒரு இடத்தில் ஒருவரிடம் ஒரு பறவையின் பெயரை சொல்லும் போது தெளிவாக அவற்றை அடையாளம் கண்டு கொள்ள முடிவதில்லை. இப்படி பறவை இனம் காணுவதில் ஏராளமான குழப்பங்கள் இருக்கின்றன.
தற்போது இளைஞர்களிடம் இயற்கை மீதான ஈடுபாடு அதிகரித்துள்ளது. மலையேற்றம், காடுகளில் டிரக்கிங் போக தொடங்கும் பழக்கம் வந்துள்ளது. இந்த பழக்கத்தை அவர்கள் பறவை பார்ப்பதில் ஈடுபாடு கொண்டதாக மாற்றிக் கொள்ள வேண்டும்' என்கிறார்.
அவரது இந்த பேட்டியை படித்தவுடன் 'பறவை பார்த்தல்' மற்றும் பறவைகளை அடையாளம் காணுதல் பற்றி ஒரு தனி பதிவு போட தோன்றியது. அதன் விளைவாக இந்த பதிவு.

முதலில் பறவை பார்த்தலுக்கு என்ன மாதிரியான அடிப்படை தேவை என்ன என்று பார்க்கும் முன் உங்கள் வீட்டு மொட்டை மாடிக்கோ அல்லது வீட்டு தோட்டத்திற்கோ பறவைகளை வரவழைக்க ஒரு உத்தியை கையாளுவது எப்படி என்று பார்க்கலாம். பிறகு பறவைகளின் படங்களையும் அவற்றின் பழக்கவழக்கங்களையும் பற்றி ஒவ்வொரு பதிவாக பார்க்கலாம்.

வீட்டுக்கு விருந்தாளியாக பறவைகள்
காலை உணவை முதலில் காக்கைகளுக்கு வைத்து விட்டு சாப்பிடுவது சிலரது வழக்கம். இது தான் நாமும் செய்ய போவது. காக்கைக்கு இட்லி, பால்சோறு, தோசை என்று எதையும் சாப்பிடும். ஆனால் மற்ற சிறிய குருவி ரக பறவைகள் இவற்றை சாப்பிடுவதில்லை. அவற்றின் ஆகாரம் சிறு தானியங்கள் தான். தினை,ராகி, கம்பு போன்றவற்றை விரும்பி சாப்பிடும்.
இந்த உணவு தானியங்களை வீட்டின் மொட்டை மாடியில் முக்கோண வடிவத்தில் மூன்று கம்புகள் போன்ற அமைப்பில் ஒரு மேல் தட்டை அடித்து பொருத்திய அமைப்பாக செய்து வைத்து விடவும். இந்த அமைப்பில் உள்ள தட்டில் இந்த சிறு தானியங்களை கொட்டி வைக்கவும். உங்கள் பகுதியில் காணப்படும் பறவைகள் மெல்ல மெல்ல இந்த உணவு தட்டின் பக்கமாக ஈர்க்கப்படும். பிறகு அவை தொடர்ச்சியாக உங்கள் வீட்டு மொட்டை மாடி விருந்தாளிகளாக மாறிவிடும்.


நான் மேலே சொன்னது உங்கள் வீட்டில் தாவரங்கள் எதுவும் இல்லாத நிலையில் இது போன்ற முக்கோண வடிவ அமைப்பை பயன்படுத்தலாம்.
ஆனால் உங்கள் வீட்டில் தாவரங்களை வளர்க்க இடமிருந்தால், சில வகை தாவரங்களை நட்டு வளர்க்கலாம். செம்பருத்தி செடி, நந்தியாவட்டை, மணி பிளாண்ட் போன்றவைகள் உடனடியாக பறவைகளை ஈர்க்கும். குறிப்பாக அதிக இடமிருந்தால் கொய்யா மரங்களை நடுங்கள். இங்கு ஏராளமாக அணில்கள் வரும். சில நேரங்களில் நான் இது போன்ற மரங்களில் டெய்லர் பேர்டுகள் என்னும் தையல்பறவைள் கூடு கட்ட பார்த்திருக்கிறேன். முள்ளு முருங்கை மரம் கூட சில பறவைகளுக்கு வீடாக திகழ்கிறது.
இந்த சிறிய ரகமரங்களில் முளைக்கும் பூக்களில் கிடைக்கும் தேன் ருசியாக இருப்பதால் இந்த மரங்கள் பூக்க தொடங்கியவுடன் பறவைகள் எங்கிருந்தாலும் வந்து விடும். குறிப்பாக இந்த வகை மரங்களை தேடி புல்புல் தாரா, மைனா,குயில், சிறிய கிளிகள் போன்றவை வரும்.
தென்னை மரத்தை சார்ந்து வளரும் மணிபிளாண்ட் தாவரங்கள் என்றால் டெய்லர் பறவைகளுக்கு மகிழ்ச்சி. இந்த வகை தாவரங்களில் அவை அவ்வளவு அழகாக தங்கள் கூட்டை அமைத்துக் கொள்ளும்.
வீட்டில் வேப்ப மரம் இருந்தால் நிச்சயம் மரங்கொத்தி பறவைகளை பார்க்கலாம். மரங்கொத்திக்கு வேம்பு மரம் பிடித்தமானது. உயரமான மரங்கள் பறவைகளுக்கு மிகவும் பிடித்தமானவை என்கிறார்கள் பறவையியலாளர்கள். காரணம், உயரமான மரத்தில் உட்கார்ந்து கொண்டு தங்கள் இணையை தேடி பறக்க ஒரு வாய்ப்பாக இருக்கலமாம். அது தவிர தண்ணீர் இருக்கும் இடங்களை எளிதில் அடையாளம் காண முடிகிறது. இப்படி பல காரணங்கள் இருக்கின்றன.
ஆக...இன்றே தொடங்குங்கள் பறவை பார்த்தலை. நல்ல மொபைல் போன் இருந்தால் டெய்லர் பறவைகள் கூடு கட்டுவதை தொடர்ச்சியாக வீட்டில் இருந்தே படம் எடுக்க முடியும். அவை கூடு கட்டும் அழகே தனி தான். அடுத்த பதிவில் ஒவ்வொரு பறவை, அதன் இயல்பு, இறக்கை அமைப்பு என்று விலாவாரியாக பார்க்கலாம் நண்பர்களே!
நன்றி

7 கருத்துகள்: (+add yours?)

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ரொம்ப நாளைக்கு அப்புறமா வந்துருக்கீங்க போல.....??

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நல்ல உபயோகமுள்ள பதிவு....

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

ஏங்க சிறந்த பெற்றோராக இருக்கன்னு ரெண்டு ஜெண்டருக்கும் பொதுவா வைங்களேன் தலைப்பை..:)

நல்ல இடுகை.. எங்கள்வீட்டில் குழந்தைகளைக்கொண்டு தான் அரிசி பருப்புக்களை குருவிக்கு பால்கனியில் போடவைப்பது ..

பெயரில்லா சொன்னது…

rompa nalla pathivu ..enakku puraa valarkka aasai ..engal veetil cat irukku .. koodu atta vali sollungal

கிரீன்இந்தியா சொன்னது…

நன்றி மனோ நாஞ்சில்..கொஞ்சம் வேலை பளு.
வர இயலவில்லை.
நன்றி.

அன்புடன் அருணா சொன்னது…

பூங்கொத்து!

துளசி கோபால் சொன்னது…

நல்ல பதிவு.


அப்பாகவும் = அப்பாவாகவும்

அப்படியே ஒரு வாய் அகன்ற சட்டி அல்லது பாத்திரத்தில் தண்ணீரும் வைக்கவும்.

எங்க வீட்டில் இருக்கும் Birds Bath இல் குருவிகள் வந்து குளித்துப்போவது அருமையான காட்சி

காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today