மனதுக்கு மகிழ்ச்சி தரும் மாடித் தோட்டம் அமைக்க ஒரு நாள் பயிற்சி வீட்டிலேயே ஒரு தோட்டம் அமைத்தால் அதில் கிடைக்கும் ஆனந்தம் அலாதியானது. அந்த தோட்டத்தில் இருக்கும் மிளகாய், கத்திரி, வெண்டைக்காய் செடிகள் பூப்பதும், காய்ப்பதும் மிக அழகு. மனஉளைச்சலுடன் அவதிப்படுபவர்கள் இது போன்ற தோட்டங்களில் சிறிது நேரம் செலவிட்டால் மனதுக்கு ஒரு தீர்க்கமான அமைதி கிடைக்கும் என்பது உண்மை. மண்ணில் கை பதித்து குனிந்து வியர்வை சிந்த உழைக்க தொடங்கி விட்டால் நேரம் போவதும் தெரியாது. மனதில் இருக்கும் பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் ஒரு தெளிவான முடிவும் கிடைக்கும். 

குறிப்பாக உங்கள் குழந்தைகளுக்கு இது போன்ற தோட்டங்களில் பயிற்சி கொடுக்கும் போது அவர்கள் இயற்கையை நேசிக்க தொடங்குவார்கள். இயற்கையின் படைப்புகளை வீணடிக்காமல் பாதுகாக்கும் எண்ணத்தை மனதில் விதைக்க இதுவொரு நல்ல பொழுது போக்கு.

இப்போதெல்லாம் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் ஒரு பாடத்திட்டத்தை வைத்திருக்கிறார்களாம். அதாவது, பள்ளிக்குழந்தைகளை அப்படியே போகிற போக்கில் பெரிய ஷாப்பிங் மால்களுக்கு அழைத்து சென்று ' இது தான் கத்திரிக்காய், இது தான் வெண்டைக்காய், இது தான் சுண்டைக்காய்' இதன் விலை 30, இது 20 ரூபாய்' என்று சொல்லிக் கொடுக்கிறார்களாம். என்ன கொடுமை பாருங்கள்|! 

பள்ளிப்பருவத்தில் வீடுகளில் தாய்மார்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியதை, அவர்களையே பக்கத்தில் இருக்கும் கடைகளுக்கு அனுப்பி இது போன்ற காய்கறிகளை எல்லாம் வாங்கி பழக்குவதை செய்ய வேண்டியதை பள்ளிகள் செய்யும் படி ஆகியிருக்கிறது நிலைமை. இப்படி வளரும் குழந்தைகள் என்ன செய்யும் பிற்காலத்தில்! 

வீட்டில் இவற்றை விளைவிக்க சொல்லிக் கொடுப்பதை விட்டு விட்டு கடைகளில் இருப்பதை கணக்கெடுக்க சொல்கிறார்கள். இது போன்ற பள்ளிகளில் படிக்க குழந்தைகளுக்கு கட்டணம் லட்ச ரூபாய்களில்! இவை எல்லாம் எப்படி உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன என்பதை அறியும் போது தான் ஒரு குழந்தை சமூக கட்டமைப்பின் அடித்தளத்தை புரிந்து கொண்டு பொறுப்புள்ள குழந்தையாக வளர முடியும் என்பதை கூட இன்றைய காசு பிடுங்கும் பள்ளிகள் மறந்து போகின்றன.

அவர்கள் பணம் பிடுங்கவே பள்ளிக்கூடம் நடத்துகிறார்கள். ஆனால் நீங்கள் உங்கள் குழந்தைக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தால் நாளை உங்கள் குழந்தை ஒரு நல்ல அறிவியல் பூர்வமான கண்டுபிடிப்புகளை உருவாக்கும் ஒரு மனிதனாகவும், சமூகத்தை நேசிக்க தெரிந்த, இயற்கையை பாதுகாக்க தெரிந்த ஒரு மனிதநேய மிக்கவனாகவும் மாற முடியும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், வீட்டில் மொட்டை மாடியில் சிறிய தோட்டம் அமைத்து கொள்ளுங்கள். அபார்ட்மெண்ட்சில் இருக்கும் இடங்களில் கூட அலமாரி முறையில் அமைக்கலாம். பிறகு செடிகளை நடுவது பற்றி தெரிய வேண்டும்.

இதற்கு பெரிய படிப்புகள் எல்லாம் படிக்க அவசியமில்லை. மண்ணின் தன்மையை பற்றி சிறிது தெரிந்து கொள்ள வேண்டும். கொஞ்சம் உரங்களையும், தண்ணீர் விடும் அளவு, இயற்கை பூச்சி கொல்லிகளை தெளிப்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு உங்களுக்கு உதவிடும் விதமாக மதுரையில் உள்ள ரூட்செட் பயிற்சி மையம் (ஆந்திராவின் மஞ்சுநாதேஸ்வரா அறக்கட்டளை மற்றும் கனரா வங்கி உள்பட சில நிறுவனங்களின் கூட்டமைப்பு) ஒரு நாள் மாடித் தோட்ட பயிற்சி வகுப்பை நடத்துகிறது.

ஆகஸ்ட் 21 அன்று காலை 10 மணிக்கு இந்த பயிற்சி தொடங்குகிறது. கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 0452 2690 609 என்ற எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம். அமெரிக்காவில் கிரீன் பில்டிங் என்று சொல்லி மொட்டை மாடியில் புல்தரைகளை அமைக்கிறார்கள். நாம் விவசாயம் செய்வோம்.

6 கருத்துகள்: (+add yours?)

S.Sudharshan சொன்னது…

நல்ல திட்டம் .. நான் ஏதோ 4,5 சாடிகளில் வைத்துள்ளேன் . :)

பசுமை இந்தியா சொன்னது…

S.Sudharshan கூறியது...

நல்ல திட்டம் .. நான் ஏதோ 4,5 சாடிகளில் வைத்துள்ளேன் . :)சிறுதுளி பெரு வெள்ளம். செய்யுங்கள் சுதர்சன்.

Amutha Krishna சொன்னது…

சென்னையில் இந்த பயிற்சி எங்கு,எப்பொழுது நடைபெறும் என்றும் தகவல் தெரிவியுங்கள்.

பசுமை இந்தியா சொன்னது…

அமுதாகிருஷ்ணா ...சென்னை வேளாண்மை துறை சார்பில் இந்த பயிற்சி பொது மக்களுக்கு அளிக்கப் படுகிறது. இது குறித்து சென்னையில் உள்ள தோட்டகலைத் துறை அலுவலகத்தில் கேளுங்கள்.நன்றி.

suryajeeva சொன்னது…

பசுமையான பதிவு..

Rajesh சொன்னது…

i wand to learn how to do the home garden.. kindly help me share the contact no.

Thanks
Rajasekaran

காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today