தமிழக அரசு வழங்கும் ஆடு மாடுகளை செலவில்லாமல் வளர்க்க உதவும் தீவன மரங்கள்மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்தே மரங்களை சார்ந்து தான் மனித சமுதாயத்தின் வளர்ச்சி இருந்திருக்கிறது. முதலில் மனிதனின் உணவுக்காக மட்டுமே பயன்பட்ட மரங்கள், பின்னர் இருப்பிடத்திற்காகவும், எரிபொருளாகவும் பயன்பட்டது.மனிதனின் தேவைக்கான காடுகள் அதிக அளவில் அழிக்கப்பட்டு விட்டதால் தற்போது மரங்களை வளர்ப்பதற்கான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. நமது நாட்டில் தற்போது இருக்கும் கால்நடைகளில் எண்ணிக்கைக்கும், அவற்றுக்கு கிடைக்கும் தீவனத்திற்கும் இடையிலான வித்தியாசம் மிகப்பெரிய அளவில் பற்றாகுறையானதாக இருக்கிறது.

கால்நடைகளுக்கு தேவையான தீவனத்தை விளைநிலங்களிலிருந்து பெற முடியாத நிலையில், கணிசமான தீவனத்தை வேளாண் காடுகளிலிருந்து பெற முடியும். குறிப்பாக இப்போது அரசு மக்களுக்கு ஆடு, மாடுகளை வழங்கி வரும் நிலையில் இவற்றுக்கான தீவனமாக, மரங்களை பயன்படுத்தும் வகையில் குறிப்பிடத்தக்க தீவன மரங்களை கிராமங்களில் காலியான நிலங்களில் வளர்த்து ஆடு, மாடுகளுக்கு தீவனமாக அளிக்கலாம். இதனால் தமிழகம் கால்நடை செல்வங்களின் பெருக்கத்தில் முதன் மாநிலமாக மாறும். மக்களின் தேவைக்கேற்ற பால் மற்றும் இதர கால்நடை உற்பத்தி பொருட்கள் எளிதாக கிடைக்கும்.

கால்நடை தீவனமாக பயன்படும் மரங்கள்
கால்நடைகளுக்கு தீவனமாக பல மரங்களும் பயன்படுகின்றன. இப்படி பயன்படும் தீவன மரங்களை பார்க்கலாம்.சவுண்டல், வாகைமரம், வெள்வேல், ஆச்சாமரம், புங்கை மரம் ஆகியவை மிகச்சிறந்த தீவன மரங்களாக இருக்கின்றன. இந்த மரங்களின் தழைகளில் கால்நடைகளுக்கு தேவையான புரதச்சத்து 13 முதல் 30 சதவீதம் வரை இருக்கிறது. சில மரங்களில் சத்துக்குறைவாக இருந்த போதிலும் அவற்றை மற்ற மரத்தழைகளுடன் சேர்த்து அளிக்கும் போது, கால்நடைகளுக்கு போதுமான சத்துக்கள் கிடைக்கின்றன.

தீவன மரங்களான சவுண்டல், கருவேல் ஆகியவற்றுக்கு இடையே தீவனப்புல் வகையான கொழுக்கட்டைப்புல், ஊசிப்புல் ஆகியவற்றை வளர்க்கும் பட்சத்தில் அவற்றிலிருந்து கிடைக்கும் தீவனத்தைக் கொண்டு 5 பெட்டை மற்றும் 1 தலைச்சேரி இன வெள்ளாடுகளை வளர்க்க முடியும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தீவன மரங்களை விவசாயிகள் முக்கிய பயிராகவோ அல்லது வரப்பு ஓரங்களிலும், தரிசுநிலங்களிலும், கண்மாய் கரைகளிலும் வளர்க்கலாம்.

வேளாண் காடுகள்
தீவன மரங்களின் இலைகள் கால்நடைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிரம்பியதாக இருப்பதுடன் மட்டுமல்லாமல், மனிதர்களுக்கும் பயன்படுகின்றன. உதாரணமாக, முள்ளுமுருங்கை மரத்தை எடுத்துக் கொள்ளலாம். முள்ளு முருங்கை மரங்களின் இலைகளிலிருந்து தான் மனிதர்களின் சுவாச கோளாறுகளுக்கான முக்கிய மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான மரங்களை ஆங்காங்கே நடும் போது அது, ஆடு, மாடுகள் மட்டுமல்லாது மனிதர்களுக்கும் பயன்படும்படி அமைத்துக் கொள்ளலாம். நடப்படும் மரத்தின் இனத்தை பொறுத்து இந்த பயன்பாடு அமையும். பொதுவாக இது போல் தீவன மரங்களை நட்டு வளர்க்கும் இடத்தை வேளாண் காடுகள் என்று கூறலாம். ஆங்கிலத்தில் இதனை சில்விபேச்சர் என்கிறார்கள்.

வேளாண் காடுகளின் அமைப்புகள்
வேளாண்காடுகள் என்பது இயற்கையில் மிகப்பெரிய பரப்பளவில் உருவாகியிருக்கும் காடுகள் போல் அல்ல. அது மனிதனால் செயற்கையாக உருவாக்கப்படுவது. இவற்றை கீழ்க்கண்ட வகைகளில் பிரிக்கலாம்.

1. விவசாய பயிர்கள் பயிரிடப்படும் இடங்களில் தீவன மரங்களை வளர்த்தல். அதாவது, வயல் ஓரங்கள், குளம், கண்மாய், ஏரிகளின் ஓரங்கள் என்று கிராமங்களில் பொதுவான இடங்கள் உள்பட பயிர் வளர தகுதியான இடங்களில் எல்லாம் தீவன மரங்களை வளர்ப்பது.

2. தீவனப்புல் வகைகள் மற்றும் மேய்ச்சல் தரைகள் அமைந்திருக்கும் இடத்தில் தீவன மரங்களை நட்டு வளர்த்தல். அதாவது, ஒரு விவசாயி கால்நடைகளையே தனது முக்கிய தொழிலாக கொண்டிருந்தால், அவருக்கு சொந்தமான நிலத்தில் கால்நடைகளுக்கு உணவாக பயன்படும் புல்வகைகள் சிலவற்றை பயிரிடலாம். கூடவே தீவன மரங்களையும் ஒரே இடத்தில் வளர்க்கலாம்.

3. விவசாய பயிர்களுடன் பழ மரங்களை வளர்த்தல். பல்வேறு பழமரங்களின் இலைகள் கூட கால்நடைகளின் தீவனமாக பயன்படும். இதனால், விவசாய பயிர்களுடன் பழமரங்களையும் ஆங்காங்கே நட்டு வளர்க்கலாம்.

4. மரங்கள், பழமரங்கள் ஆகியவற்றுடன் கால்நடைகளுக்கான தீவன புல்வகைகளை வளர்த்தல். அதாவது சில வகையான புற்கள் மரங்களின் அடியில் கூட எளிதாக வளர்ந்துவிடும். இந்த வகையான புற்களை ஏற்கனவே வளர்ந்து நிற்கும் மரங்கள், பழமரங்களுக்கு இடையில் பயிர் செய்து கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தலாம்.

இப்படியான வழிவகைகளில் தீவன மரங்களையும், தீவன புற்களையும் வளர்க்கும் போது அவற்றிலிருந்து கிடைக்கும் இலை, தழைகள் கால்நடைகளுக்கு எளிதான உணவாக கிடைக்கும். இதனால் தீவன செலவு பெரிதும் குறைந்து விடும். கால்நடைகளை வளர்க்கும் போது அவற்றிலிருந்து கிடைக்கும் சாணம் நிலத்திற்கு சிறந்த இயற்கை உரமாக பயன்படும். இதனால் கடந்த பல ஆண்டுகளாக ரசாயன உரத்தினால் பாழ்பட்டு தற்போது தனது வளத்தை இழந்திருக்கும் தமிழகத்தின் விளைநிலங்கள் பலவும் மிகவிரைவில் பொலபொலப்பான இயற்கையாகவே சத்துள்ள நிலமாக மாறிவிடும்.

மேற்சொன்ன முறையில் தீவன மரங்களை வளர்க்கும் முறைக்கான ஒரு உதாரணத்தை பார்க்கலாம்.

அதாவது, சவுக்குமரத்தை ஒரு இடத்தில் பயிரிடும் போது அதே மரங்களின் இடையில் மக்காச்சோளத்தை பயிரிடலாம். இதனால் கால்நடைகளுக்கு தேவையான மக்காச்சோளம் பெரிய அளவில் செலவில்லாமல் ஆண்டு முழுவதும் கிடைத்துக் கொண்டே இருக்கும். சவுக்கை தனியாக விற்று லாபம் பார்க்கலாம்.

இது போல் வாகை மரத்தின் ஊடே கொழுக்கட்டை புல்லையும், சவுண்டல் மரத்தின் இடையே பி.என்2 புல் வகையையும், சவுக்கு மரத்தின் இடையே மக்காச்சோளம், சோளம், காராமணி போன்ற தீவனப்பயிர்களையும் பயிரிடலாம். இப்படி பயிரிடும் போது ஒரு ஏக்கரிலிருந்து 15.81 டன் அளவுக்கு சோளத்தீவன பயிர் கிடைக்கும்.
இது தவிர அதே ஒரு ஏக்கரில்  வளர்க்கப்படும் சவுண்டல் மரத்திலிருந்து 5.30 டன் அளவுக்கு உலர் தீவனமும், வாகை மரம் எனறால் 6.63 டன் அளவுக்கு உலர் தீவனமும் கிடைக்கும்.

எனவே, தற்போது தமிழகத்தில் ஆடு, மாடுகள் வளர்ப்பை அதிகரிக்க தீவிரமான முயற்சி எடுக்கப்பட்டுள்ள நிலையில் கிராமங்களில் வேளாண்காடுகளையும் அதிகரித்தால் விவசாயிகள் செலவில்லாமல் அதிக வருமானம் பெறலாம்.தீவன மரங்களை கிராமங்கள் தோறும் நடுவதால், கிராமங்களில் எங்கு பார்த்தாலும் பச்சைபசேல் என்று மரங்கள் வளர்ந்து நிற்கும். கிராம மக்களும் தங்களுக்கு தேவையான எரிபொருளுக்காகவும் இவற்றை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மேலும் கிராம மக்கள் சுவாசிக்க சுத்தமான பிராணவாயுவும் இந்த மரங்களிலிருந்து கிடைக்கும். சாணஎரிவாயு கலன் அமைத்து மின்சாரம் தயாரிக்கலாம். இப்படி பலபல பலன்களை ஒன்றன் பின் ஒன்றாக செய்து கொண்டே போகலம். ஆகவே, கிராமத்திலிருந்து வந்து நகரத்தில் தற்போது வசித்து வரும் இளைஞர்கள் தங்களது கிராம மக்களுக்கு இந்த தகவல்களை கொண்டு சேருங்கள். உங்கள் கிராமமக்கள் பலன் பெறட்டும். சமுதாயம் அமைதியாக முன்னேறட்டும்.

5 கருத்துகள்: (+add yours?)

mohan சொன்னது…

super

suryajeeva சொன்னது…

அருமையான காலகட்டத்தில் அருமையான கட்டுரை..

Rathnavel சொன்னது…

நல்ல பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துக்கள்.

தமிழினி சொன்னது…

உங்கள் பதிவை மேலும் பிரபலப் படுத்த / அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 தளத்தில் இணையுங்கள் . ஓட்டளிப்பில் புதிய மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் இப்போது தரமான பதிவுகள் அனைத்தும் முன்பை விட விரைவிலேயே பிரபலமான பக்கங்களுக்கு வந்து விடும் .தளத்தை இணைக்க இங்கே செல்லவும்

http://www.tamil10.com/


நன்றி

பெயரில்லா சொன்னது…

really very good article. it is very important awareness for animal food system.

thanks for sharing....
babu

காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today