வீட்டிலேயே மூலிகை குடிநீர் தயாரித்து அசத்துங்கள்

8 கருத்துகள்
பெட்பாட்டில் குடிநீர் கூட உடலுக்கு பாதுகாப்பற்றது என்று தற்போது விஞ்ஞானிகள் அறிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. எது தான் நல்ல குடிநீர் என்று குழப்பமாகவே இருக்கிறது. டிஸ்கவரி சேனலில் மேன் வெர்சஸ் வைல்ட் தொடர் கதாநாயகன் தேங்கி கிடக்கும் குளம், குட்டை, ஏரிகளில் இருக்கும் தண்ணீரை கூட சட்டையில் வடிகட்டி குடிப்பதை பார்க்க முடிகிறது. அதே இடத்தில் இருக்கும் தவளை, தேரை, பாம்பு, பல்லிகளை கூட அவர் சாப்பிடுகிறார். நாம் அந்த அளவுக்கு போகவேண்டியதில்லை. வீட்டிலேயே சுவைமிகுந்த மூலிகை குடிநீரை தயாரித்து அருந்த முடியும். இதற்கு பெரிதாக செலவும் இல்லை. இந்த மூலிகை குடிநீரை தயாரிக்க நீங்கள் உருவாக்கும் அமைப்பை பார்த்து உங்களை தேடி வரும் விருந்தினர்கள், அக்கம்பக்கத்தினர் எல்லாம் அதிசயித்து போவது உறுதி.

தயாரிக்கலாம் வாங்க....
மூலிகை குடிநீரை தயாரிக்க உங்களுக்கு தேவைப்படுவது எல்லாம், சாதாரண அழகு செடிவளர்க்கும் மண் தொட்டிகள் அல்லது தண்ணீர் நிரப்ப பயன்படும் மண்பானைகள் தான். உங்களுக்கு நாளன்றுக்கு எவ்வளவு மூலிகை குடிநீர் தேவைப்படும் என்பதை பொறுத்து, அதற்கேற்ப தொட்டிகளை வாங்கிக் கொள்ளுங்கள். இந்த தொட்டியை வாங்கி வந்த பிறகு இந்த தொட்டிகளின் கீழ்பகுதி முழுக்க கூழாங்கற்களை போடுங்கள். இதற்கடுத்து இந்த கூழாங்கற்களின் மேல் பெருமணலை நிரப்புங்கள். இந்த இரண்டு அடுக்குகளை அடுத்து இதன் மீது மிகச்சிறிய கண்ணுள்ள நைலான் வலையை ( டீ வடிகட்டியில் இருக்கும் வலை) விரித்து விடுங்கள். இப்படி நைலான் வலையை விரிக்கும் போது இந்த அடுக்குக்கு மேல் நாம் நிரப்ப போகும் பொருட்களில் இருந்து வெளியேறும் தூசு, தும்புகள் வடிகட்டப்பட்டு விடும்.

இதற்கடுத்து இந்த நைலான் வலைக்கு மேல் மண், மணல், மக்கிய எரு ஆகியவை கொண்ட எருவை போட்டு மூலிகை செடிகளை நடவு செய்யுங்கள். அதாவது வீட்டில் இஞ்சியை பயன்படுத்துவோம். அளவுக்கு அதிகமாக இஞ்சியை வாங்கி வந்து வீட்டில் வைத்திருக்கும் போது, மீதமுள்ள இஞ்சியை சில அம்மணிகள் மணலில் போட்டு ஈரமாக இருக்கும் படி வைத்திருப்பார்கள். சில நேரங்களில் இந்த இஞ்சி தளிர் விட தொடங்கி விடும். இது தான் மூலிகை செடி தொட்டி எனலாம். இதே போல் மஞ்சள், வசம்பு, தூதுவளை, செம்பருத்தி போன்ற செடிகளை நடவு செய்யலாம். இந்த செடிகளை நட்டவுடன், நடவு செய்யப்பட்ட தொட்டிகள் ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்கும் படி செய்ய வேண்டும். அதற்கு இந்த தொட்டிகளில் உள்ள செடிகளுக்கு ஊற்றப்படும் தண்ணீர் எஞ்சி வெளியேறும் போது அது ஒரே இடத்தில் சேகரமாகும் படி ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதாவது, இந்த தொட்டிகள் அனைத்தும் சிமெண்ட்டால் ஆன ஒரு பாத்தியில் வரிசையாக இருக்கும்படி அமைத்துக் கொண்டால் இந்த தொட்டியிலிருந்து வெளியேறும் தண்ணீர் ஒரு இடத்தில் சேகரமாகும் படி வழிந்தோடும்.

இந்த அமைப்பை உருவாக்கிக் கொண்டபின் முதல் மூன்று நாட்களுக்கு இந்த தொட்டிகளில் இருந்த வெளியேறும் தண்ணீரை பயன்படுத்த வேண்டாம். காரணம், இதில் ஏராளமான மாசுக்கள் கலந்திருக்கும். பிறகு இதிலிருந்து கிடைக்கும் தண்ணீரை பிடித்து குடிநீராக பயன்படுத்தலாம். இந்த மூலிகை தொட்டியிலிருந்து கிடைக்கும் தண்ணீரை குளிக்கும் தண்ணீருடன் கலந்து குளிநீராக பயன்படுத்தலாம். இதில் ஒரு விசேடம் என்னவென்றால், உங்களுக்கு எந்த மூலிகை பிடிக்கிறதோ, அந்த மூலிகை செடியை வாங்கி வந்து ஒரு தொட்டியில் நட்டு இந்த அமைப்பில் இணைத்து விடலாம்.

உதாரணமாக கால் மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். முடக்கத்தான் என்று சொல்லப்படும் மூலிகை தாரளமாக ரோடுகளின் ஓரத்தில் கூட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வளர்ந்து கிடக்கிறது. இந்த மூலிகை செடியை வேருடன் எடுத்து வந்து தொட்டியில் நட்டு அந்த தொட்டி வழியாக வெளியேறும் மூலிகை தண்ணீரை நன்றாக கால் முட்டுகளில் படும்படி குளிக்கலாம். இதனால் மூட்டுவலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

இது போல் பிரண்டை, இஞ்சி போன்ற செடிகளை பயன்படுத்தினால் பித்தம் நீங்கும். குழந்தைகளை நல்ல மூலிகை தண்ணீரில் குளிப்பாட்ட விரும்புபவர்கள் துளசி போன்ற செடிகளை தொட்டிகளில் வளர்த்து அதன் வழியாக வெளியேறும் நீரை குழந்தைகளை குளிப்பாட்ட பயன்படுத்தலாம். தும்பை, நொச்சி செடிகளை சளியால் அவதிப்படுபவர்கள் மூலிகை குடிநீராக, குளியல் நீராக பயன்படுத்தினால் வெகுவிரைவில் சுகமான நிவாரணம் கிடைக்க காணலாம். வீட்டை சுற்றி தோட்டம் போட அதிக அளவு இடம் இருப்பவர்கள் அதிக அளவு மூலிகை செடிகளை வளர்த்து பயன்படுத்தலாம்.

நல்ல கிரியேடிவிடி உள்ள நண்பர்கள் இந்த தொட்டிகளில் இருந்து வெளியேறும் நீரை குளுக்கோஸ் டியூப் போன்ற குழாய் மூலம் அனைத்து தொட்டிகளையும் இணைத்து இதன் வழியாக நீரை பிடித்து பயன்படுத்தலாம். இந்த நீரிலும் நுண்கிருமிகள் இருக்கலாம் என்று சந்தேகிப்பவர்கள் நிலக்கரி துண்டு ஒன்றை நீர் சேகரமாகும் கடைசி பாத்திரத்தில் போட்டு வையுங்கள். இந்த நிலக்கரி நீரிலுள்ள நுண்கிருமிகளை எல்லாம் கொன்று விடும்.
பிறகென்ன...காடுமலைகளில் கிடைக்கும் அதே மூலிகை தண்ணீர் உங்கள் வீட்டிலும் அன்றாடம் கிடைக்கும்.

சத்துள்ள விளை நிலம் ஒரு பொன் விளையும் பூமி

4 கருத்துகள்நிலத்தில் எதைப் போட்டாலும் விளைச்சல் இல்லை; லாபம் இல்லை என்று சலித்துக் கொள்ளும் விவசாயிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். மண் எப்போதும் மனிதர்களை ஏமாற்றுவது இல்லை. இந்த சலிப்பு தான், சோறு போடும் நிலங்களை ரியல்எஸ்டேட்காரர்களிடம் விற்றுவிட்டு விவசாயிகள் ஓட்டாண்டிகளாக ஆக வழி செய்கிறது. ஊக்கமும், முடியும் என்ற எண்ணமும் இருந்தால் நிலத்தை பொன் விளையும் பூமியாக மாற்றலாம். விவசாயமே படிக்காத, விவசாயத்தில் பழக்கமே இல்லாத பாரதி " காணி நிலம் வேண்டும்" என்று பாடியதில் இருந்த ஊக்கம் விவசாயிகளுக்கு இல்லையே என்பது தான் வேதனை. மழை ஏமாற்றினால் கூட எளிதாக பாசனம் செய்யலாம்; அந்த விவசாயி தனது நிலத்தில் பண்ணைக்குட்டை என்ற நீர் சேமிப்பு அமைப்பை உருவாக்கியிருந்தால்!

அதாவது மழை பெய்யும் போது அதை தேக்கி வைக்க செயற்கையான குட்டை போன்ற அமைப்பில் நீரை தேக்கி வைத்திருக்க வேண்டும். அந்த குட்டையில் உள்ள நீர் ஆவியாகி விடாதபடி குட்டையின் கரையை சுற்றிலும் மரங்களை நட்டு வைத்திருக்க வேண்டும். பிறகு ஏன் நீர் பற்றாக்குறை வரப்போகிறது? எனவே, விவசாயிகளே நிலத்தை யாருக்கும் விற்பனை செய்யாதீர்கள். ஊக்கத்துடன் பயிரிடுங்கள். அதற்கு முன் உங்கள் மண்ணின் வளத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

ஒவ்வொரு வகை மண்ணிலும் ஒவ்வொரு வகையான பயிர்கள் விளைகின்றன. மண் எத்தகைய வளம் மிக்கது, அந்த மண்ணில் எதை பயிரிடலாம் என்பதை தெரிந்து கொண்டால் தான் அதிக அளவில் மகசூலை பெற முடியும். இது நிலத்திற்கு மட்டும் அல்ல. வீட்டில் தொட்டிகளில் செடிகள் வைக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த தொட்டியில் இடப்படும் மண்ணில் உள்ள சத்துக்களின் அளவை அறிந்து கொள்வது நல்லது.

மண்ணின் அடங்கியுள்ள சத்துப் பொருட்களை பொறுத்து தான் பயிர்களின் வளர்ச்சி அமைகிறது. பார்வைக்கு செழிப்பாக தோன்றும் மண்ணில் சில சத்துக்குறைபாடு இருக்கலாம். எந்த சத்து குறைவாக இருக்கிறது என்பதை மண் பரிசோதனை மூலம் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்.

மண் பரிசோதனை முடிவுகளை வைத்து அந்த நிலத்தில் என்ன வகையான பயிர்களை விளைவிக்கலாம், எந்த வகை பழமரங்களை நடலாம் என்று முடிவு செய்யலாம். இந்த முடிவுகளை கொண்டு குறிப்பிட்ட அந்த மண்ணில் உள்ள எந்த சத்துக்கள் குறைவாக இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ள முடியும். இதை தெரிந்து கொள்வதால், அந்த மண்ணில் குறைந்து காணப்படும் சத்துக்களை ஈடுகட்ட தேவையான உரங்களையும், மற்ற தாது உப்புக்களையும் இட்டு முழுமையான சத்துக்கள் நிரம்பிய மண்ணாக மாற்ற முடியும்.

மண்ணில் பொதுவான குறைபாடுகளாக சில பிரச்சினைகள் காணப்படுவதுண்டு. மேல் மண் இறுக்கம், ஆழமற்ற மண், உவர் மண் மற்றும் களிமண் ஆகிய பிரச்சனைகள் தான் அவை. இந்த குறைகளையும் நிவர்த்தி செய்து வளமான மண்ணாக மாற்றினால் எந்த நிலத்திலும் சிறப்பான முறையில் பயிர் செய்து அதிக மகசூல் பெறலாம்.

கீழ்க்காணும் உத்திகளால் மண்ணின் வளத்தை மேம்படுத்த முடியும்.

மேல் மண் இறுக்கம்
மழைத்துளிகளால் நிலத்தில் வந்து  மோதும்போதும், டிராக்டர் போன்ற பெரிய கனஇயந்திரங்களை பயன்படுத்தும் போதும் மற்றும் இரும்பு ஆக்சைடு போன்ற ரசாயன மாற்றங்கள் ஏற்படுவதாலும் மண்ணில் இறுக்கம் ஏற்படுகிறது. இந்த வகை மண்ணில் நீரை பாய்ச்சினால், அந்த மண்ணின் மேல் உள்ள  மண்கட்டிகள் உடைந்து சிறு துகள்களாக பிரியும். அப்போது அதில் கலந்திருக்கும் களிமண், இரும்பு ஆக்சைடுடன் சேர்ந்து கொலகொலப்பான ஒரு கட்டி போல் மாறிவிடுகிறது. இதனை தடுத்து மண்ணின் பொலபொலப்பை அதிகரிக்க தொழுஉரம், நார்கழிவு, ஜிப்சம் இட்டு சரி செய்யலாம். இதனால் மண்ணின் நீரோட்டம் காற்றோட்டம் மற்றும் பௌதீகத் தன்மை மேம்பட்டு மண் வளமாகிறது.

ஆழமற்ற மண்
இந்த குறைபாடு இயற்கையிலேயே அமைந்தது. இதை மாற்றுவது கடினம். எனவே, இத்தகைய மண்ணில் மேல்வாரியாக வேர் பரவும் பயிர்களே நன்கு வளர வாய்ப்புள்ளது. ஒரளவிற்கு நெல் சாகுபடிக்கு ஏற்றது. மேலும் இந்த நிலங்களில் சரிவு ஏற்படாதவண்ணம் வரப்புகள் அமைத்தல் அவசியம்.

உவர் நிலம்
மண்ணில் குளோரைடு மற்றும் சல்பேட் உப்புகள் அதிகமாக இருப்பதால் உவர் நிலம் ஏற்படுகிறது. இந்நிலங்களில் பயிர் விதைகள் முளைக்க முடியாமல் போய்விடுகிறது. இந்த இடத்தில் பூமியில் காணப்படும் நீரில் கரைந்துள்ள உப்புக்கள் அதிக அடர்த்தியாக இருப்பதால் பயிரிகளின் வேர்களால் நீரை ஈர்க்க வலுவில்லாமல் இறுதியில் பயிர் வாடி விடுகிறது. இவை மண்ணிலுள்ள மற்றும் பாசன நீரில் உள்ள உப்புக்களால் ஏற்படுகிறது. முதலில் வயலை சமன் செய்து பின்பு நல்ல வரப்புகள் அமைத்து நீரை பாய்ச்சி தேக்கி பின்பு தொழி உழவு செய்வதால் நீரில் உப்புகள் கரைந்து விடும். இந்த நீரை வடிகால் மூலம் வெளியேற்ற வேண்டும். இது போல பல முறை செய்வதால் உவர் நிலம் நல்ல நிலமாக மாறும்.

களர் நிலம்
மண்ணிலுள்ள சோடியம் உப்புக்களின் அளவு அதிகமாகும் போது களர்நிலம் உருவாகிறது. இந்த வகை மண்ணில் காரத்தன்மை அதிகமாக காணப்படும். இத்தகைய மண்ணில் கால்சியம் சல்பேட் என்கிற ஜிப்சம் இடும் போது சோடியம் உப்புக்கள் சல்பேட் உப்புக்களுடன் சேர்ந்து சோடியம் சல்பேட்டாக நீரில் கரையும் உப்பாக மாறி வெளியேற்றப்படுகின்றது. இது போல் பல முறை நீர் விட்டு கலக்கி பின் இருத்து வடிப்பதால் இந்த குறைபாட்டிலிருந்து மண்ணிற்கு நிவர்த்தி கிடைக்கிறது.

த்துடன் மண்ணின் வளத்தை மேம்படுத்த ஒரு முக்கிய உத்தி உண்டு. பசுந்தாள் பயிர்கள் எனப்படும் சில சிறிய வகை பயிர்களை நிலத்தில் மக்க வைத்து அவற்றை நிலத்திற்கே உரமாக மாற்றி விடலாம். இந்த பயிர்களில் காணப்படும் சத்துக்கள் சத்தில்லாத நிலத்தை கூட சத்து மிகுந்த வலுவான நிலமாக மாற்றிவிடுகின்றன. அதையும் இங்கு பார்க்கலாம்.
பசுந்தாள் உர பயிர்கள்

மண்ணின் வளத்தை மேம்படுத்தவும் தேவையான தழைச்சத்தை பெற பசுந்தாள் உரங்கள் உதவுகின்றன. பசுந்தாள் உரப் பயிர்கள் இரண்டு வகைப்படும். பயறு வகை செடிகளான செஸ்பேரியா எனப்படும் சீமை அகத்தி, சணப்பு, தக்கைப்பூண்டு, நரிப்பயறு, தட்டைப்பயறு போன்றவை ஒரு வகை. மரப்பயிர்களான அகத்தி, கிளசிரிடியா, சுபாபுல் போன்றவை மற்றொரு வகை. இவை தவிர தானாக வளரும் கொளுஞ்சி, ஆவாரை,எருக்கு, ஆதாளை ஆகிய செடிகளும் பசுந்தழை உரமாக பயன்படுத்தப்படுகின்றன.

பசுந்தாளுரங்களை மண்ணில் இடும் போது கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் அவற்றை மக்க செய்கின்றன. அப்படி மக்கி சிதைக்கப்படும் போது இந்த செடிகளில் இருக்கும் பேரூட்டம் மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் வெளியாகின்றன. இவை பயிர்கள் செழித்து வளர உதவுகின்றன. நுண்ணுயிர்களின் பெருக்கம் அதிகரிக்கும் போது அவற்றிலிருந்து பல அங்கக அமிலங்களும், பயிர் வளர்ச்சி ஊக்கிகளும் நொதிகளும் மற்றும் சர்க்கரை பொருட்களும் வெளிப்பட்டு மண்ணில் கரையாத நிலையிலுள்ள ரசாயன உரங்களை கரைத்து பயிர்கள் எடுத்துக் கொள்ளும் படி எளிய படிவங்களாக மாற்றும். இது பயிர் வளர்ச்சியை ஊக்குவிப்பதாக அமையும்.

பசுந்தாள் உரப்பயிர்கள் நீண்ட ஆணிவேர்கள் கொண்டவை. அதனால் மண்ணில் ஆழமான பகுதிகளுக்குள் ஊடுருவிச் சென்று ஊட்டச்சத்துக்களை கிரகிப்பதுடன் மண்ணிற்கு காற்றோட்டம், நீர் ஊடுருவும் தன்மை அதிகரிக்க செய்கிறது. கோடையில் இந்த உரப்பயிர்களை பயிர் செய்வதால் மண் போர்வை போல் செயல்பட்டு மண் நீர் ஆவியாவது தடுக்கப்பட்டு மண் ஈரத்தால் வேண்டப்படாத உப்புக்கள் கரைந்து பயிர்களின் வேர்களை தாக்காத வண்ணம் வெளியேற்றப்படுகின்றன.

எனவே பயிர் செய்யாத கோடை காலங்களிலோ, பயிர் செய்வதற்கு முன் உரிய பருவ காலங்களில் மழை நீரைக் கொண்டு பசுந்தாளுரப் பயிரினை தனிப்பயிராக விதைத்து பூக்கும் தருணத்தில் அப்படியே மடக்கி உழவு செய்வதால் மண்ணிற்கு அதிக அளவில் அங்ககச் சத்து கிடைத்து மண்வளத்தை பெருக்கலாம். இவ்வாறு பயிர்களுக்கு பசுந்தாள் உரங்கள் இடுவதால் உரச்செலவையும் குறைக்கலாம். இந்த முறைகளை கையாண்டு மண்ணின் குறைகளை போக்கி விவசாயிகள் மண்ணில் பொன்னை காணலாம்.

தமிழக அரசு வழங்கும் ஆடு மாடுகளை செலவில்லாமல் வளர்க்க உதவும் தீவன மரங்கள்

5 கருத்துகள்மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்தே மரங்களை சார்ந்து தான் மனித சமுதாயத்தின் வளர்ச்சி இருந்திருக்கிறது. முதலில் மனிதனின் உணவுக்காக மட்டுமே பயன்பட்ட மரங்கள், பின்னர் இருப்பிடத்திற்காகவும், எரிபொருளாகவும் பயன்பட்டது.மனிதனின் தேவைக்கான காடுகள் அதிக அளவில் அழிக்கப்பட்டு விட்டதால் தற்போது மரங்களை வளர்ப்பதற்கான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. நமது நாட்டில் தற்போது இருக்கும் கால்நடைகளில் எண்ணிக்கைக்கும், அவற்றுக்கு கிடைக்கும் தீவனத்திற்கும் இடையிலான வித்தியாசம் மிகப்பெரிய அளவில் பற்றாகுறையானதாக இருக்கிறது.

கால்நடைகளுக்கு தேவையான தீவனத்தை விளைநிலங்களிலிருந்து பெற முடியாத நிலையில், கணிசமான தீவனத்தை வேளாண் காடுகளிலிருந்து பெற முடியும். குறிப்பாக இப்போது அரசு மக்களுக்கு ஆடு, மாடுகளை வழங்கி வரும் நிலையில் இவற்றுக்கான தீவனமாக, மரங்களை பயன்படுத்தும் வகையில் குறிப்பிடத்தக்க தீவன மரங்களை கிராமங்களில் காலியான நிலங்களில் வளர்த்து ஆடு, மாடுகளுக்கு தீவனமாக அளிக்கலாம். இதனால் தமிழகம் கால்நடை செல்வங்களின் பெருக்கத்தில் முதன் மாநிலமாக மாறும். மக்களின் தேவைக்கேற்ற பால் மற்றும் இதர கால்நடை உற்பத்தி பொருட்கள் எளிதாக கிடைக்கும்.

கால்நடை தீவனமாக பயன்படும் மரங்கள்
கால்நடைகளுக்கு தீவனமாக பல மரங்களும் பயன்படுகின்றன. இப்படி பயன்படும் தீவன மரங்களை பார்க்கலாம்.சவுண்டல், வாகைமரம், வெள்வேல், ஆச்சாமரம், புங்கை மரம் ஆகியவை மிகச்சிறந்த தீவன மரங்களாக இருக்கின்றன. இந்த மரங்களின் தழைகளில் கால்நடைகளுக்கு தேவையான புரதச்சத்து 13 முதல் 30 சதவீதம் வரை இருக்கிறது. சில மரங்களில் சத்துக்குறைவாக இருந்த போதிலும் அவற்றை மற்ற மரத்தழைகளுடன் சேர்த்து அளிக்கும் போது, கால்நடைகளுக்கு போதுமான சத்துக்கள் கிடைக்கின்றன.

தீவன மரங்களான சவுண்டல், கருவேல் ஆகியவற்றுக்கு இடையே தீவனப்புல் வகையான கொழுக்கட்டைப்புல், ஊசிப்புல் ஆகியவற்றை வளர்க்கும் பட்சத்தில் அவற்றிலிருந்து கிடைக்கும் தீவனத்தைக் கொண்டு 5 பெட்டை மற்றும் 1 தலைச்சேரி இன வெள்ளாடுகளை வளர்க்க முடியும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தீவன மரங்களை விவசாயிகள் முக்கிய பயிராகவோ அல்லது வரப்பு ஓரங்களிலும், தரிசுநிலங்களிலும், கண்மாய் கரைகளிலும் வளர்க்கலாம்.

வேளாண் காடுகள்
தீவன மரங்களின் இலைகள் கால்நடைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிரம்பியதாக இருப்பதுடன் மட்டுமல்லாமல், மனிதர்களுக்கும் பயன்படுகின்றன. உதாரணமாக, முள்ளுமுருங்கை மரத்தை எடுத்துக் கொள்ளலாம். முள்ளு முருங்கை மரங்களின் இலைகளிலிருந்து தான் மனிதர்களின் சுவாச கோளாறுகளுக்கான முக்கிய மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான மரங்களை ஆங்காங்கே நடும் போது அது, ஆடு, மாடுகள் மட்டுமல்லாது மனிதர்களுக்கும் பயன்படும்படி அமைத்துக் கொள்ளலாம். நடப்படும் மரத்தின் இனத்தை பொறுத்து இந்த பயன்பாடு அமையும். பொதுவாக இது போல் தீவன மரங்களை நட்டு வளர்க்கும் இடத்தை வேளாண் காடுகள் என்று கூறலாம். ஆங்கிலத்தில் இதனை சில்விபேச்சர் என்கிறார்கள்.

வேளாண் காடுகளின் அமைப்புகள்
வேளாண்காடுகள் என்பது இயற்கையில் மிகப்பெரிய பரப்பளவில் உருவாகியிருக்கும் காடுகள் போல் அல்ல. அது மனிதனால் செயற்கையாக உருவாக்கப்படுவது. இவற்றை கீழ்க்கண்ட வகைகளில் பிரிக்கலாம்.

1. விவசாய பயிர்கள் பயிரிடப்படும் இடங்களில் தீவன மரங்களை வளர்த்தல். அதாவது, வயல் ஓரங்கள், குளம், கண்மாய், ஏரிகளின் ஓரங்கள் என்று கிராமங்களில் பொதுவான இடங்கள் உள்பட பயிர் வளர தகுதியான இடங்களில் எல்லாம் தீவன மரங்களை வளர்ப்பது.

2. தீவனப்புல் வகைகள் மற்றும் மேய்ச்சல் தரைகள் அமைந்திருக்கும் இடத்தில் தீவன மரங்களை நட்டு வளர்த்தல். அதாவது, ஒரு விவசாயி கால்நடைகளையே தனது முக்கிய தொழிலாக கொண்டிருந்தால், அவருக்கு சொந்தமான நிலத்தில் கால்நடைகளுக்கு உணவாக பயன்படும் புல்வகைகள் சிலவற்றை பயிரிடலாம். கூடவே தீவன மரங்களையும் ஒரே இடத்தில் வளர்க்கலாம்.

3. விவசாய பயிர்களுடன் பழ மரங்களை வளர்த்தல். பல்வேறு பழமரங்களின் இலைகள் கூட கால்நடைகளின் தீவனமாக பயன்படும். இதனால், விவசாய பயிர்களுடன் பழமரங்களையும் ஆங்காங்கே நட்டு வளர்க்கலாம்.

4. மரங்கள், பழமரங்கள் ஆகியவற்றுடன் கால்நடைகளுக்கான தீவன புல்வகைகளை வளர்த்தல். அதாவது சில வகையான புற்கள் மரங்களின் அடியில் கூட எளிதாக வளர்ந்துவிடும். இந்த வகையான புற்களை ஏற்கனவே வளர்ந்து நிற்கும் மரங்கள், பழமரங்களுக்கு இடையில் பயிர் செய்து கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தலாம்.

இப்படியான வழிவகைகளில் தீவன மரங்களையும், தீவன புற்களையும் வளர்க்கும் போது அவற்றிலிருந்து கிடைக்கும் இலை, தழைகள் கால்நடைகளுக்கு எளிதான உணவாக கிடைக்கும். இதனால் தீவன செலவு பெரிதும் குறைந்து விடும். கால்நடைகளை வளர்க்கும் போது அவற்றிலிருந்து கிடைக்கும் சாணம் நிலத்திற்கு சிறந்த இயற்கை உரமாக பயன்படும். இதனால் கடந்த பல ஆண்டுகளாக ரசாயன உரத்தினால் பாழ்பட்டு தற்போது தனது வளத்தை இழந்திருக்கும் தமிழகத்தின் விளைநிலங்கள் பலவும் மிகவிரைவில் பொலபொலப்பான இயற்கையாகவே சத்துள்ள நிலமாக மாறிவிடும்.

மேற்சொன்ன முறையில் தீவன மரங்களை வளர்க்கும் முறைக்கான ஒரு உதாரணத்தை பார்க்கலாம்.

அதாவது, சவுக்குமரத்தை ஒரு இடத்தில் பயிரிடும் போது அதே மரங்களின் இடையில் மக்காச்சோளத்தை பயிரிடலாம். இதனால் கால்நடைகளுக்கு தேவையான மக்காச்சோளம் பெரிய அளவில் செலவில்லாமல் ஆண்டு முழுவதும் கிடைத்துக் கொண்டே இருக்கும். சவுக்கை தனியாக விற்று லாபம் பார்க்கலாம்.

இது போல் வாகை மரத்தின் ஊடே கொழுக்கட்டை புல்லையும், சவுண்டல் மரத்தின் இடையே பி.என்2 புல் வகையையும், சவுக்கு மரத்தின் இடையே மக்காச்சோளம், சோளம், காராமணி போன்ற தீவனப்பயிர்களையும் பயிரிடலாம். இப்படி பயிரிடும் போது ஒரு ஏக்கரிலிருந்து 15.81 டன் அளவுக்கு சோளத்தீவன பயிர் கிடைக்கும்.
இது தவிர அதே ஒரு ஏக்கரில்  வளர்க்கப்படும் சவுண்டல் மரத்திலிருந்து 5.30 டன் அளவுக்கு உலர் தீவனமும், வாகை மரம் எனறால் 6.63 டன் அளவுக்கு உலர் தீவனமும் கிடைக்கும்.

எனவே, தற்போது தமிழகத்தில் ஆடு, மாடுகள் வளர்ப்பை அதிகரிக்க தீவிரமான முயற்சி எடுக்கப்பட்டுள்ள நிலையில் கிராமங்களில் வேளாண்காடுகளையும் அதிகரித்தால் விவசாயிகள் செலவில்லாமல் அதிக வருமானம் பெறலாம்.தீவன மரங்களை கிராமங்கள் தோறும் நடுவதால், கிராமங்களில் எங்கு பார்த்தாலும் பச்சைபசேல் என்று மரங்கள் வளர்ந்து நிற்கும். கிராம மக்களும் தங்களுக்கு தேவையான எரிபொருளுக்காகவும் இவற்றை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மேலும் கிராம மக்கள் சுவாசிக்க சுத்தமான பிராணவாயுவும் இந்த மரங்களிலிருந்து கிடைக்கும். சாணஎரிவாயு கலன் அமைத்து மின்சாரம் தயாரிக்கலாம். இப்படி பலபல பலன்களை ஒன்றன் பின் ஒன்றாக செய்து கொண்டே போகலம். ஆகவே, கிராமத்திலிருந்து வந்து நகரத்தில் தற்போது வசித்து வரும் இளைஞர்கள் தங்களது கிராம மக்களுக்கு இந்த தகவல்களை கொண்டு சேருங்கள். உங்கள் கிராமமக்கள் பலன் பெறட்டும். சமுதாயம் அமைதியாக முன்னேறட்டும்.

காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today