ஆண்மையில் சிறந்த ஆண்மை எது?

என் நண்பருக்கு இரண்டு சந்தேகங்கள் இருந்தன. ஒன்று, யாரும் தீவனம் போட்டு வளர்க்காத கோயில் மாடு கொழுகொழுவென்று பார்க்கவே பயங்கர திடமாக இருக்கிறதே! ஆனால், வீட்டில் கட்டிப் போட்டு வளர்க்கும் மாடு என்னதான் தீவனம் போட்டாலும், எதையோ இழந்தது போல் சொங்கி போய் நிற்கிறதே! இது ஏன்? இரண்டாவது சந்தேகம், ரோடுகளில் திரியும் மனநோயாளிகள் பலர் இரைச்சலிலும் கூட தேவலோகத்தில் இருப்பது போல் அசந்து ரோட்டோர பிளாட்பாரங்களில் தூங்குகிறார்களே! அது எப்படி சாத்தியமாகிறது? இது தான் அந்த சந்தேகங்கள்.

இந்த கேள்வி இரண்டுக்கும் ஒரு மனநல நிபுணரிடம் விடை கேட்ட போது அவர் சொன்னது ஆச்சரியமானது. மேற்சொன்ன மாடும், மனநோயாளியும் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை. இந்த மாடும், மனநோயாளியும் பெரிதாக சிந்திப்பதில்லை. ஆனால் கட்டி வைத்த மாடு தனக்கு எப்போது தீவனம் கிடைக்கும் என்றே சிந்திக்கிறது? அது காலார நடக்க வேண்டும் என்று நினைத்தாலும் மனிதன் போட்ட மூக்கணாங்கயிறு அதற்கு அனுமதிப்பதில்லை. ஆக, வீட்டில் கட்டி வைத்த மாடு தனது எண்ணத்தை எல்லாம் அடக்கிக் கொண்டு ஒரே இடத்தில் நிற்க வேண்டியது தான். முளை குச்சியில் கட்டி வைத்த மாடு தான் தின்றதை செரிப்பதற்குள் போதும்போதுமென்றாகி விடுகிறது. பிறகு வயிற்று உப்புசம், கழிச்சல் என்று மனிதனால் மாடும் அவஸ்தைப்படுகிறது.

மனநோயாளி விடயத்துக்கு வருவோம். மனநோயாளிக்கு இந்த உலகத்தில் ரூபாய் நோட்டை பற்றி எதுவும் தெரியாது. அதனால், பெரிதாக கற்பனைக் கோட்டைகள் இருப்பதில்லை. பசித்தால் மட்டுமே சாப்பாடை தேடுவதும், அது கிடைக்காவிட்டால் கூட அதை பெரிதாக்காமல் தூங்கிவிடுவதும் இயற்கையானது.
ஆக, நாம் சொல்லும் விரதங்களை எல்லாம் இந்த மனநோயாளி எதார்த்தமாகவே இருந்து விடுவதால் பெரிதாக நோயும் இல்லை. இது போல் ஆசைகளும், நிர்ப்பந்தங்களும் பெரிதாக இல்லாத காரணத்தால் எளிதாக தூக்கம் வந்து விடுகிறது. ஆக..அவர்கள் ரோட்டோரத்தில் படுத்தாலும், மேட்டில் படுத்தாலும் தேவலோகம் தான்! என்றார். என்ன ஒரு விளக்கம் பாருங்கள்.

மேற்சொன்ன கோயில் மாட்டுக்கும், மனநோயாளிக்கும் கிடைக்கும் உழைப்பும், ஆனந்தமான தூக்கமும் இந்த உலகத்தில் ஒரு சில வேலைகளை செய்பவர்களுக்கு தான் கிடைப்பதென்னவோ உண்மை. அதில் விவசாயமும் ஒன்று. நிலத்தில் நெற்றி வியர்வை சிந்த வைக்கும் உழைப்பு ஒரு தியானம் போலாகிறது. அது உரமேற்றும் உடல்வாகு அந்த கோயில் மாட்டுக்கு கிடைத்த உடல்வாகை போல் அலாதியானது. யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் தனது நிலத்தில் உழைத்து அதில் விளையும் காய்கறிகளை விற்பனை செய்து கிடைக்கும் பணத்தை அறுவடை செய்யும் போது வரும் ஆனந்தத்தால் எந்த இடத்திலும் நினைத்த பொழுதில் படுத்தால் தூக்கம் வந்து விடும்.

விவசாயத்தால் நட்டம் நட்டம் என்று கூக்குரல்கள் இருப்பது ஒருபக்கம். அதற்கான காரணிகளை வேறொரு பதிவில் அலசுவோம். இங்கே படித்த இளைஞர் ஒருவர் தனது கிராமத்திற்கு விவசாய வழிகாட்டியாக இருப்பதை எடுத்துக் காட்டுவதற்காக இந்த பதிவை இடுகிறேன். பொட்டி தட்டும் தொழிலை வைத்து பிறந்த ஊரை விட்டு விட்டு வேறெங்கோ ஓடி அந்த ஊர் மகாராசாக்களுக்கு பொட்டி தட்டும் தொழிலை செய்து வரும் நண்பர்கள் கையில் காசு இருந்தால் சொந்த ஊரில் கொஞ்சம் விவசாய நிலம் வாங்கி வையுங்கள். ஒரு காலத்தில் சுதந்திரமாக உழைக்க ஆசை வந்தால் இது போல் நீங்களும் செய்யலாம்.

இனி விடயத்துக்கு வருவோம்....
திருவில்லிபுத்தூரை சேர்ந்த விவசாயி ஆனந்த் இந்த பாமரோசா புல் பயிரிட்டு ள்ளார். ஏற்றுமதி சிறப்பு வாய்ந்த இந்த புல் சாகுபடியில் அவரது அனுபவத்தை கூறுகிறார். வழக்கமான விவசாயம் கையை கடிக்கிறதே என்று நொந்து கொள்ளும் விவசாயிகளுக்கு, இது போல் புல் பயிரிட்டும் எக்கச்சக்க வருமானம் பார்க்கலாம் என்று செய்து காண்பித்துள்ளார். விவசாயம் செய்ய நினைக்கும் இளம் தலைமுறையினருக்கு  ஆனந்த் போன்ற வித்தியாசமான விவசாயிகள் ஒரு உதாரணம். பாமரோசா புல் சாகுபடி மற்றும் எண்ணெய் பிழிந்தெடுப்பதில் இவரது அனுபவத்தை கேட்போம்.

" பாமரோசா என்பது ஒரு வகை புல் தாவரம். இவற்றிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்க்கு உள்ளூரிலும்,வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. மரபு வழி பயிர்களில் எதிர்பார்த்த லாபம் இருப்பதில்லை என்று கருதும் விவசாயிகள் பாமரோசா புல்லை பயிரிட்டு எண்ணையை பிரித்தெடுத்து விற்பனை செய்ய முடியும். இந்த புற்கள் நன்கு வளர்ந்த பின் அவற்றிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய், வாசனைப்பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது. ஊதுபத்தி தயாரிப்பிலும் உதவுகிறது.

உழவர்களின் வருமானத்தை உயர்த்த உதவும் இந்த புல்வகைகளை ஒரு முறை நடவு செய்தால் போதும். மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு மறுதாம்பு பயிராக பராமரிக்கலாம். எந்த வித ரசாயன உரமும் இதற்கு தேவையில்லை. பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்க வேண்டிய அவசியமும் இல்லை.

இயற்கை எரு இட்டு நடவு செய்தவுடன், வாரத்திற்கு ஒரு முறை நீர்ப்பாய்ச்ச வேண்டும். நன்கு வளர்ந்த பிறகு இரு வாரத்திற்கு ஒரு முறை நீர்ப்பாய்ச்சினால் போதும். நீர் தேங்காத செம்மண் மற்றும் கரிசல் மண் நிலங்களில் இந்த புல் வகைகள் செழித்து வளரும். நீர் பாசனம் செய்யும் வசதி இல்லாதவர்கள் மழை பொழியும் காலம் பார்த்து மானவாரியிலும் பயிர் செய்யலாம். நடவு செய்த பிறகு 90 முதல் 100 நாட்களில் நன்றாக வளர்ந்து அறுவடைக்கு தயாராகும் என்றவர் மேலும் தொடர்ந்தார்.

பாமரோசாவில், மறுதாம்பு பயிர்களை 60 லிருந்து 70 நாட்களில் அறுவடை செய்யலாம். நன்கு வளர்ந்த புற்களை அறுவடை செய்து எண்ணெய் பிரித்தெடுக்கும் மையத்தில் நீராவிக் கொதிகலன் மூலம் எண்ணெய் பிரித்தெடுக்கலாம். இந்த மையம் அமைப்பதற்கு தேசிய தோட்டக்கலை வாரியம் கடன் வழங்கி வருகிறது. ஒரு ஏக்கர் நிலத்தில் வளர்ந்துள்ள புற்களை அறுவடை செய்தால், ஒரு டன் புல் கிடைக்கும். இதனை நீராவி கொதிகலன் வழியாக எண்ணெய் பிழிந்தெடுத்தால் 3 முதல் 5 கிலோ எண்ணெய் கிடைக்கும்.

ஒரு கிலோ எண்ணெய் ரூ.3000 வரை விலை போகிறது. எண்ணெய் எடுக்கப்பட்ட புற்களையும் விற்பனை செய்து வருமானம் பார்க்கலாம். திருவண்ணாமலை, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் இந்த புல் வகைகள் பயிரிடப்படுகின்றன. இந்த மாவட்டங்களில் மட்டும் 20 க்கும் மேற்பட்ட எண்ணெய் பிழிந்தெடுக்கும் ஆலைகள் உள்ளன.

பாமரோசா சாகுபடியில் இப்படி எண்ணெய் பிழிந்தெடுக்க ஒவ்வொரு விவசாயியும் தனித்தனியாக பாய்லர் அமைக்க வேண்டியது இல்லை. காரணம், ஒரு பாய்லர் அமைக்க சுமார் 1.5 லட்சம் செலவாகிறது. எனவே, ஒரு கிராமத்தில் பாமரோசா சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் சேர்ந்து ஒரு பாய்லர் அமைத்துக் கொண்டால் அதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இப்படி எடுக்கப்படும் எண்ணெயை குறைந்த பட்சம் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு இருப்பு வைக்கும் படி நல்ல தரமான கேன்களை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். காரணம், இந்த எண்ணெய் இருப்பில் வைக்கப்படும் போது அதன் தரம் அதிகரிக்கிறது. நாட்கள் ஆக, ஆக நல்ல விலையும் கிடைக்கிறது. கடந்த 1990 ம் ஆண்டு 1 லிட்டர் பாமரோசா எண்ணெயின் விலை 250 ஆக இருந்தது.

ஆனால் இன்றைக்கு இதே அளவு எண்ணெய் விலை ரூ.3,100 ஆக விற்பனையாகிறது. எல்லா வகையான வாசனை திரவியங்கள், ஊதுபத்தி, வாசனை மெழுகுவர்த்தி உள்பட பல்வேறு பொருட்களில் இந்த எண்ணெய் சேர்க்கப்படுவதால் எல்லா காலங்களிலும் இந்த எண்ணெய்க்கு மதிப்புள்ளது. மிகச்சிறந்த சந்தை வாய்ப்புள்ள இந்த வகை புல் பயிர்களை விவசாயிகள் பயிரிட தொடங்கி வருவாய் ஈட்டும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம்" என்கிறார் இவர்.

கொசுறு தகவல்: பாண்டிச்சேரி ஆரோவில் உள்பட சில இடங்களில் பல்வேறு புற்களிலிருந்து எண்ணெய் எடுக்கிறார்கள். இதில் வெறும் 25 மில்லி அளவே உள்ள பாமரோசா எண்ணெய் 50 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள்.
ஆக...ஆண்மையில்  சிறந்தது வேளாண்மை !
தகவல்: ஆனந்த், டாப்கோ பண்ணை, திருவில்லிபுத்தூர். 81446 915551 கருத்துகள்: (+add yours?)

Sathish சொன்னது…

Nalla pathivu..aanaal template allathu ungal elutthin niratthai maatravum...padikka siramamaaga irukkirathu

காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today