வீட்டுக்கு ஒரு பிள்ளை வைத்தால் பயன்கள் தான் எத்தனையோ!!!


வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்...இப்படி தமிழ்நாட்டின் சாலைகளில் ஓடும் லாரிகளின் பின்புற தகட்டில் எழுதி வைத்திருப்பார்கள். மக்களை மரம் வளர்க்க தூண்டுவதற்கு இது உதவுமாம். (வேற என்னத்த சொல்ல கேட்டுக் கொள்ள வேண்டியது தான்). கோடிக்கணக்கில் செலவழித்து எத்தனையோ இலவசங்களை வழங்குகிறார்கள். இது போல் மரங்களை வாரி வழங்கியிருந்தால் இந்நேரம் தமிழ்நாடு மிகப்பெரிய மழைக்காடு நிறைந்த மாநிலமாக மாறியிருக்கும்.

ஆனால் யாரும் செய்யவில்லை. என்ன செய்வது?
இது இருந்து விட்டு போகட்டும். உங்களால் முடிந்தால், உங்கள் வீட்டில் சிறிய அளவு இடம் இருந்தால் போதும். ஒரு தென்னங்கற்றை நடவு செய்யுங்கள்.
அது உங்களுக்கு ஏராளமானவற்றை இலவசமாக வாரி வழங்கும். இது பற்றி பார்க்கலாம். இளநீர், தேங்காய், வீட்டு மொட்டை மாடியில் கூரையால் ஆன குளு குளு அறை, வீட்டை சுத்தம் செய்ய துடைப்பம், தலைக்கு தடவ எண்ணெய், தேங்காய் துருவல், வீட்டில் செடிகள் வளர்க்க கொடிப்பந்தல் அமைக்க கம்புகள் இப்படி தென்னையை பற்றி சொல்லிக் சொல்லிக் கொண்டே போகலாம்.

சரி...வீட்டில் தென்னை மரத்தை நட சிலருக்கு தயக்கமாக இருக்கும். காரணம், தென்னையின் வேர்கள் கட்டிடத்தை ஊடுருவி விடும் என்று பயப்படுவதுண்டு. இது போன்ற ஏராளமான சந்தேகங்கள் பலருக்கும் உண்டு. தென்னை ஆராய்ச்சியாளர்கள் தென்னை வளர்ப்பது பற்றி என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்து கொண்டால் தென்னை பற்றிய உங்கள் சந்தேகம் எல்லாம் தீரும். இதோ...

" தென்னைமரத்தை வீட்டில் வளர்த்தால் அதன் வேர் கட்டிடத்தின் அஸ்திவாரத்தில் ஊடுருவி விரிசல்களை ஏற்படுத்தும் என்ற பயம் தான் தென்னையை வீடுகளில் வைக்க பலரும் தயங்குவதற்கு காரணம். ஆனால் உண்மை அதுவல்ல. தென்னை மரம் பார்க்க தான் கடினமாக உள்ளதே தவிர, அதன் வேர்கள் சாதாரண சல்லி வேர் வகைளை சேர்ந்தது. இந்த வேர்கள் கொத்துகொத்தாக இருக்கும். பூமியின் ஆழத்தை நோக்கி போகாது. கிடைமட்டமாக 100 அடி தூரம் வரை செல்லக்கூடியது. இது கடினமான பாறை பகுதியை குடைந்து செல்லக்கூடிய அளவுக்கு பலம் வாய்ந்தது என்று சொல்ல முடியாது. எனவே கட்டிடத்தின் கட்டுமானத்தை ஊடுருவி சிதைத்து விடும் என்றெல்லாம் பயப்பட தேவையில்லை.

பொதுவாக தென்னம் பிள்ளையை வீடுகளில் நடும் போது வீட்டின் சுவர் மற்றும் காம்பவுண்ட் சுவரிலிருந்து 6 அடி இடைவெளி விட்டு மரக்கன்றை நட வேண்டும். இதனால் வீட்டின் சுவர் பாதிக்கப்படுவதில்லை.
இரண்டரை முதல் மூன்று அடி நீள, அகல, ஆழத்தில் குழி தோண்டி சிறிது காலம் அதனை ஆற விட்டு பிறகு தான் மரத்தை நடவேண்டும். அப்படி நடும் முன் வீடுகளில் வீணாகும் காய்கறி கழிவுகளை இந்த குழியில் போட்டு மக்க செய்து உரமாக மாற்றி விடலாம். பிறகு கன்றை நடலாம்.

தென்னை நன்றாக காய்க்க தழைச்சத்து, மணிச்சத்து, சோடியம், கால்சியம் போன்ற சத்துகள் அதிகம் தேவைப்படும். பொதுவாக மண்ணில் எல்லாசத்துகளும் இருக்கிறது. தென்னையை நடும் முன் மண் மாதிரி எடுத்து அதனை மண்பரிசோதனைக்கூடத்தில் கொடுத்தால், அந்த மண்ணில் என்ன மாதிரியான சத்துகள் உள்ளது என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.

மழை பெய்யும் காலங்களில் ஏற்படும் இடி, மின்னலின் போது, காற்று மண்டலத்தில் பயங்கர வெப்பம் ஏற்படும். அப்போது, காற்று மண்டலத்தில் உள்ள நைட்ரஜன் இந்த வெப்பத்தால் தாக்கப்பட்டு நைட்ரஜன் ஆக்சைடாக மாறும். இது மழை நீருடன் கலந்து நீர்த்த நைட்ரிக் அமிலமாக மண்ணில் வந்து விழுகிறது. இப்படி பூமிப்பந்தில் நம்மை அறியாமல் நடக்கும் சில ரசாயன கிரியையைகள் மூலமாக மரங்களுக்கு உரங்கள் கிடைத்து விடுகின்றன. அதாவது இப்படி கிடைக்கும் சத்தை தழைச்சத்து என்று சொல்வார்கள்.

ஒரு தென்னை மரத்தை தூரத்தில் நின்று பார்க்கும் போது, அது நல்ல பச்சையாக தெரிந்தால், அதற்கு தழைச்சத்து (யூரியா) தேவையில்லை என்று தெரிந்து கொள்ளலாம். அதே போல் ஒரு பாளை பூத்து விரியும் போது, அதில் 20 க்கும் மேற்பட்ட பிஞ்சுகள் இருந்தால், மரத்திற்கு மணிச்சத்து போதுமான அளவில் மண்ணிலிருந்து கிடைத்துக் கொண்டிருக்கிறது என்ற முடிவுக்கு வரலாம்.

மரம் காய்க்கும் காலம் வந்த பின்னும், காய் பிடிக்காமல் பிடிக்காமல் உதிர்வதும், போதுமான காய்கள் விளையாமல் போவதற்கும் சில மறைமுக  வியாதிகள் மற்றும் சிறு நோய்கள் தான் இதற்கு காரணம். மறைமுக வியாதி எப்படி உருவாகிறது என்று பார்க்கலாம். தென்னைமரத்தின் மட்டை தானாக காய்ந்த நிலையில் மரத்திலிருந்து கீழே விழும். அப்போது கூடவே பழுப்புகலரில் காய்ந்த எருவின் துகள் போன்று தரையில் கொஞ்சம் சிதறி விழுந்து கிடப்பதை காண முடியும். இது எங்கிருந்து வந்தது  என்பது புதிராக இருக்கும்.

இது, அந்த மட்டை மரத்தில் இருக்கும் போது, மரத்தின் பாளையிலிருந்து விழும் பூ, பிஞ்சு, வேறு அருகில் உள்ள மரத்தின் இலைகள் போன்றவை இந்த மட்டை மரத்தில் இணைந்திருக்கும் இடத்தின் இடுக்கில் வந்து சேர்ந்து விடும். இப்படி தேங்கி கிடக்கும் இந்த குப்பை பல நாட்களாக ஈரம், மரத்திலிருந்து வெளியாகும் நீராவி ஆகியவற்றால் நனையும் போது பூஞ்சை கிருமிகளால் அழுகி, மக்கி எரு போல் மாறி விடும்.

சில நேரங்களில் இந்த எருவில் ஒரு வகை கிருமிகளும் தோன்றி விடுகிறது. இந்த கிருமிகள் புதிதாக மரத்தில் தோன்றும் பாளைகளில் ஒட்டிக்  கொண்டு அதன் சாறை உறிஞ்சத் தொடங்கும். இதனால் தான் புதிதாக தோன்றும் பாளைகள், சிறுத்தும், நீளம் குறைந்தும் இருக்கும். பிஞ்சுகளும் கருகி கொட்டி விடும். நகரங்களில் உள்ள தென்னை மரங்களை சுத்தம் செய்ய மரம் ஏறுபவர்கள் வருவார்கள்.

அவர்களை கொண்டு குறிப்பிட்ட அளவில் மரத்தை சுத்தம் செய்தால், இந்த பிரச்சனையை தவிர்த்து விடலாம். மரத்தை இப்படி சுத்தமாக வைத்துக் கொண்டால், புதிதாக வரும் பாளைகள் அதிக நீளமாக, பருமனுடன் இருக்கும். நல்ல பசுமை நிறத்திலும் இருக்கும். இப்படி இருக்கும் பாளையில் அதிகம் பிஞ்சு பிடித்து தேங்காய் குலைகுலையாக காய்க்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.

தென்னைக்கு ஏதாவது ஒரு சூழ்நிலையில் உரம் வைக்க வேண்டுமென்றால், மரத்திலிருந்து 3 அடி தள்ளி, வேர்கள் அறுபடாமல், அரை வட்டம் போட்டு, ஒரு கிலோ அளவு வேஸ்டு மட்டை, கொளிஞ்சி தழை சருகுகளை போட்டு கூடவே 50 கிலோ அளவுக்கு தொழுஉரம் போட்டு 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விடலாம். தென்னை மரத்தை பொறுத்த மட்டில் காண்டா மிருக வண்டு தான் பெரிய பிரச்சனை. இந்த வண்டு மரத்தை தாக்கும் போது, மரத்தின் மணல் பகுதியிலிருந்து 3 அங்குலத்துக்கு மேல் ஓட்டையிட்டு, குருத்துக்குள் சென்று, உட்குருத்தை தின்று விடும்.

பொதுவாக இந்த வண்டை ஒழிக்க உள்ள மருந்துகளை மரம் முழுக்க பரவலாக  பயன்படுத்தும் போது, மரத்திற்கு நன்மை செய்யும் தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகளும் இந்த மருந்துகளால் செத்து விடுகின்றன. இதனால் மகரந்த சேர்க்கை தடைபட்டு காய்களின் அளவும் குறையும். இதனை தடுக்க வி.எஸ் மிக்ஸ் என்ற பவுடரை 15 கிராம் எடுத்து அதை 200 மிலி தண்ணீரில் கரைத்து குருத்தில் ஊற்றினால், வண்டுகள் தாக்குவதில்லை. பொதுவாக வீடுகளில் மரம் இருந்தால், துணியை வெயிலில் உலர்த்த மரத்தில் ஆணி அடித்து கொடிகட்டுவதோ, வேறு காயப்படுத்தவோ கூடாது.

வீட்டு மரத்திற்கு ஆண்டுக்கு 30 ரூபாய் செலவு செய்தால் கூட, மரத்திலிருந்து 300காய்கள் வரை பெறலாம். வீடுகளில் வளர்க்கப்படும் தென்னம்பிள்ளைகளுக்கு அவ்வப்போது மண்புழுஉரம், வீட்டில் வீணாகும் காய்கறி கழிவுகளை மக்க வைத்து தயார் செய்யப்பட்ட உரம் மற்றும் தென்னை நார்க்கழிவை மக்க செய்து தயாரித்த உரம் ஆகியவற்றை உரமாக பயன்படுத்தலாம்.

இதற்கு பெரிய நுட்பம் எதுவும் தேவையில்லை. வீட்டு மூலையில் சிறிய குழி தோண்டி அதில் இந்த கழிவுகளை போட்டு அதில் சிறிது பசுஞ்சாணத்தை கரைத்து ஊற்றினால் சிறிது நாளில் நல்ல உரம் ரெடி. பிறகென்ன.....சிறிது நாளில் வீட்டுக்கு தங்குதடையில்லாமல் தேங்காய் தயார். ஏப்ரல், மே, ஜுன் மாதங்களில் உடலை குளிர்விக்க இளநீரும் தயார். வீட்டு சமையலுக்கு தேங்காய் தயார்.

எங்க கிளம்பிட்டீங்க...தென்னம் பிள்ளை வைக்கவா?


ஒரு நிமிடம்!!
 • பறிக்கப்படும் தேங்காய்கள், இட்லிக்கு சட்னியாவதும், ஆப்பத்துக்கு பாலாகும் போதும், ஏப்ரல் மாத வெயிலில் இளநீர் ஆவதுமாக தென்னையின் பயன்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
   
 • இளநீருக்கு மனிதரின் முதுமையை குறைக்கும் ஆற்றல் பலமாக இருப்பதை தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
   
 • தென்னை மரத்தின், இலை, தண்டு, பூ, மடல், தேங்காய் பிசிறுகள் என்று அனைத்துமே மனிதர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பயன்படுகிறது.
  தேங்காய் நார்களை கொண்டு தற்போது அழகான மிதியடிகள், தரைவிரிப்புகள் செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. 
 • தேங்காய் ஓட்டை சிறுசிறு துண்டுகளாக வெட்டி சட்டை பித்தான்கள் செய்யவும், எரிபொருளாகவும், நாதஸ்வரக்குழாய்களுக்கு தேவையான வில்லைகள் செய்யவும் பயன்படுகிறது.
   
 • மரத்தின் தண்டு எரிபொருளாகவும், வீட்டுக்கான உத்திரம் போடவும், தூணாகவும் இருக்கிறது. கிராமங்களை கடந்து செல்லும் நீரோடைகள், கால்வாய்களை கடக்க தென்னை மரத்தின் தண்டு இருப்பதை பல இடங்களில் பார்க்க முடியும்.                                                                                           
   
 • தென்னை ஓலை தான் இன்றைய டிஜிட்டல் காலத்திலும் நகர வீடுகளின் குளிர்ச்சியான கூரை வேய்ந்த அறைகளை உருவாக்க முதல் தேர்வாக இருக்கின்றன.
   
 • மரத்தின் பாளையை, அதாவது பூமடலை நீரில் ஊற வைத்து ஊசியினால் சீராக நீளமாக கிழித்து எடுத்து அதனை வேலி கட்டவும், கூரை வேயவும் பயன்படுத்துகிறார்கள்.
   
 • தென்னை ஈர்க்குகள் வீடு சுத்தம் செய்ய துடைப்பமாக மாறிவிடுகிறது.
  உலர்ந்த கொப்பரையிலிருந்து கிடைப்பது தேங்காய் எண்ணெய். 
 • காலையில் எழுந்தவுடன் தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவி குளித்தால் தான் பூரணமாக குளித்த சுகம் கிடைக்கும். தென்னை அதிகம் வளரும் பகுதிகளில் தேங்காய் எண்ணெய் தான் பிரதான சமையல் எண்ணெயாக பயன்படுகிறது.
   
 • தேங்காயை அரைத்துப் பிழிந்தெடுக்கப்படும் தேங்காய் பால் இனிப்பும், துவர்ப்பும் சேர்ந்த ஒரு கலவை. இது குடல்புண், வாய்ப்புண்களை குணப்படுத்த சிறந்த மருந்தாக இருக்கிறது.
 செவ்விளநீர் என்ற பெயரில் ??????
பச்சை இளநீர் சுவையில்லை என்று செவ்விளநீர் குடிப்பவர்கள் பலர். ஆனால் இது உண்மையான செவ்விளநீர் ஆகுமா...என்றால் அந்த பெயரில் ஒரு சாதாரண இளநீரை குடித்து விட்டு திருப்தி அடைகிறோம் என்று தான் அர்த்தம். வேளாண்மை அதிகாரி முரளிகிருஷ்ணன் கூறும் போது, தமிழ்நாட்டில் செவ்விளநீர் மரங்கள் இல்லை. சொல்லிக் கொள்ளும்படி 3 அல்லது 4 தாய் மரங்கள் தான் உள்ளன என்கிறார். இங்கு ரோடுகளில் விற்கப்படும் இளநீர் காய்கள், மலேசிய நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டமலேசியன் ஆரஞ்சு ரக தென்னையின் காய்களாகும்.

இது இளநீருக்காகவே உருவாக்கப்பட்ட ரகம். இதைத்தான் செவ்விளநீர் என்ற பெயரில் ரோடுகளில் விற்கிறார்கள். உண்மையான செவ்விளநீர் மரத்தின் காய்களை ருசித்தவர்கள் குறைவு. உண்மையான செவ்விள நீர் மரக்கன்று வாங்க விரும்புபவர்கள் அருகில் உள்ள வேளாண்மை அலுவலகங்களை தொடர்பு கொண்டால் வாங்கலாம். ஆனால் ஆர்டர் செய்த 1 ஆண்டு கழித்து தான் கன்று கிடைக்கும்.

4 கருத்துகள்: (+add yours?)

பெயரில்லா சொன்னது…

Hello Sir,
Thanks a lot.
Very very useful.

Suresh

பெயரில்லா சொன்னது…

This is one of the Gud Article.

Magesh

ihmas சொன்னது…

very good sir

பெயரில்லா சொன்னது…

very good. but i expected the uses of forests.

காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today