சத்துள்ள விளை நிலம் ஒரு பொன் விளையும் பூமிநிலத்தில் எதைப் போட்டாலும் விளைச்சல் இல்லை; லாபம் இல்லை என்று சலித்துக் கொள்ளும் விவசாயிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். மண் எப்போதும் மனிதர்களை ஏமாற்றுவது இல்லை. இந்த சலிப்பு தான், சோறு போடும் நிலங்களை ரியல்எஸ்டேட்காரர்களிடம் விற்றுவிட்டு விவசாயிகள் ஓட்டாண்டிகளாக ஆக வழி செய்கிறது. ஊக்கமும், முடியும் என்ற எண்ணமும் இருந்தால் நிலத்தை பொன் விளையும் பூமியாக மாற்றலாம். விவசாயமே படிக்காத, விவசாயத்தில் பழக்கமே இல்லாத பாரதி " காணி நிலம் வேண்டும்" என்று பாடியதில் இருந்த ஊக்கம் விவசாயிகளுக்கு இல்லையே என்பது தான் வேதனை. மழை ஏமாற்றினால் கூட எளிதாக பாசனம் செய்யலாம்; அந்த விவசாயி தனது நிலத்தில் பண்ணைக்குட்டை என்ற நீர் சேமிப்பு அமைப்பை உருவாக்கியிருந்தால்!

அதாவது மழை பெய்யும் போது அதை தேக்கி வைக்க செயற்கையான குட்டை போன்ற அமைப்பில் நீரை தேக்கி வைத்திருக்க வேண்டும். அந்த குட்டையில் உள்ள நீர் ஆவியாகி விடாதபடி குட்டையின் கரையை சுற்றிலும் மரங்களை நட்டு வைத்திருக்க வேண்டும். பிறகு ஏன் நீர் பற்றாக்குறை வரப்போகிறது? எனவே, விவசாயிகளே நிலத்தை யாருக்கும் விற்பனை செய்யாதீர்கள். ஊக்கத்துடன் பயிரிடுங்கள். அதற்கு முன் உங்கள் மண்ணின் வளத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

ஒவ்வொரு வகை மண்ணிலும் ஒவ்வொரு வகையான பயிர்கள் விளைகின்றன. மண் எத்தகைய வளம் மிக்கது, அந்த மண்ணில் எதை பயிரிடலாம் என்பதை தெரிந்து கொண்டால் தான் அதிக அளவில் மகசூலை பெற முடியும். இது நிலத்திற்கு மட்டும் அல்ல. வீட்டில் தொட்டிகளில் செடிகள் வைக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த தொட்டியில் இடப்படும் மண்ணில் உள்ள சத்துக்களின் அளவை அறிந்து கொள்வது நல்லது.

மண்ணின் அடங்கியுள்ள சத்துப் பொருட்களை பொறுத்து தான் பயிர்களின் வளர்ச்சி அமைகிறது. பார்வைக்கு செழிப்பாக தோன்றும் மண்ணில் சில சத்துக்குறைபாடு இருக்கலாம். எந்த சத்து குறைவாக இருக்கிறது என்பதை மண் பரிசோதனை மூலம் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்.

மண் பரிசோதனை முடிவுகளை வைத்து அந்த நிலத்தில் என்ன வகையான பயிர்களை விளைவிக்கலாம், எந்த வகை பழமரங்களை நடலாம் என்று முடிவு செய்யலாம். இந்த முடிவுகளை கொண்டு குறிப்பிட்ட அந்த மண்ணில் உள்ள எந்த சத்துக்கள் குறைவாக இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ள முடியும். இதை தெரிந்து கொள்வதால், அந்த மண்ணில் குறைந்து காணப்படும் சத்துக்களை ஈடுகட்ட தேவையான உரங்களையும், மற்ற தாது உப்புக்களையும் இட்டு முழுமையான சத்துக்கள் நிரம்பிய மண்ணாக மாற்ற முடியும்.

மண்ணில் பொதுவான குறைபாடுகளாக சில பிரச்சினைகள் காணப்படுவதுண்டு. மேல் மண் இறுக்கம், ஆழமற்ற மண், உவர் மண் மற்றும் களிமண் ஆகிய பிரச்சனைகள் தான் அவை. இந்த குறைகளையும் நிவர்த்தி செய்து வளமான மண்ணாக மாற்றினால் எந்த நிலத்திலும் சிறப்பான முறையில் பயிர் செய்து அதிக மகசூல் பெறலாம்.

கீழ்க்காணும் உத்திகளால் மண்ணின் வளத்தை மேம்படுத்த முடியும்.

மேல் மண் இறுக்கம்
மழைத்துளிகளால் நிலத்தில் வந்து  மோதும்போதும், டிராக்டர் போன்ற பெரிய கனஇயந்திரங்களை பயன்படுத்தும் போதும் மற்றும் இரும்பு ஆக்சைடு போன்ற ரசாயன மாற்றங்கள் ஏற்படுவதாலும் மண்ணில் இறுக்கம் ஏற்படுகிறது. இந்த வகை மண்ணில் நீரை பாய்ச்சினால், அந்த மண்ணின் மேல் உள்ள  மண்கட்டிகள் உடைந்து சிறு துகள்களாக பிரியும். அப்போது அதில் கலந்திருக்கும் களிமண், இரும்பு ஆக்சைடுடன் சேர்ந்து கொலகொலப்பான ஒரு கட்டி போல் மாறிவிடுகிறது. இதனை தடுத்து மண்ணின் பொலபொலப்பை அதிகரிக்க தொழுஉரம், நார்கழிவு, ஜிப்சம் இட்டு சரி செய்யலாம். இதனால் மண்ணின் நீரோட்டம் காற்றோட்டம் மற்றும் பௌதீகத் தன்மை மேம்பட்டு மண் வளமாகிறது.

ஆழமற்ற மண்
இந்த குறைபாடு இயற்கையிலேயே அமைந்தது. இதை மாற்றுவது கடினம். எனவே, இத்தகைய மண்ணில் மேல்வாரியாக வேர் பரவும் பயிர்களே நன்கு வளர வாய்ப்புள்ளது. ஒரளவிற்கு நெல் சாகுபடிக்கு ஏற்றது. மேலும் இந்த நிலங்களில் சரிவு ஏற்படாதவண்ணம் வரப்புகள் அமைத்தல் அவசியம்.

உவர் நிலம்
மண்ணில் குளோரைடு மற்றும் சல்பேட் உப்புகள் அதிகமாக இருப்பதால் உவர் நிலம் ஏற்படுகிறது. இந்நிலங்களில் பயிர் விதைகள் முளைக்க முடியாமல் போய்விடுகிறது. இந்த இடத்தில் பூமியில் காணப்படும் நீரில் கரைந்துள்ள உப்புக்கள் அதிக அடர்த்தியாக இருப்பதால் பயிரிகளின் வேர்களால் நீரை ஈர்க்க வலுவில்லாமல் இறுதியில் பயிர் வாடி விடுகிறது. இவை மண்ணிலுள்ள மற்றும் பாசன நீரில் உள்ள உப்புக்களால் ஏற்படுகிறது. முதலில் வயலை சமன் செய்து பின்பு நல்ல வரப்புகள் அமைத்து நீரை பாய்ச்சி தேக்கி பின்பு தொழி உழவு செய்வதால் நீரில் உப்புகள் கரைந்து விடும். இந்த நீரை வடிகால் மூலம் வெளியேற்ற வேண்டும். இது போல பல முறை செய்வதால் உவர் நிலம் நல்ல நிலமாக மாறும்.

களர் நிலம்
மண்ணிலுள்ள சோடியம் உப்புக்களின் அளவு அதிகமாகும் போது களர்நிலம் உருவாகிறது. இந்த வகை மண்ணில் காரத்தன்மை அதிகமாக காணப்படும். இத்தகைய மண்ணில் கால்சியம் சல்பேட் என்கிற ஜிப்சம் இடும் போது சோடியம் உப்புக்கள் சல்பேட் உப்புக்களுடன் சேர்ந்து சோடியம் சல்பேட்டாக நீரில் கரையும் உப்பாக மாறி வெளியேற்றப்படுகின்றது. இது போல் பல முறை நீர் விட்டு கலக்கி பின் இருத்து வடிப்பதால் இந்த குறைபாட்டிலிருந்து மண்ணிற்கு நிவர்த்தி கிடைக்கிறது.

த்துடன் மண்ணின் வளத்தை மேம்படுத்த ஒரு முக்கிய உத்தி உண்டு. பசுந்தாள் பயிர்கள் எனப்படும் சில சிறிய வகை பயிர்களை நிலத்தில் மக்க வைத்து அவற்றை நிலத்திற்கே உரமாக மாற்றி விடலாம். இந்த பயிர்களில் காணப்படும் சத்துக்கள் சத்தில்லாத நிலத்தை கூட சத்து மிகுந்த வலுவான நிலமாக மாற்றிவிடுகின்றன. அதையும் இங்கு பார்க்கலாம்.
பசுந்தாள் உர பயிர்கள்

மண்ணின் வளத்தை மேம்படுத்தவும் தேவையான தழைச்சத்தை பெற பசுந்தாள் உரங்கள் உதவுகின்றன. பசுந்தாள் உரப் பயிர்கள் இரண்டு வகைப்படும். பயறு வகை செடிகளான செஸ்பேரியா எனப்படும் சீமை அகத்தி, சணப்பு, தக்கைப்பூண்டு, நரிப்பயறு, தட்டைப்பயறு போன்றவை ஒரு வகை. மரப்பயிர்களான அகத்தி, கிளசிரிடியா, சுபாபுல் போன்றவை மற்றொரு வகை. இவை தவிர தானாக வளரும் கொளுஞ்சி, ஆவாரை,எருக்கு, ஆதாளை ஆகிய செடிகளும் பசுந்தழை உரமாக பயன்படுத்தப்படுகின்றன.

பசுந்தாளுரங்களை மண்ணில் இடும் போது கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் அவற்றை மக்க செய்கின்றன. அப்படி மக்கி சிதைக்கப்படும் போது இந்த செடிகளில் இருக்கும் பேரூட்டம் மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் வெளியாகின்றன. இவை பயிர்கள் செழித்து வளர உதவுகின்றன. நுண்ணுயிர்களின் பெருக்கம் அதிகரிக்கும் போது அவற்றிலிருந்து பல அங்கக அமிலங்களும், பயிர் வளர்ச்சி ஊக்கிகளும் நொதிகளும் மற்றும் சர்க்கரை பொருட்களும் வெளிப்பட்டு மண்ணில் கரையாத நிலையிலுள்ள ரசாயன உரங்களை கரைத்து பயிர்கள் எடுத்துக் கொள்ளும் படி எளிய படிவங்களாக மாற்றும். இது பயிர் வளர்ச்சியை ஊக்குவிப்பதாக அமையும்.

பசுந்தாள் உரப்பயிர்கள் நீண்ட ஆணிவேர்கள் கொண்டவை. அதனால் மண்ணில் ஆழமான பகுதிகளுக்குள் ஊடுருவிச் சென்று ஊட்டச்சத்துக்களை கிரகிப்பதுடன் மண்ணிற்கு காற்றோட்டம், நீர் ஊடுருவும் தன்மை அதிகரிக்க செய்கிறது. கோடையில் இந்த உரப்பயிர்களை பயிர் செய்வதால் மண் போர்வை போல் செயல்பட்டு மண் நீர் ஆவியாவது தடுக்கப்பட்டு மண் ஈரத்தால் வேண்டப்படாத உப்புக்கள் கரைந்து பயிர்களின் வேர்களை தாக்காத வண்ணம் வெளியேற்றப்படுகின்றன.

எனவே பயிர் செய்யாத கோடை காலங்களிலோ, பயிர் செய்வதற்கு முன் உரிய பருவ காலங்களில் மழை நீரைக் கொண்டு பசுந்தாளுரப் பயிரினை தனிப்பயிராக விதைத்து பூக்கும் தருணத்தில் அப்படியே மடக்கி உழவு செய்வதால் மண்ணிற்கு அதிக அளவில் அங்ககச் சத்து கிடைத்து மண்வளத்தை பெருக்கலாம். இவ்வாறு பயிர்களுக்கு பசுந்தாள் உரங்கள் இடுவதால் உரச்செலவையும் குறைக்கலாம். இந்த முறைகளை கையாண்டு மண்ணின் குறைகளை போக்கி விவசாயிகள் மண்ணில் பொன்னை காணலாம்.

4 கருத்துகள்: (+add yours?)

suryajeeva சொன்னது…

நிஜமாகவே அருமையான பதிவு... ஆனால் விவசாயிகள் என்ன தான் மண்ணுடன் போராடி வியர்வை பாய்ச்சி விளைவித்தாலும் அதற்க்கு உண்டான ஊதியம் கிடைக்கக் வில்லை என்ற உண்மை படித்த பல பேருக்கு தெரிவதில்லை.. அதை குறித்து நீங்கள் ஒரு கட்டுரை எழுதினால் அருமையாக இருக்கும்...

சத்ரியன் சொன்னது…

பொன் விளையும் பூமி - ஒரு சிறப்பான கட்டுரை என்பதில் ஐயமில்லை. கடின உழைப்பை விதைக்கும் விவசாயிகளுக்கு வறுமையே மிஞ்சுகிறதே!

Online Works For All சொன்னது…

அருமையான தகவல்

100% Without Investment Data Entry Jobs !

FOR MORE DETAILS VISIT OUR WEBSITE : http://bestaffiliatejobs.blogspot.com

contactbabu சொன்னது…

hello Mr. Online Works For All

pls dont paste your adds with this blogspot.

How hard we are (farmers) working every body knows.

But as per your add, how peoples will get money without working anything?????

pls understand me...

thanks

காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today