அபாயத்தின் அறிகுறி


ளிமண்டலம் மாசடைந்து புவிவெப்பம் அதிகரிப்பது உலகில் தெரிந்த விஷயம். இதனால்,நிலத்தில் வாழும் உயிரினங்களை விட மிக அதிகமாக பாதிக்கப்பட இருப்பது கடல்வாழ் உயிரினங்கள் தான் என்பது பெரிய அளவில் ஏன் நம்மைக்கவலைப்பட வைக்கவில்லை என்பது தெரியவில்லை.
அண்மையில் மீன் மற்றும் மீன்வளம் (பீஷ் அண்ட் பிஷரிஸ்) என்ற மேலைநாட்டு பத்திரிகை ஒன்றில் படித்த விஷயம் நம்மை திடுக்கிட வைக்கிறது. புவி வெப்பமயமாதல் காரணமாக பல்லுயிர் பெருக்கத்துக்கு ஏற்படும் பாதிப்பை பற்றியும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடல்வாழ் மீன் இனங்கள் எவ்வாறு பாதிக்கப்படவுள்ளன என்பது பற்றியும் ஒரு ஆய்வே நடத்தி இருக்கிறது அந்த பத்திரிக்கை.

கடல் நீரின் தட்பவெப்பத்தை பொறுத்து தான் பலவகை மீன் இனங்கள் அந்தந்த பகுதியில் காணப்படுகின்றன. தட்பவெப்பம் மாறும்«ப்£து இந்த மீன் இனங்கள் அங்கே வாழ முடியாமல், சாதகமான தட்பவெப்பம் நிலவும் பகுதியை நோக்கி நகர வேண்டும். இல்லாவிட்டால் அழிந்து விடும் அபாயம் தான் ஏற்படும். குறிப்பாக, பூமத்திய ரேகையையட்டிய, வெப்பம் அதிகமுள்ள கடல் பகுதியில் காணப்படும் மீன் இனங்கள், புவி வெப்பமாவதை தொடர்ந்து குளிர்ப்பிரதேசங்களை நோக்கி இடம் பெயர்ந்தாக வேண்டும். அப்போது தான் தங்களது உடல்வெப்பத்தை தகவமைத்து வாழ முடியும். ஆனால், துருவப்பகுதிகளில் உள்ள குளிரைத்தாங்கி இந்த மீன் இனங்களால் வாழ முடியுமா என்பது சந்தேகம் தான்.

துருவப்பகுதியில் மீன் இனங்களின் எண்ணிக்கை குறைவு. அப்பகுதிகளில் வாழும் உயிரினங்கள், புவி வெப்பமயமாதலால் பெரிய பாதிப்புக்கு உள்ளாகாது என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த பகுதியில் வாழும் மீன்களின் எண்ணிக்கையே குறைவு தான் என்பதால் பாதிப்பும் குறைவாகவே இருக்கும் என்பதும் ஆறுதல்.

வெப்ப மண்டலங்களிலும், துருவப்பகுதிக்கு கீழேயுள்ள பிரதேசங்களிலும் ஏற்பட இருக்கும் புவி வெப்ப மாற்றங்கள், ஏறத்தாழ 60 விழுக்காடு மீன் இனங்களின் இனப்பெருக்கத்தை பாதிக்கும் என்பது தான் அச்சப்பட வைக்கும் விஷயம். இந்த மாற்றம், கடல் சார்ந்த சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். கடலின் ஆழத்தில் அல்லது மேற்புறத்தில் வாழும் மீன்கள் எவையாக இருந்தாலும் பாதிப்பு ஒரே மாதிரியாகத் தான் இருக்கும். உடனடி பாதிப்பு கடலின் மேற்பகுதியில் வாழும் மீன்  இனங்களுக்கு தான். குறைந்தது 600 கி.மீ தூரத்துக்காவது இடம் பெயர்ந்தால் மட்டுமே வெப்பப் பகுதிகளில் வாழும் 90% மீன் இனங்கள் உயிர் வாழ முடியும் என்று தெரிவிக்கிறது ஆய்வுக்கட்டுரை.

இந்த பிரச்சனை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மட்டுமல்ல, பொருளாதார நிபுணர்களையும் அச்சுறுத்தக் காரணம், மீன் இனங்களுக்கு ஏற்படும் பாதிப்பால் உலகில் உணவுத்தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கக்கூடும் என்பது தான். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஏறத்தாழ 4 கோடி மீனவர்கள், கடலை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்துகின்றனர். மீன்கள் கிடைக்காதென்றால், பல மீனவர் குடும்பங்கள் தற்கொலை செய்து கொள்ளும் அவலம் நேரும். வளர்ந்த நாடுகளில் சுமார் 28 கோடி பேர் தங்களது தினசரி உணவில் மீனை சேர்த்துக் கொள்கிறார்கள். மீனுக்கு தட்டுப்பாடு ஏற்படுமானால், அதன் நேரடி விளைவாக மாமிசத் தேவை அதிகரிக்கும். உலகம் புதிய சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

உலகம் முழுவதும் உணவுத்தட்டுப்பாடு பயமுறுத்திக் கொண்டிருக்கும் இந்த வேளையில், புவி வெப்பமயமாதலால் மீன் வளமும் குறையுமேயானால், அதன் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். மேலும், மீன்பிடிப்பு குறைய குறைய இந்தியா தொடங்கி பல்வேறு நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்தில் பாதிப்பும், மீனவர்களுக்கு தொழில் நசிவும் தவிர்க்க முடியாததாகிவிடும்.

இப்பொழுதே கடலில் முன்பு போல் மீன்கள் கிடைப்பதில்லை என்கிற குறை நிறையவே இருக்கிறது. இந்நிலையில், புவி வெப்பமடைதலும் அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட இருக்கும் பாதிப்பும் கடல் மீன்களுக்கும் அதன் இனப்பெருக்கத்துக்கும் பெரிய அச்சுறுத்தலாக மாறுமெனில், விளைவுகள் படுமோசமாக மாறிவிடும். இதன் உடனடித்தாக்கம் உணவுப்பஞ்சம், தொடர்விளைவு, மீன்களின் இனப்பெருக்கத்துக்கு நிரந்தரப்பாதிப்பு. உலக நாடுகள் ஒன்று கூடி உடனடியாக தீவிர ஆலோசனைகளை நடத்தியாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
நன்றி: தினமணி 12.01.2010

2 கருத்துகள்: (+add yours?)

curesure4u சொன்னது…

நல்ல விஷயத்தை சொல்கிறீர்கள் ..வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today