பண்ணைக்கு ஏற்ற வெள்ளாட்டு இனங்கள் தேர்வு முறை

1 கருத்துகள்நமது நாட்டில் வெள்ளாட்டு இறைச்சிக்கான தேவை அதிகமாகி வருகிறது. அயல்நாடுகளில் சராசரியாக தினமும் 200 கிராம் இறைச்சி ஒரு மனிதனுக்கு கிடைக்கிறது. ஆனால் இங்கு ஒரு மனிதன் ஆண்டொன்றுக்கு உட்கொள்ளும் இறைச்சியின் சராசரி அளவே 500 கிராமிற்கும் குறைவு. இந்த இடைவெளியை குறைக்கவும், ஆட்டிறைச்சியின் விலையேற்றத்தை தடுக்கவும் அதிக அளவு ஆடுகள் வளர்க்கப்பட வேண்டும். இங்கு பண்ணைகளுக்கு ஏற்ற வெள்ளாட்டு இனங்களை பார்க்கலாம்.
ஜமுனாபாரி
இந்த இன ஆடுகள் உத்திரபிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தை சேர்ந்தது. நல்ல உயரமும், மிக நீளமான காதுகளும் கொண்டவை. கிடா ஆடுகள் 65 முதல் 80 கிலோ எடை வரை வளரும். பெட்டை ஆடுகள் 45 முதல் 60 கிலோ வரை எடை இருக்கும். தினமும் இரண்டரை லிட்டர் அளவுக்கு பால் கொடுக்கும் திறன் கொண்டது.
பார்பாரி
டெல்லி, உத்திரப்பிரதேசம் மற்றும் அரியானா மாநிலங்களில் இந்த வகை ஆடுகள் காணப்படுகின்றன. உடலில் வெள்ளை மற்றும் பழுப்பு நிறங்களில் புள்ளிகள் கொண்டவை. ஒரு ஈற்றிற்கு இரண்டு முதல் மூன்று குட்டிகள் போடும். கிடாக்கள் 40 முதல் 50 கிலோ எடையும் பெட்டை ஆடுகள் 35 முதல் 40 கிலோ எடையும் உடையவை.
தலைச்சேரி
இவைகள் மலபாரி ஆடுகள் எனவும் அழைக்கப்படுகின்றன. வெள்ளை, பழுப்பு, கருப்பு நிறங்களில் காணப்படுகின்றன. இரண்டு முதல் மூன்று குட்டிகள் வரை ஈனும் திறன் கொண்டது. கிடாக்கள் 40 முதல் 50 கிலோ எடையும், பெட்டை ஆடுகள் 30 கிலோ எடை வரை கொண்டவை. நன்றாக பால் கொடுக்க கூடியவை.
தமிழக வெள்ளாட்டு இனங்கள்
தமிழ்நாட்டில் கன்னி ஆடு, கொடி ஆடு, பள்ள ஆடுகள், சேலம் கருப்பு, திருச்சி கருப்பு என பல ஆடுகள் உள்ளன. இவற்றில் கன்னி ஆடு நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவை. இந்த இன ஆடுகள் பொதுவாக கருப்பு நிறத்தில் காணப்படும். முகத்தில் இரண்டு வெள்ளை கோடுகளுடன் அடிவயிற்றுப் பகுதியில் இருந்து வால் வரை வெள்ளை நிறத்தில் காணப்படும். இந்த வகை ஆடுகளை 'பால்கன்னி' என்றும் சொல்வதுண்டு. வெள்ளைக்கு பதிலாக சிவப்பு நிறம் இருந்தால் செங்கன்னி என்று சொல்வதுண்டு.
இந்த இன நாட்டு ஆடுகள் சராசரியாக 2 முதல் 3 குட்டிகள் போடும் திறன் கொண்டவை. கிடா ஆடுகள் 60 முதல் 70 கிலோ எடையும், பெட்டை ஆடுகள் 40 முதல் 50 கிலோ எடையும் பெறும் தன்மை கொண்டவை. இந்த இன ஆடுகள் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன.
ஆடுகளை தேர்வு செய்யும் முறை
வெள்ளாட்டு பண்ணையில் பெட்டை மற்றும் கிடாக்களை அவற்றின் பாரம்பரிய இனத்தை பார்த்து தேர்வு செய்ய வேண்டு. பெட்டை ஆடுகள் 2 அல்லது 3 குட்டிகளை ஈனும் திறன் பெற்று இருக்க வேண்டும். கிடாக்கள் தோற்றத்தில் உயரமாகவும், நெஞ்சு பாகம் அகன்றதாகவும்ட, உடல் பாகம் நீண்டதாகவும் இருக்குமாறு உள்ள ஆடுகளை தேர்வு செய்தல் வேண்டும். பெட்டை ஆடுகள் 6 முதல் 9 மாதங்களில் பருவமடையும் தன்மை பெற்று இருக்க வேண்டும். கிடாக்கள் 9 முதல் 12 மாதங்களில் பருவமடையும் திறன் பெற்று இருப்பது நல்லது. அதிக எடை உள்ள கிடாக்குட்டிகளை 6 மாத வயதில் தேர்வு செய்ய வேண்டும். நல்ல தரமான பெட்டை குட்டிகளை 3 மாத வயதில் தேர்வு செய்ய வேண்டும். இனப்பெருக்கத்திற்கு தேர்வு செய்யும் கிடாக்களை 2 முதல் 3 குட்டிகள் ஈனும் பெட்டை ஆட்டில் இருந்து தேர்வு செய்ய வேண்டும்.
இது போன்ற அம்சங்களை கணக்கில் எடுத்து கிடாக்களையும், பெட்டைகளையும் தேர்வு செய்தால் மிகவும் ஆரோக்கியமான ஆடுகளை கொண்ட பண்ணையை அமைக்க முடியும்.
தகவல்:
தமிழ்நாடு கால்நடை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் ,மதுரை !

இளைஞர்களுக்கு உதவும் புதிய பண்ணை தொழில்-யோகர்ட் தயிர் தயாரிப்பு

2 கருத்துகள்


வீடுகளில் சாதாரணமாக பாலில் உறையூட்டி தயிர் தயாரிக்கப்படுகிறது. ஆனால் இந்த தயிரை விட குறிப்பிட்ட நுண்ணுயிர்கலவைகளை சேர்த்து தயாரிக்கப்படும் யோகர்ட் தயிர் என்பது சுவையானது. இதனை வர்த்தகரீதியாக பால் பண்ணையாளர்களோ, புதிய பண்ணை தொழில்வாய்ப்பை எதிர்நோக்கும் இளைஞர்களோ தயாரித்து விற்பனை செய்ய முடியும்.
யோகர்ட் தயிர்
யோகர்ட் தயிர் என்பதும் ஒரு உறையூட்டப்பட்ட பால் பொருள் தான். இந்த தயிரானது ஸ்ட்ரெப்டோகாக்கஸ் தெர்மோபில்லஸ் மற்றும் லேக்டோபேசில்லஸ் பல்கேரிக்கஸ் போன்ற நுண்ணுயிர்க் கலவைகளை சேர்த்து புளிக்க வைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.
யோகர்ட் தயிருக்கும் சாதாரணத் தயிருக்கும் உள்ள வேறுபாடுகள்
1. சாதாரண தயிரில் கொழுப்பு சாராப் பொருட்களின் சதவிகிதம் என்பது 8.5 சதம் வரை இருக்கும். அதாவது, தயிரில் இருக்கும் கொழுப்பை தவிர்த்து மீதமுள்ள திடப்பொருட்களின் அளவு என்பது 8.5 சதவீதம் இருக்கும். ஆனால் யோகர்ட் தயிரில் இந்த திடப்பொருட்கள் 11 முதல் 12 சதவீதம் வரை இருக்கும். இதனால் யோகர்ட் தயிரின் தரமும், மிருதுத்தன்மையும் உயருகிறது.
2. சாதாரண தயிர் தயாரிக்க பல்வேறு நுண்ணுயிர் கலவைகளை நாம் உபயோகிக்கிறோம். ஆனால் யோகர்ட் தயிர் தயாரிக்க நாம் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் தெர்மோபில்லஸ் மற்றும் லேக்டோபேசில்லஸ் பல்கேரிக்கஸ் ஆகிய நுண்ணுயிரிகளை 1:1 என்ற விகிதத்தில் கலந்து தயாரிக்கிறோம்.
3. நுண்ணுயிரிகளின் வளர்ச்சிக்கு தேவைப்படும் வெப்ப அளவு இந்த இரண்டு பண்டங்களுக்கும் வேறுபடுகிறது. சாதாரண தயிர் தயாரிக்க 13 முதல் 16 மணி நேரத்திற்கு 37 டிகிரி செல்சியஸ் வெப்பம் தேவைப்படுகிறது. ஆனால் யோகர்ட் தயிருக்கு 4 மணி நேரத்திற்கு 42 டிகிரி செல்சியஸ் வெப்பம் போதுமானது.
சிறப்புகள்
1. யோகர்ட் தயிரில் உள்ள நுண்ணுயிரிகள் பாலில் உள்ள சர்க்கரைப் பொருளை சிதைத்து குளுகோஸ் மற்றும் கேலக்டோஸ் ஆக மாற்றுகின்றன. இதனால் இந்த தயிரை நோயாளிகளுக்கும், ஒவ்வாமை கொண்ட குழந்தைளுக்கும் கூட கொடுக்கலாம்.
2. யோகர்ட் தயிர் உணவு செரிமானத்தை மேம்படுத்துகிறது.
3. இதில் புரதச்சத்து, போலிக் அமிலம் மற்றும் நியாசின் போன்ற உயிர்ச்சத்துக்களின் அளவும், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்களின் அளவும் அதிகமாக இருக்கிறது.
4. யோகர்ட் தயிரின் சிறப்பே அதன் நோய் எதிர்ப்பு சக்தியை தரும் பண்பில் தான் அடங்கி இருக்கிறது. யோகர்ட் தயிரில் இருக்கும் நுண்ணுயிரிகள், அபாயகரமான நுண்ணுயிரிகளை அழிக்கும் தன்மை கொண்டவை. இதனால் மனிதருக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கு, புற்று நோய் மற்றும் மலச்சிக்கல் போன்ற அபாயங்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கின்றன.
5. இரத்தத்தில் கொழுப்பு சத்து அளவு உயர்வதையும், அதனால் ஏற்படும் மாரடைப்பு போன்றவற்றையும் யோகர்ட் தயிர் தடுக்கிறது.
எனவே, மருத்துவ குணம் கொண்ட இந்த யோகர்ட் தயிரை தயாரித்து விற்பனை செய்ய பால்பண்ணையாளர்களும், இளைஞர்களும் முன்வரலாம். இதனால் புதிய தொழில் வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளலாம். இந்த யோகர்ட் தயிர் தயாரிப்பதற்கான பாக்டீரியாக்கள் சென்னை கால்நடை கல்லூரி ஆராய்ச்சி மையத்தில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்: டாக்டர்கள். பண்ணை முருகானந்தன்( பேராசிரியர் மற்றும் தலைவர், இரா.உமாராணி, பூ.பூவராஜன். கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை.

தொடர் -2:விவசாயிகளுக்கு உதவும் விவசாய கடன் அட்டை

1 கருத்துகள்விவசாயிகள் அதிக உற்பத்தி மூலம் உணவு உற்பத்தியை பெருக்கிடவும், தங்கள் வருமானத்தை அதிகரிக்கவும், தங்கு தடையின்றி பயிர் சாகுபடிக்கு உடனடியாக கடன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும் உதவும் திட்டம் தான் விவசாய கடன் அட்டை திட்டம்.
இந்த திட்டத்தின் முக்கிய அம்சம், விவசாயிகள் பயிர்கடன் பெற ஒவ்வொரு முறையும் விண்ணப்பம், ஆவணங்கள் நிறைவு செய்ய வேண்டியதில்லை. உழவு முதற்கொண்டு அறுவடை வரை தொடர்ச்சியாக கடன் பெற்றுக்  கொள்ளலாம். கடன் எவ்வளவு நிலுவையில் உள்ளதோ அதற்கு மட்டும் அந்த தேதியிலிருந்து வட்டி கணக்கிடப்படும். மேலும் இந்த கடன் திட்டத்தில் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளுக்கு வேண்டும் போதல்லாம் கிசான் கிரடிட் கார்டுக்கென்று நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்சவரம்பிற்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் பெறவும், வரவு வைக்கவும், திரும்ப பெற்றுக் கொள்ளவும் வகை செய்யப்பட்டுள்ளது.
கிசான் கிரடிட் கார்டு உரிமையாளர்களுக்கு விபத்து பாதுகாப்பு இன்சூரன்சு உறுதியும் உண்டு. கடன் தொகைக்கு மேலும் உபரி பணம் கணக்கில் இருப்பு வைத்தால் சேமிப்பு கணக்கிற்கு உண்டான வட்டி வீதத்தில் அந்த உபரி பணத்திற்கு வட்டி வழங்கப்படும்.
எவ்வளவு கடன் கிடைக்கும்
நிலப்பரப்பு, பயிர், இறவை, மானாவாரி ஆகியவற்றை பொறுத்து உயர்ந்தபட்சக் கடன் அளவு முடிவு செய்யப்படுகிறது. ஒரு ஆண்டில் என்ன பயிர், எத்தனை முறை, பயிர் சுழற்சி என்பதை பொறுத்தும் ஆண்டுக்கடன் அளவு நிர்ணயிக்கப்படுகிறது. சாகுபடி செலவுடன் 10 சதவீதம் வேளாண்மை சம்பந்தப்பட்ட இதர குடும்பச் செலவுகளுக்காகவும் சேர்க்கப்பட்டு கடன் அட்டையின் உச்சவரம்பு நிர்ணயிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு தொடர்ந்து கடன் கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் கணக்கை பரிசீலனை செய்து செயல்படுத்தும் வசதி உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்தல் போதுமானது.
வட்டி விகிதம்
கிசான் கிரடிட் கார்டு என்பது தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு பயன்படுத்துவதாக இருக்கிறது. இந்த கார்டை பயன்படுத்து விவசாயிகள் பல்வேறு பயிர் பருவங்களிலும் கடன்களை பெற முடிகிறது. இதனால் இந்த கடனுக்கு கணக்கிடப்படும் வட்டியானது, முடிவடைந்த பருவத்திற்கான வட்டி என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. அதாவது வட்டியானது தனிக்கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு குறிப்பிட்ட பயிர் பருவம் முடிந்த பிறகு அசலுடன் சேர்த்துக் கொள்ளப்படும்.
இந்த கடனுக்கு 3 லட்சம் வரை 7 சதவீத வட்டியும், 3 லட்சத்திற்கு மேல் 11.75 சதவீதம் முதல் 12.25 சதவீதம் வரை வட்டியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அழகான அட்டை
பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டுள்ள கிசான் கிரடிட் கார்டில் பயனாளரான விவசாயியின் புகைப்படம் ஒட்டப்பட்டு வங்கியின் கிளைமேலாளர் கையெப்படம் இடப்பட்டிருக்கும். இத்துடன் ஒரு பாஸ்புத்தகம் மற்றும் காசோலைகளும் விவசாயிக்கு வழங்கப்படும். விவசாயிகள் தங்களது விருப்பப்படி இவற்றை பயன்படுத்தி இடுபொருட்கள் வாங்கும் சுதந்திரமான வசதி உள்ளது. கிசான் கிரடிட் கார்டு விவசாயியின் அந்தஸ்தை உயர்த்தி, கடன் பெறுவதை சுலபமாக்கும் வசதியான ஒரு அட்டை என்று சொல்லலாம்.
தகவல்: சிவ.மகாலிங்கம்.

0 கருத்துகள்தொடர் -1
                விவசாயத்திற்கு வங்கிகளில் கடன் பெறுவது எப்படி?
இந்தியாவின் முதுகெழும்பு விவசாயத்தில் தான் இருக்கிறது என்பர். பல்வேறு வகையான தொழில்களுக்கு தேவைப்படுவது போலவே வேளாண்மை தொழிலுக்கும் மூலதனம் மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது. விவாசயிகள் தங்கள் கடன் தேவைகளை பல வழிகளில் பூர்த்தி செய்து வருகின்றனர். முதன்முதலாக விவசாயிகளுக்கு வங்கி கடன் என்பது கிராம தொடக்க கூட்டுறவு வங்கிகள் மூலம் தான் சாகுபடி செலவுகளுக்கு பணமும், இடு பொருள்கள் உரம் பூச்சி மருந்து முதலியவை வழங்கப்பட்டது. நீண்ட கால கடன் கூட்டுறவு நிலவள வங்கிகள் மூலம் வழங்கப்பட்டது. விவசாயிகள் தனியாரிடமும், கமிஷன் மண்டி, கந்து வட்டிக்காரர்களிடமும், உரக்கடைக்காரர்களிடமும் கடன் பெற்று சாகுபடி செய்வதுண்டு.
ஆனால் வங்கிகள் அரசுடமை ஆக்கப்பட்ட பின்பு கிராமங்கள் பலவற்றில் வங்கி கிளைகள் திறக்கப்பட்டன. அங்கு கிராம மேம்பாட்டிற்கும், குறிப்பாக வேளாண்மைக்கும் கடன்கள் வழங்கப்படுகின்றன. வங்கிகளில் தனியார் வங்கிகள், கிராம தொடக்க கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு நிலவள வங்கிகள், கிராமிய வளர்ச்சி வங்கிகள், பொதுத்துறை வங்கிகள், வெளிநாட்டு வர்த்தக வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் என்று பல வகைகள் உள்ளன. மத்திய அரசின் ரிசர்வ் வங்கியின் ஆணைப்படி வங்கிகள் கொடுக்கும் மொத்த கடன் அளவில் கட்டாயமாக 18 சதவீதம் வேளாண்மை அபிவிருத்திக்கும், 40 சதவீதம் முன்னுரிமை கடனாகவும் வழங்கப்பட வேண்டும். இந்த இலக்கை ஒவ்வொரு ஆண்டும் ரிசர்வ் வங்கி ஆய்வு செய்து கண்காணித்து வருகிறது.
வங்கி கடன்களால் உள்ள நன்மை என்னவென்றால், குறைந்த வட்டி, எளிய தவணை, உடனடி சேவை என்பது தான். கடன்களில் பலவகைகள் உண்டு. இதில் குறுகிய கால கடனில் பயிர் சாகுபடி கடன்கள், உழவர் கடன் அட்டை திட்டம், விவசாய நகைக்கடன்கள், மகசூல் விற்பனைக்கடன் என்று பிரிவுகள் இருக்கின்றன. குறுகிய கால பயிர்களான நெல்,கரும்பு,வாழை, சோளம்,ராகி, உளுந்து, பயறு, மிளகாய், எள்,சூரியகாந்தி, பருத்தி, மஞ்சள், சோயா, வெங்காயம், புகையிலை, காய்கறிகள், வெற்றிலை மற்றும் இதர பயிர்களுக்கு பருவம் மற்றும் பட்டம் வாரியாக பயிர்க்கடன்கள் வழங்கப்படுகிறது. தென்னை, மா போன்ற தோப்புகள் பராமரிக்கவும் பயிர்க்கடன்கள் வழங்கப்படுகிறது. பட்டம் தவறினால் நட்டம். எனவே விவசாயிகள் வாழ்வில் பயிர்க்கடன் முக்கியத்துவம் வாய்ந்தது.
இதனை உணர்ந்து விதை, உரம், பூச்சி மருந்து, களைக்கொல்லி, நுண்ணூட்ட சத்து போன்ற இடுபொருட்கள் வாங்கவும்,நீர் மேலாண்மை, உழவு, களை எடுத்தல், எலி ஒழிப்பு, பூச்சி, பூஞ்சாண மருந்து தெளித்தல், அறுவடை போன்ற வேலைகளுக்கு கூலி கொடுக்கவும் தேவைப்படும் தொகையை கடனாக வழங்கப்படுகிறது.
பயிர்க்கடன் பெற தகுதி
சொந்த நிலம் அல்லது குத்தகை நிலம் உள்ளவர்கள் பயிர்க்கடன் பெற தகுதியானவர்கள். நில உரிமையாளர்களிடம் செய்து கொண்டுள்ள குத்தகை ஒப்பந்தத்தை காட்டி கடன் பெறலாம். பயிர்க்கடன் விண்ணப்பம் செய்பவர்கள் வேறு எந்த நிறுவனத்திடமும் இதே தேவைகளுக்காக கடன் வாங்கியிருக்க கூடாது. மேலும் அப்படி கடன் வாங்கி கட்டாமலும், தவணை தவறிய நிலுவையில் உள்ளவராகவும் இருக்க கூடாது.
கடன் பெறுவது எப்படி?
பயிர்க்கடன் விண்ணப்ப படிவம் வங்கியிலேயே கிடைக்கும். நில சம்பந்தமான முழு விபரங்கள் அடங்கிய சிட்டா,அடங்கள், கிஸ்து, ரசீது, கிராம நிர்வாக அலுவலரின் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் முதலியவற்றை வங்கியில் கொடுக்க வேண்டும். மேலும் அந்த பகுதியில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியிலும், இதர வணிக வங்கிகளிலும் கடன் நிலுவையில் இல்லை என்பதற்கான சான்றிதழ் தேவைப்படும். ஒப்பந்த கரும்பு சாகுபடி செய்பவர்கள் சர்க்கரை ஆலையில் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் கடன் பெறும் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும் அல்லது புதிதாக கணக்கு தொடங்க வேண்டும்.
எவ்வளவு கடன் கிடைக்கும்?
ஒவ்வொரு பயிருக்கும் ஆண்டு தோறும் நிர்ணயிக்கப்பட்டுள்ள கடன் அளவு ஏக்கருக்கு எவ்வளவு என்பது மாவட்ட தொழில்நுட்ப குழுவின் பரிந்துரையின் பேரில் தீர்மானிக்கப்படுகிறது. இதில் பாதி பொருளாகவும், பாதியை பணமாகவும் பெறலாம். எத்தனை ஏக்கர், என்ன பயிர் என்பதை கொண்டு கடன் அளவு நிர்ணயிக்கப்படும்.
விளிம்பு தொகை
மத்திய ரிசர்வ் வங்கியின் ஆணைப்படி 50 ஆயிரம் வரையிலான விவசாய கடன்களுக்கு விளிம்பு தொகை கிடையாது. கடன் தொகை 50 ஆயிரத்திற்கு மேல் அதிகமானால் 15 முதல் 25 விழுக்காடுகள் வரை விளிம்பு தொகையாக நிர்ணயிக்கப்படும்.
வட்டி எவ்வளவு?
தற்போதுள்ள நிலவரப்படி, 3 லட்சம் வரை 7 சதவீத வட்டி விதிக்கப்படுகிறது. இதற்கு மேல் உள்ள கடனுக்கு மாறுதலுக்கு உள்ளாகும். மத்திய அரசு, மத்திய ரிசர்வ் வங்கி அறிவிப்புக்கு ஏற்ப இது மாறுபடும். குறுகிய கால கடன் 3 லட்சம் வரை பெற்று அறுவடை காலம் 6 மாதம் முடிந்தும் கடன் தொகையை கட்டாவிட்டால் 50 ஆயிரம் வரை 10 சதவீதமும், 50 ஆயிரத்திற்கு மேல் 3 லட்சம் வரை 11 சதவீதமும் வட்டி வசூலிக்கப்படும். 3 லட்சத்திற்கு மேல் 5 லட்சம் வரை 11.75 சதவீதம் வசூலிக்கப்படும்.
திரும்ப செலுத்தும் முறை
எந்த பயிர் சாகுபடிக்காக கடன் வழங்கப்படுகிறதோ அதன் அறுவடைக்காலம் முடிந்து இரண்டு மாதத்திற்குள் வட்டியும், அசலும் சேர்த்து கட்டி முடிக்க வேண்டும். அறுவடை மகசூலை விற்று பணமாக்குவதற்காக இரண்டு மாத கால அவகாசம் தரப்படுகிறது. பயிர்கடன் இரண்டு பருவம், இரண்டு அறுவடைக்கு பின் என்ற ரீதியில் திருப்பி செலுத்த வேண்டும்.
கரும்பு ஆலையில் ஒப்பந்த சாகுபடிதாரர்கள், கரும்பு அறுவடைக்கு பின் ஆலையில் இருந்து வங்கிகளுக்கு நேரிடையாக சம்பந்தப்பட்ட விவசாயியின் கணக்கிற்கு பணம் வந்து விடும். கடன் தொகை வட்டி போக, மீதமுள்ள தொகை விவசாயியின் சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படும். வங்கிகளில் கடன் பெறுவதன் மூலம் குறைந்த வட்டி, எளிய தவணை, உன்னத சேவை என்ற நிலையை விவசாயிகள் பெற முடியும்.
தகவல்:சிவ.மகாலிங்கம், உதவி பொதுமேலாளர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி.


காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today