தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் நிலத்தடியில் கிடைக்கும் தண்ணீரில் 72 சதவீதம் நீர் குடிக்க இயலாதது

 இன்று உலக தண்ணீர் தினம்தமிழகத்தின்பல்வேறு இடங்களில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு மழை கொட்டி தீர்த்தது. பல இடங்களில் மழை நீர் வழிய வழி இல்லாமல் தெருக்களில் ஓடியது. சில இடங்கள் தனித்து விடப்பட்ட நிலையில் தீவுகள் போல் காட்சியளித்தன. அடுத்த சில நாட்களில் வழக்கம் போல் மாநகராட்சி குழாயில் தண்ணீருக்காக வழக்கதான சண்டை. சாதாரணமாக தண்ணீருக்காக இப்படி நாம் அடிக்கடி காணும் சண்டை இன்னும் சில ஆண்டுகளில் தண்ணீரை பெறுவதற்கான உலக நாடுகளுக்கு இடையேயான சண்டையாக மாறலாம்.

உலகின் தண்ணீர் பற்றாக்குறை பற்றி ஆய்வு செய்து வரும் உலகளாவிய அமைப்புகள் மூன்றாம் உலக போர் மூளுவதாக இருந்தால் அது தண்ணீருக்காக தான் இருக்கும் என்று எச்சரித்துள்ளன. இந்த நிலையில் மதுரையை சேர்ந்த ஆய்வாளர் கே.என்.என்.ராஜன் தமிழ்நாட்டின் தண்ணீர்பிரச்சனையும், தீர்வும் என்ற தலைப்பில் தமிழகத்தின் தண்ணீர் பற்றாக்குறை பற்றி ஆய்வு செய்துள்ளார். தமிழகம் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் நிலையை எட்டுவதற்குள் தண்ணீரை சேமிக்கும் வழிகளை கையாண்டு தக்க வழி தேடி கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறார் அவர்...இதோ அவர் சொல்வதை பார்ப்போம்.

" தமிழ்நாடு புவியியல் அமைப்புபடி தண்ணீர் பற்றாக்குறையுள்ள நில அமைப்பை கொண்டிருக்கிறது. தென்மேற்கு பருவ மழை, வட கிழக்கு பருவ மழை ஆகிய இரண்டு பருவங்களிலும் பெய்யும் மழை நீர் மற்ற தென்மாநிலங்களில் கிடைப்பதை விட தமிழகத்தில் குறைவாகவே கிடைக்கிறது. இந்த காரணத்தால் தான் மன்னர் காலத்திலிருந்து கிடைக்கும் தண்ணீரை நீர் ஆதாரங்கள் மூலம் சேமித்து பயன்படுத்தியிருக்கிறார்கள். ஊற்று, குட்டை, நீராவி, கேணி, கிணறு, ஓடை, தெப்பம், வாய்க்கால், குளம், ஏந்தல், ஏரி என்று நீர் ஆதாரங்களை உருவாக்கி பயன்படுத்தினார்கள். தண்ணீரை அவர்கள் பொக்கிஷமாக கருதினார்கள். ஆனால் இன்றைக்கு மக்கள் தொகை பெருகியுள்ள சூழலில் நீர் ஆதாரங்களில் நீர் குறைந்து வருவதால் பற்றாக்குறை மெதுவாக உயர்ந்து வருகிறது.

1000 கனஅடிக்கு குறைவாக நீர் கிடைக்கும் பகுதிகளை தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பகுதியாக உலகவங்கி அறிவித்திருக்கிறது. ஆனால் இந்தியாவில் சராசரியாக தனிநபருக்கு கிடைக்கும் தண்ணிரின் அளவு 2300 கனஅடி.  அதிலும் தமிழ்நாட்டில் தனிநபருக்கு கிடைக்கும் தண்ணீரின் அளவு வெறும் 750 கனஅடி. இதை பார்த்தால் தமிழ்நாடு மிகுந்த கவனத்துடன் நடவடிக்கை எடுத்து தண்ணீரை சேமிப்பதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தமிழ்நாடு முழுவதும் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்படக் கூடிய சூழ்நிலை ஏற்படும். தனிநபரின் அன்றாட அத்தியாவசிய பயன்பாட்டுக்கான தண்ணீர் தேவையை கூட ஈடுகட்ட முடியாத நிலை ஏற்படும்.

 தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பெய்யும் மழை மற்றும் ஆறு வழியாக கிடைக்கும் தண்ணீரின் அளவு 1240 டி.எம்.சி. ஆனால் இதில் வெறும் 58 டி.எம்.சி தண்ணீர் தான் குடிநீருக்காக பயன்படுகிறது. சரியான திட்டமிடல் இல்லாததால் மழைக்காலங்களில் கிடைக்கும் 50 சதவீத தண்ணீர் வீணாக கடலில் சென்று கலந்து விடுகிறது. நதிகளின் எல்லைப் பரப்பை மீறி பெருக்கெடுக்கும் வெள்ளத்தால் 7,563 எக்டர் நிலப்பரப்பு பாதிப்புக்கு உள்ளாகிறது. இது இப்படியிருக்க தண்ணீர் பற்றாக்குறை உள்ள காலங்களில் 5,112 மில்லியன் எக்டர்கள் பாதிப்புக்குள்ளாகிறது. இப்படி எதிர்மறையாக பல விளைவுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இப்படி பார்ப்போம். நமது வீட்டுக்குழாயில் ஒரு சொட்டு நீர் வீணாக விழுந்து கொண்டே இருந்தால் நாளன்றுக்கு 60 லிட்டர் நீரும், ஒரு மாதத்திற்கு 1800 லிட்டர் நீரும் வீணாகிறது. பொதுவாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் என்பது மக்களின் அத்தியாவசிய தேவை. ஆனால் இந்தியாவில் 12 மில்லியன் மக்கள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் இல்லாமல் தவிக்கிறார்கள். இந்த எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பிருக்கிறது. காரணம், நமது நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மேற்கத்திய முறை கழிப்பறைகளின் மூலம் மட்டும் நாளன்றுக்கு பல லட்சம் லிட்டர் நீர் வீணாக கழிப்பறையில் கொட்டப்படுகிறது. இது நிலத்தடி நீராகவும் இருக்கலாம். பாதுகாக்கப்பட்டு அனுப்பப்பட்ட குடிநீராகவும் இருக்கலாம்.
தண்ணீர் தானே என்று அலட்சியம் செய்யக்கூடாது என்று சொல்வதிலும், மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காக இருக்கும் என்றும் சொல்வதில் உள்ள அபாயகரமான உண்மைகளை அனைவரும் புரிந்து கொள்வதற்கான கால கட்டம் இது.

ஏனென்றால் இந்த பூமியில் குடிப்பதற்காக கிடைக்கும் தண்ணீரின் அளவு என்பது மிகமிக குறைவு. பூமியில் கிடைக்கும் தூய நீரின் அளவு 36 மில்லியன் கன கிலோ மீட்டர்கள் தான். அதாவது இந்த பூமியில் ஒரு குவளை அளவு தண்ணீர் தான் நிரம்பியிருப்பதாக வைத்துக் கொண்டால், நமக்கு உபயோகப்படுத்தும் அளவு உள்ள தண்ணீர் என்பது ஒரு தேக்கரண்டி அளவு தான்.

2025 ம் ஆண்டில் உலக அளவில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் மிகக் கடுமையான தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்படுவார்கள் என்று பல அமைப்புகள் எச்சரித்துள்ளன. சுத்தமான குடிநீர் கிடைக்காத நிலையில் ஏழைநாடுகளில் 80 சதவீத நோய் பாதிப்பு ஏற்படும். வேறு வழியில்லாமல் அசுத்த நீரை குடிக்க தொடங்கும் போது நீரினால் உருவாகும் நோய்களால் இறப்பும் அதிகரிக்கும்.
தற்போது கிராமப்புற மக்களின் குடிநீர் தேவைக்காக 90 சதவீதம், விவசாயத்திற்காக 40 விழுக்காடும் நிலத்தடி நீரே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த நிலத்தடி நீரும் தமிழ்நாட்டின் பல இடங்களில் குறைந்து வருவதை பார்க்க முடிகிறது.

நீர்வள நிர்வாகம் சரியாக சரியான முறையில் செயல்படுத்தபடாவிட்டால் 2025 ஆம் ஆண்டில் நீர்த்தேக்கங்களில் உள்ள நிலத்தடி நீர் முற்றிலுமாக வறண்டு போகும் என்று மத்திய நிலத்தடி நீர் வாரியம் எச்சரித்துள்ளது. இப்படி வறண்டு போனால் எந்த போர்வெல் கிணற்றிலும் தண்ணீர் இருக்காது என்பது நிச்சயம். தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 73 சதவீதம் கடினப்பாறைப் பகுதி. 27 சதவீதம் வண்டல் மண் பகுதி. இந்த வண்டல் மண் தான் நிலத்தடி நீரை தேக்கி வைக்கும் தன்மை கொண்டது. அதிலும் 30 சதவீதம் தான் சேமிக்கும். அதாவது வண்டல் மண் நிலத்தில் 100 லிட்டர் தண்ணீர் மழையாக பெய்தால், 30 லிட்டர் நீர் மட்டுமே நிலத்தடியில் தங்கியிருக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள நீர் ஆதாரங்கள், அதாவது நமக்கு குடிநீருக்கு என்று ஏற்படுத்தப்பட்டிருக்கும் குடிநீர் திட்டங்கள் அனைத்தும் தமிழகத்தில் ஓடும் ஆறுகள் மூலம் கிடைக்கும் தண்ணீர், ஆறுகளின் மேற்பரப்பில் காணப்படும் நீர் மற்றும் நிலத்தடி நீரை மட்டுமே நம்பியிருக்கின்றன. இந்த நிலையில் மழை நீர் சேமிக்கப்படாமல் போனாலும், நிலத்தடி நீரை பாதுகாக்க தவறினாலும் என்ன நடக்கும் என்பதை நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது.

மின்சாரம் இல்லாவிட்டால் கூட வேறு வழிகளில் சமாளித்து விடலாம். ஆனால் இயற்கை தந்த கொடையான நீரை செயற்கையாக உருவாக்க முடியாது. மேலும் என்னதான் கடல் நீரை குடிநீராக மாற்றினாலும் அதன் விளைவுகள் என்ன என்பதை எதிர்காலத்தில் தெரிந்து கொள்ள முடியும்.

எனவே இனிவருங்காலங்களில் இப்போது கிடைத்துக் கொண்டிருக்கும் மழை நீரை ஒரு துளி விடாமல் எப்படி சேமிப்பது மற்றும் எந்தக்காலத்திலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க ஆறுகளை இணைப்பது, மழை பொழிய காரணமான காடுகளின் பரப்பளவை காப்பாற்றுவது உள்ளிட்ட விஷயங்களில் கவனமாக செயல்பட வேண்டிய நடவடிக்கைகளை உடனே தொடங்க வேண்டியது அவசியம்" என்கிறார் இவர்.


தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் பயனற்றதாகிறது?
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் நிலத்தடியில் கிடைக்கும் தண்ணீரில் 72 சதவீதம் நீர் குடிக்க இயலாதது என்றும் 21 மாவட்டங்களில் உள்ள நிலத்தடி நீர் அபாய எல்லைக்குள் சென்று விட்டதாகவும் பொதுப்பணித்துறையே அறிவித்துள்ளது. மதுரை, ராமநாதபுரம்,நெல்லை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கிடைக்கும் நிலத்தடி நீரில் 30 சதவீதம் அளவு குடிக்க இலாயக்கில்லாத நீராக கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் உள்ள நிலத்தடி நீர் படுமோசமான நீராக  இருப்பது தெரியவந்துள்ளது. இது போன்ற இடங்களில் 70 சதவீதம் அளவு குடிக்க லாயக்கற்ற நீராக இருக்கிறது. இது போன்ற தன்மைக்கு காரணம், இந்த இடங்களில் உள்ள நீரில் இரும்புச் சத்து அதிகம் கலந்திருப்பது தான்.

இரத்தத்தில் பிராணவாயுவை கொண்டு செல்லும் அளவை குறைத்து உடல் நலனை மோசமாக்கும் நைட்ரேட் என்ற வேதிப்பொருள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சில இடங்களில் உள்ள நிலத்தடி நீரில் காணப்படுகிறது. திருச்சி, கோயம்புத்தூர், வேலூர், ஈரோடு மாவட்டங்கள் மற்றும் இதனை சுற்றியுள்ள இடங்களிலும் இதே நிலை தான்.
பற்கள் பாதிக்கப்பட்டு எலும்புகள் முறுக்கிக் கொள்ளும் நிலையை உருவாக்கும் புளோரைடு என்ற ரசாயனம் மதுரை, விருதுநகர், சிவகங்கை, நெல்லை, தேனி, சேலம், ஈரோடு, கன்னியாகுமரி, கோயம்புத்தூர். திருவண்ணாமலை, திருவாரூர் உள்ளிட்ட பல நகரங்களின் நிலத்தடி நீரில் எச்சரிக்கப்பட்ட அளவுக்கும் மேல் இருக்கிறது. இது போன்ற ஒரு நிலை ஏற்படக்காரணம், நிலத்தடி நீர் ஆதாரங்களாக கருதப்படும் நீர் தேக்கங்களான ஆறுகள் , நதிகளின் மேல்புறத்தில் கொட்டப்படும் பல்வேறு கழிவுகள் தான்.

தலைநகரமான சென்னையில் நாளன்றுக்கு 3500 டன் கழிவுகள்( மாநகராட்சி பகுதிக்குள் வரும் குப்பை) உருவாகிறது. இதற்கடுத்து மதுரையில் நாளன்றுக்கு 711 டன் குப்பை உருவாகிறது. வைகை ஆறு அறிவிக்கப்படாத குப்பை கிடங்காக இருப்பது கண்கூடான விஷயம். இதன் மேற்பரப்பில் எந்த கழிவு விழுகிறதோ...அதன் சாறுகள் தான் நிலத்தடி நீரில் கலந்து வெளிவரும் என்பது கவனிக்க வேண்டிய விஷயம். எனவே, தவித்த வாய்க்கு தண்ணீர் தரும் ஆறுகளை காப்பாற்றுவது ஒவ்வொரு ஊரின் நீர் ஆதாரத்தை நம்பி வாழும் மக்களின் கடமை.

தண்ணீர் சேமிப்பு உடனடி அவசியம்.


விண்ணிலிருந்து விழும் ஒரு சொட்டு தண்ணீரை கூட கடலுக்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினால் தமிழ்நாட்டின் தண்ணீர் தேவையை வருங்காலத்தில் ஒரளவு ஈடு கட்டி விட முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். தமிழகத்தின் பெய்யும் மழை மூலம் கடலுக்கு சென்று கலக்கும் நீரின் அளவு 170 டி.எம்.சி என்கிறார் தமிழக பொதுப்பணித்துறை தலைவர் ராமன். எனவே கடலுக்குள் மழை நீர் செல்வதை தடுக்க கடலோரத்தில் இருந்து 30-40 கி.மீ முன்னதாக தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும்.

இது தவிர தமிழகத்தில் நதிநீர் இணைப்பு விரைவு படுத்தப்பட்டால், இன்னொரு காவிரி நீர் ஓடும் அளவுக்கு தண்ணீர் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக காவிரி, வைகை, குண்டாறு இவற்றை இணைக்க முடியும். இதற்கான கால்வாயின் நீளம் 255 கி.மீ. திட்ட செலவு ரூ.2673 கோடி. இதனால் 3.38 லட்சம் எக்டர் பரப்பு பாசனம் பெறும். தற்போது தமிழக அரசு தமிழக நதிகள் இணைப்புக்கான முயற்சியை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தவிர ஆங்காங்கே பெய்யும் மழை நீர் பூமிக்கடியில் செல்லும் வகையில் நெடுஞ்சாலைகளில் 40 மீட்டர் இடைவெளியில் 1 மீட்டர் ஆழத்திற்கு குழி தோண்டி குழாய்கள் அமைக்கப்பட்டு அதில் உடைந்த கற்களை போட்டு நிரப்பலாம்.
நீராதாரத்தின் அடிப்படையில் காடுகள் உள்ளன. மழையை உருவாக்குவது, பெறுவது, தேக்குவது மற்றும் மண் அரிப்பை தடுப்பது என்று நீர் நிர்வாகத்தின் அடிப்படையை இயற்கை தானாகவே செய்கிறது. எனவே காடுகள் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே நீர்வளங்களை காக்கும் அந்தந்த உள்நாட்டு மரங்கள் காடுகளில் செழித்து வளர வழி செய்ய வேண்டும்.
ஆறுகளின் நீர் சேகரிப்பு இடங்களை சுற்றி குறைந்த பட்சம் 500 மீட்டர் தூரத்திற்கு மணல் எடுக்கப்படுவது கூடாது.

காடுகள், மலைகளிலிருந்து இயற்கையாகவே தண்ணீர் வழிந்து ஒடிவரும் வழிகளை கண்டறிந்து அந்த வழிகளில் எந்த ஆக்கிரமிப்பும் ஏற்படுத்தப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.
மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை மிகச்சிறந்த முறையில் மறுசுழற்சி செய்து விட்டால் அந்த நீரை விவசாயத்திற்கு பயன்படுத்தலாம். இதனால் விவசாயத்திற்கு நிலத்தடி நீர் எடுக்கபடு வது குறையும்.

இப்படி பல்வேறு வழிகளில் தண்ணீர் சேமிக்கும் முறைகளை கே.என்.என்.ராஜன் தனது ஆய்வில் கூறியுள்ளார். தண்ணீர் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு ஆக்கப்பூர்வமாக எதையாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இவரை தொடர்பு கொண்டு( 94438 30146) தண்ணீர் சேமிப்பு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் தொடர்பான விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.

2 கருத்துகள்: (+add yours?)

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

அருமையான கட்டுரை.. தண்ணீர் சேமிப்பின் அவசியத்தை உணர்த்துகிறது...

Mohammed Rafi TMH சொன்னது…

அரசாங்கம் மழை நீரையும், காடுகளையும் காக்கட்டும். நாம் குறைந்த பட்சம் வீணாக நீர் விரயம் செய்யாது பழகுவோம், பிறரையும் வற்புறுத்துவோம்.

காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today