இது நாவல் சீசன்: கவனமாக சாப்பிடுங்க நாவல் பழம்!

6 கருத்துகள்

நகரத்தில் இருப்பவர்களுக்கு பெரும்பாலும் நாவல் பழமரத்தை பார்த்தே பல ஆண்டுகள் ஆகியிருக்கும். கிராமங்களில்  சர்வசாதாரணமாக நாவல் மரங்களை பார்க்கலாம். சாலை ஓரங்களிலும், குளக்கரை, ஆற்றங்கரைகளில் நாவல் மரங்கள் தன்னிச்சையாக வளர்ந்திருப்பதுண்டு. நாவல் மரத்திற்கு ஆருகதம், நேரேடு, சுரபிபத்தினர் என்றும் பெயர்கள் இருக்கின்றன. ஆங்கிலத்தில் நாவல் மரத்தினை (eugenia jambos)ஜம்பலம், பிளாக் பிளம் என்று பெயர்கள் உண்டு. ஜம்பு நாவல் என்றொரு ரகமும் உண்டு. இதன் பழங்கள் இனிப்பு கலந்த துவர்ப்பாக இருக்கும். இதன் இலைகள் கால்நடைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.

இந்தியாவில் வறண்ட பகுதிகள் தவிர நாவல் மரம் அனைத்து இடங்களிலும் வளரும். இதன் இலைகள் கரும்பச்சையாக பளபளப்புடன் இருக்கும். ஜனவரி பிப்ரவரி மாதங்களில் இலைகளை உதிர்க்கும் தன்மை கொண்டது இந்த மரம். இந்த மரத்தைக் கொண்டு விவசாய கருவிகள் செய்யலாம். பெரும்பாலும் ஒட்டுச் செடிகள் மூலமும், விதைகள் மூலமும் செடிகள் உண்டாக்கப்படுகின்றன. நாவல் பழங்கள் ஜுலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் மரத்தில் பழுத்து கிடைக்கின்றன. கிராமங்களில் மரத்தில் ஏறி இதனை உதிர்த்து விற்பனைக்கு எடுத்து வருவார்கள். ஒரு மரத்திலிருந்து ஆண்டொன்றுக்கு 50 முதல் 80 கிலோ பழங்கள் கிடைக்கும்.

பழத்தின் மருத்துவபண்புகள்
நாவல் பழத்தை சாப்பிட மூளை பலமாகும். நல்ல சீரண சக்தி கிடைக்கும். குறிப்பாக பழத்தை கசாயம் போல் தயாரித்து சாப்பிடும் போது வாயுத்தொல்லை நீங்கும். மண்ணீரல் வீக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள், தொடர்ந்து பல காலங்களாக கழிச்சல் நோய் உள்ளவர்கள் நாவல் பழத்தை சாப்பிட்டு வர குணமடையலாம். பழச்சாறுடன் தேன் கலந்து குடிக்கும் போது வெயிலால் உடம்பில் ஏற்படும் அனல் குறையும். 

ஆனால் பழம் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஒத்துக் கொள்ளாது என்றும் கூறப்படுகிறது. பழம் உடலுக்கும், கண்ணுக்கும் குளிர்ச்சியை தரும். இரத்தத்தை சுத்தி செய்யும். இரத்தம் விருத்தி ஆகும். சிறுநீர்க்கழிவினைத் தூண்டுவதுடன், சிறுநீர்ச்சுருக்கை போக்கும். பழத்தை அதிகமாக உண்டால் சளி, காய்ச்சல் உண்டாக வாய்ப்புண்டு. குறிப்பாக சிறுவர்களுக்கு இந்த பழங்களை அளவுடன் உண்ண தர வேண்டும்.

சிலருக்கு இந்த பழங்களை உண்ணும் போது தொண்டைக்கட்டும் ஏற்படலாம். நாவல் பழத்தை உப்பில் போட்டு சாப்பிடுவதால் தொண்டைக்கட்டு உண்டாகாது.
பழுக்காத நாவல் காய்களை நன்றாக உலர்த்தி பொடி செய்து ஒரு தேக்கரண்டி எடுத்து மோரில் கலந்து சாப்பிட்டால் வயிற்று போக்கு குணமாகும்.

விதையின் குணங்கள்
நாவல் பழத்தை சப்பித்தின்ற பிறகு மிஞ்சும் கொட்டையை நன்றாக நிழலில் உலர்த்தி பொடி செய்து கொள்ள வேண்டும். இந்த பொடியை தினமும் 2 முதல் 4கிராம் வீதம் மூன்று வேளை தண்ணீரில் கலந்து அருந்தினால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும் என நம்பிக்கை உள்ளது. விதையை பொடித்து மாம்பருப்பு தூளுடன் சேர்த்து தர சிறுநீரை பெருக்கும். இந்த கொட்டை தூளை அதிக அளவில் உண்ண கூடாது. அது நஞ்சாகும்.

இலையின் குணம்
நாவல் கொழுந்து சாறு, மாவிலைச்சாறு ஆகிய இரண்டையும் கலந்து கடுக்காய் பொடியுடன் சேர்த்து ஆட்டுப்பாலில் கலக்கி குடித்தால், சீதக்கழிச்சல் என்ற வெப்பக்கழிச்சல் குணமடையும். நாவல் கொழுந்து, மாவிலைக் கொழுந்து ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து மை போல் அரைத்து மோரில் அல்லது தயிரில் கலக்கி சாப்பிட வயிற்று போக்கு, இரத்தத்துடன் காணப்படும் பேதி ஆகியவை குணமாகும்.

மரப்பட்டையின் குணம்
நாவல் மரம்பட்டையை சுவைத்தால் குரல் இனிமையாகும் என்று கூறுகிறார்கள். இது ஆஸ்துமா, தாகம், களைப்பு, குருதி பேதி, கீச்கீச் என்ற ஈளை இருமல் ஆகியவற்றை குணப்படுத்த நல்லது. நாக்கு, வாய், தொண்டைப்புண்களுக்கு இந்த மரத்தின் பட்டையை கொதிக்க வைத்து வாய் கொப்புளித்தால் குணம் காணலாம். மரப்பட்டையை இடித்து சலித்து எருமைத்தயிரில் கலந்து குடிக்க பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்த போக்கு கட்டுப்படும். குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம், ரத்தகழிச்சல் ஆகியவற்றுக்கு வெள்ளாட்டுபாலுடன் சேர்த்து நன்கு காய்ச்சி சங்கு அளவில் மூன்று முறை தரலாம். இந்த மரப்பட்டையின் கசாயத்தை கொண்டு புண்களை கழுவலாம். கிருமிநாசினி போல் செயல்படும்.

வேரின் குணம்
மரத்தின் வேரை ஒரு பாத்திரத்தில் ஊற வைத்து அந்த நீரை குடித்தால் சர்க்கரை வியாதிக்கு நல்லது. உடலுக்கு குளிர்ச்சியையும், ஆண்மையையும் த்ரும்.

நாவல் பழத்தில் உள்ள சத்துக்கள்
புரதம் 0.7 கிராம்
கொழுப்பு 0.3 கிராம்
மாவுப்பொருள் 0.9 கிராம்
கீழ்வருபவை எல்லாம் (மில்லி கிராம் அளவில்)
கால்சியம் 14.0
பாஸ்பரஸ் 15
இரும்பு 1.2
தயமின் 0.03
நியாசின் 0.2
வைட்டமின் சி 18
மெக்னீசியம் 35
சோடியம் 26.2
பொட்டாசியம் 55
தாமிரம் 0.23
கந்தகம் 13
குளோரின் 8
ஆக்சாலிக் அமிலம் 89
பைட்டின் பாஸ்பரஸ் 2
கோலின் 7
கரோட்டின் 48
இந்த சத்துக்கள் எல்லாம் பொதுவாக உடலில் எப்படியெல்லாம் பயன்படுகின்றன என்பது பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம். இந்த சத்துக்களை தெரிந்து கொண்டால் தான் ஒவ்வொரு பழத்திலும் இருக்கும் இந்த சத்துக்களின் அளவை வைத்து நமக்கு எந்த சத்துள்ள பழம் அதிகம் உண்ணத்தகுந்தது என்று தெரிந்து கொள்ள முடியும்.
தொடரும்..

மகளிர் சுய உதவி குழு கவனிக்க :சுற்று சூழலுக்கு உதவும் பேப்பர் கப் தயாரிப்பு தொழில்

12 கருத்துகள்தரமான பேப்பர் கப் தயாரிக்கும் எந்திரங்களை விற்பனை செய்வதுடன், அவற்றை இயக்க பயிற்சியும், விற்பனைக்கு பிந்தைய இலவச சர்வீசும் தருவதுடன் சந்தை வாய்ப்புகளையும் அடையாளப்படுத்தி தொழில்முனைவோர்களை உருவாக்கி வருகிறார் மதுரை யுனிவர்சல் பேப்பர் கப் நிறுவனத்தின் திரு.சேவியர்.

இவர் பேப்பர் கப் எந்திரங்களை விற்பனை செய்து வருவதுடன், திருமணம், கருத்தரங்குகள் உள்பட பல்வேறு விழாக்களில் நடக்கும் விருந்துகளுக்கு தேவையான பேப்பர் கப்புகள், ஐஸ்கீரிம் கப்புகள் என்று விதவிதமான காகிதத்தாலான குவளைகளை தயார் செய்து கொடுத்து வருகிறார். சுற்று சூழலை பாதுகாக்கும் இந்த தொழில் குறித்து இவர்  சொன்னது .......

" பேப்பர் கப் தயாரிப்பு என்பது இந்தியாவை பொறுத்த மட்டில் மிகசிறந்த எதிர்காலம் உள்ள தொழில். சுற்றுச்சூழல் கடுமையாக மாசுபட்டு வரும் இந்த காலகட்டத்தில் இதற்கான தேவை அதிகரித்து வருகிறது.  பிளாஸடிக் கப்புகளில் டை- ஆக்சின் என்ற ரசாயனம் கலந்திருப்பதால் இந்த நச்சுத்தன்மை இந்த கப்புகளை பயன்படுத்தும் போது மனிதர்களுக்கு தீங்கு செய்கிறது. மேலும் மண்ணில் கிடந்து மக்கிப் போகாததால், மண்ணுக்குள் மழை நீரை இறங்க விடாமல் செய்து விடுகிறது.

இதனால் பேப்பர் கப்புகள் தான் சூழலுக்கு உகந்தவை என்று கருதிய உலக சுகாதார அமைப்பு ஐக்கிய நாடுகள் சபையின் மூலமாக அனைத்து நாடுகளும் பேப்பர் கப்புகளை பயன்படுத்த ஊக்கமளிக்க வேண்டும் என்று கூறியது. இந்திய அரசும் இதனை கருத்தில் கொண்டு விழிப்புணர்வை உருவாக்கி வருகிறது. இதனடிப்படையில் நாங்கள் பேப்பர் கப் தயாரிப்பதற்கான இயந்திரங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்.

இந்தியாவை பொறுத்தமட்டில் குச்சி மிட்டாய் முதல் எலக்ட்ரானிக் எந்திரங்கள் வரை இந்தியாவை ஒரு குப்பை சந்தையாக கருதும் சீனா இந்த பேப்பர் கப் எந்திரங்களையும் இந்தியாவிற்குள் தள்ளி விட்டுக் கொண்டுள்ளது. குறிப்பாக, சீனாவில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வந்த இரண்டாம் தர இயந்திரங்களை சிலர் இந்தியாவிற்குள் இறக்குமதி செய்கின்றனர். அவற்றை பேப்பர் கப் தயாரிக்க ஆர்வமுள்ளவர்களிடம் புதிது என்று சொல்லி சிலர் விற்பனை செய்து விடுகிறார்கள். இது போன்ற இரண்டாம் தர எந்திரங்களை வாங்கி வைத்து பட்ட அவலத்தால், பேப்பர் கப் தயாரிக்கும் தொழிலையே நஷ்டமான ஒரு தொழிலாக கருதி கைவிட்டு விடுகின்றனர். இந்த நிலையை மாற்ற  நாங்கள் முழு முயற்சி எடுத்துக் கொண்டு வருகிறோம்.

இதன்படி, இந்த தொழிலை ஆர்வமுடன் செய்ய முன்வருபவர்களுக்கு 2 வித இந்திய எந்திரங்களை சப்ளை செய்கின்றோம். ஒன்று செமி ஆட்டோமெடிக்,
மற்றொன்று புல் ஆடோமடிக். இரண்டும் விலை குறைவு மற்றும் அதிக உற்பத்தியை எட்டக்கூடியவை. இதில் செமி ஆட்டோமடிக்  சிங்கிள் பேஸ் கரண்ட்டில் இயங்கக்கூடியது . இந்த எந்திரங்களை வைக்க 10 க்கு 15 அடி அறை போதுமானது.  இந்த மெஷின்களை தரமான சீனக் கம்பெனிகளிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்து கொடுக்கிறோம். தரக்கட்டுப்பாட்டு பரிசோதனை முடித்து வாடிக்கையாளரின் தொழிற்கூடத்திற்கே இந்த மெஷினை இயக்க தொழிலாளர்களுக்கு பயிற்சியும் கொடுக்கிறோம். மேலும் விற்பனைக்கு பின் முதல் 12 மாதங்களுக்கு இலவச சர்வீசும் செய்து கொடுக்கிறோம்.

பேப்பர் கப் தயாரிக்க தேவைப்படும் மூலப் பொருளான பிரேத்தியேக காகிதத்தை ஐடிசி மற்றும் சேஷசாயி நிறுவனங்கள் தான் தயாரிக்கின்றன. இந்த பேப்பர்கள் பயன்பாட்டுக்கு தக்கவாறு பல ரகங்களில் உள்ளன. நாம் எந்த வகையான கப்புகளை தயாரிக்க போகிறோமோ, அதற்கேற்ற பேப்பர்களை வாங்கி கொள்ளலாம். 
இந்த தொழிலில், எடுத்த எடுப்பில் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் கொட்டும் என்று கனவு காண கூடாது. ஆனால் தொடர்ந்து லாபம் உயரும். ஆனால் நிச்சயமான லாபமும், தொடரந்து டிமாண்டும் உள்ள தொழில் இது. தமிழ்நாடு உள்பட பல்வேறு அண்டை மாநிலங்களிலும் முக்கிய சுற்றுலா இடங்களில் பிளாஸ்டிக் கப்புகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளன. இந்த காரணத்தால் பேப்பர் கப்புகளுக்கு கிராக்கி அதிகரித்துக் கொண்டுள்ளது.

எங்கள் யூனிட்டில் மட்டும் தற்போது 15 பெண்கள் பணி செய்கிறார்கள். வறுமைக்கோட்டிற்கு கீழ் இருந்த இவர்களுக்கு பயிற்சி தந்து பணியில் அமர்த்தயிருக்கிறோம். இவர்களுக்கு தொடர்ந்து வேலை தருமளவு எங்களிடம் ஆர்டர்கள் உள்ளன. இவர்களை போன்று மகளிர் சுய உதவிக்குழுவினர் பேப்பர் எந்திரம் வாங்கி இந்த தயாரிப்பில் ஈடுபட விரும்பினால் பயிற்சி, சந்தை வாய்ப்பு, தொழிலின் பலம், பலவீனம், வங்கி கடன் பெறுவது உள்ளிட்ட விவரங்களை தெளிவாக சொல்லித் தர தயாராக உள்ளோம்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சேது சமுத்திர திட்ட தொடக்க விழா நிகழ்ச்சிக்கு மட்டும் 2 லட்சம் பேப்பர் கப்புகளை தயாரித்து அனுப்பினோம். இது போல் தற்போது பெரிய விழாக்களுக்கு ஆர்டர்கள், ஓட்டல்களுக்கு சப்ளை, ஐஸ்கீரிம் கப், ஓயின் ஷாப் கப், தயிர் கப், பாயாசம் கப் என்று பல்வேறு அளவுகளில் திட்டமிட்டு தயாரிக்கிறோம். 

இது போல் புதிய புதிய பயன்பாட்டுக்கு ஐடியா உள்ளவர்கள் இந்த தொழிலில் எளிதாக ஜெயித்து விடலாம். எங்களிடம் பயிற்சி பெற்று, ஆனால் கப்புகளை தயாரித்து விற்க முடியாதவர்களிடம் நாங்களே பேப்பர் கப்புகளை வாங்கி கொள்கிறோம். உடனுக்குடன் பணம் கொடுத்து விடுகிறோம். பேப்பர் கப்புகழுக்கு அன்றாடம் லட்ச கணக்கில் தேவை உள்ளது. சுயமாக தோழி செய்து சுதந்திரமாக இருக்க நினைக்கும் இளைஞர்கள் இந்த தொழிலில் இறங்கலாம் " என்கிறார் இவர்.

மாவட்ட தொழில் மையங்கள் மூலம் வங்கி கடன் துணையுடன் வேலையில்லா பட்டதாரிகள், பெண்கள் விண்ணப்பித்தால் 30 சதவீதம் வரை வங்கிக்கடனில் மானியம் உண்டு. அதாவது 8 லட்சத்திற்கு பேப்பர் கப் எந்திரம் வாங்கும் போது அதில் 2.40 லட்சம் மானியமாக தரப்படுகிறது. ஆக... உங்களுக்கு இந்த 2.40 லட்சம் மீதம் தான். தேசியமயமாக்கப்பட்ட இந்திய வங்கியில் பணிபுரிந்து பிறகு லண்டனில் உள்ள புகழ் பெற்ற வங்கி ஒன்றில் பணியாற்றி விட்டு இவர் தற்போது இந்த பேப்பர் கப் எந்திரங்களை விற்பனை செய்வதன் மூலம் இளைஞர்களுக்கு நல்ல ஒரு தொழில் வாய்ப்பை தருவதை பாராட்டலாம்.

மிக நல்ல விற்பனை வாய்ப்புள்ள இந்த தொழிலில் ஈடுபட திட்டமிடும், பேப்பர் கப் எந்திரங்களை வாங்கி சுற்றுச்சூழலை காக்க விரும்பும் நண்பர்கள் ஒரு மின்னஞ்சல் அனுப்பவும்.

மனதுக்கு மகிழ்ச்சி தரும் மாடித் தோட்டம் அமைக்க ஒரு நாள் பயிற்சி

6 கருத்துகள் வீட்டிலேயே ஒரு தோட்டம் அமைத்தால் அதில் கிடைக்கும் ஆனந்தம் அலாதியானது. அந்த தோட்டத்தில் இருக்கும் மிளகாய், கத்திரி, வெண்டைக்காய் செடிகள் பூப்பதும், காய்ப்பதும் மிக அழகு. மனஉளைச்சலுடன் அவதிப்படுபவர்கள் இது போன்ற தோட்டங்களில் சிறிது நேரம் செலவிட்டால் மனதுக்கு ஒரு தீர்க்கமான அமைதி கிடைக்கும் என்பது உண்மை. மண்ணில் கை பதித்து குனிந்து வியர்வை சிந்த உழைக்க தொடங்கி விட்டால் நேரம் போவதும் தெரியாது. மனதில் இருக்கும் பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் ஒரு தெளிவான முடிவும் கிடைக்கும். 

குறிப்பாக உங்கள் குழந்தைகளுக்கு இது போன்ற தோட்டங்களில் பயிற்சி கொடுக்கும் போது அவர்கள் இயற்கையை நேசிக்க தொடங்குவார்கள். இயற்கையின் படைப்புகளை வீணடிக்காமல் பாதுகாக்கும் எண்ணத்தை மனதில் விதைக்க இதுவொரு நல்ல பொழுது போக்கு.

இப்போதெல்லாம் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் ஒரு பாடத்திட்டத்தை வைத்திருக்கிறார்களாம். அதாவது, பள்ளிக்குழந்தைகளை அப்படியே போகிற போக்கில் பெரிய ஷாப்பிங் மால்களுக்கு அழைத்து சென்று ' இது தான் கத்திரிக்காய், இது தான் வெண்டைக்காய், இது தான் சுண்டைக்காய்' இதன் விலை 30, இது 20 ரூபாய்' என்று சொல்லிக் கொடுக்கிறார்களாம். என்ன கொடுமை பாருங்கள்|! 

பள்ளிப்பருவத்தில் வீடுகளில் தாய்மார்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியதை, அவர்களையே பக்கத்தில் இருக்கும் கடைகளுக்கு அனுப்பி இது போன்ற காய்கறிகளை எல்லாம் வாங்கி பழக்குவதை செய்ய வேண்டியதை பள்ளிகள் செய்யும் படி ஆகியிருக்கிறது நிலைமை. இப்படி வளரும் குழந்தைகள் என்ன செய்யும் பிற்காலத்தில்! 

வீட்டில் இவற்றை விளைவிக்க சொல்லிக் கொடுப்பதை விட்டு விட்டு கடைகளில் இருப்பதை கணக்கெடுக்க சொல்கிறார்கள். இது போன்ற பள்ளிகளில் படிக்க குழந்தைகளுக்கு கட்டணம் லட்ச ரூபாய்களில்! இவை எல்லாம் எப்படி உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன என்பதை அறியும் போது தான் ஒரு குழந்தை சமூக கட்டமைப்பின் அடித்தளத்தை புரிந்து கொண்டு பொறுப்புள்ள குழந்தையாக வளர முடியும் என்பதை கூட இன்றைய காசு பிடுங்கும் பள்ளிகள் மறந்து போகின்றன.

அவர்கள் பணம் பிடுங்கவே பள்ளிக்கூடம் நடத்துகிறார்கள். ஆனால் நீங்கள் உங்கள் குழந்தைக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தால் நாளை உங்கள் குழந்தை ஒரு நல்ல அறிவியல் பூர்வமான கண்டுபிடிப்புகளை உருவாக்கும் ஒரு மனிதனாகவும், சமூகத்தை நேசிக்க தெரிந்த, இயற்கையை பாதுகாக்க தெரிந்த ஒரு மனிதநேய மிக்கவனாகவும் மாற முடியும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், வீட்டில் மொட்டை மாடியில் சிறிய தோட்டம் அமைத்து கொள்ளுங்கள். அபார்ட்மெண்ட்சில் இருக்கும் இடங்களில் கூட அலமாரி முறையில் அமைக்கலாம். பிறகு செடிகளை நடுவது பற்றி தெரிய வேண்டும்.

இதற்கு பெரிய படிப்புகள் எல்லாம் படிக்க அவசியமில்லை. மண்ணின் தன்மையை பற்றி சிறிது தெரிந்து கொள்ள வேண்டும். கொஞ்சம் உரங்களையும், தண்ணீர் விடும் அளவு, இயற்கை பூச்சி கொல்லிகளை தெளிப்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு உங்களுக்கு உதவிடும் விதமாக மதுரையில் உள்ள ரூட்செட் பயிற்சி மையம் (ஆந்திராவின் மஞ்சுநாதேஸ்வரா அறக்கட்டளை மற்றும் கனரா வங்கி உள்பட சில நிறுவனங்களின் கூட்டமைப்பு) ஒரு நாள் மாடித் தோட்ட பயிற்சி வகுப்பை நடத்துகிறது.

ஆகஸ்ட் 21 அன்று காலை 10 மணிக்கு இந்த பயிற்சி தொடங்குகிறது. கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 0452 2690 609 என்ற எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம். அமெரிக்காவில் கிரீன் பில்டிங் என்று சொல்லி மொட்டை மாடியில் புல்தரைகளை அமைக்கிறார்கள். நாம் விவசாயம் செய்வோம்.

பாம்புகள் கடித்தால் எளிதான மருந்து இது.அரசு கவனிக்குமா ?

5 கருத்துகள்தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கி விட்டால் பாம்புக்கடியும் அதிகமாகி விடுவதுண்டு. வயலுக்கு செல்லும் விவசாயிகள் இதனால் பாதிக்கப்படுவது வழக்கம். பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக அவசர சிகிச்சைக்கு உட்படுத்ததாத நிலையில் மரணம் நிச்சயம். பொதுவாக ஆங்கில மருத்துவம் எங்கும் தீவிரமாக வியாபித்து பரவியிருக்கும் நிலையில் அது தான் சிறந்த மருந்துகளை தரும் என்பதும் பரவலான நம்பிக்கை.

ஆனால் ஓமியோபதியில் ஏராளமான நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்துகள் இருக்கின்றன. மருந்து தயாரிப்பு மாபியாக்கள் இந்தியாவை பொறுத்தமட்டில் இது போன்ற குறைந்த செலவில் குணப்படுத்தும் மருத்துவத்தை எழுச்சி பெறவிடாமலே வைத்திருக்கின்றனர் என்பது சமூவியலாளர்களின் கருத்து. கடுமையான இதய நோய் பாதிப்பு, கடுமையான சர்க்கரை நோயாளர்கள் கூட ஓமியோபதியின் சிறப்பான மருந்துகளால் நலமாக இருப்பதை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன்.

முதல்வர் ஜெயலலிதா
 இது போல் பாம்புக்கடியால் மரணத்தை தழுவ இருப்பவர்களை ஓமியோபதி மருந்துகள் எளிதாக குணப்படுத்தக்கூடும். அரசு மருத்துவமனைகள் எங்கோ நகரத்தில் இருக்கும் போது, கிராமங்களில் இருக்கும் மக்களுக்கு முதலுதவி கிடைப்பது கடினம். இந்த நேரத்தில் ஓமியோபதி சிறந்த உயிர்காப்பானாக இருக்க முடியும். தமிழகத்தில் பதவியேற்றுள்ள முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இதனை கருத்தில் கொண்டு ஓமியோபதி மருத்துவத்தை கிராமங்களுக்கு பரப்பினால் பாம்புக்கடியால் இறப்பவர்களின் எண்ணிக்கை கட்டுப்படும்.

சிவன் கழுத்தில் பாம்பு எப்போதும் ஒரு சின்னம். இந்த பாம்புகள் மனிதனுக்கு மிகமிக உதவிகரமான ஒரு ஊர்வன இனம். இந்த பாம்புகள் மனிதனை ஒரு போதும் விரோதியாக பார்ப்பதில்லை. பதிலாக, மனிதன் நெற்றி வியர்வை நிலத்தில் விழ பாடுபட்டு விளைவிக்கும் பயிர்களை அழிக்கும் எலிகளை கொன்று வாழ்கின்றன. வாழ்ந்து மடிவதற்குள் ஆயிரக்கணக்கில் குட்டிகளை போட்டு மனிதனின் பயிர்களை அழிக்கும் இந்த எலிகளை குறி வைத்து தான் பாம்புகள் வாழ்கின்றன. ஆனால் நண்பனாக இருக்கும் இந்த பாம்புகளை மனிதன் விரோதியாக நினைப்பது தான் வேதனை. 

எலியை தேடி
பாம்புகளுக்கு தான் ஊர்ந்து போவது மனிதன் வகுத்த வாய்க்கால் வரப்பு என்றோ, அவன் உழைத்து உணவை உருவாக்கும் வயல் என்பதோ தெரிவதில்லை. அவை எலியை தேடி வயலுக்கு வருகின்றன. அவ்வளவு தான். அப்படி வரும் இடத்தில் மனிதன் அவற்றை எதிர்கொள்ளும் போது மனிதனுக்கும், பாம்புக்குமான போராட்டத்தில் பாம்பு மனிதனால் அடித்துக் கொல்லப்படுகிறது. அதிலும் தற்போது தமிழகத்தில் மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் இப்படி பாம்பால் கடிபடுபவர்களும், பாம்புகள் மனிதரால் அடித்துக் கொல்லப்படுவதும் தாராளமாக நடக்க தொடங்கும். நாம் ஏற்கனவே முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டது போல் அனைத்து பாம்புகளும் விஷமுள்ளவை அல்ல.

அதைவிட வயல் என்றால் பாம்பு வரத்தான் செய்யும். நாம் தான் அதை கவனித்து நடந்து செல்ல வேண்டும் என்ற எண்ணம் மனிதனுக்கு இருக்க வேண்டும். பாம்புகளை அழித்தால் நாளடைவில் வயல்களில் எங்கு நோக்கினும் எலிகள் ஆயிரக்கணக்கில் நிறைந்து விடும். பிறகு விளைந்த நெல்மணிகளை எல்லாம் எலியின் வளைக்குள் தான் அறுவடை செய்ய வேண்டியதிருக்கும். எனவே, பாம்புகளை மட்டும் அடித்துக் கொல்லாதீர்கள். சிறிது கவனமெடுத்து அவற்றை விட்டு விலகி நில்லுங்கள். பாம்புகள் பொதுவாக தானே விலகிச் சென்றுவிடும் இயல்பு கொண்டவை.

நிச்சயம் மருந்து இருக்கிறது
 அதையும் மீறி பாம்புகள் கடித்தால் நிச்சயம் மருந்து இருக்கிறது. தற்போது நாம் எதற்கெடுத்தாலும் ஆங்கில மருத்துவத்தை விட்டால் வேறு வழியே இல்லை என்று தான் முடிவுக்கு வருவதுண்டு. ஆனால் பல்வேறு நோய்களை ஆங்கில மருத்துவம் முழுமையாக குணப்படுத்துவதில்லை என்பதே உண்மை. பாம்பு கடிக்கு உடனடி நடவடிக்கையாக கடித்த பாம்பு எதுவென்று தெரிந்து கொண்டால் அதன் விஷத்தை முறிக்கும் எதிர் மருந்துகளை டாக்டர்கள் செலுத்தி கடிபட்டவரை முடிந்த வரை பிழைக்க வைத்து விடுகிறார்கள். ஆனால் இந்த மருந்துகளை விட ஓமியோபதி மருத்துவத்தில் மிக எளிதாக பாம்பு விஷத்தையும், பாம்பு தீண்டியதால் ஏற்படும் துயரத்தையும் விரைவாக குறைக்க முடியும் என்று தெரிகிறது. 

நஞ்சுள்ள நாகம் தீண்டினால் மற்ற முறைகளை காட்டிலும் ஓமியோபதியில் சிறப்பான முறையில் சிகிச்சையளிக்க முடியும். முதலில் கடிவாய்க்கு இரண்டு அங்குலம் மேலே ஒரு கயிற்றால் இறுக்கமாக கட்ட வேண்டும். இந்த கட்டுக்கு மேல் மேலும் இரண்டு மூன்று கட்டுக்களை கட்டலாம். பிறகு கடிவாயில் கடிபட்டவரோ அல்லது உதவியாளரோ வாயை வைத்து விஷத்தை உறிஞ்சி எடுக்க வேண்டும். அப்படி உறிஞ்சி எடுப்பவரின் வாயில், நாக்கில், உதட்டில் புண்கள் இருக்கக்கூடாது. இப்படி உறிஞ்சி எடுத்த பிறகு கடிவாயைக் கத்தியால் ஆழமாய் கீறி எடுத்து அந்த இடத்தை பொட்டாசியம் பெர்மாங்கனேட்டினால் அரை மணி நேரத்திற்கு மேல் நன்றாக கழுவ வேண்டும். இதன் பிறகு அந்த கட்டுக்களை அவிழ்க்கலாம். ஆனால் கடிபட்டவரை தூங்க அனுமதிக்கக்கூடாது.
பிராந்தி, விஸ்கி
 மேலே கூறியபடி இறுக்கமான கட்டுக்களை கட்டி விஷத்தை உறிஞ்சிய பிறகு முடிந்தால் கடிபட்ட இடத்திற்கு மேல் சிறிது தூரத்தில் அனலைக்காட்ட வேண்டும். இதனுடன் கடிவாயில் எண்ணெய் அல்லது எச்சிலை தடவிக் கொண்டேயிருக்கவும். கடிபட்டவருக்கு விஷத்தின் விளைவுகள் குறையும் வரை அனலைக் காட்டிக் கொண்டே இருக்க வேண்டும். இது ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடிக்கலாம்.

இதைச் செய்யும் போதே, அடிக்கடி உப்புதண்ணீரை குடிக்க குடித்துக் கொண்டிருக்க வேண்டும். இந்த சமயத்தில் அபாயகரமான அறிகுறிகள் தோன்றினால் மூன்று டீஸ்பூன் ஆல்கஹாலை ( பிராந்தி, விஸ்கி) போன்றவற்றை மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறை முன்னேற்றம் ஏற்படும் வரை கொடுத்துக் கொண்டேயிருக்கலாம். விஷத்தின் குறிகள் எப்போது ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் பிராந்தியை தரலாம். இப்படி செய்து கொண்டே ஓமியோபதி மருந்துகளை பிரயோகிக்கலாம்.

அதாவது, கடிபட்டவர் விரைவாக சோர்வடைதல், குத்துவது போன்ற வலி அதிகமாகவும், இந்த வலி இதயத்தை நோக்கி செல்வது போலவும், வாந்தி, மயக்கம், தலை சுற்றல், கடிபட்ட இடத்தில் நீல நிறம் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் ஓமியோபதி மருந்தான ஆர்சனிக் 30 ஐ அரை மணி நேரத்திற்கு ஒரு முறை கடிபட்டவருக்கு தரவும். இது தவிர விஷம் பாய்ந்தவர், தூக்க கலக்கத்துடனும், ஆனால் தூங்க முடியாமலும், முகம் சிவந்தும், சூடாகவும், வீங்கியும் இருத்தல், தொண்டையில் வறட்சி, கண்மணிகள் அசையாமலும் விரிந்தும் இருத்தல், மூடப்பட்ட பகுதிகளில் வியர்த்தல் ஆகிய குறிகள் இருந்தால் பெல்லடோனா 30 என்ற மருந்தை தரவேண்டும்.

விஷங்களை முறிக்கும் மருந்து
மேலே கூறிய படி கடிவாய்க்கு மேல் கட்டுக்களை கட்டி விஷத்தினை உறிஞ்சிய பிறகும், ஒரு வேளை கடித்த நாகம் மிகுந்த விஷத்தன்மை உடையதாக இருந்தால் கடிபட்டவருக்கு வீரியப்படுத்தப்பட்ட நாக விஷங்களை முறிக்கும் மருந்துகளான லாக்கலிஸ், தூஜா, குரோடலஸ், எலாப்ஸ் போன்ற மருந்துகளின் 30 வது வீரியத்தை தரலாம். இவ்வாறு கொடுப்பதால் பாம்பு கடிபட்டு பல மருத்துவர்களாலும் கைவிடப்பட்ட நோயாளிகள் கூட காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்.

நாக விஷ மருந்துகளை கொடுப்பதற்கு முன்னால் ஆர்னிகா 3 எக்ஸ், 30, 200 வீரியங்களில் ஏதாவது ஒன்றை தரலாம்.
எச்சினேசியாவின் தாய்த்திரவம் 10 சொட்டுக்களை திரும்ப திரும்ப அளித்தால் பாம்பு விஷத்தின் முறிவு மருந்தாக செயல்படும். விஷப்பூச்சிகளில் கடிகளுக்கும் இந்த மருந்தை தரலாம். பாம்பு விஷத்தினால் ஏற்படும் துயரக்குறிகளை போக்குவதில் செனேகா மிகச்சிறப்பாக செயல்படுகிறது. வெறிபிடித்த நிலையில் உள்ள விலங்குகளின் கடிகளுக்கும் இது முறிவு மருந்தாக பயன்படுகிறது. அரசு கவனிக்குமா ?
source:
The Homeopathic Prescriber, Dr.K.c.Bhanja.
Tamilil: The Homeo Nanban.மாடி வீட்டு மனிதருக்கு காற்றை வடி கட்டி சுவாசிக்க தரும் மகாகோனி மரம்

3 கருத்துகள்

மகாகோனி மரம்

எங்கு  நோக்கினும் இப்போது மரம் வளர்ப்பு விழிப்புணர்வு பெருகி வருகிறது. பொதுவாக மரங்களினால் பல்வேறு பயன்கள் என்றாலும், சில மரங்கள் பொருளாதார ரீதியாக அதிக பயனை தருகிறது. உதாரணமாக மா மரத்தை எடுத்து கொள்வோம்.சீசனில் ஏராளமான மாம்பழங்களை தரும்.நமக்கு மாம்பழங்களை கடையில் வாங்கும் செலவு மிச்சம்.

இது போல் ,மனிதனுக்கு ஆதிகாலத்திலிருந்து மரங்கள் குடியிருப்புகளாக, கடலில் செல்ல கப்பல் தயாரிக்க உதவும் மூலப்பொருளாக, காய்கள், பழங்கள் தரும் உணவு பயிராக என்று எத்தனையோ வழிகளில் பயனுள்ளதாக இருந்து வந்திருக்கின்றன. மரங்கள் இல்லாமல் மனித வாழ்க்கை இல்லை என்பது தான் உண்மை நிலை.

விலை உயர்ந்த மரங்கள்
 எத்தனையோ பயன்பாடுகள் இருந்தாலும், கட்டிடங்கள் கட்டும் போது நிலைக்கதவுகள், ஜன்னல்கள் வடிவமைக்க நீடித்து உழைக்கக்கூடிய, பார்ப்பதற்கு அழகாக காட்சி தரும் தேக்கு, ரோஸ்வுட் மற்றும் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் படாக் மரங்கள் போன்ற விலை உயர்ந்த மரங்கள் தான் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.

தமிழ்நாட்டில் லட்சக்கணக்கிலான எக்டரில் தரிசுநிலங்கள் இருக்கின்றன. இந்த இடங்களில் எல்லாம் குறிப்பிடத்தக்க பயன்தரும் மரங்களை நட்டு வளர்த்தால் இறக்குமதி மரங்களுக்கு அவசியம் இருக்காது. கூடவே மரங்கள் அதிகமாக வளர்க்கும் போது மழை பொழிவும் அதிகம் ஏற்படும். விவசாயம் செழிக்கும்.

மரங்கள் வளர்ப்பு லாபம் நிறைந்த விவசாயமாக தற்போது வளரத் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில் நிலங்களில் நல்ல லாபம் தரும் மரங்களை நட்டு வளர்த்தால் குறிப்பிட்ட காலகட்டத்தில் நல்ல லாபத்தை தரும். இந்த மரங்கள் மக்களுக்கு குறைந்த விலையில் கிடைப்பதும் முக்கியம்.

மகாகொனி மிலியேசி
இப்படி விவசாயிகளுக்கு வளம் தரும் மரங்களில் ஒன்றாக இருப்பது தான் மகாகொனி மிலியேசி. மேற்கிந்திய தீவுகளை தாயகமாக கொண்டது இந்த மரம். டொமினிக் ரேபுப்ளிக் என்ற சிறிய நாட்டின் தேசிய மரம் வேறு. இது தற்போது அழியும் நிலையில் உள்ள மரங்களின் பட்டியலில் இருப்பது தான் வேதனை.

இந்த மரம் முதன்முதலாக இந்தியாவை ஆண்ட கிழக்கிந்திய கம்பெனியர்களால் ஜமைக்காவிலிருந்து கொண்டுவரப்பட்டு கல்கத்தாவில் உள்ள தாவரவியல் தோட்டத்தில் வளர்க்கப்பட்டன. பின்னர் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு சென்னை தோட்டக்கலை துறை சொசைட்டியில் நாற்று விடப்பட்டது.

அடையாறு தியாசபிகல் சொசைட்டி மற்றும் ஒரு சில இடங்களிலும், உளுந்தூர் பேட்டை வனத்துறை அலுவலகம், சித்தேரி வனத்துறை ஓய்வூதிய இல்லம் என்றும் சில இடங்களில் நடப்பட்டன. ஆனால் இந்த மரங்கள் பரவலாக வளர்க்கப்படவில்லை. மகாகொனி மரம் 4.5 மீட்டர் சுற்றளவுடைய அடிமரத்துடன், 25 மீட்டர் உயரத்திற்கு வளரும் இயல்புடையது. இலையுதிர் மரவகையை சேர்ந்த இந்த மரம். மரத்தின் உச்சியில் கிளைகளை பரப்பிக் கொண்டு 910 மீட்டர் சுற்றளவுக்கு தழையமைப்புடன் கம்பீரமாக காட்சியளிக்கும். இதன் மரப்பட்டைகள் சிவப்பு கலந்த கருமைப்பட்டையுடன் இருக்கும். 
 
பயிரிட
வேப்ப மரத்தின் இலையை போன்று கூட்டிலை உடையது. ஏப்ரல் மாதத்தில் மகாகொனி மரம் பூக்கும். 3.5 மீ நீளக் காம்புடைய பூங்கதிர்கள் 8 செ.மீ நீளத்தில் இருக்கும். பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இந்த மரம் ஆண்டிற்கு 1000 மில்லி மீட்டர் மழை அளவு பெறும் இடங்களில் நன்றாக வளரும். வடிகால் திறனும், ஆழமான மண்கண்டமும் உள்ள இடங்கள் மககொனி வளர்க்க சிறந்த இடங்கள். மற்ற மரங்களை விட மககொனி மரத்திற்கு சத்து அதிகம் கொண்ட மண்வாகு தேவைப்படும்.

தமிழ்நாட்டில் ஒரளவு நீர்செழிப்புள்ள இடங்களில் பயிரிடலாம். மதுரை மாவட்டத்தின் வைகை ஒடிவரும் நீர்பிடிப்பு பகுதிகள் (ஆற்றுப்படுகைகள்) உள்பட நீர்செழிப்புள்ள மேட்டுப்பாங்கான இடங்கள் ஏற்றவை. செவ்வல் கண்மாய் கரைகளும் ஏற்றவை. தனியார் தோட்டங்களில் காற்றுத்தடுப்பு வரிசைகளில் நடலாம். நகரங்களில் அதிக மழையுடைய பகுதிகளில் கட்டிட வளாகங்களில் ஒரு வரிசையாக மகாகொனி மரங்களை நடலாம். மாடிகளில் உள்ளவர்களுக்கு காற்றை வடிகட்டி கொடுக்கும்.

நல்ல மகாகொனி மரம் உருவாக 20 ஆண்டுகள் பிடிக்கும். நடும் பொழுது 6 6 மீட்டர் இடைவெளியில் நடலாம். பின்னர் களைகளை நீக்கி கொத்திக் கொடுக்க வேண்டும். நிழல் உள்ள இடங்களில் நட்டால் வளர்ச்சி குன்றிவிடும். பாசனமளித்தால் கன்றுகளில் 90 சதவீதம் துளிர்த்து விடும். இரண்டு ஆண்டுகளில் 96 செ.மீட்டர் அளவிற்கு உயர்ந்து வளரும். எனவே பாசனமுள்ள இடங்களில் தொடக்க காலத்தில் நீர் ஊற்றி வளர்ப்பது நல்லது. 

பதனப்படுத்த
 20 முதல் 40 ஆண்டுகளில் செழிப்பாக வளர்ந்து விடும் மரத்தை, இலகுவாக பதனப்படுத்தலாம். காற்றில் உலரவிட்டாலே பதனப்படும். காளவாய் முறையிலும் பதனப்படுத்தலாம். சாதாரணமாக, வெடிப்போ சுருக்கமோ ஏற்படுவதில்லை. நீடித்து உழைக்கக்கூடியதுகரையான்களும் அரிப்பதில்லை. கைக்கருவிகளால் நன்றாக இழைக்கலாம். பாலிஷ் ஏற்ற வலுவான மரம். சிவப்புக்கருமை நிறத்தையுடைய இந்த மரம் தங்கத்தின் பளபளப்புடன் காணப்படும். ஒரு கனமீட்டர் மரத்தின் எடை சுமார் 750 கிலோ இருக்கும்.

இந்த மரத்தை அழகிய வேலைப்பாடுகள் உள்ள மேஜை, நாற்காலிகள், சட்டமிட்ட கதவுகள், பீரோக்கள் மற்றும் பல கடைசல்களுக்கும் ஏற்றது. இசைக்கருவிகள் செய்ய ஏற்றது. கப்பல் கட்டுவதற்கும், பல வகையான கட்டுமான பொருட்கள் செய்வதற்கும், பென்சில் செய்வதற்கும் கூட ஏற்ற மரம் இது.

என்றைக்கும் நல்ல வளர்ச்சியுள்ள கட்டுமானத்துறைக்கு மரத்தின் தேவைப்பாடு அதிகம் இருப்பதால் மர விவசாயம் எதிர்காலத்தில் நல்ல லாபம் தரும் தொழிலாக இருக்கும் என்பதில் மாற்றமில்லை. இந்த மரம் பற்றி விவரங்கள் அறிய அந்தந்த மாவட்டங்களில் உள்ள வனத்துறை அலுவலங்களை அணுகலாம்.

விக்கிபீடியாவில்  http://en.wikipedia.org/wiki/Mahogany 
இந்த மரம் பற்றி அறிந்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் ஒரு மகாகோனி மரம் நடுங்கள்.

காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today