இலை, தழைகளிலிருந்து சத்து நிறைந்த மட்கிய உரம் தயாரிக்கலாம்

0 கருத்துகள்


கடந்த வாரத்தில் ஒரு நாளிதழில் வந்த செய்தி: கலப்பின மாடுகளின் பாலை நாம் அருந்துவதால் தான் சர்க்கரை மற்றும் இதய நோய்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளதாக என்பதை குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழக கால்நடை பல்கலைக்கழகம் அறிவித்தது.
பொதுவாக இன்றைக்கு, இது போல் பால் மட்டுமல்ல, உணவிற்காக பயிரிடப்படும் பயிர்களுக்கு தாராளமாக ரசாயன உரங்களை இடுவதால் மனித உடலில் கடுமையான விஷம் மறைமுகமாக கலந்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. என்டோசல்பான் என்னும் கொடிய ரசாயனத்தை தடை செய்ய சொல்லி சமீபத்தில் இந்தியாவின் பல மாநிலங்களிலும் பேரணிகள், ஊர்வலங்கள் நடைபெற்றன. இது போல் தடை செய்யப்பட வேண்டிய ரசாயனங்கள் நிறைய இருக்கின்றன. இப்படி இவற்றையெல்லாம் தடைசெய்தால் எதை தான் பூச்சிக்கொல்லியாகவும், உரமாகவும் பயன்படுத்துவது என்ற கேள்வி எழுகிறது. 

இயற்கையாக நாமே தயாரிக்கும் உரங்களை பயன்படுத்த முடியும். காடுகளில் இருக்கும் மரங்கள் எல்லாம் செழிப்பாக பச்சைபசேல் என்று தழைக்கின்றன. காரணம், அவற்றில் இருந்து விழும் இலைகள் மக்கி அந்த தாவரங்களுக்கே உரமாகி விடுகின்றன. இந்த எளிதான செயல்முறையை நாமும் செய்து இயற்கை உரத்தை தயாரிக்கலாம். பொதுவாக இப்படி மரங்களிலிருந்தும், செடிகளிலிருந்தும் கிடைக்கும் கழிவுகளை பண்ணைக்கழிவுகள் என்கிறோம்.
கழிவுகளை சேகரித்தல்
பல்வேறு இடங்களிலிருந்து கிடைக்கும் இலை, தழைகளை சேகரம் செய்து, ஏதாவது ஒரு மூலையில் குவித்து வைக்க வேண்டும். கழிவுகளை மட்குவிப்பதற்கு முன்பாக அவற்றை சிறு சிறு துகள்களாக்கும் இயந்திரத்தினை (சிறிய அளவில் இலை, தழைகளை வெட்டும் எந்திரம்)பயன்படுத்துவன் மூலம், துகள்களாக்குவது சுலபம்.வீட்டில் இது போன்ற கழிவுகளை மக்க வைக்க ஒரு கம்பி போன்றதடியை கொண்டு கிளறலாம்.
பச்சை மற்றும் பழுப்பு நிறக்கழிவுகளை கலக்குதல்
இந்த கழிவுகளில் இருக்கும் கரிமச்சத்து மற்றும் தழைச்சத்து விகிதம் தான் மட்கும் முறையை நிர்ணயிக்கும் காரணிகளாகும். இவை இரண்டிற்கான விகிதம் அதிகமாக இருந்தால், மட்கும் முறை நடைபெறாது. விகிதம் குறைவாக இருந்தால் மட்டுமே, மட்கும் முறை நடைபெறும். சாதகமான விகிதம் கிடைப்பதற்கு கரிமச்சத்து மற்றும் தழைசத்து அதிகமுள்ள கழிவுகளை நன்கு கலக்க வேண்டும். அதாவது பச்சை மற்றும் காய்ந்த கழிவுகளை சேர்த்து கலக்க வேண்டும்.
உதாரணத்திற்கு, பச்சை கழிவுகள்-கிளைசிரிடியா இலைகள், பார்த்தீனியம் களைகள், அகத்தி இலைகள்.வீட்டில் உரம் தயாரிக்கும் போது சமையல் அறை காய்கறி கழிவுகள்.
பழுப்பு கழிவுகள்- வைக்கோல், காய்ந்த இலைகள் மற்றும் காய்ந்த புற்கள்
 இவ்விரண்டையும் கலந்து வைப்பதன் மூலம் குறைந்த காலத்தில் மட்க வைக்க முடியும்.
கம்போஸ்ட் குழிகள்
திறந்த வெளியில் இது போல் உரம் தயாரிக்கும் போது அதற்காக மட்க வைக்கும் இடம் ஒன்றை தயார் செய்ய வேண்டும். இந்த குழிஎன்பது  உயரத்திலும், நல்ல நிழற்பாங்கான இடமாக இருப்பதும் அவசியம். இந்த இடத்தில் மேலே சொன்ன கரிமச்சத்து மற்றும் தழைச்சத்து நிறைந்த கழிவுகளை பச்சை மற்றும் பழுப்பு கழிவுகளை ,சுமார் 4 அடி உயரத்திற்கு மாற்றி மாற்றி இட்டு இடையிடையே கால்நடைக்கழிவுகளையும் கலக்கி சமப்படுத்திய பின் அவற்றை நன்கு ஈரமாக்க வேண்டும். இந்த அமைப்புக்கு பெயர் தான் 'கம்போஸ்ட் குழிகள்'.
மட்குவதற்கு தேவையான உயிர் உள்ளீடுகள்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக நுண்ணுயிர் கூட்டுக்கலவையை இடுவதன் மூலமாக கழிவுகளை மட்குவதை துரிதப்படுத்தலாம். 1 டன் பயிர்க்கழிவிற்கு 2 கிலோ நுண்ணுயிர் கூட்டுக்கலவையை 20 லிட்டர் நீரில் கலந்து கரைசலாக்கி, குவித்து வைக்கப்பட்டுள்ள பயிர்க்கழிவில் நன்றாக தெளித்து கலக்க வேண்டும்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக நுண்ணுயிர் கூட்டுக்கலவை கிடைக்காத பட்சத்தில், தழைச்சத்திற்கும் நுண்ணுயிர்க்கும் சிறந்த ஆதாரமாக விளங்கும் பசுஞ்சாணக்கரைசலை பயன்படுத்தலாம். 1 டன் பயிர்க்கழிவிற்கு, 40 கிலோ பசுஞ்சாணத்தை 100 லிட்டர் நீரில் கரைத்து பயிர்க்கழிவில் நன்றாக தெளிக்க வேண்டும்.
கம்போஸ்ட் படுக்கையில் காற்றோட்டம் ஏற்படுத்துதல்
'கம்போஸ்ட் குழிகளில்' ஆக்சிஜன் அதிகமாக இருந்தால் தான் நுண்ணுயிர்க்களின் செயல்பாடுகள் தூண்டப்படும். எனவே, குழியில் காற்றோட்டம் ஏற்படுத்த பூமியில் உள்ள குழியின் பக்கவாட்டில் இருந்து அல்லது செங்குத்தான நிலையில் குழாய்களைப் பொருத்தலாம். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை இந்த குழியில் இருக்கும் கழிவுகளை கிளறி விடுவதன் மூலம் கீழுள்ள கழிவுகள் மேலும், மேலுள்ள கழிவுகள் கீழும் செல்வதால், இந்த கழிவை மக்க வைக்க உருவாகி இருக்கும் நுண்ணுயிர்களின் செயல்பாடுகள் துரிதப்படுத்தப்படுகிறது.
ஈரப்பதம் நிலைநிறுத்துதல்
எந்த சூழ்நிலையிலும் கம்போஸ்ட் குழிகளில் ஈரப்பதம் குறையாமல்பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு குறையும் பட்சத்தில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைந்து மட்கும் தன்மை வெகுவாக பாதிக்கப்படும்.
மட்கிய உரம் முதிர்வடைதல்
மேல் கண்டவாறு 30 நாட்கள் கம்போஸ்ட் குழிகளில்  வைக்கப்படும் இந்த கழிவானது முதிர்வடையும் நிலையை எட்டும். முதிர்வடைந்த மட்கிய உரமானது, அளவு குறைந்தும், கருப்பு நிறமாகவும், துகள்களின் அளவும் குறைந்து காணப்படும். முதிர்வடைந்த மக்கிய உரத்தினை கலைத்து தரையில் விரித்து, மறுநாள் 4 மி.மீ சல்லடை கொண்டு சலித்து எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
செறிவூட்டப்பட்ட மட்கிய உரம்
அறுவடை செய்யப்பட்ட மட்கிய உரத்தினை,நிழலில் கடினமான தரையில் குவித்து நுண்ணுயிர்களான அசோடோபேக்டர், சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா 0.02 சதவீதம், ராக்பாஸ்பேட் 0.2 சதவீதம் ஆகியவற்றை 1 டன் மக்கிய உரத்துடன் கலந்து, 60 சதம் ஈரப்பதம் இருக்கும்படி 20 நாட்கள் வைப்பதன் மூலம் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம். இவ்வாறு தயாரிக்கப்பட்ட உரமானது செறிவூட்டப்பட்ட உரமாகும். 

இந்த உரமானது சாதாரண மக்கிய உரத்தை விட ஊட்டச்சத்து அதிகமாகவும், நன்மை செய்யக்கூடிய நுண்ணுயிர்கள் அதிகமாகவும், தாவர வளர்ச்சியை தூண்டுவதற்கும் உதவும். வீட்டில் இருக்கும் உடைந்த பிளாஸ்டிக் வாளிகளில் கூட இது போன்ற இலைக்கழிவுகளை போட்டு மக்கிய உரம் தயாரிக்கலாம். அதாவது இந்த பிளாஸ்டிக் வாளியானது மட்க வைக்கும் பயிர்க்குழி போல் பயன்படும்.

வீட்டில் கலப்பு கீரை விவசாயம் பார்க்கலாம் வாங்க!

5 கருத்துகள்


டாக்டரிடம், எந்த வியாதியென்று போனாலும் 'சாப்பாட்டுல கீரைய மறக்காமா சேர்த்துக்கோங்க' என்பார். ஆனால் இன்றைக்கு சந்தைகளில் கூட பல்வேறு கீரைகளை தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. இந்த நிலையில் வீட்டில் தொட்டிகளில் கூட கீரை பயிரிடலாம். அபார்ட்மெண்டுகளில் பொதுவாக உபயோகத்திற்கென்று சிறிதளவு இடம் ஒதுக்கியிருப்பார்கள்.

இந்த இடத்தை சிமெண்ட் வைத்து பூசி தளமாக்கி விடாமல், அந்த இடத்தில் கூட கீரை பயிரிடலாம். இதனால் இந்த இடம் பார்க்க பச்சை பசேல் என்று அழகாக இருக்கும். சாப்பிடுவதற்கு சத்தான கீரையும் பறிக்கலாம். இந்த பதிவில் விவசாய நிலத்தில் கீரை பயிரிடுவது குறித்து தான் என்றாலும், இதே அடிப்படையில் தொட்டியிலும், வீட்டில் இருக்கும் சிறிய இடத்திலும் பயிரிடலாம்.

குறைந்த நிலத்தில் பெரிய அளவுக்கு இடுபொருள் செலவு இல்லாமல் லாபம் வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி கீரைகளை பயிரிடுவது தான். கீரையில் என்ன லாபம் இருக்க போகிறது என்று எண்ணிவிடக்கூடாது. இன்றைக்கு மதுரையில் கூட அரைக்கீரை கட்டின் விலை 10 ரூபாய். சென்னை, கோவையில் எல்லாம் எப்படி என்று ஊகித்துக் கொள்ளுங்கள். கீரை சாகுபடி பற்றி அனுபவ விவசாயி கேசவன் சொல்வதை பார்க்கலாம்.

கலப்பு கீரை சாகுபடி
" பொதுவாக களிப்பு(களிமண்) இல்லாத நிலங்களில் முளைக்கீரை, அரைக்கீரை, பசலைக்கீரை,சிறுகீரை, பொன்னாங்கண்ணி, வெந்தயக்கீரை, புளிச்சக்கீரை போன்றவை நன்றாக வளரும். புளிச்சகீரையில் குள்ளக்காசினி, கொம்புக்காசினி என இரு வகைகள் உண்டு. இந்த இரண்டு கீரைகளையும் முக்கிய சாகுபடியாக இல்லாவிட்டாலும் ஓரங்களில் மட்டும் சாகுபடி செய்து லாபம் பார்க்கலாம். தோட்டத்தில் எல்லா வகை கீரைகளையும் கலந்து சாகுபடி செய்தால் தொடர்ந்து வருவாய் கிடைக்கும்.

அதிகமாக சிறுகீரை, அரைக்கீரை, முளைக்கீரை சாகுபடி செய்யப்படும். முளைக்கீரையை ஒரு முறை தான் பயன்படுத்த முடியும். இதனை முறையாக நன்கு சாகுபடி செய்தால் 18 வது நாளில் அறுவடை செய்யலாம். அரைக்கீரையினை ஒரு முறை சாகுபடி செய்தால் தொடர்ந்து 6 அல்லது 7 தடவைக்கு மேல் அறுவடை செய்யலாம். சிறுகீரை சாகுபடி முளைக்கீரை சாகுபடியை போன்றது தான். இதுவும் ஒரு முறை தான் பயன்தரும்.

விலை குறைவு
கீரை சாகுபடி செய்வதற்கு நிலத்தில் தொழுஉரம் போட்டு நிலத்தினை நன்கு உழவு செய்து மேட்டுப்பாத்தி அமைத்து விதைப்பு செய்ய வேண்டும். கீரை விதைகளை சில விவசாயிகள் தாங்களே சேமித்து வைத்து அதை வைத்து விதைப்பு செய்வதுண்டு. ஆனால் தற்போது நல்ல விதைகள் சந்தையில் கிடைப்பதால் அதனை வாங்கி பயன்படுத்தலாம். அரைக்கீரை சாகுபடியில் அவ்வளவாக நோய்த்தாக்கம் இல்லை என்பதால் விவசாயிகள் அரைக்கீரை விவசாயத்தில் அதிக ஆர்வம் காட்டுவதுண்டு.

புளிச்சகீரை, சிறுகீரை போன்ற கீரைகளின் விதைகள் ஒரே மாதிரியான விலையில் கிடைக்கும். ஆனால் அரைக்கீரை விதையின் விலை சற்று கூடுதலாக இருக்கும். கீரைகளில் பொதுவாக பூச்சி தாக்குதல் இருப்பதுண்டு. இதனை கட்டுப்படுத்த பூச்சி மருந்துகளை பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் பூச்சி தாக்கம் ஏற்பட்ட கீரைகள் விலை குறைந்து போகும்.

10 சென்ட் நிலத்தில்
ஒரு 10 சென்ட் நிலத்தில் கீரை சாகுபடி செய்ய உத்தேசமாக 2 ஆயிரத்து 500 முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை தேவைப்படும். அதாவது இந்த செலவு என்பது விதை, உழவு, பாத்தி கட்ட, யூரியா, பூச்சி மருந்து, தொழுஉரம் மற்றும் தண்ணீர் ஆகியவற்றுக்கான செலவு ஆகும். 10 சென்ட் நிலத்தில் இருந்து எடுக்கப்படும் கீரைகளை சுமார் 7 ஆயிரம் ரூபாய் வரை விற்க முடியும். முதல் அறுவடை 25 வது நாளிலும், அடுத்து 15 வது நாளில் மீண்டும் அறுவடை செய்யலாம். மூன்று விரல் அளவு விட்டு கீரைகளை செடியில் இருந்து அறுவடை செய்ய வேண்டும். இப்படியாக 8 தடவை அறுவடை செய்யலாம்.

மறுஅறுவடை செய்யும் போது நாம் மிதித்து நிலம் கெட்டிப்படாமல் இருக்க மண்ணைக்கிளறி, களை எடுத்து வைக்க வேண்டும். அப்போது தான் கீரை நன்றாக வளரும். அரைக்கீரையில் முதல் சாகுபடியிலேயே செலவு போக லாபம் வந்து விடும்.

இதற்கு அடுத்த அறுவடையில் நீர் பாய்ச்சுதல், பூச்சி மருந்து, யூரியா போன்ற செலவுகள் மட்டுமே. கூடுதல் லாபம் இருந்தாலும் குறைந்த அளவு தான் அடுத்தடுத்த அறுவடைகளில் கிடைக்கும். மற்ற கீரைகளை விட அரைக்கீரையில் கூடுதலாக லாபம் பெறலாம்.

கீரை சாகுபடி செய்யும் போது ஒவ்வொரு பாத்தியினையும் தனித்தனியாக நாள் விட்டு சாகுபடி செய்தால் அறுவடையும் மொத்தமாக இல்லாமல் தனித்தனியாக வரும். தொடர்ந்து வருவாய் வரும் வகையில் கீரை வகைகளையும், விதைப்பு மற்றும் அறுவடை தனித்தனியே வரும் வகையில் திட்டமிட வேண்டும்.


கல்வி கற்றோரே ...வாங்க கற்றாலையில் காசு பார்க்கலாம் !!!

3 கருத்துகள்

நண்பர்களே...
சுற்று சூழல் குறித்து தான் எனது பதிவுகள் என்று மட்டுமே இது வரை எனது பதிவுகளின் எல்லை இருந்தது . இதன் இன்னொரு பிரிவாக வேளாண்மை குறித்து தனி பதிவுகள் போட முடிவெடுத்துள்ளேன். வேளாண் தொழில் ஆர்வமுள்ள நண்பர்கள் தொடர்ந்து சிறப்பிக்க வேண்டுகிறேன்.
நன்றி!
ஆனந்த்

இங்கு முதல் வேளாண் பதிவாக கற்றாழை சாகுபடி பற்றி பார்க்கலாம் .
                             வறட்சியில் வளம் தரும் கற்றாழை பயிர்

பெரிய அளவுக்கு வேளாண்தொழில் நுட்பங்கள் தேவை இல்லை கற்றாழை பயிரிட ...எனவே படித்த இளைஞர்கள் ஊரில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து பரிட்ச்சார்த்தமாக கற்றாழை பயிரிடலாம்.

கற்றாழை வறட்சியான பகுதிகளில் வளர்ப்பதற்கான ஒரு மருத்துவ பயிர். ஆப்ரிக்காவை தாயகமாக கொண்ட கற்றாழை லில்லியேசி குடும்பத்தை சேர்ந்த தாவரம். கற்றாழை இலைகளிலிருந்து எடுக்கப்படும் ஜெல் எனப்படும் கூழ் சருமத்தின் ஈரப்பதத்தை பாதுகாக்கிறது. சூரிய ஒளியிலிருந்து வரும் கடும் வெப்பத்தை தரும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர்வீச்சுக்களின் தீயவிளைவுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்கின்றது.

மேலும் சருமத்தின் ஈரத்தன்மையை பாதுகாக்கின்றது. இதனால் வெயில் கொடுமை அதிகரிக்கும் நாடுகளில் கற்றாழைக்கு வளமான வாய்ப்பிருக்கிறது. கற்றாழையில் காணப்படும் அலோயின் மற்றும் அலோசான் வேதிப்பொருள்கள் இருமல், சளி,குடல் புண், கடும்வயிற்று புண், தோலில் ஏற்படும் தீக்காயம், வெட்டுக்காயங்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.

ரகங்கள்
கற்றாழையில் பல ரகங்கள் உண்டு. கற்றாழையில் ஜான்சிபார் கற்றாழை, யுகான்டா கற்றாழை மற்றும் நேட்டல் கற்றாழை மற்றும் ஜபாராபாத் கற்றாழை ஆகியவை தரம் வாய்ந்தவையாக இருந்து வந்துள்ளன. இவற்றின் ஜெல் கண்ணாடி போல் தரமான தோற்றம் கொண்டது. இந்தியாவில் அலோ பார்படன்சிஸ் நாடு முழுவதும் தானே வளர்ந்து பரவலாக காணப்படுகிறது. 

இதன் இலைகள் தடிமனாகவும், சிறிது சிவப்பு கலந்து பச்சை நிறத்திலும் காணப்படுகிறது. செடிகள் நட்ட இரண்டாவது ஆண்டில் தான் பூக்கும். செடிகளில் பூக்கள் தோன்றினாலும், மகரந்தங்கள் செயலிழந்து இருப்பதால் காய் மற்றும் விதைகள் பிடிப்பதில்லை. இதனால் பக்க கன்றுகள் மூலமாக தான் பயிர் பெருக்கம் செய்யப்படுகிறது.

மண்வளம்
தரிசுமண்,மணற்பாங்கான நிலம், பொறை மண் போன்றவை ஏற்றது. காரத்தன்மை 7 முதல் 8.5 வரை இருக்கலாம்.

தட்ப வெப்ப நிலை
வறட்சியான நிலையில், அதாவது 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உள்ள பகுதிகளில் நன்றாக வளர்கிறது. தமிழ்நாட்டில் இராமநாதபுரம், மதுரை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பயிர் செய்யலாம்.

பயிர் பெருக்கம்
தாய்ச்செடியிலிருந்து ஒன்று அல்லது இரண்டு மாத வயதுடைய பக்க கன்றுகளை பிரித்து நடவுக்கு பயன்படுத்தலாம். ஒரே அளவுள்ள பக்க கன்றுகளை தேர்வு செய்வது முக்கியம். பக்க கன்றுகளை பிரித்ததும் அவற்றின் வேரை கார்பன்டசிம் மருந்தினால் ஐந்து நிமிடத்திற்கு நனைத்த பிறகு நடலாம். இதனால் அழுகல் நோய் வராமல் தடுக்கலாம். எக்டருக்கு 10 ஆயிரம் பக்க கன்றுகள் தேவைப்படும்.

விதைக்கும் பருவம்
ஜுன்,ஜுலை மற்றும் அக்டோபர், செப்டம்பர் மாதங்களில் நடவு செய்யலாம்.

நிலம் தயாரிப்பு
நிலத்தை இரண்டு முறை உழுது எக்டருக்கு 10டன் தொழு உரம் இட்டு, சமன் செய்து சிறிய பாத்திகளை அமைக்க வேண்டும். செடிகள் செழிப்பாக வளர்வதற்காக செடிக்கு செடி மூன்று அடி பாத்திகளை அமைக்க வேண்டும்.

உரமிடுதல்
கற்றாழை செடிகளுக்கு தொழு உரமிட்டால் சிறப்பாக வளரும். தரிசு மற்றும் சத்தற்ற மண்ணில் நட்ட 20 வது நாளில் எக்டருக்கு 30 கிலோ தழைச்சத்து மற்றும் 120 கிலோ ஜிப்சம் இடுவது நல்லது.

நீர்ப்பாசனம்
கற்றாழையை மானவாரிப்பயிராக பயிர் செய்வது நல்லது. ஆனாலும் பயிர் காலத்தில் நான்கு அல்லது ஐந்து முறை நீர்ப்பாசனம் அளிக்கலாம்.

பயிர் பாதுகாப்பு
கற்றாழையில் நோய் தாக்குதல் பெரும்பாலும் இல்லை. நீர் தேங்கும் நிலத்தில் அழுகல் நோய் ஏற்படலாம். வடிகால் வசதி உண்டாக்கினால் இதனை தடுக்கலாம்.

அறுவடை
வணிக ரீதியாக பயிர் செய்யும் போது செடிகளை நட்ட ஆறு முதல் ஏழு மாதங்களில் அறுவடைக்கு தயாராகி விடும். இந்த நேரத்தில் இலையில் அதிக அளவு அலேயின் என்ற வேதிப்பொருள் இருக்கும். செடிகளை வேரோடு பிடுங்கி எடுத்து இலைகளை ஆறு மணி நேரத்திற்குள் பக்குவப்படுத்தி விட வேண்டும்.

மகசூல்
எக்டருக்கு 15 டன் கற்றாழை இலை மகசூலாக கிடைக்கும். இலையில் 80 முதல் 90 விழுக்காடு வரை நீராக இருப்பதால் விரைவில் கெட்டு விடும். இதனால் அறுவடை செய்த உடனே இலைகளை பக்குவப்படுத்தி அவற்றிலிருந்து கூழ் படிமத்தை பிரித்தெடுத்து விட வேண்டும்.

வேளாண்மை மீது அக்கறை இருக்கும் படித்த இளைஞர்கள் கற்றாழை விவசாயம் மூலம் தங்களது வேளாண் தொழிலை தொடங்கலாம்.

கற்றாழைக்கு மிக சிறந்த ஏற்றுமதி வாய்ப்பு உண்டு. எனவே நான்கு ஐந்து பேராக இணைந்து கூட இந்த தொழிலில் இறங்கலாம்.

உலகம் உறுதியாக அழிவை நோக்கி போகிறது:தடுக்க கோரி மாநாடு

0 கருத்துகள்


" மனிதனுக்காக படைக்கப்பட்ட உலகம் முடிவால் அவனாலேயே அழிக்கப்படும்"-பைபிள்
கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதி வைக்கப்பட்டவை இவை. ஆம், நிச்சயம் உலகம் உறுதியாக அழிவை நோக்கி போகிறது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது வெயிலின் உக்கிரம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே வருவதை கணக்கீடுகள் காட்டுகின்றன. இப்படி உயரும்  வெப்பத்தை தாங்கும் சக்தி மனிதன், தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு இல்லை. எனவே பூமிக்கு ஏற்பட போகும்  அழிவு  எந்த உத்தியாலும் தடுக்க முடியாததாக இருக்க போகிறது. உயர போகும் வெப்பம் மனித குலத்தை கருக்கி அழிக்க நேரிடலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். 

இந்த பேராபத்தை தடுக்க கோரி மதுரையில் வரும் ஜுலை 22,23,24 திகதிகளில் புவி வெப்பமயமாக்கலுக்கு எதிரான தமிழக மாநாடு நடைபெறவுள்ளது. சமூக ஆர்வலர்களால் நடத்தப்படும் இந்த மாநாட்டுக்கு உலகம் முழுவதிலும் இருந்து அறிவியல் அறிஞர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமூக சேவகர்கள் உள்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த மாநாட்டை முன் முயற்சி எடுத்து நடத்துபவர் திரு.ஒய்.டேவிட் என்ற சமூக ஆர்வலர். உலகம் முழுவதிலும் நடைபெற்ற பல சுற்றுச்சூழல் தொடர்பான கருத்தரங்குகளிலும், மாநாடுகளிலும் கலந்து கொண்டவர் இவர். மனித குலத்திற்கு ஏற்பட போகும் பேரழிவை தடுக்க இணைந்து செயல்படுவோம் என்ற அறைகூவலுடன் இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்த மாநாடு ஏன் என்பது பற்றி அவரிடம் கேட்டோம்.

" நாம் எல்லோரும் இன்று ஒரு அசாதாரண காலகட்டத்தில் வாழ்கிறோம். இந்தோனேஷீயா, இந்தியா, ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி உள்பட உலகின் பலபகுதிகளும் இயற்கையின் சீற்றங்களால் அழிவை ஆங்காங்கே சந்திக்கின்றன. இந்த நிகழ்வுகள் நம்மை அச்சுறுத்துவதுடன் நமது வாழ்வையே கேள்விக்குறியாக்குகிறது.
பனிப்பகுதிகள் உருகி வருகின்றன
ஆர்டிக், அண்டார்டிகா, கீரின்லாந்து போன்ற பனிப்பிரதேசங்களில் உள்ள பனிப்பகுதிகள் உருகி அப்பகுதிகள் உலகின் ஏனையப் பகுதிகளைப் போன்று தரைப்பகுதியாக்கும் போக்கு வேகமாக அதிகரித்துக் கொண்டே
வருகிறது. இமயமலையிள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகுவதால், வற்றாத நதிகள் வறண்டு போகும் நிலையும், அதனால் ஏற்படும் தாக்கங்களும் நம்மை அச்சுறுத்துவதாக உள்ளது. உலகின் பிற பகுதிகளிலுள்ள மலைத்தொடர்களிலும் இதே போக்குகளே நடந்துகொண்டிருக்கின்றன. கடல் மட்டங்கள் உயர்ந்து கொண்டேவருகின்றபடியால் கடற்கரையை அடுத்த தாழ்வான பகுதிகளிலுள்ள கிராமங்கள், நகரங்களில் உள்ள மக்கள் இடம் பெயர வேண்டியகட்டாயகாலச்சூழல்கள்வேகமாகஉருவாகிக்கொண்டேயிருக்கின்றன. பலதீவுகள் கடலுக்குள் மூழ்கிவிடும் நிலையில் உள்ளன.

தமிழகத்திலுள்ள சென்னை மாநகரின் பெரும் பகுதியும், நமது கிழக்கு கடற்கரையில் பெரும்பாலான பகுதிகளிலும் இந்நிலையே ஏற்படும். காடுகளில் பெரும் தீ ஏற்கனவே அநேக நாடுகளில் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. உலகின் வெப்பம் அதிகரிக்க, அதிகரிக்க
இப்போக்கு அதிகமாகிக் கொண்டேயிருக்கும். பருவகால மாற்றங்களினாலும், நீர் பற்றாக்குறையினாலும், வெப்ப அதிகரிப்பினாலும் விவசாய உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்படும். நெல், கோதுமை உற்பத்திகள் பெருமளவில் குறைந்து கொண்டே வரும். இதனால் உணவுக்கு வருங்காலத்தில் எவ்வித உத்திரவாதமும் இருக்க வாய்ப்பில்லை.

பலபிரதேசங்களில் சிறுதானியங்கள் கூடப்பயிரிடமுடியாத நிலைமை உருவாகிக் கொண்டே வருகிறது.நீண்டகோடைகாலம் ஆண்டுதோறும் உயர்ந்துகொண்டேவரும் வெப்பம், தொடர்ந்து வறட்சி, பெரும்
வெள்ளப்பெருக்கு, புயல், சுனாமி, பூமியதிர்ச்சிகள் போன்றவைகள் உலகின் பல பகுதிகளில் சாதாரண நிகழ்வுகளைப் போன்று அடிக்கடி நடந்து கொண்டிருக்கின்றன.

மக்கள் பெருமளவில் இடம் பெயர்தல், உயிரிழப்புக்கள், வாழ்வாதாரங்களை இழந்து தவித்தல் போன்றவைகள் உலகின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகின்றன. பல்லுயிர்ப்பெருக்கம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டேயிருக்கின்றன. பல்வேறு வகைப்பட்ட வெப்ப சம்மந்தமான நோய்கள் அதிகரித்து வருகின்றன.

அழிவை கொண்டு வரும் 20 செல்சியஸ் வெப்பம் 
இன்று புவியின் சராசாரி  வெப்பம் தொழில் புரட்சி ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்ததை விட தற்போது 0.740 செல்சியஸ் ஆக உயர்ந்துள்ளது என ஐபிசிசி(Intergovernmental Panel on Climate Change-IPCC) கூறியுள்ளது. இந்தக் குழுவில் 2000க்கும் அதிகமான விஞ்ஞானிகள் உள்ளனர். பூமியின் வெப்பத்தில் 0.740 செல்சியஸ் கூடியிருப்பதன் காரணமாகத்தான் மேலே சொல்லப்பட்ட வரலாற்றில் இதுவரை நிகழாத அசாதாரணமான அழிவுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. IPCC - யின் 4 வது அறிக்கையின் படி, பூமியின் வெப்பம் வேகமாக உயர்ந்து கொண்டிருக்கிறது. 20 செல்சியஸ் ஆக உயருமென்றால் நாம் பேரழிவை சந்திப்போம்.

அத்தகைய பேரழிவினால் பூமியின் நிலையே தாறுமாறாகப் போகும். பூமி தன்னை சரிப்படுத்திக் கொள்ளும் ஆற்றலை பலநிலைகளில் இழந்து விடும். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகள் எவ்வித பயனும் அளிக்காது. எனவே 20 செல்சியஸ்க்குள் பூமியின் வெப்பநிலையை வைத்துக் கொள்ள வேண்டும் என இத்தாலியில் 2008- ல் கூடிய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. உலகநாடுகள் இந்தமுடிவை ஏற்றுள்ளன. இந்தியாவும் 20 செல்சியஸ் வெப்பநிலையை உச்சகட்ட பாதுகாப்பு அளவீடாக வைக்கவேண்டும் என்பதை ஏற்றுள்ளது.

இன்று உலகில் செய்யப்படும் செயல்பாடுகளின் போக்கைப் பார்த்தால் நாம் மிக விரைவில் இந்த 20 செல்சியஸை தாண்டி விடுவோம் என்றே தோன்றுகிறது. இன்னும் பத்து, பதினைந்து வருடங்களுக்குள் இன்று அழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் நாம் பேரழிவை சந்திப்போம்.

பூமி வெப்பமடைதல்
இன்று ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றங்களும், அழிவுகளும் பூமிவெப்பமடைந்தினால் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும்  மனிதர்களுடைய வேகமான செயல்பாடுகளால் பசுமைக்குடில் வாயுக்களின் அளவும், செறிவும் பூமியின் வளிமண்டலத்தில் கூடியுள்ளன. இதுவே பூமி வெப்பமடைதலுக்கு அடிப்படை காரணமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வளிமண்டலத்தில் நைட்ரஜன் 78 விழுக்காடும், பிராணவாயு 21 விழுக்காடும் உள்ளன. மீதமுள்ள1 விழுக்காட்டில்பசுமைக்குடில் வாயுக்களான கரி யமிலவாயு, மீத்தேன்,  நைட்ரஸ் ஆக்சைடு ஆகியவைகள் முக்கியமான
வாயுக்களாகும். இவைகளில் கரியமிலவாயுவே அதிகமாக காணப்படுகிறது. இதோடு குளிர்சாதனக்கருவிகளிலிருந்து வெளிவரும் குளோரோ·புளூரோகார்பன், விமானங்களில் எரிபொருளாக பயன்படுத்தப்படும் ஏரோசால் போன்ற வாயுக்களும் பசுமைக்குடில் வாயுக்களில் அடங்கும். 1

1824-ல் பசுமைக்குடில் வாயுக்களின் செறிவு வளிமண்டலத்தில்
அதிகரிப்பதால் பூமி வெப்பமடையும் என்பதை ஜோசப் என்பவர் எடுத்துரைத்தார். 1828-ம் ஆண்டில் கரியமிலவாயுவின் செறிவு 228ppm (particles per million) ஆக இருந்தது. 2004-ல் 383ppm ஆக கூடியுள்ளது.350ppmக்கு மேல் கூடுவதே பேரழிவை உருவாக்கும். ஏற்கனவே அந்த அளவையும் தாண்டி விட்டது. எனவே உடனடியாக 350ppmக்குள் செறிவைக் குறைக்க வேண்டும் என NASA விஞ்ஞானி ஜேம்ஸ் ஹான்சன் குறிப்பிட்டுள்ளார்.

பசுமைக்குடில் வாயுக்கள் அதிகரிப்பதற்கான காரணங்கள்
பசுமைக்குடில் வாயுக்கள் அதிகரிப்பதற்கான காரணங்கள் இரண்டு என தெளிவாகக் கண்டறியப்பட்டுள்ளன. அவை புதைபடிவ எரிபொருட்களை
அதிகம் பயன்படுத்தல், காடுகளை பெருமளவில் அழிப்பது. இவைகளில் புதைபடிவ எரிபொருட்கள் பெரும் பங்கை வகிக்கின்றன. நிலக்கரி , பெட்ரோல், டீசல் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவைகளை மையப்படுத்தியே சென்ற இரு நூற்றாண்டுகளாக மேற்கத்திய பாணியிலான நாகரிகம் வடிவமெடுத்துள்ளது.

உலகில் மின்சக்தி பெருமளவில் நிலக்கரியையே பயன்படுத்தும் அனல்மின் நிலையங்களிலிருந்து தான் எடுக்கப்படுகின்றன. இன்று உலகமெங்கும் போக்குவரத்து பெட்ரோல், டீசல் போன்ற புதைபடிவ எரிபொருட்களையே
சார்ந்துள்ளது. ஆலைகள் பெரும்பாலும் புதைபடிவ எரிபொருட்களையே சார்ந்துள்ளது. எனவே பசுமைகுடில் வாயுக்களை உமிழும் எரிபொருட்களைச் சார்ந்த வாழ்வியல் முறை இன்று நம்மை பேரழிவின் விளிம்பில் கொண்டு நிறுத்தியுள்ளது.

விவசாயம் மற்றும் தொழில்களுக்காக காடுகள் உலகமெங்கும் பெருமளவில் அழிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றது. வெட்டப்பட்ட மரங்களிலிருந்து உமிழப்பட்ட கரியமிலவாயு மற்றும் விவசாய முறைகளால் உருவான மீத்தேன் வாயுவும, பசுமைக்குடில் வாயுக்களின் செறிவு வளி மண்டலத்தில் அதிகரிப்பதற்கான காரணங்களாக அமைகிறது. மேலும் காடுகளின் அளவு குறையும் போது, கரியமிலவாயுவை கிரகிக்கும் நிலையும் குறைகிறது.
வளிமண்டலத்தில் பசுமைக்குடில் வாயுக்களின் செறிவு அதிகமாக இருப்பதால், சூரிய ஒளி பூமியில் பட்டு, மறுபடியும் மேலே செல்வதற்கு வாய்ப்பில்லாமல், வளிமண்டலத்தில் சென்று மறுபடியும் பூமிக்கே திரும்புகிறபடியால், பூமியிலேயே வெப்பம் தேங்கி பூமியை வெப்பமடையச் செய்கிறது.

பூமி வெப்பமடைதல்:பொருளாதாரப் போக்குகளின் விளைவே!
பூமி வெப்பமடைந்து, நாம் அழிவையும், பேரழிவையும் நோக்கி பயணம் செய்கிறோமென்றால் அதற்கு வெறும் பசுமைக்குடில் வாயுக்கள் மாத்திரம் காரணமல்ல. இன்றைய பொருளாதார போக்குகளும், அவற்றை மையமாகக் கொண்டு எழும்பிய நாகரிகமும் தான் காரணமாகும். பசுமைக்குடில் வாயுக்களை அளவோடு வெளியிடும் விதத்தில், புதைபடிவ
எரிசக்திகளை பயன்படுத்தியிருந்தால்,காடுகளை அளவோடு வெட்டியிருந்தால் இன்றைய நிலை ஏற்பட்டிருக்காது.

பேராசையை மையமாகக் கொண்டு, லாபநோக்கத்திற்காக மட்டும் செயல்படும், சந்தையை மையப்படுத்திய, பன்னாட்டுகம்பெனிகளால் திறமையாக உலகம் முழுவதிலும் திணிக்கப்பட்டு வரும் நாசகரமான பொருளாதாரம்தான் நம்மை பேரழிவுக்கு நேராக இழுத்து செல்லுகின்றன. இப்பொருளாதாரத்தில் வன்முறையான வளர்ச்சிப்பாதையே
வடிவமைக்கப்பட்டுள்ளது. வளர்ச்சியின் அளவீடாக தேசிய மொத்த உற்பத்தி (Gross Domestic Product) உள்ளது.

நாடுகளின்  சுயநலம்
எனவே ஒவ்வொரு நாடும் தங்களுடைய GDP யை கூட்டுவதிலேயே கவனம் செலுத்துகின்றன. GDP கூடுவதை நாட்டின் முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. ஆனால் இந்த அளவீட்டில் கேட்கப்படவேண்டிய முக்கிய கேள்விகள்
கேட்கப்படுவதில்லை. இவ்வளர்ச்சியின் அளவீட்டைக் கூட்டுவதில் எத்தகையப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன?
அவைகள் யாரால் எப்படி செய்யப்பட்டன?
எந்தப்பிரிவு நுகர்வோருக்காக உற்பத்தி செய்யப்பட்டன?
அவைகள் ஏற்படுத்திய ஏற்ற தாழ்வுகள் என்ன?
இந்த உற்பத்திக்கு யாருடைய வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டன? அவற்றின் மதிப்பீடு என்ன?
இயற்கையின் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது?
வருங்காலத்தில் தொடர்ந்து ஏற்படுத்தும் தாக்கங்கள் எதுவாயிருக்கும்? அவைகளின் மதிப்பீடுகள் என்ன?
என்ற கேள்விகள் எழுப்பப்படுவதேயில்லை. இப்படிப்பட்ட
கேள்விகளை எழுப்பாததின் விளைவே இன்றைய வன்முறையான வளர்ச்சிப்பாதை. அதுவே நம்மை அழிவுக்கும் பேரழிவுக்கும் நேராக இட்டுச் செல்கிறது.
இன்று உலகமயமாக்கல் என்ற கோட்பாடுகளின் கீழ் உலகமெங்குமுள்ள இயற்கை வளங்களும், மக்களின் வாழ்வாதாரங்களும் பறிக்கப்பட்டு, மக்கள் வறியவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். வறுமையின் பிடியில் சிக்கியவர்களின்
எண்ணிக்கை வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவு கூடிக்கொண்டே வருகின்றன. நாடுகளுக்கிடையிலும், நாடுகளுக்குள் மக்களுக்கிடையிலும் ஏற்றத்தாழ்வுகள் கூடிக்கொண்டே வருகின்றன. மக்களின் பாரம்பரிய அறிவும்,செயல்பாடுகளும் ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்டுள்ளன. நமது சுற்றுச்சூழல் சிதைக்கப்பட்டு நாம் வாழ முடியாத சூழ்நிலைகள் உருவாகிக்கொண்டே வருகின்றன. ஆயுதங்கள் கம்பெனிகளின் வர்த்தகப்பொருளாக வடிவமெடுத்து, உலகத்தின் பல பாகங்களில் அமைதிக்கே கேடு விளைவிக்கிறது.

மக்களுக்காக செயல்பட வேண்டிய ஜனநாயகப்போக்குகளும் பன்னாட்டு கம்பெனிகளுக்கு சேவை புரியும் அமைப்புகளாக மாற்றப்பட்டு, ஜனநாயகம் நாளுக்கு நாள் வளமையடைவதற்கு பதில் இன்று வலுவிழந்து சிதைக்கப்பட்டுள்ளது. எனவே, சென்ற ஐநூறு வருடங்களில் உலகில் செயல்பட்ட, பொருளாதாரபோக்குகளும் அவைகளில் உச்சகட்டமாக உருவான உலகமயமாதல் போக்குகளும் நம்மை இன்று பேரழிவின் விளிம்பில் கொண்டுவந்துள்ளன.

இந்தியாவில் பூமி வெப்பமடைவதால் ஏற்படும் தாக்கங்கள்
இந்தியாவில் இந்தியாவில் இதன் விளைவு மிகபயங்கரமானதாக இருக்கும்.  இந்திய அரசு 2006ல் கொண்டுவந்துள்ள காலநிலை மாற்றத்திற்கான தேசிய செயல் திட்டம் (National Action Plan on Climate Change) மாற்றத்திற்கான தேசிய செயல் திட்டம் (National Action Plan on Climate Change)
எட்டு அம்சங்களைக் கொண்டுள்ளது.
1. தேசிய சூரிய ஒளி இயக்கம்
2. தேசிய விரிவுபடுத்தப்பட்ட சிக்கன இயக்கம்
3. நிலைத்த குடியிருப்புகளுக்கான தேசிய இயக்கம்
4. தேசிய தண்ணீர் இயக்கம்
5. இமாலய சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம்
6. பசுமை இந்தியா இயக்கம்
7. நிலைத்த வேளாண்மைக்கான தேசிய இயக்கம்
8. தட்பவெப்பநிலை மாற்றம் பற்றிய அறிவுசார் உத்திகளுக்கான தேசிய இயக்கம்
இத்திட்டங்களை தீட்டும்போதும், செயல்படுத்தும் போதும் மக்களின் பங்கேற்பு ஏதும் இல்லை. பன்னாட்டு கம்பெனிகளின் நலன்களை பாதுகாக்கும் விதத்திலும், சர்வதேச அரங்குகளுக்கு இந்தியா காலநிலை மாற்றப் பிரச்சனையில் தீவிரமாக செயல்படுகிறது என்பதைக் காட்டுவதற்கும் மட்டுமே இத்திட்டங்கள் துணைசெய்யுமேயன்றி பூமி வெப்பமடைதலைக் குறைக்க எவ்வகையிலும் துணைசெய்யாது.

நாம் செய்யவேண்டியது...
பூமி அழிவிலிருந்து பேரழிவை நோக்கி செல்லுகிறது என்பது நம் ஒவ்வொருவர், நம் எதிர்கால சந்ததியினர், பூமியில் நம்மோடு வாழ்கின்ற ஏனைய உயிரினங்கள் ஆகியவற்றோடு நேரடியாக சம்பந்தப்பட்டவைகள் ஆகும். எனவே நாம் ஒன்றும் செய்யாமல் இருப்பது என்பது முடியாத காரியம். ஒவ்வொருவருக்கும் பூமியை பேரழிவிலிருந்து பாதுகாக்க கடமையிருக்கிறது. தனிப்பட்ட, குடும்ப வாழ்வில் எவையெல்லாம் செய்ய முடியுமோ அவைகளைச் செய்யவேண்டும்.

* வாழ்வை இயற்கைக்கு இசைவுள்ளதாக அமைத்துக் கொள்ளவேண்டும்.
* கிராமங்களில் கூட்டாக இயற்கை வளங்களை பாதுகாக்கவும், பேணவும், முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
* மாநில, தேசிய அளவில், இன்றைய போக்குகளுக்கு, மாற்றுப்போக்குகளை உருவாக்கும் விதத்தில், நாம் பலமான அழுத்தங்களைக் கொடுக்கவேண்டும். 

தமிழகம்
தமிழகத்தைப் பொறுத்தமட்டில் இன்று பன்னாட்டு கம்பெனிகளும், உலகவங்கி, ஆசியவங்கி போன்ற அமைப்புகளும் பலமாக வேரூன்றி வளர்ச்சி என்ற போர்வையில் நமது வள ஆதாரங்களையும், வாழ்வாதாரங்களையும் சந்தைப்படுத்தி கொண்டிருக்கிறார்கள். பசுமைக்குடில் வாயுக்களை நாளுக்குநாள் கூடுதலாக வெளியிடும் செயல்பாடுகள் தான் முன்னிலையில் உள்ளன. தமிழகத்தின் விவசாயம் அடியோடு விழுந்து விட்டது. கிராமத்தொழில்கள் நசுங்கிவிட்டன.

நிலம்,நீர், காடுகள் போன்ற வாழ்வாதாரங்கள் நாளுக்குநாள் குறைந்து கொண்டே வருகின்றன. எனவே தமிழகத்தின் பொருளாதாரப் போக்குகளும், அவற்றைத் தாங்கிப் பிடிக்கின்ற அரசியல் போக்குகளும் மக்களுக்கும் இயற்கைக்கும் எதிராக செயல்படுகின்றன என்பதை நாம் உணர வேண்டும்.

எனவே, மக்களிடையே புதிய சிந்தனை போக்குகளை உருவாக்கவும், வளர்க்கவும், புதிய சக்திகள் தமிழகத்தில் உருவாகவும், இன்றுள்ள பன்னாட்டு கம்பெனிகளை மையப்படுத்திய வளர்ச்சிப்போக்குக்கு மாற்றாக மக்களைமையப்படுத்திய, இயற்கையோடு இசைவான, அறநெறியுள்ள பொருளாதார போக்குகள் உருவாகவும், தொடர்ந்த செயல்பாடுகள் அவசியம். சமூக ஆர்வலர்கள் இப்போக்குகளை உருவாக்க தனிக்கவனம் செலுத்தவேண்டும்

இந்நிலையில் தான் பூமி வெப்பமடைதல், நமது பேரழிவை மையப்படுத்திய மாபெரும் மாநாடு தேவைப்படுகிறது. மக்கள் புவி வெப்பமடைதலை தெளிவாக புரிந்து கொள்ளவும், தமிழகத்தில் வளர்ச்சி, முன்னேற்றம்,மேம்பாடு ஆகியவைப் பற்றி புதிய சிந்தனைப் போக்குகள் உருவாகவும், அரசு தன் போக்குகளை மாற்ற வலிமையான அழுத்தங்களை உருவாக்கவும், ஏனைய மாநிலங்களிலும் உலகின் பிற பாகங்களிலும் இதே எழுச்சிகள் உருவாக துணை செய்யவும், மக்களை மையப்படுத்திய பசுமை உற்பத்திகளை ஊக்கப்படுத்தவும், உந்துதல் கொடுக்கவும் மாபெரும் மாநாடு அவசியம்.
இம்மாநாட்டை சிறப்பான முறையில் அமைக்க முழுக்கவனத்தையும் செலுத்தவேண்டும்" என்கிறார் திரு .டேவிட்.
பேரழிவைத் தடுப்போம்!! புவியைக் காப்போம்!!!
 இந்த மாநாடு குறித்த இணைய தளத்தில் மேலதிக விபரங்களை காண முடிகிறது
http://www.warmingtheglobe.org/Tamil/index.html (தமிழ் )

http://www.warmingtheglobe.org/english/index.html(english)

ஆடு மேய்க்கலாம் வாங்க ! அபாரமான லாபம் இருக்கு!

5 கருத்துகள்


செய்தி: தமிழக கிராம மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த தமிழக முதல்வர் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி இலவசமாக ஆடு, மாடுகளை வழங்கும் திட்டத்திற்கு அதிகாரிகளுடன் ஆலோசனை.

நெருக்கடி மிகுந்த சென்னை வேண்டாம் என்று சொல்லி, அங்கு  ஒரு கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்த கணவன் மனைவி இருவரும் அந்த வேலையை விட்டு விட்டு சொந்த ஊரான தஞ்சாவூருக்கு போய் ஆட்டு பண்ணை தொடங்கியதாக பசுமை விகடனில் ஒரு கட்டுரை வந்தது. ஆடு வளர்ப்பு என்பது அந்த அளவு மனநிம்மதியும், செல்வமும் தரும் ஒரு நல்ல தொழில்.

ஆடுகளும், மாடுகளும் "கால்நடைச் செல்வங்கள்" என்று மதிப்பிடப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த செல்வங்கள் மறக்கப்பட்டு இன்றைக்கு இந்த தொழில்கள் எல்லாம் நசிந்து போயிருக்கின்றன. மாடுகள் குறைந்து போனதால் பாலுக்கு திண்டாட்டமாகி இருக்கிறது. ஆனால் ஆடு, மாடுகளை பண்ணையாக அமைத்து தொழில் செய்வதன் மூலம் சுயமாக பொருளாதாரத்தில் வளர்ச்சியடைய முடியும் என்ற விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. வித்தியாசமான சிந்தனை உள்ளவர்கள் ஆடுகளை பெருமளவில் பெருக்கி ஆட்டின் பாலை "பாக்கெட் வடிவில் " பேக் செய்தும் விற்பனை செய்யலாம்.

தாய்ப்பாலுக்கு மிகவும் நிகரான புரதங்கள், நோய்எதிர்ப்பு சக்தி போன்றவை பசுவின் பாலை விட ஆட்டுப்பாலில் மட்டுமே அதிகம். இந்த நிலையில் போதிய இடவசதி இல்லாதவர்கள் கூட சிறிய இடத்தில் ஆடுகளை வளர்க்கும் வகையில் "பரண் மேல் ஆடு வளர்ப்பு " என்னும் ஒரு தொழில் நுட்பத்தை நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரியை சேர்ந்த டாக்டர்.பூவராஜன் நமக்கு செய்தியாக அளித்துள்ளார். விவசாயம் செய்ய போதிய நிலமில்லாத இஸ்ரேல் நாடு இதே போல் வீட்டு அலமாரி போன்ற அமைப்பில் பயிர்களை விளைவித்து வருவது இந்த இடத்தில் நினைவு கூறத்தக்கது. இதோ பரண்மேல் ஆடு வளர்ப்பு உங்கள் பார்வைக்கு.........

தமிழகத்தின் பொருளாதார வளத்திற்கு கால்நடை செல்வங்கள் பெரிய பங்களிப்பை செய்து வருகின்றன. குறிப்பாக ஆடு வளர்ப்பு நல்ல லாபம் தரும் தொழிலாக இருக்கிறது. படித்த இளைஞர்கள் தற்போது இந்த தொழிலில் இறங்கி வருவது அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மேலும் இந்த தொழிலில் இறங்க திட்டமிடுபவர்களுக்கு பரண்மேல் ஆடு வளர்ப்பு என்னும் நவீன முறை கைகொடுப்பதாக இருக்கும்.

பரண் மேல் வெள்ளாடு வளர்ப்பு
வெள்ளாடுகளை தரையில் வளர்க்காமல் தரையிலிருந்து 4 அடி உயரத்தில் கிடைமட்டமாக மரச்சட்டங்களை 4 க்கு 3 அடி இஞ்ச் அளவில் 1 விரல் இடைவெளியில் வரிசையாக அடுக்கி கட்டி அமைப்பது தான் பரண் அமைப்பு. இதன் இடைவெளி அதிகமானாலோ, குறைந்தாலோ ஆடுகள் நடப்பதில் சிரமம் ஏற்படும். கால்களில் காயங்கள் ஏற்படலாம்.
மேலும் இதற்காக தேர்ந்தெடுக்கப்படும் மரமும் முக்கியம். சுமார் 100 ஆடுகள் வளர்க்க 50 அடிநீளம், 22 அடி அகலம் உடைய ஒரு கொட்டை அவசியம். இந்த கொட்டைகையில் ஆடு ஈனும் இளங்குட்டிகளை அடைக்கவும் அதனில் ஒரு பகுதி 22 க்கு 15 இஞ்ச் அளவில் அமைத்தல் வேண்டும்.
குட்டிகள் 3 மாதங்கள் வரை தாயிடம் பால்குடிப்பதால் அவை தாயின் பார்வைக்கு அப்பால் இருக்க கொட்டில் முழுவதும் அடைத்து  இருத்தல் வேண்டும்.

தீவன பராமரிப்பு
பரண்மேல் வெள்ளாடு வளர்ப்பு முறை வெற்றிகரமாக இருக்க, பசுந்தீவனம் தான் முக்கிய பங்களிக்கிறது. பெரும்பாலான விவசாயிகள் தீவனப்பற்றாக்குறையால் தான் வெள்ளாடு வளர்ப்பை சிறந்த முறையில் செய்ய இயலவில்லை. எனவே 100 ஆடுகளை இந்த முறையில் வளர்க்க குறைந்த பட்சம் 4 ஏக்கர் பசுந்தீவனத்திற்கு என ஒதுக்க வேண்டும். வாரம் இரண்டு முறை தண்ணீர் பாய்ச்சக்கூடிய விவசாய நிலமாக இருத்தல் வேண்டும். தென்னையில் ஊடுபயிராக பசுந்தீவனம் வளர்க்க அதன் இடைவெளிக்கு ஏற்ப 6 முதல் 8 ஏக்கர் நிலம் அவசியம்.
பசுந்தீவன வகைகள்
கோ-3, கோ-4, வேலிமசால், குதிரை மசால் வகைகள், தீவன சோள புல்வகைகள், அகத்தி, சித்தகத்தி, சவுண்டல் ரகங்களை வளர்க்கலாம். இதனை 50 சென்ட் நிலத்தில் ஒவ்வொன்றையும் வளர்க்கலாம். பண்ணை அமைப்பதற்கு முன் பசுந்தீவனங்களை பயிரிட்டு விட வேண்டும். ஏனென்றால், முதல் அறுவடை 60 முதல் 70 நாட்கள் குறைந்த பட்சமும், 80 முதல் 90 நாட்கள் அதிகபட்சமாகவும் தேவைப்படும். இந்த இடைவெளியில் கொட்டகை அமைத்தல் வேண்டும். இதற்கு பின்பே ஆடுகளை வாங்கி வர வேண்டும்.

அடர் தீவனம்
 வெள்ளாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு அதன் வயதிற்கேற்ப அடர்தீவனம் அளிக்க வேண்டும். 3 மாதம் முதல் 6 மாத குட்டிகளுக்கு 25 கிராம் முதல் 35 கிராம் தீவனமும், 6 மாதம் முதல் 12 மாதம் வரையில் 50 கிராம் முதல் 100 கிராம் வரையிலும், சினைப்பருவத்தில் 175 கிராம், ஈன்ற ஆடுகளுக்கு 200 முதல் 250 கிராம், கிடாக்களுக்கு 300 கிராம் என்ற அளவிலும் அளிக்க வேண்டும்.
அடர்தீவனம் என்ற தீவனத்தின் கலவை (100 கிலோவிற்கு) விகிதம் கீழ்கண்ட அளவில் இருக்க வேண்டும்.
மக்காச்சோளம் மற்றும் கம்பு 35 முதல் 40 கிலோ, ராகி மற்றும் இதர தானியங்கள் 10 கிலோ, கடலைப்புண்ணாக்கு 20 கிலோ, கோதுமை தவிடு மற்றும் அரிசி தவிடு 10 கிலோ, துவரந் தூசி மற்றும் பாசித்தூசி 17 கிலோ, தாதுஉப்பு 2 கிலோ, சாதாரண உப்பு 1கிலோ என்ற அளவில் 100 கிலோ அடர்தீவனத்தின் பகுதிகளாக இருக்க வேண்டும்.
நோய் பராமரிப்பு
ஆண்டுக்கு 4 முறை தடுப்பூசிகள் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி அளிக்க வேண்டும். குறிப்பாக, மார்ச் ஏப்ரல் மாதங்களில் கால் வாய் நோய்க்கான தடுப்பூசி, ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் பி வி ஆர் தடுப்பூசி, ஆகஸ்ட் மாதத்தில் கால் வாய் நோய் தடுப்பூசி, அக்டோபர் மாதத்தில் துள்ளுமாரி தடுப்பூசி ஆகியவற்றை போட வேண்டும். குடற்புழு மருந்துகளை பிறந்த 30 வது நாள், 2,3,4,6,9 வது மாதங்களில் போட வேண்டும்.
நன்மைகள்
!வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு மூலம் நோய் தாக்கும் வாய்ப்பு குறைவு.
!இனப்பெருக்கத்தில் குட்டிகளின் இறப்பு விகிதம் குறைவு.
!குறைந்தபட்சம் 100 ஆடுகள் வளர்த்தால், ஆடு ஒன்றிலிருந்து ஆண்டுக்கு 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு.

இது பற்றி உங்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு டாக்டர்.பூவராஜனிடம் விடைபெற மின்னஞ்சல் அனுப்புங்கள்.
ஆடு  வளர்ப்பு பற்றி இன்னொரு அருமையான பதிவு நண்பர் பழனிவேலின்...

http://www.thangampalani.co.cc/2011/05/goat-gainvalarppu.html

ஆட்டுக்கும் மாட்டுக்கும் பூஸ்ட் விக்க நீங்க தயாரா ?

2 கருத்துகள்

தமிழக அரசு கிராமங்களில் உள்ள ஏழை மக்களுக்கு ஆடுகள், பால் தரும் பசுக்கள் தரப்போவதாக அறிவித்துள்ளது. என்ன ஒரு அழகான திட்டம் இது என்பதை சற்று நிதானித்து பார்த்தால் தெரியும். இன்றைக்கு அழகு போய்விடும் என்ற காரணத்தால், பிறந்த குழந்தைக்கு கூட பால் கொடுக்க தயங்கும் பெண்களை கேள்விப்படுகிறோம். அதே பல வித உடலுக்கு போதிய சத்து கிடைக்காமல் நொந்து நூலாகும் ஏழைக்குழந்தைகளை மற்றொரு பக்கத்தில் பார்க்க முடிகிறது.

தாய்ப்பால் இல்லாத கட்டத்திலும், உடலுக்கு போதிய உணவுச்சத்து கிடைக்காதவர்களுக்கும் மாற்று உணவு எது? பசும பால் மட்டுமே !
ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கில் ஆட்டுக்கிடாய்களும், மாடுகளையும் வைத்திருந்தவர்கள் தான் ஊரில் பெரிய மிட்டாமிரசாக இருந்தார்கள். அதாவது இவர்கள் தான் பண்ணையார்கள். ஊரின் பெரிய செல்வந்தர்களான இவர்களுக்கு கீழ் தான் மற்ற உழைப்பாளிகள் எல்லாம். ஆனால் இன்றைக்கு ஆடு, மாடு மேய்ப்பது என்பது நாகரீக உலகில் எதற்கும் லாயக்கற்றவர்களுக்கான வேலையாக கருதப்படுகிறது.

என்ன கொடுமை பாருங்கள்!. ஆனால், ஆட்டிலும், மாட்டிலும் இருந்து கிடைக்கும் பாலிலும், தோலிலும் கிடைக்கும் லாபம் என்பது வேறெதிலும் கிடைக்காத ஒன்று என்பதை அனுபவித்து பார்த்தவர்களுக்கோ, பால் கிடைக்காமல் திண்டாடியவர்களுக்கும் தான் தெரியும். இன்றைக்கு விவசாயம் லாபமில்லாத தொழில் என்பதாலும், அதனோடு தொடர்புடைய கால்நடை தொழிலும் நசிந்து போய் இருக்கிறது. ஆனால் உண்மையில் தமிழ்நாட்டில் இருக்கும் தரிசு நிலங்களில் தீவன மரங்களை நட்டு பராமரித்தால் போதும். லட்சக்கணக்கான பசுக்களையும்,ஆடுகளையும் வளர்க்கலாம்.

இந்த நிலையில் தான் தமிழக அரசின் முதல்வர் ஜெயலலிதா, திருவரங்கத்தில் கலந்து கொண்ட நன்றி அறிவிப்பு கூட்டத்தில் கூட, தமிழகத்தில் வேளாண்மை முதன்மை பெரும் பொருட்டு விவசாயத்துக்கே முன்னுரிமை என்று அறிவித்திருக்கிறார். கூடவே திருவரங்கத்தில் பெண்களுக்கு மட்டுமே ஒரு தோட்டக்கலை கல்லூரி தொடங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார். ஆக..கண்டிப்பாக விவசாயத்தில் தமிழகம் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சியை எட்டும் என்று நம்பலாம்.

இந்த நிலையில், இளைஞர்களும் வேளாண் தொடர்புடைய தொழில்களில் கவனம் செலுத்தினால் நிச்சயம் முன்னேற முடியும். தமிழக மக்களை ஆடு, மாடு மேய்க்க சொல்கிறார் என்று பேசிய வீரமணி போன்றவர்களுக்கு பாலின் அத்தியாவசியம் தெரிந்திருக்க நியாயம் இருந்தாலும் அவர்கள் அதையெல்லாம் பேசப்போவதில்லை. காரணம், அவர்களுக்கு யார் எப்படி போனாலும் பாலும், தேனும் ஓடும் வாழ்க்கை ஏற்கனவே கிடைத்து விட்டது.

ஆனால் சராசரி நடுத்தர வர்க்கத்துக்கு பால் என்பது முக்கிய உணவு. ஆகவே, அதிகரித்துக் கொண்டு போகும் மக்கள் தொகைக்கு தேவையான பால் உற்பத்தியை பெருக்க வேண்டும் என்றால், பசுக்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டியது முக்கியம். இதற்கு ஆண்டுக்கு ஒரு முறை கண்டிப்பாக பசுக்கள் கன்றுகளை ஈனவேண்டும். ஆனால் இன்றைக்கு இருக்கும் பசுக்களில் பல போதிய சத்துக்கள் இல்லாத காரணத்தால், அப்படி சரியான எண்ணிக்கையில் கன்றுகள் ஈனுவதில்லை என்பது சோகமான உண்மை.

இதற்கு காரணம், கன்றுகளை சுமக்கும் பசுக்கள் போதிய அளவு ஊட்டச்சத்து இல்லாமல் பற்றாக்குறையில் ஆங்காங்கே போஸ்டர்களை தின்று காலத்தை ஓட்டுவதால் வந்த கோளாறு. இதை தவிர்த்து பசுக்களையும், மாடுகளையும் நம்மில் ஒரு ஜீவன் என்று எண்ணி அவற்றுக்கும் சரிவிகித சத்தான தீவனத்தை அளித்து வளர்க்கும் போது மிகவிரைவில் நாட்டின் கால்நடை எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு உயரும். மக்களுக்கு பற்றாக்குறையில்லாமல் குறைந்த விலையில் பாலும் கிடைக்கும்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்றைய சூழலில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு போதிய அளவு சத்தான தீவனம் கிடைப்பதில்லை. குறிப்பாக கால்நடைகளின் நுண்ணிய உடல் உறுப்புகள் இயங்க தேவைப்படும் சத்து உப்புகள் இயற்கையாக கிடைக்கும் தீவனங்களில் இருப்பதில்லை.

இந்த நிலையில் இந்த சத்துகளை தனியாக கால்நடைகளுக்கு அளிக்கும் வகையில் ஒரு சத்து தீவனக்கட்டி ஒன்றை கோவில்பட்டியை சேர்ந்த துவாரகன் கண்டுபிடித்துள்ளார். அந்த சத்துக் கட்டி பற்றி அவர் சொல்வதை கேட்கலாம். இந்த சத்துக்கட்டியை தமிழ்நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் சுயதொழிலாக மேற்கொள்ள இந்த சத்துக்கட்டிகளின் விற்பனை வாய்ப்பை அவர்களுக்கு வழங்க தயாராகவும் உள்ளார். இனி அவர் சொல்வதை கேட்போம்.

 "இன்றைக்கு போதிய அளவு பச்சை புல் மற்றும் சத்துள்ள விவசாய கழிவுகள் கிடைக்காத நிலை உள்ளது. இதனால் வெறும் வைக்கோல், கழனி நீர், பிண்ணாக்கு ஆகியவற்றிலிருந்து தான் அதிகபட்ச சத்துக்களை பால் தரும் பசுக்கள் பெற வேண்டியதிருக்கிறது. அதிக எடை கொண்ட கால்நடைகள் தங்களின் உடல்வளர்ச்சிக்கு கூட தேவையான சத்துக்களை போதிய அளவு பெற முடியாமல் போகும் போது, உடல் ஆரோக்கிய குறைபாடு, எளிதில் நோய்வாய்படுதல், சினை பிடிக்காமல் போவது உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளுக்கு உள்ளாக நேரிடுகிறது.

பசுமாடுகளின் உணவில் போதுமான உப்பு சத்து இல்லாதவிட்டால், அந்த சத்தை ஈடுகட்ட அவைகள் மண் மற்றும் தொழுவத்தின் சுவர்களை நக்கி கொண்டு அவற்றுக்கு தேவையான சத்தை பெற முயற்சி செய்யும். தொடர்ந்து உப்பு சத்து குறைந்தால் பால் சுரப்பது குறைந்து விடும். உப்பு குறைவதால் உடல் வளர்ச்சி மற்றும் வாழ்நாள் குறைந்து போகும்.

உப்பு சத்து போதிய அளவு கிடைக்கும் போது தான் கால்நடைகளில் உமிழ்நீர், இரப்பை நீர் மற்றும் குடல்நீர் சுரப்பிகள் இலகுவாக சுரக்கின்றன. உப்பு உடல் திரவத்தில், நீர்த்த கரைசலாக இருக்கிறது. இது உடலின் திசுக்களின் மிகச்சிறிய சிற்றறைக்குள் உள்ள நுண்ணுயிர் திரவத்தின் சவ்வூடு பரவுதல் அழுத்தத்தை தீர்மானிக்கிறது. சவ்வூடு பரவுதல் சிறப்பாக இருப்பதன் மூலமே உடலின் திசுக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கும்.

அத்தியாவசிய கனிமங்கள்
பொதுவாக, உப்பு கால்நடையின் உணவை ருசியாக்குகிறது. மேலும் புரதச்சத்து, மாவுப்பொருள் மற்றும் எண்ணெய் ஆகியவற்றை சரியாக ஜீரணமாக்க உதவுகிறது. உணவுப்பொருட்கள் நன்றாக ஜீரணமாகி ஆரோக்கியமான இரத்தம் உருவாக உதவுகிறது. இதனால் கால்நடைகள் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியுடனும், நல்ல சினைபிடிப்பு திறனும், அதிக பால் கொடுக்கும் திறனுடனும் விளங்குகின்றன. இந்த உப்பு சத்துடன், மிகவும் அத்தியாவசமான கனிமங்கள் நிறைந்த தாதுஉப்புகளும் உணவின் மூலம் கிடைத்தால் தான் கால்நடைகளின் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் சரியாக நடைபெறும்.

எனவே, கனிம உப்புக்களான இரும்பு, துத்தநாகம், அயோடின், கோபால்ட், தாமிரம், மெக்னீசியம் மற்றும் மாங்கனீஸ் போன்றவை தீவனத்தில் சரியான அளவில் இருக்க வேண்டும். இந்த கனிமசத்துக்கள் உடலை பல வழிகளில் சீராக வைக்கின்றன.

இரும்பு சத்து இரத்தத்தில் சிவப்பு அணுக்களை அதிகரிக்க செய்கிறது. தாமிரம் என்ற கனிமச்சத்து இரும்புடன் சேர்ந்து திசுக்களுக்கு பிராணவாயுவை எடுத்து செல்லும் ஹீமோகுளோபினை உருவாக்குகிறது. துத்தநாகம் என்ற கனிமம் உடலின் திசுக்களின் சிற்றறைகள் சிறப்பாக உருவாகவும், ரோமம் மற்றும் ஆரோக்கியமான தோல் வளர்ச்சி பெறவும் உதவுகிறது. அயோடின் சத்தானது, தொண்டை அழற்சி நோய் வராமல் தடுக்கிறது.

உயிர்ச்சத்தின் ரசாயன மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது. மாங்கனீஸ் அதிக பால் சுரப்பதற்கும், கருஉருவாவதற்கும் உதவுகிறது. கோபால்ட் என்ற கனிமசத்து ஊட்டச்சத்து பி உடன் இணைந்து பசியின்மையை போக்குகிறது. இரத்த சோகையை நீக்குகிறது. மக்னீசியம் எலும்பு உருவாகிட உதவுகிறது. இதில் எது குறைந்தாலும் அது பல வழிகளில் பிரச்சனைகளை உருவாக்குகிறது.

பால் உற்பத்தியை பெருக்கலாம். வடமாநிலங்களில் பால் உற்பத்தி குறைந்து போனதால், பாலின் விலை உயர்த்தப்படும் என்று சமீபத்தில் மத்திய அமைச்சர் ஒருவர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி பால் உற்பத்தியாளர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போராடினார்கள். பாலின் விலை அதில் அடங்கியிருக்கும் கொழுப்பு மற்றும் தாதுப்பொருட்களின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.

சரியான, சமவிகித சத்துக்கள் கலந்த தீவனங்களை பசுக்களுக்கு தருவதன் மூலமே கொடுப்பதன் மூலம் மட்டுமே கொழுப்பு மற்றும் இதர சத்துக்கள் நிறைந்த தரமான பாலை பெற முடியும். ஏனென்றால் காலையும், மாலையும் பால் கறப்பதால் பசுவின் உடலிலிருந்து குறிப்பிடத்தக்க அளவு கனிமசத்துக்கள் வெளியேறிக் கொண்டே இருக்கும்.
இதனை ஈடுகட்ட போதிய கனிம சத்தை மீண்டும் நாம் தீவனத்தில் வாயிலாக அவற்றுக்கு தரவேண்டும். அப்படி தராவிட்டால் பால்சுரப்பு குறைந்து ஒரு கட்டத்தில் பால் நின்று விடும் வாய்ப்பு இருக்கிறது.

இந்த கனிம கால்நடை நக்கியை பசுக்களுக்கு அளிப்பதன் மூலம் அதிக பால் சுரப்பை பெற முடியும். நோய்வாய்ப்பட்டு பலவீனமான விலங்குகள் இதனை நக்கி சாப்பிடுவதன் மூலம் இழந்த பலத்தை மீண்டும் பெறமுடிகிறது. ஆடுகளுக்கும், பன்றிகளுக்கும் இதனை தருவதனால் எடை கூடுகிறது. இறைச்சி நல்ல சுவையுடன் இருக்கிறது. குதிரைகளுக்கு தருவதனால் அவை அதிக ஆரோக்கியத்துடன், பொலிவுடனும் இருக்கும்.


பயன்படுத்தும் முறை
இது கட்டி வடிவத்தில் குச்சியில் நிறுத்தப்பட்டுள்ள ஐஸ்கீரிம் வடிவத்தில் தயாரித்துள்ளோம். இதை கால்நடைகளின் முன்னால் அவை நக்குவதற்கு தேவையான உயரத்தில் நட்டு வைத்து விடலாம். இதனை கால்நடைகள் நக்கி சுவைக்கும் போது அவற்றுக்கு தேவையான உப்பு மற்றும் கனிமம் எளிதில் கிடைத்து விடுகிறது. இந்த கட்டியை சுவைக்கும் போது அவை தண்ணீரை நன்றாக குடிக்கும். எனவே, கால்நடைகளின் அருகில் ஒரு வாளி நிறைய தண்ணீரை வைக்க வேண்டும்.

 2 கிலோ அளவில் இருக்கும் இந்த கட்டியை தினமும் பயன்படுத்தினால் ஒரு பசுமாட்டிற்கு 2 மாத அளவிற்கு வரும். இதன் விலை ரூ.300. அதாவது நாளன்றுக்கு அதிகபட்சமாக 10 ரூபாய் அளவில் பண்ணை விலங்குகளுக்கு போதிய கனிமசத்துக்கள் கிடைத்து விடுகின்றன.

இந்த கட்டி நிச்சயமாக கால்நடை விவசாயிகளுக்கு சரிசமமான தீவனச்சத்துக்களை தங்களது வளர்ப்பு விலங்குகளுக்கு அளித்து வருகிறோம் என்ற மனநிறைவை ஏற்படுத்தும்" என்கிறார் இவர். தமிழ்நாடு முழுவதும் தாலுகா வாரியாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இதனை வாங்கி விற்று சுயதொழிலில் ஈடுபட வாய்ப்பு தருகிறோம். 20 ஆயிரம் ரூபாய் இருந்தால் போதும்" என்கிறார்.

முயற்சிக்க விரும்புபவர்கள் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். தமிழக அரசு கிராம மக்களுக்கு கால்நடைகளை அளித்து கால்நடைகளில் எண்ணிக்கையை உயர்த்த முற்படும் நிலையில் இந்த கனிமகட்டிகளுக்கு மிக அதிகமான விற்பனை வாய்ப்பிருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும் நண்பர்களே!காரணம், ஆட்டுக்கும் மாட்டுக்கும் பூஸ்ட் ஆக இருக்க போகும் இது இல்லாமல் கால்நடை தொழில் இல்லை என்ற அளவுக்கு இந்த கனிம கட்டியின் விற்பனை இருக்கும்....வாங்களேன் விற்கலாம்.
ஆண்மையில் சிறந்த ஆண்மை எது?

1 கருத்துகள்

என் நண்பருக்கு இரண்டு சந்தேகங்கள் இருந்தன. ஒன்று, யாரும் தீவனம் போட்டு வளர்க்காத கோயில் மாடு கொழுகொழுவென்று பார்க்கவே பயங்கர திடமாக இருக்கிறதே! ஆனால், வீட்டில் கட்டிப் போட்டு வளர்க்கும் மாடு என்னதான் தீவனம் போட்டாலும், எதையோ இழந்தது போல் சொங்கி போய் நிற்கிறதே! இது ஏன்? இரண்டாவது சந்தேகம், ரோடுகளில் திரியும் மனநோயாளிகள் பலர் இரைச்சலிலும் கூட தேவலோகத்தில் இருப்பது போல் அசந்து ரோட்டோர பிளாட்பாரங்களில் தூங்குகிறார்களே! அது எப்படி சாத்தியமாகிறது? இது தான் அந்த சந்தேகங்கள்.

இந்த கேள்வி இரண்டுக்கும் ஒரு மனநல நிபுணரிடம் விடை கேட்ட போது அவர் சொன்னது ஆச்சரியமானது. மேற்சொன்ன மாடும், மனநோயாளியும் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை. இந்த மாடும், மனநோயாளியும் பெரிதாக சிந்திப்பதில்லை. ஆனால் கட்டி வைத்த மாடு தனக்கு எப்போது தீவனம் கிடைக்கும் என்றே சிந்திக்கிறது? அது காலார நடக்க வேண்டும் என்று நினைத்தாலும் மனிதன் போட்ட மூக்கணாங்கயிறு அதற்கு அனுமதிப்பதில்லை. ஆக, வீட்டில் கட்டி வைத்த மாடு தனது எண்ணத்தை எல்லாம் அடக்கிக் கொண்டு ஒரே இடத்தில் நிற்க வேண்டியது தான். முளை குச்சியில் கட்டி வைத்த மாடு தான் தின்றதை செரிப்பதற்குள் போதும்போதுமென்றாகி விடுகிறது. பிறகு வயிற்று உப்புசம், கழிச்சல் என்று மனிதனால் மாடும் அவஸ்தைப்படுகிறது.

மனநோயாளி விடயத்துக்கு வருவோம். மனநோயாளிக்கு இந்த உலகத்தில் ரூபாய் நோட்டை பற்றி எதுவும் தெரியாது. அதனால், பெரிதாக கற்பனைக் கோட்டைகள் இருப்பதில்லை. பசித்தால் மட்டுமே சாப்பாடை தேடுவதும், அது கிடைக்காவிட்டால் கூட அதை பெரிதாக்காமல் தூங்கிவிடுவதும் இயற்கையானது.
ஆக, நாம் சொல்லும் விரதங்களை எல்லாம் இந்த மனநோயாளி எதார்த்தமாகவே இருந்து விடுவதால் பெரிதாக நோயும் இல்லை. இது போல் ஆசைகளும், நிர்ப்பந்தங்களும் பெரிதாக இல்லாத காரணத்தால் எளிதாக தூக்கம் வந்து விடுகிறது. ஆக..அவர்கள் ரோட்டோரத்தில் படுத்தாலும், மேட்டில் படுத்தாலும் தேவலோகம் தான்! என்றார். என்ன ஒரு விளக்கம் பாருங்கள்.

மேற்சொன்ன கோயில் மாட்டுக்கும், மனநோயாளிக்கும் கிடைக்கும் உழைப்பும், ஆனந்தமான தூக்கமும் இந்த உலகத்தில் ஒரு சில வேலைகளை செய்பவர்களுக்கு தான் கிடைப்பதென்னவோ உண்மை. அதில் விவசாயமும் ஒன்று. நிலத்தில் நெற்றி வியர்வை சிந்த வைக்கும் உழைப்பு ஒரு தியானம் போலாகிறது. அது உரமேற்றும் உடல்வாகு அந்த கோயில் மாட்டுக்கு கிடைத்த உடல்வாகை போல் அலாதியானது. யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் தனது நிலத்தில் உழைத்து அதில் விளையும் காய்கறிகளை விற்பனை செய்து கிடைக்கும் பணத்தை அறுவடை செய்யும் போது வரும் ஆனந்தத்தால் எந்த இடத்திலும் நினைத்த பொழுதில் படுத்தால் தூக்கம் வந்து விடும்.

விவசாயத்தால் நட்டம் நட்டம் என்று கூக்குரல்கள் இருப்பது ஒருபக்கம். அதற்கான காரணிகளை வேறொரு பதிவில் அலசுவோம். இங்கே படித்த இளைஞர் ஒருவர் தனது கிராமத்திற்கு விவசாய வழிகாட்டியாக இருப்பதை எடுத்துக் காட்டுவதற்காக இந்த பதிவை இடுகிறேன். பொட்டி தட்டும் தொழிலை வைத்து பிறந்த ஊரை விட்டு விட்டு வேறெங்கோ ஓடி அந்த ஊர் மகாராசாக்களுக்கு பொட்டி தட்டும் தொழிலை செய்து வரும் நண்பர்கள் கையில் காசு இருந்தால் சொந்த ஊரில் கொஞ்சம் விவசாய நிலம் வாங்கி வையுங்கள். ஒரு காலத்தில் சுதந்திரமாக உழைக்க ஆசை வந்தால் இது போல் நீங்களும் செய்யலாம்.

இனி விடயத்துக்கு வருவோம்....
திருவில்லிபுத்தூரை சேர்ந்த விவசாயி ஆனந்த் இந்த பாமரோசா புல் பயிரிட்டு ள்ளார். ஏற்றுமதி சிறப்பு வாய்ந்த இந்த புல் சாகுபடியில் அவரது அனுபவத்தை கூறுகிறார். வழக்கமான விவசாயம் கையை கடிக்கிறதே என்று நொந்து கொள்ளும் விவசாயிகளுக்கு, இது போல் புல் பயிரிட்டும் எக்கச்சக்க வருமானம் பார்க்கலாம் என்று செய்து காண்பித்துள்ளார். விவசாயம் செய்ய நினைக்கும் இளம் தலைமுறையினருக்கு  ஆனந்த் போன்ற வித்தியாசமான விவசாயிகள் ஒரு உதாரணம். பாமரோசா புல் சாகுபடி மற்றும் எண்ணெய் பிழிந்தெடுப்பதில் இவரது அனுபவத்தை கேட்போம்.

" பாமரோசா என்பது ஒரு வகை புல் தாவரம். இவற்றிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்க்கு உள்ளூரிலும்,வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. மரபு வழி பயிர்களில் எதிர்பார்த்த லாபம் இருப்பதில்லை என்று கருதும் விவசாயிகள் பாமரோசா புல்லை பயிரிட்டு எண்ணையை பிரித்தெடுத்து விற்பனை செய்ய முடியும். இந்த புற்கள் நன்கு வளர்ந்த பின் அவற்றிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய், வாசனைப்பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது. ஊதுபத்தி தயாரிப்பிலும் உதவுகிறது.

உழவர்களின் வருமானத்தை உயர்த்த உதவும் இந்த புல்வகைகளை ஒரு முறை நடவு செய்தால் போதும். மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு மறுதாம்பு பயிராக பராமரிக்கலாம். எந்த வித ரசாயன உரமும் இதற்கு தேவையில்லை. பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்க வேண்டிய அவசியமும் இல்லை.

இயற்கை எரு இட்டு நடவு செய்தவுடன், வாரத்திற்கு ஒரு முறை நீர்ப்பாய்ச்ச வேண்டும். நன்கு வளர்ந்த பிறகு இரு வாரத்திற்கு ஒரு முறை நீர்ப்பாய்ச்சினால் போதும். நீர் தேங்காத செம்மண் மற்றும் கரிசல் மண் நிலங்களில் இந்த புல் வகைகள் செழித்து வளரும். நீர் பாசனம் செய்யும் வசதி இல்லாதவர்கள் மழை பொழியும் காலம் பார்த்து மானவாரியிலும் பயிர் செய்யலாம். நடவு செய்த பிறகு 90 முதல் 100 நாட்களில் நன்றாக வளர்ந்து அறுவடைக்கு தயாராகும் என்றவர் மேலும் தொடர்ந்தார்.

பாமரோசாவில், மறுதாம்பு பயிர்களை 60 லிருந்து 70 நாட்களில் அறுவடை செய்யலாம். நன்கு வளர்ந்த புற்களை அறுவடை செய்து எண்ணெய் பிரித்தெடுக்கும் மையத்தில் நீராவிக் கொதிகலன் மூலம் எண்ணெய் பிரித்தெடுக்கலாம். இந்த மையம் அமைப்பதற்கு தேசிய தோட்டக்கலை வாரியம் கடன் வழங்கி வருகிறது. ஒரு ஏக்கர் நிலத்தில் வளர்ந்துள்ள புற்களை அறுவடை செய்தால், ஒரு டன் புல் கிடைக்கும். இதனை நீராவி கொதிகலன் வழியாக எண்ணெய் பிழிந்தெடுத்தால் 3 முதல் 5 கிலோ எண்ணெய் கிடைக்கும்.

ஒரு கிலோ எண்ணெய் ரூ.3000 வரை விலை போகிறது. எண்ணெய் எடுக்கப்பட்ட புற்களையும் விற்பனை செய்து வருமானம் பார்க்கலாம். திருவண்ணாமலை, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் இந்த புல் வகைகள் பயிரிடப்படுகின்றன. இந்த மாவட்டங்களில் மட்டும் 20 க்கும் மேற்பட்ட எண்ணெய் பிழிந்தெடுக்கும் ஆலைகள் உள்ளன.

பாமரோசா சாகுபடியில் இப்படி எண்ணெய் பிழிந்தெடுக்க ஒவ்வொரு விவசாயியும் தனித்தனியாக பாய்லர் அமைக்க வேண்டியது இல்லை. காரணம், ஒரு பாய்லர் அமைக்க சுமார் 1.5 லட்சம் செலவாகிறது. எனவே, ஒரு கிராமத்தில் பாமரோசா சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் சேர்ந்து ஒரு பாய்லர் அமைத்துக் கொண்டால் அதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இப்படி எடுக்கப்படும் எண்ணெயை குறைந்த பட்சம் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு இருப்பு வைக்கும் படி நல்ல தரமான கேன்களை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். காரணம், இந்த எண்ணெய் இருப்பில் வைக்கப்படும் போது அதன் தரம் அதிகரிக்கிறது. நாட்கள் ஆக, ஆக நல்ல விலையும் கிடைக்கிறது. கடந்த 1990 ம் ஆண்டு 1 லிட்டர் பாமரோசா எண்ணெயின் விலை 250 ஆக இருந்தது.

ஆனால் இன்றைக்கு இதே அளவு எண்ணெய் விலை ரூ.3,100 ஆக விற்பனையாகிறது. எல்லா வகையான வாசனை திரவியங்கள், ஊதுபத்தி, வாசனை மெழுகுவர்த்தி உள்பட பல்வேறு பொருட்களில் இந்த எண்ணெய் சேர்க்கப்படுவதால் எல்லா காலங்களிலும் இந்த எண்ணெய்க்கு மதிப்புள்ளது. மிகச்சிறந்த சந்தை வாய்ப்புள்ள இந்த வகை புல் பயிர்களை விவசாயிகள் பயிரிட தொடங்கி வருவாய் ஈட்டும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம்" என்கிறார் இவர்.

கொசுறு தகவல்: பாண்டிச்சேரி ஆரோவில் உள்பட சில இடங்களில் பல்வேறு புற்களிலிருந்து எண்ணெய் எடுக்கிறார்கள். இதில் வெறும் 25 மில்லி அளவே உள்ள பாமரோசா எண்ணெய் 50 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள்.
ஆக...ஆண்மையில்  சிறந்தது வேளாண்மை !
தகவல்: ஆனந்த், டாப்கோ பண்ணை, திருவில்லிபுத்தூர். 81446 91555முடக்கத்தை நோக்கி மூங்கில் தொழில்!

2 கருத்துகள்

மதுரை செல்லூர் பகுதியில் அமைந்த புதிய மேம்பாலத்தை கடந்து செல்பவர்களின் கண்ணில் அன்றாடம் படும் காட்சி ஒன்று. ரோட்டின் இரைச்சலை பொருட்படுத்தாமல் சிலர் மும்முரமாக மூங்கில் கூடைகளையும், பஞ்சாரத்தையும் பின்னிக் கொண்டிருப்பார்கள். சுமார் 3 தலைமுறைகளை கடந்து போய்க் கொண்டிருக்கும் இந்த மூங்கில் பின்னுதல் வேலை அவர்களின் வாழ்வோடு பின்னிப்பிணைந்து விட்ட ஒன்று. இயற்கையில் பச்சை தங்கம் என்று கருதப்படும் மூங்கிலின் விலை தங்கத்தை போல் எகிறுவதும், முன்பு போல் மூங்கிலால் ஆன பொருட்களுக்கு வரவேற்பு இல்லாத காரணத்தாலும் இந்த மூங்கில் தொழில் முடக்கத்தை நோக்கி தள்ளப்பட்டுள்ளது.

திருமலைநாயக்கர் காலத்திலிருந்து இந்த குடும்பங்களுக்கு வாழ்வளித்து வந்த, சுற்றுச்சூழலுக்கு இணக்கமான இந்த தொழில் அழிந்து விடாமல் பாதுகாக்க அரசும், பிறநிறுவனங்களும் முன்வர வேண்டும் என்கிறார்கள் இந்த கைவினை கலைஞர்கள். இந்த தொழிலில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டிருக்கும் பேசினோம்.

" நாங்கள் கம்பளத்து நாயக்கர் இனத்தின் ஒரு பிரிவான மகேந்திர மேதிரா என்ற பிரிவை சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் எங்களது சமூக மக்கள் இருக்கிறார்கள். குறிப்பாக ஒவ்வொரு ஊரிலும் ஓடும் நதியின் வடகரையில் தான் குடியிருப்புகளை அமைத்திருப்பது வழக்கம். இது என்ன காரணத்தால் ஏற்பட்டது என்று தெரியவில்லை. ஆனால், பெரும்பாலும் அவர்கள் அனைவரும் மூங்கில் பின்னுவதை நம்பித்தான் பல தலைமுறைகளாக வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் மூங்கில் பரவலாக விளைவதில்லை. வீடுகட்டுவது, வியாபாரத்திற்கு, விலங்குகளை அடைக்க என்று மூங்கில் தான் ஒரு காலத்தில் பரவலாக அனைத்து பயன்பாடுகளுக்கும் உதவியிருக்கிறது. அதனால் செழிப்பாக இருந்த மூங்கில் தொழிலில் எங்களது சமூகத்தினர் ஆயிரக்கணக்கில் ஈடுபட்டு வந்துள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக கூட்டுமாறு, கோழி பஞ்சாரம், தக்காளி கூடை, பழக்கூடை, சோறுபாய், முத்துகூடை போன்ற பொருட்களை பின்னி விற்று வருகிறோம். இதில் பெரிய அளவு வருமானம் என்று எதுவும் இல்லை.

ஆனாலும் எங்களது முன்னோர்கள் விட்டு போன இந்த தொழிலை தவிர வேறு தொழில் தெரியாத காரணத்தால், இதை விட்டால் எங்களுக்கு வேறு பிழைப்பும் இல்லை. தற்போது எங்களது இனத்தில் இளைய தலைமுறையினர் நசிந்து வரும் இந்த தொழிலில் இறங்க விரும்பாமல் திருப்பூருக்கு போய் சாயப்பட்டறையிலும், கட்டிட வேலைகளையும் செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். வயதாகிவிட்ட எங்களை போன்றவர்கள் தான் வேறு எங்கும் சென்று பிழைக்க முடியாமல், இயன்ற வரை எங்களால் ஆன பொருட்களை உற்பத்தி செய்து அன்றாட வருமானத்திற்கு வழி செய்து கொள்கிறோம்" என்றவர் மேலும் தொடர்ந்தார்.

" இப்போது எங்களது அன்றாட பிழைப்புக்கும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. எங்களின் தொழிலுக்கு மூலப்பொருளாக இருக்கும் மூங்கில் கேரளாவின் மூணாறு, புனலூர், பாலக்காடு ஆகிய இடங்களில் தான் அதிகமாக விளைகிறது. அங்கிருந்து தற்போது தமிழகத்திற்கு அனுப்பப்படும் மூங்கில்களின் விலையும் அதிகம். வரத்தும் குறைவு. குறிப்பாக மூங்கிலில் சிட்டு மூங்கில், கல் மூங்கில், கோமூங்கில் என்று வித்தியாசம் இருக்கிறது. இதில் சிட்டு மூங்கிலில் அந்த காலத்தில் மன்னர்களும், ஜமீன்களும் கட்டில் செய்து பயன்படுத்தியாக சொல்வார்கள். இந்த மூங்கில் கிடைப்பது அபூர்வம்.

மூங்கில் நீண்ட காலம் உழைப்பதாக இருக்க வேண்டுமென்றால், மூங்கிலை செடியிலிருந்து வளர்பிறை நேரத்தில் வெட்டி எடுக்க வேண்டும் என்று ஒரு ஐதீகம் உண்டு. ஆனால் தற்போது இதை எல்லாம் கடைபிடிப்பவர்கள் குறைவு. மேலும் இப்போது செயற்கை உரங்களை இட்டு மூங்கிலை வளர்ப்பதால் முன்பு போல் திடமான மூங்கில்களும் கிடைப்பது குறைவு. மூங்கிலை வாங்கி வந்தவுடன் அப்படியே உடைத்து வேலைக்கு பயன்படுத்த முடியாது. குறிப்பிட்ட ஈரப்பதத்தில் வைத்து உடைத்து, நார்நாராக சரியான அளவில் கிழித்து எடுக்க வேண்டும். மிகவும் நுணுக்கமான வேலை இது.

தற்போது அதிக வெயில் காலம் என்பதால் பலர் மூங்கில் குச்சிகளை கொண்டு செய்யப்படும் வெயில் ஸ்கிரீன் செய்ய சொல்லி கேட்கிறார்கள். இந்த ஸ்கிரீனுக்கு சதுர அடிக்கு 22 ரூபாய் வரை வைத்து விற்பனை செய்கிறோம். இதில் இருக்கும் கடும் உழைப்புக்கு இந்த விலை குறைவு தான் என்றாலும், சாதாரண மூங்கிலுக்கு இவ்வளவு விலையா என்று கேட்டு பேரம் பேசுகிறார்கள்.

ஜன்னல்களில் வெயிலின் தாக்கத்தை மறைக்க பயன்படுத்தும் மூங்கில் ஸ்கிரீன் 70 ஆண்டுகள் வரை உழைக்க கூடியது. முன்பெல்லாம் பெரிய அரண்மனைகளில் கூட இந்த மூங்கில் திரையை தான் பயன்படுத்துவார்கள். பார்ப்பதற்கு அழகாக இருக்கும். கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும். ஆனால் தற்போது இதன் பயன்பாடும் குறைந்து போய் விட்டது.

இப்போது வீட்டில் மேஜைகளில் வைக்கப்படும் மலர் கூடைகள், பொக்கே கூடைகள், சிறிய பூத்தட்டுகள், சாமி பூஜை பெட்டிகள், பஞ்சாரம், கூட்டுமாறுகள் தான் பெரும்பாலும் விற்பனையாகிறது. அவ்வப்போது அரசு நிகழ்ச்சிகளில் அலங்காரம் செய்வதற்காக கோபுரங்கள் கேட்பார்கள்.

தற்போது ஊட்டி மலர்கண்காட்சியில் பழங்களால் ஆன கோபுரம் ஒன்றை செய்து கண்காட்சிக்கு வைத்தார்கள். அதை நாங்கள் தான் செய்து கொடுத்தோம். எங்களில் எம்.ஏ படித்த சிலர் கூட இந்த தொழிலை விட மனமில்லாமல் தற்போதும் மூங்கில் பின்னுவதில் ஈடுபட்டுள்ளார்கள்.

மரத்தாலும், இரும்பாலும் செய்யும் பல பொருட்களை மூங்கிலாலும் செய்ய முடியும். எங்களிடம் ஒரு பொருள் செய்ய விரும்பி அதன் வடிவத்தை கொடுத்தால் போதும். பின்னிக் கொடுத்து விடுவோம். அரசாங்கமும், தனியார்களும் சுற்றுச்சூழலை காப்பாற்றுவோம் என்று எப்போதும் சொல்லி வருகிறார்கள்.

இதில் எங்களை பயன்படுத்திக் கொண்டால் தற்போது பயன்பாட்டில் இருக்கும் செயற்கையான சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பொருளுக்கு மாற்றாக மூங்கிலால் ஆன பொருட்களை செய்து கொடுப்போம்" என்று இன்றைய சூழலின் அவசியத்தோடு பேசி முடித்தார்.

ரோட்டோரம் நடக்கும் இவர்களது பிழைப்பு கடுமையானதாக இருந்தாலும், தங்களது குலதெய்வமான மல்லம்மாள்(காமாட்சியம்மனை தான் இப்படி சொல்கிறார்கள்) தங்களுக்கு குறைவைக்காது காப்பாற்றுவாள் என்ற நம்பிக்கையுடன் பொழுது புலர்ந்தவுடம் மூங்கிலை பின்னத்தொடங்கும் இவர்களின் நம்பிக்கை வீண்போவதில்லை.

உழைப்பின் வியர்வை காயும் முன் இவர்களின் பொருட்களுக்கான விலையும் கிடைத்து விடுகிறது. ஆனால் அது வயிற்றை நிரப்புவதற்கு மட்டுமே இந்த காலத்தில் உதவும் என்பது தான் உண்மை. அரசு மனது வைத்தால் இவர்களின் பொருட்கள் அமெரிக்காவுக்கு கூட பயணப்படும் என்பது உறுதி.
சொந்தக் கொல்லையில் காய்த்தது-அமரர் கல்கி செய்த விவசாயம்.

3 கருத்துகள்

கடந்த வாரம் ஜெயா டிவியில் ஒரு ஸ்குரோலிங்க் செய்தி ஓடிக் கொண்டிருந்தது. சென்னையில் வீட்டி மாடியில் காய்கறி தோட்டம் போட விரும்புபவர்கள் தோட்டக்கலை துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்பது தான் அந்த செய்தி. கூடவே தொடர்பு கொள்ள தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்தவுடன் அமரர் கல்கி அன்றும் இன்றும் என்றும் என்ற பகுதியில் கல்கியில் எழுதிய ஒரு சம்பவத்தை இங்கு பிரசுரிக்க தோன்றியது.

என்னுடைய விவசாய ஞானத்தை உலகுக்கு வெளிப்படுத்த இதைவிட நல்ல சந்தர்ப்பம் கிடைக்குமென்று தோன்றவில்லை. நான் குடியிருக்கும் வீட்டிற்கு மேற்குபுறத்தில் வெற்றிடம் ஏராளமாகயிருக்கிறது. ஏன் காய்கறிகள் பயிர் செய்யக்கூடாது என்பதாக பளிச்சென்று ஒர் எண்ணம் உதயாமாயிற்று. பணத்துக்கு பணம் மிச்சம்: புத்தம் புதிய காய்கறிகளை உடனுக்குடன் பறித்துக் கொள்ளலாம். இப்படி எண்ணி உடனே ஒரு ஆளைக்கூப்பிட்டு சுமார் பத்தடிக்கு பத்தடி சதுரத்திற்கு நன்கு கொத்தி வாங்கச் செய்தேன். முதன் முதல் கத்திரிச் செடி வைத்துப் பார்க்கிறதென்று தீர்மானம்.

கத்தரிச்செடிக்கு ஆட்டின் எரு போட்டால் செழித்து வளரும் என்று சொன்னார்கள். இரண்டனாவுக்கு ஒரு கூடை ஆட்டு எரு வாங்கி போட கொட்டச் செய்தேன். பிறகு இரண்டனாவுக்கு 20 கத்தரி செடிகள் வாங்கி வந்து நடச்சொன்னேன். ஆளுக்கு நாலணா கூலி கொடுத்தேன். அன்றிரவு மிகுந்த குதூகலத்துடன் அந்த செடியில் காய்க்க போகும் கத்தரிக்காய்களை பற்றி நானும் என் மனைவியும் பேசிக் கொண்டிருந்தோம்.

" அவை காய்க்க ஆரம்பித்து விட்டால், கறிகாய் விலைக்கு வாங்க வேண்டிய அவசியம் இராது" என்றேன் நான். " என்ன தான் காய்த்தாலும் தினம் கத்திரிக்காய் சாப்பிட முடியுமா?" என்றாள் என் மனைவி.
" அப்படியே மீந்து விட்டால் கொத்தவால் சாவடி வியாபாரி யாருக்கேனும் காண்டிராக்ட் விட்டு விடலாம்" என்று நான் கூறினேன். செடிகள் பெரிதாகி ஒவ்வொரு செடியிலும் பத்துப்பதிணைந்து கத்தரிக்காய்கள் பெரிது பெரிதாக தொங்குவதாகவும், அவைகளை கூட்டு செய்வதா, கறி பண்ணுவதா என்று என் மனைவியும் நானும் சண்டை போடுவதாகவும் அன்றிரவு நான் கனவு கண்டேன்.

மறுநாள் காலையில் எழுந்ததும் முதல் காரியம் கத்தரிக் கொல்லை பார்வை தான். ஆனால், செடிகளை பார்த்ததும் உற்சாகம் குறைந்து போனது. எல்லாம் சோர்ந்து துவண்டு கிடந்தன. கூலி ஆள் செடிகளைச் சரியாக நட்டானோ இல்லையோ என்று சந்தேகம் உண்டாயிற்று. ஒரு செடியைப் பிடுங்கிப் பார்த்து இந்த சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளப் போனேன். அதற்குள் குழந்தை ராஜம் ஓடி வந்து "ஐயோ மாமா! ஏன் செடியைப் பிடுங்குகிறீர்கள்? என்றாள்.

நான் விஷயம் தெரிவித்த போது, முதலில் அப்படி தான் வாடியிருக்கும். நாளைக்கெல்லாம் சரியாய்ப் போய்விடும். அதற்காக நட்ட செடியை பிடுங்கிப் பார்ப்பார்களா?" என்றாள். இந்த விஷயங்கௌல்லாம் எந்த விவசாய கலாசாலையில் படித்து இவளுக்கு தெரிந்தது என்று எனக்கு ஆச்சரியமாகப் போய் விட்டது.

பதினைந்து நாட்கள் ஆகின. கத்தரிச்செடிகள் நாளரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தன. இலைகள் தளதளவென்றிருந்தன. எனக்கும், என் மனைவிக்கும், குழந்தைகள் ராஜம், ராமு எல்லோருக்கும் காலையில் எழுந்ததும் முதல் வேலை கத்தரிக்காய் செடிகளை பார்வையிடுவது தான்.
கைகள் அலம்புவது, வாய் கொப்பளிப்பது எல்லாம் கத்தரிக்காய் பாத்தியில் தான். ஒரு சொட்டுத்தண்ணீர் கூட வீணாக்குவதில்லை. இன்னும் நாலைந்து நாளில் பூக்கத் தொடங்கி விடலாமென்று எதிர்பார்த்தோம்.

ஒரு நாள் திடீரென்று ராஜம்" ஐயோ, மாமா! கத்திரிச்செடி போச்சு!" என்று கத்தினாள். நான் திடுக்கிட்டு, எழுதிக் கொண்டிருந்தவன் அப்படியே பேனாவைப் போட்டு விட்டு எழுந்து ஓடினேன். பார்த்ததும் வயிறு பகீர் என்றது. ஒரு பெரிய காளை மாடு கத்தரிப்பாத்தியில் புகுந்து நாவை நீட்டி நீட்டி ருசி பார்த்து, அதன் இலைகளைக் காம்புகளுடன் உள்ளே தள்ளிக் கொண்டிருந்தது.
எனக்குண்டான கோபத்தையும், எரிச்சலையும் சொல்லி முடியாது."

இதேன்ன அநியாயம்? கத்திரிச் செடியை மாடு தின்னுமா, என்ன? இதை எந்தப் பத்திரிக்கையிலும் படிக்கவில்லையே? யாரும் சொல்லிக் கேட்டது கூட இல்லையே?" இந்த மாட்டின் சொந்தக்காரன் மேல் வழக்கு தொடர்ந்தால் என்ன?" என்று யோசித்துக் கொண்டு திக்பிரமை பிடித்தவன் போல் நிற்கையில், ராஜம் மறுபடியும் "என்ன மாமா! மாடு செடிகளை அழிக்கிறது, சும்மா நிற்கிறீங்களே?" என்று கூவினாள். ஆனால், அந்த பொல்லாத மாடு கொம்புகளை ஓர் ஆட்டம் ஆட்டி என்னை முட்ட வந்தது.

நல்ல வேளையாக இதற்குள் ராமு எங்கிருந்தோ ஓடி வந்தான். பக்கத்தில் கிடந்த ஒரு தடியை எடுத்துக் கொண்டு எச்சரிக்கை செய்யாமல் மாட்டின் முதுகில் ஒரு போடு போட்டான். உடனே அந்த கோழை மாடு ஓட்டம் பிடித்தது! கேவலம் பெண்கள் கூடஇக்காலத்தில் போலீஸ் தடியடிகளுக்கு புறங்கொடுத்து ஓடாமல் தீரத்துடன் நிற்கிறார்கள்.
அந்த ஆண்பசுவுக்கு அவ்வளவு தைரியங்கூட இல்லை! மனிதர்களில் வீரதீர பராக்கிமசாலிகளை, ஏறு" என்று வர்ணிப்பது அர்த்தமற்றதாக காணப்படுகிறது.
இன்னும் பத்து தினங்கள் கழிந்தன. கத்தரிச் செடிகள் மறுபடியும் தளிர்த்து பெரிய பெரிய இலைகள் விட்டு செழித்தன. மாடு கன்று வராமல் ஒருவர் மாற்றி ஒருவர் காவல் காத்துவந்தோம்.

ஒரு நாள் காலையில் நான் படுக்கையை விட்டு எழுந்து வெளிவந்ததும் வீதியில் ஒரு அதிசய காட்சியைக் கண்டேன். முசுக்கட்டை பூச்சியை போன்ற ஒருவகை சிறிய பூச்சிகள் தெருவீதியில் கால் வைக்க இடமில்லாது நிறைந்திருந்தன. செடிகளில் இலைகளில் ஒரு அணுவளவு பாகங்கூட கண்ணுக்குப் புலனாகவில்லை. எல்லாம் பூச்சிகளால் மூடப்பட்டிருந்தன.
மறுநாள் காலையில் சென்று பார்த்த போது, கத்திரிச் செடிகளில் ஒரு இலையாவது பாக்கியில்லை. ஆனால் இலைக்காம்புகள் எல்லாம் அப்படியே நின்றன. மாட்டைப் போல காம்புகளை தின்றுவிடாமல் விட்டதற்காக பூச்சிகளுக்கு நன்றி கூறினேன்.

ஆனால், பெரிய மாடு முதலில் சிறு பூச்சிகள் வரையில் என்னுடைய விவசாயத்துக்கு ஏன் விரோதம் செய்ய வேண்டுமென்று எனக்கு விளங்கவேயில்லை. பின்னும் இருபது நாள் சென்ற பிறகு ஒரு நாள் ராஜம், " மாமா, ஓடி வாருங்களேன்" என்று கத்தினாள். குழந்தைக்கு என்ன ஆனதோ தெரியவில்லையே என்று அலறிப்புடைத்து ஓடினேன். "மாமா, கத்தரிச்செடி பூத்திருக்கு" என்று அளவில்லாத குதூகலத்துடன் கத்தினாள் ராஜம். இருபது செடிகள் நட்டதில் ஒரு செடியாவது எவ்வளவோ விபத்துக்களை தாண்டி பூத்து மூன்று காய்களும் காய்த்தது. அவற்றில் ஒன்று சொத்தையாக போயிற்று. பாக்கி இரண்டையும் செடியிலிருந்து பறித்தோம்.

அன்றைய தினம் என் மனைவியின் அடுத்த வீட்டு தோழி" சமையலுக்கு ஒன்றுமே இல்லையே, கறிகாய் ஏதேனும் இருக்கிறதா" என்று கேட்கவே, என் மனைவி மிகுந்த பெருமையுடன் "எங்கள் வீட்டு சொந்த கொல்லையில் காய்த்தது" என்பதாக ஒன்றை கொடுத்து விட்டாள்.
பாக்கி ஒரு காயை மேளதாளங்களுடன் நாலாக நறுக்கி சாம்பாரில் போட்டோம். சாப்பாட்டின் போது ஆளுக்கு ஒரு துண்டு கத்தரிக்காய் கிடைத்தது. ஆஹா! என்ன இருந்தாலும் சொந்தக் கொல்லையில் பயிரிட்டு காய்த்த கறியின் சுவையே வேறு தான்! அந்த ருசி அனுபவித்தவர்களுக்கே தெரியும்.
ஆனந்தவிகடன் 14.1.1931

உண்மை தான். வீட்டில் ஒரு தொட்டியை வைத்து அதில் தக்காளியும், கத்தரிக்காயும் முளைத்து வந்து அது நம் வீட்டு சாம்பாருக்கு வரும் போது அதன் அன்றைய சாப்பாட்டின் சுவை எப்போதும் இல்லாத ருசியாக தெரியும். நீங்களும் தான் வீட்டில் ஒரு விவசாயம் செய்து பாருங்களேன்!

காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today