1 கருத்துகள்

பணத்தை மிச்சப்படுத்தும் பாரம்பரிய பயிர் சாகுபடி தொழில் நுட்பம்

 

பாரம்பரியமாக நமது முன்னோர்கள் பின்பற்றி வரும் சில பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் பெரும் பலனை கொடுத்து வந்துள்ளன. தற்போதும் கூட சில இடங்களில் விவசாயிகள் இவற்றை பின்பற்றி பயிரிடுகின்றனர். இது பற்றி பார்க்கலாம்.
விதை நேர்த்தி
விருதுநகர் மற்றும் சுற்றுவட்டார பரப்புகளில் விவசாயிகள் விதை நேர்த்தி செய்து நல்ல விளைச்சலை காண்பதுண்டு. அதன்படி, விதைகளை மாட்டு சாண கரைசலில் ஊறவைத்து நேர்த்தி செய்தல் முறையில் விதைகளை நேர்த்தி செய்து பின்னர் விதைக்கின்றனர். முதலில் அரை கிலோ மாட்டுச்சாணத்திற்கு 1 லிட்டர் தண்ணீர் வீதம் கலந்து மாட்டுச்சாணக்கரைசலை தயாரித்துக் கொள்ள வேண்டும். இந்த கரைசலில் பீர்க்கு, பாகல், புடலை, சுரை மற்றும் பூசணி போன்ற காய்கறி பயிர்களின் விதைகளை மாட்டுச்சாண கரைசலில் ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலை விதைகளை மாட்டுச்சாண கரைசலிலிருந்து எடுத்து, பின்பு விதைப்பதற்கு பயன்படுத்த வேண்டும். மாட்டுச்சாண கரைசலில் விதைகளை ஊறவைத்து நேர்த்தி செய்வதால் விதைகளின் முளைப்புதிறன் 90 சதவீதம் இருப்பது உறுதியானது.
பூச்சி விரட்டி தெளித்தல்
கோயம்புத்தூர் பகுதியில் இயற்கை பூச்சி விரட்டி கரைசலை தயாரித்து பயன்படுத்தி வருகின்றனர். புங்கம், துளசி, நொச்சி, எருக்கு மற்றும் வேப்பிலை போன்ற ஐந்து வகையான இலைகளை தேவைக்கு ஏற்ப எடுத்துக் கொண்டு, அதனை உரலில் இடித்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு இதனுடன் மாடுகளின் கோமியத்தை சேர்க்க வேண்டும். அதாவது 10 கிலோ இலைகளுக்கு 100 லிட்டர் கோமியம் என்ற அளவில் சேர்க்க வேண்டும். இந்த கலவையை 10 லிருந்து 15 நாட்கள் வரை ஊறவைத்தல் வேண்டும். தினமும் காலை அல்லது மாலை வேளைகளில் இந்த கலவையை நன்றாக சில நிமிடங்கள் கலக்கி விட வேண்டும். 10 நாட்கள் கழித்து இந்த கலவையிலிருந்து துர்நாற்றம் வீசும். இதுவே கலவை நன்றாக நொதித்து விட்டதற்கான அடையாளமாகும். பின்பு கலவையிலிருந்து தெளிந்த நீரை வடிகட்டி பயிர்களுக்கு தெளிக்க பயன்படுத்தலாம். இந்த கரைசலானது, அனைத்து வகை பயிர்களுக்கும், பல்வேறு நிலையில் உள்ள பயிர்களுக்கும் தெளிக்கப்படுகின்றது.
இந்த கரைசலை தெளிப்பதால், கரைசலின் துர்நாற்றம் மற்றும் கசப்பு தன்மையின் காரணமாக சாறு உறிஞ்சும் பூச்சிகளான இலைப்பேன், தத்துப்பூச்சி, இலைத்துளைப்பான், வண்டுகள் போன்றவை கட்டுப்படுத்தப்படுகின்றன. பயிர்கள் செழித்து வளர்கின்றன. இயற்கை சார்ந்து இந்த தொழில் நுட்பத்திற்கு எந்த செலவும் இல்லை.
வெண்டை பயிருக்கு மோர் தெளித்தல்
வெண்டை பயிருக்கு முக்கிய எதிரியாக இருப்பது வெள்ளை ஈ என்னும் சாறு உறிஞ்சும் பூச்சியாகும். இந்த பூச்சியானது தேமல் நோயை பரப்புகிறது. வெண்டை நோயில் வெள்ளை ஈயை கட்டுப்படுத்துவது முக்கியமானது. இதற்கு, 10 லிட்டர் மோரை 2 நாட்களுக்கு புளிக்க வைக்க வேண்டும். பின்பு 1 லிட்டர் மோருக்கு 9 லிட்டர் தண்ணீர் வீதம் தெளிப்பானில் நிரப்பி வெண்டை நடவு செய்து 25 நாட்களுக்கு பிறகு கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். இவ்வாறு மோர் கரைசலை தெளிப்பதால் தேமல் நோயை பரப்பும் வெள்ளை ஈக்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்த முறையில் வெள்ளை பூச்சியை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 80 ரூபாய் தான் செலவு ஆகும் என்கிறார்கள்.
பருத்தியில் காய்ப்புழு கட்டுப்பாடு
பருத்தி சாகுபடியில் காய்ப்புழுக்களால் மிகவும் மகசூல் பாதிப்பு ஏற்படுகிறது. தற்போது காய்ப்புழுக்களை கட்டுப்படுத்த விவசாயிகள் பல்வேறு பூச்சி மருந்துகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் இயற்¬கான பாரம்பரிய முறையில் காய்ப்புழுக்களை விரட்ட முடியும். இதற்கு, 15 லிட்டர் தயிரை 15 லிட்டர் தண்ணீருடன் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்பு 5 கிலோ அளவு வேப்பிலைகளை சேகரித்து தண்ணீர் விட்டு இடித்து சாறு பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். வேப்பிலை சாற்றை தயிர் கரைசலுடன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இந்த கலவையை 15 நாட்கள் வரை ஊற வைத்தல் வேண்டும். தினந்தோறும் இந்த கலவையை மரக்குச்சியினால் காலை அல்லது மாலை வேளையில் கலக்கி விட வேண்டும். 15 நாட்களுக்கு பின் இந்த கரைசலை வடித்து, தெளிந்த கரைசலை எடுத்து பருத்தி செடிகளில் நன்றாக படும்படி தெளிக்க வேண்டும். தயிர் மற்றும் வேப்பிலை சாறு கலவையை தெளிப்பதால் பருத்தியில் 60 சதம் காய்ப்புழுக்கள் கட்டுப்படுத்தப்படுவதாக அனுபவ விவசாயிகள் கூறுகின்றனர். இந்த தொழில் நுட்பத்தை பின்பற்ற ஒரு ஏக்கர் பருத்தி சாகுபடி பரப்பிற்கு அதிகபட்சம் ரூ.150 மட்டுமே செலவாகும் என்கிறார்கள்.

0 கருத்துகள்

தரமான விதை தென்னை எடுக்கும் வழிமுறைகள்

நல்ல மகசூல் தரக்கூடிய தென்னை மரங்களை தாய் தென்னைமரம் என்கிறோம். இந்த தாய் தென்னை மரங்களை தோட்டத்தில் வளர்ப்பதன் மூலம் தொடர்ந்து விதை எடுத்து புதிய தென்னை கன்றுகளை உருவாக்க முடியும். நல்ல தரமான தாய் மரங்களில் இருந்து விதை எடுக்க விரும்பும் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி பார்க்கலாம்.
தென்னையில் ரகங்கள்
தென்னையில் நெட்டை, குட்டை என்ற இரண்டு ரகங்கள் இருந்த போதிலும், இந்த இரண்டு ரகங்களிலும் மாறுபட்ட அளவில் காய்க்கும் குணமுடைய வகை தென்னைகள் உள்ளன. உதாரணமாக ஜாவாத் தீவில் ஜாவா நெட்டை மற்றும் ஜாவா ஜயண்ட் என்ற ரகங்கள் உள்ளன.  இதில் ஜாவா நெட்டை ரகம் என்பது நாம் சாதாரணமாக காணும் நெட்டை தென்னை போல் காய்கள் காணப்படும். ஆனால் ஜாவா ஜயண்ட் ரகம் என்பது சாதாரண நெட்டை தேங்காயை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு பெரிய காய்கள் கொண்ட ரகமாகும். பருப்பின் கனமும் அதிகமாக இருக்கும். இந்த பருப்பில் 71 சதவீதம் எண்ணெய் பதம் காணப்படுகிறது.
ஜாவா ஜயண்ட் வகை மரங்களில் ஒரு பூம்பாளையில் 8 முதல் 10 காய்கள் மட்டுமே காணப்படும். இது போன்று அந்தமான் சாதா நெட்டை, அந்த மான் ஜயண்ட் என இரண்டு ரகங்களும் உள்ளன. பிலிப்பைன்ஸ் நாட்டு ரக தேங்காயில் காய் பெரியதாகவும், பருப்பு அதிக கனத்துடனும் காணப்படும். இந்தியாவை பொறுத்த மட்டில் இங்கு மேற்கு கடற்கரை நெட்டை, கிழக்கு கடற்கரை நெட்டை என இரண்டு ரகங்கள் உள்ளன. இதில் மேற்கு கடற்கரை நெட்டை நன்கு தடித்து பருமனாகவும், கொண்டை பெரிதாகவும் இருக்கும். ஒரே காலத்தில் 12 முதல் 13 பூம்பாளைகள் காணப்படும். ஒரு ஆண்டில் 80 முதல் 100 காய்கள் காய்க்கும். இது கேரளா பகுதியில் அதிகம் காணப்படுகிறது. ஆந்திரா, ஓரிசா மற்றும் தமிழகத்தின் வடக்கு மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகளில் உள்ள மரங்களை கிழக்கு கடற்கரை நெட்டை என்று அழைக்கிறோம். இதன் பருமன், கொண்டை மற்றும் ஓலைகளின் நீளம் சற்று சிறுத்து காணப்படுவதுடன் காயின் பருமனும் சற்று குறைந்து காணப்படும். இந்த வகை மரங்கள் ஆண்டுக்கு 100முதல் 120 காய்கள் வரை காய்க்கும். இது தவிர தமிழகத்தில் அதிக பருப்பு, பெரிய காய்கள் 13 முதல் 16 பூங்குலைகள் உடைய ஈத்தாமொழி நெட்டை, ஐயம்பாளையம் நெட்டை மற்றும் நடுத்தர காய்களை கொண்ட திப்பத்துர் வகை மரங்களும் உள்ளன.
இது போன்று இளநீர் ரகம் எனப்படும் குட்டை ரகங்களும் உள்ளன. இதில் பச்சை, மஞ்சள், சிவப்பு நிறமுடைய காய்கள் தரும் தனி மரங்கள் காணப்படும். இந்த குட்டை ரகத்தில் பெரிய காய்களை உடைய மலேசிய வகையும், சிறிய காய்களை உடைய சாவக்காடு குட்டை வகையும் உள்ளன.
தாய் மரங்கள் தேர்வில் கவனிக்க வேண்டியவை
தாய் மரங்களை தேர்வு செய்யும் போது அவை நோய் தாக்குதல் இல்லாததாகவும், சரியான வயதுடையவையாகவும் இருத்தல் வேண்டும். இலையழுகல், இலைப்புள்ளி, இலைக்கருகல் மற்றும் கேரளா அல்லது தஞ்சை வாடல் நோய் இல்லாத மரங்கள் விதை எடுக்க ஏற்றவை. பொதுவாக, தஞ்சை வாடல் நோய் தாக்கப்பட்ட மரங்களின் திசுக்களில் கானோடெர்மாலுசிடம் என்ற பூசாண இழைகள் காணப்படும். இந்த நோய்களில் உள்ள கிருமிகள் மற்றும் பூசாணங்கள் காய்களின் மூலம் கன்றுகளுக்கு பரவும் தன்மை உடையவை. இதனால் இந்த நோய் காணப்படும் மரங்களை தாய் மரங்களாக தேர்வு செய்யக்கூடாது. இலைப்புள்ளி, இலைக்கருகல் மற்றும் குருத்தழுகல் போன்ற பூசாண நோய்களால் மரங்கள் தாக்கப்படுகின்றன. ஆனால் தோப்பில் ஒரு சில மரங்கள் இந்த நோயினால் தாக்கப்படுவதில்லை. ஆனால் அதே தோப்பில் வேறு பல மரங்கள் இந்த நோயினால் தாக்கப்படுவதில்லை. இந்த வகை எதிர்ப்பு திறனுள்ள மரங்களை தேர்வு செய்ய வேண்டும்.
வயது
விதைக்காக மரங்களை தேர்வு செய்யும் போது அவற்றின் வயதும் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதாகும். அதாவது, நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் நன்றாக காய்க்க தொடங்கிய பல நூறு மரங்களிலிருந்து விதைகளை தேர்வு செய்வது நல்லது. ஆனாலும் சாதாரணமாக காய்க்கின்ற ஒரு சில மரங்களின் ஒரே பூங்குலையில் 70 காய்களும், மீதமுள்ள மற்ற குலைகளில் 5 அல்லது 10 காய்களும் மட்டுமே காய்ப்பதை காண முடியும். இது போன்ற மரங்களிலிருந்து விதை தேங்காய் தேர்வு செய்து கன்றுகளை நட்டால் சீரான காய்ப்பு திறன் இருக்காது. சீரான காய்ப்பு திறனை கண்டறிய சில வழி முறைகள் உள்ளன. உதாரணமாக, விஞ்ஞானிகள் 3 ஆண்டு சராசரி விளைச்சலின் அடிப்படையில் மேற்கு கடற்கரை நெட்டை வகையின் திறன் சராசரி 80 முதல் 100 காய்கள் எனவும், கிழக்கு கடற்கரை நெட்டை வகை 100 முதல் 120 காய்கள் எனவும் கண்டறிந்துள்ளனர். இதற்கடுத்து பல்வேறு தாய்மரங்களை ஒப்பிட்டு பார்த்து அவற்றின் முளைப்பு திறன் மற்றும் வீரிய கன்றுகள் உருவாகும் திறன் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தாய்மரங்களை தேர்வு செய்ய வேண்டும்.
இது தவிர காய் முளைக்கும் போது உருவாகும் கன்றுகளின் வளர்ச்சி, வீரியம் ஒரே சீராக இருத்தல் அவசியம். ஒரு சில தாய் மரங்களில் இருந்து எடுக்கப்படும் விதை தேங்காயிலிருந்து உருவாகும் கன்றுகள் ஒன்றுக்கொன்று வித்தியாசமான வளர்ச்சி வீரியத்துடன் காணப்படுவது இயல்பு. ஆகவே நல்ல முளைப்பு திறன் மற்றும் ஒரே சீரான வளர்ச்சி வீரியம் ஒருங்கிணைந்த குணங்கள் உடைய கன்றுகளை தரும் மரங்களை மட்டும் தேர்வு செய்ய வேண்டும்.
தென்னங்கன்றுகளை எந்த அளவு குழிகளில் நடவேண்டும்?
தென்னங்கன்றுகளை 3 அடி ஆழம் மற்றும் 3 அடி  அகலம் உள்ள குழிகளில் நடவேண்டும். இதற்கு காரணங்கள் உண்டு. தென்னை மரத்தின் தூர் பகுதியானது அதன் ஆண்டு வளர்ச்சியின் போது ஒரு கனஅடி அளவை பெறுகிறது. இந்த தூரிலிருந்து 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் சல்லி வேர்கள் பக்கவாட்டாக சென்று மரத்தை அசையாமல் தாங்கி பிடிக்கின்றன. இது தவிர இந்த வேர்கள் தினமும் சத்துக்கலந்த 35 மில்லி நீரை உறிஞ்சி மேல் நோக்கி அனுப்புகின்றன.
எனவே, தென்னங்கன்றை நடும் போது 3 அடி ஆழத்தில் தோண்டப்பட்ட குழிகளில் ஒரு அடி ஆழத்தில் முன்பு தோண்டி எடுக்கப்பட்ட மேல் மண்ணை நடுப்பகுதியில், வேர்ப்பகுதியில் வேர்களுடன் காணப்படும் சுமார் ஒரு அடி காய்ப்பகுதி இருக்கும் படி கையால் ஒரு அடி குழி எடுத்து காயை அதனுள் பதித்து மண்ணை காலால் மிதித்து விட வேண்டும். பின்னர், வாரம் ஒரு முறை சொட்டு நீர் பாசன முறைப்படி நீர்பாய்ச்சி வர வேண்டும். தேவைப்பட்டால் தென்னை அல்லது பனை ஒலையை கிழக்கு, மேற்கு திசைகளில் வைத்து வெயில்படாதபடி சுமார் 3 மாதம் பாதுகாக்கலாம்.
நட்டபின் குழியினுள் 2 அடி ஆழம் காலியாக இருக்க வேண்டும். இந்த நிலையில் காயின் மேல் பகுதியில் மண் விழாதபடி இருந்தால் சிறிய பெரிய வண்டுகளினால் இளம் தண்டினுள் காணப்படும் குருத்தோலை தாக்கப்படாமலும், கன்றுகள் சாகடிக்கப்படாமலும் பாதுகாத்துக் கொள்ளலாம்.
டாக்டர். ஹென்றிலூயிஸ், தென்னைவிஞ்ஞானி. நாகர்கோவில்.
 

0 கருத்துகள்


ஏழைகளின் மரம் மூங்கில்/சாகுபடி விளக்கம்

 மூங்கில் மரங்களை ஏழைகளின் மரம் அல்லது மக்களின் நண்பன் என்பார்கள். இந்திய காடுகளின் பரப்பளவில் 12.8 சதவீதம் மூங்கில் இனங்கள் உள்ளன. நமது நாட்டின் பொருளாதாரத்தில் மூங்கில் பெரும் பங்கு வகிக்கிறது. மனிதனின் அன்றாட தேவைக்கு மூங்கில் ஒரு இன்றியமையாத பொருளாக பயன்பட்டு வருகிறது. கைவினை பொருட்கள் செய்யவும், கிராமிய தொழிற்சாலைகள் மற்றும் காகித ஆலைகளுக்கு மூலப்பொருளாக மூங்கில் இருக்கிறது. மனிதனுக்கு பல்வேறு வகையிலும் பயன்படும் மூங்கிலை பச்சைத்தங்கள் என்கிறார்கள். தமிழ்நாட்டில் மூங்கிலானது, சேர்வராயன் மலைகள், கொல்லி மலைகள், கல்வராயன் மலைகள்,சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயம், பொள்ளாச்சி, முதுமலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பயிரிடப்பட்டு வருகிறது.
சாகுபடி முறைகள்( மண் மற்றும் தட்பவெப்ப நிலை)
நல்ல வடிகால் வசதியுடைய மண் வகைகளில் பயிரிடலாம். குறிப்பாக வண்டல் மண், படுகை நிலங்கள், கண்மாய் கரை மண், மணற்பாங்கான நிலங்கள், மலைச்சரிவுகள் மற்றும் வெப்பநிலை 8 டிகிரி முதல் 45 டிகிரி வரை உள்ள இடங்கள்.
நடவு முறை
நிலத்தை நன்றாக உழுது பருவ மழைக்கு முன் நாற்று நட குழிகளைத் தோண்டி தயார் செய்ய வேண்டும். 3க்கு 3 அடி ஆழ, அகலத்தில் குழிகளை தோண்ட வேண்டும். 15 அடி இடைவெளி இருத்தல் வேண்டும். குழியில் தொழு உரம் 10 கிலோ,பாஸ்போ பாக்டீரியா 50 கிராம், அசோஸ்பைரில்லம் 25 கிராம், டி.ஏ.பி 50 கிராம் என்ற அளவில் இட வேண்டும்.
மூங்கில் தூர் பராமரிப்பு
முதலாம் ஆண்டிலிருந்து பராமரிக்க வேண்டும். தூர் பராமரிப்பில் கழிகள் நேராக வளர்ந்து அதிக லாபம் தரும். பக்க கிளைகள் நேராக வளராத கிளைகளை அகற்றவும். தூர்களில் கிளைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். மண் அரிப்பு ஏற்படும் பகுதிகளில் தூர்களில் மண் அணைத்தால் அதிக கழிகள் உண்டாகும். உதிரும் மூங்கில் இலைகளை தோப்பினுள் பரப்பி உழுது விடவும். இதனால் மண் வளம அதிகரிப்பதுடன் நீர் பிடிப்பை அதிகரிக்கும்.
மூங்கில் அறுவடை
நட்ட நான்காம் ஆண்டிலிருந்து வெட்டலாம். பின்னர் ஒவ்வோர் ஆண்டும் அல்லது இரண்டாம் ஆண்டிலிருந்து வெட்டலாம். முதிர்ந்த மூங்கில்களை மட்டும் வெட்டி எடுக்கவும்.
மகசூல்
1 எக்டருக்கு 400 மூங்கில் தூர்கள் ஒரு தூருக்கு 6 கழிகள் வீதம் 2400 கழிகள் கிடைக்கும்.
அறுவடைக்கு பின் செய்நேர்த்தி
ஒவ்வொரு அறுவடைக்கு பிறகும் தூர் ஒன்றிற்கு மக்கிய தொழு உரம் 20 கிலோ மற்றும் அசோஸ்பைரில்லம் 50 கிராம், வேம் 50 கிராம், டி.ஏ.பி 50 கிராம், பொட்டாஷ் 50 கிராம் இடவேண்டும்.
மூங்கில் ஆயுட்காலம்
மூங்கில் 45 முதல் 60 ஆண்டுக்குள் பூக்க தொடங்கும். பூத்து விட்டால் தூர் முழுவதும் காயத் தொடங்கி விடும். இது செடிகளின் ஆயுள் முடிவதை காட்டும்.
தேசிய மூங்கில் இயக்கத்தின் கீழ் மூங்கில் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் அந்தந்த பகுதியில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அல்லது தோட்டக்கலை துணை இயக்குநரை தொடர்பு கொள்ளலாம்.

காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today