மாடு மேய்க்க தான் லாயக்கு!சரி தீவனம் ?

1 கருத்துகள்

காலை 6 மணி .....அதுக்குள்ள டப்பா எல்லாம் காலிங்கோ !!!

வெளிநாடுகளில் கடினமாக உழைக்கும் நண்பர்கள் தாய்நாட்டில் இருந்து சிறப்பாக உழைத்து முன்னேற விரும்புவதாகவும், அதற்கு என்ன மாதிரியான விவசாய தொழில்களை தொடங்கலாம் என்றும் கேட்பதுண்டு. வெளிநாடுகளில் கடினமாக உழைக்கும் போது தான், இந்த நாட்டுக்கு வந்து உழைக்க கொடுத்த புரோக்கர் பணம்,டிக்கெட் , விசா பணம் அத்தனையும் சேர்த்து ஒரு தொழில் செய்திருந்தால்  நன்றாக முன்னேறி இருக்கலாமே  என்ற எண்ணம் வருவதுண்டு. 

அதை நனவாக்க உங்களுக்கு தேவை ஒரு சிறப்பான லாபகரமான தொழில். குறிப்பாக பால்பண்ணை தொழில் என்றைக்கும் வலுவான லாபத்தை தரக்கூடியது. தற்போது மதுரை உள்பட தென்மாவட்டங்களில் பால் பாக்கெட்டுகளுக்கு தட்டுப்பாடு. வரிசையில் நின்று பால் பாக்கெட்டுகளை வாங்கி போகிறார்கள். கலெக்டர் என்றாலும், கற்பூர வியாபாரி என்றாலும் பால் குடிக்காமல் பொழுது போவதில்லை.

ஆனால் இந்த பாலை சமுதாயத்திற்கு தரவேண்டிய பண்ணைகளோ குறைவாக இருக்கின்றன. மதுரையில் இருந்து தினமும் 50 ஆயிரம் லிட்டர் பாலை சென்னைக்கு அனுப்பியாக வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் மதுரையில் பால் தட்டுப்பாடு நிலவுகிறது. காரணம், மதுரை ஆவின் நிறுவனத்திற்கு பால் பண்ணைகளிலிருந்து ( கால்நடை விவசாயிகளிடமிருந்து) போதிய பால் கிடைக்கவில்லை. இதனால் பால் தட்டுப்பாடு. 

படிப்பு ஏறாதவர்களை 'நீ மாடு மேய்க்க தான் லாயக்கு' என்பார்கள். உண்மையை சொன்னால் மாடு மேய்க்க தான் நிறைய திறமை வேண்டும். காரணம் மாடுகள் வாய் திறப்பதில்லை. அவற்றுக்கு என்ன வேண்டும் என்பதை கண்டுபிடிக்க, அவற்றுடன் கலந்து பழகுவதில் இருந்தே தெரிந்து  கொள்ள முடியும். வெளிநாடுகளில் போய் இரும்புக்கம்பி வளைப்பதை விட இங்கிருந்து கொண்டு நாலு மாடுகளை வாங்கி வளர்த்தால், அவை எட்டாக, பதினாராக, முப்பத்தி இரண்டாக மாறும். பிறகு....உங்களுக்கு நீங்களே எஜமானன். மாடு வளர்க்க மிக முக்கியம் தீவனம் தான்.
முன்பெல்லாம் வைக்கோல் எளிதாக கிடைக்கும். தற்போது எங்கு பார்த்தாலும் குறுகிய கால நெல்பயிர்களாக வந்து விட்டபடியால் ஒரு அடியில் நெல் விளைந்து மனிதனுக்கு அரிசியை தருகிறது. ஆனால் மாட்டுக்கு தருவதற்கான வைக்கோலை காணவில்லை. காரணம், நெல் பயிர் உயரமில்லை. அதனால் வைக்கோலும் இல்லை.

சைலேஜ் குவியல்
இப்படியாக ஆகி விட்ட நிலையில், மாடுகளுக்கு தேவையான தீவனங்களை எங்கிருந்து பெறலாம். அதிலும் குறிப்பாக மழைக்காலத்தில் மாடுகள் அவ்வளவாக மேயப்போவதில்லை. அப்படியே மேய்ச்சலுக்கு போனாலும் ஏதாவது ஒரு நோய் வந்து விடுவதுண்டு. அதாவது, மழைக்காலத்தில் விளையும் புற்களில் நச்சுமழைக்காலத்தில் தேங்கியுள்ள தண்ணீரில் வளரும் புல்லில் நைட்ரஜன் சத்து அதிகமாக இருக்கும். இந்த இடத்தில் வளரும் புல்லை உண்ணும் கால்நடைகளுக்கு நச்சுத்தன்மை உண்டாகி வயிறு உப்புசம், திடீர் இறப்பு ஏற்படும்.

எனவே, மழையில் தேங்கிகிடக்கும் தண்ணீரில் வளரும் புற்களை, மேய்ச்சலில் உள்ள ஆடுகளும் மாடுகளும் மேயாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு வளர்ந்து கிடக்கும் புற்களை அறுவடை செய்து பதனபசுந்தீவனமாக தயாரித்து சேமித்து வைத்து கொள்ளலாம். அதை மழைக்காலம் முடியும் வரை கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கலாம். மேலும் இது பதப்படுத்தி வைக்கப்படுவதால் எதிர்வரும் கோடைகாலத்தில் கால்நடைகளின் பசுந்தீவன தட்டுப்பாட்டை சமாளித்து கால்நடைகளுக்கு ஆண்டு முழுவதும் பசுந்தீவனம் கிடைக்கும்படியாக செய்யலாம்.

அதாவது, ஒரு உணவுப் பொருள் குறிப்பிட்ட சீசனில் அதிகமாக கிடைக்கும் போது நாம் அதைப் பதப்படுத்தி வைத்து கிடைக்காத காலங்களில் பயன்படுத்திக் கொள்கிறோம். உதாரணமாக மாங்காயை சீசனில் வாங்கி ஊறுகாய், வடு, ஜாம் என்று பல வகைகளில் தயாரிக்கிறோம். எலுமிச்சை, தக்காளி போன்றவற்றையும் இது போல் பயன்படுத்துகிறோம். அது போல் தான் இதுவும். பொதுவாக மழைக்காலத்தில் பசுந்தீவனம் அதிகமாக கிடைப்பதுண்டு. அபரிமிதமாக வளரும் இந்த பசுந்தீவனங்களை அறுவடை செய்து சைலேஜ் என்ற முறையில் பதப்படுத்தி ஆண்டு முழுவதும் பசுந்தீவனம் கிடைக்கும் வகையில் சேமிக்கலாம். மக்காச்சோளம் மற்றும் தீவனச்சோளம் போன்றவை தான் பசுந்தீவனங்கள். இவை அறுவடை செய்யப்படும் போது பசுமையாக காணப்படும். சோளத்தை அறுவடை செய்த பிறகு கிடைக்கும் தட்டைகளை எடுத்து நாம் ஊறுகாய் போடுவது போல் பதப்படுத்துவதற்கு பெயர் தான் சைலேஜ். இந்த முறையில் சோளம் மற்றும் பிற தீவன விவசாய கழிவுகளை பதப்படுத்தி வைத்து நீண்ட காலத்திற்கு பயன்படுத்தலாம்.

சைலேஜ் என்ற பதன பசுந்தீவனம்
தேவைக்கு அதிகமாக கிடைக்ககூடிய பசுந்தீவனத்தை பதமாக பக்குவம் செய்து அதில் உள்ள சத்து பொருட்கள் வீணாகாமல் சேமிக்கின்ற முறையே சைலேஜ் ஆகும். இந்த முறையில் பசுந்தீவனத்தை தரைக்கு கீழ் வட்டமான அல்லது சதுர குழிகள் வெட்டியோ, தரைமட்டத்திற்கு மேல் டவர்சைலோ ஆகவோ தயார் செய்யலாம். மண்ணின் தன்மையை பொறுத்து சுமார் 1.8 முதல் 2 மீ ஆழத்திற்கும், 3 முதல் 4.5 மீட்டர் அகலத்திற்கும் குழி தோண்ட வேண்டும். நன்கு காய்ந்த வைக்கோல் அல்லது காய்ந்த புல்லினை கொண்டு குழியின் அடித்தளம் மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் நிரப்ப வேண்டும். கோ.3, மக்காச்சோளம் மற்றும் தீவனச்சோளம் ஆகிய
பசுந்தீவனங்கள் சைலேஜ் தயாரிக்க உகந்தவை.
இந்த தீவனங்களை 1 முதல் ஒன்றரை அடி அளவில் துண்டுகளாக நறுக்கி குழிகளில் காற்றில்லாமல் அடுக்கு முறையில் நிரப்ப வேண்டும். ஒரு அடுக்குக்கு 500 கிலோ அளவு துண்டுகளை நிரப்பி வைத்து, அந்த அடுக்கை  நன்றாக மிதித்து அழுத்த வேண்டும். இந்த அடுக்கின் மீது வெல்லப்பாகு கழிவை தெளித்து விட வேண்டும். பின்னர் சாதாரண உப்பு ஒரு டன்னுக்கு 8 முதல் 10 கிலோ வீதும் கணக்கிட்டு தண்ணீருடன் கலந்து ஒவ்வொரு அடுக்கின் மீதும் தெளிக்க வேண்டும். இப்படி குழி முழுவதும் நிரப்பிய பின் மேல்மட்டத்தில் உலர்ந்த வைக்கோலை பரப்பி 10க்கு 1 என்ற அளவில் மண்சேறு மற்றும் சாணத்தை கலவையாக ஆக்கி அதனை கொண்டு பூசி முழுகி விட வேண்டும். இப்படி பதப்படுத்தப்பட்ட தீவனத்தை 3 மாதங்களுக்கு பின் எடுத்து கால்நடை தீவனமாக பயன்படுத்தலாம்.

நன்மைகள்
இந்த பதப்படுத்தப்பட்ட பசுந்தீவனத்தை எதிர்வரும் கோடையில் பசுந்தீவன தட்டுப்பாட்டை சமாளிக்க பயன்படுத்தலாம்.
மழைக்காலத்தில் அதிகமாக விளையும் பசுந்தீவனங்களை இப்படி பதப்படுத்துவதன் மூலம் கால்நடைகளின் தீவனம் வீணாவதை தடுக்கலாம்.
பதப்படுத்துவதன் மூலம் தீவனத்தில் புரதம் மற்றும் உயிர்ச்சத்துக்கள் வீணாகாமல் பாதுகாக்கப்படுகின்றன.
உலர் தீவனம் சேமிப்பதற்கான இடத்தை காட்டிலும், சைலேஜ் குழிகள் குறைந்த இடஅளவில் தீவனக்கிடங்காக இருப்பதால் எந்த இடத்திலும் தீவனத்தை சேமிக்கலாம்.

மழைக்காலத்தில் கால்நடைகளுக்கு தீவனம் அளிக்கும் முறை
*கால்நடைகளுக்கு மழைக்காலங்களில் சுகாதாரமான தீவனம் அளிப்பது முக்கியம். மழைக்காலத்தில் *பண்டிகைகளும் அதிகம் வருவதால், அப்போது வீடுகளில் மீதமாகும் சோறு, இனிப்புகளை கால்நடைகளுக்கு கொடுக்காமல் தவிர்ப்பது நல்லது. இத்துடன் தீவனம் அளிக்கும் போது சில நடைமுறைகளை கடைபிடித்தல் வேண்டும்.
*மழைக்காலத்தில் தீவனத் தொட்டிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
*தீவனத் தொட்டிகளில் மீதமாகும் தீவனத்தை கால்நடைகள் உண்ணாமல் தீவனத் தொட்டியில் விட்டு விட்டால் அந்த தீவனங்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும்.
*பசுந்தீவனத்தை மழைக்காலத்தில் ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
*பசுந்தீவனத்தை நன்கு உதிர்த்து மண் மற்றும் புழுக்கள், பூச்சிகள் இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.
கொசுக்கள், உண்ணிகள் மற்றும் புழுக்கள் அதிகம் உற்பத்தியாவது மழைக்காலத்தில் தான். எனவே தீவன தொட்டியை சுற்றியும், கொட்டகையை சுற்றியும் பூச்சிக் கொல்லி மருந்தை தெளித்தல் மிகவும் அவசியம்.
*தண்ணீர் தொட்டியில் பாசி பிடிப்தை தவிர்க்க, வாரம் ஒரு முறை சுண்ணாம்பு கொண்டு வெள்ளையடித்து விட வேண்டும்.தொடர் -3 மரக்கன்றுகளை ஆயிரக்கணக்கில் உருவாக்குவது எப்படி?

1 கருத்துகள்


பாத்தியில் முளைத்துள்ள செடிகள்
இப்போதெல்லாம் திருமண விழாக்கள், வேறு சில விற்பனை நிறுவனங்கள் கூட அங்கு நாம் செல்லும் போது மரக்கன்றுகளை இலவசமாக தருகிறார்கள். இப்போது இப்படி மரக்கன்றுகளை வழங்குவது முக்கிய சடங்காகவே மாறி விட்டது. இப்படி பெரிய அளவிலான விற்பனை மையங்களுக்கும், விழாக்களுக்கும் தேவைப்படும் மரக்கன்றுகளை சில நர்சரிகளில் இருந்து தான் பெறுகிறார்கள். எதிர்காலத்தில் இதுபோன்ற மரக்கன்றுகள் அதிகம் தேவைப்படும். எனவே மரக்கன்றுகளை ஆயிரக்கணக்கில் உருவாக்குவது எப்படி என்று இங்கு பார்க்கலாம். அதற்கு முன் கடந்த பதிவின் தொடர்ச்சியாக பொது இடங்களில் வைக்கப்படும் மரக்கன்றுகளை பாதுகாக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.

வீட்டுத் தோட்டத்தில் நட்டு வளர்க்கும் மரக்கன்றுகள் பெரும்பாலும் காம்பவுண்ட் சுவருக்குள் வளர்க்கப்படுவதால் தொல்லைகள் இல்லை. ஆனால் பொது இடங்களான பூங்காக்கள், சாலை ஓரங்களில் வளரும் மரங்களை ஆடு, மாடுகள் தின்று விட வாய்ப்புண்டு. இதனால் இது போன்ற இடங்களில் வளர்க்கும் மரங்களை சுற்றி செங்கலை வைத்து சுவர் எடுப்பது பாதுகாப்பானது. ஆனால் இது போல் செங்கல் சுவர் எடுக்க அதிக செலவாகும். சிலர் இந்த செங்கல்லையும் கூட எடுத்து போய் விடுவார்கள். எனவே இதற்கு பதிலாக மெல்லிய கம்பி கொண்டு வலை போன்ற அமைப்பை செய்து வைக்கலாம். டயமண்ட் மெஸ் எனப்படும் இந்த வலைகள் பெரிய செலவு ஆகாது. 4 சவுக்கு கம்புகளை நட்டு அதைச்சுற்றி இந்த வலையை சுற்றி விடலாம்.

நட்ட மரங்களை பராமரிக்கும் முறை
வீட்டு தோட்டங்களில் வளரும் பழ மரங்களை அவ்வப்போது தேவையில்லாத பட்டுப்போன இலை, காம்புகளை கழித்து வருவது நல்லது. இதனால் மரங்கள் அழகாக தோற்றமளிக்கும். உதிர்ந்த இலைகளை சேர்த்து உரமும் தயாரிக்கலாம். வீட்டின் முகப்பில் இருக்கும் மரங்கள் வளரும் போதே நமது கற்பனைக்கு தகுந்தபடி இழுத்துக்கட்டியும், வளைத்தும், நிமிர்த்தியும் வேண்டிய வண்ணம் அழகுபடுத்த முடியும். 

பாட்டில் பிரஷ் என்று ஒரு மரம் உண்டு. வீட்டு தோட்டத்தில் இவற்றை வளர்க்கும் போது தோட்டத்தில் 5 அடி நீளத்திலும் 3 அடி அகலத்திலும் சிறிய செயற்கை நீர் நிலை போல் உருவாக்கி அதற்கருகில் இந்த மரங்கள் இருக்குமாறு செய்தால், மிக அழகாக வளைந்து நீரை தொடும் இவற்றின் கிளைகள் மனதுக்கு ரம்மியமாக இருக்கும்.
பழமரங்களையும், அழகு மரங்களையும், நிழல் தரும் மரங்களையும் வளர்ப்பதற்கு நமது நாட்டில் தனித்தனியே இடங்களை ஒதுக்குவது அவசியம். இதற்கு அரசாங்கம் தனியே திட்டம் ஒதுக்க வேண்டும். 

இப்படி ஒதுக்கப்படும் இடங்களில் மாலை நேரத்தில் ஓய்வு பெற்றவர்கள் பொழுதை கழிக்க பயன்படுத்தலாம். இந்த இடங்களில் நல்ல காற்று கிடைப்பதால் உடலுக்கு நல்லது. குறிப்பாக பள்ளிக்கூடங்களில், மருத்துவமனைகளில் இது போன்று பலவகை மரங்கள் கலந்த விரிந்து பரந்த தோட்டத்தை உருவாக்கி வைக்கலாம். இந்த தோட்டங்களில் வந்து பார்க்கும் மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் மரம், செடி, கொடிகளின் மீது ஆர்வம் ஏற்படும். மருத்துவமனைகளில் நடும் போது நோயாளிகளுக்கு நல்ல தூய்மையான காற்று கிடைக்கும்.

ஆயிரக்கணக்கில் மரக்கன்றுகள் உருவாக்க
நாற்றங்கால்
தேர்வு செய்யப்படும் மண் நல்ல வளமுடன் இருக்க வேண்டும். உங்களது நிலத்தில் என்ன வகையான சத்துக்கள் இருக்கிறது என்பதை கண்டறிய அருகில் உள்ள விவசாய அலுவலகத்தில் சென்று மண் மாதிரியை கொடுத்து பரிசோதனை செய்து மண்ணில் உள்ள சத்துக்களை எல்லாம் கண்டறிந்து கொள்ளலாம். இதனால் எந்த சத்துக்குறைபாடாக இருக்கிறது, எது அதிகம் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப உரங்களை இட்டு மண்ணின் வளத்தை நடுநிலைப்படுத்திக் கொள்ளலாம். செடிகளை உண்டாக்க தேர்வு செய்யப்படும் இடமானது களிமண் நிலமாக இருக்கக்கூடாது. அது போல் கடுமையான வெயில் இருக்கும் பட்சத்தில் நாற்றங்கால் அமைக்கும் போது தற்போது சந்தையில் விற்பனை செய்யப்படும் வெயில்தடுப்பு வலைகளை பயன்படுத்தலாம்.
 
எரு போடும் விதம்
தேர்வு செய்யப்பட்ட இடத்தை நன்றாக மண்வெட்டி கொண்டு கொத்தி விட வேண்டும். இப்படி கொத்தப்பட்ட நிலத்தில் சாணம், தழைஉரம் கலந்த எருவை இட வேண்டும். இதனால் அங்கு முளைக்க வைக்கப்படும் கன்றுகளை பிடுங்கும் போது பெரிய அளவுக்கு செடிகளுக்கு அதிர்ச்சி ஏற்படாது. கடினமான மண்ணில் முளைத்திருக்கும் கன்றுகளை பிடுங்கும் போது அந்த செடிகளுக்கு கடுமையான அதிர்ச்சி ஏற்படும். செடிகள் உண்டாக்குவதற்கு முதலில் பாத்திகளை உருவாக்க வேண்டும். இந்த பாத்திகள் என்பது வரிசையான ஒரு மண்குவியல் அமைப்பு என்று வைத்துக் கொள்ளலாம். இந்த பாத்திகள் கிழக்கு மேற்காக 25 அடிக்கு 5 அடி அகலமாக இருக்கலாம். அதில் 6 அங்குலத்திற்கு ஒரு விதை என்ற கணக்கில் ஏறக்குறைய 500 கன்றுகளை உருவாக்கலாம்.
 

விதை போடும் விதம்
ஆறு அங்குலத்திற்கு ஒன்றாக விதை ஊன்றி மண்ணால் மூடவேண்டும். மேல் உரை கடினமாக உள்ள விதைகளை சாணக்கரைசலில் ஊற வைத்து போடுவது நல்லது. சில விதைகளை வெயிலில் வைத்து சூடாக உள்ள தண்ணீரில் சிறிது நேரம் போட்டு வைத்து பிறகு விதைக்கலாம். விதையிட்ட பின், தினமும் காலையில் நீர் விட வேண்டும். நடுப்பகலில் செடிகளில் ஒளிச்சேர்க்கை நடப்பதால் மாலைக்காலத்தை விட காலையில் நீர் விடுவதும் நல்லது.
களை எடுக்கும் விதம்
புல் பூண்டு இல்லாமல் அவ்வப்போது களைகளை எடுக்க வேண்டும். களை பிடுங்காது, நீர்விடுவதில் கவனம் செலுத்தினால் கன்றுகளை காட்டிலும் களைகள் மண்டிவிடும். பருவமழைக்கு பிறகு விதை போடுவது ஏற்ற காலமாகும்.

 
நாற்று நடும் விதம்
நாற்றுக்களை பிடுங்கி பாலீதின் கவரில் மாற்றும் போது அல்லது வேறு இடத்தில் கன்றுகளை நடும் போது, செடிக்கன்றில் வேரில் மண் இருக்குமாறு எடுக்க வேண்டும். இப்படி ஒரு பாத்தியில் இருந்து எடுக்கப்பட்ட கன்றை வேறு பாத்திக்கு மாற்றி வெயில் காலம் முடியும் வரை போதிய அளவு தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டும். மழைக்காலத்தில் இதே பாத்தியில் வளர விட்டு விட்டு பிறகு மற்றொரு பாத்திக்கு மாற்றி வளர்க்க வேண்டும்.

இப்போது கன்று ஒரளவு வளர்ந்திருக்கும் என்பதால் மூன்றடிக்கு ஒரு கன்றாக வேறொரு பாத்தியில் நட வேண்டும். இரண்டு முறை பிடுங்கி நடுவதால் கன்றுக்கு அதிர்ச்சி ஏற்பட்டாலும் அது சமாளிக்க பழகி விடும். இதற்கடுத்து இந்த பாத்தியிலிருந்து எடுத்து பாலீதின் கவரில் போட்டு விற்பனைக்கு அனுப்பலாம்.  கன்றுகளை பிடுங்கி நிலத்தில் நடும் முன் கவரில் இருந்தோ, பாத்திகளில் இருந்து எடுக்கும் போதோ நீர் விட்டு அறுந்து போகாமல் சிறிது மண்ணுடன் எடுக்க வேண்டும் என்பது முக்கியமானது.
 
பனியில் இருந்து பாதுகாப்பு
கன்றுகளை சிறிது மூடி வைப்பதாலும், நீர் விடுவதாலும், மண்ணைக்கிளறி விடுவதாலும் மூடுபனியின் கொடுமையிலிருந்து செடிக்கன்றுகளை பாதுகாக்கலாம். இப்படி வளர்த்து பாதுகாத்து எடுக்கப்படும் கன்றுகள் நட்ட முதல் ஆண்டிலேயே நன்றாக வேர் விட்டு கிளைத்து விடும்.

அடுத்த பதிவில், பெருங்சாலைகளுக்கு ஏற்ற மரங்கள் எவை என்று பார்க்கலாம்.

மண்புழு உங்களுக்கு தரும் உரமான வருமானம் !

2 கருத்துகள்


உலகத்தின் குப்பைக்கிடங்கு எது தெரியுமா? இந்தியா என்று தாரளமாக சொல்லலாம். காரணம், இங்கிலாந்து நாட்டு மருத்துவமனைகள் பயன்படுத்திய ஊசிகளும், மருந்துகளும் தூக்கி எறியப்பட்டு அது கப்பல்களில் தூத்தூக்குடி துறைமுகத்திற்கு வந்து இறங்கினாலும் கேட்பாரில்லை. பயன்படுத்தியதை எல்லாம் நமது வீட்டில் இருந்து ரோட்டில் தூக்கி எறிந்து விட்டு வீட்டில் மட்டும் சுத்தம் பார்க்கும் நம்மவர்களை எண்ணியும் நொந்து கொள்ள தான் வேண்டும். 

இந்திய நகரங்கள் பெரும்பாலும் அழுக்கு மற்றும் குப்பைகளால் நிரம்பி வழிவதை பார்த்து தான் மேற்கத்திய நாடுகள் ' இவர்கள் எதையும் தாங்குவார்கள்" என்ற நினைப்பில் தங்கள் நாட்டு குப்பைகளை எல்லாம் கூட இந்தியாவிற்கு அனுப்பி வைக்கிறார்கள் போல!
இனி மேலாவது வீட்டில் நாம் வீணாக தூக்கி எறியும் மக்கும் குப்பைகளை வீட்டிலேயே உரமாக மாற்ற முயலுவோம். இந்த உரத்தை கொண்டு வீட்டு தோட்டம் போடலாம். அல்லது யாருக்காவது விவசாயிக்கு இலவசமாகவும் கொடுக்கலாம். நகரங்களை போல் கிராமங்களும் தற்போது குப்பையை கண்டு கொள்ளாத போக்கு காணப்படுகிறது. கிராமத்து இளைஞர்கள் ஒன்று சேர்ந்தால் கிராமத்தில் கிடைக்கும் மக்கும் குப்பைகளை எல்லாம் ஒன்று சேர்த்து மண்புழு உரமாக மாற்றி பெரிய தொழிலாகவே செய்யலாம்.

தாய்ப்பால்
 மண்ணுக்கு தாய்ப்பால் போல் இருப்பது இயற்கை உரம் மட்டுமே. எனவே அதிக அளவில் ரசாயன உரங்களை பயன்படுத்துவதை விட இயற்கையில் கிடைக்கும் தொழுஎரு, தழை எரு ஆகியவற்றை பயன்படுத்துவது நிலத்திற்கும், பயிர்களுக்கும் ஏற்றது. இந்த தொழு மற்றுமு தழை எருவிற்கு ஒப்பாக கருதப்படும் மண்புழு உரத்தை நாமே தயாரித்து பயிருக்கு இடலாம்.
வேளாண்மை தொடங்கிய காலம் முதலே மண்புழுவை விவசாயிகளின் நண்பன் எனவும், மண்ணின் வளத்தை திரும்ப நிலைநிறுத்தும் திறன் படைத்தது என்றும் சொல்வதுண்டு. 

சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய குப்பை கூளங்களை எல்லாம் மண்புழுக்களை பயன்படுத்தி கம்போஸ்ட் உரமாக மாற்றி விட முடியும். இந்த வகையில் தோட்டத்தில் கிடைக்கும் இலைதழைகள், காகிதங்கள் உள்பட மக்கும் அனைத்து இயற்கை கழிவுகளையும் மண்புழுவைக் கொண்டு கம்போஸ்ட் உரமாக தயாரிக்கலாம். மண்புழு உரம் தயாரிக்க சில வகை மண்புழு இனங்கள் பயனுள்ளவையாக இருக்கின்றன.
மண்புழு தேர்வு
இந்த வகையில் மண்புழு உரம் தயாரிக்க தேர்வு செய்யப்படும் மண்புழுவானது, அங்ககப்பொருட்கள் என்னும் இயற்கை கழிவுகளை சாப்பிடும் திறன், விரைவான வளர்ச்சி, குறுகிய காலத்தில் இனப்பெருக்கம் செய்யும் திறன் ஆகிய குணங்களை கொண்டதாக இருக்க வேண்டும். இந்த குணங்களை எய்சீனியா பிப்டியா மற்றும் யூடிரலஸ்யூஜிசினே ஆகிய இரண்டு வகை இனங்களை சேர்ந்த மண்புழுக்கள் கொண்டுள்ளன. இவற்றை கொண்டு குழி முறையில் மண்புழு உரத்தை தயாரிக்கலாம்.
குழிமுறை
குழிமுறையில் மண்புழு எரு தயார் செய்ய வீட்டு புழக்கடை அல்லது தோட்டத்தில் சமன் செய்யப்பட்ட நிலத்தை தேர்வு செய்ய வேண்டும். இந்த இடம் மழைநீர் தேங்காத, சூரிய ஒளிபடாத நிழல் பகுதியாக இருக்க வேண்டும். இந்த இடத்தில், 180 செமீ நீளம், 90 செமீ அகலம், 30 செமீ ஆழம் உள்ள குழியை தயார் செய்ய வேண்டும். குழிகளில் எறும்பு மற்றும் கரையான் பிரச்சினையை தவிர்க்க ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி லிட்டர் குளோர்பைரியாஸ் பூச்சிக் கொல்லி மருந்தை கலந்து தெளிக்க வேண்டும். 

மருந்து தெளித்து பதினைந்து தினங்களுக்குப் பிறகு எரு படுக்கைகள் அமைக்க வேண்டும். எரு படுக்கைகளுக்கு தேவையான சாணத்தை 15நாட்கள் நிழலில் உலர வைத்து தூள் செய்து கொள்ள வேண்டும். சேகரித்த இயற்கை பொருட்களான இலை, தழைகள் போன்றவற்றை தினசரி கிளறிவிட்டு 15 நாட்கள் ஈர நிலையில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், குப்பைகள் மக்கும் போது ஏற்படும் வெப்பம் குறைந்து குப்பை பதப்படும்.
எறும்புகளை தடுக்க
தயார் செய்த எருக்குழியின் அடிப்பாகம் சமமாக இருக்குமாறு மணலைப் பரப்பி அதன் மீது பதப்படுத்தப்பட்ட குப்பை 10 செமீ உயரத்திற்கு பரப்பி அதன் மேல் 3 செ.மீ உயரத்திற்கு சாணித்தூளை பரப்பவும். இதன் மேல் சாணிப்பாலுடன் புளித்த மோரைக் கலக்கி தெளிக்கவும். இவ்வாறு குப்பை சாணம், சாணிப்பால் என குழி நிறையும் அளவிற்கு எருப்படுக்கை தயார் செய்து கொள்ள வேண்டும். 

பின் கோணிச் சாக்கினால் மூடி 15 நாட்களுக்கு தினமும் தண்ணீர் தெளிக்கவும். சுமார் கால்கிலோ வெல்லத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து எருப்படுக்கையில் தெளிக்கவும். பின்பு சுமார் ஆயிரம் மண்புழுக்களை படுக்கையின் மீது பரவலாக விட்டு குழியினை ஈரச்சாக்கு அல்லது வைக்கோல் கொண்டு மூடவும். குழியைச் சுற்றிலும் எறும்புகள் போகாதவாறு லிண்டேன் மருந்தினை தூவவும்.
அறுவடை
இப்படி அமைக்கப்படும் எருப்படுக்கை காய்ந்து போகாதபடி, அவ்வப்போது தண்ணீர் தெளித்து ஈரப்பதம் 40 முதல் 50 சதம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். இவ்வாறு பராமரித்து வரும் நிலையில் சுமார் 35 முதல் 45 நாட்களில் மண்புழு எருவானது குருணைகள் போல் காணப்படும். கழிவுகள் முழுவதும் எருவான பின்னர் மூன்று நாட்களுக்கு தண்ணீர் தெளிப்பதை நிறுத்தி விட வேண்டும். 

இவ்வாறு செய்தால் மேல் அடுக்குகளில் உள்ள மண்புழுக்கள் கீழே சென்று விடும். அப்போது, படுக்கையின் மேல் உள்ள எருவினை சேகரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படி சேகரிக்கப்பட்ட எருவினை 3 மி.மீ அளவுள்ள சல்லடையில் சலித்து மூடையில் கட்டி வைக்கலாம். எருக்குழியில் அடியில் தங்கும் மண்புழுக்களை அப்படியே விட்டு பிறகு புது எருக்குழிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
சத்துக்கள்
மண்புழு எருவில் சராசரியாக 2.14 சதம் தழைச்சத்தும், 3.44 சதம் மணிச்சத்தும், 1.01 சதம் சாம்பல் சத்தும் உள்ளது. இதைத் தவிர அதிக எண்ணிக்கையில் நுண்ணுயிர் சோடியம், தாமிரம், இரும்பு, துத்தநாகம், கந்தகம், கால்சியம் மற்றும் மக்னீசிய்ம ஆகியவை செறிந்த ஊட்டச்சத்துக்களும் உள்ளன. இந்த இயற்கை உரத்தை பயிருக்கு இடும் போது பயிரின் விளைச்சல் அதிகரிக்கிறது. இயற்கையான உரத்தால் விளைவிக்கப்பட்ட தரமான விளைபொருள் கிடைக்கிறது.
உங்கள் வீட்டில் ஒரு 15 மண் தொட்டிகளை வாங்கி விதை போட்டு தக்காளி, கத்தரிக்காய், வெண்டை என்று செடிகளை நட்டு அவற்றுக்கு இந்த மண்புழு உரத்தை போட்டு பாருங்கள். பிறகென்ன....ஆர்கானிக் என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாய்களை கொட்டி அழகுபடுத்தப்பட்ட கடைகளில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள் உங்கள் வீட்டிலேயே தயார். மணமும், குணமும் மிக்க குழம்பு, கூட்டுக்களுக்கு மண்புழுக்கள் கியாரண்டி.

உங்கள் வீட்டிலேயே இலவச கியாஸ் மற்றும் மின்சாரம் !!!

4 கருத்துகள்

தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் எல்.பி.ஜி என்னும் சமையல் எரிவாயுவின் பற்றாக்குறை இருக்கிறது.விலை உயர்ந்து கொண்டே போவதும் நேர்கிறது. இந்த நிலையில் மாற்று எரிபொருளை தேடி வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது. இயற்கையில் பூமியில் கிடைக்கும் இந்த எரிவாயுவும் இன்னும் சில கால அளவுக்கு மேல் கிடைக்க போவதில்லை. இதனால் வருங்காலத்தில், எதையெல்லாம் எரிபொருளாக பயன்படுத்தலாம் என்பது பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
 
அதே வேளையில் உயிர்க்கழிவுகள் என்று கூறப்படும் மனிதன் வெளியேற்றும் மலஜலம், காய்கறி கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், விவசாய கழிவுகள் போன்ற அழுகிவிடும் கழிவுகளிலிருந்து மின்சாரத்தையும், எரிவாயுவையும் பெற முடியும் என்று பல காலங்களுக்கு முன்பே கண்டறியப்பட்டுள்ளது. இந்த கழிவுகளிலிருந்து மின்சாரமும், எரிவாயுவும் தயாரிக்க உருவாக்கப்படும் கட்டமைப்புக்கு அரசு மானியமும் வழங்குகிறது. 

ஆனால் இதனை பயன்படுத்திக் கொள்பவர்கள் தான் குறைவு என்பது தான் துரதிர்ஷ்டம். கீழ்வரும் பயோகேஸ் என்ற மனித மலக்கழிவிலிருந்தும், வேறுபல உயிர்க்கழிவுகளிலிருந்தும் எரிவாயுவையும், மின்சாரத்தையும் எடுக்கும் திட்டம் முடுக்கிவிடப்பட்டால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் எரிவாயு பற்றாக்குறை தீரும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
 
பயோகேஸ்
இது போன்ற உயிர்க்கழிவுகளிலிருந்து மின்சாரமும், எரிவாயுவும் தயாரிக்கும் முறை குறித்து தமிழ்நாடு அரசின் மரபுசாரா எரிசக்தி முகமையின் முகவரான மனோகரன் விளக்குகிறார். " மனிதனின் மலஜலம் உள்பட மடிந்து போன அனைத்து உயிர் பொருள்களிலிருந்தும் எளிதாக எரிவாயுவை பெற முடியும். இப்படி பெறப்படும் எரிவாயுவை பயோகேஸ் என்கிறோம். 

தற்போது நமக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் எல்.பி.ஜி சமையல் சிலிண்டர் வாயு, பெட்ரோல், டீசல் உள்பட பூமியில் இருந்து கிடைக்கும் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு தான் கிடைக்கும். இவை கிடைக்காமல் போகும் நிலையில் நாம் அடுப்பு எரிக்கவும், வாகனத்தை ஓட்டவும் என்ன செய்யப்போகிறோம் என்பது தான் இப்போது உள்ள கேள்வி. விஞ்ஞானத்தில் முன்னேறிய நாடுகள் பலவும் இதனை கருத்தில் கொண்டு தண்ணீரில் கூட கார் ஓட்டலாமா என்று ஆய்வு செய்து வருகிறார்கள்.
 
ஆனால் நம்மை போல் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாட்டில் அதிக அளவு கிடைக்கும் மூலப்பொருளை வைத்து முதலில் சமையல் உள்பட அதிமுக்கியமான தேவைக்கு எரிவாயுவையும், மின்சாரத்தையும் பெறுவதில் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். இதற்காக கண்டுபிடிக்கப்பட்டது தான் மலத்திலிருந்தும், உயிர்க்கழிவுகளில் இருந்தும் எரிவாயுவை பெறும் "பயோகேஸ்" அமைப்பு. இந்த பயோகேஸ் அமைப்பு மூலம் மின்சாரத்தையும் பெற முடியும். எரிவாயுவையும் பெற முடியும் என்பது தான் சிறப்பு.
 
எப்படி உருவாகிறது?
பொதுவாக மனித மற்றும் விவசாயகழிவுகள் நமக்கு எளிதாக கிடைக்கின்றன. இந்த கழிவுகள் அனைத்தும் எளிதில் மக்கிவிடக்கூடியது. இயற்கையில் இந்த கழிவுகள் மக்கும் போது ஒரு ரசாயன மாற்றம் நடக்கிறது. மலமாக இருந்தாலும், வேறு தாவர இலை,தழை, இறைச்சி உள்பட எந்த உயிர்க்கழிவாக இருந்தாலும், அது பூமியில் விழும் போது மக்கி அழுக தொடங்குகிறது. இந்த அழுகுதல் என்பது தான் ரசாயன மாற்றம்.

அதாவது இந்த கழிவுகளில் கண்ணுக்கு தெரியாத உயிரினமாக பாக்டீரியாக்கள் என்று நுண்ணுயிரகள் பரவி அவற்றை தின்று ஜீரணிக்க முயல்கின்றன. அப்போது இந்த கழிவுகளில் இருக்கும் கார்போஹைட்ரேட், கொழுப்புகள், புரதங்கள் ஆகிய பொருட்கள் வெப்பத்தினால் உலர்ந்து போகின்றன. அப்போது இவற்றிலிருந்து அசிட்டிக் அமிலம், புரோபியனிக் அமிலம், மற்றும் பிட்யூட்ரிக் அமிலம் என்ற ரசாயனங்கள் உருவாகின்றன.
 
இந்த மூன்று அமிலங்களும் கடைசியில் மீத்தேன் என்ற வாயுவாக மாறி விடுகின்றன. இந்த மீத்தேன் வாயு நன்றாக எரியும் தன்மை கொண்டது. இந்த வாயு மற்ற எரிவாயுக்களை விட மிகவும் வெப்பத்துடன் எரியும் தன்மை கொண்டது என்பதால் சமையல் உள்பட அனைத்து எரிக்கும் தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படி கழிவுகளை ஒரு இடத்தில் சேர்த்து அதிலிருந்து மீத்தேன் வாயுவை பெறுவது தான் "பயோகேஸ்" பிளாண்ட் என்ற எரிவாயுவை பெறும் கலன் அமைப்பு. இந்த எரிவாயு கலன்களை பெறும் அமைப்பை தான் நாங்கள் உருவாக்கி தருகிறோம்.
எரிவாயு கலன் அமைப்பு
 
இந்த எரிவாயு கலன் என்பது, குறிப்பிட்ட விதிமுறைகளின் படி பூமிக்கு அடியில் அமைக்கிறோம். ஏறக்குறைய இது 15 கியூபிக் மீட்டர் விட்டத்தில் சிறிய கிணறு போன்ற அமைப்பில் இது இருக்கும். நாம் எந்த பொருளிலிருந்து எரிவாயுவை தயாரிக்க நினைக்கிறோமோ அந்த கழிவுகளை இந்த கிணறு போன்ற அமைப்பில் இடவேண்டும். 

முழுவதும் காற்று புகாமல் மூடப்பட்டிருக்கும் இந்த அமைப்பினுள் இடப்படும் கழிவுகள் நொதித்தல் முறையில் மேலே சொன்ன பாக்டீரியாக்களால் அழுக வைக்கப்பட்டு அது கடைசியில் மீத்தேன் வாயுவாக உருவாகி இந்த கலனின் மேல்புறத்தை நோக்கி வந்து தேங்கும். பிறகு அங்கிருந்து குழாய்கள் மூலம் சமையலறைக்கு கொண்டு செல்லப்படும்.
 
மனித கழிவில் இருந்து உருவானது என்பதால், இதில் நாற்றம் இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கும். ஆனால் இந்த வாயுவை பற்ற வைப்பதற்காக திறக்கும் போது எந்த நாற்றமும் இருக்காது என்பது தான் உண்மை. குறைந்தபட்சம் 15 நபர்கள் இருக்கும் வீட்டில் இது போன்ற எரிவாயு கலன்களை அமைத்து வீட்டிற்கு தேவையான எரிவாயுவை பெறமுடியும். ஏன், 15 நபர்கள் வரை இருக்கும் வீட்டில் தான் இதை அமைக்க முடியும் என்று சொல்கிறோம் என்றால், எரிவாயு உருவாக தேவைப்படும் போதுமான மனிதகழிவை குறைந்தபட்சம் 15 நபர்கள் இருந்தால் தான் பெறமுடியும்.
எங்கெல்லாம் அமைக்க முடியும்?
 
அதாவது 15 நபர்கள் வசிக்கும் அல்லது தொடர்ந்து புழங்கும் எந்த இடத்திலும் பயோகேஸ் எரிவாயு கலன்களை அமைக்க முடியும். 15 நபர்கள் இருக்கும் இடத்தில் அமைக்கப்படும் ஒரு கலனிலிருந்து தற்போது நாம் பயன்படுத்தும் வீட்டு எரிவாயு எல்.பி.ஜி சிலிண்டர் அளவு கேஸை பெற முடியும். 

இது போன்ற இடங்கள் என்று எடுத்துக் கொண்டால், தியேட்டர்கள், தொழிற்சாலைகள், கேண்டீன்கள், கல்லூரி விடுதிகள், பேருந்து நிலையங்கள், அபார்ட்மெண்ட்கள் போன்ற அதிகம் மக்கள் பயன்படுத்தும் இடங்களில் இருக்கும் செப்டிக் டேங்குகளிலிருந்து எரிவாயுவை 24 மணி நேரமும் பெறும் வகையில் பயோகேஸ் கலன்களை அமைக்க முடியும். தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக மதுரையில் இருக்கும் தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பெரிய அளவிலான 3 பயோகேஸ் கலன்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இங்கு அமைக்கப்படும் எரிவாயு கலனிலிருந்து எந்த செலவும் இல்லாமல் 100 ஆண்டுகள் வரை சமைக்க மற்றும் வேறு தேவைகளுக்கான எரிவாயுவை பெற முடியும்.
 
இந்த செப்டிக் டேங்கிலிருந்து பெறப்படும் மீத்தேன் எரிவாயுவின் சிறப்பம்சம் என்னவென்றால், இது மிகவும் அழுத்தம் குறைந்த வாயு என்பதால் எல்.பி.ஜி வாயுவைப் போல் அபாயகரமானதோ, வெடிக்க கூடியதோ அல்ல. மேலும் இந்த எரிவாயு கலனிலிருந்து எடுக்கப்பட்ட பிறகு இந்த கலனில் தேங்கும் தண்ணீர் அதிக அளவு சத்துக்கள் நிரம்பியதாக இருப்பதால் அதனை விவசாயத்திற்கும் பயன்படுத்தலாம். மேலும் இந்த வாயுவை பயன்படுத்தி ஜெனரேட்டரை இயக்கி மின்சாரமும் தயாரிக்க முடியும். இந்த பயோகேஸ் கலன்களை அமைக்க அரசு சார்பில் 5 ஆயிரம் முதல் 1லட்சத்து 50 ஆயிரம் வரை மானியமாகவும் தரப்படுகிறது. 

எனவே, தமிழக மாவட்டங்களில் உள்ள இது தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் உடனே பயோகேஸ் கலன்களை அமைத்து எரிவாயுவை பெற்றோ, மின்சாரம் தயாரித்தோ செலவை மிச்சப்படுத்த முன்வந்தால் மிகப்பெரிய அளவுக்கு தங்களது எரிவாயு மற்றும் மின்சார செலவை குறைக்கலாம்" என்கிறார் இவர். இவரை தொடர்பு கொள்ள 94431 86572 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மரங்களை எப்படி நடுவது எங்கு நடுவது- தொடர் 2

5 கருத்துகள்மரம் நடுவதற்கு மூன்று நான்கு தினங்களுக்கு முன்கூட்டியே இடத்தை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் குழி தோண்ட வேண்டும். குழிகள் நெருக்கமாக இருக்க கூடாது. பல மரங்களை ஒரேயிடத்தில் நெருக்கி வளர்ப்பது கூடாது. கன்றுகள் வளர்ந்து மரமாகும் போது அவற்றின் பருமனை மனதில் வைத்துக் கொண்டு குழி தோண்ட வேண்டும். குட்டையான மரங்களாக இருந்தால் 15 அடிக்கு ஒன்றாகவும், பெருமரங்களை 30 அடிக்கு ஒன்றாகவும் நடலாம். குழிகளை நான்கடி சதுரமாகவும், ஆழமாகவும் தோண்ட வேண்டும்.

பொதுவாக, மரங்களை நட மார்ச் மாதவாக்கில் குழிகளை தோண்டி ஏப்ரல் மே மாதங்கள் வரை குழியை காய போட்டு வைக்க வேண்டும். ஜுன் மாதத்தில் நல்ல எருவையும், மண்ணையும் ஐந்துக்கு ஒன்றாக கலந்து தரை மட்டம் வரை குழிகளை நிரப்ப வேண்டும். புது எருவிற்கு கரையான்கள் வந்து விடும். எனவே பழைய உரம் தான் நல்லது. குழியில் தோண்டிய மண், சுண்ணாம்பு சத்து நிறைந்ததாக இருந்தால் அதை அப்புறப்படுத்தி வேறு நல்ல மண்ணைக் கொட்ட வேண்டும். இரண்டு தடவை நல்ல மழை பெய்த பின்பு குழி மண் தானே அழுந்தி விடும். அப்போது குழிகளில் மரக்கன்றுகளை நட்டால் அவை நன்கு வளரும்.

செழித்து வளர
நீர்ப்பாசன வசதியுள்ள இடங்களில் கன்றுகளை பிப்ரவரி மாதத்தில் நடுவது நல்லது. நீர் பாயும் வசதியுள்ளாத இடங்களில் ஜுலை மாதக்கடைசியில் மரக்கன்றுகளை நடலாம். சிறிய தொட்டிகளில் இருக்கும் மரக்கன்றுகளை வாங்கி வந்தால், தொட்டியிலிருந்து கன்றுகளை பிடுங்கும் போது வேரைச்சுற்றியுள்ள மண்ணை கலைக்கக்கூடாது. ஒடிந்து போன கிளைப்பகுதிகளையும், அறுந்து போன வேர்ப்பகுதிகளையும் நீக்கி விட வேண்டும். கன்று நட வேண்டிய குழியில் முதலில் ஓர் ஆழமான துளை போட வேண்டும். வேர்கள் மடங்காமலும், துளையில் கன்றை நடும் பொழுது வேர்ப்பகுதி முழுவதும், குழியின் தரைமட்டத்திற்குள்ளாக இருக்கும் படி வைக்க வேண்டும். மிக ஆழமாக வைப்பது கூடாது. இப்படி கவனமாக நடாவிட்டால் மரக்கன்று நசித்து போகும். அல்லது பட்டு போகும்.


ஒரே குழியில்
கன்று நட்டவுடன் நிறைய தண்ணீர விட வேண்டும். ஒன்று பட்டு போனாலும் இன்னொன்று வளர்ந்து விடும் என்ற எண்ணத்தில் ஒரே குழியில் இரண்டு மரக்கன்றுகளை நடுவது கூடாது. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு உள்பட்ட கன்றுகள் சில நாட்களில் குழியில் தரித்து விடும்.

கன்று நட்ட சில நாட்களில் குழிகளில் புல் முளைக்க தொடங்கும். இதனால் குழிகளை ஆறப்போட வேண்டியது அவசியம். இலையுதர் மரக்கன்றுகள் முதலில் தழைமரக்கன்றுகளை காட்டிலும் புல் வளர்ச்சியால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. அதிலும் பழமரங்களை குழிகளில் தோன்றும் புல் நசிக்க செய்து வளரவிடாமல் செய்துவிடும்.

களை கொத்து கொண்டு புல்லை வெட்டி எடுத்து விட வேண்டும்.
நீர் ஊற்ற
நமது நாட்டில் உள்ள மரங்கள் பெரும்பாலும் மார்ச், ஏப்ரல் ஆகிய வெப்ப நாளிலும், ஜுலை முதல் செப்டம்பர் ஆகிய தட்பவெப்ப நாளிலும் அதிகமாக வளர்கின்றன. அதனால் மார்ச் முதல் ஜுன் வரை குறைந்தது ஐந்தாறு தடவையும் இவற்றிற்கு நீர் விட வேண்டும். ஒவ்வொரு தடவையும் குழி நிறையும் அளவு நீர் ஊற்ற வேண்டும்.

மரத்தின் வேர்ப்பகுதிக்கு நீர் சென்று சேராவிட்டால் மரத்தின் வளர்ச்சி குன்றிவிடும். தண்ணீர் பாய்ச்சுவதால் மரங்கள் தழைத்து வளரும். புது இலைகள் விடும். அப்போது நீராவிக் போக்கு அதிகமாகும். எனவே, நீர்ப்பாசன வசதியுள்ளாத இடங்களில் உள்ள மரக்கன்றுகளுக்கு மார்ச் மாத்தில் அதிகமான நீர் விடாமல் இருப்பதே நல்லது. அதிகம் நீர் விடும் போது நீராவிப் போக்கு மிகுந்து கன்று பட்டு போய் விடும்.

கொழு கொம்பு
இரண்டாவது ஆண்டில் கன்றுகள் கிளைத்து மரமாக நன்கு வளரும் போது ஒரு செழிப்பான கிளையை வைத்துக் கொண்டு மற்றக்கிளைகளை வெட்டிவிட வேண்டும். அப்படி வெட்டப்பட்ட வெட்டு வாயில் உடனடியாக தார் வைத்து அடைத்து விட வேண்டும். மரம் நேராக வளர , மூங்கில் அல்லது நேரான கழியை கொண்டு கொழுகொம்பாக இணைத்து, பழந்துணியை இடையில் கொடுத்து வாழை நார் கொண்டு கட்ட வேண்டும். கம்பி கொண்டு கட்டுவதும் ஆணி அடிப்பதும் மரத்திற்கு ஊறு செய்யும். அதன் மூலமாக காளான் உட்சென்று மரத்தை அழித்து விடும். மரம் நிலைத்து நன்கு வளர்ந்த பின்னர் கொழு கொம்பை அகற்றி விட வேண்டும்.

வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கும் இளமரங்களை காப்பதில் தொல்லை இல்லை. பொது இடங்களில் உள்ள மரங்களை காப்பது தான் சிறிது கடினம்.
இது போன்ற பொது இடங்களில் வளர்க்கும் மரங்களை காப்பது பற்றி அடுத்து பதிவில் பார்க்கலாம்........தொடரும்.

மரம் வளர்த்து மனிதம் வளர்ப்போம்! தொடர் -1

1 கருத்துகள்


மதுரையிலிருந்து கொடைக்கானலுக்கு அவ்வப்போது கொடைக்கானலுக்கு மோட்டார் சைக்கிளில் பயணிப்பது வழக்கம். அப்படி செல்லும் வழியில், அதாவது பாத்திமா கல்லூரி தாண்டிய சிறிது தூரத்திலிருந்து வழியில் எல்லாம் வரிசையாக புளிய மரங்கள் நிற்கும். அதிலிருந்து அருகில் உள்ள கிராம மக்கள் புளியம்பழங்களை பறித்துக் கொண்டிருப்பது வழமையான காட்சி. இந்த மரங்களுக்கு எல்லாம் சுமார் 80 வயது இருக்கும். கண்டிப்பாக, இந்த மரங்கள் எல்லாம் இங்கு வரிசையாக சீராக தானாகவே வளர்ந்திருக்க வாய்ப்பில்லை. யாரே ஒருவர் தான் இதனை ஒரு நோக்கத்துடன் நட்டிருக்க வேண்டும் என்பதை மட்டும் அவாதனிக்க முடிந்தது.

விக்டோரிய மகாராணி 
இந்த புளிய மரங்களை எல்லாம் நட்டது யார் என்ற கேள்வி எழ, உடன் வந்த வரலாறு படித்த நண்பர் சொன்ன தகவல் ஆச்சரியப்படுத்தது. பிரிட்டிஷ் ஆளுகையின் கீழ் மதுரையும் இருந்த போது, விக்டோரிய மகாராணி இந்த மரங்களை நட உத்தரவிட்டதாக சொன்னார். உண்மையிலேயே இது ஆச்சரியமான விடயம். காரணம், இவர்களை போன்ற மகாராணிகளுக்கு எல்லாம் இது பற்றி சிந்தனை இருக்க வாய்ப்புகள் குறைவு. இந்த மரத்தில் காய்க்கும் புளியம்பழங்களை விக்டோரிய மகாராணி ருசிக்க போவதில்லை. ஆனால், அவர் நட்டு வைக்க சொன்ன மரங்கள் இன்றைக்கும் மதுரையில் இருக்கும் சில கிராம மக்களுக்கு பலனளித்துக் கொண்டிருக்கின்றன.

விக்டோரிய மகாராணி இப்படி மரங்களை நட்டு வைத்து விட்டு போனதை இன்றைய பஞ்சாயத்து தலைவர்களோ, அரசியல்வாதிகளோ தெரிந்து வைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால், காலம் காலமாக இந்த சாலைகளில் பயணிக்கும் இந்த தலைவர்களுக்கு, நாமும் இப்படி மரங்களை நடலாமே! என்ற உணர்வு ஏன் தோன்றியதில்லை என்று தான் நமக்கு தோன்றியது. 

நாட்டின் செல்வத்தை பெருக்க ஆயிரம் வழிகள் இருந்தாலும் மரங்களை போல் ஒரு வளமான செல்வம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. காரணம், இன்றைக்கு தயாரிக்கப்படும் கார்களும், பைக்குகளும் இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படி ஓடப்போகிறது என்று தெரியவில்லை. பாசில் ப்யூயல் என்று சொல்லப்படும் பெட்ரோலும், டீசலும் பூமிக்கடியில் கிடைப்பது குறிப்பிட்ட காலத்திற்கு தான். பிறகு மீண்டும் மாட்டு வண்டிக்கோ, கட்டைக்கோ திரும்ப வேண்டியது தான். ஆனால் மரங்கள் என்பவை மனிதன் இருக்கும் வரை பலன் தருபவை. 

உதாரணத்திற்கு
தென்னை மரத்தை எடுத்துக் கொள்வோம். தென்னையிலிருந்து தேங்காய் எண்ணெய், வனஸ்பதி, கயிறு,கீற்று, தேங்காய், மரம் என்று எத்தனையோ பலன்கள் கிடைக்கின்றன. இந்த அனைத்து பொருட்களுமே நமது நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பாக்குமரம் வளர்ப்பதால் பாக்கும், இரப்பர் மரத்தால் இரப்பரும், புளிய மரத்தால் புளியும், சவுக்கு மரத்தால் விறகும், இலுப்பை மரத்தால் எண்ணெயும் சோப்பும் பெறுகிறோம்.
எனவே எல்லா மரங்களுமே ஏதோ ஒரு வகையில் நமக்கு உதவுகின்றன. ஆனால் இதே மரங்களை தான் மின்சார வயர் கொண்டு போக தடங்கலாக இருக்கிறது என்பதற்காக ஒரே நொடியில் வெட்டி சாய்க்கிறது மின்சார வாரியம். இன்றைக்கு நமக்கு மின்சாரம் தயாரிக்க கிடைக்கும் நிலக்கரியும், வண்டி ஓட்ட உதவும் பெட்ரோலும் கூட இந்த மரங்கள் பூமியில் புதையுண்டு போனதால் கிடைப்பவை என்பதை கூட மறந்து விடுகிறோம். 

மழை அதிகம்
இது மட்டுமா...நாம் ஓட்டும் வாகனங்கள் வெளியிடும் கார்பன்டை ஆக்சைடு என்ற நச்சை எடுத்துக் கொண்டு பிராணவாயுவை அளிக்கின்றன. வெண்மேகங்கள் கடலிலிருந்து நீரைப்பெற்று நீராவியாக மாற்றி வைத்துக் கொண்டு கரிய மழை மேகங்களாக திரண்டு வரும் போது அதன் வேகத்தை காட்டில் இருக்கும் அடர்ந்த மரங்கள் தடுக்கும் போது தானே அங்கு காற்றின் அழுத்தம் ஏற்பட்டு மழை பொழிகிறது. இதனால் தான் மரங்கள் அடர்ந்த பகுதியில் மழை அதிகம் பொழிகிறது.

எனவே, இனியும் மரங்களை நமது சக மனிதர்களாக பாவித்து அவற்றுக்கு எந்த துன்பமும் நேராமல் பார்க்க வேண்டும். முடிந்த வரை காணும் இடங்களில் எல்லாம் மரக்கன்றுகளை நடவேண்டும். இந்த மரக்கன்றுகள் நமது சுற்றுப்புறத்தை அழகுபடுத்தும். நாம் சுவாசிக்க தூய்மையான காற்றைக் கொடுக்கும். வெயிலின் தாக்கம் தலையை தாக்கும் போது மனிதனுக்கு எரிச்சல், வேலை செய்வதில் மந்தம், கோபம், வியர்வை என்று சகலமும் ஏற்பட்டு ஆயுளை குறைத்து விடுகிறது. ஆனால் ஜில்லென்ற மரங்கள் அடர்ந்த பகுதியில் வசிக்கும் போது இவை எல்லாம் நம்மை அண்டவே அண்டாது. எனவே மரக்கன்றுகளை நாம் வசிக்கும் இடத்திலும், பணிபுரியும் இடத்திலும் நடுவோம்.

மரம் நடவேண்டிய இடங்கள்
மரங்களை பொதுப்பூங்காக்கள், சாலைகள், ரயில் நிலையங்கள், மருத்துவமனைகள், கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றை சுற்றியுள்ள இடங்கள், அரசு அலுவலகங்கள், ஆற்றின் கரை, கண்மாய், ஏரிக்கரை ஓரங்கள், ஓட்டல்கள், வங்கிகள், வீடுகள் என்று அனைத்து இடங்களிலும் நடலாம். ஆனால் இந்த இடங்களில் எந்த மாதிரியான மரங்களை நடவு செய்வது என்பதும் முக்கியம். 

உதாரணமாக ரயில் நிலையத்தில் விரிந்து பரந்த பச்சை இலைகளுடன், வண்ணவண்ண பூக்களை பூக்கும் மரங்களை நட்டால் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிக்கு மன மகிழ்ச்சி ஏற்படும். பூ மரங்களை கண்டாலே கண்களும், மனதும் குளுமையடையும். இரயில் கிராசிங்கை ஒட்டியுள்ள பகுதிகளிலும் இது போன்ற மரங்களை நடலாம். காரணம், ஒரு ரயில் அந்த பாதையை கடக்கும் வரை அந்த ரெயில் கேட்டின் முன்னால் காத்துக் கிடக்கும் மக்களுக்கு இந்த மரங்கள் குளுமையை தரும்.
ஆனால் இதே போன்ற அதிக பூ பூக்கும் மரங்களை மருத்துவமனையில் நட வேண்டுமா என்பதை அங்குள்ள மருத்துவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். காரணம், சில பூக்களின் மகரந்தங்கள் ஆஸ்துமா நோயாளிக்கு அலர்ஜி என்னும் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இப்படி வேறுபாடுகளை கண்டறிந்த மரங்களை நடவேண்டும். சென்னை நகரத்தை சிங்கார சென்னையாக மாற்ற கூவம் நதியை சுத்தப்படுத்த தி.மு.க ஆட்சி முயன்றது. ஆனால் இதற்கு மிகப்பெரிய திட்டம் எல்லாம் போட தேவையில்லை. 

கூவத்தின் இரண்டு புறங்களிலும் வலுவான மரங்களை நட்டால், கூவத்தின் நாற்றம் மரத்தின் காற்றால் பல மடங்கு குறைந்து போகும். சென்னை பசுமையாக மாறும். இது போல் தமிழ்நாட்டின் அத்தனை ஆறுகளின் கரைகளிலும் மரங்களை நடலாம். இப்படி ஆறுகளின் கரைகளில் மரங்களை நடும் போது மாலை வேளைகளில் கரை ஓரத்தில் மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும், சிறிது களைப்பாறவும் மனதுக்கு இதமான சூழல் ஏற்படும். 

இது போல் கிராமங்களில் பலன் தரும் பழங்கள் அதிகம் கொடுக்கும் மரங்களை நட்டால், காசு கொடுத்து விலை மதிப்புள்ள பழங்களை வாங்கி உண்ண முடியாத ஏழைகள் இந்த மரங்களின் பழங்களை பறித்து உண்டு மகிழ்வார்கள்.
அடுத்த அத்தியாத்தில் மரங்களை நடும் முறை மற்றும் வளர்க்கும் முறை பற்றி பார்க்கலாம்...

தமிழ்நாடு பசுமை தமிழ்நாடாக மாற `பசுமை கலாம்' திட்டம்;நடிகர் விவேக்

0 கருத்துகள்தமிழ்நாடு முழுவதும் வருகிற டிசம்பர் மாதத்துக்குள் 10 லட்சம் மரக்கன்றுகள் நடும் `பசுமை கலாம்' திட்டத்துக்கு, தமிழக அரசு இலவசமாக மரக்கன்றுகள் தரவேண்டும் என்று நடிகர் விவேக் கோரிக்கையை வைத்துள்ளார்.

`பசுமை கலாம்' திட்டம்
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், இந்தியா முழுவதும் 100 கோடி மரக்கன்றுகள் நடப்பட வேண்டுமென்று அடிக்கடி வலியுறுத்தி வருகிறார். இதைத்தொடர்ந்து நடிகர் விவேக் தன்னுடைய பெயரில் செயல்படும் நற்பணி மன்றங்களும், எக்ஸ்னோரா அமைப்பும் சேர்ந்து, தமிழ்நாட்டில் வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதிக்குள் 10 லட்சம் மரக்கன்றுகள் நட ஏற்பாடு செய்யும் என்று அறிவித்திருந்தார்.

இந்த திட்டத்துக்கு `பசுமை கலாம்' திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த திட்டத்தின் எதிரொலியாக முதல் மரக்கன்று திருச்சியில் நடப்பட்டது.

அமைச்சரிடம் கோரிக்கை மனு
தொடர்ந்து ஆங்காங்கு உள்ள பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்ற வளாகங்களில் இந்த மரக்கன்றுகளை, மாணவர்களை பயன்படுத்தி நடுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. பல தனியார் நிறுவனங்கள், தனியார் இந்த திட்டத்தில் பங்கு பெற ஆர்வத்தோடு இருக்கிறார்கள். வாகை, வேம்பு, பிளேம் ஆப் த பாரஸ்ட் போன்ற வகையான மரக்கன்றுகள் இந்த திட்டத்தின்கீழ் நடப்படுகின்றன.

இந்த நிலையில், நடிகர் விவேக் நேற்று தமிழக அரசு வனத்துறை அமைச்சர் பச்சைமால் சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை கொடுத்தார். இந்த திட்டத்தை நிறைவேற்ற மாணவர்கள், இளைஞர்கள் உள்பட ஏராளமானவர்கள் தயாராக இருக்கிறார்கள். மொத்தத்தில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான திட்டம் இருக்கிறது. வனத்துறை மூலமாக எவ்வளவு மரக்கன்றுகளை இலவசமாக தர முடியுமோ, அவ்வளவு மரக்கன்றுகளை தருவதற்கு பரிசீலிக்க வேண்டும் என்று ஒரு மனுவை கொடுத்தார். மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் பச்சைமால், இதுகுறித்து முதல்-அமைச்சரின் உத்தரவை பெற்று தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும் என்று உறுதி அளித்ததாக நடிகர் விவேக், நிருபர்களிடம் கூறினார்.

பசுமை தமிழ் நாடாக...

இந்த மரக்கன்றுகள் நடும் பணிகள் ஒருபுறம் நடப்பது மிகவும் நல்லது. தமிழ்நாடு பசுமை தமிழ்நாடாக மாற `பசுமை கலாம்' திட்டம் உதவியாக இருக்கும். இது போல, ஏழை-எளிய, குடிசை பகுதிகளில் வாழ்பவர்கள் தங்கள் வீட்டின் அருகில் முருங்கை, கரிவேப்பிலை போன்ற மரங்களை நட்டால், அவர்கள் வீட்டில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரைக்கொண்டு வளர்த்து விடலாம். அது அவர்களுக்கும் உணவுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

சற்று நடுத்தர மக்கள் தங்கள் வீட்டின் அருகில் எலுமிச்சை, பப்பாளி போன்ற வகை மரங்களையும் நடலாம். மொட்டைமாடி வைத்திருப்பவர்கள் தொட்டிகளில் கீரை, காய்கறிகள் போன்றவற்றைகூட பயிரிட முடியும். இது பற்றியெல்லாம் ஏழை-எளிய, நடுத்தர மக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த `பசுமை கலாம்' இயக்கம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நிருபர்கள், நடிகர் விவேக்கிடம் கோரிக்கை விடுத்தனர்.

நன்றி:தினத்தந்தி (1.7.2011)

நாம் அன்றாடம் பயணிக்கும் சாலைகள் எல்லாம் இப்படி இருந்தால் எவ்வளவு அழகு என்று கொஞ்சம் கற்பனை செய்வோமே!!!

காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today