சொந்தக் கொல்லையில் காய்த்தது-அமரர் கல்கி செய்த விவசாயம்.

கடந்த வாரம் ஜெயா டிவியில் ஒரு ஸ்குரோலிங்க் செய்தி ஓடிக் கொண்டிருந்தது. சென்னையில் வீட்டி மாடியில் காய்கறி தோட்டம் போட விரும்புபவர்கள் தோட்டக்கலை துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்பது தான் அந்த செய்தி. கூடவே தொடர்பு கொள்ள தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்தவுடன் அமரர் கல்கி அன்றும் இன்றும் என்றும் என்ற பகுதியில் கல்கியில் எழுதிய ஒரு சம்பவத்தை இங்கு பிரசுரிக்க தோன்றியது.

என்னுடைய விவசாய ஞானத்தை உலகுக்கு வெளிப்படுத்த இதைவிட நல்ல சந்தர்ப்பம் கிடைக்குமென்று தோன்றவில்லை. நான் குடியிருக்கும் வீட்டிற்கு மேற்குபுறத்தில் வெற்றிடம் ஏராளமாகயிருக்கிறது. ஏன் காய்கறிகள் பயிர் செய்யக்கூடாது என்பதாக பளிச்சென்று ஒர் எண்ணம் உதயாமாயிற்று. பணத்துக்கு பணம் மிச்சம்: புத்தம் புதிய காய்கறிகளை உடனுக்குடன் பறித்துக் கொள்ளலாம். இப்படி எண்ணி உடனே ஒரு ஆளைக்கூப்பிட்டு சுமார் பத்தடிக்கு பத்தடி சதுரத்திற்கு நன்கு கொத்தி வாங்கச் செய்தேன். முதன் முதல் கத்திரிச் செடி வைத்துப் பார்க்கிறதென்று தீர்மானம்.

கத்தரிச்செடிக்கு ஆட்டின் எரு போட்டால் செழித்து வளரும் என்று சொன்னார்கள். இரண்டனாவுக்கு ஒரு கூடை ஆட்டு எரு வாங்கி போட கொட்டச் செய்தேன். பிறகு இரண்டனாவுக்கு 20 கத்தரி செடிகள் வாங்கி வந்து நடச்சொன்னேன். ஆளுக்கு நாலணா கூலி கொடுத்தேன். அன்றிரவு மிகுந்த குதூகலத்துடன் அந்த செடியில் காய்க்க போகும் கத்தரிக்காய்களை பற்றி நானும் என் மனைவியும் பேசிக் கொண்டிருந்தோம்.

" அவை காய்க்க ஆரம்பித்து விட்டால், கறிகாய் விலைக்கு வாங்க வேண்டிய அவசியம் இராது" என்றேன் நான். " என்ன தான் காய்த்தாலும் தினம் கத்திரிக்காய் சாப்பிட முடியுமா?" என்றாள் என் மனைவி.
" அப்படியே மீந்து விட்டால் கொத்தவால் சாவடி வியாபாரி யாருக்கேனும் காண்டிராக்ட் விட்டு விடலாம்" என்று நான் கூறினேன். செடிகள் பெரிதாகி ஒவ்வொரு செடியிலும் பத்துப்பதிணைந்து கத்தரிக்காய்கள் பெரிது பெரிதாக தொங்குவதாகவும், அவைகளை கூட்டு செய்வதா, கறி பண்ணுவதா என்று என் மனைவியும் நானும் சண்டை போடுவதாகவும் அன்றிரவு நான் கனவு கண்டேன்.

மறுநாள் காலையில் எழுந்ததும் முதல் காரியம் கத்தரிக் கொல்லை பார்வை தான். ஆனால், செடிகளை பார்த்ததும் உற்சாகம் குறைந்து போனது. எல்லாம் சோர்ந்து துவண்டு கிடந்தன. கூலி ஆள் செடிகளைச் சரியாக நட்டானோ இல்லையோ என்று சந்தேகம் உண்டாயிற்று. ஒரு செடியைப் பிடுங்கிப் பார்த்து இந்த சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளப் போனேன். அதற்குள் குழந்தை ராஜம் ஓடி வந்து "ஐயோ மாமா! ஏன் செடியைப் பிடுங்குகிறீர்கள்? என்றாள்.

நான் விஷயம் தெரிவித்த போது, முதலில் அப்படி தான் வாடியிருக்கும். நாளைக்கெல்லாம் சரியாய்ப் போய்விடும். அதற்காக நட்ட செடியை பிடுங்கிப் பார்ப்பார்களா?" என்றாள். இந்த விஷயங்கௌல்லாம் எந்த விவசாய கலாசாலையில் படித்து இவளுக்கு தெரிந்தது என்று எனக்கு ஆச்சரியமாகப் போய் விட்டது.

பதினைந்து நாட்கள் ஆகின. கத்தரிச்செடிகள் நாளரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தன. இலைகள் தளதளவென்றிருந்தன. எனக்கும், என் மனைவிக்கும், குழந்தைகள் ராஜம், ராமு எல்லோருக்கும் காலையில் எழுந்ததும் முதல் வேலை கத்தரிக்காய் செடிகளை பார்வையிடுவது தான்.
கைகள் அலம்புவது, வாய் கொப்பளிப்பது எல்லாம் கத்தரிக்காய் பாத்தியில் தான். ஒரு சொட்டுத்தண்ணீர் கூட வீணாக்குவதில்லை. இன்னும் நாலைந்து நாளில் பூக்கத் தொடங்கி விடலாமென்று எதிர்பார்த்தோம்.

ஒரு நாள் திடீரென்று ராஜம்" ஐயோ, மாமா! கத்திரிச்செடி போச்சு!" என்று கத்தினாள். நான் திடுக்கிட்டு, எழுதிக் கொண்டிருந்தவன் அப்படியே பேனாவைப் போட்டு விட்டு எழுந்து ஓடினேன். பார்த்ததும் வயிறு பகீர் என்றது. ஒரு பெரிய காளை மாடு கத்தரிப்பாத்தியில் புகுந்து நாவை நீட்டி நீட்டி ருசி பார்த்து, அதன் இலைகளைக் காம்புகளுடன் உள்ளே தள்ளிக் கொண்டிருந்தது.
எனக்குண்டான கோபத்தையும், எரிச்சலையும் சொல்லி முடியாது."

இதேன்ன அநியாயம்? கத்திரிச் செடியை மாடு தின்னுமா, என்ன? இதை எந்தப் பத்திரிக்கையிலும் படிக்கவில்லையே? யாரும் சொல்லிக் கேட்டது கூட இல்லையே?" இந்த மாட்டின் சொந்தக்காரன் மேல் வழக்கு தொடர்ந்தால் என்ன?" என்று யோசித்துக் கொண்டு திக்பிரமை பிடித்தவன் போல் நிற்கையில், ராஜம் மறுபடியும் "என்ன மாமா! மாடு செடிகளை அழிக்கிறது, சும்மா நிற்கிறீங்களே?" என்று கூவினாள். ஆனால், அந்த பொல்லாத மாடு கொம்புகளை ஓர் ஆட்டம் ஆட்டி என்னை முட்ட வந்தது.

நல்ல வேளையாக இதற்குள் ராமு எங்கிருந்தோ ஓடி வந்தான். பக்கத்தில் கிடந்த ஒரு தடியை எடுத்துக் கொண்டு எச்சரிக்கை செய்யாமல் மாட்டின் முதுகில் ஒரு போடு போட்டான். உடனே அந்த கோழை மாடு ஓட்டம் பிடித்தது! கேவலம் பெண்கள் கூடஇக்காலத்தில் போலீஸ் தடியடிகளுக்கு புறங்கொடுத்து ஓடாமல் தீரத்துடன் நிற்கிறார்கள்.
அந்த ஆண்பசுவுக்கு அவ்வளவு தைரியங்கூட இல்லை! மனிதர்களில் வீரதீர பராக்கிமசாலிகளை, ஏறு" என்று வர்ணிப்பது அர்த்தமற்றதாக காணப்படுகிறது.
இன்னும் பத்து தினங்கள் கழிந்தன. கத்தரிச் செடிகள் மறுபடியும் தளிர்த்து பெரிய பெரிய இலைகள் விட்டு செழித்தன. மாடு கன்று வராமல் ஒருவர் மாற்றி ஒருவர் காவல் காத்துவந்தோம்.

ஒரு நாள் காலையில் நான் படுக்கையை விட்டு எழுந்து வெளிவந்ததும் வீதியில் ஒரு அதிசய காட்சியைக் கண்டேன். முசுக்கட்டை பூச்சியை போன்ற ஒருவகை சிறிய பூச்சிகள் தெருவீதியில் கால் வைக்க இடமில்லாது நிறைந்திருந்தன. செடிகளில் இலைகளில் ஒரு அணுவளவு பாகங்கூட கண்ணுக்குப் புலனாகவில்லை. எல்லாம் பூச்சிகளால் மூடப்பட்டிருந்தன.
மறுநாள் காலையில் சென்று பார்த்த போது, கத்திரிச் செடிகளில் ஒரு இலையாவது பாக்கியில்லை. ஆனால் இலைக்காம்புகள் எல்லாம் அப்படியே நின்றன. மாட்டைப் போல காம்புகளை தின்றுவிடாமல் விட்டதற்காக பூச்சிகளுக்கு நன்றி கூறினேன்.

ஆனால், பெரிய மாடு முதலில் சிறு பூச்சிகள் வரையில் என்னுடைய விவசாயத்துக்கு ஏன் விரோதம் செய்ய வேண்டுமென்று எனக்கு விளங்கவேயில்லை. பின்னும் இருபது நாள் சென்ற பிறகு ஒரு நாள் ராஜம், " மாமா, ஓடி வாருங்களேன்" என்று கத்தினாள். குழந்தைக்கு என்ன ஆனதோ தெரியவில்லையே என்று அலறிப்புடைத்து ஓடினேன். "மாமா, கத்தரிச்செடி பூத்திருக்கு" என்று அளவில்லாத குதூகலத்துடன் கத்தினாள் ராஜம். இருபது செடிகள் நட்டதில் ஒரு செடியாவது எவ்வளவோ விபத்துக்களை தாண்டி பூத்து மூன்று காய்களும் காய்த்தது. அவற்றில் ஒன்று சொத்தையாக போயிற்று. பாக்கி இரண்டையும் செடியிலிருந்து பறித்தோம்.

அன்றைய தினம் என் மனைவியின் அடுத்த வீட்டு தோழி" சமையலுக்கு ஒன்றுமே இல்லையே, கறிகாய் ஏதேனும் இருக்கிறதா" என்று கேட்கவே, என் மனைவி மிகுந்த பெருமையுடன் "எங்கள் வீட்டு சொந்த கொல்லையில் காய்த்தது" என்பதாக ஒன்றை கொடுத்து விட்டாள்.
பாக்கி ஒரு காயை மேளதாளங்களுடன் நாலாக நறுக்கி சாம்பாரில் போட்டோம். சாப்பாட்டின் போது ஆளுக்கு ஒரு துண்டு கத்தரிக்காய் கிடைத்தது. ஆஹா! என்ன இருந்தாலும் சொந்தக் கொல்லையில் பயிரிட்டு காய்த்த கறியின் சுவையே வேறு தான்! அந்த ருசி அனுபவித்தவர்களுக்கே தெரியும்.
ஆனந்தவிகடன் 14.1.1931

உண்மை தான். வீட்டில் ஒரு தொட்டியை வைத்து அதில் தக்காளியும், கத்தரிக்காயும் முளைத்து வந்து அது நம் வீட்டு சாம்பாருக்கு வரும் போது அதன் அன்றைய சாப்பாட்டின் சுவை எப்போதும் இல்லாத ருசியாக தெரியும். நீங்களும் தான் வீட்டில் ஒரு விவசாயம் செய்து பாருங்களேன்!

3 கருத்துகள்: (+add yours?)

koodal bala சொன்னது…

என்ன ஒரு அருமையான அனுபவம் .சுவை மாறாமல் பகிர்வு அருமை...!

பெயரில்லா சொன்னது…

//ஆஹா! என்ன இருந்தாலும் சொந்தக் கொல்லையில் பயிரிட்டு காய்த்த கறியின் சுவையே வேறு தான்! // உண்மை தான் ...

virutcham சொன்னது…

கத்தரிக்காய் சாம்பார் வாசனை மூக்கை தொடுவதான உணர்வையே கொடுத்து விட்டது போங்கள். உண்மை தான் சொந்தக் கொல்லையில் காய்த்த காயோ பழமோ, அது தேவாமிர்தம் தான்.
கத்தரிக்காய் எல்லாம் வளர்ப்பது கொஞ்சம் கஷ்டம். காரணம் பூச்சி. சில சமயம் ஓணான் இலைகளைத் தின்றுவிட்டுப் போய்விடும். எந்த காய் பழமானாலும் விதைகளை வீட்டுத் தோட்டத்தில் போட்டுவிட்டால் சிலது முளைத்துவிடும். அப்படி சாத்துக்குடி முளைத்து காய்த்து பழுது உண்ட அனுபவம் கூட உண்டு.

இப்போ பப்பாளி நன்கு வளர்ந்து காய்த்து பழுத்துவிட்டது. இவ்வளவு பெரிய பழம் கடையில் கூடக் கிடைக்காது.

காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today