ஏக்கருக்கு 80ஆயிரம் தரும் கருவேப்பிலை

1 கருத்துகள்கருவேப்பிலை இல்லாத சமையல் இருக்காது. கருவேப்பிலை சாகுபடி எப்போதும் நல்ல லாபம் தருவதாக இருக்கிறது. தொடக்கத்தில் பயிரிட்டு வளர்ப்பது கடினம் போல் தோன்றினாலும், வளர தொடங்கி விட்டால் விவசாயிகளை வியாபாரிகள் நிலத்திற்கு தேடிவந்து எடை போட்டு பணத்தை கொடுத்து வாங்கி செல்கிறார்கள். கருவேப்பிலை களர்நிலம் தவிர மற்ற நிலங்களில் நன்றாக வளரக்கூடியது. செம்மண்ணில் சிறப்பாக வளரும். விதைகளை சேகரித்து எடுத்துக் கொண்டு சிறிய பாலிதீன் பைகளில் மண்நிரப்பி அதில் விதைகளை ஊன்ற வேண்டும். ஆடி மாதத்தில் விதை வாங்கி வந்து நாற்று விட்டு, ஐப்பசி மாதத்தில் வயலில் எடுத்து நட வேண்டும். ஆடி மாதத்தினை தவிர மற்ற காலங்களில் விதை எடுக்க கருவேப்பிலை பழங்கள் கிடைக்காது. விதை ஊன்றும் போது அரை விதை மண்ணின் உள்ளேயும், மீதி விதை வெளியேயும் இருக்குமாறு ஊன்ற வேண்டும். விதை சற்று ஆழமாக மண்ணிற்குள் புதைந்து விட்டால் முளைக்காமல் போய்விடும். ஏக்கருக்கு எட்டாயிரம் பாலிதீன் பைகள் கொண்ட விதை நாற்றுகளை தயார் செய்யலாம். இப்படி விதை ஊன்றப்பட்ட பைகளின் மேல் வைக்கோலினை பரப்பி 15 நாள்கள் வரை வைக்க வேண்டும். பதினைந்து நாட்களுக்கு பிறகு வைக்கோலினை நீக்கி விட வேண்டும். தொடர்ந்து நான்கு மாதங்கள் வரை நீர் விட்டு வரவேண்டும். இந்த நிலையில் அரை அடி உயரத்திற்கு செடி வளர்ந்திருக்கும். இந்த கட்டத்தில் செடிகளை எடுத்து வயலில் நடவேண்டும்.
ஒவ்வொரு செடிக்கும் இரண்டு அடி இடைவெளி இருக்க வேண்டும். தண்ணீர் செல்லும் பாரின்அளவு இரண்டரை அடி இருக்க வேண்டும். செடியினை அரை அடி ஆழத்தில் குழி தோண்டி நடவேண்டும். செடி வைத்த உடன் தண்ணீர் விட வேண்டும். பிறகு 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விட்டு வர வேண்டும். கருவேப்பிலை வறட்சியை தாங்கி வளரும் பயிர் ஆகும். முதல் அறுவடை செய்ய ஆறு மாதம முதல் எட்டு மாதம் ஆகும். அதன் பிறகு மூன்று மாதத்திற்கு ஒரு முறை அல்லது எண்பது நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம்.
கருவேப்பிலையை இலைப்புள்ளி மற்றும் அசுவனி போன்ற நோய்கள் தாக்குவதுண்டு. இந்த நோயை அகற்ற மோனோசில், பெவிஸ்டின், ஸ்பார்க், செப்டோசைக்கிள் போன்ற மருந்துகளை தெளிக்கலாம். கராத்தே அல்லது மோனோசில் மருந்துடன், பெவிஸ்டின் பவுடர் 25 கிராம் அல்லது செப்டோ 25 கிராம் கலந்து கைத்தெளிப்பான் கலந்து தெளிக்க வேண்டும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை 20:20 பாக்டம்பாஸ் உரம் இடவேண்டும். (ரசாயன உரம் பயன்படுத்த விரும்பாதவர்கள் கடைகளில் கிடைக்கும் இயற்க்கை பூச்சி கொல்லிகளை பயன்படுத்தலாம்) ஆண்டிற்கு ஒரு முறை அறுவடைக்கு பின் தொழுஉரம் அல்லது கோழி உரம் இட்டு மாட்டு ஏர் மூலம் பார் போட வேண்டும்.
மூன்று மாதத்திற்கு ஒருமுறை தரை மட்டத்திலிருந்து ஒரு இன்ச் விட்டு மீதி உள்ள இலைகளை அறுத்து எடுத்துக்  கொள்ள வேண்டும். இந்த நிலையில் ஏக்கருக்கு குறைந்த பட்சம் நான்குடன் முதல் 5 டன் வரை மகசூல் கிடைக்கும். சித்திரை மாதத்திலிருந்து ஆவணி மாதம் வரை கருவேப்பிலை நன்றாக வளரும். அதாவது வெயில் காலத்தில் நல்ல மகசூல் இருக்கும். விலை எட்டு ரூபாயிலிருந்து 12 ரூபாய் வரை இருக்கும். இதனால் ஏக்கருக்கு80 ஆயிரம் முதல் 1 லட்சத்திற்கும் கூடுதலாக வருமானம் கிடைக்கும்.

காளான் வளர்ப்பு மற்றும் காளான் உணவுப் பொருட்கள் பயிற்சி பெற அரிய வாய்ப்பு

0 கருத்துகள்மதுரையை சேர்ந்த வாப்ஸ் நிறுவனம் வேளாண்துறை பட்டதாரிகளின் திறன்மேம்பாட்டுக்காகவும், அவர்கள் அக்ரி கிளினிக் என்ற விவசாயிகளுக்கான வேளாண் சேவை மையம் தொடங்கவும் பயிற்சி அளித்து வருகிறது. மத்திய அரசின் விவசாயத் துறை அமைச்சகத்தின் ஒப்புதலுடன் இங்கு பி.எஸ்.சி வேளாண்மை, பி.எஸ்.சி தோட்டக்கலை, பி.எஸ்.சி ஊரகவியல் அறிவியல், பி.எஸ்.சி வனவியல் உள்ளிட்ட வேளாண்மை சார்ந்த பட்டதாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மதுரை மற்றும் புதுச்சேரியில் வாப்ஸ் நிறுவனத்தின் மையங்கள் அமைந்திருக்கின்றன.
தற்போது காளான் தொடர்பான உணவுப் பொருட்களுக்கு மதிப்பு அதிகரித்து வரும் இந்த வேளையில் அது தொடர்பான தொழில்களை தொடங்க விரும்பும் தொழில்முனைவோருக்கு காளான் வளர்ப்பு மற்றும் காளான் உணவு பொருட்கள் தயார் செய்யும் பயிற்சியை இந்த நிறுவனம் வழங்குகிறது. காளான் வளர்ப்பு மற்றும் விற்பனையில் சிறந்த தொழில்நுட்ப நிபுணர்கள் மூலம் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. மிகவும் குறுகிய கால இந்த பயிற்சியை காளான் வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் பயன்படுத்திக் கொண்டு காளான்வளர்ப்பை தொடங்கலாம்.
இது குறித்து மேலும் விபரமறிய....வாப்ஸ்
84897  27415  என்ற எண்ணில் அழைக்கலாம் .

மழை இல்லாத கோடையிலும் விவசாயம்

0 கருத்துகள்


எதிர்பாராத வறட்சி விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. வறட்சி வரும் என்பதை கணித்து அதில் இருந்து பயிர்களை தற்காத்துக் கொள்ள நமது முன்னோர்கள் பல உத்திகளை கையாண்டுள்ளனர். அதில் பண்ணைக் குட்டைகள் என்ற நீர் சேமிப்பு குழிகளும் ஒரு வகை உத்தி ஆகும்.
மழை காலத்திலும், கோடை மழை காலங்களிலும் பெய்யும் மழைநீரை பண்ணைகுட்டை எனப்படும் குழிகளில் தேக்கி வைத்தனர். வறட்சி காலத்தில் பயிர்களுக்கு இதில் சேமிக்கப்பட்டிருக்கும் நீரை பயன்படுத்தியுள்ளனர்.சில நேரங்களில் இதே குழிகளில் விவசாய கழிவுகளை மக்க வைத்து உரமாக மாற்றி இயற்கை உரமாக பயிர்களுக்கு அளித்து நல்ல மகசூலையும் பெற்று வந்துள்ளனர்.
வேளாண்மையின் உயிர்நாடிகள்
போதிய நீரும், வளமான மண்ணும் வேளாண்மையின் உயிர் நாடி ஆகும். புவியியல் அமைப்பு அடிப்படையில் தமிழகம் மிகக் குறைந்த நிலத்தடி நீரை கொண்டதாக இருக்கிறது. மழைநீரை நம்பித்தான் பெரும்பாலான விவசாயிகள் பயிர் செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. பொதுவாக, மானவாரி நிலங்களில் மழைநீரை சேமித்து பயிர்களுக்கு தேவைப்படும் சமயத்தில் பயன்படுத்திக் கொள்ள முடிவதில்லை. மேலும், அதிக மழை பொழியும் காலங்களில் நிலத்தில் விழுந்து ஓடும் மழைநீரும் அதனால் ஏற்படும் மண்அரிமானமும் மண்ணின் வளத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இப்படி வழிந்து ஓடும் நீரை கட்டுப்படுத்த வயல் தோறும் ஒரு பண்ணைக்குட்டையை அமைக்கலாம். குறிப்பிட்ட நீள, அகல மற்றும் ஆழத்தில் அமைக்கப்படும் இந்த அமைப்பில் மழை நீரை சேமித்து வைப்பதன் மூலம் பயிரிடப்படும் நிலங்களில் மண் அரிப்பை தடுக்கலாம்.
எருக்குழி
மழை பெய்யும் போது, நிலத்தில் வழிந்தோடும் நீரால் பயிரிடப்படும் மண்ணில் உள்ள சத்துக்கள் நீரால் அரித்து செல்லப்படும். அப்போது அந்த மண்ணில் பயிரிட தேவையான சத்துக்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும். அப்போது, நிலத்தில் மக்கு மற்றும் தொழுஉரங்களை இட்டு மீண்டும் மண்ணில் பயிர் செய்வதற்கான போதிய சத்தை நிலைநிறுத்த வேண்டியுள்ளது.
பொதுவாக, இது போன்ற நிலைகளில் விவசாயிகள் அவசர நிலை கருதி நன்கு மக்காத எருவை வயலில் இடுவார்கள். அப்போது, அந்த மக்காத எருவில் இருக்கும் களைவிதைகளும் நிலத்தில் விழுந்து முளைக்க தொடங்குகின்றன. இந்த நிலையில் முக்கிய பயிரை சாகுபடி செய்யும் போது அதனுடன் சேர்ந்து நிலத்தில் முளைத்திருக்கும் களைகளும் உணவுக்கும், ஊட்டச்சத்திற்கும் போட்டி போடுகின்றன. இதனால் மகசூல் குறைகிறது.
இது போன்ற நிலையில் விவசாய கழிவுகளை மக்கிய உரமாக மாற்ற " வயல் தோறும் எருக்குழி" என்ற அமைப்பை நிறுவலாம். இது பயிர்களுக்கு தேவையான மக்கிய உரத்தை உற்பத்தி செய்யும் அமைப்பாக இருக்கிறது.
அருமையான பண்ணைக்குட்டைகள்
பயிரை விளைவிக்கும் போது அதற்கு தேவையான உரத்தை இடுவது மிகவும் முக்கியம். அதே போல் அந்த பயிருக்கு தேவையான நீரை குறைவில்லாமல் பாசனம் செய்வதும் அதை விட முக்கியம். இந்த இரண்டுக்கும் உதவுவதே பண்ணைக்குட்டைகள் என்ற அமைப்பு ஆகும். வயல்வெளிகள் தோறும் விவசாயிகள் சிறிய பண்ணைக்குட்டை அமைப்பை ஏற்படுத்திக் கொண்டால் அதில் நீரையும் சேமிக்கலாம். அதையே சமயங்களில் விவசாயக் கழிவுகளை மக்க வைத்து பயன்படுத்தும் உரசேமிப்பு குழியாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பண்ணைக் குட்டை அமைப்பு
ஒரு ஏக்கர் நிலத்தில் குறைந்தது 1 சென்ட் பரப்பளவில் 8 க்கு 5 மீட்டர் அல்லது 10 க்கு 4 மீட்டர் அளவில் 1 மீட்டர் ஆழத்திற்கு குழி வெட்ட வேண்டும். சமமான நிலங்களில் சாலை வசதி இருப்பின் சாலை ஒரங்களிலோ, அல்லது வயலின் நடுவிலோ வெட்டலாம். லேசான சரிவு உள்ள நிலங்களில் தாழ்வான பகுதியில் இந்த குழி வெட்ட வேண்டும். இந்த குழிகளை தோண்டும் போது அந்த நிலத்தில் இருந்து எடுக்கப்படும் மண்ணில் பெரும்பகுதியை வயல்பரப்பினை பலப்படுத்தவும், தோண்டப்படும் பண்ணைக் குட்டையின் கரையை பலப்படுத்தவும்  பயன்படுத்தலாம். ஒரு சென்ட் பரப்பளவில் அமைக்கப்படும் பண்ணைக்குட்டையானது 40 ஆயிரம் லிட்டர் தேக்கி வைக்கும் அளவாக இருக்கும். கோடையில் மழை பெய்யும் போது, ஒரு ஏக்கர் பரப்பளவில் மண் கண்டம் நனைந்த பிறகு வழிந்தோடும் மழைநீர் தானாக இந்த குழிக்கு வந்து தேங்கும். இப்படி பண்ணைக்குட்டையில் தேக்கப்படும் நீரை தக்க சமயத்தில் எடுத்து பயன்படுத்தலாம். அதாவது, மானவாரி நிலங்களுக்கு முதல் போக சாகுபடியில் அதாவது ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் எருவிட வேண்டியது இருக்கும். அதனை கருத்தில் கொண்டு இந்த குழியில்  ஜனவரியிலிருந்து ஜூன் வரை உள்ள காலத்தில் விவசாய கழிவுகளை சேமித்து மக்க வைத்து உரமாக மாற்றலாம். பின்னர் ஜுன் மாதவாக்கில் இந்த உரத்தை எடுத்து பயிர்களுக்கு அளிக்கலாம். அதே போல் ஜுலையிலிருந்து டிசம்பர் வரை மழை பெய்யும் காலத்தில் விழும் மழை நீரை இந்த பண்ணைக்குட்டையில் தேக்கி வைத்து பயன்படுத்தலாம்.
மழை பெய்ய உதவும்
ஒவ்வொரு வயலிலும் ஏற்படுத்தப்படும் இது போன்ற சிறிய பண்ணைக்குட்டைகள் ஒரு சிறிய நீர் தேக்கம் போலவே செயல்படும். பண்ணைக்குட்டையில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் நீரால் மெல்ல கசிந்து நிலத்தடியில் இறங்குவதால், சுற்றுப்புறத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். நிலத்தின் மேற்பரப்பிலும், நிலத்தடியிலும் தேக்கப்படும் நீரால் வாயு குளிர்ந்து விடும். குளிர்ந்த மேகங்களால் மழை பொழிவு ஏற்படும்.
இந்த குழிகளின் நடுவிலும் இலந்தை, நெல்லி, மா, சப்போட்டா, தேக்கு, இலவு, கிளிசிரிடியா போன்ற மரங்களை நடலாம். புன்செய் நிலப்பகுதியில் எருக்குழி அமைப்பதில் ஒருங்கிணைந்து விவசாயிகள் செயல்படவேண்டும். அவ்வாறு செய்தால், அதிக மழை பெறும் நாட்களில் வழிந்தோடும் மழைநீரை சேமித்தும், அதனால் நிலத்தடி நீர் உயரவும், மக்கிய எரு தயாரிப்பும், சேமிப்பும் உறுதி செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டு விவசாயிகள் இப்படி வயலுக்குவயல் பண்ணைக்குட்டை மட்டும் எருக்குழி அமைத்தால் மழைநீர் வழிந்தோடி வீணாகாமல் காப்பாற்றப்படும். விலை மதிப்பில்லாத நன்னீர் சேமிப்பினால் வருங்கால சந்ததிகளின் நீர்த்தேவை பாதுகாக்கப்படும்.
தகவல்: கி.சுருளிபொம்மு, உதவிஇயக்குநர், தரக்கட்டுப்பாடு, மதுரை.

சோலார் தயாரிப்புகளில் காண்டல் சிறந்த ஒரு படைப்பு!

2 கருத்துகள்


 'கண்ணை மூடிக் கொண்டு கான்டெல் இன்வெர்டர்களைவாங்கலாம்'


சமீப காலமாக, மின்வெட்டை பயன்படுத்திக் கொண்டு நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் போல் ஆயிரக்கணக்கில் இன்வெர்டர் நிறுவனங்கள் முளைத்துள்ளன. விதவிதமான பெயர்களின் இன்வெர்டர்களும், பேட்டரிகளும், யு.பி.எஸ்களையும அவை விற்பனை செய்கின்றன.
இவ்வாறு விற்பனை செய்யப்படும் பொருட்கள் தரமானது தானா என்ற கேள்விக்கு மட்டும் அந்த நிறுவனங்களிடம் விடை இல்லை. சென்னையை சேர்ந்த கான்டெல் நிறுவனம் இவற்றுக்கு எல்லாம் மாற்றாக சர்வதேச தரச்சான்றுகளை பெற்ற தரமான இன்வெர்டர்களை விற்பனை செய்து வருகிறது. கண்ணை மூடிக் கொண்டு கான்டெல் இன்வெர்டர்களை மட்டுமே நம்பி வாங்க முடியும் என்று சொல்கிறார்கள் எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பம் அறிந்தவர்கள்.
இந்த நிறுவனத்தின் தொழில்நுட்ப அதிகாரியும், தமிழகத்தின் மிகச்சிறந்த பொறியியல் கல்லூரிகளில் ஒன்றான திருச்சி ரீஜினல் என்ஜினியரிங் கல்லூரியில் பட்டம் பெற்ற திரு. குமார் நட்ராஜன் அவர்கள் கூறும்போது ,,,
கேள்வி: உங்கள் நிறுவனத்தின் வளர்ச்சி பற்றிய பின்னணியை கூறுங்களேன்.
பதில்: கடந்த 2005 ம் ஆண்டுவாக்கில் எங்களது நிறுவனம் தொடங்கப்பட்டது. ஆரம்பகாலத்தில் தமிழகத்தில் முன்னணி தொலைத்தொடர்பு, நெட்ஒர்க்கிங், கம்ப்யூட்டர், ஆட்டோமெட்டிவ், நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு தேவைப்படும் தரமான உதிரிபாகங்களை கண்டறிந்து அவற்றை அந்த நிறுவனங்களுக்கு வாங்கி தரும் பணியை செய்து வந்தோம்.
அதன்பின்னர் தான் தற்போது கான்டெல் என்ற பெயரில் இன்வெர்டர்களை தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கினோம். முதல்தர எலக்ட்ரானிக் பாகங்களை கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு இன்வெர்டரை நுகர்வோருக்கு தரவேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.
கேள்வி: இன்வெர்டர்களை பொறுத்தமட்டில் தரம் என்பதை எதைக் கொண்டு நிர்ணயிக்கிறார்கள். அதை நுகர்வோர்கள் எவ்வாறு அறிந்து கொள்வது?
பதில்: இன்வெர்டர்கள் உள்பட எலக்டரானிக்ஸ் தயாரிப்புகளை பொறுத்தமட்டில் அது தரமானது தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இன்டர்நேஷனல் என்ஜினியரிங் ஸ்டேன்டர்டு என்ற ஒரு அமைப்பு இதற்கான சான்றிதழை வழங்குகிறது. அதிலும் குறிப்பாக ஐ.இ.சி 61683 மற்றும் ஐ.இ.சி 60068 என்ற இரண்டு சான்றிதழ்கள் இருந்தால் மட்டுமே அது ஒரு தரமான பாகங்கள் பொருத்தப்பட்ட ஒரு இன்வெர்டர் என்று மத்திய அரசின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் சொல்கிறது. இதன்படி, இந்த இரண்டு சான்றிதழ்களையும் எங்களது நிறுவனம் பெற்றுள்ளது. இது தவிர சிறப்பான தரத்திற்கு வழங்கப்படும் ஐ.எஸ்.ஓ 9001 சான்றிதழையும் எங்கள் நிறுவனம் பெற்றுள்ளது.
கேள்வி: உங்கள் தயாரிப்புகளை தரமானது என்று உறுதிப்படுத்த எந்த மாதிரியான பரிசோதனைகளை நீங்கள் கடந்து வந்துள்ளீர்கள்?
பதில்: கான்டெல் இன்வெர்டர்களை நுகர்வோர் சந்தையில் அறிமுகப்படுத்தும் முன்பு சுமார் 3 ஆண்டுகளாக அதன் இயங்கும் விதத்தை பரிசோதனை செய்தோம். இந்த ஆய்வில் காணப்பட்ட வெற்றி தோல்விகளை முழுமையாக ஆய்வு செய்து தரத்தை மேம்படுத்திக் கொண்டே வந்தோம். 100 சதவீதம் மிகச்சரியான தரத்தை எட்டிய பிறகு தான் சந்தையில் விற்பனை செய்வதற்கான முடிவை எடுத்தோம்.
தற்போது, மற்ற தயாரிப்புகளை விட கான்டெல் தொழில்நுட்பத்திலும், பயன்பாட்டிலும் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. இதற்கு காரணம் எங்களது ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு நாங்கள் எடுத்துக் கொண்ட கால அளவும், உழைப்பும் தான்.
கேள்வி: தற்போது எந்த வகையான தயாரிப்புகளை சந்தையில் விற்பனை செய்கிறீர்கள். அது பற்றி விளக்க முடியுமா?
பதில்: கான்டெல் புதியவகை ஹைபிரீட் சோலார் இன்வெர்டர்களை அறிமுகம் செய்துள்ளோம். இதில்டிஜிட்டல் சிக்னல் பிராசசர் என்ற தொழில்நுட்பம் உள்ளது. நீடித்த உழைப்பையும், குறைவான பராமரிப்பையும் இந்த டிஜிட்டல் சிக்னல் பிராசசர் தொழில்நுட்பம் உறுதி செய்கிறது. சுருங்க சொன்னால், கண்டபடி குழப்பிக் கொள்ளாமல் தரமான பாகங்களை கொண்டு தெளிவான முறையில் உருவாக்கப்பட்ட படைப்பு இது.
ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த வகை ஹைபிரீட் சோலார் இன்வெர்ட்டர்கள் 100,200,300,400,600 வோல்ட் ஆம்பியர்களில் அறிமுகம் செய்துள்ளோம். சூரிய ஒளிக்கற்றைகள் கிடைக்கும் போது வீடுகளின் மேற்கூரையில் பொருத்தப்பட்டிருக்கும் சோலார் பேனல்கள் மின்சக்தியை உருவாக்கும். இது தொடர்ந்து பேட்டரியில் சேமிக்கப்படும். பேட்டரி முழு பேக்அப் ஆனவுடன் ஆட்டோமெட்டிக்காக சோலார் மூலம் மீண்டும் பேட்டரிக்குள் மின்சக்தி தேவையில்லாமல் போகாத வகையில் இது தானாகவே பேட்டரிக்கும், சோலார் பேனலுக்குமான தொடர்பை துண்டித்து விடும்.
இப்போது, நுகர்வோர் என்பவர் சோலாரின் மூலம் பேட்டரியில் தேக்கப்பட்டிருக்கும் மின்சாரத்தை கொண்டு மின்சாதனங்களை இயக்கிக் கொள்ளலாம்.
அதே வேளையில், பேட்டரியில் இருக்கும் மின்சக்தி குறைய தொடங்கினால் உடனே ஆட்டோமெட்டிக்காக சோலார் பேனலுக்கும், பேட்டரிக்கும் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு பேட்டரி சார்ஜ் ஆக தொடங்கும். இந்த செயலானது எப்போதும் பேட்டரியை மின்சக்தி நிறைந்ததாக வைத்திருக்க உதவுகிறது.
இதே போல், 850 வோல்ட் ஆம்பியர்க்கும் மேல் மின்சக்தி தேவைப்படும் நுகர்வோர்களுக்கு தேவையான இன்வெர்டர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த வகை இன்வெர்டர்களில் கூடுதலாக பவர்சார்ஜ் கன்ட்ரோலர் என்ற புதிய தொழில்நுட்பத்தை புகுத்தியுள்ளோம். இதுவும் சோலாரில் சார்ஜ் ஆவதுடன், மின்சாரத்திலும் சார்ஜ் ஆகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதிலும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், பேட்டரி லோடு ஆகிவிட்டால் தேவையில்லாமல் மின்சாரத்தை எடுத்துக் கொள்ளாமல் பேட்டரி பேக்அப்பில் இருந்து மின்சாரத்தை கொடுத்து மின்சாதனங்களை இயக்கும். ஒட்டுமொத்தத்தில் எங்களது தயாரிப்புகள் நீடித்து உழைப்பவை மற்றும் பெரிய அளவில் பராமரிப்பு செலவுகள் தேவைப்படாதவை.
கேள்வி: தற்போதைய நிலையில் இன்வெர்டர்களை வாங்கும் நுகர்வோருக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
பதில்: ஒரு இன்வெர்டர் தரமானது, அது சரியாக இயங்க வேண்டுமென்றால் 5 படிநிலைகளில் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். அதில் தரச்சான்றிதழ்கள் பெற்ற நல்லதரமான இன்வெர்டருக்கு 20 மதிப்பெண்கள், தரமான சோலார் பேனலுக்கு 40 மதிப்பெண், நல்ல பேட்டரிக்கு 10 மதிப்பெண், இந்த சாதனங்களை எல்லாம் ஒன்றாக இணைக்க பயன்படும் கேபிள் மற்றும் கனெக்டர்களின் தரத்திற்கு 10 மதிப்பெண், இந்த கட்டமைப்பை எந்த வடிவத்தில் பொருத்தினால் மிகச்சரியாக மின்சக்தியை பெறமுடியும் என்பதை கணித்து அதனை ஒரு நுகர்வோரின் வீட்டில் நிறுவும் டெக்னீசியன்களின் திறனுக்கு 20 மதிப்பெண்கள் என்று பிரித்துக் கொண்டு சோலார் இன்வெர்டர்களை நிறுவ வேண்டும். இதில் ஒன்று குறைபட்டாலும் சோலார் இன்வெர்டர்களை பொறுத்தமட்டில் தோல்வி தான். எனவே, எலக்ட்ரானிக்ஸ் தொடர்பில் திறனுள்ள டெக்னீசியன்களை கொண்டு தான் இன்வெர்டர்கள் தொடர்பான அனைத்து பாகங்களையும் வாங்கவும், நிறுவவும் வேண்டும்.
எங்களது தரத்தை உறுதி செய்த காரணத்தால் தான், தற்போது மத்திய அரசின் நபார்டு நிறுவனம் தென்காசியில் சுமார் 200 குடியிருப்புகளுக்கு இந்த இன்வெர்டர்களை நிறுவ அனுமதி அளித்துள்ளது.
கேள்வி: உங்கள் இன்வெர்டர்களுக்கு டீலர்ஷிப் பெற அடிப்படையான தகுதி என்ன?
பதில்: ஏற்கனவே இன்வெர்ட்ர் பிசினசில் ஈடுபடுபவர்கள், எலக்ட்ரானிக்ஸ் துறையில் ஆர்வம் இருக்கும் பட்டதாரிகளை நாங்கள் வரவேற்கிறோம். உங்கள் மூலமாக உங்கள் நட்பு வட்டாரங்களுக்கும், உறவினர்களுக்கும் எதிர்காலத்திற்கு தேவையான ஒரு நல்ல தயாரிப்பை கான்டெல் இன்வெர்டர்கள் மூலமாக நீங்கள் அளிக்க முடியும். மற்றபடி எங்களது தயாரிப்பு பற்றிய தெளிவான அறிவை நாங்கள் பயிற்சியின் மூலம் அவர்களுக்கு வழங்கிவிடுவோம். எனவே, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து எங்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
திரு.குமார் நட்ராஜனை தொடர்பு கொள்ள.... 99401 88299 என்ற எண்ணிலும், எஸ்.3.ஜெயம் பில்டிங், 99, பலுல்லா சாலை, தி.நகர், சென்னை-6000 17 என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

வாழ்வுக்கு வழிகாட்டும் வான்கோழிகள் வளர்ப்பு

5 கருத்துகள்


பிராய்லர் கோழிகள் மிக மெதுவாக அறிமுகமாகி இன்றைக்கு இறைச்சி என்றால் பிராய்லர் தான் என்றாகி விட்டது. இது போல் இன்னும் குறுகிய காலத்தில் வான்கோழி இறைச்சியும் இறைச்சி பிரியர்களிடம் குறிப்பிடத்க்க இடத்தை பிடிக்கும் என்று கருதப்படுகிறது. எனவே பண்ணை தொழிலில் கவனம் செலுத்துபவர்கள் வான்கோழி வளர்ப்பை இப்பொழுதே தொடங்கினால் சந்தையை தக்க வைத்துக் கொள்ளலாம். வான்கோழிகளை வளர்க்கும் முறை குறித்தும், அதன் லாபம் பற்றியும் தமிழ்நாடு கால்நடை ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தின் டாக்டர்கள் பூவராஜன், உமாராணி மற்றும் பண்ணை முருகானந்தம் ஆகியோர் விவரிக்கிறார்கள்.
" குறைந்த தீவனம் உட்கொண்டு அதிக எடை கூடுவதாலும், குறுகிய காலத்தில் துரிதமாக வளர்ச்சி பெறுவதாலும் வான்கோழி வளர்ப்பு லாபகரமானதாக இருக்கிறது. தோப்புகள், மானவாரி நிலங்களில் பண்ணைகளை அமைக்கலாம். இறைச்சிக்காக இவற்றை வளர்க்கும் போது கீழ்க்கண்ட முறைகளை பின்பற்ற வேண்டும்.
பண்ணையில் கொட்டகை அமைத்தல்
ஒரு வான்கோழிக்கு 3 முதல் 4 சதுர அடி இடம் என்ற கணக்கில் 500 வான்கோழிகளுக்கு 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 200 சதுர அடியில் 20 அடி அகலத்தில் கொட்டகைகளை கிழக்கு மேற்காக அமைக்க வேண்டும். உள்புறம் சிமெண்ட் பூச்சு அவசியம். பக்கவாட்டில் ஒன்றரை அடி உயரத்தில் சுவர் எழுப்பி அதற்கு மேல்  அடி அளவுக்கு கம்பி வலை பொருத்த வேண்டும். தரையில் நெல் உமி அல்லது தென்னை மஞ்சியை பரப்ப வேண்டும்.
குஞ்சுகள் வாங்கி பராமரித்தல்
வான்கோழி இனத்தில் இறைச்சிக்கான சிறந்த இனங்களாக அகன்ற மார்பு கொண்ட பிரான்ஸ், சிலேட்டு நிற கலப்பினம் அல்லது பெல்ஸ்வில்லி கலப்பினம் ஆகிய இனங்களை நம்பிக்கையான இடத்தில் வாங்க வேண்டும். ஒரு மாத குஞ்சுகளாக வாங்கி வளர்த்தல் நல்லது. ஏனென்றால், புதிதாக பண்ணை தொடங்குவோர் அவற்றை பராமரிக்க ஆலோசனை மற்றும் குஞ்சு பராமரிப்பு என இறப்பு சதவீதத்தை கட்டுப்படுத்தலாம்.
வான்கோழி குஞ்சுகளை அடைகாப்பானில் வைத்தல்
இளம் குஞ்சுகள் முதல் 3 வார வயது வரை செயற்கை வெப்பம் அளித்தல் வேண்டும். இதற்கு ஒன்றரை அடி உயர அட்டை அல்லது தகட்டினை 6 அடி விட்டத்திற்கு வைக்க வேண்டும். அடைகாப்பானின் நடுவில் தரையிலிருந்து 2 அடி உயரத்தில் மின்விளக்குகள் பொருத்தி எரிய விடவேண்டும். ஒரு 6 அடி விட்டமுள்ள அடைகாப்பானுக்குள் 150 குஞ்சுகள் வரை விடலாம். குஞ்சுகளுக்கு நாள் ஒன்றிற்கு 5 அல்லது 6 முறை தீவனம் சிறிது சிறிதாக வைக்க வேண்டும்.
வான் கோழி குஞ்சுகளுக்கு தீவனம் வைத்தல்
வான்கோழி குஞ்சுகளுக்கு முதல் 4 வாரங்களுக்கு 28 சதவீதம் புரதம் அடங்கிய தீவனம் அளிக்க வேண்டும்.
மாதிரி தீவனம்
மக்காசோளம்/ கம்பு - 40 சதவீதம், சோயாபுண்ணாக்கு- 38%, மீன்தூள்- 95%, தவிடு வகைகள்- 10%, எண்ணெய்- 1%, தாதுஉப்பு- 3%, உயிர்சத்துகள்- 50 கிராம்.
நான்கு முதல் எட்டு வாரங்களுக்கு
இதில் மேற்கூறிய தீவனத்தில் மக்காச்சோளம்/கம்புவின் அளவை 45 சதவீதமாகவும், பிண்ணாக்கின் அளவை 8 சதவீதமாக குறைத்தும் தாதுஉப்பின் அளவு அரை சதவீதம் கூட்டியும் தயாரித்தல் வேண்டும்.
8 முதல் 12 வாரங்களுக்கு
மக்காச்சோளம்/கம்பு- 45%, சோயாபுண்ணாக்கு- 31%, மீன்தூள்-10%, தவிடு-10%, எண்ணெய் 1%, தாதுஉப்பு மற்றும் உயிர் சத்துகள் 4%.
தீவனங்கள் பெரும்பாலும் குஞ்சுகள் வாங்கும் இடத்தில் 3 முதல் 4 மாதத்திற்கு தேவையான அளவு வாங்கி வைத்துக் கொள்வது நல்லது. குச்சி தீவனமாக இருப்பின் நல்லது. காரணம் இதில் அனைத்து சத்துகளும் சமசீரான அளவில் கிடைக்கிறது. தீவனம் வீணாவது குறைவு. தீவன மாற்று திறன் அதிகரிக்கிறது.
நோய் பராமரிப்பு
குஞ்சுகளுக்கு முதல் வார வயதில் ராணிகெட் நோய் தடுப்பு மருந்தும், பின்னர் அம்மை தடுப்பு ஊசியும் 1 மாத இடைவெளியில் அளித்தல் அவசியம். தீவனத்தில் ரத்த கழிச்சல் நோய்க்கான தடுப்பு மருந்தையும் 3 வது வார வயதில் அளிக்க வேண்டும்.
வான்கோழி இறைச்சி விற்பனை
வான்கோழிகளை 12 முதல் 16 வார வயதில் விற்பனை செய்து முடித்திட வேண்டும். 9 முதல் 12 வார வயதில் 3 கிலோ எடையும், 11 வார வயதில் 4 முதல் 5 கிலோ எடையும் இருக்க வேண்டும். தீவனம் முறையே 4 கிலோவும், 6 கிலோவும் உட்கொண்டிருத்தல் வேண்டும். இந்த வயதிற்கு பிறகு இறைச்சி முற்றி விடுவதால் உண்பதுற்கு மிருதுவாக இருக்காது. ஆகவே வான்கோழிகளை 12 முதல் 16  வார வயதிற்குள் உள்ள இறைச்சியாக இருக்கும் போது விற்பதும், வாங்குவதும் நல்லது. பிரியாணி உள்பட பிராய்லர் இறைச்சி மூலம் தயாரிக்கப்படும் அனைத்து அயிட்டங்களையும் வான்கோழி இறைச்சியிலும் பண்ண முடியும்.

திட்ட அறிக்கை

தோப்புகளில் 1 மாத குஞ்சுகளாக 500 குஞ்சுகள்வளர்க்க
( 1 குஞ்சு ரூபாய் 150 வீதம்)                            - 75 ஆயிரம்

அன்றாட செலவுகள்                                 
தீவன செலவு ( ஒரு குஞ்சுக்கு 15 ரூபாய் என்ற அளவில்)
500 குஞ்சுகளுக்கு                                     - 45 ஆயிரம்

பண்ணையாள் கூலி                                   - 8 ஆயிரம்
( மாதம் 2 ஆயிரம் வீதம் 4 மாதங்களுக்கு)

தடுப்பு மருந்துகள் ( ஒரு குஞ்சுக்கு 1. 50 காசு வீதம்)        -  750 ருபாய்.
இதர செலவுகள்                                       - 1, 200 ருபாய்.

ஆக மொத்தம்                                         - 54 ஆயிரத்து 950 ரூபாய்.

வருமானம்
500 கோழிகள் ( 4 கிலோ எடையில்)
1 கிலோ எடையுள்ள கோழி 120 ரூபாய் என்ற விலையில்    - 2 லட்சத்து 28 ஆயிரம்

நிகர வருமானம்

ரூ.2 லட்சத்து 28 ஆயிரம் - 54 ஆயிரத்து 950 = 1, 33 ஆயிரத்து 525.
 நிகரலாபமானது தீவன செலவு, மருந்துகள் செலவு மற்றும் விற்பனை விலையை பொறுத்து பண்ணைக்கு பண்ணை மாறுபடும். இதனை கவனத்தில் கொண்டு விற்பனை வழிமுறைகளை எளிதாக்கி குறிப்பிட்ட கால அளவில் குஞ்சுகளை இறைச்சிக்கென்று விற்பனை செய்து சிறந்த லாபம் பார்த்திடலாம். வான்கோழி இறைச்சி இன்னும் குறுகிய காலத்தில் உணவில் சிறப்பான இடத்தை பிடிக்கவுள்ளது. எனவே இப்போதே பண்ணையை தொடங்கிவிடலாம்.

நல்ல லாபம் தரும் எளிய தொழிலான வண்ணக்கோழி வளர்ப்பு

2 கருத்துகள்
சிறிய இடம் இருந்தால் கூட அதில் ஒரு லாபகரமான தொழில் வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள முடியும். வண்ணக் கோழி வளர்ப்பு இத்தகைய ஒரு தொழில் வாய்ப்பு ஆகும். நாட்டுக் கோழி இனத்தில் இருந்து கால்நடை பல்கலைக் கழகத்தால் புதிதாக உருவாக்கப்பட்ட இனத்தை தான் வண்ணக் கோழிகள் என்று அழைக்கிறார்கள். நந்தனம் 1 மற்றும் 2, கிரிராஜா, கிரிராணி, வனராஜா, சுவர்ணதாரா என பல்வேறு இனக் கோழிகள் கால்நடை பல்கலை கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வண்ணக் கோழி இனங்கள் பார்ப்பதற்கு நாட்டுக் கோழி போன்றே காணப்படும். ஆனால் இவற்றுக்கு நாட்டுக் கோழிகளை விட பல சிறப்பான இயல்புகள் உண்டு. குறிப்பாக இந்த வகை கோழிகளுக்கு கரையான்களை உணவாக பயன்படுத்துவதன் மூலம் இவை எளிதில் அதிக புரதச்சத்தை பெற்று வேகமாக எடை அதிகரிக்கும். இந்த கோழிகளை புறக்கடையில் வளர்ப்பதன் மூலம் வீட்டில் உள்ள பெண்கள், பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், நிலமற்ற விவசாயிகள், இளைஞர்கள் ஆகியோர் பொருளாதார வளத்தை பெறலாம்.
சிறப்பு அம்சங்கள்
வண்ணக் கோழி வளர்ப்பில் ஈடுபடும் முன்பு அவற்றின் சிறப்பம்சங்களை அறிந்து கொள்வது நல்லது.
1. நாட்டுக் கோழிகளை விட துரிதமாக எடை கூடும்.
2. நாட்டுக் கோழி இறைச்சியின் சுவையை விட அதிக சுவையுள்ளது.
3. எல்லா இடங்களிலும், எல்லா தட்பவெப்ப நிலைகளையும் தாங்கி வளரக் கூடியது.
4. அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.
5. அதி நவீன வளர்ப்பு முறைகளை பயன்படுத்தி வளர்க்க தேவையில்லை. சாதாரண நாட்டுக் கோழி போல் புறக்கடை வளர்ப்பாக வளர்க்க முடியும்.
6. நாட்டுக் கோழிகளை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியும், அதிக முட்டைகள் இடும் திறனும் கொண்டது. இதன் முட்டைகள் நாட்டுக் கோழி முட்டைகளை போலவே பழுப்பு நிறம் கொண்டதால் நாட்டுக் கோழி முட்டைகளின் விலைக்கே விற்பனை செய்யலாம்.
கரையான் உணவு
கரையான்களில் 36 சதவிகிதம் புரதம், 44 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. இவை இரண்டும் கோழியின் உடல் வளர்ச்சியை அதிகரிக்கும். கரையான்களை உணவாக கொடுப்பதால் கோழிகளின் வளர்ச்சி விகிதம் 15 சதவிகிதம் வரை அதிகரிக்கிறது. இதனால் தீவனச் செலவு பெரும்பகுதி குறைந்து விடும். கரையான்களை வீட்டின் அருகிலேயே உற்பத்தி செய்யலாம். கிழிந்த கோணிப்பை, பழைய துணி, காய்ந்த மாட்டு சாணம், உலர்ந்த இலை, இற்றுப் போன மரக்கட்டைகள் மற்றும் வைக்கோல் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் ஒரு மண்பானைக்குள் போட்டு அந்த பானையில் அடைத்து, நீர் தெளித்து தரையில் கவிழ்த்து வைக்கவும். 24 மணி நேரத்தில் இதில் கரையான் உற்பத்தி ஆகி இருக்கும்.
உற்பத்தி ஆவதில்லை
கரையான்களில் உற்பத்தியானது அடைமழைக் காலங்களில் மட்டும் பாதிக்கப்படுவதுண்டு. இது தவிர பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட இடங்களில் கரையான்கள் உற்பத்தி ஆவது இல்லை. இது தவிர, எறும்பு புற்று அதிகமாக உள்ள இடங்களிலும் கரையான்கள் உற்பத்தியாகாது. எனவே, கரையான்களை உற்பத்தி செய்ய முற்படும் போது இது போன்ற இடங்களை தவிர்க்க வேண்டும்.
தீவனங்கள்
வண்ணக் கோழிகளுக்கு கரையான்களை தவிர வழக்கமான தீவனங்களை அளித்து வளர்க்கலாம். கம்பு, மக்காச்சோளம், கேழ்வரகு ஆகியவற்றை 30 முதல் 35 பங்கும், கடலைப் புண்ணாக்கு 15 பங்கும், தவிடு வகைகள் 15 பங்கும், சமையலறை கழிவுகள் 5 சதவிகிதமும், கரையான் 10 பங்கும், புளியங் கொட்டை 10 பங்கும், கருவாட்டு தூள் 5 பங்கு, தாதுப்பு 1 பங்கு மற்றும் வைட்டமின் கலவை 1 பங்கும் எடுத்து நன்றாக இவற்றை கலந்து கொண்டு கோழி தீவனம் தயாரிக்கலாம்.
இவை தவிர வேலிமசால், குதிரைமசால் மற்றும் அசோலா போன்ற நீலப்பச்சை பாசியை 5 முதல் 10 சதவிகிதம் அறுவடை செய்து கொடுக்கலாம். வேலிமசால், குதிரை மசால் போன்ற பசுந்தீவனங்களை உற்பத்தி செய்ய பெரிய அளவில் இடவசதி தேவையில்லை. ஒரு தடவை நட்டால் 5 ஆண்டுகள் வரை தொடர்ந்து இவற்றை அறுவடை செய்து பசுந்தீவனம் தயாரிக்கலாம்.
நோய்கள் பராமரிப்பு
வண்ணக் கோழிகளை வளர்க்க முற்படும் போது அவற்றை நோய்களில் இருந்து பாதுகாக்க தகுந்த காலகட்டத்தில் தடுப்பூசிகளை அளிப்பது நல்லது. இந்த குஞ்சுகளுக்கு பிறந்த 6 வது நாள் லசோட்டா தடுப்பூசியும், 12 வது நாள் கம்போரா தடுப்பூசி, 27 ம் நாள் மீண்டும் லசோட்டா தடுப்பூசியும், இரண்டாவது மாதத்தில் இராணிகெட் தடுப்பூசியும், தொடர்ந்து 3 மாதத்திற்கு ஒரு முறை இராணிகெட் கே தடுப்பூசி அளிக்க வேண்டும்.
ஒப்பீடு
வண்ணக் கோழிகளை நாட்டுக் கோழிகளுடன் ஒப்பிடும் போது வண்ணக் கோழியே பல வகைகளில் பயனுள்ளதாக இருக்கிறது. வண்ணக் கோழிகள் நாட்டுக் கோழிகளை விட வேகமாக உடல் எடை அதிகரிக்கிறது. அதாவது நாட்டுக் கோழிகள் 8 வார கால அளவில் 600 முதல் 800 கிராம் எடை அளவே உடலின் எடை கூடுகிறது. ஆனால் வண்ணக் கோழிகள் இதே 8 வாரங்களில் ஆயிரத்து 500 முதல் ஆயிரத்து 600 கிராம் எடையை அடைகிறது. அதே போல் நாட்டு கோழிகள் ஆண்டுக்கு அதிகபட்சமாக 70 முட்டைகள் வரை இடுகிறது. ஆனால் வண்ணக் கோழிகள் 100 முதல் 120 முட்டைகளை இடுகிறது. மேலும் நாட்டுக் கோழி முட்டையின் எடை 45 முதல் 50 கிராம் அளவே இருக்கிறது. ஆனால் வண்ணக் கோழிகளின் முட்டையின் எடையானது 55 முதல் 65 கிராம் வரை இருக்கிறது. இது போல் பலவிதங்களில் ஒப்பீடு செய்து பார்த்த நிலையில் வண்ணக் கோழிகள் முதலிடத்தை பெறுகின்றன. எனவே, நாட்டுக் கோழி வளர்ப்பில் இறங்க விரும்புபவர்கள் பண்ணையின் ஒரு பகுதியாக வண்ணக் கோழிகளையும் சோதனை அடிப்படையில் வளர்த்து பின்னர் பெரிய அளவில் இதே கோழிகளை வளர்த்து லாபம் பெறலாம்.
டாக்டர்.பூவராஜன்,கு.சுகுமார் மற்றும் ஜான்சன் ராஜேஸ்வர், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல்.

காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today