தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் நிலத்தடியில் கிடைக்கும் தண்ணீரில் 72 சதவீதம் நீர் குடிக்க இயலாதது

2 கருத்துகள்

 இன்று உலக தண்ணீர் தினம்தமிழகத்தின்பல்வேறு இடங்களில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு மழை கொட்டி தீர்த்தது. பல இடங்களில் மழை நீர் வழிய வழி இல்லாமல் தெருக்களில் ஓடியது. சில இடங்கள் தனித்து விடப்பட்ட நிலையில் தீவுகள் போல் காட்சியளித்தன. அடுத்த சில நாட்களில் வழக்கம் போல் மாநகராட்சி குழாயில் தண்ணீருக்காக வழக்கதான சண்டை. சாதாரணமாக தண்ணீருக்காக இப்படி நாம் அடிக்கடி காணும் சண்டை இன்னும் சில ஆண்டுகளில் தண்ணீரை பெறுவதற்கான உலக நாடுகளுக்கு இடையேயான சண்டையாக மாறலாம்.

உலகின் தண்ணீர் பற்றாக்குறை பற்றி ஆய்வு செய்து வரும் உலகளாவிய அமைப்புகள் மூன்றாம் உலக போர் மூளுவதாக இருந்தால் அது தண்ணீருக்காக தான் இருக்கும் என்று எச்சரித்துள்ளன. இந்த நிலையில் மதுரையை சேர்ந்த ஆய்வாளர் கே.என்.என்.ராஜன் தமிழ்நாட்டின் தண்ணீர்பிரச்சனையும், தீர்வும் என்ற தலைப்பில் தமிழகத்தின் தண்ணீர் பற்றாக்குறை பற்றி ஆய்வு செய்துள்ளார். தமிழகம் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் நிலையை எட்டுவதற்குள் தண்ணீரை சேமிக்கும் வழிகளை கையாண்டு தக்க வழி தேடி கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறார் அவர்...இதோ அவர் சொல்வதை பார்ப்போம்.

" தமிழ்நாடு புவியியல் அமைப்புபடி தண்ணீர் பற்றாக்குறையுள்ள நில அமைப்பை கொண்டிருக்கிறது. தென்மேற்கு பருவ மழை, வட கிழக்கு பருவ மழை ஆகிய இரண்டு பருவங்களிலும் பெய்யும் மழை நீர் மற்ற தென்மாநிலங்களில் கிடைப்பதை விட தமிழகத்தில் குறைவாகவே கிடைக்கிறது. இந்த காரணத்தால் தான் மன்னர் காலத்திலிருந்து கிடைக்கும் தண்ணீரை நீர் ஆதாரங்கள் மூலம் சேமித்து பயன்படுத்தியிருக்கிறார்கள். ஊற்று, குட்டை, நீராவி, கேணி, கிணறு, ஓடை, தெப்பம், வாய்க்கால், குளம், ஏந்தல், ஏரி என்று நீர் ஆதாரங்களை உருவாக்கி பயன்படுத்தினார்கள். தண்ணீரை அவர்கள் பொக்கிஷமாக கருதினார்கள். ஆனால் இன்றைக்கு மக்கள் தொகை பெருகியுள்ள சூழலில் நீர் ஆதாரங்களில் நீர் குறைந்து வருவதால் பற்றாக்குறை மெதுவாக உயர்ந்து வருகிறது.

1000 கனஅடிக்கு குறைவாக நீர் கிடைக்கும் பகுதிகளை தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பகுதியாக உலகவங்கி அறிவித்திருக்கிறது. ஆனால் இந்தியாவில் சராசரியாக தனிநபருக்கு கிடைக்கும் தண்ணிரின் அளவு 2300 கனஅடி.  அதிலும் தமிழ்நாட்டில் தனிநபருக்கு கிடைக்கும் தண்ணீரின் அளவு வெறும் 750 கனஅடி. இதை பார்த்தால் தமிழ்நாடு மிகுந்த கவனத்துடன் நடவடிக்கை எடுத்து தண்ணீரை சேமிப்பதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தமிழ்நாடு முழுவதும் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்படக் கூடிய சூழ்நிலை ஏற்படும். தனிநபரின் அன்றாட அத்தியாவசிய பயன்பாட்டுக்கான தண்ணீர் தேவையை கூட ஈடுகட்ட முடியாத நிலை ஏற்படும்.

 தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பெய்யும் மழை மற்றும் ஆறு வழியாக கிடைக்கும் தண்ணீரின் அளவு 1240 டி.எம்.சி. ஆனால் இதில் வெறும் 58 டி.எம்.சி தண்ணீர் தான் குடிநீருக்காக பயன்படுகிறது. சரியான திட்டமிடல் இல்லாததால் மழைக்காலங்களில் கிடைக்கும் 50 சதவீத தண்ணீர் வீணாக கடலில் சென்று கலந்து விடுகிறது. நதிகளின் எல்லைப் பரப்பை மீறி பெருக்கெடுக்கும் வெள்ளத்தால் 7,563 எக்டர் நிலப்பரப்பு பாதிப்புக்கு உள்ளாகிறது. இது இப்படியிருக்க தண்ணீர் பற்றாக்குறை உள்ள காலங்களில் 5,112 மில்லியன் எக்டர்கள் பாதிப்புக்குள்ளாகிறது. இப்படி எதிர்மறையாக பல விளைவுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இப்படி பார்ப்போம். நமது வீட்டுக்குழாயில் ஒரு சொட்டு நீர் வீணாக விழுந்து கொண்டே இருந்தால் நாளன்றுக்கு 60 லிட்டர் நீரும், ஒரு மாதத்திற்கு 1800 லிட்டர் நீரும் வீணாகிறது. பொதுவாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் என்பது மக்களின் அத்தியாவசிய தேவை. ஆனால் இந்தியாவில் 12 மில்லியன் மக்கள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் இல்லாமல் தவிக்கிறார்கள். இந்த எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பிருக்கிறது. காரணம், நமது நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மேற்கத்திய முறை கழிப்பறைகளின் மூலம் மட்டும் நாளன்றுக்கு பல லட்சம் லிட்டர் நீர் வீணாக கழிப்பறையில் கொட்டப்படுகிறது. இது நிலத்தடி நீராகவும் இருக்கலாம். பாதுகாக்கப்பட்டு அனுப்பப்பட்ட குடிநீராகவும் இருக்கலாம்.
தண்ணீர் தானே என்று அலட்சியம் செய்யக்கூடாது என்று சொல்வதிலும், மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காக இருக்கும் என்றும் சொல்வதில் உள்ள அபாயகரமான உண்மைகளை அனைவரும் புரிந்து கொள்வதற்கான கால கட்டம் இது.

ஏனென்றால் இந்த பூமியில் குடிப்பதற்காக கிடைக்கும் தண்ணீரின் அளவு என்பது மிகமிக குறைவு. பூமியில் கிடைக்கும் தூய நீரின் அளவு 36 மில்லியன் கன கிலோ மீட்டர்கள் தான். அதாவது இந்த பூமியில் ஒரு குவளை அளவு தண்ணீர் தான் நிரம்பியிருப்பதாக வைத்துக் கொண்டால், நமக்கு உபயோகப்படுத்தும் அளவு உள்ள தண்ணீர் என்பது ஒரு தேக்கரண்டி அளவு தான்.

2025 ம் ஆண்டில் உலக அளவில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் மிகக் கடுமையான தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்படுவார்கள் என்று பல அமைப்புகள் எச்சரித்துள்ளன. சுத்தமான குடிநீர் கிடைக்காத நிலையில் ஏழைநாடுகளில் 80 சதவீத நோய் பாதிப்பு ஏற்படும். வேறு வழியில்லாமல் அசுத்த நீரை குடிக்க தொடங்கும் போது நீரினால் உருவாகும் நோய்களால் இறப்பும் அதிகரிக்கும்.
தற்போது கிராமப்புற மக்களின் குடிநீர் தேவைக்காக 90 சதவீதம், விவசாயத்திற்காக 40 விழுக்காடும் நிலத்தடி நீரே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த நிலத்தடி நீரும் தமிழ்நாட்டின் பல இடங்களில் குறைந்து வருவதை பார்க்க முடிகிறது.

நீர்வள நிர்வாகம் சரியாக சரியான முறையில் செயல்படுத்தபடாவிட்டால் 2025 ஆம் ஆண்டில் நீர்த்தேக்கங்களில் உள்ள நிலத்தடி நீர் முற்றிலுமாக வறண்டு போகும் என்று மத்திய நிலத்தடி நீர் வாரியம் எச்சரித்துள்ளது. இப்படி வறண்டு போனால் எந்த போர்வெல் கிணற்றிலும் தண்ணீர் இருக்காது என்பது நிச்சயம். தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 73 சதவீதம் கடினப்பாறைப் பகுதி. 27 சதவீதம் வண்டல் மண் பகுதி. இந்த வண்டல் மண் தான் நிலத்தடி நீரை தேக்கி வைக்கும் தன்மை கொண்டது. அதிலும் 30 சதவீதம் தான் சேமிக்கும். அதாவது வண்டல் மண் நிலத்தில் 100 லிட்டர் தண்ணீர் மழையாக பெய்தால், 30 லிட்டர் நீர் மட்டுமே நிலத்தடியில் தங்கியிருக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள நீர் ஆதாரங்கள், அதாவது நமக்கு குடிநீருக்கு என்று ஏற்படுத்தப்பட்டிருக்கும் குடிநீர் திட்டங்கள் அனைத்தும் தமிழகத்தில் ஓடும் ஆறுகள் மூலம் கிடைக்கும் தண்ணீர், ஆறுகளின் மேற்பரப்பில் காணப்படும் நீர் மற்றும் நிலத்தடி நீரை மட்டுமே நம்பியிருக்கின்றன. இந்த நிலையில் மழை நீர் சேமிக்கப்படாமல் போனாலும், நிலத்தடி நீரை பாதுகாக்க தவறினாலும் என்ன நடக்கும் என்பதை நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது.

மின்சாரம் இல்லாவிட்டால் கூட வேறு வழிகளில் சமாளித்து விடலாம். ஆனால் இயற்கை தந்த கொடையான நீரை செயற்கையாக உருவாக்க முடியாது. மேலும் என்னதான் கடல் நீரை குடிநீராக மாற்றினாலும் அதன் விளைவுகள் என்ன என்பதை எதிர்காலத்தில் தெரிந்து கொள்ள முடியும்.

எனவே இனிவருங்காலங்களில் இப்போது கிடைத்துக் கொண்டிருக்கும் மழை நீரை ஒரு துளி விடாமல் எப்படி சேமிப்பது மற்றும் எந்தக்காலத்திலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க ஆறுகளை இணைப்பது, மழை பொழிய காரணமான காடுகளின் பரப்பளவை காப்பாற்றுவது உள்ளிட்ட விஷயங்களில் கவனமாக செயல்பட வேண்டிய நடவடிக்கைகளை உடனே தொடங்க வேண்டியது அவசியம்" என்கிறார் இவர்.


தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் பயனற்றதாகிறது?
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் நிலத்தடியில் கிடைக்கும் தண்ணீரில் 72 சதவீதம் நீர் குடிக்க இயலாதது என்றும் 21 மாவட்டங்களில் உள்ள நிலத்தடி நீர் அபாய எல்லைக்குள் சென்று விட்டதாகவும் பொதுப்பணித்துறையே அறிவித்துள்ளது. மதுரை, ராமநாதபுரம்,நெல்லை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கிடைக்கும் நிலத்தடி நீரில் 30 சதவீதம் அளவு குடிக்க இலாயக்கில்லாத நீராக கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் உள்ள நிலத்தடி நீர் படுமோசமான நீராக  இருப்பது தெரியவந்துள்ளது. இது போன்ற இடங்களில் 70 சதவீதம் அளவு குடிக்க லாயக்கற்ற நீராக இருக்கிறது. இது போன்ற தன்மைக்கு காரணம், இந்த இடங்களில் உள்ள நீரில் இரும்புச் சத்து அதிகம் கலந்திருப்பது தான்.

இரத்தத்தில் பிராணவாயுவை கொண்டு செல்லும் அளவை குறைத்து உடல் நலனை மோசமாக்கும் நைட்ரேட் என்ற வேதிப்பொருள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சில இடங்களில் உள்ள நிலத்தடி நீரில் காணப்படுகிறது. திருச்சி, கோயம்புத்தூர், வேலூர், ஈரோடு மாவட்டங்கள் மற்றும் இதனை சுற்றியுள்ள இடங்களிலும் இதே நிலை தான்.
பற்கள் பாதிக்கப்பட்டு எலும்புகள் முறுக்கிக் கொள்ளும் நிலையை உருவாக்கும் புளோரைடு என்ற ரசாயனம் மதுரை, விருதுநகர், சிவகங்கை, நெல்லை, தேனி, சேலம், ஈரோடு, கன்னியாகுமரி, கோயம்புத்தூர். திருவண்ணாமலை, திருவாரூர் உள்ளிட்ட பல நகரங்களின் நிலத்தடி நீரில் எச்சரிக்கப்பட்ட அளவுக்கும் மேல் இருக்கிறது. இது போன்ற ஒரு நிலை ஏற்படக்காரணம், நிலத்தடி நீர் ஆதாரங்களாக கருதப்படும் நீர் தேக்கங்களான ஆறுகள் , நதிகளின் மேல்புறத்தில் கொட்டப்படும் பல்வேறு கழிவுகள் தான்.

தலைநகரமான சென்னையில் நாளன்றுக்கு 3500 டன் கழிவுகள்( மாநகராட்சி பகுதிக்குள் வரும் குப்பை) உருவாகிறது. இதற்கடுத்து மதுரையில் நாளன்றுக்கு 711 டன் குப்பை உருவாகிறது. வைகை ஆறு அறிவிக்கப்படாத குப்பை கிடங்காக இருப்பது கண்கூடான விஷயம். இதன் மேற்பரப்பில் எந்த கழிவு விழுகிறதோ...அதன் சாறுகள் தான் நிலத்தடி நீரில் கலந்து வெளிவரும் என்பது கவனிக்க வேண்டிய விஷயம். எனவே, தவித்த வாய்க்கு தண்ணீர் தரும் ஆறுகளை காப்பாற்றுவது ஒவ்வொரு ஊரின் நீர் ஆதாரத்தை நம்பி வாழும் மக்களின் கடமை.

தண்ணீர் சேமிப்பு உடனடி அவசியம்.


விண்ணிலிருந்து விழும் ஒரு சொட்டு தண்ணீரை கூட கடலுக்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினால் தமிழ்நாட்டின் தண்ணீர் தேவையை வருங்காலத்தில் ஒரளவு ஈடு கட்டி விட முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். தமிழகத்தின் பெய்யும் மழை மூலம் கடலுக்கு சென்று கலக்கும் நீரின் அளவு 170 டி.எம்.சி என்கிறார் தமிழக பொதுப்பணித்துறை தலைவர் ராமன். எனவே கடலுக்குள் மழை நீர் செல்வதை தடுக்க கடலோரத்தில் இருந்து 30-40 கி.மீ முன்னதாக தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும்.

இது தவிர தமிழகத்தில் நதிநீர் இணைப்பு விரைவு படுத்தப்பட்டால், இன்னொரு காவிரி நீர் ஓடும் அளவுக்கு தண்ணீர் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக காவிரி, வைகை, குண்டாறு இவற்றை இணைக்க முடியும். இதற்கான கால்வாயின் நீளம் 255 கி.மீ. திட்ட செலவு ரூ.2673 கோடி. இதனால் 3.38 லட்சம் எக்டர் பரப்பு பாசனம் பெறும். தற்போது தமிழக அரசு தமிழக நதிகள் இணைப்புக்கான முயற்சியை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தவிர ஆங்காங்கே பெய்யும் மழை நீர் பூமிக்கடியில் செல்லும் வகையில் நெடுஞ்சாலைகளில் 40 மீட்டர் இடைவெளியில் 1 மீட்டர் ஆழத்திற்கு குழி தோண்டி குழாய்கள் அமைக்கப்பட்டு அதில் உடைந்த கற்களை போட்டு நிரப்பலாம்.
நீராதாரத்தின் அடிப்படையில் காடுகள் உள்ளன. மழையை உருவாக்குவது, பெறுவது, தேக்குவது மற்றும் மண் அரிப்பை தடுப்பது என்று நீர் நிர்வாகத்தின் அடிப்படையை இயற்கை தானாகவே செய்கிறது. எனவே காடுகள் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே நீர்வளங்களை காக்கும் அந்தந்த உள்நாட்டு மரங்கள் காடுகளில் செழித்து வளர வழி செய்ய வேண்டும்.
ஆறுகளின் நீர் சேகரிப்பு இடங்களை சுற்றி குறைந்த பட்சம் 500 மீட்டர் தூரத்திற்கு மணல் எடுக்கப்படுவது கூடாது.

காடுகள், மலைகளிலிருந்து இயற்கையாகவே தண்ணீர் வழிந்து ஒடிவரும் வழிகளை கண்டறிந்து அந்த வழிகளில் எந்த ஆக்கிரமிப்பும் ஏற்படுத்தப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.
மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை மிகச்சிறந்த முறையில் மறுசுழற்சி செய்து விட்டால் அந்த நீரை விவசாயத்திற்கு பயன்படுத்தலாம். இதனால் விவசாயத்திற்கு நிலத்தடி நீர் எடுக்கபடு வது குறையும்.

இப்படி பல்வேறு வழிகளில் தண்ணீர் சேமிக்கும் முறைகளை கே.என்.என்.ராஜன் தனது ஆய்வில் கூறியுள்ளார். தண்ணீர் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு ஆக்கப்பூர்வமாக எதையாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இவரை தொடர்பு கொண்டு( 94438 30146) தண்ணீர் சேமிப்பு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் தொடர்பான விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.

தனியொரு குருவிக்கு உணவில்லை எனில்.....?

2 கருத்துகள்வீட்டில் சாப்பிட உணவு இல்லை. ஆனால் வீட்டு வாசலில் வந்து குக்கூ பாடிய குருவிக்கு அரிசியை தூவி வயிற்றை நிறைத்தான் மீசை கவிஞன் பாரதி. இயற்கையின் அதிசயங்களில் ஒன்றான குருவி முன்பெல்லாம் வீடுகளில் வந்து கூடு கட்டும். வீட்டில் சட்னிக்கு உடைக்கும் தேங்காய் நார்களை எங்கிருந்தோ எடுத்து வந்து அவ்வளவு அழகான பஞ்சு மெத்தையை தனக்கு பிறக்க போகும் குழந்தைக்காக தயார்படுத்தும்.

பிறகு அதில் முட்டையிடும். ஒரு அழகான குஞ்சை ஈன்று விட்டு கொஞ்ச காலம் அந்த குஞ்சுக்கு புழு, பூச்சிகளை உணவாக அளிக்கும். குஞ்சு வளர்ந்தவுடன் அதை இந்த உலகத்தில் சுதந்திரமாக விட்டு விட்டு பறந்து விடும். வீடுகளில் குருவிகள் கூடு கட்டினால் நல்ல சகுனம் என்பார்கள் தமிழ் மக்கள்.

ஆனால் இன்றைக்கு....சிட்டு குருவிகளா? அவை எப்படி இருக்கும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறது குழந்தைகள் உலகம். வெறும் ஏடுகளில் தான் குருவியின் படத்தை பார்க்க முடிகிறது. நகரமயமாக்கலின் தாக்கத்தால் குருவிகள் நகரங்களை விட்டு தாண்டி போய்விட்டன. வெளிக்காற்றோ, சிறிய பூச்சிகளோ கூட வீட்டிற்குள் வராத அளவுக்கு மனிதர்கள் பாதுகாப்பாக வீடுகளை கட்டுவதால் குருவிகள் வீடுகளுக்குள் வந்து கூடுகட்ட முடிவதில்லை. குறிப்பாக நகரங்களில் பெருகி வரும் போக்குவரத்தின் தாக்கம் குருவிகளின் குலம் பெருகி விடாமல் அழித்து வருகிறது. அதிகரித்து வரும் வாகனங்களின் எரிபொருளான பெட்ரோலில் இருந்து வெளியேறும் மீத்தைல் நைட்ரேட் என்னும் நச்சு வாயு சிட்டுக்குருவிகளின் கருவை அழித்து விடுகிறது என்கிறது ஆய்வுகள்.

தனது பெண் துணையை நினைத்த போதெல்லாம் புணர்ந்து தனது வாரிசுகளை உருவாக்குவதில் சிட்டுக்குருவிகளுக்கு நிகர் வேறு எதுவும் இல்லை. இந்த காரணத்தால் தான் சிட்டுக்குருவிகளை கொன்று லேகியம் சாப்பிட்டால் தனக்கும் இப்படி அபார சக்தி வந்து விடும் என்று கருதி தனது இயலாமையை நிவர்த்தி செய்ய சிட்டுக்குருவிகளை பலியாக்கி லேகியம் தயாரித்தான் மனிதன்.
 இப்போது மனிதனின் வாகனங்கள் சப்தமில்லாமல் இந்த குருவிகளின் கருவை அழித்து வருகின்றன. அதாவது குருவிகளின் உணவான புழு, பூச்சிகளை இந்த மீத்தைல் நைட்ரேட்டுகள் அழித்து விடுவதால் குருவிகளுக்கு உணவு இல்லாமல் போய் விடுகிறது.

முன்பெல்லாம் பலசரக்கு கடைகளில் தானியங்களை பொட்டலங்களில் மடித்து தருவார்கள். அந்த பொட்டலங்களை வாங்கி செல்லும் மனிதர்கள் சிறிய அளவில் அந்த தானியங்களை ரோடுகளில் சிதறவிடுவார்கள். இப்படி சிதறிவிடப்பட்ட தானியங்களை இந்த சிட்டுகுருவிகள் காத்திருந்து சாப்பிட்டு பசியாறும். ஆனால் இப்பொழுது பெரிய பெரிய மால்களில் இந்த தானியங்கள் எல்லாம் கொஞ்சம் கூட சிந்தாமல் சிதறாமல் இருக்கும் படிக்கு அடைக்கப்பட்ட பாக்கெட்டுகளில் விற்கப்படுகின்றன. ஆக..குருவிகள் ரோடுகளில் இறைக்கப்படும் தானியங்களுக்காக காத்திருந்து ஏமாந்து போகின்றன.

இது தவிர முன்பெல்லாம் வயல்களில் சாணங்களை கொட்டி இயற்கை உரமாக மாற்றி விவசாயம் செய்வார்கள். அந்த சாணக்குவியலில் புழுக்கள் உயிர் பெற்று வரும். அந்த புழுக்களை குருவிகள் கொத்தி தின்னும். அதாவது செடிக்கு உரம், செடியை பாதிக்கும் புழு குருவிக்கு உணவு. ஆக..மனிதன் நேர்த்தியாக விவசாயம் செய்தான். இன்றைக்கு அதுவும் இல்லை. எங்குபார்த்தாலும் செயற்கை உரம். இதனால் குருவிகளுக்கு சாணக்குவியலில் கிடைத்த புழுவும் இல்லாமல் போனது.

இது தவிர தற்போது, நகரங்களில் வைக்கப்படும் மொபைல் போன் டவர்களின் கதிர்வீச்சு தாக்கமானது குருவிகளில் வழி தேடி போகும் தன்மையை குழப்பத்திற்கு உள்ளாக்குவதாக தெரியவந்துள்ளது. இதனாலும் குருவிகள் மொபைல் போன் டவர்கள் இருக்கும் திசைக்கு வருவதில்லை. இப்படி ஒட்டு மொத்தத்தில் குருவிகள் மனிதர்களை விட்டு விலகி போய்க்கொண்டே இருக்கின்றன.

அழகான சிட்டுக்குருவிகளின் கீச்..கீச் ஒலியை இனி எங்கு போய் கேட்பது? தனக்கு சாப்பிட உணவில்லை என்ற போதும், வீட்டிலிருந்த சிறிய அளவு அரிசியை எடுத்து குருவிக்கு போட்டு அந்த சின்னஞ்சிறு சிட்டுகளில் வயிற்றை நிரப்பினான் பாரதி. அவன் சொன்ன கவிதையை இனி நாம்...இப்படி சொல்வோம். " தனி ஒரு குருவிக்கு உணவில்லை எனில்..........? அதைப்பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும் என்பது தானே இன்றைய மனித சமுகத்தின் சிந்தனை? இன்று உலக சிட்டுக்குருவி தினம். குருவிகளை சற்று நினைவு கூர்வோம்.

வெயிலின் கொடுமையை சமாளிக்க மூங்கில் காட்டன் கலந்து நெய்யப்பட்ட சேலைகள்

1 கருத்துகள்புல்லாங்குழலின் இசையால் மயங்காதவர்கள் இருக்க முடியாது. கோகுலத்து கண்ணனின் கையிலும் தவழுவது புல்லாங்குழலே. இயற்கையின் அதிசயமான மூங்கில் மரத்தை எடுத்து அதில் சிறிய துளைகள் இட்டால் அசத்தும் ராகத்தை அது எழுப்புகிறது. மூங்கில் மனிதனுக்கு பல பயன்களை தருகிறது. தற்போது பணக்காரர்கள் உருவாக்கும் பண்ணை வீடுகள் பல மூங்கிலை பிரதானமாக வைத்தே கட்டப்படுகிறது.

இளம்பச்சை நிறத்தில் பார்க்க ரம்மியமாக காட்சி தரும் மூங்கில் தற்போது பெண்கள் உடுத்தும் சேலையாக மாறியிருக்கிறது. மூங்கிலை எப்படி சேலையாக கட்ட முடியும்? முடியும் என்று நிருபித்திருக்கிறார்கள்.
ஏற்கனவே எனது பேப்பர் ஜுவல்லரி தயாரிக்கும் சென்னை ஸ்ரீகீர்த்தி பேஷன் பொட்டீக் பற்றி எழுதியிருந்தேன்.

http://greenindiafoundation.blogspot.com/2011/03/blog-post_03.html
முழுவதும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பேஷன் பொருட்களை மட்டுமே தயாரித்தும், வாங்கியும் விற்பனை செய்யும் இந்த நிறுவனத்தின் மற்றுமொரு தயாரிப்பு தான் மூங்கில்+காட்டன், வாழை நார்+ காட்டன் கலந்த சேலைகள், இயற்கை சாயத்தால் உருவாக்கப்பட்ட பெண்களுக்கான டாப்ஸ் மற்றும் ஆண்களுக்கான நவீன சட்டைகள். பார்க்க மிகவும் அழகாகவும், மிகவும் எடை குறைவாகவும் இருக்கும் இந்த ஆடைகள் நம்மை அசத்துகின்றன.


தற்போது தொடங்கியிருக்கும் வெயிலின் கொடுமையை சமாளிக்க இந்த ஆடைகளை நீங்கள் தேர்வு செய்யலாம். குறிப்பாக மூங்கில் காட்டன் கலந்து நெய்யப்பட்ட சேலைகள் மிகவும் ரம்மியமாக இருக்கின்றன.  இது போல் வாழை நாரும் காட்டனும் கலந்து நெசவு செய்யப்பட்ட சேலைகளும் மனதை கொள்ளை கொள்ளுகின்றன.

நாம் வழக்கமாக உபயோகிக்கும் பாலியஸ்டர் உடைகள் சுற்றுச்சூழலை வெப்பமாக்கி வருகின்றன என்கிறார்கள். எனவே இந்த பாலியஸ்டர் மற்றும் நைலான் உடைகளின் பயன்பாட்டை குறைத்து இது போன்ற ஆடைகளையும் தேர்வு செய்வோமே!
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள இந்த ஷோரூம் எண்-
99624 00820, 99623 00820

 உங்கள் பார்வைக்காக இங்கே சில மூங்கில், வாழை நார் மற்றும் காட்டன் கலந்த சேலை மற்றும் இயற்கை சாயத்தில் தோய்த்து தயாரிக்கப்பட்ட டாப்ஸ்களின் மாடல்கள்.....

சணலில் பல அதிசயம்-நீங்களும் பயன்படுத்தி பார்க்கலாமே!

1 கருத்துகள்சணலை வைத்து பெரிதாக என்ன செய்து விட முடியும்? மிஞ்சிப் போனால் பொட்டுக்கடலை மடிக்க முடியும் என்பது தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்த நிலை. தற்போது சுற்றுச்சூழலை காக்க மனிதனின் முயற்சிகள் ஒவ்வொன்றும் புதிய புதிய சூழலுக்கு உகந்த பொருட்களை கண்டுபிடிப்பதில் தாவுகிறது. தமிழ்நாட்டின் பல இடங்களில் தற்போது பாலித்தீன் பைகளுக்கு தடைவிதித்திருக்கிறார்கள்.

காரணம், பாலித்தீன் இந்த பூமிப்பந்தில் மக்கி போகாமல் பல கெடுதல்களை விளைவிக்கிறது. ஆனால் மழை பெய்யும் போது இயற்கையாகவே பூமியில் விழும் தண்ணீரானது மீண்டும் பூமிப்பந்துக்குள் செல்கிறது. இப்படி போகும் மழைநீரை பூமிக்குள் இறங்க விடாமல் தடுப்பது எதுதெரியுமா?பாலித்தீன்பைகள் தான். 
பாலித்தீன் பைகள் அதிகரித்தால் பூமிக்குள் தண்ணீர் செல்லாமல் பூமியின் நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்கு போய் விடும். இதுவரை தெரிந்தோ தெரியாமலோ பாலித்தீன் பைகளை பயன்படுத்தி விட்டோம். இனி வருங்காலங்களில் இதன்பயன்பாட்டை குறைக்க முயல்வோம்.

சரி...பாலித்தீன் பைகளுக்கு மாற்று தான் என்ன?
மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கைவினைப்பொருட்கள் விலையும் ஒரளவு கட்டுப்படியாகும் படி தான் இருக்கிறது.காய்கறி வாங்க உதவும் சிறிய பைகள், டிபன் பாக்ஸ் வைக்க, மொபைல் போன் வைக்க, அலுவலக பைல்களை வைக்க, மார்க்கெட்டிங் எக்சிகியூட்டிவ்ஸ் பயன்படுத்த என்று விதவிதமான சணலால் ஆன பொருட்களை வடிவமைத்து விற்பனை செய்து வருகிறார்கள்.


நீங்கள் இவற்றை வாங்கி பயன்படுத்தி சுற்றுசூழலுக்கு சிறிய பங்களிப்பை தரலாமே!இவற்றை வாங்க விரும்பினால் jayanthibalakrishnan@yahoo.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம்.

வீட்டுக்கு ஒரு பிள்ளை வைத்தால் பயன்கள் தான் எத்தனையோ!!!

4 கருத்துகள்


வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்...இப்படி தமிழ்நாட்டின் சாலைகளில் ஓடும் லாரிகளின் பின்புற தகட்டில் எழுதி வைத்திருப்பார்கள். மக்களை மரம் வளர்க்க தூண்டுவதற்கு இது உதவுமாம். (வேற என்னத்த சொல்ல கேட்டுக் கொள்ள வேண்டியது தான்). கோடிக்கணக்கில் செலவழித்து எத்தனையோ இலவசங்களை வழங்குகிறார்கள். இது போல் மரங்களை வாரி வழங்கியிருந்தால் இந்நேரம் தமிழ்நாடு மிகப்பெரிய மழைக்காடு நிறைந்த மாநிலமாக மாறியிருக்கும்.

ஆனால் யாரும் செய்யவில்லை. என்ன செய்வது?
இது இருந்து விட்டு போகட்டும். உங்களால் முடிந்தால், உங்கள் வீட்டில் சிறிய அளவு இடம் இருந்தால் போதும். ஒரு தென்னங்கற்றை நடவு செய்யுங்கள்.
அது உங்களுக்கு ஏராளமானவற்றை இலவசமாக வாரி வழங்கும். இது பற்றி பார்க்கலாம். இளநீர், தேங்காய், வீட்டு மொட்டை மாடியில் கூரையால் ஆன குளு குளு அறை, வீட்டை சுத்தம் செய்ய துடைப்பம், தலைக்கு தடவ எண்ணெய், தேங்காய் துருவல், வீட்டில் செடிகள் வளர்க்க கொடிப்பந்தல் அமைக்க கம்புகள் இப்படி தென்னையை பற்றி சொல்லிக் சொல்லிக் கொண்டே போகலாம்.

சரி...வீட்டில் தென்னை மரத்தை நட சிலருக்கு தயக்கமாக இருக்கும். காரணம், தென்னையின் வேர்கள் கட்டிடத்தை ஊடுருவி விடும் என்று பயப்படுவதுண்டு. இது போன்ற ஏராளமான சந்தேகங்கள் பலருக்கும் உண்டு. தென்னை ஆராய்ச்சியாளர்கள் தென்னை வளர்ப்பது பற்றி என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்து கொண்டால் தென்னை பற்றிய உங்கள் சந்தேகம் எல்லாம் தீரும். இதோ...

" தென்னைமரத்தை வீட்டில் வளர்த்தால் அதன் வேர் கட்டிடத்தின் அஸ்திவாரத்தில் ஊடுருவி விரிசல்களை ஏற்படுத்தும் என்ற பயம் தான் தென்னையை வீடுகளில் வைக்க பலரும் தயங்குவதற்கு காரணம். ஆனால் உண்மை அதுவல்ல. தென்னை மரம் பார்க்க தான் கடினமாக உள்ளதே தவிர, அதன் வேர்கள் சாதாரண சல்லி வேர் வகைளை சேர்ந்தது. இந்த வேர்கள் கொத்துகொத்தாக இருக்கும். பூமியின் ஆழத்தை நோக்கி போகாது. கிடைமட்டமாக 100 அடி தூரம் வரை செல்லக்கூடியது. இது கடினமான பாறை பகுதியை குடைந்து செல்லக்கூடிய அளவுக்கு பலம் வாய்ந்தது என்று சொல்ல முடியாது. எனவே கட்டிடத்தின் கட்டுமானத்தை ஊடுருவி சிதைத்து விடும் என்றெல்லாம் பயப்பட தேவையில்லை.

பொதுவாக தென்னம் பிள்ளையை வீடுகளில் நடும் போது வீட்டின் சுவர் மற்றும் காம்பவுண்ட் சுவரிலிருந்து 6 அடி இடைவெளி விட்டு மரக்கன்றை நட வேண்டும். இதனால் வீட்டின் சுவர் பாதிக்கப்படுவதில்லை.
இரண்டரை முதல் மூன்று அடி நீள, அகல, ஆழத்தில் குழி தோண்டி சிறிது காலம் அதனை ஆற விட்டு பிறகு தான் மரத்தை நடவேண்டும். அப்படி நடும் முன் வீடுகளில் வீணாகும் காய்கறி கழிவுகளை இந்த குழியில் போட்டு மக்க செய்து உரமாக மாற்றி விடலாம். பிறகு கன்றை நடலாம்.

தென்னை நன்றாக காய்க்க தழைச்சத்து, மணிச்சத்து, சோடியம், கால்சியம் போன்ற சத்துகள் அதிகம் தேவைப்படும். பொதுவாக மண்ணில் எல்லாசத்துகளும் இருக்கிறது. தென்னையை நடும் முன் மண் மாதிரி எடுத்து அதனை மண்பரிசோதனைக்கூடத்தில் கொடுத்தால், அந்த மண்ணில் என்ன மாதிரியான சத்துகள் உள்ளது என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.

மழை பெய்யும் காலங்களில் ஏற்படும் இடி, மின்னலின் போது, காற்று மண்டலத்தில் பயங்கர வெப்பம் ஏற்படும். அப்போது, காற்று மண்டலத்தில் உள்ள நைட்ரஜன் இந்த வெப்பத்தால் தாக்கப்பட்டு நைட்ரஜன் ஆக்சைடாக மாறும். இது மழை நீருடன் கலந்து நீர்த்த நைட்ரிக் அமிலமாக மண்ணில் வந்து விழுகிறது. இப்படி பூமிப்பந்தில் நம்மை அறியாமல் நடக்கும் சில ரசாயன கிரியையைகள் மூலமாக மரங்களுக்கு உரங்கள் கிடைத்து விடுகின்றன. அதாவது இப்படி கிடைக்கும் சத்தை தழைச்சத்து என்று சொல்வார்கள்.

ஒரு தென்னை மரத்தை தூரத்தில் நின்று பார்க்கும் போது, அது நல்ல பச்சையாக தெரிந்தால், அதற்கு தழைச்சத்து (யூரியா) தேவையில்லை என்று தெரிந்து கொள்ளலாம். அதே போல் ஒரு பாளை பூத்து விரியும் போது, அதில் 20 க்கும் மேற்பட்ட பிஞ்சுகள் இருந்தால், மரத்திற்கு மணிச்சத்து போதுமான அளவில் மண்ணிலிருந்து கிடைத்துக் கொண்டிருக்கிறது என்ற முடிவுக்கு வரலாம்.

மரம் காய்க்கும் காலம் வந்த பின்னும், காய் பிடிக்காமல் பிடிக்காமல் உதிர்வதும், போதுமான காய்கள் விளையாமல் போவதற்கும் சில மறைமுக  வியாதிகள் மற்றும் சிறு நோய்கள் தான் இதற்கு காரணம். மறைமுக வியாதி எப்படி உருவாகிறது என்று பார்க்கலாம். தென்னைமரத்தின் மட்டை தானாக காய்ந்த நிலையில் மரத்திலிருந்து கீழே விழும். அப்போது கூடவே பழுப்புகலரில் காய்ந்த எருவின் துகள் போன்று தரையில் கொஞ்சம் சிதறி விழுந்து கிடப்பதை காண முடியும். இது எங்கிருந்து வந்தது  என்பது புதிராக இருக்கும்.

இது, அந்த மட்டை மரத்தில் இருக்கும் போது, மரத்தின் பாளையிலிருந்து விழும் பூ, பிஞ்சு, வேறு அருகில் உள்ள மரத்தின் இலைகள் போன்றவை இந்த மட்டை மரத்தில் இணைந்திருக்கும் இடத்தின் இடுக்கில் வந்து சேர்ந்து விடும். இப்படி தேங்கி கிடக்கும் இந்த குப்பை பல நாட்களாக ஈரம், மரத்திலிருந்து வெளியாகும் நீராவி ஆகியவற்றால் நனையும் போது பூஞ்சை கிருமிகளால் அழுகி, மக்கி எரு போல் மாறி விடும்.

சில நேரங்களில் இந்த எருவில் ஒரு வகை கிருமிகளும் தோன்றி விடுகிறது. இந்த கிருமிகள் புதிதாக மரத்தில் தோன்றும் பாளைகளில் ஒட்டிக்  கொண்டு அதன் சாறை உறிஞ்சத் தொடங்கும். இதனால் தான் புதிதாக தோன்றும் பாளைகள், சிறுத்தும், நீளம் குறைந்தும் இருக்கும். பிஞ்சுகளும் கருகி கொட்டி விடும். நகரங்களில் உள்ள தென்னை மரங்களை சுத்தம் செய்ய மரம் ஏறுபவர்கள் வருவார்கள்.

அவர்களை கொண்டு குறிப்பிட்ட அளவில் மரத்தை சுத்தம் செய்தால், இந்த பிரச்சனையை தவிர்த்து விடலாம். மரத்தை இப்படி சுத்தமாக வைத்துக் கொண்டால், புதிதாக வரும் பாளைகள் அதிக நீளமாக, பருமனுடன் இருக்கும். நல்ல பசுமை நிறத்திலும் இருக்கும். இப்படி இருக்கும் பாளையில் அதிகம் பிஞ்சு பிடித்து தேங்காய் குலைகுலையாக காய்க்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.

தென்னைக்கு ஏதாவது ஒரு சூழ்நிலையில் உரம் வைக்க வேண்டுமென்றால், மரத்திலிருந்து 3 அடி தள்ளி, வேர்கள் அறுபடாமல், அரை வட்டம் போட்டு, ஒரு கிலோ அளவு வேஸ்டு மட்டை, கொளிஞ்சி தழை சருகுகளை போட்டு கூடவே 50 கிலோ அளவுக்கு தொழுஉரம் போட்டு 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விடலாம். தென்னை மரத்தை பொறுத்த மட்டில் காண்டா மிருக வண்டு தான் பெரிய பிரச்சனை. இந்த வண்டு மரத்தை தாக்கும் போது, மரத்தின் மணல் பகுதியிலிருந்து 3 அங்குலத்துக்கு மேல் ஓட்டையிட்டு, குருத்துக்குள் சென்று, உட்குருத்தை தின்று விடும்.

பொதுவாக இந்த வண்டை ஒழிக்க உள்ள மருந்துகளை மரம் முழுக்க பரவலாக  பயன்படுத்தும் போது, மரத்திற்கு நன்மை செய்யும் தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகளும் இந்த மருந்துகளால் செத்து விடுகின்றன. இதனால் மகரந்த சேர்க்கை தடைபட்டு காய்களின் அளவும் குறையும். இதனை தடுக்க வி.எஸ் மிக்ஸ் என்ற பவுடரை 15 கிராம் எடுத்து அதை 200 மிலி தண்ணீரில் கரைத்து குருத்தில் ஊற்றினால், வண்டுகள் தாக்குவதில்லை. பொதுவாக வீடுகளில் மரம் இருந்தால், துணியை வெயிலில் உலர்த்த மரத்தில் ஆணி அடித்து கொடிகட்டுவதோ, வேறு காயப்படுத்தவோ கூடாது.

வீட்டு மரத்திற்கு ஆண்டுக்கு 30 ரூபாய் செலவு செய்தால் கூட, மரத்திலிருந்து 300காய்கள் வரை பெறலாம். வீடுகளில் வளர்க்கப்படும் தென்னம்பிள்ளைகளுக்கு அவ்வப்போது மண்புழுஉரம், வீட்டில் வீணாகும் காய்கறி கழிவுகளை மக்க வைத்து தயார் செய்யப்பட்ட உரம் மற்றும் தென்னை நார்க்கழிவை மக்க செய்து தயாரித்த உரம் ஆகியவற்றை உரமாக பயன்படுத்தலாம்.

இதற்கு பெரிய நுட்பம் எதுவும் தேவையில்லை. வீட்டு மூலையில் சிறிய குழி தோண்டி அதில் இந்த கழிவுகளை போட்டு அதில் சிறிது பசுஞ்சாணத்தை கரைத்து ஊற்றினால் சிறிது நாளில் நல்ல உரம் ரெடி. பிறகென்ன.....சிறிது நாளில் வீட்டுக்கு தங்குதடையில்லாமல் தேங்காய் தயார். ஏப்ரல், மே, ஜுன் மாதங்களில் உடலை குளிர்விக்க இளநீரும் தயார். வீட்டு சமையலுக்கு தேங்காய் தயார்.

எங்க கிளம்பிட்டீங்க...தென்னம் பிள்ளை வைக்கவா?


ஒரு நிமிடம்!!
 • பறிக்கப்படும் தேங்காய்கள், இட்லிக்கு சட்னியாவதும், ஆப்பத்துக்கு பாலாகும் போதும், ஏப்ரல் மாத வெயிலில் இளநீர் ஆவதுமாக தென்னையின் பயன்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
   
 • இளநீருக்கு மனிதரின் முதுமையை குறைக்கும் ஆற்றல் பலமாக இருப்பதை தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
   
 • தென்னை மரத்தின், இலை, தண்டு, பூ, மடல், தேங்காய் பிசிறுகள் என்று அனைத்துமே மனிதர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பயன்படுகிறது.
  தேங்காய் நார்களை கொண்டு தற்போது அழகான மிதியடிகள், தரைவிரிப்புகள் செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. 
 • தேங்காய் ஓட்டை சிறுசிறு துண்டுகளாக வெட்டி சட்டை பித்தான்கள் செய்யவும், எரிபொருளாகவும், நாதஸ்வரக்குழாய்களுக்கு தேவையான வில்லைகள் செய்யவும் பயன்படுகிறது.
   
 • மரத்தின் தண்டு எரிபொருளாகவும், வீட்டுக்கான உத்திரம் போடவும், தூணாகவும் இருக்கிறது. கிராமங்களை கடந்து செல்லும் நீரோடைகள், கால்வாய்களை கடக்க தென்னை மரத்தின் தண்டு இருப்பதை பல இடங்களில் பார்க்க முடியும்.                                                                                           
   
 • தென்னை ஓலை தான் இன்றைய டிஜிட்டல் காலத்திலும் நகர வீடுகளின் குளிர்ச்சியான கூரை வேய்ந்த அறைகளை உருவாக்க முதல் தேர்வாக இருக்கின்றன.
   
 • மரத்தின் பாளையை, அதாவது பூமடலை நீரில் ஊற வைத்து ஊசியினால் சீராக நீளமாக கிழித்து எடுத்து அதனை வேலி கட்டவும், கூரை வேயவும் பயன்படுத்துகிறார்கள்.
   
 • தென்னை ஈர்க்குகள் வீடு சுத்தம் செய்ய துடைப்பமாக மாறிவிடுகிறது.
  உலர்ந்த கொப்பரையிலிருந்து கிடைப்பது தேங்காய் எண்ணெய். 
 • காலையில் எழுந்தவுடன் தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவி குளித்தால் தான் பூரணமாக குளித்த சுகம் கிடைக்கும். தென்னை அதிகம் வளரும் பகுதிகளில் தேங்காய் எண்ணெய் தான் பிரதான சமையல் எண்ணெயாக பயன்படுகிறது.
   
 • தேங்காயை அரைத்துப் பிழிந்தெடுக்கப்படும் தேங்காய் பால் இனிப்பும், துவர்ப்பும் சேர்ந்த ஒரு கலவை. இது குடல்புண், வாய்ப்புண்களை குணப்படுத்த சிறந்த மருந்தாக இருக்கிறது.
 செவ்விளநீர் என்ற பெயரில் ??????
பச்சை இளநீர் சுவையில்லை என்று செவ்விளநீர் குடிப்பவர்கள் பலர். ஆனால் இது உண்மையான செவ்விளநீர் ஆகுமா...என்றால் அந்த பெயரில் ஒரு சாதாரண இளநீரை குடித்து விட்டு திருப்தி அடைகிறோம் என்று தான் அர்த்தம். வேளாண்மை அதிகாரி முரளிகிருஷ்ணன் கூறும் போது, தமிழ்நாட்டில் செவ்விளநீர் மரங்கள் இல்லை. சொல்லிக் கொள்ளும்படி 3 அல்லது 4 தாய் மரங்கள் தான் உள்ளன என்கிறார். இங்கு ரோடுகளில் விற்கப்படும் இளநீர் காய்கள், மலேசிய நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டமலேசியன் ஆரஞ்சு ரக தென்னையின் காய்களாகும்.

இது இளநீருக்காகவே உருவாக்கப்பட்ட ரகம். இதைத்தான் செவ்விளநீர் என்ற பெயரில் ரோடுகளில் விற்கிறார்கள். உண்மையான செவ்விளநீர் மரத்தின் காய்களை ருசித்தவர்கள் குறைவு. உண்மையான செவ்விள நீர் மரக்கன்று வாங்க விரும்புபவர்கள் அருகில் உள்ள வேளாண்மை அலுவலகங்களை தொடர்பு கொண்டால் வாங்கலாம். ஆனால் ஆர்டர் செய்த 1 ஆண்டு கழித்து தான் கன்று கிடைக்கும்.

ஊரை வளர்த்த உப்பு செட்டியார்கள்-சாதியால் சாதிக்க முடிந்த கதை

0 கருத்துகள்


கோலிவுட் தமிழ்படங்களில் மதுரை என்றாலே அரிவாளையும், பிரச்சினைகளையும், சாதிகளையும் காட்டி வம்புக்கு குறைச்சலே இல்லாத ஊராக காட்டிவிட்டார்கள். ஒரு காலத்தில் மதுரை உள்பட தென்மாவட்டங்களில் சாதிக்கலவரத்துக்கு குறைச்சலே இருக்காது. ஆனால் இந்த சாதிகளை எல்லாம் தாண்டி ஒரு குறிப்பிட்ட சாதி மக்கள் தாங்கள் எடுத்துக் கொண்ட தொழிலை மட்டுமே பிரதானமாக கொண்டு அந்த ஊரை மிகச்சிறந்த இயற்கை வளம் நிறைந்த ஊராக ஆக்கி விட்டிருக்கிறார்கள்.

இது பற்றி ஒரு பார்வை
 அன்றைக்கு தேங்காய் மார்க்கெட் விலையை பற்றி தெரிந்து கொள்ள, பக்கத்தில் இருந்த நண்பர் அந்த சங்கத்திற்கு போனை போட்டு சிரத்தையாக குறித்துக் கொண்டிருந்தார். அப்போது வெங்காயத்தோடு சேர்ந்து தேங்காயின் விலையும் சமீபத்தில் கிறுகிறுக்க வைத்த நேரம்.

இது, நமக்கு பொறி தட்ட  களம் இறங்கினோம். அமைச்சர் ப.சிதம்பரத்தின் சிவகங்கை தொகுதிக்கு அருகே தென்னை மரத்தொழில் சிறப்பாக நடைபெறுகிறது என்பது ஏற்கனவே தெரியும். சரி. இதை பற்றி  தெரிந்து கொள்ள  கிளம்பினோம்.

அந்த ஊருக்கு போய் எல்லையில் கால் வைக்கும் வரை இப்படி ஒரு சிறப்பு இருப்பது தெரிந்திருக்கவில்லை. தமிழனும் சாதியும் பிரிக்க முடியாது. சாதி தீ மூட்டிவிட்டால் தமிழனை எதிலிருந்தும் திசைதிருப்பி விடலாம் என்பது  எதார்த்தமான உண்மை.
இதை பல சம்பவங்களிலும் தமிழகம் கண்டிருக்கிறது. ஆனால் இதையெல்லாம் தாண்டி சிவகங்கை மாவட்டத்தின் ஒரு பகுதியான சிங்கம்புணரியில் நீண்ட நாட்களாக பாரம்பரியமாக இருந்து வரும் உப்பு செட்டியார் வகையறாக்கள் தேங்காய் தொழிலை காலம்காலமாக செய்து அந்த ஊருக்கு சிறப்பை தந்துள்ளனர்.


சிங்கம்புனரியில்கயிறு தயாரிப்பு கூடத்தை பார்வையிடும் அமைச்சர் பா.சிதம்பரம்

"வாழையடி வாழையாக" என்பார்களே...அது போல் இந்த சாதியினர் தொடர்ந்து தங்கள் குலத் தொழில் போல் தென்னை சார்ந்த தொழில்களில் இறங்கி இன்று இந்த தொழிலை வளர்த்தெடுத்துள்ளனர். இவர்களால் ஊரின் பல இடங்களில் தென்னை விவசாயம் நடப்பதால், எங்கு திரும்பினாலும் தென்னையும், தேங்காயுமாக ஊரே செழிப்பாக கிடக்கிறது. இது பற்றி சுருக்கமான ஒரு அறிமுகப்பார்வை...

குவியல் குவியலாக
சிவகங்கை மாவட்டத்தின் சிங்கம்புணரி தாலுகாவிற்குள் நுழையும் போதே நம்மை வரவேற்பது ஆங்காங்கே குவியல் குவியலாக கிடக்கும் தென்னை நார்க்கழிவுகள் தான். தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக தென்னை நார் தொழிலை நம்பி இங்கு 18 கிராமங்கள் இங்குள்ளன. 489 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட சிவகங்கை மாவட்டத்தில் 226.56 சதுர கி.மீட்டர் பரப்பளவில் தென்னைதொடர்பான தொழில்கள் நடைபெறுகிறது. இந்த மாவட்டத்தின் விவசாய பரப்பளவு சுமார் 5356 எக்டர்கள். இதில் 914 எக்டர் பரப்பளவுக்கு தென்னை பயிரிடப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு இங்கிருந்து மட்டும் சுமார் 1.15 லட்சம் தேங்காய்கள் அறுவடை செய்யப்படுகின்றன. பிரான்மலை, கோவில்பட்டி, வெங்கைபட்டி, கோபாலசேரி, ஒடுவான் பட்டி, நாடார்வேங்கைபட்டி, குமர்த்தாகுடிபட்டி ஆகிய இடங்களில் இன்னும் பாரம்பரியமான முறையில் கயிறு தயாரிக்கும் கையினால் கயிறு பின்னும் தறிக்கூடங்கள் இயங்கி வருகின்றன. மாணப்பட்டி, எஸ்.வி மங்கலம் உள்ளிட்ட சில பகுதிகளில் புதிய வகை தானியங்கி இயந்திரங்கள் மூலம் கயிறு பின்னும் தொழில் நடக்கிறது.

சிங்கம்புணரி சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பலரும் பரவலாக கயிறு திரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தாலும், இந்த தாலுகாவின் உப்பு செட்டியார் என்று சொல்லப்படக்கூடிய சமூகத்தை சேர்ந்த குடும்பங்கள் 2 தலைமுறைக்கும் மேலாக தென்னை கயிறு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆரம்ப காலத்தில் தென்னையை மரத்தை வளர்த்து தேங்காய்களை பிரித்து பல்வேறு ஊர்களுக்கும் வழக்கமாக விற்பனைக்கு அனுப்பி வந்திருக்கிறார்கள். அதோது கயிறு திரிக்கும் தொழிலும் பரவலாக நடந்திருக்கிறது.

சிறிய தாம்புக்கயிறு முதல் படகுகளையும், தேர் இழுக்க பயன்படும் மிக அதிக வடக்கயிறுகளையும் திரித்து விற்பனைக்கு அனுப்பும் தொழில் தொடர்ந்து இங்கு பிரதானமாக இருந்து தற்போதும் இந்த தொழில் இங்கு களைகட்டி வருகிறது. இப்படி திரிக்கும் கயிறில் ஒரு வகை தான் மங்கதான் என்ற ரக கயிறு. இந்த கயிறு  சிப்பமிடுவதற்கு ( பேக்கேஜிங்) பயன்படுகிறது. அந்திமங்கதான் என்ற ஒரு வகை நார்க்கழிவு கூரை வேயவும், கட்டிடங்கள் கட்டுவதிலும் பயன்படுகிறது. மணிச்சூடி வகை கயிறுகள் தரைவிரிப்புகள் தயாரிக்கவும், கால்மிதியடி தயாரிக்கவும் கொண்டு செல்லப்படுகிறது.

80 ஆயிரம் பேர்

இது தவிர தேங்காயிலிருந்து கொப்பரை இறக்கி எண்ணெய் தயாரிக்கும் தொழிலிலும் பலர் ஈடுபடுகின்றனர். உப்பு செட்டியார்கள் தொடங்கி வைத்த இந்த தொழிலை இன்றைக்கு சுற்று வட்டாரத்திலுள்ள பலரும் கற்றுக் கொண்டு விட்டனர். தற்போது சிங்கம்புணரியில் மட்டும் சுமார் 80 ஆயிரம் பேர் இந்த தொழிலை நம்பி உள்ளனர்.

கடந்த காலங்களில் கயிறு உற்பத்தி தான் பிரதானமாக இருந்தாலும், தற்போது தேங்காய் பித் என்று சொல்லப்படும் தேங்காய் நார் கட்டிகள் இங்கு அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவின் எங்கோ ஒரு மூலையில் கிடக்கும் இந்த சிங்கம்புணரி சமீப காலமாக உலக இறக்குமதியாளர்களின் கவனத்திற்கு வரக்காரணம், இந்த நார்பித்துக்கள் தான்.

இப்படியாக காலத்தின் தேவைக்கு தகுந்தபடி இங்கு மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு இந்த பகுதி மக்கள் தஙகள் வாழ்க்கை சக்கரத்தை சிறப்பாக இயக்கி வருகிறார்கள். தென்னை என்னும் பிள்ளை உப்புச் செட்டியார்களால் அதிக அளவில் வளர்க்கப்பட்டாலும், இன்றைக்கு அது பல மக்களின் வயிறை நிறையச் செய்யும் ஒரு அட்சய பாத்திரமாக மாறியிருப்பதென்னவோ உண்மை.


சிங்கம்புணரியின் தொழில் அமைப்பை கவனத்தில் கொண்ட தானம் அறக்கட்டளை இங்குள்ள சில பகுதிகளை தனது கவனத்தில் எடுத்துக் கொண்டு இந்த பகுதி மக்களுக்கு தென்னையில் புதிய தொழில் வாய்ப்புகளை அடையாளம் காட்டி வருகிறது. இயற்கை பொருளான தென்னை நார்க்கயிறுக்கு  உலகம் முழுவதிலும் தற்போது நல்ல வரவேற்பு இருக்கிறது.

இதனால் சிங்கம்புணரியிலும், சுற்றுவட்டாரங்களிலும் தென்னை தொழிலை ஊக்குவிக்கும் முகமாக மத்திய அரசின் கயிறுவாரியம், நபார்டு வங்கி உள்பட பல்வேறு அமைப்புகள் இந்த தொழிலை மேம்படுத்துவதற்கு கடனுதவி, இங்குள்ள கயிறு தொழிலாளர்களுக்கு நவீன தொழில்நுட்ப பயிற்சி, தென்னை பொருட்களில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிப்பதற்கான பயிற்சி தருவது என்று தீவிரமாக களம் இறங்கி இருக்கின்றன.வாழ்த்தப்பட வேண்டியவர்களே
அப்பாவி ஏழைமக்களை காட்டி சாதியின் பெயரில் அரசியல் செய்து தன்னை தானே வளர்த்துக் கொள்ளும் சில பெரிய மனிதர்களின் மத்தியில், "நாம் உண்டு..நமது வேலை உண்டு" யாருக்காவது உதவியாக வாழ்ந்து மறைந்தால் போதும் என்று தென்னையால் சிங்கம்புணரியை அடையாளம் காட்டிய உப்புச்செட்டியார்கள் வாழ்த்தப்பட வேண்டியவர்களே!

வரும் 2012 ம் ஆண்டுக்குள் உலக அளவில் சிவகங்கை மாவட்டத்தை தென்னை சார்பான தொழிலில் சிறப்பிடம் வகிக்கும் மாவட்டமாக உயர்த்துவது தான் நோக்கம் என்கிறார்கள் தறபோது சிங்கம்புணரி தாலுகாவில் ஸ்புருதி என்ற திட்டத்தின் மூலம் தென்னை நார்க்கழிவு மூலம் பித் களை தயாரிக்கும் தொழிலை மேம்படுத்தி தமிழகத்தில் தென்னையால் வளமான ஊராக சிங்கம்புணரியை அடையாளம் காட்ட முயற்சிக்கிறோம் என்கிறார்கள் தானம் அறக்கட்டளை நிறுவனத்தினர்.

சிங்கம்புணரி கயிறு தொழில் பற்றி பா.சிதம்பரம் பேசி வெளி வந்த செய்தி தி ஹிந்து நாளிதழில்    
http://www.hindu.com/2008/03/09/stories/2008030954070500.htm

( வாஜ்பாய் பிரதமராக இருந்த போது சின்னப்பிள்ளை என்னும் ஒரு வயதான பெண்ணின் காலை தொட்டு வணங்கினார். அது மிக பெரிய செய்தியாக வந்தது. பல குடும்பங்களிடம் சுயஉதவிக்குழுவின் அமைப்பை கொண்டு சேர்த்து அவர்களை கூட்டுறவு முறையில் இணைத்து சிறிய அளவில் தொழில்களை செய்து சொந்தக்காலில் நிற்க உதவியவர் இந்த சின்னப்பிள்ளை. இவர் தானம் பவுண்டேசன் வழியாக செயல்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் தான் தற்போது சிங்கம்புணரியில் தென்னை வளர்ச்சிக்கான திட்டங்களை முன்னெடுத்து வருகிறது)

மூலிகையில் கொட்டும் பணம்-அள்ளநீங்க தயாரா?

7 கருத்துகள்

ஆவாரை செடி
"வாரை பூத்திருக்க சாவரை கண்டதுண்டோ" - ஆவாரை செடியை மருந்துக்கு பயன்படுத்தினால் இறப்பு கூட பக்கத்தில் வராது என்பது தான் இதற்கு பொருள். தமிழ்நாட்டில் நீங்கள் எங்கு பயணம் செய்யும் போதும் இந்த ஆவாரை மஞ்சள் நிறத்தில் பூக்களுடம் சாலையின் ஒரங்களில் எங்கும் வளர்ந்து கிடப்பதை பார்க்கலாம். இப்படி வளர்ந்து கிடக்கும் செடியை பறித்து பணம் பார்க்க தான் யாரும் முன்வருவதில்லை.

இந்தியா தொடங்கி இங்கிலாந்து வரை பெண்களின் அழகை மேம்படுத்துவதற்காக விற்பனை செய்யப்பட்டும் இயற்கை கிரீம்களில் இந்த ஆவரை சேர்க்கப்படுகிறது. ஆவாரையை பொடியாக்கி தேய்த்து குளித்து வந்தால் உடல் பொன்னிறமாக மாறும் என்கிறது சித்த நூல்கள்.

இது போல் தமிழ்நாட்டில் சாலை ஓரங்களிலும், வயல்வரப்புகளிலும் மருத்துவ குணமுடைய ஏராளமான மூலிகைகள் வளர்ந்து கிடக்கின்றன. தமிழ்நாட்டின் மாவட்டங்கள் அனைத்தும் இயற்கையாகவே சிறந்த மண்வளம் மற்றும்  தட்பவெப்ப நிலையை கொண்டிருக்கிறது. இப்படியிருந்தும் உலக அளவில் இந்தியாவின் மூலிகை ஏற்றுமதி வணிகம் என்பது 1 சதவீதத்திற்கும் கீழ்.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி உலகின் பெரும்பான்மையான மக்கள் தங்களுக்கு ஏற்படும் நோய்களை தீர்த்துக் கொள்ள பாரம்பரிய மருத்துவ முறைகளையே நாடுவதாக கூறுகிறது.  வளர்க்க வளர்க்க பணத்தை, டாலர்களை அள்ளித்தரும் ஒரே வளம் மூலிகைகள் மட்டுமே.

இந்தியாவிலும் கடந்த 10-15 ஆண்டுகளாக பாரம்பரிய மருத்துவ முறைகள் நன்றாக வளரத் தொடங்கியுள்ளது. இதனால் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மருந்து தயாரிப்புக்கான மூலிகைகளின் தேவை பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவிற்கு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மத்திய அரசு, மூலிகை தொடர்பான தொழில்களில் ஈடுபட விரும்புபவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்ய முன்வந்துள்ளது. இதற்காக, தேசிய மருத்துவ தாவரங்கள் வாரியம் என்று ஒரு வாரியத்தை உருவாக்கியுள்ளது. மத்திய அரசு உருவாக்கிய இந்த வாரியத்தின் கீழ், ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில மருத்துவ தாவர வாரியம் என்ற அமைப்பு செயல்படுகிறது.

மருத்துவ தாவரங்கள் தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் ஒருங்கிணைப்பது, பாரம்பரிய மருத்துவ துறையை வளர்க்க தேவையான கொள்கைகளை உருவாக்குவது, பணம் ஈட்டக்கூடிய தாவரங்களை பயிரிடுதல், முறையான அறுவடை செய்தல், ஆய்வு மற்றும் வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்வது, பதப்படுத்துதல், மூலப்பொருட்களை உருவாக்குதல், சந்தை நிலவரம் உள்பட பல தகவல்களை மூலிகை பயிரிடுவோருக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் எடுத்து சொல்வது தான் இந்த வாரியத்தின் வேலை.

இந்த வாரியம் மூலிகை பயிரிட விரும்புபவர்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறது. இதனை தெரிந்து கொண்டவர்கள் சிறிய அளவில் நிலம் இருந்தால் கூட அதிக அளவு டாலர்களை மூலிகைகளை விற்பனை செய்வதன் மூலம் பெற முடியும். எனவே இந்த பதிவை பதிக்கும் படிக்கும் பதிவர்களுக்கு வசதியாக தமிழ்நாட்டின் எந்த மாநிலத்தில் என்ன மாதிரியான மூலிகைகள் நன்றாக வளரும் என்ற பட்டியலையும் இங்கு கொடுத்துள்ளேன்.

இந்த தாவரங்களை பயிரிட விரும்பும் விவசாயிகள், பயிர் செய்யவுள்ள மூலிகை, எத்தனை ஏக்கர் பரப்பில பயிரிட திட்டமிடப்பட்டுள்ளது, அதற்காக தேவைப்படும் நிதி அளவு உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்டு  விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து சென்னையில் இயங்கும் மாநில மருத்துவ தாவர வாரியத்திற்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு பெறப்பட்ட திட்ட அறிக்கை தேசிய மருத்துவ தாவர வாரியத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டு சிறந்த திட்ட அறிக்கைகள் தேர்வு செய்யப்பட்டு அதற்கு தகுந்த மானியம் வழங்கப்படும். இந்த மானியம் விண்ணப்பதாரருக்கு இரண்டு அல்லது மூன்று தவணைகளில் வழங்கப்படும்.

மூலிகை தாவரங்களை பயிரிடும் விவசாயிகள் அவற்றை நல்ல லாபத்தில் உள்ளூரில் விற்க தேவையான நடவடிக்கைகளை வாரியம் செய்துள்ளது. இதன்படி மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் முகவரிகள், மூலிகைகளை வாங்குவோர் பற்றிய தகவல்களையும்  அளித்துள்ளது.

எனவே உங்கள் நிலமும் மூலிகை தாவரங்களை வளர்க்க ஏதுவானதாக இருந்தால் உடனே வர்த்தகரீதியாக லாபம் தரக்கூடிய மூலிகைகளை பயிரிட்டு பலன் பெறலாம். இது குறித்து மேலும் தகவல் பெற விரும்புபவர்கள்


மாநில மருத்துவ தாவரங்கள் வாரியம்,
அரும்பாக்கம், சென்னை-06.
தொலைபேசி எண்: 044-2622 2565/ 2621 4844 / 2628 1563 யில் தொடர்பு கொள்ளலாம்.


எந்த மாவட்டத்தில் என்ன மூலிகை வளரும்?
தற்போது தேசிய மருத்துவதாவர வாரியம் உலகின் மூலிகை தேவையை கருத்தில் கொண்டு 2011-12ல் 80 ஆயிரம் முதல் 1 லட்சம் எக்டர் பரப்பளவில் மூலிகை சாகுபடியை செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக 200 வகையான விதை மற்றும் கன்றுகளுடன் கூடிய தரம் வாய்ந்த பயிர்த் தோட்டங்களை அமைப்பது, மருந்து தர நிர்ணய ஆய்வகங்கள் நிறுவுவது உள்பட பல திட்டங்களை செயல்படுத்த உள்ளது.  எனவே கீழ்க்கண்ட மாவட்டங்களில் சில மூலிகைகள் நன்றாக வளர வாய்ப்புள்ளன. இதனை பயன்படுத்தி மருத்துவ தாவரங்களை பயிரிட்டு பணம் காணலாம்.

சித்தாமுட்டி-(தமிழகத்தின் அனைத்து வறண்ட நிலப்பகுதிகள்)
பாரிசவாதம், பக்கவாதம், முகவாதம் போன்ற கடும் வாத நோய்களை தீர்க்க உதவும் சித்தாமுட்டி 1000 மெட்ரிக் டன் அளவு தேவைப்படுகிறது. இதனை தமிழ்நாட்டின் அனைத்து வறண்ட நிலப்பகுதிகளிலும் பயிரிடலாம்.

கலப்பைக் கிழங்கு -( சேலம், பெரம்பலூர், ஈரோடு, கிருஷ்ணகிரி )
மருந்து கூர்க்கன் (திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, கோயமுத்தூர்)
அமுக்கரா -( கம்பம், கொல்லிமலை, ஏற்காடு, ஓசூர்)

தாட்டுபூட்டு பூ- (சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி)
கடல் அழிஞ்சில் (வேதாரணியம், கோடியக்கரை, கன்னியாகுமரி)

நுணா -(ஈரோடு, கோயமுத்தூர், திருநெல்வேலி, மேற்குத் தொடர்ச்சி மலைகளான தேனி, பெரியகுளம். உடலின்நாடி நடையை உயர்த்த உதவும் நுணாவிற்கு 1000 மெட்ரிக் டன் தேவை உள்ளது.

கள்ளி முளையான் -(திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி)
சக்கரைக் கொல்லி -(திண்டுக்கல், தேனி, பெரியகுளம், திருநெல்வேலி)

திப்பிலி -(கொல்லிமலை, பழனிமலை, கன்னியாகுமரி, குளிர்ந்த பகுதிகளான ஓசூர், பெரியகுளம், தேனி, போடிநாயக்கனூர்)

அசோகா -(மேற்கு தொடர்ச்சி மலையின் பின்பகுதி)
கருச்சிதைவு, கர்ப்பசூலை உள்ளிட்ட பெண்களின் நோய்களுக்கு அருமருந்தாகும் இதன் ஆண்டு தேவை 100 மெட்ரிக் டன்கள்

மாகாலி வேர்- (தென்மலை, ஜவ்வாது மலை முழுவதும்)

பாலைக்கீரை -(திருவள்ளூர் மாவட்டம் முழுவதும்)

நிலவேம்பு -( ஈரோடு, கோயமுத்தூர், மதுரை, திண்டுக்கல், தேனி, தஞ்சாவூர், கடலூர்)

இசப்பு கோல் -( இராமநாதபுரம், விருதுநகர்)

மேலும் வல்லாரை, மணத்தக்காளி, நெல்லி, நிலாவரை, நிலப்பணைக்கிழங்கு, சிறுகுறிஞ்சான், கறிவேப்பிலை, கீழாநெல்லி, கருந்துளசி, வசம்பு, சித்தரத்தை, ஆடாதோடை, அதிவிடயம், பச்சைநாபி, சோற்றுக்கற்றாழை போன்றவையும் மருத்துவ தேவைக்காக உலக அளவில் 500 முதல் 1000 மெட்ரிக் டன்கள் அளவு வரை தேவைப்படுகிறது. எனவே மேற்கண்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தகுந்த மூலிகைகளை பயிரிட்டால் கை மேல் காசு நிச்சயம்.                                                                                                                    


பாமரோசா ஆயில்-பயன்படுத்தி தான் பார்போமே...!

1 கருத்துகள்


(பாமரோசா ஆயில்என்ற ஒரு எண்ணெய் பாண்டிச்சேரி ஆரோவில்லில் தயாரித்து விற்பனை செய்யப்படுவதை பார்த்தேன். இந்த எண்ணெயை வீட்டில் 3, 4 சொட்டுக்கள் தெளித்தால் நோய் பரப்பும் ஈ, கொசு போன்றவை தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடுகின்றன. தூங்கும் போது தலையனையில் 1 சொட்டு விட்டு படுத்தால் சுகமாக தூக்கம் பிறக்கிறது. இதன் மகத்துவம் தெரிந்த பிறகு பாமரோசா ஆயில் பற்றி நமது விவசாய நண்பர்களிடம் பகிர்ந்து போட்ட பதிவு இது)

சென்னை, திருச்சி, மதுரை உள்பட ஒரளவு பெரிய சந்தை கொண்ட நகரங்களில் உள்ள பெரிய விற்பனை வளாகங்களில் நல்ல நறுமணத்துடன் கூடிய வாசனை எண்ணெய்கள் தற்போது விற்பனை செய்யப்படுகின்றன. சிறிய குடுவை போன்ற  பாட்டில்களில் அடைக்கப்பட்டிருக்கும் இந்த எண்ணெய்களின் விலை சற்று அதிகம். ஆனாலும்  பலர் தேடி வந்து இவற்றை வாங்கி செல்வதை பார்க்க முடிகிறது. தாமரை, ரோஜா, மல்லிகை போன்றவற்றிலிருந்து இப்படி எண்ணெய் வடித்தெடுத்து இந்த குடுவைகளில் அடைத்து விற்பனை செய்கின்றனர்.

பாமரோசா ஆயில்
இவற்றின் ஊடே பாமரோசா மற்றும் லெமன் கிராஸ் ஆயில் என்ற பெயருடன் ஒரு குடுவையும் பரபரப்பாக விற்பனை ஆகிறது. இந்த இரண்டும் ஒரு வகை புல் தாவரம். இவற்றிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் உள்ளூரில் சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது. அதே வேளையில் ஏற்றுமதி சந்தையிலும் இதற்கென்று தனி இடமிருப்பதாக கூறுகிறார்கள். மரபு வழி பயிர்கள் கையை கடிக்கிறதே என்று நொந்நு கொள்ளும் விவசாயிகள் சிறிய இடத்தில் இந்த புல்லை பயிரிட்டு எண்ணையை பிரித்தெடுத்து விற்பனை செய்ய முடியும். இந்த புற்கள் நன்கு வளர்ந்த பின் அவற்றிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய், வாசனைப்பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது. ஊதுபத்தி தயாரிப்பிலும் உதவுகிறது. பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
பாமரோசா புல்
(இங்கு நான் பயிரிடும் முறையை இது போன்ற விவசாய பயிர்களை அறிமுகப்படுத்தும் போது கூற காரணம், எத்தனையோ விவசாயத்தில் ஆர்வமுள்ள நண்பர்கள் இன்றைக்கு அதைவிட்டு நிர்பந்தம் காரணமாக சாப்ட்வேர் என்ஜினியராக அல்லது வேறு தொழில்களில் பரிணமிக்கிறார்கள். இவர்கள் பணமிருந்ததால் உங்கள் ஊரில் சிறிய அளவு நிலத்தை வாங்கி அதில் இது போன்ற லாபம் தரும் பயிர்களை பயிரிடலாம். ஊரில் இருக்கும். யாருக்காவது பகிர்ந்தளிப்பு முறையில் வேலை வாய்ப்பை அளிக்கலாம்)
பயிரிடும் முறை
உழவர்களின் வருமானத்தை உயர்த்த உதவும் இந்த புல்வகைகளை ஒரு முறை நடவு செய்தால் போதும். மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு மறுதாம்பு பயிராக பராமரிக்கலாம். எந்த வித ரசாயன உரமும் இதற்கு தேவையில்லை. பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இயற்கை எரு இட்டு நடவு செய்தவுடன், வாரத்திற்கு ஒரு முறை நீர்ப்பாய்ச்ச வேண்டும். நன்கு வளர்ந்த பிறகு இரு வாரத்திற்கு ஒரு முறை நீர்ப்பாய்ச்சினால் போதும். நீர் தேங்காத செம்மண் மற்றும் கரிசல் மண் நிலங்களில் இந்த புல் வகைகள் செழித்து வளரும். நீர் பாசனம் செய்யும் வசதி இல்லாதவர்கள் மழை பொழியும் காலம் பார்த்து மானவாரியிலும் பயிர் செய்யலாம். நடவு செய்த பிறகு 90 முதல் 100 நாட்களில் நன்றாக வளர்ந்து அறுவடைக்கு தயாராகும்.
அறுவடை
மறுதாம்பு பயிர்களை 60 லிருந்து 70 நாட்களில் அறுவடை செய்யலாம். நன்கு வளர்ந்த புற்களை அறுவடை செய்து எண்ணெய் பிரித்தெடுக்கும் மையத்தில் நீராவிக் கொதிகலன் மூலம் எண்ணெய் பிரித்தெடுக்கலாம். இந்த மையம் அமைப்பதற்கு தேசிய தோட்டக்கலை வாரியம் கடன் வழங்கி வருகிறது. ஒரு ஏக்கர் நிலத்தில் வளர்ந்துள்ள புற்களை அறுவடை செய்தால், ஒரு டன் புல் கிடைக்கும். இதனை நீராவி கொதிகலன் வழியாக எண்ணெய் பிழிந்தெடுத்தால் 3 முதல் 5 கிலோ எண்ணெய் கிடைக்கும். இந்த எண்ணெயை உடனடியாக சந்தையில் விற்க முடியும்.

ஒரு கிலோ எண்ணெய் ரூ. ஆயிரம் வரை விலை போகிறது. எண்ணெய் எடுக்கப்பட்ட புற்களையும் விற்பனை செய்து வருமானம் பார்க்கலாம். திருவண்ணாமலை, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் இந்த புல் வகைகள் பயிரிடப்படுகின்றன. இந்த மாவட்டங்களில் மட்டும் 20 க்கும் மேற்பட்ட எண்ணெய் பிழிந்தெடுக்கும் ஆலைகள் உள்ளன. எல்லா வகையான வாசனை திரவியங்கள், ஊதுபத்தி, வாசனை மெழுகுவர்த்தி உள்பட பல்வேறு பொருட்களில் இந்த எண்ணெய் சேர்க்கப்படுவதால் எல்லா காலங்களிலும் இந்த எண்ணெய்க்கு மதிப்புள்ளது.


கிருமிகளை ஒழிக்கும்
தற்போது இந்த எண்ணெய் பயன்படுத்தும் இடங்களில் கொசு உள்ளிட்ட நோய் பரப்பும் கிருமிகளின் தொல்லை கட்டுப்படுத்தப்படுவதால் வீடுகளில் வாங்கி தெளிக்கும் போக்கு இருந்து வருகிறது. இயற்கையான கிருமிநாசினி என்பதுடன், உடலுக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்பதால் ஏராளமானவர்கள் இந்த வகை எண்ணெய்களை வாங்கி செல்கின்றனர். வருங்காலத்தில் மிகச்சிறந்த சந்தை வாய்ப்புள்ள இந்த வகை புல் பயிர்களை விவசாயிகள் இப்போதே பயிரிட தொடங்கி வருவாய் ஈட்டும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

இந்த புல்வகைகளை விவசாய கல்லூரிகளில் பெற முடியும். அணுகி கேளுங்கள்.

உங்கள் காதலியை அல்லது மனைவியை அசத்த ஒரு அதிசய பரிசு!!!

2 கருத்துகள்

சுகாசினி அணிந்து பார்க்கும் காகித நகைகள்
உங்கள் மனதுக்கு பிடித்த காதலியின் மனம் கவர திடீர் பரிசு ஒன்றை அளிக்க நீங்கள் நினைக்கிறீர்கள். அந்த பொருள் விலை அதிகம் அல்லது குறைவது என்பதை விட வித்தியாசமான ஒன்றாக இருந்தால், அதை அவர்கள் விழிகள் அகல வாங்கும் போது என்னவொரு மகிழ்ச்சி இருக்கும்? சரி இப்படி வித்தியாசமான ஒரு பரிசு பொருளை வாங்க எங்கே போய் தேடுவது என்பது தானே உங்கள் அடுத்த கேள்வி? மேலே படியுங்கள்.

சென்னையில்  நுங்கம்பாக்கம் ஐயப்பன் கோவில் இருக்கும் மகாலிங்க புரத்தில இருக்கிறது  ஸ்ரீகிரித்தி ஈகோ பேஷன் பொட்டீக்.   தங்க நகைக்கடை போல இருக்கிறது.  ஆனால் கைவினை பொருள்கள் விற்பனை தான் இங்கு சிறப்பு. இந்த ஷோரூமின் உரிமையாளர் உஷா. டெல்லியில் பல காலம் இருந்து விட்டு பின்னர் சென்னையில் செட்டிலாகி விட்டவர். இயற்கையின் மேல் அலாதி பிரியம் கொண்டவர்.
தனது ஷோரூமில் இருந்த கைவினைப்பொருட்களை பற்றி விளக்கினார். " இந்த ஷோரூமின் நோக்கமே, செயற்கை எதுவும் இல்லாத இயற்கையான பொருட்களால் உருவாக்கப்பட்ட கைவினைப் பொருட்களை உருவாக்கி விற்பனை செய்வது தான். முதன் முதலில் சென்னையில் காகித நகைகளை அறிமுகப்படுத்தினேன். இந்த நகைகள் மற்றவற்றிலிருந்து வித்தியாசமானதாக இருந்ததால் மிகுந்த வரவேற்பை பெற்றது.

குழந்தைகள், கல்லூரி மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்ட அத்தனை பேருக்கும் இந்த நகைகள் பிடித்திருந்தது. அவர்கள் தங்கள் தோழிகளுக்கும், உறவினர்களுக்கும் இதை அறிமுகம் செய்தார்கள். இவை காகிதத்தில் தான் செய்யப்பட்டது என்றாலும், தண்ணீர் பட்டால் நனைந்து அழிந்து போய் விடும் என்றெல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை. இந்த காகித நகையை அணிந்து கொண்டு நீச்சலடித்தால் கூட எதுவும் ஆகாது. அப்படியே இருக்கும்.
இந்த நகைகளுக்கு கிடைத்த வரவேற்பு தான் என்னை இயற்கையான பல கைவினைப் பொருட்களை வாங்கி விற்கத் தூண்டியது. காகித நகைகளுக்காக தொடங்கப்பட்ட இந்த ஷோரூமில் தற்போது இயற்கை மணிகளால் ஆன மோதிரங்கள், இயற்கை சாயம் கொண்டு உருவாக்கப்பட்ட கண்ணைக்கவரும் டாப்ஸ், சுடிதார், லெக்கின்ஸ், இயற்கையான சத்தூட்ட பானங்கள் என்று பல விதமான இயற்கை பொருட்கள் இங்கு விற்பனைக்கு வைத்திருக்கிறோம். இங்குள்ள அனைத்துமே 100 சதவீதம் இயற்கையானவை என்பதால் சுற்றுசூழலில் ஆர்வமுள்ள சாதாரண கல்லூரி மாணவிகள், பிரபலங்கள் மற்றும் நடிகைகள் என்று சமூகத்தின் அனைத்து தரப்பினரும் வந்து தங்களுக்கு பிடித்தவற்றை வாங்கி செல்கிறார்கள்" என்றார். காகித நகைகளின் படனகளை பார்க்க.....
http://s1204.photobucket.com/albums/bb413/greenindia/

இங்கு இந்த ஷோரூம் பற்றி வார்த்தைகளால் சொல்லிக் கொண்டு போவதை விட இங்கு சென்று பாருங்கள், உங்கள் காதலியையோ, மனைவியையோ அசத்த நினைத்தால் ஒரு பரிசை வாங்கி கொண்டு போய் ஆச்சரியப்படுத்துங்கள். இங்கு போய் சாதாரணமானவர்கள் வாங்கும் அளவு விலை இருக்குமா என்று சந்தேகம் உங்களுக்கு வரலாம். நிச்சயமாக 50 ரூபாயிலிருந்து அழகான பரிசுப் பொருட்கள் இங்கு கிடைக்கின்றன.

குறிப்பாக, இங்கு விற்கப்படும் சேலைகள் வேறு எங்கும் கிடைக்காத ஒன்று. பருத்தியையும், மூங்கில் மரத்திலிருந்து எடுக்கப்பட்ட நாரையும் கொண்டு நெய்து சேலையாக உருவாக்கியிருக்கிறார்கள். மேலும் வாழை நாரையும், பருத்தியையும் கொண்டு நெய்து விதவிதமான சேலைகளை விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள். இந்த சேலைகளின் வேலைப்பாடுகள், படங்கள் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.
முகவரி:

Shrikriti Eco Fashion Botique,
73/67.Ground Floor,
Balaji Apartments, Scheme Road, 3rd street,
Kamdar Nagar, Mahalinga Puram,
Nungambakkam, Chennai-34

99623 00820 /99624 00820மனிதனின் குப்பை கிடங்காகும் பூமிப்பந்து-குப்பை குறைய ஒரு எளிய உத்தி

1 கருத்துகள்பூமிப்பந்து மனிதர்களால் பயன்படுத்தி எறியப்படும் பொருட்களால் குப்பை கிடங்காக மாறிவருகிறது. அமெரிக்கா, ஜெர்மன், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கூட தங்கள் நாட்டில் சேரும் குப்பைகளை அப்புறப்படுத்த வழி தெரியாமல் திண்டாடி வருகின்றன. இன்னும் சிறிது காலத்தில் இப்படி சேரும் குப்பைகளால் மிகப்பெரிய பிரச்சினை உருவாக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

ஆனால் உண்மையில் குப்பை என்பது பிரச்சினையா? இல்லை என்பது தான் பதில். அதாவது வீணாகும் பொருட்களை சரியான விதத்தில் மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் நுட்பத்தை பற்றிய விழிப்புணர்வு இன்னும் இல்லை என்பதே உண்மை. இன்னும் சரியாக சொல்லப் போனால் நாம் நமது தேவைக்கான பொருட்களை உருவாக்குகிறோம்.

ஆனால் அதே பொருளின் வேண்டாத பாகத்தை தூக்கி எறிந்து விடுகிறோம். அது என்னவானது என்று நாம் கவலைப்படுவதில்லை. உலகின் பல்வேறு நாடுகளிலும் இப்படி எறியப்பட்ட பிளாஸ்டிக்கும், பாலித்தீனும் கழிவு நீர்க்கால்வாய்களை அடைத்துக் கொண்டு மிகப்பெரிய அடைப்புகளை ஏற்படுத்துகின்றன.

இதனால் கழிவு நீர் தேக்கம், நோய்கள்  என்று வேறு வடிவத்தில் பிரச்சினைகள் உருவாகின்றன (இப்போது எலக்ட்ரானிக் குப்பைகள் மிகப்பெரிய தலைவலியாக உருவாகி வருகின்றன). இந்த கழிவுகளை எல்லாம் சரியான விதத்தில் மறுசுழற்சி செய்வதற்கான தொழில்நுட்பத்தில் உலக நாடுகள் ஒன்றிணைந்து இறங்கி ஆய்வுகளில் ஈடுபட்டு கண்டுபிடிப்புகளை உருவாக்கும் பட்சத்தில் தான் குப்பை பிரச்சினைக்கு முடிவு கட்டப்படும்.
      
நகரங்களில் தான் நுகர்வு கலாச்சாரம் என்பது பொதுவான விதி. ஆனால் தற்போது வசதிகள் இல்லாத ஆனால், அழகும், பசுமையும் நிறைந்த எத்தனையோ கிராமங்கள் கூட நகரங்களைப் போலவே பாலிதீன் பைகளாலும், வேறு பல குப்பைகளாலும் பொலிவை இழந்து வருகின்றன. கிராம மக்கள்சரியாக திட்டமிட்டால், கிராமங்கள் தங்கள் பகுதியில் கிடைக்கும் இந்த கழிவுகளை கொண்டே தங்களுக்கு தேவையான உரம் மற்றும், எரி பொருள் தேவையை ஒரளவு சமாளித்து விடலாம். குப்பைகளை மறுசுழற்சி செய்வதால் தங்கள் கிராமத்தை குப்பைகள் அற்ற நல்ல அழகான கிராமமாக ஆக்கலாம். இதற்கு ஒரு எளிய முறையை இங்கு பார்க்கலாம்.
       
இந்தியா முழுக்க இன்னும் பல ஏக்கர் கணக்கான நிலங்கள் விவசாயம் செய்யப்படாமல் கிடக்கின்றன என்கிறது ஒரு புள்ளி விவரம். காரணம், உரவிலை ஏற்றமும் இதில் ஒன்று. இவை விவசாயிகளை சலிப்பில் ஆழ்த்துகின்றன. பொதுவாக இன்றைக்கு இயற்கை உரத்தின் மூலம் விளைந்த காய்கறிகளுக்கு உலகம் முழுவதிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. செயற்கை உரத்தின் மூலம் விளைவிக்கப்பட்ட காய்கறி, பழங்களை விட இவற்றுக்கு விலை இரண்டு மடங்கு கூடுதல் என்றாலும், அதனை வாங்கிக் கொள்ள உலகின் பல பகுதியிலும் பலர் தயாராக தான் இருக்கின்றனர்.

இன்னும் சில ஆண்டுகளில் இயற்கை உரத்திற்கான தேவை அதிகளவு இருக்கும் என்கிறார்கள் விவசாய நிபுணர்கள். எனவே, கிராமங்களில் இது போன்ற கம்போஸ்ட் உரங்களை தயார் செய்ய திட்டமிட்டால், கிராமங்கள் சுத்தமானதாகவும், மறுசுழற்சி மூலம் வருமானம் பெறுவதாகவும், பல பேருக்கு வேலை வாய்ப்பு இருக்க கூடிய சூழலிலும் அமையும் என்று நம்பலாம். கிராமத்து இளைஞர்கள் சேர்ந்து இந்த திட்டத்தை முயற்சி செய்தால் கம்போஸ்ட் உர விற்பனை வலுவான சிறு தொழிலாக உருவெடுக்கும் என்பதில் மாற்றமில்லை.
இனி...இந்த இயற்கை உரத்தை எப்படி எளிதாக உங்கள் சொந்த கிராமங்களில் தயார் செய்யலாம் என்பது பற்றி வேளாண் ஆய்வு நிறுவனத்தை சேர்ந்த வேளாண் பட்டதாரி நாராயணன் கூறுவதை பார்க்கலாம்.
இயற்கை உரத்தின் ரகசியம்
  " பொதுவாக எந்த நிலத்தில் கரிம சத்து (ஆர்கானிக் சத்து) அதிகம் இருக்கிறதோ அந்த நிலத்தில் தான் பயிர்கள் நன்றாக வளரும். காடுகளில் உள்ள மரங்கள், செடிகள் செழிப்பாக பச்சை பசேல் என்று இருப்பதை பார்க்கலாம். காரணம், மரங்கள் உதிர்க்கும் இலைகள் மண்ணோடு கலந்து மக்கி மீண்டும் உரமாக அதே மரத்திற்கு கரிம சத்தை ஊட்டுகிறது. இது தான் இயற்கை உரத்தின் ரகசியம்.


இப்படி மரத்திலிருந்து உதிர்ந்து விழும் இயற்கையான இலை, தழைகளை மண்ணில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத பூஞ்சைகளும், பாக்டீரியா என்ற சிறு நுண்ணுயிரிகளும் சேர்ந்து நொதிக்க வைத்து மக்க செய்து விடுகின்றன. இந்த நுண்ணுயிரிகளால் மக்கி உரமாகும் இந்த கழிவுகள் ஏராளமான கரிம சத்து நிரம்பியதாக இருப்பதால், இது இருக்கும் இடங்களில் உள்ள தாவரங்கள் பச்சை பசேலென்று இருக்கும். இது தான் இயற்கை உரத்தின் ரகசியம்.

அடர்ந்த காடுகளில் இது போன்ற கரிம இயற்கை உரங்கள் தானே உருவாகின்றன. ஆனால் நம்மை சுற்றி, நம்மால் பயன்படுத்தப்பட்ட காய்கறி, பழங்கள் மற்றும் வேறு பல இயற்கையான தாவர, விலங்கு கழிவுகளை வைத்து கரிம உரங்களை தயார் செய்து விற்கலாம்.

எளிய தொழில்நுட்பம்
இயற்கையான உரம் தயாரிக்க சாதாரணமாக வெட்டவெளியான இடம் போதுமானது. இந்த இடத்தில் அதிகமாக வெயில்படக்கூடாது. மழைத்தண்ணீரும் பொழியக்கூடாது. பொதுவாக இதை ஒரு கூரை அமைப்பின் கீழ் செய்வது நல்லது. ஆனாலும் மிகசிறிதளவு வெப்பம் குவிக்கப்பட்ட கழிவுகளின் மீது பட வேண்டும். இப்படி இடத்தை தேர்வு செய்த பின் அந்த இடத்தில் ஊரில் கிடைக்கும் கரும்பு தோகை, வாழை மட்டை, காய்கறி கழிவுகள், சாணி, இத்யாதிகளான மக்கும் கழிவுகளை எல்லாம் கொண்டு வந்து குவிக்க வேண்டும்.

சாக்கடைகளில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை கூட கொண்டு வந்து சேர்க்கலாம். இதற்கடுத்து இவற்றை மக்க வைக்க தேவையான கம்போஸ்டிங் கல்ச்சர் என்ற ஒரு கலவை ( இது விவசாய இடு பொருள் விற்பனை மையங்களில் கிடைக்கும்) யை கொண்டு வந்து இந்த குவியலின் மீது தெளித்து விட வேண்டும்.
அல்லது பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் கலந்த எபக்டிவ் மைக்ரோ ஆர்க்கனிசம் என்ற கலவையையும் பயன்படுத்தலாம்.

இப்படி நுண்ணுயிர் கலவை தெளிக்கப்பட்ட கழிவு குவியலில் வேகமாக பாக்டீரியாக்களும், பூஞ்சைகளும், மண்ணில் உள்ள கண்ணுக்கு தெரியாக சில பூச்சிகளும் செயல்பட்டு நொதிக்க தொடங்கும். இப்படி நொதிக்க தொடங்கும் நிலையில் கழிவுகள் உருமாற தொடங்கும். உதாரணமாக ஒரு கத்தரிக்காயின் காம்புகள் அதை கத்தரிக்காயின் காம்பு தான் என்று சொல்ல முடியாதபடி அழுகி உருமாறி வரும். இப்படி ஒட்டு மொத்த கழிவுகளும் மெதுவாக அழுகி வரும்.
இப்போது இந்த கழிவு குவியலில் அபரிமிதமான வெப்பம் உருவாகி இருக்கும். இந்த வெப்பத்தை அப்படியே விட்டு விட்டால், இந்த நொதிக்கும் செயல் நின்று விடும். காரணம், இந்த வெப்பம் அதிகரிக்கும் போது நொதிக்கும் நுண்ணுயிரிகள் செயல்பாட்டை குறைத்து விடும். எனவே, இந்த வெப்பம் அதிகரிக்காமல் தடுக்க கழிவு குவியலின் மீது தண்ணீர் தெளித்து கொண்டே வரவேண்டும்.

சத்துள்ள உரம் ரெடி
இப்படி தொடர்ந்து கழிவு குவியலின் மீது அடிக்கடி தண்ணீர் தெளித்து வருவதுடன், அவ்வப்போது குவியலை கிளறி விட்டுக் கொண்டே வரவேண்டும். கழிவுகளின் மக்கும் தன்மையை பொறுத்து ஒருவாரம் முதல் 2 வார கால அளவில் இந்த கழிவுகள் நுண்ணிய துகள்களாக மாறிவிடும். இது மிகவும் மிருதுவாக, பொலபொலப்பு தன்மையுடன் இருக்கும். இது தான் கம்போஸ்ட் உரம்.


இதில் ஒரு பயிருக்கு தேவையான அனைத்து சத்துகளும் இருக்கும். எந்த கழிவை மக்க வைக்க பயன்படுத்தினோமே, அதில் இருந்ததை போல் 4 மடங்கு சத்துகள் இந்த உரத்தில் இருக்கும். 2 கிலோ கழிவை மக்க வைக்க குவியலாக வைத்திருந்தால், அதிலிருந்து ஒன்றே முக்கால் கிலோ உரம் கிடைக்கும். இந்த உரத்தை 100 கிராம் பாக்கெட்டு முதல் 5 கிலோ, 50 கிலோ சாக்கு பைகள் வலை மூடைகளாக தைத்து விற்கலாம்.

எங்கு விற்கலாம்?
அதாவது ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி வாழை பயிரிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் அறுவடை எடுத்த பிறகு அந்த வாழை தோப்பில் இருக்கும் மரங்களை சுத்தப்படுத்த ஏக்கருக்கு 4 ஆயிரம் வரை செலவிட வேண்டியதிருக்கும். இந்த சமயத்தில் இந்த தோப்புகளிலிருந்து மரங்களை அந்த விவசாயிகளுக்கு செலவில்லாமல் எடுத்து வந்து உரமாக மாற்ற கழிவாக பயன்படுத்தி கொள்ளலாம்.
இதிலிருந்து தயாராகும் கரிம ஆர்கானிக் உரத்தில் எல்லா சத்துகளும் நிரம்பியிருப்பதால், அதனை அழகு செடிகள் விற்கும் நர்சரிகளுக்கு விற்பனை செய்யலாம். அதே ஊரில் உள்ள விவசாயிகளுக்கும் குறைந்த லாபத்தில் விற்கலாம். காரணம், அறுவடை முடிந்த பிறகு அதே விவசாயிகளிடம் இருந்த விவசாய கழிவுகளை கம்போஸ்ட்டுக்கு பெற்றுக் கொள்ளலாம்.
இது தவிர நகர்ப்புறங்களில் வீடுகளில் செடி வைத்திருப்பவர்களிடம் விற்கலாம்.

இந்த உரத்திற்கு செயற்கை விட அதிகம் நீரை தக்க வைக்கும் திறன் அதிகம் இருப்பதால், விவசாயிகள் விரும்பி வாங்குவார்கள். இப்படி இயற்கை உரத்தை ஒரு விவசாயி முழுக்க வாங்கி பயன்படுத்தி காய்கறி விளைச்சலை எடுக்கிறார் என்றால், இந்த காய்கறிகளை பாக்கெட்டுகளில் அடைத்து இயற்கை உரம் பயன்படுத்தி விளைவித்த காய்கறி என்று பாக்கெட்டுகளில் எழுதி நல்ல விலைக்கு நகர்ப்புறங்களில் விற்கலாம்.
இது தவிர இயற்கை விவசாய விளைபொருட்களை வாங்குவதற்காக உலகின் பலநாடுகள் தயாராக இருக்கின்றன. இணைய தளங்களில் போய் பார்த்தால் இதற்கான ஆர்டர்களை பெற முடியும். பிறகென்ன...உங்கள் கிராமத்தில் நீங்கள் தான் ஏற்றுமதியாளர். அங்கிருந்து கிடைக்கும் பணத்தின் மூலம் பாடுபட்ட உழைத்த விவசாயிக்கும் நல்ல கூலியை நீங்கள் தர முடியும். படித்த கிராமத்து இளைஞர்கள் இது போன்ற தொழில் முயற்சிகளில் இறங்கினால் நல்ல ஒரு பலனை உங்கள் ஊருக்கு செய்ய முடியும்.

இயற்கை உரம் தயாரிப்பது எப்படி என்ற பயிற்சியை உங்கள் கிராமத்திற்கே வந்து சொல்லித்தர தயாராக இருக்கிறார்கள் வேளாண்அறிவியல் பட்டதாரிகள். இவர்களை தொடர்பு கொள்ள 94435 69401 மற்றும் 98424 65158 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

வீடுகளில் வளர்க்கலாம் லிச்சி மரம்

4 கருத்துகள்


குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் கண்ணைக்கவரும் ரோஸ் நிறத்திலான லிச்சி பழங்களை பழ வியாபாரிகள் தற்போது வடமாநிலங்களிலிருந்து கொண்டு வந்து தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களிலும் விற்பனை செய்து வருகிறார்கள். ஏன் லிச்சி மரம் தமிழ்நாட்டில் வளர்க்க முடியாததா? லிச்சி மரங்களை தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வளர்ப்பதற்கான சூழ்நிலை இருக்கிறது.

(லிச்சி பழத்தின் ஆரோக்கிய தன்மைகளை கீழே கொடுத்துள்ளேன்)

இதனை தோட்டம், வீடுகளில் வளர்த்தால் பருவத்தில் ருசியான லிச்சி பழங்களை ஏராளமாக பெறலாம் என்கிறார் விவசாயத்துறையில் ஆய்வு செய்து வரும் முனைவர் ராஜ்பிரவீண்.
லிச்சி மரங்கள் எந்த மண்ணில் வளரும்? எப்படி பராமரிப்பது என்பது பற்றிய சாகுபடிக்குறிப்புகளை அவர் கூறுகிறார். காலம்காலமாக  மண்ணில் ஒரே சாகுபடியை செய்து நொந்து நூலான விவசாயிகள் இந்த புதிய வரவை தங்கள் மண்ணில் பதித்து காசு பார்க்கலாம். இதோ....

" தற்போது சில தனியார் நிறுவனங்களும், விவசாயிகளும் லிச்சி பழ சாகுபடியில் இறங்கி வருகிறார்கள். காரணம், மாம்பழங்களுக்கு நல்ல ஏற்றுமதி வாய்ப்பு இருப்பது போல்,லிச்சிபழத்திற்கு உள்நாட்டில் பலத்த வரவேற்பிருக்கிறது. குறிப்பாக இந்த பழத்தை பயன்படுத்தி பதப்படுத்திய பழச்சாறு உள்ளிட்ட சில பொருட்களை தயாரித்து விற்பனை செய்கிறார்கள். தற்போது தமிழ்நாட்டில் லிச்சி பழத்திற்கான வரவேற்பு அதிகம். இதற்காக இந்த பழங்களை வியாபாரிகள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள். ஆனால் இதற்கு அவசியமே இல்லை. தமிழ்நாட்டின் பல இடங்களில் லிச்சி மரங்களை வளர்க்க முடியும்.

பொதுவாக வடமாநிலங்களில் லிச்சி மரங்களை மரத்துக்கு மரம் 9 மீட்டர் இடைவெளியில் நடுகிறார்கள். ஆனால் இதனை 7 மீட்டர் இடைவெளியில் நடவு செய்வதன் மூலம் 1 எக்டரில் கூடுதலாக மரங்களை நடமுடியும். அதாவது எக்டருக்கு 200 முதல் 300 மரங்களை நடலாம். நடவு செய்யும் முன் தோட்ட நிலங்களை நன்றாக கொத்தி கிளறி உழுது விட்டு பின்னர் இந்த குழிகளில் இயற்கை உரங்களை கொட்டி வைக்க வேண்டும். பின்னர் அந்தந்த பகுதியின் சீதோஷ்ண நிலைக்கு தகுந்த லிச்சி மரக்கன்றுகளை வாங்கி குழிகளில் நடலாம். குறிப்பாக சீனா, பம்பாய், கொல்கத்தா, க்ரீன் போன்ற லிச்சி கன்று ரகங்கள் தமிழ்நாட்டின் தட்பவெப்பத்தை தாங்கி வளரக்கூடியவை.

இந்த ரகங்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு தேர்வு செய்து நட்டபின் அவை வளரத் தொடங்கும் சூழ்நிலையில் ஒவ்வொரு மாத இடைவெளியிலும் ஒரு கிலோ தழைச்சத்து, அரை கிலோ மணிச்சத்து மற்றும் ஒரு கிலோ சாம்பல் சத்து உரங்களை இடவேண்டும். வாரத்திற்கு ஒரு முறை நீர் பாய்ச்சவதும் அவசியம். லிச்சி மரக்கன்றுகள் கொஞ்சம் பெரிதான உடன் 15 நாட்களுக்கு ஒரு தடவை நீர்பாய்ச்சலாம். கன்றுகள் செழுமையாக வளர்ச்சி பெற்ற நிலையில் 5 கிலோ ஊட்டமேற்றிய உரம், 150 கிராம் தழைச்சத்து, 150 கிராம் மணிச்சத்து மற்றும் 150 கிராம்  சாம்பல் சத்தை மண்ணுடன் கலந்து விட வேண்டும்.

லிச்சி மரங்கள் வளர்ந்த 7 முதல் 9 ஆண்டுகளில் பலன் கொடுக்க தொடங்கும். பழங்கள் காய்க்க தொடங்கும். இந்த நேரத்தில் 100 கிலோ ஊட்டமேற்றிய தொழுஉரம், 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 2 கிலோ தழைச்சத்து, 2 கிலோ மணிச்சத்து, 800 கிராம் சாம்பல் சத்து ஆகியவற்றை தொடர்ந்து கொடுக்க வேண்டும்.லிச்சிமரங்களுக்கு இடையே ஊடுபயிராக முட்டைகோஸ், வெங்காயம், உருளைக்கிழங்கு, வெண்டை,  கிளாடியோஸ் மரம் ஆகியவற்றை பயிர் செய்யலாம். இதனால் கூடுதல் வருமானம் உறுதி. நன்றாக வளர்ந்த மரத்திலிருந்து, சாதாரண ரகங்களில் கூட ஒரு அறுவடைக்கு 80 கிலோ முதல் 90 கிலோ வரை மகசூல் கிடைக்கும். நல்ல ரக கன்றுகளாக இருந்தால் 100 முதல் 110 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.

இந்தியாவில் விளையும் பழவகைகளில் லிச்சிக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பெரிய அளவில் கிராக்கி உள்ளது. இதனால் மரம் அறுவடைக்கு தயாராகும் போதே காசு கைக்கு வர வாய்ப்பிருக்கிறது. தற்போது லிச்சி பழத்திலிருந்து பல மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயார் செய்யப்படுகின்றன. லிச்சியின் பழச்சாறு, லிச்சி ஸ்குவாஷ், லிச்சி இனிப்புகள் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன. லிச்சி தோட்டங்களில் தேனீ வளர்ப்பு செய்யலாம். இதுவும் கூடுதல் வருமானத்துக்கு வழிவகுக்கும். எனவே தென்மாவட்டங்களில் லிச்சி பழ தோட்டங்களை உருவாக்குவதன் மூலம் விவசாயிகள் லாபகரமான எதிர்காலத்தை நோக்கி பயணத்தை தொடங்குகிறார்கள் என்று சொல்ல முடியும் என்கிறார் முனைவர் ராஜ்பிரவீன்.

வீடுகளில் லிச்சியை வளர்க்க விரும்புபவர்கள் உங்கள் மாவட்டங்களில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் இந்த மரத்தின் கன்றுகளை பெற முடியும். அணுகி கேளுங்கள்.இதயத்திற்கும், ஈரலுக்கும் பலம் தரும் லிச்சி!

 • இதயமும், ஈரலும் உடலின் பிரதான பாகங்கள். இந்த இரண்டு உடல் உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைப்பதில் லிச்சிக்கு முதலிடம். 
 • பொதுவாக லிச்சி மரத்தின் பழம், விதை, பூ, வேர்ப்பட்டை ஆகிய அனைத்துக்கும் மருத்துவ பயன்பாடு அதிகம். 
 • லிச்சி பழம் இனிப்பான ரோஜா மலரின் வாசனை தரும். பழத்தை தினமும் உண்டு வந்தால் இதயம் நல்ல ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாப வேலை செய்யும். 
 • ஈரல் உடலின் பல்வேறு விஷங்களால் நொந்து போயிருக்கும். லிச்சியின் பழச்சாறு இந்த விஷத்தன்மையை குறைத்து ஈரலுக்கு உரம் ஊட்டும். 
 • தாகத்தை தணிக்கும். 
 • இந்தோனேஷியாவில் இதன் விதைகளை குடல்சார்ந்த நோய்களை குணப்படுத்தவும், மலேசியாவில் நரம்பு நோய்களை சரிப்படுத்தவும் பயன்படுத்துகிறார்கள். 
 • இதன் பூக்களும், வேர்ப்பட்டையும் தொண்டையில் உண்டாகும் பல்வேறு நோய்களை தீர்க்க பயன்படுகிறது.
 • புகைபழக்கம், பாக்கு பழக்கத்தினால் தொண்டைப்பகுதியை ரணப்படுத்தியிருப்பவர்கள் லிச்சி பழங்களை உண்பது நலம். 
 • சீனாவில் பூச்சிகடித்து விட்டால் லிச்சி மரத்தின் இலைகளை சாறு எடுத்து பிழிந்து விடுகிறார்கள்.
 • லிச்சி பழத்தில் உடலின் கட்டுமான உணவு என்று சொல்லப்படும் புரதம் 1.1 கிராம், 
 • தோல்தடிப்பாயும், சொரசொரப்பாகவும் மாறும் தவளைசொறி நோயை கட்டுப்படுத்தும் தாவர கொழுப்பு 0.2 கிராம், 
 • இன்றைக்கு பலருக்கும் அன்றாட பணியில் சிக்கலை ஏற்படுத்தும் மலச்சிக்கலை கட்டுப்படுத்தி குடலின் தசைநார்களை சீராக இயங்க வைக்கும் நார்ப்பொருள் 0.5 கிராமும், எலும்பு, பல் பலம் பெற உதவும் கால்சியம் 10 மில்லிகிராமும், கால்சியம் உடலில் சேர உதவும் பாஸ்பரஸ் 35 மிகி, உடல் வெளுத்து போவதை தடுத்து நிறுத்தும் இரத்த சிவப்பணுக்களின் கட்டமைப்புக்கு முக்கியமான இரும்பு சத்து 0.7 மிகி, 
 • நாக்கு வீங்குவது, சிவந்து பிளவுபடுதல், வாய்ஓரங்களில் வெடிப்பு உண்டாவதை தடுத்து நிறுத்தும் ரைபோபிளேவின் 0.06 மிகி, 
 • சளி உருவாகாமல் தடுத்து தலைசுற்றல், கிறுகிறுப்பை தடுக்கும் வைட்டமின் சி 31 மிகி, மக்னீசியம் 10 மிகி, பொட்டாஷியம் 159 மிகி, தாமிரம் 0.30 மிகி களோரின் 3 மிகி உள்பட எராளமான சத்துக்கள் லிச்சி பழத்தில் தாராளமாக உள்ளன. 
 • அவ்வப்போது இதனை உணவில் சேர்த்துக் கொண்டால்..உடல்நலன் நிச்சயம் நன்றாக இருக்கும் என்பதில் மாற்றமில்லை.

பறவை பார்த்தலில் பெண்கள் சாதிக்க முடியுமா?நிரூபித்த மதுரை லேடிடோக் கல்லூரி பேராசிரியை.

2 கருத்துகள்

சில்வியா ஆலிவ் ராலின் வெளியிட்ட பறவை பார்த்தல் பற்றிய நூல்
பறவை பார்த்தலில் பெண்கள் சாதிக்க முடியுமா? நிச்சயம் முடியும் என்பதற்கு ஒரு உதாரணம் சில்வியா ஆலிவ் ராலின். மதுரை லேடி டோக் கல்லூரியின் உயிரியல் துறை பேராசிரியையாக இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்று விட்டவர். தன்னிடம் படித்த மாணவிகளுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க முடிவெடுத்தவர், அதனை தனது கல்லூரியிலிருந்தே தொடங்கினார்.

மதுரை லேடி டோக் கல்லூரி மதுரையில் மிகவும் புகழ் பெற்ற கல்லூரிகளில் ஒன்று. கல்லூரி 1948 ல் தொடங்கப்பட்டது. பரந்து விரிந்த வளாகத்தை கொண்டது.கிட்டத்தட்ட 500 க்கும் மேற்பட்ட அடர்த்தியான மரஙகள் இந்த கல்லூரியில் செழித்து வளர்ந்து கிடக்கிறது. இந்த மரங்களை தங்களது வீடுகளாக பயன்படுத்தி தங்களது கூட்டை அமைக்கும் பறவைகள் இங்கு நிறையவே வருவதுண்டு.

இந்த பறவைகளையும், அவற்றின் வாழ்க்கையையும் பதிவிட விரும்பினார் சில்வியா ஆலிவ் ராலின். கையில் ஒரு கலர் பென்சில், கொஞ்சம் காகிதங்கள் இவ்வளவு தான் அவரது உடமைகள். களத்தில் இறங்கினார். ஒவ்வொரு சீசனுக்கும் கல்லூரி வளாகத்தில் உள்ள மரங்களுக்கு வரும் பறவைகளை கவனிக்க தொடங்கினார்.

சில பறவைகள் கூடுகட்ட தொடங்கியவுடன் அந்த பறவைகளை தொடர்ந்து சில மாதங்களுக்கு அதே மரத்தில் பார்க்க முடியும். ஒரு விலங்கியல் பேராசிரியை என்பதால் சில்வியா ஆலிவ் ராலினுக்கு இது நன்றாகவே தெரியும். இதனால் இப்படி குறிப்பிட்ட மரங்களுக்கு வரும் பறவைகளை தொடர்ந்து கவனித்து அவற்றின் இயல்புகளை பதிவு செய்து கொண்டே வந்தார். அவற்றை வரையவும் செய்தார்.

இப்படி இவர் தனது கல்லூரி வளாகத்தில் உள்ள மரங்களுக்கு வந்த பறவைகளை கவனித்து பதிவு செய்து ஒரு புத்தகமாகவும் வெளியிட்டார். அந்த புத்தகத்தின் பெயர் ( Birds Of Lady Doak Campus and Tallakulam Area of Madurai- A guide for students and bird lovers) என்ற அருமையான புத்தகத்தை பதிவு செய்தார். இந்த புத்தகத்தில் ஏறத்தாழ 42 வகையான பறவைகள் அந்த கல்லூரி வளாகத்தில் காணப்பட்டதாக அவர் பதிவு செய்திருக்கிறார்.

அவை, சிட்டுகுருவி, தூக்கணாங்குருவி, வாலாட்டி குருவி, வாலாட்டி, சின்னகுக்குருவன், அண்டங்காக்கா, அரிசிக்காக்கா, வைரி, சவுக்குருவி, பருந்து, கருடபருந்து, மைனா, பூணுல்குருவி, தொட்டகல்லன், பனங்காடை, கொண்டலாத்தி, மரங்கொத்தி,குருட்டு கொக்கு, தம்பி குருவி,குயில், குருங்குருவி,பூஞ்சிட்டு, மாம்பழம் தின்னி,மீன் கொத்தி உள்பட பல வகையான பறவைகளை பதிவு செய்திருக்கிறார்.

இந்த புத்தகத்தில் அவர் இந்த பறவைகளின் படத்துடன் இயல்புகள் பற்றி விபரங்களையும் சிறிய அளவில் வெளியிட்டுள்ளார். இந்த புத்தகம் ஆங்கிலத்தில் இருந்தாலும் எளிதில் புரிந்து கொள்ளும் படியாக இருக்கிறது. மதுரையில் பல லட்சக்கணக்கான படித்த நபர்கள் இருந்தாலும் இவருக்கு பிறகு இந்த பறவை பார்த்தல் பற்றி எவரும் பெரிய அளவில் முயற்சித்து எடுத்து இது பற்றிய புத்தகங்கள் வெளியிடவில்லை.

மேலும் குறிப்பாக மதுரை நகரமும் விரிவிடைந்து கொண்டே போவதால், நகரத்தில் பெருகிவரும் போக்குவரத்து இரைச்சல், புகைக்கு தாக்குபிடிக்க முடியாமல் பல அழகான பறவைகளும் தங்களது பறப்பு எல்லையை நகரத்தை விட்டு விலக்கிக் கொண்டு விட்டன என்பது தான் துயரம்.
வரையப்பட்ட பருந்தின் படம்


திருமதி.சில்வியா ராலின் பதிவு செய்த பறவைகளின் ஆங்கில பெயர்களை இங்கு கொடுத்துள்ளேன். ஆங்கிலத்தில் திறனுள்ளவர்கள் இணையத்தில் இந்த பறவைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த வரிசையிலேயே நானும் தமிழில் இந்த பறவைகளை பற்றி பதிவுகளை தொடங்குகிறேன்.

1.House sparrow(passer domesticus)
2. Baya Weaver Bird (ploceus philipinus)
3. Purble Rumbed sunbird(nectarinia Zeylonica)
4. Pubble sunbird(Nectarina asiatica)
5. Red vented bulbul(pycnonotus cafer)
6. pied wactail(Motacilia maderaspatensis)
7. crey wactail(Motacilia caspica)
8. crimson breasted barbet or copper smith(Megalaima haemacephla)
9. House swift(Apus affinis)
10. Palm swift(Cypsivrus parvus)
11. House crow(corvus splendens)
12. Jungle crow(corvus macrohynchos)
13. Crow-Phesant or coucal(centropus Sinensis)
14. Shikra(Accipiter badius)
15. Barn-screech owl(typo alba)
16. spotted Owlet(athene brama)
17. Common Pariah Kite(Milvus indus)
18. Brahminy Kite(Haliastur indus)
19. spotted Dove(streptopelia chinensis)
20.Indian Myna(acridotristis)
21.Brahminy OR Black headed Myna(sturnus Pagodarum)
22. Jungle Babbler(Turdoides striatus)
23. Indian pitta( pitta brachyura)
24.Roseringed Parakeet(psittacula Krameri)
25. Iora(Aegithina tiphia)
26.Blue Jay or Roller(corracias benghalensis)
27. Hoope( upapa Epope)
28. Small Green Bee eater(Merops orientalis)
29. Golden Backed Woodpecker(Dinopium bengahlense)
30. Golden oriole(Oriolos Oriolos)
31. Paradise Flycatcher(Terpsiphone Paradisi)
32. Night Heron(Nycticorax)
33. Paddy Bird(Ardeola grayii)
34. Little Cormorant( phalacrocorax niger)
35.Pied crested cuckoo(Clamator jacobinus)
36.Common Hawk Cukkoo(cuclulus Varius)
37.Black Drongo(Dicruus adsimilis)
38.Koel(Eudynamys scolopacea)
39. Tickll's Flowerpeccker(Dicaeum erythrorhynchos)
40.Tree Pie(Dendrocitta vagabunda)
41.Tailor Bird(Orthotomus sutorious)
42. White Breasted King fisher(Halcyon smyrnensis)

இப்படி பறவைகளின் ஆங்கில பெயர்களுடன்,மலையாளத்திலும், தமிழ்பெயருடன் வகைப்படுத்தியுள்ளார். நான் இந்த பறவைகளின் இயல்புகளை பதிவிடும் போது தமிழ்பெயர்களுடன் வெளியிடுகிறேன். அடுத்த பதிவில் கவுஸ்பேரோ(house sparrow) என்று திருமதி.சில்வியா ராலின் தனது பட்டியலில் முதன் முதலாக குறித்த சிட்டுக்குருவியை பற்றி பார்க்கலாம். சில்வியா ராலின் தான் வரைந்த பறவைகளை பிலிம் நெகட்டிவ் ஆக எடுத்தும் வைத்துள்ளார். அவற்றையும் பதிவில் வெளியிடுகிறேன் நண்பர்களே!
நன்றி!

திருத்தம்

இங்கு கருத்துரையில் பதிவர் திரு.வெற்றி வேல் இந்த பேராசிரியையின் காலம், புத்தகத்தின் காலம் பற்றி கேட்டிருந்தார். இந்த புத்தகத்தை பேராசிரியை சில்வியா வெளியிட்டது 1998. அவர் கல்லூரியிலிருந்து 2001 ல் ஓய்வு பெற்று விட்டார். இந்த புத்தகம் பறவை பார்த்தலுக்கு ஒரு அறிமுகமாக வெளியிடப்பட்ட, அந்த கல்லூரியின் வெள்ளி விழா நினைவாகவும் அமைந்த ஒரு நாள் தானே தவிர இதனை விற்பனைக்கு என்று பிரசுரிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். தேவைப்பட்டால் அந்த புத்தகத்தின் 23 பக்கங்களை நகல் எடுத்து இங்கு வெளியிடலாம். நன்றி

காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today