மனிதனின் குப்பை கிடங்காகும் பூமிப்பந்து-குப்பை குறைய ஒரு எளிய உத்திபூமிப்பந்து மனிதர்களால் பயன்படுத்தி எறியப்படும் பொருட்களால் குப்பை கிடங்காக மாறிவருகிறது. அமெரிக்கா, ஜெர்மன், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கூட தங்கள் நாட்டில் சேரும் குப்பைகளை அப்புறப்படுத்த வழி தெரியாமல் திண்டாடி வருகின்றன. இன்னும் சிறிது காலத்தில் இப்படி சேரும் குப்பைகளால் மிகப்பெரிய பிரச்சினை உருவாக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

ஆனால் உண்மையில் குப்பை என்பது பிரச்சினையா? இல்லை என்பது தான் பதில். அதாவது வீணாகும் பொருட்களை சரியான விதத்தில் மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் நுட்பத்தை பற்றிய விழிப்புணர்வு இன்னும் இல்லை என்பதே உண்மை. இன்னும் சரியாக சொல்லப் போனால் நாம் நமது தேவைக்கான பொருட்களை உருவாக்குகிறோம்.

ஆனால் அதே பொருளின் வேண்டாத பாகத்தை தூக்கி எறிந்து விடுகிறோம். அது என்னவானது என்று நாம் கவலைப்படுவதில்லை. உலகின் பல்வேறு நாடுகளிலும் இப்படி எறியப்பட்ட பிளாஸ்டிக்கும், பாலித்தீனும் கழிவு நீர்க்கால்வாய்களை அடைத்துக் கொண்டு மிகப்பெரிய அடைப்புகளை ஏற்படுத்துகின்றன.

இதனால் கழிவு நீர் தேக்கம், நோய்கள்  என்று வேறு வடிவத்தில் பிரச்சினைகள் உருவாகின்றன (இப்போது எலக்ட்ரானிக் குப்பைகள் மிகப்பெரிய தலைவலியாக உருவாகி வருகின்றன). இந்த கழிவுகளை எல்லாம் சரியான விதத்தில் மறுசுழற்சி செய்வதற்கான தொழில்நுட்பத்தில் உலக நாடுகள் ஒன்றிணைந்து இறங்கி ஆய்வுகளில் ஈடுபட்டு கண்டுபிடிப்புகளை உருவாக்கும் பட்சத்தில் தான் குப்பை பிரச்சினைக்கு முடிவு கட்டப்படும்.
      
நகரங்களில் தான் நுகர்வு கலாச்சாரம் என்பது பொதுவான விதி. ஆனால் தற்போது வசதிகள் இல்லாத ஆனால், அழகும், பசுமையும் நிறைந்த எத்தனையோ கிராமங்கள் கூட நகரங்களைப் போலவே பாலிதீன் பைகளாலும், வேறு பல குப்பைகளாலும் பொலிவை இழந்து வருகின்றன. கிராம மக்கள்சரியாக திட்டமிட்டால், கிராமங்கள் தங்கள் பகுதியில் கிடைக்கும் இந்த கழிவுகளை கொண்டே தங்களுக்கு தேவையான உரம் மற்றும், எரி பொருள் தேவையை ஒரளவு சமாளித்து விடலாம். குப்பைகளை மறுசுழற்சி செய்வதால் தங்கள் கிராமத்தை குப்பைகள் அற்ற நல்ல அழகான கிராமமாக ஆக்கலாம். இதற்கு ஒரு எளிய முறையை இங்கு பார்க்கலாம்.
       
இந்தியா முழுக்க இன்னும் பல ஏக்கர் கணக்கான நிலங்கள் விவசாயம் செய்யப்படாமல் கிடக்கின்றன என்கிறது ஒரு புள்ளி விவரம். காரணம், உரவிலை ஏற்றமும் இதில் ஒன்று. இவை விவசாயிகளை சலிப்பில் ஆழ்த்துகின்றன. பொதுவாக இன்றைக்கு இயற்கை உரத்தின் மூலம் விளைந்த காய்கறிகளுக்கு உலகம் முழுவதிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. செயற்கை உரத்தின் மூலம் விளைவிக்கப்பட்ட காய்கறி, பழங்களை விட இவற்றுக்கு விலை இரண்டு மடங்கு கூடுதல் என்றாலும், அதனை வாங்கிக் கொள்ள உலகின் பல பகுதியிலும் பலர் தயாராக தான் இருக்கின்றனர்.

இன்னும் சில ஆண்டுகளில் இயற்கை உரத்திற்கான தேவை அதிகளவு இருக்கும் என்கிறார்கள் விவசாய நிபுணர்கள். எனவே, கிராமங்களில் இது போன்ற கம்போஸ்ட் உரங்களை தயார் செய்ய திட்டமிட்டால், கிராமங்கள் சுத்தமானதாகவும், மறுசுழற்சி மூலம் வருமானம் பெறுவதாகவும், பல பேருக்கு வேலை வாய்ப்பு இருக்க கூடிய சூழலிலும் அமையும் என்று நம்பலாம். கிராமத்து இளைஞர்கள் சேர்ந்து இந்த திட்டத்தை முயற்சி செய்தால் கம்போஸ்ட் உர விற்பனை வலுவான சிறு தொழிலாக உருவெடுக்கும் என்பதில் மாற்றமில்லை.
இனி...இந்த இயற்கை உரத்தை எப்படி எளிதாக உங்கள் சொந்த கிராமங்களில் தயார் செய்யலாம் என்பது பற்றி வேளாண் ஆய்வு நிறுவனத்தை சேர்ந்த வேளாண் பட்டதாரி நாராயணன் கூறுவதை பார்க்கலாம்.
இயற்கை உரத்தின் ரகசியம்
  " பொதுவாக எந்த நிலத்தில் கரிம சத்து (ஆர்கானிக் சத்து) அதிகம் இருக்கிறதோ அந்த நிலத்தில் தான் பயிர்கள் நன்றாக வளரும். காடுகளில் உள்ள மரங்கள், செடிகள் செழிப்பாக பச்சை பசேல் என்று இருப்பதை பார்க்கலாம். காரணம், மரங்கள் உதிர்க்கும் இலைகள் மண்ணோடு கலந்து மக்கி மீண்டும் உரமாக அதே மரத்திற்கு கரிம சத்தை ஊட்டுகிறது. இது தான் இயற்கை உரத்தின் ரகசியம்.


இப்படி மரத்திலிருந்து உதிர்ந்து விழும் இயற்கையான இலை, தழைகளை மண்ணில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத பூஞ்சைகளும், பாக்டீரியா என்ற சிறு நுண்ணுயிரிகளும் சேர்ந்து நொதிக்க வைத்து மக்க செய்து விடுகின்றன. இந்த நுண்ணுயிரிகளால் மக்கி உரமாகும் இந்த கழிவுகள் ஏராளமான கரிம சத்து நிரம்பியதாக இருப்பதால், இது இருக்கும் இடங்களில் உள்ள தாவரங்கள் பச்சை பசேலென்று இருக்கும். இது தான் இயற்கை உரத்தின் ரகசியம்.

அடர்ந்த காடுகளில் இது போன்ற கரிம இயற்கை உரங்கள் தானே உருவாகின்றன. ஆனால் நம்மை சுற்றி, நம்மால் பயன்படுத்தப்பட்ட காய்கறி, பழங்கள் மற்றும் வேறு பல இயற்கையான தாவர, விலங்கு கழிவுகளை வைத்து கரிம உரங்களை தயார் செய்து விற்கலாம்.

எளிய தொழில்நுட்பம்
இயற்கையான உரம் தயாரிக்க சாதாரணமாக வெட்டவெளியான இடம் போதுமானது. இந்த இடத்தில் அதிகமாக வெயில்படக்கூடாது. மழைத்தண்ணீரும் பொழியக்கூடாது. பொதுவாக இதை ஒரு கூரை அமைப்பின் கீழ் செய்வது நல்லது. ஆனாலும் மிகசிறிதளவு வெப்பம் குவிக்கப்பட்ட கழிவுகளின் மீது பட வேண்டும். இப்படி இடத்தை தேர்வு செய்த பின் அந்த இடத்தில் ஊரில் கிடைக்கும் கரும்பு தோகை, வாழை மட்டை, காய்கறி கழிவுகள், சாணி, இத்யாதிகளான மக்கும் கழிவுகளை எல்லாம் கொண்டு வந்து குவிக்க வேண்டும்.

சாக்கடைகளில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை கூட கொண்டு வந்து சேர்க்கலாம். இதற்கடுத்து இவற்றை மக்க வைக்க தேவையான கம்போஸ்டிங் கல்ச்சர் என்ற ஒரு கலவை ( இது விவசாய இடு பொருள் விற்பனை மையங்களில் கிடைக்கும்) யை கொண்டு வந்து இந்த குவியலின் மீது தெளித்து விட வேண்டும்.
அல்லது பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் கலந்த எபக்டிவ் மைக்ரோ ஆர்க்கனிசம் என்ற கலவையையும் பயன்படுத்தலாம்.

இப்படி நுண்ணுயிர் கலவை தெளிக்கப்பட்ட கழிவு குவியலில் வேகமாக பாக்டீரியாக்களும், பூஞ்சைகளும், மண்ணில் உள்ள கண்ணுக்கு தெரியாக சில பூச்சிகளும் செயல்பட்டு நொதிக்க தொடங்கும். இப்படி நொதிக்க தொடங்கும் நிலையில் கழிவுகள் உருமாற தொடங்கும். உதாரணமாக ஒரு கத்தரிக்காயின் காம்புகள் அதை கத்தரிக்காயின் காம்பு தான் என்று சொல்ல முடியாதபடி அழுகி உருமாறி வரும். இப்படி ஒட்டு மொத்த கழிவுகளும் மெதுவாக அழுகி வரும்.
இப்போது இந்த கழிவு குவியலில் அபரிமிதமான வெப்பம் உருவாகி இருக்கும். இந்த வெப்பத்தை அப்படியே விட்டு விட்டால், இந்த நொதிக்கும் செயல் நின்று விடும். காரணம், இந்த வெப்பம் அதிகரிக்கும் போது நொதிக்கும் நுண்ணுயிரிகள் செயல்பாட்டை குறைத்து விடும். எனவே, இந்த வெப்பம் அதிகரிக்காமல் தடுக்க கழிவு குவியலின் மீது தண்ணீர் தெளித்து கொண்டே வரவேண்டும்.

சத்துள்ள உரம் ரெடி
இப்படி தொடர்ந்து கழிவு குவியலின் மீது அடிக்கடி தண்ணீர் தெளித்து வருவதுடன், அவ்வப்போது குவியலை கிளறி விட்டுக் கொண்டே வரவேண்டும். கழிவுகளின் மக்கும் தன்மையை பொறுத்து ஒருவாரம் முதல் 2 வார கால அளவில் இந்த கழிவுகள் நுண்ணிய துகள்களாக மாறிவிடும். இது மிகவும் மிருதுவாக, பொலபொலப்பு தன்மையுடன் இருக்கும். இது தான் கம்போஸ்ட் உரம்.


இதில் ஒரு பயிருக்கு தேவையான அனைத்து சத்துகளும் இருக்கும். எந்த கழிவை மக்க வைக்க பயன்படுத்தினோமே, அதில் இருந்ததை போல் 4 மடங்கு சத்துகள் இந்த உரத்தில் இருக்கும். 2 கிலோ கழிவை மக்க வைக்க குவியலாக வைத்திருந்தால், அதிலிருந்து ஒன்றே முக்கால் கிலோ உரம் கிடைக்கும். இந்த உரத்தை 100 கிராம் பாக்கெட்டு முதல் 5 கிலோ, 50 கிலோ சாக்கு பைகள் வலை மூடைகளாக தைத்து விற்கலாம்.

எங்கு விற்கலாம்?
அதாவது ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி வாழை பயிரிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் அறுவடை எடுத்த பிறகு அந்த வாழை தோப்பில் இருக்கும் மரங்களை சுத்தப்படுத்த ஏக்கருக்கு 4 ஆயிரம் வரை செலவிட வேண்டியதிருக்கும். இந்த சமயத்தில் இந்த தோப்புகளிலிருந்து மரங்களை அந்த விவசாயிகளுக்கு செலவில்லாமல் எடுத்து வந்து உரமாக மாற்ற கழிவாக பயன்படுத்தி கொள்ளலாம்.
இதிலிருந்து தயாராகும் கரிம ஆர்கானிக் உரத்தில் எல்லா சத்துகளும் நிரம்பியிருப்பதால், அதனை அழகு செடிகள் விற்கும் நர்சரிகளுக்கு விற்பனை செய்யலாம். அதே ஊரில் உள்ள விவசாயிகளுக்கும் குறைந்த லாபத்தில் விற்கலாம். காரணம், அறுவடை முடிந்த பிறகு அதே விவசாயிகளிடம் இருந்த விவசாய கழிவுகளை கம்போஸ்ட்டுக்கு பெற்றுக் கொள்ளலாம்.
இது தவிர நகர்ப்புறங்களில் வீடுகளில் செடி வைத்திருப்பவர்களிடம் விற்கலாம்.

இந்த உரத்திற்கு செயற்கை விட அதிகம் நீரை தக்க வைக்கும் திறன் அதிகம் இருப்பதால், விவசாயிகள் விரும்பி வாங்குவார்கள். இப்படி இயற்கை உரத்தை ஒரு விவசாயி முழுக்க வாங்கி பயன்படுத்தி காய்கறி விளைச்சலை எடுக்கிறார் என்றால், இந்த காய்கறிகளை பாக்கெட்டுகளில் அடைத்து இயற்கை உரம் பயன்படுத்தி விளைவித்த காய்கறி என்று பாக்கெட்டுகளில் எழுதி நல்ல விலைக்கு நகர்ப்புறங்களில் விற்கலாம்.
இது தவிர இயற்கை விவசாய விளைபொருட்களை வாங்குவதற்காக உலகின் பலநாடுகள் தயாராக இருக்கின்றன. இணைய தளங்களில் போய் பார்த்தால் இதற்கான ஆர்டர்களை பெற முடியும். பிறகென்ன...உங்கள் கிராமத்தில் நீங்கள் தான் ஏற்றுமதியாளர். அங்கிருந்து கிடைக்கும் பணத்தின் மூலம் பாடுபட்ட உழைத்த விவசாயிக்கும் நல்ல கூலியை நீங்கள் தர முடியும். படித்த கிராமத்து இளைஞர்கள் இது போன்ற தொழில் முயற்சிகளில் இறங்கினால் நல்ல ஒரு பலனை உங்கள் ஊருக்கு செய்ய முடியும்.

இயற்கை உரம் தயாரிப்பது எப்படி என்ற பயிற்சியை உங்கள் கிராமத்திற்கே வந்து சொல்லித்தர தயாராக இருக்கிறார்கள் வேளாண்அறிவியல் பட்டதாரிகள். இவர்களை தொடர்பு கொள்ள 94435 69401 மற்றும் 98424 65158 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today