தனியொரு குருவிக்கு உணவில்லை எனில்.....?வீட்டில் சாப்பிட உணவு இல்லை. ஆனால் வீட்டு வாசலில் வந்து குக்கூ பாடிய குருவிக்கு அரிசியை தூவி வயிற்றை நிறைத்தான் மீசை கவிஞன் பாரதி. இயற்கையின் அதிசயங்களில் ஒன்றான குருவி முன்பெல்லாம் வீடுகளில் வந்து கூடு கட்டும். வீட்டில் சட்னிக்கு உடைக்கும் தேங்காய் நார்களை எங்கிருந்தோ எடுத்து வந்து அவ்வளவு அழகான பஞ்சு மெத்தையை தனக்கு பிறக்க போகும் குழந்தைக்காக தயார்படுத்தும்.

பிறகு அதில் முட்டையிடும். ஒரு அழகான குஞ்சை ஈன்று விட்டு கொஞ்ச காலம் அந்த குஞ்சுக்கு புழு, பூச்சிகளை உணவாக அளிக்கும். குஞ்சு வளர்ந்தவுடன் அதை இந்த உலகத்தில் சுதந்திரமாக விட்டு விட்டு பறந்து விடும். வீடுகளில் குருவிகள் கூடு கட்டினால் நல்ல சகுனம் என்பார்கள் தமிழ் மக்கள்.

ஆனால் இன்றைக்கு....சிட்டு குருவிகளா? அவை எப்படி இருக்கும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறது குழந்தைகள் உலகம். வெறும் ஏடுகளில் தான் குருவியின் படத்தை பார்க்க முடிகிறது. நகரமயமாக்கலின் தாக்கத்தால் குருவிகள் நகரங்களை விட்டு தாண்டி போய்விட்டன. வெளிக்காற்றோ, சிறிய பூச்சிகளோ கூட வீட்டிற்குள் வராத அளவுக்கு மனிதர்கள் பாதுகாப்பாக வீடுகளை கட்டுவதால் குருவிகள் வீடுகளுக்குள் வந்து கூடுகட்ட முடிவதில்லை. குறிப்பாக நகரங்களில் பெருகி வரும் போக்குவரத்தின் தாக்கம் குருவிகளின் குலம் பெருகி விடாமல் அழித்து வருகிறது. அதிகரித்து வரும் வாகனங்களின் எரிபொருளான பெட்ரோலில் இருந்து வெளியேறும் மீத்தைல் நைட்ரேட் என்னும் நச்சு வாயு சிட்டுக்குருவிகளின் கருவை அழித்து விடுகிறது என்கிறது ஆய்வுகள்.

தனது பெண் துணையை நினைத்த போதெல்லாம் புணர்ந்து தனது வாரிசுகளை உருவாக்குவதில் சிட்டுக்குருவிகளுக்கு நிகர் வேறு எதுவும் இல்லை. இந்த காரணத்தால் தான் சிட்டுக்குருவிகளை கொன்று லேகியம் சாப்பிட்டால் தனக்கும் இப்படி அபார சக்தி வந்து விடும் என்று கருதி தனது இயலாமையை நிவர்த்தி செய்ய சிட்டுக்குருவிகளை பலியாக்கி லேகியம் தயாரித்தான் மனிதன்.
 இப்போது மனிதனின் வாகனங்கள் சப்தமில்லாமல் இந்த குருவிகளின் கருவை அழித்து வருகின்றன. அதாவது குருவிகளின் உணவான புழு, பூச்சிகளை இந்த மீத்தைல் நைட்ரேட்டுகள் அழித்து விடுவதால் குருவிகளுக்கு உணவு இல்லாமல் போய் விடுகிறது.

முன்பெல்லாம் பலசரக்கு கடைகளில் தானியங்களை பொட்டலங்களில் மடித்து தருவார்கள். அந்த பொட்டலங்களை வாங்கி செல்லும் மனிதர்கள் சிறிய அளவில் அந்த தானியங்களை ரோடுகளில் சிதறவிடுவார்கள். இப்படி சிதறிவிடப்பட்ட தானியங்களை இந்த சிட்டுகுருவிகள் காத்திருந்து சாப்பிட்டு பசியாறும். ஆனால் இப்பொழுது பெரிய பெரிய மால்களில் இந்த தானியங்கள் எல்லாம் கொஞ்சம் கூட சிந்தாமல் சிதறாமல் இருக்கும் படிக்கு அடைக்கப்பட்ட பாக்கெட்டுகளில் விற்கப்படுகின்றன. ஆக..குருவிகள் ரோடுகளில் இறைக்கப்படும் தானியங்களுக்காக காத்திருந்து ஏமாந்து போகின்றன.

இது தவிர முன்பெல்லாம் வயல்களில் சாணங்களை கொட்டி இயற்கை உரமாக மாற்றி விவசாயம் செய்வார்கள். அந்த சாணக்குவியலில் புழுக்கள் உயிர் பெற்று வரும். அந்த புழுக்களை குருவிகள் கொத்தி தின்னும். அதாவது செடிக்கு உரம், செடியை பாதிக்கும் புழு குருவிக்கு உணவு. ஆக..மனிதன் நேர்த்தியாக விவசாயம் செய்தான். இன்றைக்கு அதுவும் இல்லை. எங்குபார்த்தாலும் செயற்கை உரம். இதனால் குருவிகளுக்கு சாணக்குவியலில் கிடைத்த புழுவும் இல்லாமல் போனது.

இது தவிர தற்போது, நகரங்களில் வைக்கப்படும் மொபைல் போன் டவர்களின் கதிர்வீச்சு தாக்கமானது குருவிகளில் வழி தேடி போகும் தன்மையை குழப்பத்திற்கு உள்ளாக்குவதாக தெரியவந்துள்ளது. இதனாலும் குருவிகள் மொபைல் போன் டவர்கள் இருக்கும் திசைக்கு வருவதில்லை. இப்படி ஒட்டு மொத்தத்தில் குருவிகள் மனிதர்களை விட்டு விலகி போய்க்கொண்டே இருக்கின்றன.

அழகான சிட்டுக்குருவிகளின் கீச்..கீச் ஒலியை இனி எங்கு போய் கேட்பது? தனக்கு சாப்பிட உணவில்லை என்ற போதும், வீட்டிலிருந்த சிறிய அளவு அரிசியை எடுத்து குருவிக்கு போட்டு அந்த சின்னஞ்சிறு சிட்டுகளில் வயிற்றை நிரப்பினான் பாரதி. அவன் சொன்ன கவிதையை இனி நாம்...இப்படி சொல்வோம். " தனி ஒரு குருவிக்கு உணவில்லை எனில்..........? அதைப்பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும் என்பது தானே இன்றைய மனித சமுகத்தின் சிந்தனை? இன்று உலக சிட்டுக்குருவி தினம். குருவிகளை சற்று நினைவு கூர்வோம்.

2 கருத்துகள்: (+add yours?)

Dr.எம்.கே.முருகானந்தன் சொன்னது…

மனிதர்களை விட்டு விலகி குருவிகளை ஓடச் செய்கிறதா நவீன தொழில் நுட்பம்.
வித்தியாசமான நல்ல பதிவு

virutcham சொன்னது…

சிட்டுக் குருவிகள் அழிவதாக யாராவது கூறினால் எனக்கு கொஞ்சம் ஆச்சர்யம் தான். அது கூடு கட்டி முஞ்சு பொரிக்கும் சூழ்நிலைகள் பாதிக்கப்பட்டு இருக்கின்றன என்பது உண்மை தான். ஆனால் அதை எல்லாம் தாண்டி அவைகள் நிறைய நிறைய கேச் கீச் என்று எங்கள் வீட்டு செடிகளில் நாள் முழுக்க இங்கும் அங்குமாக பறந்து கொண்டு கொள்ளை அழகு. எங்கள் வீடு வாசலில் தொட்டியில் இருந்து ஒழுகும் தண்ணீரை குடிக்க கும்பலாக வந்து அமரும் அழகு வார்த்தைகளால் சொல்ல முடியாது.

வீட்டுப் பக்கத்தில் அரிசி மண்டி இருக்கிறது தான் முக்கிய காரணம்.

காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today