உங்கள் மனதும் உடலும் பூரண அமைதி பெற அவசியம் குழுவாழ்க்கை பரபரப்பு நிரம்பியதாகி இருக்கிறது. அலைச்சல், வேலைப்பளு, ஒரே இடத்தை மீண்டும் மீண்டும் சுற்றி வருவதால் விரக்தி.  என்னவாழ்க்கை இது என்று சலிப்பு பலருக்கு. ஓய்வு பெற்ற பின் என்ன செய்வது என்றே தெரியாத ஒரு வெறுமை.

சம்பாதித்து விட்டு திரும்பி பார்த்தால் வாழ்க்கையில் பல விஷயங்களை இழந்திருப்பதை உணர முடியும். அமைதி, ஆரோக்கியம்,பாலிய நண்பர்கள்,ரசிப்பு திறன் என்று பல விஷயங்கள் கைக்கு எட்டாத தூரத்தில் இருக்கும். சிலருக்கு சிரிப்பு கூட சரியாக வராது.

இந்த நிலையில் மதுரையில் இயங்கும் "அவசியம்" என்ற ஆன்மிக ஆரோக்கிய அமைப்பு "மாதம் ஒரு மலையேற்றம்" என்ற பெயரில் பல்வேறு தரப்பு மக்களை ஒருங்கிணைத்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் உள்ள காடுகள், மலைகளுக்கு யாத்திரையாக அழைத்து சென்று வருகின்றனர். ஆடிட்டராக உள்ள ராமுஜி என்பவரது தலைமையில் இயங்குகிறது  இந்த அமைப்பு.

டாக்டர்கள், என்ஜினியர்கள்,தொழிலதிபர்கள் உள்பட பலர் இதில் உறுப்பினராக உள்ளனர். மாதத்தில் ஒரு நாள் மொபைல் போனால் கூட தொடர்பு கொள்ள முடியாத இயற்கையின் அதிசயமான மலைத்தொடர்களுக்கு சென்று அமைதியாக தியானம் செய்து விட்டு வருவது இந்த அமைப்பின் நோக்கம். இவரது அமைப்பு பற்றி தினத்தந்தியில் வெளிவந்த கட்டுரையின் சுருக்கம், இதோ.....

' நகரத்தின் வழக்கமான இரைச்சல்களிலிருந்து விடுவித்துக் கொண்டு அற்புத மூலிகைகளும்,புண்ணியம் மிக்க ஆறுகளும், காதுக்கு இதம் தரும் இசைப்பிரவாகமாக வரும் அருவிகளும், ஓங்கி உயர்ந்த மரங்களும் நிறைந்த மலைப்பகுதியை சென்று அனுபவித்தவர்கள் மிக குறைவு. இன்றைக்கு இருக்கும் ஐ.டி பரபரப்பில் அதற்கெல்லாம் பலருக்கு நேரம் இருப்பதில்லை.

இயற்கை தனது அழகை வலுவாக வெளிக்காட்டுவது மலைகளில் தான். எங்கும் பச்சைப்பசேல் என்று தோற்றம், வண்ண வண்ண பூக்கள், இந்த பூக்களில் தேன் எடுக்க தாவும் பட்டாம்பூச்சிகள்,குக்கூ என்று பறந்து தரியும் வண்ண வண்ண குருவிகள்,நகரத்தின் புகையையே சுவாசித்து நொந்து போன நுரையீரலுக்கு புத்துணர்வு ஊட்டும் மலைக்காற்று, உடலை வருடும் தென்றல் மலைப்பகுதிகளுக்கு சென்று வரும் போது நமது உடலின் அத்தனை உறுப்புகளும் புத்துணர்வு பெற்றதை உணர முடியும்.

மலைகளில் எங்கும் இல்லாத அளவுக்கு ஒரு நிசப்தமும் அமைதியும் குடிகொண்டிருப்பது இயற்கை. சலசலத்து ஓடும் அருவியின் சப்தத்தை கேட்டாலே மனம் இனிமையாகி பறப்பதை உணர முடியும். இப்படி பட்ட வனாந்திரங்களை மலை முகடுகளின் அழகுகளை எத்தனை பேர் தங்கள் வாழ்க்கையில் சென்று பார்த்து ரசித்திருக்கிறார்கள் என்று கேட்டால் அது மிகவும் குறைவாகவே இருக்கும்.

அதிலும் இரவு நேரங்களில் இந்த இடங்களில் அமர்ந்து அதைியாக ஒரு தியானத்தை எத்தனை பேர் செய்திருப்பார்கள். இந்த குறைகளை போக்கி மனிதர்களை இயற்கையோடு ஒருங்கிணைக்கும் ஒரு பணியை மதுரையை சேர்ந்த அவசியம் அமைப்புசெய்து வருகிறது. இந்த அமைப்பின் ராமுஜியிடம் பேசினோம். இனி அவர் சொல்கிறார்....

  ' மனிதர்களின் பரபரப்பும் படபடப்பும் தான் புதிய புதிய நோய்களுக்கு காரணம். இந்த கெட்ட உணர்வுகளால் உடலின் அதிர்வு அதிகமாகி உடலை இயங்க வைக்கும் நுண் உறுப்புகளை கூட சிதைத்து விடும். மனதை கட்டுப்படுத்தி தியானம் செய்ய தெரிந்தவர்கள் எந்த சூழ்நிலையிலும் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் தியானம் பற்றி தெரியாதவர்கள் என்ன செய்ய முடியும். மாதத்தின் 30 நாட்களிலும் மாடாய் உழைத்து ஓடாய் தேய்பவர்களின் மனநிலையையும் உடலையும் புத்துணர்வு பெற ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இதை தொடங்கினோம்.

இயேசு நாதர் தொடங்கி சித்தர்கள் வரை தேர்வு செய்த மலைப்பகுதிகளில் சென்று தியானம் செய்வது என்று முடிவுக்கு வந்தோம். அதன்படி மாதம் ஒரு மலையேற்றம் என்ற பயணதிட்டம் முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களிலும் உள்ள இயற்கையின் அழகு நிரம்பிய பல்வேறு ஆன்மீக பாரம்பரியம் கொண்ட மலைகளை தேர்வுசெய்தோம். மலைகளுக்கு எடுத்த எடுப்பில் யாரும் சென்று விட முடியாது. அதற்காக ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் எங்கள் நண்பர்களை தொடர்பு கொண்டு மலையேற்றத்திற்கான வழிகாட்டிகளை கண்டு பிடித்தோம்.

இன்று வரை அவர்கள் எங்களுக்கு உடன் வந்து புதிய புதிய இடங்களில் எங்கள் தியானத்திற்கான உதவிகளை செய்கிறார்கள். எங்கள் நண்பர்கள் குழுவில் சிலருக்கு தியானக்கலையில் சிறப்பு பயிற்சி உண்டு. மலைக்கு சென்று வெறும் மவுனத்ைதை கடைப்பிடிப்பவர்களும் உண்டு. தியானம் செய்பவர்களின் விருப்பத்திற்கு தியானப்பயிற்சியும் கொடுத்தோம். நாங்களே சோறு சமைத்து அங்கிருக்கும் கற்பாறையில் கொட்டி தான் சாப்பிடுவோம்.மலையேற்றத்தின் போது மொபைல் போன்களை பயன்படுத்துவதில்லை. மனம் முழுவதும் வெறும்  அமைதி மட்டுமே நிரம்ப வேண்டும் என்பதே இந்த தரிசனத்தின் குறிக்கோள்.

இந்த பயணத்திட்டம் பல்வேறு தரப்பினரையும் எங்கள் அமைப்பை நோக்கி ஈர்த்தது. நாளிதழ்களிலும், ஏடுகளிலும் வந்த எங்கள் அமைப்பின் செய்திகள் நோக்கங்களை பார்த்த பலரும் இந்த அமைப்பில் இணைந்தார்கள். இன்றைக்கு மாவட்டம் தோறும் அவசியம் அமைப்புக்கு பொறுப்பாளர்கள் இருக்கின்றனர். மலையேற்றத்தில் கலந்து கொள்பவர்களுக்கு நாங்கள் பெரிதாக எந்த கட்டுப்பாடும் விதிப்பதில்லை. சற்று வயதானவர்களாக இருந்தால் மட்டும் டாக்டர்களிடம் உடல் நலனை பரிசோதித்து விட்டு பின்னர் கலந்து கொள்ள அனுமதிக்கிறோம். மலையேற்றத்திற்கு என்று குறிப்பிடத்தக்க மலைப்பகுதிகள் உண்டு.

தேனி அருகில் உள்ள சுருளி மலை,கன்னியாகுமரியில் உள்ள மருத்துவாழ் மலை,நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அஷ்டகிரி மலை,திருவில்லிபுத்தூரில் உள்ள காட்டழகர் மலை,சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலை,பாபநாசம் பர்வதகிரி மலை,ஆந்திராவில் உள்ள வைலிங்க மலை உள்பட 40 க்கும் மேற்பட்ட மலைகளில் சென்று தங்கி தியானம் செய்திருக்கிறோம்.

இந்த மலைப்பயணத்தில் கலந்து கொண்டவர்கள் புதிய அனுபவத்தையும், உடலில் புதிய உணர்வையும் பெற்று திரும்புகின்றனர். சாதாரணமாக நாம் மூச்சுவிடும் போது நுரையீரலின் 3 ஆயிரம் அறைகளில் தான் காற்றோட்டம் நடைபெறுகிறது. ஆனால் மலையேறும் போது நுரையீரலில் மேலும் 3 ஆயிரம் அறைகள் திறக்கப்பட்டு நல்ல காற்றோட்டம் நடக்கிறது. இதனால் உடலின் ஒவ்வொரு அணுவுக்கும் காற்று சென்று வருகிறது. இந்த அனுபவத்தை பெறும் வயதானவர்கள் கூட மலைகளில் வரும் போது தங்களை ஒரு குழந்தை போல் உணர்கிறார்கள்.

இன்றைக்கு பல்வேறு இளைஞர்களும் வேலைகாரணமாக வெளிநாடுகளுக்கு சென்று விடுகிறார்கள். அவர்களை பெற்ற வயதான தாய் தந்தையர் இங்கு தனிமையில் அல்லாடுகிறார்கள். அவர்களின் உடல் திறன் ஒத்துழைத்தால் அவர்களை எங்களது பயணத்தில் கலந்து கொள்ள அழைத்து செல்கிறோம்.

மலைகளில் பருவ நிலை மாற்றத்தை சிறப்பாக உணர முடியும். அங்கு தங்குமிடம் என்று எதையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. மலையேற்றத்தில் கலந்து கொள்ள நினைப்பர்கள் தனிப்பட்ட சவுகரியத்தை எதிர்பார்க்க கூடாது. ஆதி மனிதர்கள் இப்படித்தான் வாழ்ந்திருக்கிறார்கள், மலையேற்றத்தில் கலந்துகொண்டு அனுபவம் பெற்றவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளை கூட வெகு எளிதாக எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவத்தை பெற்று விடுகிறார்கள் என்பது உறுதி.

நான் சொல்ல வருவதெல்லாம், இறைவன் படைத்த் சொர்க்கமான பூமியின் ஒட்டு மொத்த அழகும் காடுகளிலும் அதை சார்ந்த மலைகளிலும் குவிந்து கிடக்கிறது.நிலம் நீர் காற்று ஆகாயம் ஒளி ஆகியவை மலைகளில் துல்லியமாகவும் ஏராளமாகவும் தூய்மையாகவும் கிடைக்கின்றன. அதை நாம் தான் சென்று பெற்றுக்கொள்ள வேண்டும். இவற்றை பெற்றுக்கொள்ளும் போது இயற்கையில் உருவான இந்த உடலின் புத்துணர்வு பெறுவது இயல்பு. எங்களின் அமைப்பு சார்பில் நடத்தப்படும் மாதம் தோறும் மலையேற்றம் திட்டத்தில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.

மலை பயணம் குறித்த முன் தகவல்கள் திட்டங்கள் எங்களிடம் உள்ளன. அதை தெரிந்து கொண்டு குறிப்பிட்ட ஊர்களில் இந்த நிகழ்வு நடக்கும் போது எங்களுடன் இணைந்து கொள்ளலாம்' என்றார் அவர்.

நமது நாட்டில் இப்போது சுற்றுலா செல்க என்று கட்டுரை வரைவதை கூட பாடத்திட்டத்திலிருந்து அகற்றி விட்டார்கள். இந்த நிலையில் இவர்களின் மலைப்பயணத்தை வரவேற்க வேண்டியது நமது கடமை. அவசியம் ஆடிட்டர் ராமுஜியை தொடர்பு கொள்ள( 98421 89158 )என்ற எண்ணில் பேசலாம்.

(புகைபடங்கள் காண....வலதுபுற பிக்காசா பார்க்கவும்)காப்போம் வாருங்கள்

Be part of the solution Support WWF-India today