4 கருத்துகள்வீட்டிற்கு வேண்டிய காய்கறிகளை நாமே உற்பத்தி செய்து கொள்ள வீட்டுத்தோட்டத்தை அமைக்கலாம். குறிப்பாக கிராம மக்கள் கொல்லைப்புறத்தில் கோழிவளர்ப்பில் ஈடுபட்டாலும், வீட்டை ஒட்டி சிறிய காய்கறி தோட்டங்கள் அமைத்தால் சிறுசேமிப்புக்கு உதவும். வீட்டிற்கு தேவையான காய்கறிகளை பெறமுடியும்.
எங்கு அமைக்கலாம்?
வீட்டின்முன்புறம், பின்புறம், வீட்டை சுற்றி இருக்கும் காலி இடம் ஆகியவற்றிலும், நகர்ப்புறம் என்றால் சிறு தொட்டிகளிலும், மாடியிலும் அமைக்கலாம்.

விதை வாங்க...
அரசு விதைப்பண்ணைகளிலும், வேளாண்மை தோட்டக்கலைத்துறை அலுவலகங்களிலும், அங்கீகரிக்கப்பட்ட விற்பனை மையங்களிலும் அல்லது பண்ணை மற்றும் ஆராய்ச்சி மையங்களில் தரமான விதைகளை வாங்கலாம். தற்போது சில விதை உற்பத்தி நிறுவனங்கள் வீட்டு தோட்ட விதை பெட்டிகள் என்ற பெயரில் பல்வேறு விதைகள் கொண்ட சிறு பெட்டிகளை சந்தையில் விற்பனை செய்து வருகின்றன.

சாகுபடி
கீரை விதை, பாகல், பூசணி, வெண்டை, சீனிஅவரை, முள்ளங்கி போன்றவற்றை விதைப்பது முறையாகும். கத்தரி, மிளகாய், தக்காளி ஆகியவற்றை நடுவது சிறந்தது.

இடத்தை தயார் செய்தல்
தேர்வு செய்த இடத்தின் மண்ணை கொத்தி எடுத்து மிருதுவாக்க வேண்டும். கல், கட்டிகள் இருந்தால் அப்புறப்படுத்த வேண்டும். மட்கிய எரு உரம் இட்டு நன்றாக கிளறி சிறுசிறு பாத்திகளாக அமைக்க வேண்டும்.
எந்த செடிகளை நட வேண்டும்
தேர்வு செய்த மண்ணுக்கும், பட்டத்துக்கும் ஏற்ற காய்கறிகளை தேர்வு செய்ய வேண்டும். காய்கறி வகைகளில் முள்ளங்கி, கத்தரி, தக்காளி,வெண்டை, மிளகாய், சீனிஅவரை ஆகியவற்றையும், கீரை வகைகளில் முருங்கை கீரை, தண்டுக்கீரை, அரைக்கீரை, பசலைக்கீரை, அகத்திக்கீரை, பந்தல் காய்கறிகளில் அவரை, பாகல், புடலை மற்றும் தரையில் படரும் பூசணி ஆகியவற்றை பயிரிட தேர்வு செய்யலாம்.

விதைக்க
வெண்டையை மண்ணுடன் தொழுஉரம் அல்லது நன்கு மட்கிய உரமிட்டு மண்ணும், உரமும் நன்றாக சேரும் வகையில் புரட்டி போட்டு 45 சென்டிமீட்டர் இடைவெளியில் பார்கள் அமைத்து 30 செமீட்டர் இடைவெளியில் 2 விதைகளாக ஊன்ற வேண்டும். கொத்தவரையை 45 சென்டிமீட்டர் இடைவெளியில் பார்கள் அமைத்து 15 சென்டி மீட்டர் இடைவெளியில் ஊன்றலாம். முள்ளங்கிக்கு இறுக்கமான மண் ஏற்றதல்ல. பார்கள் 45 சென்டிமீட்டர் இடைவெளி விட்டு குத்துக்கு 4 விதைகளை ஒன்றே கால் சென்டிமீட்டர் ஆழத்தில் விதைக்க வேண்டும்.

பந்தல் காய்கறிகளான அவரை, பாகல்,புடலை, பீர்க்கங்காய் போன்றவற்றை இருபந்தலாக நடலாம். சாம்பல் பூசணி, சர்க்கரை பூசணி விதைகளை 45 சென்டிமீட்டர் நீள, அகல ஆழமுள்ள குழி தயாரித்து அந்த குழியில் தொழுஉரம் இடுதல் வேண்டும். ஒரு குழிக்கு 7 விதை வீதம் விதைக்க வேண்டும். முளைத்த உடன் நல்ல நாற்றுக்களை வைத்துக் கொண்டு மற்றவற்றை கலைத்து விட வேண்டும்.   

கறி வேப்பிலை
வீட்டுத் தோட்டத்தில் கட்டாயம் ஒரு கறி வேப்பிலை மரத்தை நடுவது நல்லது. கறிவேப்பிலையை தொடர்ந்து உணவில் சேர்ப்பதால் புரதம், கொழுப்புசத்து, மாவு சத்து, இரும்பு சத்து, வைட்டமின் ஏ,சி போன்ற சத்துக்களும் கிடைக்கின்றன.
கீரைவகைகளை சிறுசிறு பாத்திகளாக பிரித்து அதில் கீரைவிதைகளை நட்டு நீர்பாய்ச்சி நட்ட 30 வது நாளிலிருந்து அறுவடை செய்யலாம்.
இயற்கை உரம் இடுதல்
வீட்டிற்கு தேவையான காய்கறிகளுக்கு ரசாயன உரம் தேவையில்லை. கிராமபுறங்களில் எளிதாக கிடைக்கும் மாட்டு சாணம், ஆட்டுச்சாணம், இலை தழைகளை எடுத்து இயற்கை உரம் தயாரிக்கலாம். இவற்றை எடுத்து சிறு குழி தோண்டி அதில் இட வேண்டும். பின்னர் சாணக்கரைசல் ஊற்றி மண்ணில் மூடி 50 நாட்களுக்கு பின் நன்கு மட்கிய உரமாக பயன்படுத்தலாம். சிறிதளவு உரத்தை செடியின் அடியில் இட்டு மண் அணைத்து நீர் பாய்ச்ச வேண்டும்.
பூச்சி மற்றும் நோய்க்கட்டுப்பாடு
உரமிடும் போது வேப்பம் பிண்ணாக்கு சேர்த்து இடவேண்டும். இலைஉண்ணும் புழுக்கள், பூச்சிகள், சாறுஉறிஞ்சு பூச்சிகளை அழிக்க வேப்ப எண்ணெய் கரைசல் முதலியவை தயாரித்து தெளிக்க வேண்டும். பூஞ்சாண நோய்களுக்கு வேப்ப விதை கரைசலும், வேப்பம் பிண்ணாக்கு இடித்த பொடியை பயன்படுத்தலாம். இவற்றை செடியின் அடியில் இட்டு மண்ணால் மூடி நீர்ப்பாய்ச்ச வேண்டும்.
அறுவடை
கத்தரி மூன்றாவது மாதம் முதலும், தக்காளி நட்ட 60 வது நாளில் இருந்தும் பழம் பறிக்கலாம். மிளகாய் 70 வது நாளில் இருந்தும், முள்ளங்கி 45 வது நாளில் இருந்தும் பறிக்கலாம்.

மூலிகை 1-அமுக்கிரா

7 கருத்துகள்
 மரபு சார்ந்த பயிர்களின் சாகுபடி பல நேரங்களில் எதிர்பார்த்த லாபத்த¬ தருவதில்லை என்று விவசாயிகள் சலிப்பில் ஆழ்ந்து போவார்கள். இந்தியாவை பொறுத்தமட்டில் இங்கு விளையும் மூலிகைகளுக்கு வெளிநாடுகளில் அதிக வரவேற்பு இருக்கிறது. இதில் குறிப்பாக அமுக்கிரா கிழங்கு என்ற நரம்புத்தளர்ச்சி, இரத்தக் கொதிப்பு, ஆண்மைக்குறைவு போன்ற பிரச்சனைகளுக்கு மருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை கிழங்கிற்கு அதிக தேவை உள்ளது. சுமார் ஐந்து அடிவரை வளரக்கூடிய இந்த குறுஞ்செடியில் இதன் கிழங்கே முக்கியமான மருத்துவப் பொருளாக உள்ளது. இந்த செடியின் வேர்க்கிழங்கிலிருந்து இரு முக்கிய வேதிப்பொருட்களான "வித்தானின்" " சோம்னியன்" என்பவை பிரித்தெடுக்கப்பட்டு மூலிகை மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.

அமுக்கிரா கிழங்கில் வித்தாபெரின் என்ற வேதிப்பொருள் உள்ளது. இது தொழுநோய் மற்றும் புற்றுநோயை குணப்படுத்துவதில் மிகச்சிறந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர அமுக்கிரா பொதுவாக உடல்தேற்றியாகவும், பித்தநீர் பெருக்கியாகவும், பசி உண்டாக்கவும் சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது. இதன் இலைகள் காய்ச்சலை தீர்க்கவும், குடற்புழுக்களை கொல்லவும் பயன்படுகிறது. அதிகளவு அன்னிய செலாவணியை பெற்றுக்கூடிய அமுக்கிராகிழங்கு சாகுபடி விவசாயிகளுக்கு எக்கசக்க லாபத்தை பெற்று தரும் என்பதில் மாற்றமில்லை. இதன் சாகுபடி குறித்த விவரங்களை பார்க்கலாம்.

சித்த மருத்துவத்தில் அஸ்வகந்தி என்றழைக்கப்படும் அமுக்கிராக்கிழங்கு ஒரு வெப்ப மண்டல பயிராகும். வேரின் வளர்ச்சிக்கும் தரமான வேர்களை பெறுவதற்கும் ஆண்டு தோறும் 60 முமுதல் 75 செமீ மழையளவு இருக்க வேண்டும். ஆனால் வேர்கள் முதிர்ச்சி பெறும் நிலையில் மழை தொடர்ந்து பெய்தால், வேரின் உற்பத்தி மற்றும் மருந்து பொருளின் அளவு குறைந்து விடும்.

அமுக்கிரா கிழங்கு வறட்சியான பிரதேசங்களிலும், எல்லாவகையான தட்பவெப்ப நிலையிலும் நன்றாக வளரும்.  செம்மண் கலந்த மணற்பாங்கான நல்ல வடிகால் வசதியுடைய இடங்களிலும் செழித்து வளரும். கடல் மட்டத்திலிருந்து 600 முதல் 1200 மீட்டர் உயரமுள்ள இடங்களில் பயிரிடலாம்.
விதைப்புக் காலத்ததை பொறுத்த மட்டில், ஜுன்/ஜுலை மாதங்கள் ஏற்றவை. நாற்றாங்காலிலி ஏப்ரல்-மே மாதங்களில் விதைகளை தூவியும் விதைக்கலாம் அல்லது வரிசையாகவும் விதைக்கலாம். ஒரு எக்டர் நிலத்தில் சாகுபடி செய்ய, 5 கிலோ விதை போதுமானது. விதை முளைத்து 35 முதல் 45 நாட்கள் ஆனபின், நாற்றுக்களை நடவுக்கு பயன்படுத்தலாம்.

நடவு செய்யப்படும் நிலத்தை நன்கு உழுது, ஒரு ஏக்கருக்கு 4 டன் தொழு உரம் இட்டு பண்படுத்திய பின், 60 செ.மீட்டர் அளவில் பார்கள் அமைக்க வேண்டும். இந்த பார்களில், 60 செ.மீ இடைவெளியில் நாற்றுக்களை நடவு செய்ய வேண்டும். மானவாரி நிலங்களில் நாற்றங்காலை தவிர்த்து, நேரிடையாக நிலங்களில் விதைகளை தூவி சாகுபடி செய்யலாம். செடிகள் முளைத்து 25 நாட்கள் ஆன பிறகு, செடிகளின் எண்ணிக்கை ஏக்கருக்கு சுமார் 8000 முதல் 10 ஆயிரம் வரை மட்டுமே இருக்கும்படி மற்ற உதிரி செடிகளை களைந்து விட வேண்டும்.

இதற்கடுத்து செடிகள் வளர்ந்து வரும் நிலையில், இது மூலிகை செடி என்பதால் ரசாயன உரங்களை தவிர்த்தும், பூச்சி மருந்துகள் அடிக்காமலும் சாகுபடி செய்வது நல்லது. எனவே, இவற்றுக்கு பதிலாக தொழுஉரங்கள், மண்புழு உரங்கள் மற்றும் பசுந்தாள் உரங்கள் பயன்படுத்தலாம்.
அமுக்கிரா கிழங்கு சாகுபடியை பொறுத்த மட்டில் நீர்ப்பாசனம் முக்கியம். மண்ணில் அதிக அளவில் நீர் இருந்தால் பயிர் வளர்ச்சி பாதிக்கப்படக் கூடும். எனவே, நீர்ப்பாசனத்தை தவிர்ப்பது நல்லது. எனினும், மிகவும் வறட்சியான காலநிலையில் பயிரின் உயிர்காக்கும் அளவில் நீர்பாசனம் செய்யலாம்.

செடியில் வேர்க்கிழங்குகள் நன்றாக வளர்ந்த நிலையில் அறுவடை செய்யலாம். அதாவது, ஏக்கருககு 120 கிலோ முதல் 200 கிலோ வரை உலர்ந்த வேரினையும், 25 முதல் 30 கிலோ விதைகளையும் மகசூலாக பெறலாம். செடியில் டிசம்பர் மாதத்தில் பூத்து காய்க்க தொடங்கும். செடிகளை நடவு செய்து 5 முதல் 6 மாதத்தில் இதன் இலைகளும், கனிகளும் வாடத் தொடங்கும். இந்த நிலையில், செடியினை வேருடன் அறுவடை செய்து, வேர்ப்பாகத்தை சுத்தம் செய்து 7 முதல் 10 செ.மீ அளவுள்ள துண்டுகளாக வெட்டி நிழற்பாங்கான இடத்தில் உலர்த்த வேண்டும். தற்போது வேரின் தரம் நான்கு வகைகளாக பிரிக்கப்படுகின்றன.
முதல் தரம்
வேரின் நீளம் ஏழு செ.மீ ஆகவும், அதன் குறுக்களவு 1.0 முதல் 1.5 செ.மீட்டர் விட்டம் உள்ளதாகவும் இருக்கும். வேர்கள் கடினமாகவும், அவற்றின் தோலின் நிறம் வெண்மையாகவும் இருக்க வேண்டும்.
இரண்டாவது தரம்
வேரின் நீளம் 5 செ.மீ ஆகவும், குறுக்களவு 1.0 செ.மீ ஆகவும், தோலின் நிறம் சுமாராகவும் இருக்க வேண்டும்.
மூன்றாம் தரம்
வேரின்நீளம் மூன்று செ.மீ ஆகவும், குறுக்களவு 1.0 செ.மீக்கு குறைவாகவும், தோலின் நிறம் சுமாராகவும் இருக்க வேண்டும்.
நான்காம் தரம்
சிறிய துண்டுகளும், வேரின் உட்புறம் கடினமில்லாமலும் இருக்க வேண்டும். மிகவும் பருமனான வேர்களில் மருந்து பொருளின் அளவு குறைவாக இருப்பதால் அவற்றுக்கு அதிக விலை இல்லை.


அலங்கார மீன்வளர்ப்பு ஒரு சிறந்த தொழில்வாய்ப்பு

4 கருத்துகள்

ண்ணுக்கு அழகான, விதவிதமான வண்ணங்களை கொண்ட சிறுமீன்களை கண்ணாடி தொட்டிகளில் வளர்ப்பது அதிகரித்து வருகிறது. உயிருள்ள காட்சி பொருளாக இருப்பதால் இது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவருகின்றன. அலங்கார மீன்களை பொழுது போக்கிற்காக வளர்த்த காலம் மாறி அது நல்ல தொழிலாக மாறியிருக்கிறது. இந்த மீன்களை இனப்பெருக்க அடிப்படையில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் மீன்கள் மற்றும் குட்டியிடும் மீன்கள் என்று பிரிக்கலாம். குட்டியிடும் மீன்களில் கப்பீஸ், மோலி, பிளாட்டி மற்றும் வாள்மீன்கள் முக்கியமானவை.

கப்பீஸ்- இதில் ஆண்மீன்கள் சிவப்பு, பச்சை, கருப்பு,நீலம் மற்றும் கலப்பு நிறங்களிலும் காணப்படுகின்றன. இந்த மீன்களை பராமரிப்பது எளிது. அதிகமான வெப்பநிலையை தாங்கி வளரும். ஆண்மீன்கள் 2.5 சென்டிமீட்டர்நீளம் வரையிலும், பெண்மீன்கள் 5 செ.மீ நீளமும் வளரக்கூடியது. பெண்மீன்கள் 2.5 செமீ மற்றும் ஆண்மீன்கள் 2 செ.மீ வளர்ந்தவுடன் இனப்பெருக்கம் செய்ய தொடங்குகின்றன. இந்த மீன்கள் நன்கு வளரவும், இனப்பெருக்கம் செய்யவும் 22 முதல் 24 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையும், காரஅமிலத்தன்மை 7 முதல் 8க்குள் இருப்பது நல்லது. இந்த மீன்கள் 4 லிருந்து 6 வாரத்திற்குள் குட்டியிடும். பெண்மீன்கள் தாமாகவே தொடர்ந்து குட்டியிடும் தன்மையுடயவை. அலங்கார மீன்வளர்ப்பில் புதிதாக ஈடுபடுவோர் முதலில் இந்த வகை மீன்களை வளர்ப்பது நல்லது.
மோலி மீன்கள்
இந்த மீன்கள் 9 செமீ வரை உப்புத்தன்மையுடைய தண்ணீரில் நன்றாக வளரக்கூடியது. 24 முதல் 28 சென்டிகிரேட் வெப்பநிலையில் வளரும். இவை தாவர வகை உணவுகளையே விரும்பி உண்ணும். மோலி வளர்க்கும் தொட்டிகளில் ஒரளவு சூரிய ஒளி படும் வகையில் இருந்தால் பச்சை பாசிகள் வளரும். இது மீன்களுக்கு உணவாகும். இனப்பெருக்கத்திற்கு ஒரு ஆண்மீனுக்கு 3 முதல் 5 பெண்மீன்களை விடுவது நல்லது. இவை 5 முதல் 10 வார இடைவெளியில் குட்டிகள் போடும். இதில் சில்வர் மோலி, கருமோலி, வெள்ளைமோலி, ஆரஞ்சு மோலி, சாக்லேட் மோலி, செயில் துடுப்பு மோலி ஆகியவை முக்கியமானதாகும்.
பிளாட்டி
பளிச்சிடும் சிவப்பு, பச்சை, நீலப்பச்சை ஆகிய நிறங்களில் பிளாட்டி மீன்கள் காணப்படுகின்றன. ஆண்மீன்கள் 3.8 செ.மீ வளரும். இனப்பெருக்கத்திற்கு ஒரு ஆண்மீனுக்கு 3 பெண்மீன்கள் விடுவது நல்லது. இவை 3,4 வரை இடைவெளியில் குட்டியிடுகின்றன.
வாள்வால் மீன்
பிளாட்டி மீனை போன்று இருக்கும் இந்த மீன்கள் சிவப்பு நிறத்தில் காணப்படும். ஆண்மீன்களில் வால்துடுப்பு, வாள் போன்று நீட்டிக் கொண்டிருக்கும். ஆண்மீன்கள் 8.3 செ.மீ, பெண்மீன்கள் 12 செ.மீ நீளம் வரையும் வளரக்கூடியன. பெண்மீன்கள் 5 செ.மீ நீளத்திற்கு வளரும் போது இனப்பெருக்கம் செய்ய தொடங்குகின்றன. உயிர் உணவுகளையும், தாவர உணவுகளையும் விரும்பி உண்ணும்.
இனப்பெருக்கம்
இனப்பெருக்கத்திற்கு தகுதியான ஆண்மீன்களை அவற்றின் இனப்பெருக்க உறுப்பை கொண்டு அடையாளம் காணலாம். ஆண்மீன்களின் இனப்பெருக்க உறுப்பை கோனோபோடியம் என்று அழைப்பார்கள். ஒரு முறை கருவுற்ற பெண்மீன், 5லிருந்து 6 வாரத்திற்கு ஒரு முறையாக 8 முதல் 10 முறை குட்டியிடும் தன்மை கொண்டது. கருவுற்ற சினை பெண்மீன்களுக்கு வயிறு நன்கு பருத்திருக்கும். பெண்மீன்களின் குதத்திற்கு அருகில் கருமையான புள்ளி ஒன்று காணப்படும். இவ்விரு அறிகுறிகளையும் வைத்து கருவுற்ற மீன்களை அடையாளம் காணலாம்.

ஒரு நேரத்தில் ஒரு பெண்மீன் 50 குட்டிகள் வரை இடும். குட்டிகளின் எண்ணிக்கை, பெண்மீன்களின் நீளத்தையும், வயதையும் பொறுத்து மாறுபடும். பொதுவாக குட்டியிடும் மீன்களை 5-6 வாரத்திற்கு ஒரு முறை இனப்பெருக்கம் செய்தல் நல்லது.
ஒரே தொட்டியில் ஆணும்,பெண்ணும் சேர்த்து வளர்க்கப்பட்ட மீன்களிலிருந்து சேர்க்கை மூலம் கருவுற்ற பெண்மீன்களை வயிறு பெரிதாக காணப்படுவதன் மூலம் அடையாளம் கண்டு அவற்றை தனியாக பிரித்தெடுத்து இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்த வேண்டும். சத்தான குறுணை உணவு, புழு போன்றவற்றை அளித்து வந்தால் 4 முதல் 6 வாரத்திற்கு ஒரு முறையென தொடர்ந்து குட்டிகளை பெற்றுக் கொண்டேயிருக்கும்.

சரியான அளவுள்ள கண்ணாடி தொட்டியை நீரால் நிரப்பி, தேர்வு செய்யப்பட்டுள்ள கருவுற்ற பெண்மீனை தொட்டியில் இருப்பு செய்ய வேண்டும். ஒன்று அல்லது இரண்டு நாட்களில் தாய்மீன், குட்டிகளை இடை இடையே வெளியிடும். முழுவதுமாக குட்டிகளை வெளியிட்டதும், தாய்மீனை அப்புறப்படுத்தி விடவேண்டும். பின்னர் இரண்டு நாட்கள் சென்றதும், குட்டிகளை பெரிய தொட்டிக்கு மாற்றி, குறுணை உணவுடன் மிதவை நுண்ணுயிரிகளையும், புழுக்களையும் அளித்து வரலாம்.

நாற்றாங்கால் குளங்கள் அமைத்து அவற்றில் தகுந்த அளவில், சாணம் மற்றும் ரசாயன உரங்கள் இட்டு, மிதவை நுண்ணுயிரிகளை இருப்பு செய்யலாம். அந்த குளங்களில், பிறந்த இளங்குஞ்சுகளை இருப்பு செய்வதன் மூலம் துரித வளர்ச்சி அடைய செய்யலாம். குட்டியிடும் மீன்கள் தான் ஈன்ற குட்டிகளையே உண்ணும் தன்மை உடையவை. எனவே தாயிடமிருந்து குட்டிகளை காப்பாற்றுவது முக்கியம்.

இனப்பெருக்கத்திற்கு தயாராக உள்ள பெண்மீன்களை கையாள்வதில் மிகவும் கவனம் தேவை. தவறுதலாக கையாள்வதால் குட்டிகள் முழுவளர்ச்சி அடையாமல் வெளிவரும் வாய்ப்புகள் உள்ளன.
வண்ணமீன் வளர்ப்பு மூலம் கிராமப்புற இளைஞர்கள் சிறந்த தொழில்வாய்ப்பை பெறலாம்.
தகவல்: தமிழ்நாடு கால்நடை ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம், திருப்பரங்குன்றம்,மதுரை.

நன்னீரில் மீன்வளர்ப்பு - நல்ல லாபம் தரும் தொழில்

1 கருத்துகள்


கிராமங்களில் உள்ள கண்மாய்கள், குளங்களில் மீன்குஞ்சுகளை இருப்பு செய்து வளர்ப்பதன் மூலம் நல்ல லாபத்தை பெற முடியும். இதற்கு நன்னீர் மீன் வளர்ப்பு என்று பெயர். தற்போது கடல் மீன்களின் விலை அதிகமாக இருப்பது, வரத்து குறைவு போன்ற காரணங்களால் நாட்டு மீன்களுக்கான தேவைப்பாடு இருந்து வருகிறது.
இந்த நிலையில் நன்னீரில் மீன்வளர்ப்பு தொடர்ந்து லாபம் தரும் தொழிலாக உருவெடுக்க வாய்ப்பிருக்கிறது. மீன் வளர்ப்பு குளத்தின் மண், நீரின் உற்பத்தி திறன், மீன்வளர்ப்போரின் அனுபவம், ஆர்வம், கையாளப்படும் தொழில்நுட்பத்தின் வகை மற்றும் மூலதனத்திற்கேற்ப எக்டரில் ஆண்டுக்கு 10 முதல் 12 டன் மீன் உற்பத்தி காணலாம்.
மீன் வளர்ப்புக்கு ஏற்ற நீர் நிலைகள்
நன்னீர் மீன் வளர்ப்பை தொடங்க நினைத்தால், தேர்வு செய்யும் நீர்நிலையானது குறைந்தது 6 மாதங்களுக்கு வற்றாத நீர் பரப்பை கொண்டிருக்க வேண்டும்.
குளத்தில் குறைந்த பட்சம் 5 அடி முதல் 6 அடி ஆழத்திற்கு நீர் இருக்க வேண்டும்.
நீரின் கார, அமிலத்தன்மை 7.5 முதல் 8.5 அளவில இருத்தல் வேண்டும்.
மீன்வளர்ப்பு நீர் பரப்பு குறைந்தது அரை ஏக்கர் அளவிற்கு இருக்க வேண்டும்.
குளத்தில் நீர் கசிவு, அதிகமான துர்நாற்றம் மற்றும் கலங்கிய நிலை இருத்தல் கூடாது.
மேலாண்மை நடவடிக்கைகள்
1. குளங்களை தயார் செய்தல்
செடி, கொடிகளையும், புல், பூண்டுகளையும் வேருடன் அகற்ற வேண்டும். கரை, நீர்வரத்து மற்றும் வடிகாலை சீரமைக்க வேண்டும். மண்ணின் கார,அமில நிலைக்கேற்ப சுண்ணாம்பு இட வேண்டும். கார,அமில நிலை 7.5- 8.5 அளவில் இருக்குமாயின் எக்டரில் 250 கிலோ சுண்ணாம்பு இடவேண்டும். அமிலத்தன்மை கூடுதல் நிலையில் சுண்ணாம்பின் தேவையும், அதற்கேற்ப கூடும். குளத்தில் அங்ககப் பொருள்களை விரைவில் மக்கச் செய்து ஊட்டச்சத்துக்களை வழங்குவதுடன் கிருமிநாசினியாகவும் சுண்ணாம்பு செயல்படுகிறது.
2. உரமிடல்
மீன்களுக்கு தேவையான இயற்கை உணவுகளான தாவர, விலங்கியல் நுண்ணுயிர்களை நிலைநிறுத்தச் செய்ய உரமிடல் வேண்டும். ஒரு எக்டருக்கு ஒரு வளர்ப்புக்காலத்தில், மாட்டுச்சாணம் 10 முதல் 12 டன் அல்லது, கோழிச்சாணம் 5 முதல் 6 டன் பன்றிச்சாணம் 2.5 முதல் 3 டன் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 250 கிலோ இட வேண்டும். மொத்தத் தேவையில் 5 ல் 1 பங்கை மீன்குஞ்சுகள் இருப்பு செய்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக அடியுரமாக இட வேண்டும். எஞ்சிய உரத்தை சமமாய் பிரித்துக் கொண்டு மாதமாதம் இட்டு வரவேண்டும். இயற்கை உரத்தையும், செயற்கையும் உரத்தையும் மாற்றி மாற்றி 15 நாட்கள் இடைவெளியில் விட்டு வருவது நல்லது.
மீன்குஞ்சு இருப்பு செய்தல்
குறுகிய காலத்தில் எடையுடன் வளரக்கூடிய, பொதுமக்களால் விரும்பி உண்ணக்கூடிய கட்லா,ரோகு,மிர்கால்,சாதாக்கெண்டை, வெள்ளிக் கெண்டை, புல்கெண்டை ஆகிய மீன்கள் தான் கூட்டின மீன்வளர்ப்புக்கு ஏற்றது. குளம், கண்மாய்களில் உள்ள நீர்த்தாவரங்களை மட்டுமே உணவாக கொள்ளக்கூடிய புல்கெண்டைகளை குளம்,கண்மாய்களில் இருப்பு செய்வதன் மூலம் நீர்த்தாவரங்களின் வளர்ச்சியைக்கட்டுப்படுத்துவதுடன், புல் கெண்டையில் மட்டுமின்ற மற்ற மீன்களின் வளர்ச்சியிலும் முன்னேற்றம் காணலாம். அனைத்து இனங்களிலும் சேர்த்து மொத்தமாக குளங்களில் எக்டருக்கு 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் மீன்குஞ்சுகள் வரையிலும் நீர்ப்பாசன கண்மாய்களில் மொத்த நீர்ப்பரப்பில் சரிபாதியை மீன்வளர்ப்பு நீர்ப்பரப்பாக கணக்கிட்டு எக்டருக்கு ஆயிரம் மீன்குஞ்சுகளும் இருப்பு செய்ய வேண்டும். இருப்பு செய்யப்படும் மீன்குஞ்சுகள் 5 சென்டிமீட்டருக்கு மேல் இருப்பது அவசியம். குளத்தின் உற்பத்தி திறனுக்கேற்ப இருப்பு செய்யப்படும் மீன்குஞ்சுகளின் இனத்தின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்து கொள்ளவும் வேண்டும்.
மேலுணவு இடல்
வளர்ப்பிலுள்ள மீன்களின் வளர்ச்சியை மேம்படுத்தி உற்பத்தியில் உயர்வு காண கூடுதலாக உணவிடுதல் அவசியம். கடலைப்புண்ணாக்கும், தவிடும் சரிசமமாக கலக்கப்பட்டு வளர்ப்பிலுள்ள மீன்களின் எடையில் 3 சதவீதம் அளவில் அன்றாடம் கூடுதல் உணவாக இட்டு வருவதன் மூலம் உற்பத்தியில் உயர்வு காணலாம். மாதத்திற்கு ஒரு முறை குளத்தில் வலையிட்டு மீன்களை பிடித்து பார்த்து வளர்ச்சி அறிந்து அதற்கேற்ப உணவுத்தேவையை நிர்ணயம் செய்து கொள்ளல் வேண்டும்.
மீன் உற்பத்தி
கிராமப்புறங்களில் உள்ள குளங்களில் கூட்டின மீன்வளர்ப்பில் மிகத்தீவிர மீன்வளர்ப்பு நடவடிக்கைகளை கையாண்டு எக்டரில் ஆண்டுக்கு சராசரியாக 2 டன் வரையிலும் மீன் உற்பத்தி செய்து 30 ஆயிரம் ரூபாய் வரையிலும் லாபம் காணலாம். நீர் பாசன கண்மாய்களில் எக்டரில் சராசரியாக 500 கிலோ வரையிலும் உற்பத்தி செய்து 5 ஆயிரம் வரையிலும் லாபம் காணலாம். சொந்தமாக குளம் அமைத்து கூட்டின மீன்வளர்ப்பில் எக்டரில் சராசரியாக 50 ஆயிரம் வரையிலும் லாபம் காணலாம்.

தகவல்: மாவட்ட ஆட்சித்தலைவர், மதுரை மாவட்டம்.
வி.இரவிச்சந்திரன்,
மீன்வளத்துறை உதவி இயக்குநர்,

பப்பாளி பழ பார் தயாரிக்க....................

0 கருத்துகள்பப்பாளி மரம் ஆண்டு முழுவதும் பலன் தரக்கூடியது. நல்ல வடிகால் வசதி கொண்ட எந்த மண்ணிலும் வளரும். எல்லா தட்பவெப்ப நிலையும் தாங்கி வளரும். தற்போது சந்தையில் பப்பாளி வரத்து சிறப்பாக உள்ளது. வாழைப்பழத்திற்கு அடுத்தபடி வருமானம் தரும் பப்பாளியில் சத்தும் ஏராளம். பப்பாளி பழம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். குறிப்பாக தற்போது பள்ளியில் படிக்கும் குழந்தைகளில் அதிகம் பேர் பார்வைக்கு குறைபாட்டால் பாதிப்புக்குள்ளாகின்றனர். கண்ணாடி அணிந்த மாணவ, மாணவிகள் ஏராளம்.

கண்களுக்கு அதிக சிரமம் கொடுப்பது, அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது உள்ளிட்ட காரணங்களால் தான் இது போல் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த குறைபாட்டுக்கு பப்பாளி ஒரு அருமருந்து. பப்பாளியில் வைட்டமின் ஏ 2020 மைக்ரோ கிராம் அளவு உள்ளது. வைட்டமின் பி 40 மில்லி கிராம், மற்றும் ரிபோபிளேவின் 250 மில்லி கிராம், இத்துடன் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஏராளமான தாதுஉப்புக்கள் உள்ளன.

பப்பாளி அஜீரணக்கோளாறு, குடற்புண், மூலம், மூச்சிறைப்பு, தோல் கொப்புளம் ஆகியவற்றை குணப்படுத்துகிறது. பப்பாளியில் இருந்து பெறப்படும் பெக்டின் என்ற வேதிப்பொருள் சிறுகுடலில் உருவாகும் ரத்தக்கசிவை சரிசெய்ய உதவுகிறது. வெயில் காலத்தில் அதிகம் கிடைக்கும் பப்பாளியை பதப்படுத்தி விடுவதன் மூலம் ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம். குறிப்பாக குழந்தைகள் விரும்பும் வகையில் பப்பாளி பழ பார் செய்து தரலாம். இதனை அவர்கள் விரும்பி உண்பார்கள். குறிப்பாக கிராம மகளிர் சுய உதவிக்குழுவினர் பப்பாளி பார் செய்து விற்பனை செய்யலாம்.
பப்பாளி பழ பார்
பப்பாளி பழக்கூழ்-1 குவளை, கான்பிளவர்-1 தேக்கரண்டி, சர்க்கரை-அரை தேக்கரண்டி, சிட்ரிக் அமிலம்-1 தேக்கரண்டி.
செய்முறை
பழுத்த பப்பாளியை தேர்வு செய்து இரண்டாக நறுக்கவும். விதை, நார்கள் மற்றும் தோலை நீக்கிவிடவும். பழக்கூழுடன் சர்க்கரை, சிட்ரிக் அமிலம், மற்றும் கான்பிளவர் ஆகியவற்றை கலந்து இளஞ்சூட்டில் நன்கு கிளறவும். அதிக கொதிப்பு ஏறி சுண்டிவிடாமல் எடுத்து எண்ணெய் தடவிய தட்டில் பழக்கூழை பரப்பவும். முதல் பழக்கூழ் உலர்ந்த பின் அடுத்த அடுக்கை பரப்பவும். சிறிது உலர வைத்து வில்லைகளாக்கி எடுத்து வைக்கவும்.
தகவல்: சித்தேஸ்வரன், வேளாண் அறிவியல் நிலையம், திரூர்.

கற்றாழைக்கு சிறந்த எதிர்காலம்

0 கருத்துகள்

உலகம் முழுவதும் ஏற்றுமதி வாய்ப்புள்ள கற்றாழை பல்வேறு மாவட்டங்களிலும் செழிப்பாக வளர்ந்து கிடைக்கிறது.கற்றாழை வறட்சியான பகுதிகளில் வளர்ப்பதற்கான ஒரு மருத்துவ பயிர். ஆப்ரிக்காவை தாயகமாக கொண்ட கற்றாழை லில்லியேசி குடும்பத்தை சேர்ந்த தாவரம். கற்றாழை இலைகளிலிருந்து எடுக்கப்படும் ஜெல் எனப்படும் கூழ் சருமத்தின் ஈரப்பதத்தை பாதுகாக்கிறது. சூரிய ஒளியிலிருந்து வரும் கடும் வெப்பத்தை தரும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர்வீச்சுக்களின் தீயவிளைவுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்கின்றது. மேலும் சருமத்தின் ஈரத்தன்மையை பாதுகாக்கின்றது. இதனால் வெயில் கொடுமை அதிகரிக்கும் நாடுகளில் கற்றாழைக்கு வளமான வாய்ப்பிருக்கிறது.

கற்றாழையில் காணப்படும் அலோயின் மற்றும் அலோசான் வேதிப்பொருள்கள் இருமல், சளி,குடல் புண், கடும்வயிற்று புண், தோலில் ஏற்படும் தீக்காயம், வெட்டுக்காயங்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. கற்றாழையில் பல ரகங்கள் உண்டு. கற்றாழையில் ஜான்சிபார் கற்றாழை, யுகான்டா கற்றாழை மற்றும் நேட்டல் கற்றாழை மற்றும் ஜபாராபாத் கற்றாழை ஆகியவை தரம் வாய்ந்தவையாக இருந்து வந்துள்ளன. இவற்றின் ஜெல் கண்ணாடி போல் தரமான தோற்றம் கொண்டது.

இந்தியாவில் அலோ பார்படன்சிஸ் நாடு முழுவதும் தானே வளர்ந்து பரவலாக காணப்படுகிறது. இதன் இலைகள் தடிமனாகவும், சிறிது சிவப்பு கலந்து பச்சை நிறத்திலும் காணப்படுகிறது. செடிகள் நட்ட இரண்டாவது ஆண்டில் தான் பூக்கும். செடிகளில் பூக்கள் தோன்றினாலும், மகரந்தங்கள் செயலிழந்து இருப்பதால் காய் மற்றும் விதைகள் பிடிப்பதில்லை. இதனால் பக்க கன்றுகள் மூலமாக தான் பயிர் பெருக்கம் செய்யப்படுகிறது.  

மண்வளம் தரிசுமண்,மணற்பாங்கான நிலம், பொறை மண் போன்றவை ஏற்றது. காரத்தன்மை 7 முதல் 8.5 வரை இருக்கலாம்.  

தட்ப வெப்ப நிலை வறட்சியான நிலையில், அதாவது 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உள்ள பகுதிகளில் நன்றாக வளர்கிறது. தமிழ்நாட்டில் இராமநாதபுரம், மதுரை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பயிர் செய்யலாம்.  

பயிர் பெருக்கம் தாய்ச்செடியிலிருந்து ஒன்று அல்லது இரண்டு மாத வயதுடைய பக்க கன்றுகளை பிரித்து நடவுக்கு பயன்படுத்தலாம். ஒரே அளவுள்ள பக்க கன்றுகளை தேர்வு செய்வது முக்கியம். பக்க கன்றுகளை பிரித்ததும் அவற்றின் வேரை கார்பன்டசிம் மருந்தினால் ஐந்து நிமிடத்திற்கு நனைத்த பிறகு நடலாம். இதனால் அழுகல் நோய் வராமல் தடுக்கலாம். எக்டருக்கு 10 ஆயிரம் பக்க கன்றுகள் தேவைப்படும்.

விதைக்கும் பருவம் ஜுன்,ஜுலை மற்றும் அக்டோபர், செப்டம்பர் மாதங்களில் நடவு செய்யலாம்.  

நிலம் தயாரிப்பு நிலத்தை இரண்டு முறை உழுது எக்டருக்கு 10டன் தொழு உரம் இட்டு, சமன் செய்து சிறிய பாத்திகளை அமைக்க வேண்டும். செடிகள் செழிப்பாக வளர்வதற்காக செடிக்கு செடி மூன்று அடி பாத்திகளை அமைக்க வேண்டும்.  
உரமிடுதல் கற்றாழை செடிகளுக்கு தொழு உரமிட்டால் சிறப்பாக வளரும். தரிசு மற்றும் சத்தற்ற மண்ணில் நட்ட 20 வது நாளில் எக்டருக்கு 30 கிலோ தழைச்சத்து மற்றும் 120 கிலோ ஜிப்சம் இடுவது நல்லது.  

நீர்ப்பாசனம் கற்றாழையை மானவாரிப்பயிராக பயிர் செய்வது நல்லது. ஆனாலும் பயிர் காலத்தில் நான்கு அல்லது ஐந்து முறை நீர்ப்பாசனம் அளிக்கலாம்.  

பயிர் பாதுகாப்பு கற்றாழையில் நோய் தாக்குதல் பெரும்பாலும் இல்லை. நீர் தேங்கும் நிலத்தில் அழுகல் நோய் ஏற்படலாம். வடிகால் வசதி உண்டாக்கினால் இதனை தடுக்கலாம்.  

அறுவடை வணிக ரீதியாக பயிர் செய்யும் போது செடிகளை நட்ட ஆறு முதல் ஏழு மாதங்களில் அறுவடைக்கு தயாராகி விடும். இந்த நேரத்தில் இலையில் அதிக அளவு அலேயின் என்ற வேதிப்பொருள் இருக்கும். செடிகளை வேரோடு பிடுங்கி எடுத்து இலைகளை ஆறு மணி நேரத்திற்குள் பக்குவப்படுத்தி விட வேண்டும்.  

மகசூல் எக்டருக்கு 15 டன் கற்றாழை இலை மகசூலாக கிடைக்கும். இலையில் 80 முதல் 90 விழுக்காடு வரை நீராக இருப்பதால் விரைவில் கெட்டு விடும். இதனால் அறுவடை செய்த உடனே இலைகளை பக்குவப்படுத்தி அவற்றிலிருந்து கூழ் படிமத்தை பிரித்தெடுத்து விட வேண்டும். தகவல்: முனைவர்.ராஜாமணி, அழகிய மணவாளன்.

விவசாயத்தில் ஆர்முள்ளவர்கள் பயன்பெறும் வகையில் விவசாய தகவல்கள்....

2 கருத்துகள்


சுற்றுச்சூழல் குறித்து இதுவரை எழுதி வந்தாலும் தற்போதைய நிலையில் விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்பதால் இது முதல் புதிய தலைப்பில் இங்கு பதிவிடுகிறேன். இந்த தகவல்கள் அனைத்தும் தமிழக விவசாய பல்கலைக்கழக பேராசிரியர்களிடமிருந்து பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு நன்றி!
விவசாயத்தில் பெரிய பிரச்சியை உண்டாக்கும் எலிகளை ஒழிப்பது பற்றிய பதிவுடன் இந்த பகுதியை தொடங்குகிறேன்.

வயல் வெளிகளில் எலிகள் பொதுவாக கடுமையான சேதத்தை உண்டு பண்ணுகின்றன. குறிப்பாக நெல் அறுவடைக்கு பின் கரும்பு தோட்டங்களில் எலிகள் அதன் இனப்பெருக்கத்தை அதிகரித்து பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றது. எலி சேதம் செய்வது ஒரு பங்கு என்றால், அது உண்ணும் தானியங்களை போல் 30 மடங்கு தானியங்களை அதன் கழிவு பொருட்கள் மற்றும் துர்நாற்றத்தால் பாழாக்குகின்றது. ஒரு எலிக்கு சுமார் 250 கிராம் உணவும், 40 மிலி நீரும் அன்றாடம் தேவைப்படுகின்றது.

எலிகள் உணவு இன்றி ஏழு நாட்களும், நீர் இல்லாமல் இரண்டு நாட்கள் நாட்கள் வரையும் உயிர் வாழக்கூடியது. எலிகளின் கூரிய வெட்டுப்பற்கள் மாதம் தோறும் ஒரு செ.மீட்டர் வரை வளருகிறது. ஒரு ஆண்டிற்கு 12.5 செ.மீட்டர் வரை வளர்கிறது. இப்பற்களின் வளர்ச்சியை குறைக்க எலிகள் கட்டாயமாக ஏதாவது ஒரு பொருளை கடித்து கொரித்துக் கொண்டே இருக்க வேண்டும். இதன் காரணமாக கரும்பு வயல்களில் எலிகளின் சேதம் அதிகமாக தென்படுகிறது. கரும்பு வயலில் உள்ள நிலத்தடி சொட்டு நீர் பாசன குழாய்களையும் கடித்து சேதப்படுத்துகின்றன. நம் நாட்டில் எலிகளால் ஆண்டிற்கு சுமார் 2 ஆயிரத்து 500 கோடி அளவிற்கு தானியங்கள் சேதப்படுத்தப்படுகின்றன.
கரும்பு வயல்களில் எலிகளை கட்டுப்படுத்த

1. பயிர் அறுவடைக்கு பின் கிராமத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் ஒருங்கிணைந்து பெரிய வரப்புகளை சிறியதாக்கியும், எலி வளைகளை வெட்டியும் சமப்படுத்தியும் புதர் மற்றும் பொந்துகள் உள்ள வயல்களை சுத்தம் செய்தும் எலிகளை கட்டுப்படுத்தலாம்.
2. தொடர்ந்து கரும்பு சாகுபடியை தவிர்த்து கரும்புக்கு பின் பயறு மற்றும் நெல் போன்ற பயிர்களை சுழற்சி முறையில் சாகுபடி செய்து எலிகளின் தாக்குதலை ஒரளவுக்கு குறைக்கலாம்.
3. வயலில் உள்ள காய்ந்த கரும்பு சருகுகளை வயலில் பரப்புவது எலிகளை அதிகம் ஈர்ப்பதுடன் அவை பொந்துகள் அமைத்து வாழ ஏதுவாக உள்ளதால் கரும்பு தோகைகளை சுத்தம் செய்தால் எலிகளின் நடமாட்டத்தினை மற்றும் இனப்பெருக்கத்தினை குறைக்கலாம்.
4. எலிகளின் இனப்பெருக்கம் அதிகமாக இருக்கும் காலங்களில் ஒரு எலி வளைக்கு மூன்று கிராம் எடையுள்ள அலுமினியம் பாஸ்பைடு மாத்திரையை எலி வளைக்குள் போட்டு வெளித்துவாரத்தை அடைத்தால் புகை மூட்டம் ஏற்பட்டு வளையினுள் உள்ள எலிகள் கொல்லப்படுகின்றன.
5. இரத்தம் உறைவதை தடுக்கும் திறன் வாய்ந்த புரோமோடையலோன் 0.0015 சத வீரியமுள்ள வில்லைகளை ஒரு வளைக்கு ஒரு வில்லை வீதம் எலி நடமாட்டம் உள்ள வளைகளின் முகப்பில் வைப்பதால் எலிகள் சுலபமாக கவரப்பட்டு அவற்றை தின்றவுடன் எலிகள் கொல்லப்படுகின்றன.
6. கரும்பு தோட்டத்தின் வரப்புகளில் தஞ்சாவூர் வில் பொறி வைப்பதன் எலிகளை பிடித்துக் கட்டுப்படுத்தலாம்.
7. இயற்கையிலேயே எலிகளை பிடித்து உண்ணும் இரை விழுங்கிகளை பூனை மற்றும் வேட்டை நாய்களை பயன்படுத்தியும் கரும்பு தோட்டத்தில் எலிகளின் எண்ணிக்கையை குறைக்கலாம்.
8. எலி தாக்குதல் அதிகமுள்ள இடங்களில் நிலத்தடி நீர் சொட்டுநீர் பாசனத்தை தவிர்த்து தரை வழி நீர் பாசனத்தை கடைப்பிடிக்கலாம்.
9. ரேட்டால் எனப்படும் எலி மருந்து பேஸ்ட்டை தக்காளி அல்லது தேங்காயில் தடவி வயலில் ஆங்காங்கே வைத்து எலிகளை கட்டுப்படுத்தலாம்.
10. அவித்த நெல் அல்லது அரிசி பொரி, முளைகட்டிய தானியங்கள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றுடன் 100 கி. குருணை மருந்தை கலந்து காய வைத்து வயலில் ஆங்காங்கே வைத்து எலிகளை கட்டுப்படுத்தலாம்.
11. சொட்டு நீர் பாசனம் செய்யும் இடங்களில் இருக்கும் குழாய்களை எலிகள் கடிப்பதை தவிர்க்க, வயல்களில் ஆங்காங்கே தரையோடு மண்கலயங்களை பதித்து தண்ணீர் நிரப்பி எலிகள் இந்த மண்கலய தண்ணீரை குடிக்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். பிறகு இந்த தண்ணீரில் வாரத்திற்கு ஒரு முறை சிறிய தேக்கரண்டி அளவு பூச்சிக் கொல்லி மருந்தை கலந்து விடவும்.

Thanks:முனைவர்.இந்திராணி, வேளாண்பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சிநிலையம், மதுரை

காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today