செயற்கைக்கோள் வரைபடம் மூலம் 70,368 ஊரணி, குளம், குட்டைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க அரசு தீவிரம்சாட்டிலைட் வரைபடம் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 70,368 ஊரணிகள், குளங்கள், குட்டைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் துல்லியமாகக் கண்டறியப்பட்டு அகற்றப்படுகின்றன. இதன்மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க அரசு தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

ஊரணி, குளம், குட்டைகள்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கிராமங்களில் ஊரணி, குளம், குட்டைகளை தூர்வாருதல், சாலைகள் அமைத்தல், நிலங்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப் பணிகள் இங்கொன்றும், அங்கொன்றுமாக நடப்பதாகவும், வேலை செய்த இடத்திலே மீண்டும் செய்யப்படுவதாகவும், மனித உழைப்பு வீணாவதாகவும், கூலி வழங்குவதில் முறைகேடு நடப்பதாகவும் புகார்கள் கூறப்பட்டன.

இதனை களைவதற்காக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், இந்தியாவிலே முதன்முறையாக தமிழ்நாட்டில் ஒரு முக்கியப் பணி மேற்கொள்ளப்படுகிறது. செயற்கைக்கோள் உதவியுடன் தயாரிக்கப்பட்ட வரைபடங்களின் மூலம் 70,368 ஊரணிகள், குளங்கள், குட்டைகளின் தற்போதைய நிலை கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பணியை அண்ணா பல்கலைக் கழக தொலையுணர்வு மையம் மேற்கொண்டது.

நீர் ஆதாரங்களை பழைய நிலைக்கு கொண்டு வர...

1950-1960-ம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இருந்த ஊரணிகள், குளங்கள், குட்டைகளின் நிலை எப்படி இருந்ததோ, அதனைக் கண்டறிந்து, அவற்றை பழைய நிலைக்கு கொண்டு செல்வதன் மூலம் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தூர்ந்து போய் கிடக்கும் இணைப்புக் கால்வாய்கள், வரத்துக் கால்வாய்களை தூர்வாரவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதன்மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி, விவசாய உற்பத்தித்திறனை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

79,394 குக்கிராமங்கள்

செயற்கைக்கோள் உதவியுடன் தயாரிக்கப்பட்ட வரைபடங்களைக் கொண்டு பல்வேறு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. வருவாய் கிராமங்களின் வரைபடங்களைக் கொண்டு 12,524 கிராம பஞ்சாயத்துகளின் வரைபடங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதன்மூலம் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள 79,394 குக்கிராமங்கள், ஊரணி, குளம், குட்டை போன்ற நீர் ஆதாரங்கள், வரத்துக் கால்வாய் ஆகியவற்றின் தற்போதைய நிலையை கண்டறிய முடியும்.

இதனால் ஒரு குறிப்பிட்ட கிராம பஞ்சாயத்தில் என்னென்ன இருக்கிறது? அங்கு என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும்? என்பதைக் கண்டறியவும், கிராமப்புற வளர்ச்சிக்கான தொகுப்பு திட்டங்களை மேற்கொள்ளவும் முடியும்.

சிறு, குறு விவசாயிகளுக்கு உதவ...

கட்டாந்தரையாக இருக்கும் நிலங்களை நவீன இயந்திரங்களைக் கொண்டு பண்படுத்தி விவசாய நிலங்களாக மாற்றுவதற்கு அதிக செலவாகும். அதனால்தான், சிறு மற்றும் குறு விவசாயிகள் இந்த வேலைகளைச் செய்வதில்லை. இந்த விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் கட்டாந்தரையாக இருக்கும் அவர்களது நிலங்களை சீரமைக்கும் பணி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.

முதல்கட்டமாக ஈரோடு, விருதுநகர், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய 4 மாவட்டங்களில் இந்தப் பணி நடைபெற உள்ளது. இந்த ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் இதுவரை 1968 கோடி ரூபாய் சம்பளமாக தரப்பட்டு உள்ளது. இது, கடந்த ஆண்டைவிட ரூ.100 கோடி அதிகம் என்று ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

2 கருத்துகள்: (+add yours?)

Rathnavel சொன்னது…

நல்ல பதிவு.
வாழ்த்துகள்.

nerkuppai thumbi சொன்னது…

நல்ல பதிவு.

குளங்கள், ஊருணிகள், கண்மாய்கள், ஏரிகள், மற்ற நீர் நிலைகளைப் பாதுகாத்து, ஓரளவுக்கேனும் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் கொள்ளளவை அதிகப்படுத்தினால் அன்றி விவசாயம், குடிநீர் வசதிகளை உறுதி செய்ய முடியாது.
அரசு நீண்ட கால நோக்குடன் திட்டடங்கள் போட்டு, செயல் படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்வோம் .

காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today