கடித்த பாம்பு எதுவென்று தெரிந்து கொண்டால் எளிதாக வைத்தியம்

5 கருத்துகள்

                                    பாம்பு கடி பட்டவர்களின் நிலை இது தான்
பாம்புகளின் இனத்தை பற்றி ஒரு பதிவு எழுத தொடங்கினேன். அதன் தொடர்ச்சி தான் இந்த பதிவு. வேலை பளு காரணமாக நீண்ட நாள் கழித்து சந்திப்பு நண்பர்களே !
இப்போது தமிழ்நாட்டில் கோடை மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே இயற்கையில் உயிரினங்கள் இந்த மழைநீரை பயன்படுத்திக் கொண்டு தங்கள் சந்ததிகளை பெருக்கம் செய்வது உண்டு. குறிப்பாக கோடை மழையை பயன்படுத்தி ஆங்காங்கே விவசாயம் செழிப்பாக நடக்கும். இந்த கட்டத்தில் தான் பாம்புகளின் நடமாட்டமும் வயலில் இருக்கும். "பாம்பு கடித்தால் சாவு தான்" என்பது தான் பொதுவான கருத்து.

ஆனால் நம்மிடையே பல காலங்களாக இருந்து வந்த நாட்டுப்புற வைத்தியர்கள் இப்போது குறைந்து போனதால் நாட்டு மருந்துகளை பற்றிய விடயங்களும் மறைந்து வருகின்றன. முன்பெல்லாம் பாம்பு கடியை பற்றி அவ்வளவாக பயப்பட மாட்டார்கள். கடித்த பாம்பு எதுவென்று தெரிந்து கொண்டால் எளிதாக வைத்தியம் பார்த்து பிழைத்துக்கொள்ளலாம் என்பதை உறுதியாக நம்புவார்கள்.

பொதுவாக கிராமங்களில் வயல்வரப்புகளில் எலிகளை தேடி வரும் பாம்புகள் அங்கு வேலை செய்யும் விவசாயிகளை கடித்து விடுவதண்டு. என்ன கடித்தது என்றே தெரியாமல் ஏதோ கடித்து விட்டது என்ற எண்ணிக் கொண்டு மந்திரித்தால் சரியாகி விடும் என்று விட்டு விடுபவர்கள் தான் பெரும்பாலும் இறந்து போகிறார்கள். இன்றைக்கு அரசாங்கம் மக்களுக்கான பாம்பு கடி மருந்துகள் கூட பற்றாக்குறையில் இருக்குமளவுக்கு தான் அரசை நடத்துகிறது. நகரங்களில் நாய் கடித்தவர்களின் புள்ளி விவரம் இருக்கும் அளவுக்கு கூட இந்தியாவில் பாம்பு கடித்து இறப்பவர்களின் எண்ணிக்கை சரியாக இல்லை.

பாம்புகளில் ஏராளமான வகைகள் இருக்கின்றன. நல்லபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், ஊது சுருட்டை, வளனை, சாரை, தண்ணீர் பாம்பு( டிஸ்கவரி சேனலில் அவ்வப்போது பசிக்கு பியர் கிரில்ஸ் பிடித்து சாப்பிடுவது), கொம்பேறி மூக்கன், மலைப்பாம்பு, கருநாகம், சுண்டக்கருவினை, சாரை என்று பல வகை இருக்கின்றன.ஆனால் இவற்றில் மனிதனை கொல்லக்கூடிய அளவுக்கு விஷமுள்ளவை குறைவே. ஆனால் கடுமையான விஷமுள்ளவை என்று கருநாக வகை பாம்புகளின் கடி தான் ஆபத்தானவை. ஆனாலும் பாம்பு கடித்த அடுத்த நிமிடம் முதலுதவி கிடைத்து விட்டால் கடி பட்ட நபரை பிழைக்க வைத்து விடலாம் என்பது தான் அனுபவத்தில் கண்ட உண்மை.

இது தவிர கடிபட்ட நபர்கள் தன்னை கடித்தது என்ன பாம்பு என்று அடையாளத்தை சரியாக சொல்ல தெரிந்தால் அந்த நபருக்கு நச்சு முறிவு மருந்தை உடனடியாக தேர்வு செய்ய முடியும். பொதுவாக இப்படி அடையாளம் காண தெரியாமல் விடும் போது தரப்படும் தடுப்பு மருந்துகள் ஒருவரின் உயிரை பிழைக்க வைத்து விட்டாலும், கடி பட்ட இடத்தில் இருக்கும் தசை அணுக்கள் செயலற்று போய்விடுகின்றன.
எனவே பாம்பு கடித்து விட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். நோயாளி சுயநினைவுடன் இருக்கும் போதே பாம்பின் அடையாளத்தை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் இருக்கும் சில பாம்பு பிடிக்கும் குழு மக்களுக்கு பாம்புகள் கடித்தால் விஷம் ஏறுவதில்லை என்று சமீபத்தில் டிஸ்கவரி சேனலில் சொல்வதை பார்க்க முடிந்தது. காரணம், காலம் காலமாக இந்த இனத்து மக்கள் பாம்பு பிடிப்பதும், அவர்கள் பாம்பு கடிபடும் போது அது அவர்கள் உடலில் நாளாவட்டத்தில் பாம்பு விஷத்தை முறித்துக்கொள்ளும் அளவு வலிமை பெற்றிருப்பதும் தெரியவந்தது. ஆனால் சாதாரண நபர்கள் பாம்புகளிடம் கடி பட்டால் பதறிவிடுகிறார்கள்.

பாம்பு கடித்ததும் ஐயோ....பாம்பு கடித்து விட்டதே என்று அதிர்ச்சியடைகிறார்கள். இப்படி ஏற்படும் அதிர்ச்சியும் பயமும் தான் அந்த நபரை மரணத்தின் விளிம்புக்கு அழைத்து சென்று விடுகிறது. பாம்பு கடித்து விட்டால் பதறக்கூடாது. இது தான் மிக முக்கியமானது. கடித்த பாம்பு தப்பித்து விட்டாலும் அதன் தோற்றத்தை நினைவில் கொள்ள வேண்டும். அப்போது தான் மருத்துவர்கள் சரியான விஷ முறிவு மருந்தை தேர்வு செய்ய முடியும்.
பொதுவாக கடிபட்ட இடத்தில் பாம்பின் ஒரு பல் பதிந்திருந்தால் அது தோலை மட்டும் தான் பாதித்திருக்கிறது என்றும், இரண்டு பல்லும் பதிந்திருந்தால் அது சதையை பாதிக்கும் என்றும், மூன்று பல் பட்டால் அது எலும்பை பாதிக்கும் என்றும், நான்கு பல் பட்டால் மூளையை பாதிக்கும் என்றும் சொல்வார்கள். பொதுவாக பற்குறி அழுத்தமாக தெரிந்தாலோ, கடிபட்ட இடம் கூர்மையான தீக்கனலில் காட்டிய ஊசியை இறக்கியது போல் எரிச்சலாக இருந்தாலே கடியின் வேகம் அதிகம் என்று தெரிந்து கொள்ளலாம்.

இப்படி இருக்கும் நிலையில் கிராமப்புறங்களில் விரலி மஞ்சளை நெருப்பில் காட்டி அது தணலாக இருக்கும் போது இந்த மஞ்சளின் எரிந்து கொண்டிருக்கும் பகுதியை வைத்து கடிவாயில் அழுத்துவார்கள். இதனால் பாம்பின் நஞ்சு முறிந்து விடும் என்கிறார்கள் அனுபவ வைத்தியர்கள்.
மருத்துவர்கள் இல்லாத பல கிராமங்களில் இன்றும் இது நடைமுறையில் இருக்கிறது. இது தவிர பாம்பு கடி பட்ட நபர்களுக்கு வாழை மட்டையை திருகினால் வரும் சாற்றை எடுத்து குடிக்க கொடுப்பதுண்டு. இந்த வாழைப்பட்டை சாறு பாம்பின் விஷத்தை முறிக்கிறது என்பது கைகண்ட வைத்திய முறை. நாகப்பாம்பு அல்லது கருநாகம் கடித்திருந்தால் கடித்த இடத்தில் ஒரு பல்லுக்கும் இன்னொரு பல்லுக்கும் ஒரு அங்குல இடைவெளி தென்படும். விரியன் பாம்பு கடித்திருந்தால் இரண்டிற்கும் மேற்பட்ட பற்குறிகள் காணப்படும். நல்ல பாம்பு கடித்தால் ரத்தம் வேகமாக உறையும். மற்ற பாம்புகள் கடித்தால் ரத்தம் உறையாமல் கடி இடத்திலிருந்து ரத்த ஒழுக்கு இருக்கும்.

பாம்பு கடிபட்டவருக்கு ஆமணக்கு இலைகளுடன், ஏழு மிளகை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்து உள்ளுக்குள் கொடுத்தால் பாம்பின் நஞ்சு ஏறாது. மணிக்கு ஒரு தடவை இந்த மருந்தை கொடுத்து வரவேண்டும். இந்த பச்சிலை மருந்து வாந்தியை ஏற்படுத்தி நச்சை நீங்க செய்யும்.
பாம்பு கடித்த நபரை எக்காரணம் கொண்டும் தூங்க விடக்கூடாது. உப்பு, புளி, காரம், எண்ணெய் நீக்கிய வெறும் பச்சரிசியும், பாசிப்பயறும் சேர்த்து பொங்கல் செய்து சாப்பிட தரவேண்டும். பாம்பு கடி பட்டவர் மூர்ச்சையாகி விட்டால் தும்பை செடியை கசக்கி பிழிந்து சாறு எடுத்து அவரது மூக்கினுள் சிறிது விட வேண்டும். இதனால் மூர்ச்சை தெளிந்து விடும். இது தவிர அருகம் புல்லை வெண்ணெய் போல் அரைத்து கடிபட்ட இடத்தில் வைத்து கட்டினால் பாம்பின் நஞ்சு இறங்கி விடும். அருகம்புல்லின் வாசனை மூர்ச்சையை தெளிய வைக்கும்.

நஞ்சு இறங்கி கடிபட்டவர் ஒரளவு தெளிவான நிலையில் இருந்தால் அவருக்கு வேப்பிலையை வாயில் போட்டு மெல்ல சொல்ல வேண்டும். அப்போது கசப்பு தெரிந்தால் நஞ்சு வெளியாகி விட்டது என்று தெரிந்து கொள்ளலாம். இந்த நிலையில் தும்பை இலை, தும்பை பூ ஆகிய இரண்டையும இடித்து சாற்றை குடிக்க தரவேண்டும். இப்படியான நாட்டு வைத்திய முறையில் பாம்பு கடிபட்டவரை முதலுதவி செய்து காப்பாற்றி விடலாம்.

சில பாம்புகள் கடித்தால் அறிகுறிகள்
நல்ல பாம்பு கடித்தால், கடிபட்ட இடத்தில் வலி இருக்கும். சிலருக்கு வலி தெரியாது. பார்வை மங்கும். கண் இமை சுருங்கும். நாக்கு தடிக்கும். பேச்சு குளறும். வாயில் எச்சில் வடியும். மூச்சு திணறும். நினைவு குறையும்.
கட்டு விரியன் கடித்தால் இந்த அறிகுறியுடன் வயிற்று வலியும் இருக்கும். கண்ணாடி விரியன் கடித்தால் கடிபட்ட இடத்தில் வலி கடுமையாக இருக்கும். கடிபட்ட இடத்தில் வீக்கம், மூச்சுதிணறல், வாந்தி, சோர்வு, சிறுநீர், மலம் ஆகியவற்றுடன் ரத்தம் வரும்.
எனவே பாம்பு கடித்தால் அலட்சியம் வேண்டாம். காரணம், சில நேரங்களில் அது மரணத்தை ஏற்படுத்தாவிட்டாலும் உடலின் முக்கிய பாகங்களில் நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தி விடும். உங்கள் கிராமங்கள் அவசர மருத்துவத்திற்கு எட்டாத இடத்தில் இருந்தால் இது போன்ற முதலுதவிகளை உடனே செய்ய அறிவுறுத்துங்கள்.

வேண்டுகோள்-தயவு கூர்ந்து தோள் கொடுங்கள் நண்பர்களே!!!

10 கருத்துகள்

"இதுவரை 15 இடங்களுக்கு என்னை மாத்தி மாத்திப் பந்தாடிட்டாங்க. இப்போதான் முதன்முதலா நாமக்கல் மாவட்டத்துக்கு கலெக்டர் ஆகியிருக்கேன். மாவட்டம் முழுக்க ஒரு கோடி மரக் கன்றுகள் நடத் திட்டமிட்டு, ஏழு லட்சம் மரக் கன்றுகளை நட்டாச்சு. அவற்றின் முறையான பராமரிப்புக்கும் ஏற்பாடு பண்ணியாச்சு. இன்னும் 10 வருஷத்துல அதிக மரங்கள் உள்ள மாவட்டமாக நாமக்கல் இருக்கும்"சகாயம்,கலெக்டர்.

 

மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.சகாயம் அவர்கள் மரங்களை நேசிப்பவர். கூடவே லஞ்ச ஊழல் இல்லாத நிர்வாகம் வேண்டும் என்று விரும்புபவர்.அவரை பற்றி இங்கு சில தகவல்களை பரிமாரி கொள்வதில் மகிழ்ச்சி.


லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து! இப்படியும் ஒரு கலெக்டர்
 மதுரை புதுக்குலம் கிராமத்தில் மக்களிடம் பணம் மற்றும் பரிசுக்கு விலை போகாமல் வாக்களிக்க வேண்டியது பற்றி கலெக்டர் சகாயம் பேசுகிறார்


''என்னை கோயம்புத்தூருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணியிருந்த நேரம். என் பொண்ணு யாழினிக்கு அப்போ மூணு வயசு. திடீர்னு ஒருநாள் ராத்திரி அவ மூச்சுவிட சிரமப்பட்டா. ஹாஸ் பிடலுக்குத் தூக்கிட்டுப் போனா உடனே அட்மிட் பண்ணச் சொல்லிட் டாங்க. மாசக் கடைசிங்கிறதால கையில ஆயிரம் ரூபாய்கூட இல்லை. புது ஊரு. அறிமுகம் இல்லாத மனுசங்க. எனக்குக் கீழே வேலை பார்க்குறவங்ககிட்ட கடன் கேட்கவும் சங்கடமா இருந்துச்சு. 

காஞ்சிபுரத்துல நான் வேலை பார்த்துட்டு இருந்தப்ப, எனக்கு நண்பரான ஒரு ஸ்கூல் டீச்சரும் அப்ப கோவைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருந்தாரு. அவர்கிட்ட தயங்கிட்டே நாலாயிரம் ரூபாய் கடன் கேட்கவும், அரை மணி நேரத்துல கொண்டுவந்து கொடுத்தார். உடனே, குழந்தைக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சுட்டோம். ஆனா, சம்பளம் வாங்கினதும் அந்தக் கடனை அடைச்சதும்தான் என் மனசுல இருந்த பாரம் இறங்குச்சு!''

சகாயம் ஐ.ஏ.எஸ்., நாமக்கல் மாவட்ட ஆட்சியர். மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் எல்.ஐ.சி. ஹவுஸிங் லோன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடு, வங்கியில் 7,172 ரூபாய் சேமிப்பு எனப் பகிரங்கமாகத் தனது சொத்துப் பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம். 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' வாசகத்துக்குக் கீழ் தலை நிமிர்ந்து அமர்ந்திருக்கிறார் சகாயம்.

''நான் அந்த கோயம்புத்தூர் சம்பவத்தை ஏன் சொல்றேன்னா... அப்ப என் கன்ட்ரோல்ல 650 மதுபானக் கடைகள் இருந்தன. லைசென்ஸ் புதுப்பிக்க கடைக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய்னு கொடுக்கத் தயரா இருந்தாங்க. நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, அடுத்த அஞ்சாவது நிமிஷம் 65 லட்ச ரூபாய் என் வீடு தேடி வந்திருக்கும். ஆயிரம் ரூபாய்கூட கையில் இல்லாத, மகளுக்கு உடம்பு சரியில்லாத சூழ்நிலையில் மனநிலை என்ன மாதிரி இருக்கும்னு யோசிச்சுப்பாருங்க. 

ஆனா, அதெல்லாம்தான் ஓர் அரசு அதிகாரியின் நேர்மைக்கான சோதனை. நேர்மையா இருக்குறதுல ஒரே ஒரு சிக்கல் மட்டும்தான். நாளுக்கு நாள் நமக்கு எதிரிகள் அதிகரிச்சுட்டே போவாங்க. அவங்களை மட்டும் சமாளிச்சுட்டாப் போதும்!'' - தடதடக்கும் வார்த்தைகளில் கொப்பளிக்கிறது உற்சாகம்.

''புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனை குக்கிராமம்தான் என் ஊரு. 'மத்தவங்க தோட்டத்து மாங்காய் தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக் கூடாது'ன்னு சொல்ற அம்மா. 'நீ படிச்சு கலெக்டர் ஆகி, உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்டா'ன்னு சொல்லிட்டே இருக்குற அப்பா. 'கலெக்டர்தானே... ஆயிடுவோம்'னு படிச்சேன். ஆயிட்டேன். வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் நம்ம மனசு எந்தளவுக்குப் புத்துணர்ச்சியோடவும் புனிதமாகவும் இருக்கோ... கடைசி நாளின்போதும் அதே உணர்ச்சியோடு ஓய்வு பெறணும்னு மட்டும் முடிவு பண்ணேன்.

காஞ்சிபுரத்துல டி.ஆர்.ஓ-வா இருந்தப்ப ஒரு பெரியவர் தான் வாங்கிய பெப்சியில் அழுக்குப் படலம் இருந்ததாகப் புகார் கொடுத்தார். சாம்பிளை லேப் டெஸ்ட்டுக்கு அனுப்பினதுல, 'மனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லை'ன்னு ரிப்போர்ட் வந்தது. சட்டப்படி அந்த நிறுவனம் மேல என்ன நடவடிக்கை எடுக்கணும்னு ஒரு அறிக்கை தயாரிச்சேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு தாசில்தார்கிட்ட எட்டு பூட்டு மட்டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல இருக்குற பெப்சி கம்பெனிக்குப் போனேன்.

நான் தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேனேஜர்கிட்ட கொடுத்துட்டு, 'கம்பெனியைப் பூட்டி சீல்வைக்கப் போறோம். எல்லாரையும் வெளியே வரச் சொல்லுங்க'ன்னு சொன்னோம். அந்த மேனேஜரைவிட என்கூட வந்த தாசில்தார் ஆடிப் போயிட்டாரு. 'சார்... பெரிய பிரச்னை ஆயிடும். எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்'னு பதறுனாரு. 'கலெக்டரைக் கேட்டா சீல்வைக்க விட மாட்டாரு. சட்டப்படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதிகாரம் இருக்கு. 

நீங்க தைரியமா உங்க கடமையைச் செய்யுங்க'ன்னு அவரை உள்ளே அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழிச்சு இன்னும் பதற்றத்தோடு வெளியே வந்தவரு, 'சார்... அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார். சி.எம்-கிட்ட பேசுறதாச் சொல்றாங்க சார். என்ன பண்ணலாம்?'னு கேட்டாரு. 'உள்ளே இருக்கிறவங்களை அரெஸ்ட் பண்ணிட்டு சீல்வைக்க வேண்டியதுதான்'னு நான் சொல்லவும்தான் எல்லாரும் பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி, எட்டு பூட்டுகளையும் போட்டு சீல்வெச்சுட்டோம்.

நான் உடனே அலுவலகத்துக்குப் போகாம ஒரு குக்கிராமத்துக்குப் போயி ரேஷன் கடை, பள்ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு பண்ணி முடிச்சுட்டு, ராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி வாசல்லயே காத்துட்டு இருந்தாங்க. கலெக்டர், சீஃப் செக்ரெட்டரி, உள்துறைச் செயலாளர்னு பலரும் என்னைக் கேட்டு வீட்டுக்கு போன் பண்ணிஇருக்காங்க. நான் திரும்ப எல்லோருக்கும் போன் பண்ணா, 'யாரைக் கேட்டு சீல்வெச்சீங்க? என்ன காரியம் பண்ணியிருக்கீங்க தெரியுமா?'ன்னு எல்லாரும் கேள்வி கேட்டாங்க. 

'நான் என் கடமை யைத் தான் சார் செஞ்சேன். மக்களுக்கு நல்லது செஞ்சதுக்காக சஸ்பெண்ட் பண்ணா, தாராளமாப் பண்ணிக்கோங்க'ன்னு சொல்லிட்டேன். மறு நாள் எந்தப் பத்திரிகைலயும் பெட்டிச் செய்தியாக்கூட பெப்சிக்கு சீல்வெச்ச சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை.
ரெண்டு நாள் கழிச்சு ஜூனியர் விகடன்ல மட்டும் அந்தச் செய்தி விரிவா வந்திருந்தது. அதுக்குப் பிறகுதான் பெப்சிக்கு நான் சீல்வெச்ச விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிஞ்சது.



இதுவரை 15 இடங்களுக்கு என்னை மாத்தி மாத்திப் பந்தாடிட்டாங்க. இப்போதான் முதன்முதலா நாமக்கல் மாவட்டத்துக்கு கலெக்டர் ஆகியிருக்கேன். மாவட்டம் முழுக்க ஒரு கோடி மரக் கன்றுகள் நடத் திட்டமிட்டு, ஏழு லட்சம் மரக் கன்றுகளை நட்டாச்சு. அவற்றின் முறையான பராமரிப்புக்கும் ஏற்பாடு பண்ணியாச்சு. இன்னும் 10 வருஷத்துல அதிக மரங்கள் உள்ள மாவட்டமாக நாமக்கல் இருக்கும். 

ஏற்கெனவே நொந்து போயிருக்கும் விவசாயிகளை, 'குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வா'ன்னு ஒவ்வொரு மாசமும் கலெக்டர் ஆபீசுக்கு அலைக்கழிக்கிறது நல்லாவா இருக்குன்னு நானே விவசாயிகளைத் தேடிப் போக ஆரம்பிச்சேன். ஒருநாள் ராத்திரி முழுக்க அந்தந்த கிராமத்துலயே தங்கி, அவங்க குறைகளை வாழ்ந்து பார்த்துட்டு வருவேன். அப்பதான் அவங்க சொல்றதுக்கு முன்னாடியே அவங்க குறைகள் என்னன்னு நாமளே உணர முடியும்!'' என்கிற சகாயம், தன் மகள் யாழினியை மடியில் வைத்துக்கொண்டு, ''சொல்லுடா குட்டி... உயர உயரப் பற... வானம் வசப்படும்!'' என சொல்லிக் கொடுக்கிறார்.

''உயர உயரப் பற... வானம் ஒரு நாள் வசப்படும்'தான் கரெக்ட்!'' - திருத்திச் சிரிக்கிறாள் கலெக்டர் மகள்!
நன்றி........ ஆனந்த விகடன்
நன்றி:தீக்கதிர்(1.4.2011)

தற்போது கலெக்டர் சகாயத்தை மதுரையில் இருந்து மாற்ற கோரி மனு சிலரால் கொடுக்கபட்டுள்ளது. மரங்களை நேசிக்கும் மதுரை கலெக்டர் சகாயம் இந்த மாவட்டத்தில் தொடர உங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டுகிறோம்.

காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today