ஊரை வளர்த்த உப்பு செட்டியார்கள்-சாதியால் சாதிக்க முடிந்த கதை


கோலிவுட் தமிழ்படங்களில் மதுரை என்றாலே அரிவாளையும், பிரச்சினைகளையும், சாதிகளையும் காட்டி வம்புக்கு குறைச்சலே இல்லாத ஊராக காட்டிவிட்டார்கள். ஒரு காலத்தில் மதுரை உள்பட தென்மாவட்டங்களில் சாதிக்கலவரத்துக்கு குறைச்சலே இருக்காது. ஆனால் இந்த சாதிகளை எல்லாம் தாண்டி ஒரு குறிப்பிட்ட சாதி மக்கள் தாங்கள் எடுத்துக் கொண்ட தொழிலை மட்டுமே பிரதானமாக கொண்டு அந்த ஊரை மிகச்சிறந்த இயற்கை வளம் நிறைந்த ஊராக ஆக்கி விட்டிருக்கிறார்கள்.

இது பற்றி ஒரு பார்வை
 அன்றைக்கு தேங்காய் மார்க்கெட் விலையை பற்றி தெரிந்து கொள்ள, பக்கத்தில் இருந்த நண்பர் அந்த சங்கத்திற்கு போனை போட்டு சிரத்தையாக குறித்துக் கொண்டிருந்தார். அப்போது வெங்காயத்தோடு சேர்ந்து தேங்காயின் விலையும் சமீபத்தில் கிறுகிறுக்க வைத்த நேரம்.

இது, நமக்கு பொறி தட்ட  களம் இறங்கினோம். அமைச்சர் ப.சிதம்பரத்தின் சிவகங்கை தொகுதிக்கு அருகே தென்னை மரத்தொழில் சிறப்பாக நடைபெறுகிறது என்பது ஏற்கனவே தெரியும். சரி. இதை பற்றி  தெரிந்து கொள்ள  கிளம்பினோம்.

அந்த ஊருக்கு போய் எல்லையில் கால் வைக்கும் வரை இப்படி ஒரு சிறப்பு இருப்பது தெரிந்திருக்கவில்லை. தமிழனும் சாதியும் பிரிக்க முடியாது. சாதி தீ மூட்டிவிட்டால் தமிழனை எதிலிருந்தும் திசைதிருப்பி விடலாம் என்பது  எதார்த்தமான உண்மை.
இதை பல சம்பவங்களிலும் தமிழகம் கண்டிருக்கிறது. ஆனால் இதையெல்லாம் தாண்டி சிவகங்கை மாவட்டத்தின் ஒரு பகுதியான சிங்கம்புணரியில் நீண்ட நாட்களாக பாரம்பரியமாக இருந்து வரும் உப்பு செட்டியார் வகையறாக்கள் தேங்காய் தொழிலை காலம்காலமாக செய்து அந்த ஊருக்கு சிறப்பை தந்துள்ளனர்.


சிங்கம்புனரியில்கயிறு தயாரிப்பு கூடத்தை பார்வையிடும் அமைச்சர் பா.சிதம்பரம்

"வாழையடி வாழையாக" என்பார்களே...அது போல் இந்த சாதியினர் தொடர்ந்து தங்கள் குலத் தொழில் போல் தென்னை சார்ந்த தொழில்களில் இறங்கி இன்று இந்த தொழிலை வளர்த்தெடுத்துள்ளனர். இவர்களால் ஊரின் பல இடங்களில் தென்னை விவசாயம் நடப்பதால், எங்கு திரும்பினாலும் தென்னையும், தேங்காயுமாக ஊரே செழிப்பாக கிடக்கிறது. இது பற்றி சுருக்கமான ஒரு அறிமுகப்பார்வை...

குவியல் குவியலாக
சிவகங்கை மாவட்டத்தின் சிங்கம்புணரி தாலுகாவிற்குள் நுழையும் போதே நம்மை வரவேற்பது ஆங்காங்கே குவியல் குவியலாக கிடக்கும் தென்னை நார்க்கழிவுகள் தான். தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக தென்னை நார் தொழிலை நம்பி இங்கு 18 கிராமங்கள் இங்குள்ளன. 489 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட சிவகங்கை மாவட்டத்தில் 226.56 சதுர கி.மீட்டர் பரப்பளவில் தென்னைதொடர்பான தொழில்கள் நடைபெறுகிறது. இந்த மாவட்டத்தின் விவசாய பரப்பளவு சுமார் 5356 எக்டர்கள். இதில் 914 எக்டர் பரப்பளவுக்கு தென்னை பயிரிடப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு இங்கிருந்து மட்டும் சுமார் 1.15 லட்சம் தேங்காய்கள் அறுவடை செய்யப்படுகின்றன. பிரான்மலை, கோவில்பட்டி, வெங்கைபட்டி, கோபாலசேரி, ஒடுவான் பட்டி, நாடார்வேங்கைபட்டி, குமர்த்தாகுடிபட்டி ஆகிய இடங்களில் இன்னும் பாரம்பரியமான முறையில் கயிறு தயாரிக்கும் கையினால் கயிறு பின்னும் தறிக்கூடங்கள் இயங்கி வருகின்றன. மாணப்பட்டி, எஸ்.வி மங்கலம் உள்ளிட்ட சில பகுதிகளில் புதிய வகை தானியங்கி இயந்திரங்கள் மூலம் கயிறு பின்னும் தொழில் நடக்கிறது.

சிங்கம்புணரி சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பலரும் பரவலாக கயிறு திரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தாலும், இந்த தாலுகாவின் உப்பு செட்டியார் என்று சொல்லப்படக்கூடிய சமூகத்தை சேர்ந்த குடும்பங்கள் 2 தலைமுறைக்கும் மேலாக தென்னை கயிறு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆரம்ப காலத்தில் தென்னையை மரத்தை வளர்த்து தேங்காய்களை பிரித்து பல்வேறு ஊர்களுக்கும் வழக்கமாக விற்பனைக்கு அனுப்பி வந்திருக்கிறார்கள். அதோது கயிறு திரிக்கும் தொழிலும் பரவலாக நடந்திருக்கிறது.

சிறிய தாம்புக்கயிறு முதல் படகுகளையும், தேர் இழுக்க பயன்படும் மிக அதிக வடக்கயிறுகளையும் திரித்து விற்பனைக்கு அனுப்பும் தொழில் தொடர்ந்து இங்கு பிரதானமாக இருந்து தற்போதும் இந்த தொழில் இங்கு களைகட்டி வருகிறது. இப்படி திரிக்கும் கயிறில் ஒரு வகை தான் மங்கதான் என்ற ரக கயிறு. இந்த கயிறு  சிப்பமிடுவதற்கு ( பேக்கேஜிங்) பயன்படுகிறது. அந்திமங்கதான் என்ற ஒரு வகை நார்க்கழிவு கூரை வேயவும், கட்டிடங்கள் கட்டுவதிலும் பயன்படுகிறது. மணிச்சூடி வகை கயிறுகள் தரைவிரிப்புகள் தயாரிக்கவும், கால்மிதியடி தயாரிக்கவும் கொண்டு செல்லப்படுகிறது.

80 ஆயிரம் பேர்

இது தவிர தேங்காயிலிருந்து கொப்பரை இறக்கி எண்ணெய் தயாரிக்கும் தொழிலிலும் பலர் ஈடுபடுகின்றனர். உப்பு செட்டியார்கள் தொடங்கி வைத்த இந்த தொழிலை இன்றைக்கு சுற்று வட்டாரத்திலுள்ள பலரும் கற்றுக் கொண்டு விட்டனர். தற்போது சிங்கம்புணரியில் மட்டும் சுமார் 80 ஆயிரம் பேர் இந்த தொழிலை நம்பி உள்ளனர்.

கடந்த காலங்களில் கயிறு உற்பத்தி தான் பிரதானமாக இருந்தாலும், தற்போது தேங்காய் பித் என்று சொல்லப்படும் தேங்காய் நார் கட்டிகள் இங்கு அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவின் எங்கோ ஒரு மூலையில் கிடக்கும் இந்த சிங்கம்புணரி சமீப காலமாக உலக இறக்குமதியாளர்களின் கவனத்திற்கு வரக்காரணம், இந்த நார்பித்துக்கள் தான்.

இப்படியாக காலத்தின் தேவைக்கு தகுந்தபடி இங்கு மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு இந்த பகுதி மக்கள் தஙகள் வாழ்க்கை சக்கரத்தை சிறப்பாக இயக்கி வருகிறார்கள். தென்னை என்னும் பிள்ளை உப்புச் செட்டியார்களால் அதிக அளவில் வளர்க்கப்பட்டாலும், இன்றைக்கு அது பல மக்களின் வயிறை நிறையச் செய்யும் ஒரு அட்சய பாத்திரமாக மாறியிருப்பதென்னவோ உண்மை.


சிங்கம்புணரியின் தொழில் அமைப்பை கவனத்தில் கொண்ட தானம் அறக்கட்டளை இங்குள்ள சில பகுதிகளை தனது கவனத்தில் எடுத்துக் கொண்டு இந்த பகுதி மக்களுக்கு தென்னையில் புதிய தொழில் வாய்ப்புகளை அடையாளம் காட்டி வருகிறது. இயற்கை பொருளான தென்னை நார்க்கயிறுக்கு  உலகம் முழுவதிலும் தற்போது நல்ல வரவேற்பு இருக்கிறது.

இதனால் சிங்கம்புணரியிலும், சுற்றுவட்டாரங்களிலும் தென்னை தொழிலை ஊக்குவிக்கும் முகமாக மத்திய அரசின் கயிறுவாரியம், நபார்டு வங்கி உள்பட பல்வேறு அமைப்புகள் இந்த தொழிலை மேம்படுத்துவதற்கு கடனுதவி, இங்குள்ள கயிறு தொழிலாளர்களுக்கு நவீன தொழில்நுட்ப பயிற்சி, தென்னை பொருட்களில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிப்பதற்கான பயிற்சி தருவது என்று தீவிரமாக களம் இறங்கி இருக்கின்றன.வாழ்த்தப்பட வேண்டியவர்களே
அப்பாவி ஏழைமக்களை காட்டி சாதியின் பெயரில் அரசியல் செய்து தன்னை தானே வளர்த்துக் கொள்ளும் சில பெரிய மனிதர்களின் மத்தியில், "நாம் உண்டு..நமது வேலை உண்டு" யாருக்காவது உதவியாக வாழ்ந்து மறைந்தால் போதும் என்று தென்னையால் சிங்கம்புணரியை அடையாளம் காட்டிய உப்புச்செட்டியார்கள் வாழ்த்தப்பட வேண்டியவர்களே!

வரும் 2012 ம் ஆண்டுக்குள் உலக அளவில் சிவகங்கை மாவட்டத்தை தென்னை சார்பான தொழிலில் சிறப்பிடம் வகிக்கும் மாவட்டமாக உயர்த்துவது தான் நோக்கம் என்கிறார்கள் தறபோது சிங்கம்புணரி தாலுகாவில் ஸ்புருதி என்ற திட்டத்தின் மூலம் தென்னை நார்க்கழிவு மூலம் பித் களை தயாரிக்கும் தொழிலை மேம்படுத்தி தமிழகத்தில் தென்னையால் வளமான ஊராக சிங்கம்புணரியை அடையாளம் காட்ட முயற்சிக்கிறோம் என்கிறார்கள் தானம் அறக்கட்டளை நிறுவனத்தினர்.

சிங்கம்புணரி கயிறு தொழில் பற்றி பா.சிதம்பரம் பேசி வெளி வந்த செய்தி தி ஹிந்து நாளிதழில்    
http://www.hindu.com/2008/03/09/stories/2008030954070500.htm

( வாஜ்பாய் பிரதமராக இருந்த போது சின்னப்பிள்ளை என்னும் ஒரு வயதான பெண்ணின் காலை தொட்டு வணங்கினார். அது மிக பெரிய செய்தியாக வந்தது. பல குடும்பங்களிடம் சுயஉதவிக்குழுவின் அமைப்பை கொண்டு சேர்த்து அவர்களை கூட்டுறவு முறையில் இணைத்து சிறிய அளவில் தொழில்களை செய்து சொந்தக்காலில் நிற்க உதவியவர் இந்த சின்னப்பிள்ளை. இவர் தானம் பவுண்டேசன் வழியாக செயல்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் தான் தற்போது சிங்கம்புணரியில் தென்னை வளர்ச்சிக்கான திட்டங்களை முன்னெடுத்து வருகிறது)

0 கருத்துகள்: (+add yours?)

காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today